Advertisement

அத்தியாயம் இருபத்தி மூன்று:

 

என்ன செய்வது என்று தெரியாமல் அவள் செல்லும் வழிப் பார்த்து நின்றவனுக்கு.. இப்போது அவன் வளர்ந்து, வாழ்ந்த நிலத்தைப் பார்க்க வேண்டும் என்று இடைவிடாத உந்துதல்.. அவன் குழம்பும் போது தஞ்சமடையும் இடம் அதுதானே! அங்கே சென்றாலாவது மனதிற்கு அமைதி வருகிறதா என்று பார்ப்போம்! அதையும் ஒரு பார்வை பார்த்து விடுவோம் !

சென்றவனுக்கு மூச்சே அடைத்து.. எப்படி இருந்த நிலம் இப்போது பொட்டல் காடு போல அங்கே எதுவுமில்லை… தண்ணீரைப் பார்த்தே பல நாட்கள் ஆகியிருக்கும் போல…

தென்னை மரங்கள் மட்டும் இருந்தன.. வேறு எதுவும் இல்லை, நெல் விளையும் பூமி எதுவும் பயிரடப்படாமல் அப்படியே இருந்தது.. அவர்களுடைய இருபத்தி ஐந்து ஏக்கரும் அப்படியே தான் இருந்தது. அதில் இருபது ஏக்கரில் எப்போதும் நெல் பயிரிடுவர்… இரண்டரை ஏக்கர் தென்னை இரண்டரை ஏக்கர், அவனின் பொக்கிஷங்கள் ஆம் தேக்கு மரங்கள்… அதன் பண்ணையம்… வருடங்கள் ஆக ஆக தான் லாபம்.    

குறு நில விவசாயியாக இருந்த அவனது தந்தையும் ,அவரோடு இவனும் சேர்ந்து சிறுகச் சிறுக இந்த நிலத்தைப் பெருக்கி இந்தளவு கொண்டு வந்து இருந்தனர்.

இது கிட்ட தட்ட அவனுடைய தந்தையின் இருபத்தி ஐந்து வருடத்திற்கும் மேலான உழைப்பு, இவனும் கிட்ட தட்ட பன்னிரெண்டு வருடம் அவனுடைய பன்னிரெண்டாவது வயதில் இருந்து இருந்திருக்கிறான்.

ஆட்கள் மிகவும் அதிகம் என்பதால் நடுத்தர ஜீவனமே! ஆனால் இவர்கள் வைத்திருக்கும் நிலத்திற்கு பண்ணைகாரார்கள் என்று சொல்லக் கூடிய வகையறாக்குள் தான் வருவார்கள்.. ஆனால் அதிக வசதிகள் இல்லை.. எடுக்கும் பணத்தை நிலத்தில் போடுவதோடு, ஐந்து பிள்ளைகளின் படிப்பு, சாதாரண விஷயம் அல்லவே…

மனம் பதறி விட்டது சிபிக்கு.. நிலம் இப்படி இருந்தால், ஐயோ அப்பா! அப்பா எப்படி இப்படி விட்டார்! அவருக்கு என்ன என்பது போல…

என்ன செய்வது யாரிடம் கேட்பது என்று தெரியாமல் வாசுவிற்கு அழைத்தான். வாசு என்ற இவனின் அழைப்பு கேட்டது தான் போதும், “சிபி! எங்கடா இருக்க….?”, என்று கத்தியே விட்டான்.

“எங்க நிலத்துல தான் நிக்கறேன், வா உடனே!”, என்றான்.

அவன் பேசிய பத்து நிமிடத்திற்குள் எல்லாம் வாசு வந்துவிட்டான்… அவன் வந்த நேரத்திலேயே அவன் வந்த வேகம் தெரிந்தது.

அந்த நிலத்தில் நடுவில் அந்த வெயிலில் கீழே அமர்ந்திருந்தான் சிபி…

“ஏண்டா? ஏண்டா? இப்படி உட்கார்ந்து இருக்க!”, என்று பதறினான் வாசு.

“என்னடா ஆச்சு? ஏண்டா நிலம் இப்படி இருக்கு… எங்கடா என் பயிரெல்லாம்..?”, சிபி கேட்ட விதம் அவனின் சித்தம் தான் கலங்கி விட்டதோ என்று வாசுவிற்கு தோன்றியது.

அவசரமாக அவனின் தோற்றத்தை ஆராய்ந்தான்… எப்போதும் உடுத்துவதை விட சிபி அன்று நன்றாக கச்சிதமாக உடை அணிந்திருந்தான்.. அது காட்டிக் கொடுத்தது அவன் நன்றாக தான் இருக்கிறான் என்பது போல்..   

“என்ன ஆச்சு? எங்க இருந்த?”,

“ப்ச்! ஏன் எங்க நிலம் இப்படி இருக்கு.. எங்க நிலம் தானே இது”, என்றான்.

“உங்க நிலம் தான்… நீ போனதுக்கு அப்புறம் உங்கப்பா இந்த இடத்துல காலை வைக்கலை தெரியுமா!”, என்றான்.

“உங்க நிலத்துக்கு இப்படி கவலைப் படறியே! உங்க வீடு எப்படி இருக்கு தெரியுமா?”, என்று பதிலுக்கு வாசு ஏறக்குறைய கத்தினான்.

சிபி என்ன வரப் போகிறதோ என்று பயந்து அவனைப் பார்க்க.. “எல்லோரும் உயிரோட இருக்காங்க! அவ்வளவு தான்…”, 

“என்னோட சிபி இப்படிக் கிடையாதுடா… எப்போ இருந்துடா இவ்வளவு சுயநலவாதியா மாறின… எல்லோரையும் கஷ்டப்பட விட்டுட்டு நீ போயிட்ட..”,

“எவளோ ஒரு பொண்ணுப் போயிட்டான்னு இந்தக் கலாட்டாவா! அப்போ இருந்து கோபத்துல மேல மேல நீ என்ன செஞ்சு வெச்சிருக்க…”,

“உங்கப்பா உன்னை எப்படித் தேடினார் தெரியுமா… ரெண்டு வருஷம் யாரையும் பார்க்கணும்னு உனக்குத் தோணலையா…   இவங்க ஒரு பக்கம் உன் மனைவி ஒருபக்கம்னு இத்தனைப் பேரைத் தவிக்க விட்டுட்டு எங்கடாப் போய் தொலைஞ்ச… உயிரில்லாத இந்த நிலம் வாடிக்கிடக்கிறதுக்கே உன் மனசு பதைக்குதே! உங்க அப்பா அம்மா அவங்களை ஏண்டா தவிக்க விட்ட..?”,

எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல வராமல், இந்த நேரடிக் குற்றச்சாட்டில் அந்த பூமிக்குள் புதைந்து போனால் பரவாயில்லை என்பது போல அமர்ந்து இருந்தான்.

“பாவம்டா எனக்கு அந்த மனுஷரைப் பார்க்கவே முடியலை! எப்படி இருந்த வரை நீ எப்படி ஆக்கிட்ட… யாருக்குடா உலகத்துல கஷ்டமில்லை.. அவனவன் டாட்டா காட்டிட்டு ஜெயிலுக்குப் போயிட்டு வர்றான்.. நீ என்னன்னா ஒரு தடவை போயிட்டு வந்தா ஆளுங்களை வெறுத்துப் போயிடுவியா..”,

“வர்ற ஆத்திரத்துக்கு சப்புனு ஒரு அரை விடணும் போல தோணுது! ஆனா நீ திருப்பி அடிச்சிடுவன்னு பேசாம இருக்கேன்!”, என்று படபடவென பொரிந்தவன், அவனும் அந்த நடு நிலத்தில் தொப்பென்று ஏதோ புல்வெளியில் அமர்வது போல நண்பனோடு அமர்ந்தான்.   

செய்ய வேண்டியது என்ன என்று சிபிக்கு புரியாத போதும்… ஆற்ற வேண்டிய கடமைகள் பொறுப்புகள் தன்னை தளைக்குள் பூட்ட ஆரம்பிப்பதை உணர்ந்தான்…. மீளாத் தளை, மீள முடியாத தளை.. மீள விரும்பினால் அவன் மனிதன் என்னும் வகைக்குள் வரமாட்டான் போல தோன்றியது.

போனது போகட்டும் அவனின் வாழ்கையின் இந்த இரண்டு வருடங்கள் இல்லாமல் போகட்டும்…ஏதாவது செய்! அவர்களும் உன் குடும்பம் தானே! மனது எடுத்துரைத்ததா இடித்துரைத்ததா அவனே அறியான்..

நிலத்தில் பயிரிடப்படவில்லை என்றால் ஜீவனதிற்கு என்ன செய்திருப்பர்.. மனம் பாரமாக அழுந்தியது.

அங்கே அந்த வரண்ட நிலத்தைப் பார்த்து அமர்ந்திருந்தான்… பவானி சாகர் ஆற்றுப் பாசனம் கைவிட்டதா… இல்லையே! எல்லோர் நிலமும் செழிப்பாக இருக்கிறதே..

அமர்ந்து விட்டான் செய்வதறியாது… நிலத்தில் தந்தை கால் வைக்கவேயில்லை என்றால் அவரின் மனது என்ன மாதிரி காயப்பட்டிருக்கும் தான் சென்றது என்று உணர்ந்து கொள்ள முடிந்தது.

நிலத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து, “டேய்! முதல்ல மனுஷங்களைப் பாரு! நீ நல்லா இருக்கன்னு தெரிஞ்ச அப்புறமாவது அவங்க நிம்மதியா சாப்பிடட்டும்… அப்புறம் இதைப் பார்ப்பியாம்! எழுந்திரு! உன் வீட்டுக்குப் போகலாம்!”, என்றான் வாசு..

போய்த் தானே ஆக வேண்டும்…

வீட்டை தூரத்தில் இருந்து பார்த்த போதே தெரிந்தது… வருடா வருடம் சுண்ணாம்பு அடித்து பளிச் வெண்மையோடு திகழும் வெளிச் சுவர்கள் பொலிவிழந்து இருந்தது.

வீட்டின் உள் அதனை விட அதிகம்.. அவன் வீட்டின் உள் நுழைந்ததும் முதலில் பார்த்தது தேவி தான்… மகன் வந்துவிட்டானா? கண் சிமிட்டினாள் மறைந்து விடுவானோ என்று விடாமல் பார்த்திருந்தார்…

“அம்மா!”, என்றவனின் அழைப்பைக் கேட்டதும், அவன் தான் என்ற நிஜம் புரிந்து, கால்கள் தொய்வுற அமர்ந்து விட்டார். மூன்று மக்கள் பெற்று விட்டால் ஒருவன் போனாலும் பரவாயில்லை, மற்ற இருவர் இருக்கிறார்களே என்ற சமாதானம் எந்தப் பெற்றோருக்கும் பொருந்தாது. 

ஆனால் பிள்ளைகளின் மனநிலை அப்படித்தான்… அதுதான்,  “இன்னொருத்தன் கூட தான நீ இருக்க! இதுல நான் இருந்தா என்ன? இல்லாட்டி என்ன?”, என்ற சொற்கள் பல மக்கள் இன்று அனாயாசமாக பேசுகிறார்கள். 

மாற்றம் அவர்கள் பெற்றோர் ஆன பின்தான் வருகிறது! சிலருக்கு அதுவுமில்லை. தாங்கள் தங்களின் மக்களுக்குப் பார்த்து பார்த்து செய்வது போல தான் தங்களின் பெற்றோர்களும் தங்களைப் பார்த்திருப்பார்கள் என்பது நினைவில் வர மறுக்கிறது என்பது தான் உண்மை. கண்டிப்பாகத் தெரியாமல் இருக்காது.   

“அம்மா!”, என்று அவரின் அருகில் அமர.. தேவியால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை… சிபிக்கு என்ன சமாதானம் சொல்வது என்றும் தெரியவில்லை… அமர்ந்து விட்டான்.

வீட்டில் அம்மா, அத்தை, பாட்டி, தாத்தா மட்டுமே இருந்தனர்… மற்ற எல்லோரும் வேலைக்குச் சென்று இருந்தார்கள்.  அதிலும் தாத்தா படுக்கையில் நினைவு மழுங்கிய நிலையில்…

“தாத்தாவைப் பாருடா..!”, என்று பாட்டி சுலோச்சானா ஒரு புறம் அழ.. அங்கே சென்று பார்த்தால், அவருக்கு நினைவு இருப்பது போல தெரியவில்லை.

“தாத்தா! தாத்தா!”, என்று அவன் கத்த… மெதுவாக கண்ணை திறந்தவர், அவனைப் பார்த்து விட்டு பிறகு கண்கள் மூடிக் கொண்டார்.

“எத்தனை நாளா இப்படி இருக்கு?”, என்றான்.

“ரெண்டு மாசமா.. அவருக்கு ஒரு சாவு வந்துட்டாப் பரவாயில்லை.. சாப்பாடே இல்லை இந்த பத்து நாளா! வெறும் நீராகாரம் தான்! பால், ஜூஸ், இப்படி தான் ஆகாரம் குடுக்கறோம்”, என்றார் பாட்டி..

“நீயும் கொஞ்சம் ஊத்து! அப்பவாவது அவருக்கு இந்த உலகத்துல இருந்து மோட்சம் கிடைக்குதான்னு பார்ப்போம்.. இப்படி ஒரு உயிர் அவருக்கு வேண்டாம்!”, என்றார்.

“ஏன் பாட்டி இப்படிப் பேசறீங்க..?”,

“வயசானா எல்லோரும் போக வேண்டியது தானேப்பா.. இந்த வலியோட ஒரு வாழ்க்கை எதுக்கு..”,  

ஆம்! படுக்கையில் இருந்ததால் படுக்கைப் புண்கள்.. ஆறாத ரணத்தை வேறு அவருக்கு கொடுத்துக் கொண்டிருந்தது.  

அவனுக்கு அப்படிச் சொன்ன பிறகு பால் ஊற்ற கைகள் வரவில்லை… மெளனமாக வெளியே வந்தான்.. அத்தை ராஜலக்ஷ்மி இன்னும் பரிதாபமாக இருந்தார்… மெலிந்து கண்கள் உள்ளே சென்று.. பார்க்கவே பரிதாபமாக.. 

கணவனை இழந்து ஒரு குழந்தையின் கையைப் பிடித்து, இன்னொரு குழந்தையை கையில் ஏந்தி வந்தவர்… இவர் கண்ட சுகம் தான் என்ன… சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் வாழ்க்கைத் துணையன்றி இருப்பது பெரும் கொடுமை.  

“என்ன அத்தை சாப்பிடறிங்களா இல்லையா? என்ன உடம்பை இப்படி கெடுத்து வெச்சிருக்கீங்க?”, என்றான்.

சிபி அவருடன் பேசுவதை நம்ப முடியாதவர் போல பார்த்தார்… “ப்ச்! என்ன அத்தை இது! அப்பா எங்கே?”, என்றான் அவரைப் பார்த்து…

“வேலைக்கு”, என்றவரின் பதிலைக் கேட்டு அதிர்ந்து விட்டான்…. “என்ன வேலைக்கா? என்ன வேலைக்கு? அவருக்கு என்ன தெரியும் விவசாயத்தை விட்டா? எங்க வேலைக்கு போறார்”, என்று பதறினான்.

“உரக்கடைக்கு! காலையில பத்து மணிக்குப் போனா, ராத்திரி எட்டு மணிக்கு தான் வீட்டுக்கு வருவார்!”, என்றார்.

“என்ன நடக்கிறது?”, என்று பதறிவிட்டான் சிபி… இன்னும் அவன் தெரிந்து கொள்ளாதது நடராஜன் வீட்டினர் யாருடனும் அதிகம் பேசுவதில்லை… அதிலும் மனைவி தேவியுடன் இந்த இரண்டு வருடமாக ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.

மாமல்ல வர்மனும் ஒடுங்கியிருந்தான் உள்ளுக்குள், அதிகம் யாருடனும் பேசாமல், “தன்னால் தானோ! தான் தான் அண்ணி அடித்ததாக எல்லோரிடமும் சொன்னேன்… அதனால் தான் இவ்வளவும்!”, என்று ஒரு புறம் மருகி இறுகி விட்டான்.   

தன்னால் சிபி வீட்டை விட்டுப் போய்விட்டான் என்பது அவனால் தாளவே முடியவில்லை… இன்னும் தங்களின் வீட்டுக் குழந்தையை காப்பாற்ற போனவர்களை, அநியாயமாக வேறு குற்றம் சாட்டி விட்டான்.

எப்படி அவ்வாறு அவனுக்குத் தோன்றியது… அன்று ஜெயிலில் இருந்து வந்தவுடன் சிபி அவனிடம் கேட்டான் கூட, ஜெயஸ்ரீ குழந்தையைத் தள்ளி விடுவா, அடிப்பான்னு நீங்க எப்படிடா நினைச்சீங்க… அவ விழறது பார்த்தும் அப்படியே விட்டுட்டு போயிருக்கீங்க…. ஒரு வேலை அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா…”,

மொத்தத்தில் வீடு வீடாக இல்லாமல், வசிக்கும் இடமாக மட்டும் இருந்தது. உயிர்ப்பு என்பது இல்லாமல் இருந்தது.

கோவையை நெருங்கும் இடத்தில் உள்ள ஒரு உரக்கடை… அவர்கள் எப்போதும் அங்கே தான் உரம் வாங்குவார்கள்…  அங்கே வாசுவுடன் செல்ல… அவனின் அப்பா அந்தக் கடையில் ஒரு சேர் போட்டு அமர்ந்து இருந்தார்… உள்ளே உரங்களோடு உரங்களாக… இந்த மூட்டைகளை அவர் தூக்கியிருக்க வேண்டும் என்று நினைத்தப் போது, இதற்கா மூன்று ஆண்மக்களை பெற்று அவர் வளர்த்தார்.  என்ன செய்து விட்டேன் நான்.

இவன் இருந்த திசையில் தான் அவரின் பார்வை இருந்தது… ஆனால் இவனை அவர் உணரவில்லை. 

முன் உட்கார்ந்து இருந்த முதலாளி தான் முதலில் இவனைப் பார்த்தார்… நன்கு அறிந்தவரே.. “தம்பி!”, என்று கூப்பிட்டவர்… அவரும் ஏதும் பேசாமல் பார்த்தது பார்த்தபடி இருந்தார்.

“அப்பா!”, என்று அவர் அருகில் சென்று அழைத்தும் தான் உணர்வு பெற்று திரும்பினார். சிபியைப் பார்த்ததும் நம்பாதவராக அவனைக் கைபிடித்து பார்த்தார். அவ்வளவு தான் அவனின் கையை விட்டவர், அதன் பின் எதுவும் பேசவில்லை.

“அப்பா!”, என்று அவரின் காலடியில் அங்கேயே மண்டியிட்டான், அப்போதும் பேசவில்லை.. அவருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை…ஏனென்றால் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி அவர் பிள்ளைகளை வளர்த்ததில்லை.

அதற்காக பிள்ளைகளிடம் பாசமில்லை என்பதா…    அதுவும் சிபி வீட்டை சென்ற அன்று ஏதாவது செய்து கொள்வானோ என்று அவரின் நெஞ்சம் பதறியது அவருக்குத் தான் தெரியும்.

பின்பு அவரே அவரை தேற்றிக் கொண்டார், அவ்வளவு கோழைகளாக அவரின் பிள்ளைகளை வளர்க்கவில்லை என்று.. அதே சமயம் வாழ்வை விட சாவை நோக்கி செல்வதற்கு இன்னும் தைரியம் வேண்டும் என்று எங்கோ படித்த ஞாபகம்…. அன்று அவர் பட்ட துன்பம்…. இத்தனைப் பெரிய மகனை எங்கே போய் தேடுவது.

அவருக்கே ஆலோசனைகள் சொல்வது அவன் தானே… இன்று தீடிரென்று நேரில் வந்து நிற்கவும், அவருக்கு இன்னும் அதை நம்ப முடியவில்லை.

“வீட்டுக்குப் போகலாம்பா!”, என்றான்.

உடனே எழுந்து கொண்டார்… “அண்ணா அவர் இனிமே வரமாட்டார்! உதவிக்கு வேற யாரையாவது வெச்சுக்கோங்க… அதுவரைக்கும் ஆள் வேணும்னா நான் வர்றேன்!”, என்றான்.

“இல்லை, தம்பி! நான் சமாளிச்சுக்குவேன்.. நீங்க போங்க…”, அவர்கள் படியிறங்க ஆரம்பித்ததும், “அப்போ எப்போ வர்றீங்க கடைக்கு”, என்றார்

சிபி சில நொடிகள் புரியாமல் நின்றவன், பிறகு அவர் உரம் வாங்கக் கேட்கிறார் என்று புரிந்தவனாக, “இன்னம் கொஞ்ச நாள்ல”, என்று சொல்லி வந்தான். 

“வாசு! நான் வந்துக்கறேன் நீ அவரைக் கூட்டிட்டு போ”, எனவும் வீடு வந்தார்கள்.

மதிய நேரத்தைக் கடந்து இருந்தது, உணவு உண்ணாததும் ஞாபகம் வர…

“அம்மா! சாப்பாடு போடுங்கம்மா!”, என்று கை கழுவி அமர்ந்தான். “நீங்கல்லாம் சாப்பிட்டுட்டீங்களா”, என்று கேட்க… அவர்கள், “இல்லை”, என்பது போல தலையாட்டவும்… “எனக்குப் போட்டுக் குடுத்துட்டு சாப்பிடுங்கம்மா”, என்று சொன்னவன்… வேகமாக உண்டு எழுந்து…

“அப்பா! நான் வயலுக்குப் போயிட்டு வர்றேன்… நீங்க அப்புறம் வாங்க!”, என்று சொல்லி விரைந்தான். என்ன செய்தான்! எங்கு இருந்தான்! யாரிடமும் விளக்கம் சொல்லவில்லை.

அங்கே சென்று முதலில் வரண்ட நிலத்திற்கு எல்லாம் தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தான்… நேரம் சென்றதே தெரியவில்லை…

ஆங்காங்கே தண்ணீர் பாய்ச்சும் கருவிகள் பல நாட்களாக உபயோகத்தில் இல்லாமல் சரியாக வேலை செய்யவில்லை. தென்னை மரங்களும் தேக்கு மரங்களும் மட்டும் நன்றாக செழித்து இருந்தது.

தேக்கு மரங்களுக்கு அது பத்தாவது வருடம் கூட சில மரங்களை வெட்டி எடுத்து சீர் படுத்த வேண்டியிருந்தது. அதையும் பார்வையிட்டான்.  

இருள் கவிழ ஆரம்பித்தது. அப்போது தான் நேரத்தைப் பார்த்தான்! கிட்ட தட்ட மூன்று மணிநேரம் ஆகியிருந்தது. பேய் மாதிரி வேலை செய்திருந்தான், ஆனால் மூன்றில் ஒரு பாகத்தைக் கூட முடித்து இருக்கவில்லை.  

அப்பாவை வரச் சொன்னோமே என்று பார்க்க.. அவர் நிலத்தில் இறங்கவில்லை… ஒரு மேட்டின் மீது அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவனும் சென்று அவரின் அருகில் அமர்ந்தான்.. அவனைத் திரும்பி பார்த்தவர்… “வேண்டாம்னு விட்டுட்டுப் போனியோ? இல்லை வெறுத்து விட்டுட்டுப் போனியோ? ஒரு தகவல் கொடுத்திருக்கலாம் தானே, நான் நல்லா இருக்கேன்னு”, என்றார்.

இதற்கு அவனிடம் பதிலில்லை.. அதனால், “சாரிப்பா”, என்றான். 

“எப்படி திடீர்ன்னு வந்த?”,  என்றார் கூடவே..

“என்ன சொல்லுவான்? என் மனைவி என்னை தேடுகின்றாள் என்று தெரிந்தது வந்தேன் என்றா.. அதற்காக உங்களைப் பார்க்க வந்தேன் என்று பொய்யுரைக்கவும் மனமில்லை…”,

ஒரு தவறிர்காக சென்று, அதைவிட இன்னும் அதிக தவறுகள் நடக்கக் காரணமாய் இருந்து விட்டான். அமைதியாக அமர்ந்திருந்தான்.. “இருப்பியா? போயிடுவியா?”, என்று அவர் கேட்கவும் தான்,

ஆமாம்! இன்னும் அவன் அதைப் பற்றி யோசிக்கவேயில்லை! அவன் வேலைகள்… நிலத்தைப் பார்த்ததும், வேறு எதுவும் அவனின் ஞாபகத்தில் இல்லை, ஏன் ஜெயஸ்ரீயைக் கூட மறந்து விட்டான்..

என்ன செய்வது இனி என்று தெரியவில்லை, “தெரியலைப்பா”, என்றான் மனதை மறையாமல்.. 

அப்படியே அப்பாவும் மகனும் அமர்ந்து இருந்தனர். சிறிது நேரத்தில் சிபியும் அருள் மொழியும் தேடிவந்தனர். இருவரும் அமர்ந்திருந்த கோலத்தைப் பார்த்து இருவருக்கும் பேச வார்த்தையே வரவில்லை.

அவர்களும் சிபியின் இருபுறமும் அமர்ந்து விட்டனர். ஒருவன் தோளைப் பற்ற ஒரு கைகளைப் பிடித்தான்.

யாருமே பேசவில்லை… நொடிகள் நிமிடங்களாகி நகர ஆரம்பித்தது. அப்போது பார்த்து சிபியின் செல் அடித்தது… யார் என்று பாராமல்  அனிச்சை செயலாய் எடுத்தான்… 

எடுத்து “ஹலோ”, என்க.. “நான் தான்!”, என்று ஜெயஸ்ரீயின் குரல் திக்கி ஒலிக்க.. ஜெயஸ்ரீயின் போனை எதிர்பார்க்கவில்லை! “நானே கூப்பிடறேன்”, என்று சொல்லி உடனே வைத்து விட்டான்.

தந்தையிடம் அவனைப் பற்றிப் பேசவா என்று கேட்க ஆர்வமாக அழைத்தவள்… இப்படி அவன் போனை வைப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. முகம் சுருங்க அமர்ந்து விட்டாள்.

அவனை பார்ப்பதற்கு முன்னும், பார்த்த பிறகும் எப்போதும் அவனைப் பற்றி நினைத்திருக்க…

அன்று காலை அவளை விட்டு போனபிறகு ஒரு நொடி கூட சிபி அவளை நினைக்கவில்லை என்பது தான் உண்மை. நினைக்கக் கூடாது என்பது இல்லை ஆனால் நினைவில் இல்லை.

அதைத் தாங்கும் சக்தி அவளுக்கு இருக்கிறதா?  

 

Advertisement