Advertisement

அத்தியாயம் பதினெட்டு:

இரண்டு வருடங்களுக்கு பிறகு…

“எங்கத் தப்பு நடந்துச்சுன்னு தெரியலை, இல்லை என்னோட வாழ்க்கையேத் தப்பான்னு தெரியலை… என்னோட உங்க பொண்ணு சந்தோஷமா இருக்க மாட்டான்னு உங்களுக்கு தோனிடிச்சு, அதான் இந்த கம்ப்ளையின்ட் எல்லாம்…”,

“இதை வாபஸ் வாங்கினதுக்கு ரொம்ப நன்றி.. உங்களுக்கு என்ன சரின்னு படுதோ செய்ங்க… எங்க கேட்டாலும் நான் கையெழுத்துப் போடறேன்…”,

“உங்கப் பொண்ணை எப்படி அனுப்பிச்சீங்களோ அப்படியே தான் உங்க கிட்ட திரும்பி வந்திருக்கா…”,

“நல்ல வாழ்க்கை அவளுக்கு அமையும்… நீங்க குடுத்த நகை, பணம் எல்லாம்…..”, என்று வஜ்ரவேலிடம் திரும்பக் கொடுத்து சென்றவன் தான் சிபி அதன் பிறகு அவனை யாரும் பார்க்கவில்லை.

வீட்டினரிடமும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஆம்! வஜ்ரவேல் கம்ப்ளையின்ட் வாபஸ் வாங்கி விட்டார். ஹாஸ்பிடலில் இருந்தவரை ஜெயஸ்ரீயிற்கு நடந்தது எதுவும் தெரியாது! நான்கைந்து நாட்கள் ஹாஸ்பிடலில் இருந்த போது, “ஏன்? சிபி வரவில்லை!”, என்று மனதிற்குள் ஓடிக் கொண்டே தான் இருந்தது.

தன்னால் எப்போதும் பிரச்சனைகள் என்பதால் தன்னை விட்டு விட்டானோ என்ற எண்ணம் கூட, அந்த எண்ணம் கொடுத்த பயம் அப்பாவிடம் சிபியைப் பற்றி கேட்கமுடியவில்லை. அதுமட்டுமின்றி இப்படி ஜெயஸ்ரீயிற்கு நடந்ததைக் குறித்து அவரின் முகத்தில் அவ்வளவு வேதனை. அப்படி இருக்கும் போது சிபியைப் பற்றி எப்படிக் கேட்பாள்.எல்லாம் அவன் வீட்டில் நடந்தது தானே.

வீடு வரும் தினம் வஜ்ரவேல் இல்லாத சமயம், வாசு அவளைப் பார்க்க வந்தான்.

“ஏன் சிஸ்டர் இப்படிப் பண்ணுனீங்க, என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது.. நீங்க அடிபட்டது தப்பு தான்…. ஆனா சிபி! அவன் பாவம் சிஸ்டர்… வாழ்க்கையில இந்த கல்யாணப் பேச்சு வந்ததுக்கு அப்புறம் அவன் பார்க்கக் கூடாதது எல்லாம் பார்த்துட்டான்”. 

“அதுவும் யார் எப்படி நினைச்சா என்ன? எனக்கொன்னுமில்லை அப்படின்ற மனநிலை எல்லாம் அவனுக்கு கிடையாது. எப்பவும் எல்லோரும் என்ன நினைக்கிறாங்க! நல்ல மாதிரி நினைக்கணும்! இப்படிப்பட்ட எண்ணம் தான் அவனுக்கு… அந்த பொண்ணுக் கல்யாணம் பண்ணாம போனது வருத்தமில்லை, அது எல்லார் முன்னாடியும் அசிங்கமாப் போயிடிச்சின்னு தான் வருத்தம்”. 

“இப்போ கல்யாணமாகி, நாலே நாள்ல கட்டினப் பொண்டாட்டியை கொலை செய்ய முயன்ற வழக்கு, அரஸ்ட் ஆனதும் ரொம்ப மனசு விட்டுட்டான், நான் பார்க்க முயற்சிப் பண்ணினேன் என்னைப் பார்க்கவேயில்லை, வீட்ல இருக்குறவங்க யார் போனாலும் இந்த நாலு நாளா பார்க்கலை. யாரையும் பார்க்கப் பிடிக்கலை போயிடுங்கன்னு சொல்லி அனுப்பறான்”,  

“அதுவும் பேப்பர்ல எல்லாம் வந்துடுச்சு… அது தெரியுமா? இல்லை தெரிய வரும் போது என்ன பண்ணுவான்னு ஒன்னும் தெரியலை”,

“இப்போ ஜெயிலையும் பார்த்துட்டான்… ப்ளீஸ் சிஸ்டர்! குற்றம் நிரூபணமாச்சுன்னா ஏழு வருஷம் ஜெயில் கிடைக்குமாமே… அவ்வளவு பெரிய தண்டனை அவனுக்கு குடுக்காதீங்க! எப்படியாவது அவனை காப்பாத்துங்க!”, என்று அவன் சொல்லச் சொல்ல அதிர்ந்து விட்டாள் ஜெயஸ்ரீ.

“என்ன? என்ன சொல்றீங்க?”, என்றாள் திக்கித் திணறி.

“நீங்க தான் கம்ப்லையின்ட் குடுத்து இருக்கீங்களே!”, நடந்தது  என்ன வென்று வாசுவிற்கு எதுவுமே தெரியாது… நண்பனுக்காக பரிந்து வந்திருந்தான். 

“நானா! இல்லையே!”, என்பது போல தலையாட்டியவள், அப்பா கொடுத்திருப்பார் என்று உடனே அனுமானித்தாள்………. அப்பா இப்படிச் செய்வார் என்று நினைக்கவேயில்லை, அதுவும் பேப்பரில் எல்லாம்…

பேப்பரில் ஜெயஸ்ரீயின் பெயர் எல்லாம் வரவில்லை… ஆனால் சிபியின் பெயர் வந்திருந்தது..  

வீடு திரும்பியதும் வஜ்ரவேலிடம் பேச……….

“இருக்கட்டும் பாப்பா! அவங்க செஞ்சது தப்பு…… உனக்கு ஒன்னுமாகலை சரி!…. உனக்கு ஏதாவது ஆகியிருந்தா, அப்போவும் நான் தான் செஞ்சேன்னு அந்த பையன் போய் உள்ள உட்கார்ந்து இருப்பான்…..”,

“அப்போ நீ… உன் உயிர்…. எப்படி அவங்க குடும்பத்தை காப்பாத்தி இருக்கான் பாரு……. அப்போ நீ! நீ யாரு அவனுக்கு?.. அவனை நம்பி தானே கல்யாணம் செஞ்சு கொடுத்தேன்..”, 

“வேண்டாம் கண்ணு! அனுபவிக்கட்டும்! நான் கம்ப்லையின்ட் வாபஸ் வாங்கமாட்டேன்”, என்று முடிவாக சொல்ல…. அவர் சொன்ன விதத்திலேயே அவர் செய்ய மாட்டார் என்று புரிந்தவள்…

பிறகு எதுவும் பேசவில்லை, ஆனால் உணவு, மாத்திரை என்று எதுவும் உண்ணவில்லை… ஒரு நாள் முழுவதும்…. கனிவாக சொல்லி… திட்டி, மிரட்டி, பயமுறுத்தி, என்று ஏதேதோ செய்து பார்த்தார் வஜ்ரவேல்.. ஜெயஸ்ரீ அசையவேயில்லை.

பின்னர் வேறு வழியில்லாமல் கேசை வாபஸ் வாங்கினார்.

அதே நாளில் வந்து, முன் சொன்ன வார்த்தைகளை சொல்லிச் சென்றவன் தான் சிபி..

“பாரு! வந்தவன் நீ எப்படி இருக்கன்னு கூடப் பார்க்கலை! அவன் வேலை முடிஞ்சுதுன்னு எல்லாத்தையும் திருப்பிக் குடுத்துட்டு போயிட்டான்! அப்போ உன் வாழ்க்கை…”,

“என்ன? போய் விட்டானா!… அவ்வளவு தானா!… எப்படி இருக்கிறாய் என்று ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லையா?”, ஜெயஸ்ரீயிற்கு மிகுந்த ஏமாற்றம்.

சிபியைத் திட்ட வேண்டும் போல ஆத்திரம்… சிபிக்கு அழைத்தால் அவனின் போன் ஸ்விட்ச் ஆஃப்… மனம் தாளாமல் பத்மினி மூலமாக வாசுவின் நம்பர் வாங்கி, அவனிடம் சிபியிடம் பேச வேண்டும் என்று சொல்ல…

ம்கூம்! வஜ்ரவேல் வீட்டிற்கு வந்து சென்றவன் தான்! அவன் எங்கே சென்றான் என்று யாருக்கும் தெரியவில்லை. அவனின் வீட்டினருக்கும் தெரியவில்லை… வாசு சென்ற நேரம் நடராஜன் அவனைத் தான் தேடி வந்து கொண்டிருந்தார், “எங்கடா போனான் சிபி”, என்பது போல…

ஒரு தந்தையாக நடராஜனின் நிலை இன்னும் பரிதாபம்.     

ஆயிற்று இரண்டு வருடங்கள்… அவனைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை.. 

தினம், தினம் அவனின் நினைவு தான் ஜெயஸ்ரீயிற்கு. தன்னை விட்டு சென்று விட்டான் என்பது என்னவோ ஒரு வகையில் தாளவே முடியவில்லை. நடந்த பிரச்சனை காரணமா இல்லை, என் குறைகள் இதை சகிக்க முடியாது என்று இதுதான் சந்தர்ப்பம் என்பது போல விட்டுச் சென்று விட்டாரா…?

பாலும் கசந்ததடி, படுக்கையும் நொந்ததடி போன்ற ஒரு நிலை தான். எல்லோரும் தன்னைப் பரிதாபமாக பார்ப்பது வேறு அப்படி ஒரு வேதனையைக் கொடுத்தது.

இப்போதெல்லாம் பேச்சுத் திக்குவதேயில்லை ஜெயஸ்ரீக்கு… அதன் ரகசியம் ஒன்றுமில்லை. அவள் யாரோடும் பேசுவதேயில்லை.. அப்பாவோடு கூட.. எல்லாம் சைகையே, வஜ்ரவேல் இன்னும் தளர்ந்து விட்டார்… மகளைப் பார்த்து.

பார்ப்பவர்கள் எல்லாம், “அவசரப்பட்டு திருமணம் செய்து விட்டாய் திருமணமா முக்கியம்! பெண்ணைப் படிக்க வைத்திருக்க வேண்டும்!”, என்று ஆளாளுக்கு ஒன்று சொல்ல…

இப்படி எல்லோரும் ஆளுக்கொன்று சொல்லும்படிக் காட்சிப் பொருளாகி விட்டோமே என்று அவருக்குமே வருத்தம்.

மொத்தத்தில் வீட்டில் தந்தையும் மகளும் ஆளுக்கு ஒரு பக்கம் அந்த வீட்டில் அமர்ந்திருப்பர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு…

ஆனால் இதில் ஒரு விஷயம், அந்த மூன்று பிள்ளைகளைப் பார்க்கும் பொறுப்பை மட்டும் வஜ்ரவேல் தட்டிக் கழிக்கவில்லை. இப்படி அடுத்தவர் பிள்ளைகளைப் பார்க்கும் போது தன்னுடைய மகள் நன்றாக இருக்க மாட்டாளா என்ற ஒரு எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது என்னவோ உண்மை.

எப்படிப் புண்ணியம் தேடுவது என்று தெரியவில்லை. ஆனால் ஏதாவது ஒன்று தன் மகளை சந்தோஷமாக வைத்துக் கொள்ளாதா என்ற ஆசை.  

காலேஜ் போல எதுவும் சேரவில்லை… ஆனால் கம்ப்யூட்டர் லேங்குவேஜ் கோர்ஸ்கள் அடுத்தடுத்துப் படிக்க ஆரம்பித்தாள் ஜெயஸ்ரீ..

படிப்பு, அதை விட்டால் கம்பியூட்டர் முன்! இப்படியே பொழுது ஓடியது. அதுவும், அந்தக் கோர்சும் அவினாஷியில் இல்லை கோவையில். பஸ் ஏறி சென்றாள். வஜ்ரவேல் ஒத்துக் கொள்ளவேயில்லை.

பிடிவாதம் பிடித்து, “நான் சுயமாக இருக்க வேண்டும்!”, என்று சொல்லி… தனியாக பஸ் ஏறித்தான் சென்றாள். இப்போது இந்த வருடம் பத்மினியும் அவளுடன் சென்றாள். அவள் கோவையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் சேர்த்துவிட்டிருந்தார்கள். 

எப்போதும் பிடிவாதம் தான் ஜெயஸ்ரீ… ஆனால் இப்போது இன்னும் அதிகமாக பிடிவாதம் ஆகிவிட்டது.

மகளின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற கவலை தான் அதிகமாக இருந்தது.   

இரண்டு நாட்களுக்கு முன் தான் வஜ்ரவேல் ஜெயஸ்ரீயிடம் பேசினார்… “கண்ணு! அந்தப் பையனுக்கு விவாகரத்து நோட்டிஸ் விடலாமா?”, என்று கேட்டார்.

மிகச் சில நாட்களுக்குப் பிறகு.. “அவர் எங்கேன்னு தெரிஞ்சிடுச்சா?”, என்றாள் திக்கித் திணறி, ஒரு எதிர்பார்ப்போடு…

என்ன பதில் சொல்வது என்றே வஜ்ரவேலுக்கு தெரியவில்லை. “இல்லை!”, என்று சொல்லவும்…….

“அப்போ யார்க் கிட்ட விவாகரத்து கேட்பீங்க”, என்றாள் திணறியபடி…

“அப்போ அவன் எங்கேன்னு தெரிஞ்சா விவாகரத்துக்கு உனக்கு சரியா?”, என்றார்.

என்னவோ சிபியை நினைக்க, ஒரு கோபமும் ஒரு ஆத்திரமும் பொங்க…. “ம்! சரி!”, என்றாள்.

இவ்வளவு எளிதாக தன் பெண் விவாகரத்திற்கு ஒத்துக் கொள்வாள் என்று வஜ்ரவேல் எதிர்பார்க்கவேயில்லை.

அவள் நிஜமாகத்த தான் சொல்கிறாளா என்பது போல பார்க்க… அவளின் முகத்தில் தெரிந்த தீவிரம் செய்வாள் என்று சொல்ல…

உடனே ஒரு வக்கீலைப் பார்த்து, சிபியின் வீட்டு முகவரிக்கு ஒரு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பினார். அவன் அங்கே இல்லை என்று தெரியும், ஆனால் ஏதோ ஒரு வகையில் வீட்டினர் தொடர்பில் இருப்பார்கள் என்று நினைத்து அதை செய்தார்.

ஆனால் எந்த வகையிலும் சிபி தொடர்பில் இல்லை என்பது தான் உண்மை.

சிபி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது தான் செயல் முறைக் கூட… அங்கே தான் அனுப்பியாக வேண்டும். அவன் வராத பட்சத்தில் அவனைத் தேடி ஒரு பேப்பரில் விளம்பரம் கொடுத்து, அப்போதும் அவன் வரவில்லை என்றால் எக்ஸ் பார்ட்டியாக விவாகரத்து வாங்கிக் கொள்ளலாம்.

இந்த விவரமெல்லாம் ஜெயஸ்ரீயிற்குத் தெரியாது… எப்படியும் விவாகரத்து என்றால் அவன் வந்து தானே ஆகவேண்டும் என்பதாக அவளின் எண்ணம்.

அவன் வராமல் கூட வாங்கிவிடலாம் என்று தெரியவில்லை.

அன்றும் பஸ்ஸில் அவள் காலையில் கம்ப்யூட்டர் கிளாஸ் செல்ல, அவளோடு வளவளத்தபடி பத்மினி! ஆமாம்! பத்மினிக்கு வாயை திறந்தால் இப்போதெல்லாம் மூட முடிவதேயில்லை. அப்படி ஒரு அரட்டை.

ஜெயஸ்ரீ பதில் கொடுக்காவிட்டாலும் பத்மினி பேசுவதை கேட்டால் நேரம் போவதே தெரியாது.

அப்படித்தான் அன்றும் கேட்டுக் கொண்டே வந்தாள். இருவரும் பஸ்ஸில் அமர்ந்து இருந்தனர். திடீரென்று ட்ராபிக் ஜேம் ஆகவும் பஸ் நின்றுவிட்டது.

எட்டிப் பார்த்த பத்மினி, “ஏதோ ஆக்சிடென்ட் போலக்கா.. ஐயோ எப்போ ரோடு க்ளியர் ஆகும் போல தெரியலையே, லேட் ஆகுது!”, என்று சொல்ல…

ஜெயஸ்ரீயிற்குத் தோன்றியதெல்லாம், நமது மனநிலை எப்படி ஆகிவிட்டது! ஒரு ஆக்சிடென்ட் என்றால் யாருக்கு என்ன ஆனதோ என்று மனது பதறாமல், எப்போது ட்ராஃபிக் கிளியர் ஆகும் எப்போது நமது வேலையைப் பார்க்கலாம் என்றாகிவிட்டது.

இப்படி நினைக்கும் போதே மனதில் ஒரு எண்ணம், ஒரு வேலை அவருக்கு ஏதாவது ஆகியிருக்குமோ, அதனால் தான் வரவேயில்லையோ. நினைத்த நிமிடம் நெஞ்சம் பதறி விட்டது.

யாரை கேட்பது, யாரையாவது கேட்டால் பரவாயில்லை என்பது போல தோன்ற, யோசித்து யோசித்து பார்த்தவளுக்கு வாசுவிடம் கேட்டால் என்ன என்று தோன்றவும்,

பத்மினியிடம் வாசுவின் நம்பர் கிடைக்குமா என்று கேட்டாள். எப்போதோ அவளிடம் இருந்தது, இப்போது இல்லை.

“ம், அக்கா! ஜெய்சங்கர் கூட அப்போ அப்போ பேசறாங்க, அந்த அண்ணா!, ஆனா அது வீட்ல இருக்குற போன்ல இருக்கும்! எப்படி எடுக்க இப்போ?”, என்று கேட்க..

இப்போது முடியாது தனத்திடம் கேட்டால், உடனே ராஜவேலிடமோ இல்லை வஜ்ராவேலிடமோ சொல்லி விடுவார். அன்றைய மாலை வரை காத்திருப்பு ஜெயஸ்ரீயிற்கு முடியவேயில்லை.

எப்படியோ மாலை வரை பொழுதைத் தள்ளி வீடு வந்து சேர்ந்ததும் பத்மினியிடம் ஞாபகபடுத்த…

அவள் உடனே தொலைபேசி எண்ணைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

ஜெயஸ்ரீ அழைத்து விட்டாள், ஆனால் பேச்சே வரவில்லை…. பத்மினியிடம் கொடுத்து, “சிபி எங்கே இருக்கிறார் என்று தெரியுமா நன்றாக இருக்கிறாரா என்று கேள்”, என்று எழுதிக் காட்டி கேட்க சொன்னாள்.

திடீரென்று இப்படி அழைத்துக் கேட்கவும், பதிலுக்கு வாசு, “உங்களுக்குத் தெரியுமா எங்க இருக்கிறான்னு! சொல்லுங்க! நான் போய் பார்க்கிறேன்!”, என்று அவனும் கேட்க… மனம் சோர்ந்து தான் விட்டது.

“அவங்க வீட்டு ஆளுங்களுக்கு தெரியுமா கேளு?”, என்று எழுதிக் காட்ட..

“அவங்களே வாரத்துக்கு ஒரு தடவை எனக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்டுட்டு இருக்காங்க”, என்று சொல்லவும்….  

“ஏதாவது தெரிஞ்சா சொல்லச் சொல்லு!”, என்று ஜெயஸ்ரீ பத்மினியிடம் சொல்லிப் பேச்சை முடித்து விட்டவள்… கூடவே பத்மினியிடம், “யார்கிட்டயும் சொல்லக் கூடாது!”, என்று சோர்வோடு சென்று படுத்துக் கொண்டாள்.

அதன் பிறகு அவள் மனதோடு அவளே கேட்டுக் கொண்டது எல்லாம் இதுதான்… “எதற்கு அவனைத் தேடுகிறாய்! அப்படி உன்னைப் பற்றி கவலைப்படாமல் போனவனைப் பற்றி நீ ஏன் கவலைப் படுகிறாய்! அவன் வந்தால் மீண்டும் அவனோடு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வாயா!”, என்பது போல…

கேள்விகள் அவளைத் தாக்க… அவளுக்கு அவளே கீழிரக்கமாக உணர ஆரம்பித்தாள்.

இவ்வளவு நாட்களாக இல்லாமல் சிபியின் நினைவு இவ்வளவு தன்னைத் தாக்க வேண்டிய அவசியம் என்ன என்று அவளுக்குப் புரியவேயில்லை.

ஒரு வேலை அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ? அதன் தாக்கம் தான் தன்னைத் துரத்துகிறதோ என்ற சஞ்சலம் ஒரு புறம்…

என்னவோ அவனை பார்க்கப் போகிறோமோ? அவன் இங்கே வருவானோ என்பது போல ஒரு தாக்கம் மறுபுறம்.

திணறித்தான் போனாள்.. இந்த சஞ்சலம் ஒரு வாரம் தொடர்ந்தது. எங்கு சென்றாலும் பார்வையில் ஒரு அலசல் சிபி தென்படுகிறானா என்பது போல…

அந்த வார ஞாயிற்றுக் கிழமை… பவானி பக்கம் உள்ள ஒரு ஊரில் தனம் அவர்களின் சொந்தத்தில் ஒரு விருந்து என்று கிளம்பினார்.

அவரின் சொந்தம் என்பதால் பத்மினி ராகினி மற்றும் ஜெய்சங்கரையும் உடன் அழைத்துக் கிளம்பினார்.

எங்காவது செல்லும் போது மரியாதை நிமித்தம், “நீயும் வர்றியா கண்ணு?”, என்று தனம் ஜெயஸ்ரீயையும் அழைக்க… இருந்த மன உளைச்சலுக்கு எங்கேயாவது சென்றாள் தேவலாம் போல தோன்ற…. அவள் உடனே சரி என்று கிளம்பிவிட… இப்போது தனத்திற்கு தான் தர்ம சங்கடமாகிப் போனது.

அவர்களின் உறவோடு எல்லாம் ஜெயஸ்ரீ ஒட்ட மாட்டாள், அங்கே அவளை எப்படி அழைத்துக் கொண்டு போவது, அதுவும் தங்கள் பஸ்சில் போகிறோம், ஜெயஸ்ரீயை அவ்வளவு தூரம் அப்படி வஜ்ரவேல் அனுப்ப மாட்டார் என்று தெரியும்.  

என்னவோ எங்கேயும் போகிறேன் என்று கேட்காத மகள் முதல் முறையாக அவர்களோடு போகிறேன் என்று சொல்லவும், ஒரு கார் ஏற்பாடு செய்து வஜ்ரவேல் பலமுறை ஜெயஸ்ரீயின் பத்திரம் தனத்திடம் சொல்லி அனுப்பினார்.

அங்கே விருந்து நடந்ததோ ஒரு தென்னந் தோப்பு… அங்கே ஒரு புறம் விருந்து தயாராகிக் கொண்டிருக்க, மறுபுறம் உறவுகள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க…

காலாற ஜெயஸ்ரீ சிறிது தூரம் நடக்கிறேன் என்று தனத்திடம் சொல்லி கூட பத்மினி, ராகினி, ஜெய் சங்கர் என்ற மூவரோடு நடந்தாள். ஒரு சின்ன ஓடை ஓடிக் கொண்டிருக்க, அதை ஒட்டி இவர்கள் நடந்து கொண்டிருந்தனர்.

சிறிய ஓடை, அந்தப் புறம் ஒரு வயல் வரப்பு, அந்த இடமே மிகவும் ரம்மியமாகத் தெரிய… பத்மினி ராகினி ஜெய் ஷங்கர் மூவரும் ஓடையைத் தாண்டி அந்த புறம் சென்றனர்

அவர்கள் தண்ணீரில் கால் நனைக்க, காலணிகளை இந்த புறம் விட்டு வெறும் காலோடு ஓடை தாண்டி வயல் வரப்பை அடைந்தனர்

ஜெயஸ்ரீயிற்கும் ஆசை வர.. அவளின் ஸ்டிக்கை வைத்து விட்டு ஷூவை கழற்றாமல் ஷூ நனைந்தாலும் பரவாயில்லை, காரில் தானே போகிறோம் என்று நினைத்தவள்… ஷூவோடு நனைந்து ராகினியை வர வைத்து அவளின் கையைப் பிடித்து  ஓடையைத் தாண்டி… வயல் வரப்பில் காலை வைத்தாள்.

ஷூ கால்கள் வயல் வரப்பில் படுவதென்பது அங்கே பெரிய குற்றம். இது தெரியாதவல்ல ஜெயஸ்ரீ! இருந்த மனதின் உற்சாகத்தில் மறந்தாளா இல்லை ஓரமாகத் தானே செல்கிறேன்! நாற்று காலில் படவில்லையே என்று எண்ணினாளா!

ஏதோ ஒன்று கவனமின்றி அப்படியே ஒரு காலில் ஷூ, மற்றொரு காலில் அதற்கு இணையான கட் ஷூ என்று செல்ல… அங்கே வயல் வரப்பில் இருந்த ஒரு பெண் பார்த்து விட்டு, “ஏய் யாரு அது செருப்பு காலோட வயல்ல இறங்கறது, ஏறு மேல”, என்று கத்தினாள்.

“என்ன செருப்புக் காலோடவா! யாரு அது?”, என்று அதை விடவும் கோபமாக சத்தம் கொடுத்துக் கொண்டு எங்கிருந்தோ வந்தது சாட்சாத் சிபியே தான். அங்கே ஜெயஸ்ரீயை அவன் எதிர்பார்க்கவில்லை. அதையும் விட ஜெயஸ்ரீயும் அவனை எதிர்பார்க்கவில்லை.  

இருவரும் நின்றது நின்றபடி இருக்க…

“ஏறு மேல”, என்று குரல் கொடுத்துக் கொண்டே அந்த பெண்மணி விரைந்து வர… பதட்டத்தில் மேலே ஏறுவதற்கு பதிலாக இன்னும் நாற்று இருந்த பக்கம் ஜெயஸ்ரீ போக… 

அதற்குள் அந்த பெண்மணி விட்டால் அடித்து விடுவார் போல விரைந்து அருகில் வர… 

“இருங்கக்கா!”, என்று அவசரமாக ஜெயஸ்ரீயின் இடையின் கீழ் இரு கைகளையும் கொடுத்து அப்படி தூக்கிக் கொண்டான் சிபி…    

எல்லோரும் வாய் பிளந்து பார்த்து நின்றனர்.                

                

Advertisement