Advertisement

NVNN-7

அத்தியாயம் 7

தமிழ்நங்கையின் அன்னை பிரேமா கைப்பேசியில் அழைக்க, யோசனையோடு தன் கைபேசியை பார்த்தாள் நங்கை.

“எடுத்துப் பேசுங்க” என்றான் ஆதி.

நங்கையும் அழைப்பை ஏற்க, “எத்தனை தடவை போன் பண்றது? ஏம்மா எடுக்கலை?” என்று சற்று பதட்டத்துடனே கேட்டார் பிரேமா.

தன் அன்னையிடம் பழனிவேல் பேசியதையும், தாங்கள் வீட்டை விட்டு வெளியில் வந்ததையும், இப்போது ஆதியின் நண்பன் வீட்டில் தங்கியிருப்பதையும் கூறிவிட்டாள் நங்கை.

“நான் அப்பாவை அழைச்சிகிட்டு உடனே வரேன்” என்றார் பிரேமா.

“வேண்டாம்மா அப்பாகிட்ட இப்ப எதுவும் சொல்ல வேண்டாம். நீங்களும் இப்ப வர வேண்டாம். நீ பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லை. ஏதாவதுன்னா நானே சொல்றேன். அப்புறம் வரலாம்” என்று கூறியவள் இன்னும் சற்று நேரம் அவரிடம் பேசி சமாதானம் செய்துவிட்டு கைப்பேசியை வைத்தாள்.

“என்னங்க உங்க அம்மா ரொம்ப வருத்தப்படுறாங்களா?” எனக் கேட்டான் ஆதி.

“அதை நான் சமாளிச்சுக்கறேன். நீங்க ஏன் இப்படி மரியாதையா வாங்க போங்கன்னு பேசுறீங்க? வா போ ன்னே பேசுங்களேன்” என்றாள் நங்கை.

“அது… அப்படிப் பேச வர மாட்டேங்குதுங்க” என்றான் ஆதி.

“எப்படி வராம போகும்? ட்ரை பண்ணுங்க”

“இல்லைங்க எனக்கு வரலை… விடுங்களேன்…” என ஆதி பாவமாக கூற, சிரித்த நங்கை விட்டுவிட்டாள்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்த விஜய், நங்கையின் பெட்டிகளையும் ஆதியின் ஆடைகளை ஒரு பெட்டியில் வைத்து அதனையும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான். உடன் சந்திராவும் அம்பிகாவும் வந்திருந்தனர். விஜய் ஆதியின் உறுதியை ஏற்கனவே இருவரிடமும் சொல்லியிருந்தாலும், இவர்களும் மீண்டும் வீட்டுக்கு வருமாறு வற்புறுத்த ஆதி சம்மதிக்கவில்லை.

“அம்மா விடு… ஆட்டோ கீழே நிக்குது, நீங்க போங்க இதோ வந்துடுறேன்” என்றவன், அவர்களை கீழே அனுப்பிவிட்டு ஆதியை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

“இந்தா வண்டி சாவி பிடி” என்று கொடுத்தான் விஜய்.

வேண்டாமென்று ஆதி மறுக்க, “உன் வண்டி சாவிதாண்டா, அப்பா மேல தானே கோபம்? என் மேல என்ன? நான் வாங்கி கொடுத்த வண்டிதானே? வச்சிக்க” என கட்டாயப்படுத்தி அவனிடம் வண்டி சாவியை கொடுத்தான்.

தன்னுடைய வாலட்டில் இருந்து கத்தையாக பணத்தை எடுத்தவன், அவனது பாக்கெட்டில் வைக்க போக, அதையும் வேண்டாமென்று தடுத்தான்.

“ரொம்ப பண்ணாதே, இது என் பணம். அப்பாவுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. எனக்கு ஒன்னுனா நீ தர மாட்டியா?” என கேட்டுக்கொண்டே அவனது பாக்கெட்டில் வைத்தான்.

“என்ன உதவின்னாலும் என்கிட்ட கேட்கணும் புரிஞ்சுதா?” என்று கூறியவன் விடைபெற்று சென்று விட்டான்.

“வாங்க போய் சாப்பிட்டுட்டு வரலாம்” என்றவன் நங்கையை அழைத்துக் கொண்டு சென்றான்.

ஒரு உணவகத்தில் உணவருந்திவிட்டு, தண்ணீர் பாட்டில் மட்டும் இரண்டு வாங்கிக் கொண்டு திரும்பி வந்து விட்டனர்.

தன்னுடைய புடவைகளில் இரண்டை எடுத்தவள் தரையில் விரித்து “படுத்துக்குங்க” எனக்கூறி இவளும் படுத்துவிட்டாள். விடி விளக்கை மட்டும் எரிய விட்டு ஆதியும் படுத்துக்கொண்டான்.

அடுத்த சில நிமிடங்களில் நங்கை உறங்கிவிட்டாள். ஆதி உறக்கம் வராமல் எழுந்து உட்கார்ந்து கொண்டான். அவளை மீண்டும் பார்த்ததிலிருந்து இன்றுவரை நடந்ததை அசை போட்டான்.

தமிழ்நங்கை தன் மனைவியாகி விட்டாள் என்பதை நினைக்கும் போதே அவனது மனம் இறக்கை கட்டி பறந்தது. இவளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்ததுமே தன்னுடைய பொருளாதார நிலையை எண்ணி பயந்தான்.

நங்கை இவனுக்கு முதுகு காட்டிக்கொண்டு சற்று இடைவெளிவிட்டு படுத்திருந்தாள். அவள் முகத்தை பார்க்கும் ஆவலில் குழந்தை தவழ்வது போல சென்று, மெல்ல சத்தம் செய்யாமல் நங்கையின் அருகில் சென்று எட்டி அவள் முகத்தை பார்க்க, நங்கை திரும்பி படுக்க இவன் மீது இடித்ததில் விழித்துக் கொண்டாள்.

கண் விழித்ததும் மிக அருகில் அவன் முகத்தை பார்த்தவள் சட்டென எழ அவன் தலையிலேயே முட்டிக் கொண்டாள்.

தலையைத் தடவிக்கொண்டே “தூங்காம என்ன பண்றீங்க?” எனக் கேட்டாள்.

“தூக்கம் வரலைங்க” என்றான் ஆதி.

“தூக்கம் வரலைன்னாலும் கண்ணை மூடிக்கிட்டு படுங்க, கொஞ்ச நேரத்துல தூக்கம் வந்துடும்”

“அதுக்கு முன்னாடி உங்க முகத்தை பார்க்கணும் போல இருந்துச்சு. நீங்க அந்த பக்கம் திரும்பி படுத்திருந்தீங்க அதான்…” என இழுத்தான் ஆதி.

சிரித்துக்கொண்டே, “இப்ப பார்த்துட்டீங்கதானே படுங்க” என்றாள் நங்கை.

“சரிங்க” என்றவன் அவளை பார்த்தவாறு படுக்க, நங்கையும் படுத்தாள்.

ஆதி கண்களை மூடாமல் அவளை பார்த்தவண்ணம் இருக்க, தன் கண்களை மூடி காட்டி அவனையும் கண்களை மூடுமாறு சைகையிலேயே தெரிவிக்க, ஆதி தன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

காலையில் நங்கை கண்விழித்தபோது ஆதி நல்ல உறக்கத்தில் இருந்தான். பல் துலக்கி விட்டு வந்தவள், வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை மட்டும் தன்னுடைய அலைபேசியில் குறித்துக்கொண்டிருந்தாள்.

ஆதியும் விழித்துவிட்டான். எதிரில் நங்கையை பார்த்தவன், நேராய் படுத்து சோம்பல் முறித்துக் கொண்டே சிரித்துக்கொண்டான்.

“என்ன தனியா சிரிக்கிறீங்க? என்கிட்ட சொல்லுங்க, நானும் சேர்ந்து சிரிக்கிறேன்” என்றாள் நங்கை.

“காலையிலேயே கண்ண திறக்கும்போது, மனசுக்கு புடிச்ச பொண்ணு கண்ணு முன்னாடி உட்கார்ந்திருந்தா எப்படி இருக்கும் தெரியுமா?” எனக் கேட்டான் ஆதி.

“எப்படி இருக்கும்?”

“சும்மா ஜிவ்வுவுவுன்னுனுனு… இருக்கும்” என்றான் ஆதி.

“போதும் எழுந்திரிங்க” என்றாள் நங்கை.

குளியலறை சென்று திரும்பியவன், “சாப்பாடு வாங்கிட்டு வரவா?” எனக் கேட்டான்.

“டெய்லி ஓட்டலிலேயே வாங்கி சாப்பிட முடியாது. வீட்டுக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்கணும். வீட்டிலேயே சமைக்கலாம்” என்று கூறியவள் சிறிது இடைவெளிவிட்டு “பணம் இருக்குதா?” என தயங்கி கேட்டாள்.

சட்டென்று முகம் சுணங்கிய ஆதி “இருக்கு” என்றான்.

“தப்பான அர்த்தத்துல கேட்கல, சாதாரணமாத்தான் கேட்டேன்” என்றாள் நங்கை.

“ஐயையோ நீங்க கேட்டதை நான் தப்பா எல்லாம் நினைக்கலீங்க. கல்யாணமான அன்னைக்கே வீட்டை விட்டு வெளியே கூட்டிட்டு வந்துட்டேன். வேலையும் இல்ல, நினைச்சுப் பார்த்தா பயமா இருக்கு” என்றான்.

அவன் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதில் நிம்மதியடைந்த நங்கை, “எதுக்கு பயப்படுறீங்க? வேலை தேடிக்கலாம், சமாளிச்சுக்கலாம்” என்று கூறினாள்.

“உங்க வீட்ல எதுவும் சொல்வாங்கதானே?”

“அதைப் பத்தி கவலைப்படாதீங்க. நான் பார்த்துக்கிறேன். இப்ப கிளம்புங்க, நமக்கு தேவையானதை வாங்கிட்டு வந்துடலாம்” என்றாள் நங்கை.

ஒரு மின்சார அடுப்பு, ஒரு மிக்ஸி, வாளி, குவளை, ஒரு பாய் இரு தலையணைகள், கொஞ்சம் பாத்திரங்கள், மளிகை சாமான்கள், காய்கறிகள் என வாங்கிக்கொண்டு காலை உணவையும் வெளியிலேயே முடித்துக்கொண்டு வீட்டிற்கு வர, வீட்டிற்கு வெளியில் நங்கையின் பெற்றோர் காத்துக் கொண்டு நின்றிருந்தனர்.

நங்கை அவர்களை வரவேற்க, ஆதி தர்மசங்கடத்துடன் அவர்களை வரவேற்றான். வீட்டை திறந்து உள்ளே அழைத்தாள் நங்கை. உள்ளே வந்து வீட்டை சுற்றுமுற்றும் பார்த்தார்கள்.

“என்ன நங்கை இது? அம்மா சொன்னதும் எனக்கு மனசே கேட்கலை. பிரச்சனைனா நீங்க அங்க வர வேண்டியதுதானே?” எனக் கேட்டார் தமிழரசு.

“அங்க வந்து எவ்வளவு நாள் இருக்கிறதுப்பா? அது நல்லா இருக்காது” என்றாள் நங்கை.

“நேத்து கல்யாணத்தை முடிச்சிட்டு, அன்னைக்கே வீட்டை விட்டு வெளியில் வந்து, இப்படி ஒண்டி குடுத்தனம் பண்றது மட்டும் நல்லா இருக்கா? உன் பேச்சைக் கேட்டது தப்போன்னு தோணுது” என ஆதங்கமாய் பிரேமா கூறினார்.

ஆதிக்கு அங்கிருந்து போய்விடலாமா என்று இருந்தது. பின் அவர்கள் நிலையை யோசித்து பார்த்தவனுக்கு பிரேமா கேட்டது நியாயமாகவே பட ஒன்றும் சொல்லாமல் அங்கேயே நின்று கொண்டான்.

“அம்மா நீ இப்படியெல்லாம் பேசாதே. இது நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை. கண்டிப்பா நாங்க நல்லா இருப்போம். நீங்க பயப்படுற மாதிரி ஒன்னும் நடக்கல” என்றவள், ஆதியை பார்த்து “பால் வாங்கிட்டு வர்றீங்களா” என கேட்டாள்.

ஆதி சென்றுவிட தன் பெற்றோரை பார்த்தவள், “ஏன்மா அவர் முன்னாடி அப்படி பேசுற? அவர் ஃபீல் பண்ண மாட்டாரா?” என கேட்டாள்.

“நீ கல்யாணம் பண்ணி எப்படி எல்லாம் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். கல்யாணத்துல பிரச்சனை, சரி… நீ சொல்றியேன்னு இவருக்கு பண்ணி வச்சோம். வேலை இல்லனாலும் சொந்தமா பாத்திரகடை வச்சிருக்காங்க, வீடு இருக்கு அப்படின்னு எல்லாம் யோசிச்சுதான் நான் சம்மதிச்சேன். ஆனா இப்படி வந்து நிற்கிறீங்களே, இது நல்லா இருக்கா? இத நெனச்சு தவிச்சு போய் நாங்க வந்திருக்கோம். அவர் ஃபீல் பண்ணுவார்ன்னு நீ கவலைப் படுற” என்றார் பிரேமா. பிரேமா கூறுவதை ஆமோதிப்பது போல தமிழரசனும் அமர்ந்திருந்தார்.

“அவர் என்னை ஒன்னும் நடு ரோட்ல நிறுத்திடலையே அம்மா, எனக்கு நம்பிக்கை இருக்கு, அவர் என்னை நல்லா பாத்துக்குவார். நீங்க பயப்படாம ஊருக்கு கிளம்புங்க” என்றவள், சற்று நிறுத்தி, “அவர்கிட்ட புண்படுற மாதிரி எதுவும் பேசாதீங்க” என்றாள்.

“அவர்கிட்ட நாங்க ஒன்னும் பேசலை. இப்படி ஒன்னும் நீ கஷ்டப்பட வேண்டாம். நீ சொல்ற மாதிரி அவர் ஒரு வேலையை தேடிக்கட்டு உன்னை நல்லா வச்சிக்கிற நிலைமைக்கு வரட்டும். அதுக்கப்புறம் நீ வரலாம். அதுவரை எங்க கூட வந்துடு” என்றார் பிரேமா.

“என்னம்மா நீ? என்ன பேசுற? இப்போ அப்பாவுக்கு ஏதாவது கஷ்டம்ன்னா என்னால எல்லாம் கஷ்டப்பட முடியாதுன்னு நீ உன் அம்மா வீட்டுக்கு போயிடுவியா? மாட்டதானே? அப்புறம் என்னை மட்டும் கூப்பிடுற? எந்த கஷ்டம்னும் உங்க கிட்ட வந்து நிக்க மாட்டோம். அவரை விட்டும் நான் வரமாட்டேன்” என தெளிவாக, உறுதியாக கூறினாள் நங்கை.

ஆதி பால் வாங்கி வந்து விட, தேநீர் போட்டுக் கொடுத்தாள் நங்கை.

“சரிம்மா, உனக்கு சீர்வரிசை எதுவும் செய்யல. அதையெல்லாம் பணமா உன் பேர்ல போடலாம்னு இருந்தோம். காலையில உன் மாமனார் வீட்டுக்கு போயிட்டுதான் வர்றோம். உன் நகைகளையும் எங்ககிட்டயே கொடுத்துட்டார். பணமும், நகையும் இந்த பையில இருக்கு. வச்சுக்க” என கூறி ஒரு பையை தமிழரசு நீட்டினார்.

எங்கே வாங்கி விடுவாளோ என தவிப்புடன் ஆதி பார்த்திருக்க, “வேண்டாம்பா” என மறுத்தாள் நங்கை.

“ஏன்மா வேண்டாம்னு சொல்ற. இது உனக்கு சேர வேண்டியது. தென்றலுக்கு என்ன செஞ்சேனோ அதுதான் உனக்கும் செய்றேன். நாளைக்கு வெண்பாவுக்கும் செய்வேன். எல்லாம் உன்னுடையது. வாங்கிக்க” என்றார் தமிழரசு.

“இல்லப்பா இதை இப்ப வாங்கினா, நல்லா இருக்காது. உங்க கிட்டயே இருக்கட்டும். தேவைப்படுறப்போ வாங்கிக்கிறேன்” என்றாள் நங்கை.

பிரேமா ஏதோ சொல்ல வாயைத் திறக்க, நங்கையின் பிடிவாத குணத்தை நன்கு அறிந்த தமிழரசு, பிரேமாவின் கையை பிடித்து அவரை பேச விடாமல் தடுத்தவர், “நாம கிளம்பலாம்” என்றார்.

“கிளம்புறோம் மாப்பிள்ளை” என தமிழரசு கூற, ‘உங்க பொண்ணை நல்லா பாத்துப்பேன் கவலைப்படாதீங்க’ என சொல்ல நினைத்தாலும், ஏதோ ஒன்று தடுக்க தயங்கிய ஆதி ஒன்றும் கூறாமல் விடைகொடுத்தான். அவனது முகத்தை ஏறெடுத்தும் பார்க்காத பிரேமா, தன் மகளிடம் மட்டும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்.

நங்கையின் பெற்றோர் சென்றதும் வீட்டுக்குள் வராமல், இடுப்பளவு இருந்த மொட்டைமாடியின் சுவற்றில் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருந்தான் ஆதி.

“என்னாச்சுங்க? இங்க நின்னு என்ன யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க?” என்ற நங்கையின் குரலில் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“உங்க அப்பா அம்மா ரொம்ப வருத்தப்படுறாங்க இல்ல?” எனக் கேட்டான்.

“அதையெல்லாம் யோசிக்காதீங்க, நாளைக்கு நல்ல நிலைமைக்கு வந்ததுக்கு அப்புறம் அவங்க கண்டிப்பா சந்தோஷப்படுவாங்க”

“என் அப்பாவை டென்ஷன் படுத்துறேன்னு என் லைஃபை ரொம்ப சிக்கலாக்கிக்கிட்டேன், இப்ப என்னோட சேர்ந்து நீங்களும் கஷ்டப்படுறீங்க”

“பசங்க நிறைய பேரு இப்படித்தான் இருக்காங்க. நம்மல ஒருத்தர் இன்சல்ட் பண்ணினா அவங்க முன்னாடி நல்லா வாழ்ந்து காமிக்கணும். அதை விட்டுட்டு வாழ்க்கையை அழிச்சிக்க கூடாது”

“இப்ப புரியறது அப்ப புரியலங்க. என் வீட்டுல எல்லாரும் சொன்னாங்கதான், இந்த மரமண்டைக்கு தான் ஏறல” என தன் தலையிலே ஒரு அடி வைத்தவன், “ஒரு வேலைக்கு போகணும்னா டிகிரியாவது முடிச்சிக்கணும். நான் எல்லாத்துலயும் அரியர்ஸ் வெச்சிருக்கேன். அடுத்து என்ன பண்றதுன்னு தெரியல” என்றான்.

“அவ்வளவுதானா…?”

“என்னங்க ரொம்ப ஈஸியா கேக்குறீங்க?”

“அரியர்ஸ்தானே? எல்லாத்தையும் எழுதி கிளியர் பண்ணிடலாம்ங்க”

“கிளியர் பண்ற வரைக்கும் குடும்பம் நடத்த என்ன பண்றதுங்க? அதைத்தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்”

“அதுவரைக்கும் நான் வேலைக்கு போறேன்” என எளிதாக தீர்வளித்தாள் நங்கை.

ஆதி தர்ம சங்கடமாய் நங்கையை பார்க்க, “ஏன் நான் வேலைக்கு போக கூடாதா?” எனக் கேட்டாள்.

“அதுக்கில்லைங்க… எப்படி சொல்றதுன்னு தெரியலை…” என ஆதி ராகம் இழுக்க,

“பொண்டாட்டி வேலைக்கு போய் சம்பாதிக்கிற காசுல நாம சாப்பிடறதான்னு நினைக்கிறீங்களா?” எனக் கேட்டாள்.

‘இல்லை’ என வேகமாக தலையாட்டியவன் ‘ஆமாம்’ என்பது போல மீண்டும் தலையாட்டிவிட்டு,

“நீங்க வேலைக்குப் போக கூடாதுன்னு எல்லாம் எண்ணம் இல்லைங்க. ஆனால் நான் வேலைக்கு போகாம உங்கள அனுப்புறதுக்கு கஷ்டமா இருக்கு” என்றான்.

“எல்லாம் கொஞ்ச நாளைக்குதானே. சரி… அரியர்ஸ் கிளியர் பண்ணிட்டு அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?”

“இன்னும் யோசிக்கலைங்க”

“இப்ப யோசிக்கலை, உங்க அப்பாவோட பிரச்சினை ஆகுறதுக்கு முன்னாடி யோசிச்சு இருப்பீங்கதானே”

“அப்பவும் நான் ஒன்னும் யோசிச்சது இல்லைங்க. என் அப்பாதான் கவர்ன்மெண்ட் வேலைக்கு படிக்க சொல்லிட்டு இருந்தார். ஒருவேளை எந்த பிரச்சனையும் இல்லனா படிச்சிருந்திருப்பேனோ என்னவோ?” என்றான் ஆதி.

“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. முதல்ல அரியர்ஸ கிளியர் பண்ணுங்க, அப்புறம் உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருந்துச்சுன்னா கவர்ன்மெண்ட் எக்ஸாம் எழுதி வேலைக்கு ட்ரை பண்ணுங்க” என்றாள் நங்கை.

“நீங்க சொல்லிட்டீங்கள, கண்டிப்பா டிரை பண்ணுறேங்க” என்றான் ஆதி.

“நான் சொல்றதுக்காக எல்லாம் வேண்டாம். உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருந்தால் ட்ரை பண்ணுங்க”

“நீங்க சொன்னீங்கன்னா என்ன வேணா பண்ணுவேங்க”

“என்ன வேணா செய்வீங்களா? இந்த மாடியில் இருந்து குதிக்க சொன்னா குதிச்சிடுவீங்களா?”

“நீங்க என்ன நினைக்கிறீங்க? குதிக்க மாட்டேன்னா…?” என தோரணையாக ஆதி கேட்க,

“ஒரு வருங்கால அரசு அதிகாரி இப்படியெல்லாம் பேசினால் வரலாறு என்ன சொல்லும்?” எனக் கேட்டாள் நங்கை.

“என்னங்க நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே வா” என்றான் ஆதி.

“இல்லைங்க வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா” என நங்கை கூற,

இருவரும் சேர்ந்து சிரித்தனர்.

Advertisement