Advertisement

NVNN-4

அத்தியாயம் 4

கோயம்புத்தூரில் பிரசித்தி பெற்ற அந்த கலைக்கல்லூரியில், கலை விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. மூன்று நாட்கள் நடைபெறும் அந்த கலை விழாவிற்காக தமிழகத்தின் பல கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் வந்திருந்தனர்.

இளநிலை கணிதம் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த ஆதித்யவேந்தனுக்கு நண்பர்களுடன் வந்து உற்சாகமாக பொழுதை கழிக்க வேண்டும் என்று ஆசை. அதனால் எதிலாவது பெயர் கொடுக்க வேண்டுமென பொது அறிவு வினாவிடையில் பெயர் கொடுத்திருந்தான். ஓரளவுக்கு அவனுக்கு அதில் ஈடுபாடும் இருந்தது.

முதல் நாளிலேயே போட்டியில் பங்கு பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்து விட்டான். அதற்குப் பின்னர் நன்றாக ரசித்து, கிண்டல் செய்து, உற்சாகமாக நண்பர்களுடன் பொழுதை போக்கி கொண்டிருந்தான்.

கலையரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒவ்வொருவராக பேசிக்கொண்டிருக்க, ஆதியின் நண்பன் ஒருவன் “இதெல்லாம் போர்டா. வா வெளியே போகலாம்” என்றான். இவர்களும் செல்லத் தயாராக, அடுத்து தமிழ்நங்கை என்ற அறிவிப்பு வந்தது. ஆதி இருக்கையை விட்டு எழுந்திருக்க,

“தாயே! தமிழே! நீ என் நாவிலே வந்து நடனமாட விட்டாலும் பரவாயில்லை.
சிறிது நடமாடி விட்டாவது போ”
என தமிழ்நங்கை பேச ஆரம்பிக்க, ஆதி அப்படியே அமர்ந்துவிட்டான்.

அவள் பேசி முடிக்கும் வரை அவளையேதான் பார்த்திருந்தான். கொஞ்சம் கூட பயமின்றி ரசிக்கும்படியாக அவள் கூறிய கருத்துக்களை கேட்டுக்கொண்டிருந்தான்.

“கனியிடை ஏறிய சுளையும்- முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும்- காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும்- தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும்- தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்”

என்ற பாரதிதாசனின் ‘தமிழின் இனிமை’ எனும் கவிதையை மேற்கோள்காட்டி நங்கை பேச என்ன புரிந்ததோ ஆதிக்கு, நங்கையிடம் மனதை பறி கொடுத்தான்.

கூட்டத்தைப் பார்த்து நடுக்கம் இல்லாமல் தெளிவாக அவள் பேசிய பாவனை ஆதியை வெகுவாக கவர்ந்துவிட்டது.

நங்கை பேசி முடித்துவிட்டு செல்ல, “என்னடா கிளம்பாமல் இன்னும் என்ன பண்ற?” என நண்பன் கேட்க, ஆதியும் எழுந்து சென்றான்.

அன்று முழுவதும் ஆதிக்கு நங்கையின் குரலே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. தமிழின் மீது பெரிய பற்றெல்லாம் கிடையாது ஆதிக்கு. அவன் படித்தது முழுவதும் ஆங்கில வழிக் கல்வி. ஆனாலும் நங்கை பேசிய தமிழ் ஆதியை ஈர்த்தது.

அடுத்த நாள் காலை வேளையில், நண்பர்களுடன் வெளியில் ஆதி நின்று கொண்டிருக்க, மைக்கில் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ சிறு நாடகத்திற்கான அறிவிப்பு வந்தது. நாடகத்தில் பங்கு பெற்றவர்களின் பெயர்கள் வரிசையாக வாசிக்கப்பட தமிழ்நங்கை என்ற பெயரும் வாசிக்கப்பட ஆதி கலையரங்கம் நோக்கி விரைந்தான்.

தமிழ்நங்கைதான் வேலுநாச்சியாராக நடித்தாள். திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கி ஹைதர் அலி உதவியுடன் வெள்ளையரை எதிர்த்து, போர்புரிந்து காளையார் கோயிலை கைப்பற்றியதையும், சிவகங்கையில் தன்னை காட்டிக் கொடுக்காமல் வெட்டிக் கொல்லப்பட்ட உடையாள் என்பவருக்கு வீரக்கல் நட்டு தனது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்துவதையும் சிறு நாடகமாக காண்பிக்கப்பட்டது.

தமிழ்நங்கையின் தைரியத்தைப் பார்த்து அதிசயித்து போனான் ஆதி. அவனுடைய பாட்டி விசாலம்தான் தைரியமாக இருப்பார். ஆதியின் அன்னையும், அண்ணியும் யாராவது ஏதாவது கூறினால் உடனே அழுது விடுவார்கள். எதிர்த்து எதுவும் பேசமாட்டார்கள். இந்த விஷயத்தில் ஆதி எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர்கள் மாறவே இல்லை.

தன்னுடைய பாட்டிக்கு பிறகு அவன் பார்த்த தைரியமான பெண்மணி தமிழ்நங்கைதான். தன்னுடைய நண்பர்களிடமும் ஆதி இதை பகிர்ந்து கொள்ள,

“என்னடா நீ? அந்த பொண்ணு உண்மையிலேயே சண்டை போட்ட மாதிரி பேசுற. எல்லாம் நடிப்பு தானடா” என்றான் ஒருவன்.

“சண்டை போட்டு நடிச்சதுக்காக அந்த பொண்ணு தைரியம்ன்னு சொல்லல டா. மேடையில ஏறி கொஞ்சம் கூட பயப்படாமல் பேசிச்சே. உன்னால முடியுமா சொல்லு. எங்க கிட்ட மூச்சுவிடாம பேசுறியே, அந்த மேடையில் ஏறி நாலு வார்த்தை பேசு பார்ப்போம்”

“அந்த பொண்ணு கண்ணுல கொஞ்சம் கூட பயமே இல்லை. சான்சே இல்ல டா. கண்டிப்பா அந்த பொண்ணு தைரியசாலிதான்”

இடையில் வந்து சேர்ந்து கொண்ட புதிய நண்பன் ஒருவன், “எந்த பொண்ணை பத்திடா பேசுறீங்க” என கேட்க, “அதாண்டா கொஞ்ச நேரம் முன்னாடி வேலு நாச்சியாரா நடிச்சி சண்டையெல்லாம் போட்டுச்சே அந்த பொண்ணு” என்றான் இன்னொருவன்.

“அந்த பொண்ணா பார்க்க சுமாராதான் இருந்துச்சு” என்றான் அவன்.

அவனை முறைத்து பார்த்த ஆதி “என் கண்ணுக்கு அந்த பொண்ணுதான் அழகா தெரியுது” என்றான்.

“போடா உன் பேச்சைக் கேட்டு இங்க இருந்தா எனக்கு தூக்கம் வந்துரும்” எனக்கூறி மற்றவர்கள் சென்று விட்டனர்.

ஆதி மட்டும் அங்கேயே அமர்ந்து தமிழ்நங்கை பேசியதையும் அவளது நடிப்பையும் அசை போட்டுக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் தன் நண்பர்களிடம் சென்றவன், “டேய் எனக்கு தமிழ்நங்கையை பார்க்கணும்” என்றான்.

“நீ இன்னும் அந்த பொண்ணை விடலையா?” என ஒருவன் கேட்க, மற்றொருவன் “நீ பார்த்து என்ன பண்ணப்போற?” எனக் கேட்டான்.

“சும்மா பார்த்து நல்லா நடிச்சிருக்கீங்கன்னு அப்ரிசியேட் பண்ணடா” என்றான் ஆதி.

“நீ சொல்றது நம்புற படி இல்லையே. என்ன பார்த்ததும் லவ்வா?” எனக் கேட்டான் அவன்.

அவ்வாறெல்லாம் ஆதி யோசிக்கவில்லை. ஆனால் அவன் அப்படி கேட்டதும் நங்கையை கல்யாணம் பண்ணினா எப்படி இருக்கும் என நினைக்க, அந்த நினைவே அவனுக்கு சில்லென்று இருந்தது.

“டேய் தெரியலடா” என்றான் ஆதி.

“தெரியலையா மச்சி கன்ஃபார்மா அப்ப அது லவ்தான்” என்றான் மற்றொருவன்.

“நாளைக்கு ஒரு நாள்தான் இருக்கு. அதுக்குள்ள நீ அந்த பொண்ணை ப்ரொபோஸ் பண்ணுடா” என்றான்.

இப்படியாக நண்பர்கள் உசுப்பேற்ற ஆதியும் நங்கையிடம் தன் காதலை சொல்வது என முடிவெடுத்தான்.

தமிழ்நங்கை இப்போது எங்கே இருப்பாள் எனத் தேட, நண்பன் ஒருவன் அவள் இருக்கும் இடத்தை கூற, ஆதி தன் காதலை அவளிடம் சொல்ல அங்கே சென்றான். ஏதோ போட்டி ஒன்று நடந்து கொண்டிருக்க பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த நங்கைக்கு அருகில் ஆதி அமர செல்ல, அதற்குள் இன்னொரு பெண் அமர்ந்துவிட்டாள். நங்கைக்கு பின்னால் இருந்த இருக்கையில் ஆதி அமர்ந்துகொண்டான். ஆதியை இவர்கள் கவனிக்கவில்லை.

“டீ நங்கை நான் எங்க போனாலும் அவன் என் பின்னாடியே வராண்டி” என்றாள் அவள்.

“ஏய் அஞ்சு, அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. எதேச்சையாதான் அவன் இங்க வந்திருக்கான். நீயா ஏதாவது குழப்பிக்காத” என்றாள் நங்கை.

“இல்லடி அவன் என்னையே தான் முறைச்சு முறைச்சு பார்த்துட்டு இருக்கான்” என்றாள் அஞ்சு.

“ஏண்டி அவன் டீசண்டா உனக்கு லெட்டர் கொடுத்து ப்ரொபோஸ் பண்ணினான். உனக்கு பிடிக்கலைனு சொன்னதும் அவன் பாட்டுக்கு இருக்கான். உன்னை எங்க அவன் முறைச்சு முறைச்சு பார்க்கிறான்? எனக்கு என்னமோ நீதான் அவன பார்க்கிற மாதிரி தெரியுது” என்றாள் நங்கை.

அஞ்சு அசடு வழிய சிரிக்க, “உன்னை அவன் ஃபாலோ பண்றானா, இல்லை நீ அவனை கவனிக்க ஆரம்பிச்சிட்டியா?” என நங்கை கேட்க அதற்கும் பதில் கூறாமல் சிரித்தாள் அஞ்சு.

கேட்டுக்கொண்டிருந்த ஆதிக்கும் நங்கைக்கு காதல் கடிதம் மூலம் தன் காதலை தெரிவிக்கலாம் என்ற எண்ணம் வந்தது.

இரவே கடிதத்தை எழுதி பத்திரப்படுத்தி வைத்தான் ஆதி. நாளைக்கு எப்படி அவளிடம் கொடுப்பது, என்ன சொல்வது என யோசித்துக்கொண்டே வெகு நேரம் கழித்தே உறங்கினான். காலையில் சீக்கிரமாக விழித்து கிளம்பியவன் தன் நண்பர்களையும் சீக்கிரம் எழுப்பிவிட மணியை பார்த்தவர்கள், “மணி ஏழு தாண்டா ஆகுது” என கூறி மீண்டும் படுத்துக்கொண்டனர்.

சிறிது நேரத்திலேயே மீண்டும் ஆதி எழுப்பிவிட மணி அப்போது ஏழு பத்து தான் ஆனது.

“டேய் இவன் நம்மள எப்படியும் தூங்க விட மாட்டான். நொய் நொய்ன்னு உயிரை வாங்குவான்” என ஒருவன் கூற மற்றவர்களும் எழுந்தனர்.

தன் நண்பர்களுடன் கிளம்பி 8 மணிக்கெல்லாம் கல்லூரிக்கு வந்து விட்டனர்.

“ஒரு ஈ காக்கா கூட இல்ல டா. இவனுக்கு தூக்கம் வரலைன்னு நம்ம உயிரையும் வாங்குறான்” என்றான் ஒரு நண்பன்.

“மச்சி அவன் லவ் சொல்ல போறான் டா. அவனை எதுவும் சொல்லாத. டென்ஷன்ல சொதப்பிட போறான்” என மற்றொருவன் கூற, இப்படியாக இவர்கள் பேசிக் கொண்டே இருக்க ஒன்பது மணிக்கு மேல் மாணவர்களும் ஆசிரியர்களும் வர ஆரம்பித்தனர்.

“டேய் பசிக்குதுடா, சாப்பிட்டு தெம்பா வந்து சொல்லலாம் வாடா” என ஆதியை அழைக்க, அவன் வர மறுத்து விட மற்றவர்கள் மட்டும் உணவகம் நோக்கி சென்றனர்.

உணவகத்தில் ஒருவன் ஆர்டர் செய்ய வேறொரு பெண்ணும் ஆர்டர் கொடுத்தாள். அந்த நேரத்தில் ஒருவன் மட்டுமே சேவை செய்ய இருக்க, “முதல்ல எனக்கு கொடுங்க” என இருவருமே கூறினர்.

கடையில் இருந்தவன் அந்த பெண்ணை பார்த்துக்கொண்டே அவளுக்கே முதலில் சர்வீஸ் செய்ய, “பொண்ணுனா போதுமே உடனே அங்கதான் ஃபர்ஸ்ட் கொடுப்பீங்க. ஆம்பளைங்களை மனுஷனாவே மதிக்க மாட்டீங்களே” என்றான் ஆதியின் நண்பன்.

“ஹலோ என்ன வம்பு பண்றீங்களா?” என்றாள் அந்தப் பெண்.

“நான் இவர் கிட்ட தானே பேசிக்கிட்டு இருக்கேன் உங்களுக்கு என்ன?” என்றான் இவன்.

“நீங்க பேசுறது என்ன பத்திதானே?”

“நான் பொதுவா தான் பேசினேன்”

“இல்ல நீங்க என்னைத் தான் சொன்னீங்க”

“நான் தப்பா ஒன்னும் சொல்லலைங்க”

இவர்கள் வாக்குவாதத்தை பார்த்த ஆதியின் மற்ற நண்பர்கள் அருகில் வந்தனர்.

டேய் என்னடா பிரச்சனை என அவளை முறைத்துக் கொண்டே மற்றவர்கள் கேட்க, கூட்டமாக இவர்களைப் பார்த்த அந்தப் பெண் சென்றுவிட்டாள்.

இவர்கள் உணவருந்திவிட்டு செல்ல ஆதி அங்கேயேதான் காத்துக் கொண்டிருந்தான்.

“என்னடா உன் ஆளு இன்னும் வரலையா?” என கேட்டான்.

“இல்லடா” என்றான் ஆதி.

“டேய் அங்க பாருடா உன் ஆளு வருது” என ஒருவன் கூற ஆதி திரும்பி பார்த்தான். தூரத்தில் கருப்பு வெள்ளை சுடிதார் அணிந்து வந்து கொண்டிருந்தாள் தமிழ்நங்கை.

“ஆல் தி பெஸ்ட் டா மச்சி” என நண்பர்கள் கூற “தேங்க்ஸ்டா” என கூறிவிட்டு நங்கையை நோக்கி சென்றான் ஆதி. ஆதியின் நண்பர்கள் சற்று இடைவெளிவிட்டு அவனையே பார்த்திருந்தனர்.

அவளை நெருங்கியவன் “தமிழ்நங்கை” என அழைத்தான். நின்றவள் அவனைப் பார்த்து, “நீங்க யாரு என் பெயர் எப்படி தெரியும்?” எனக் கேட்டாள்.

“நான் ஆதித்தியவேந்தன். நேத்து நீங்க வேலுநாச்சியாரா ரொம்ப நல்லா நடிகச்சீங்க. சூப்பரா சண்டையெல்லாம் போட்டீங்க. அதுக்கு முன்ன கருத்தரங்குல கூட ரொம்ப நல்லா பேசுனீங்க” என்றான் ஆதி.

“தேங்க்ஸ்” எனக்கூறி அவள் கடந்து செல்ல முற்பட,

“உங்க பேர் கூட சூப்பர் தமிழ்நங்கை” என்றான்.

திரும்பிப் பார்த்து மீண்டும் “தேங்க்ஸ்” எனக்கூறி அவள் செல்ல “ஒரு நிமிஷம்” என்றான்.

“என்ன சொல்லுங்க?” என நங்கை கேட்க தன் பாக்கெட்டில் இருந்த கடிதத்தை எடுத்து நீட்டினான் ஆதி.

அவனை கேள்வியாக பார்த்துவிட்டு, கடிதத்தை கையில் வாங்கினாள் நங்கை. ஆதி நெஞ்சில் பதட்டத்துடன் அவளைப் பார்த்திருக்க பிரித்துப் படித்தாள்.

தமிழ்நங்கை

உங்க பெயரை கேட்டுத்தான் உங்களை கவனிக்க ஆரம்பித்தேன். உங்கள் தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பொண்ணுன்னா உங்கள மாதிரிதான் இருக்கணும். உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. உங்கள நான் நல்லா பார்த்துக்குவேன். உங்கள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். உங்களுக்கு சம்மதமா?

இப்படிக்கு
ஆதித்யவேந்தன்.

எந்த பிதற்றலும் இல்லாமல், தான் மனதில் நினைத்ததை அப்படியே எழுதி சம்மதமா என கேட்டு எழுதியிருந்தான். படித்த நங்கைக்கு உதட்டோரம் சிரிப்பு வந்தது. கடிதத்தை மீண்டும் படித்தவள் அதை மடித்துக் கொண்டே,

“இப்பதான் உங்களை எனக்கு தெரியும். அதுவும் உங்க பேரை தவிர ஒன்னும் தெரியாது. எந்த நம்பிக்கையில சம்மதம் சொல்றது. உங்களுக்கும் இது வெறும் இன்ஃபாச்சுவேஷன்தான்ங்க. சீக்கிரம் என்னை மறந்துடுவீங்க” என்றாள்.

“இல்லங்க இது இன்ஃபாச்சுவேஷன் எல்லாம் இல்லை. நீங்க என் வாழ்க்கையில வந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. பொண்ணு பாக்க போய் உடனே ஓகே சொல்றாங்கதானே. அது இன்ஃபாச்சுவேஷனா?” எனக் கேட்டான் ஆதி.

“சாரிங்க… எனக்கு சம்மதமில்லை. இதை நீங்களே வச்சுக்குங்க” என கடிதத்தை அவனிடம் நீட்டி கூறிக் கொண்டிருக்கும் பொழுது, கடிதத்தை அவள் கையிலிருந்து பிடுங்கினாள் நங்கையின் தோழி மீனா.

சற்று முன்னர் உணவகத்தில் ஆதியின் நண்பனோடு வாக்குவாதம் செய்தவள். அவள் வந்து கொண்டிருக்கும் பொழுது ஆதியின் நண்பர்கள் நங்கையை பார்த்து பேசிக்கொண்டிருப்பதை கவனித்து, அங்கேயே நின்று ஒட்டு கேட்டாள்.

“டேய் என்னடா ஆதிக்கு அந்த பொண்ணு ஓகே சொல்லிடுமா?”

“கண்டிப்பா சொல்லிடும் டா”

“அப்ப இன்னிக்கு ஒரு பெரிய பார்ட்டி இருக்கு”

இவர்கள் பேசியதிலிருந்து ஆதி இவர்களின் நண்பன் என அறிந்தவள் நங்கையின் அருகில் சென்று கடிதத்தை பிடுங்கிக் கொண்டாள்.

“மீனா அதை கொடு” என நங்கை கேட்க,

“என்னடி பிரச்சினை பண்றானா?” என  ஆதியை பார்த்துக் கொண்டே கேட்டாள் மீனா.

“மரியாதையா பேசுங்க” என்றான் ஆதி.

“உனக்கு எல்லாம் என்னடா மரியாதை?” என்றாள் மீனா.

“மீனா நடந்தது தெரியாம இப்படி எல்லாம் பேசாதே, அந்த லெட்டரை என் கையில கொடு” என்றாள் நங்கை.

ஆதியும் நண்பர்களும் நெருங்கி வந்துவிட “என்னடா ஆதி?” என்றான் ஒருவன்.

ஆதி அவர்களுடன் பேசும் முன்பு, நங்கையின் கல்லூரியிலிருந்து அவர்களுடன் வந்த ஆசிரியை அங்கே வந்துவிட்டார்.

“என்ன மீனா என்ன பிரச்சனை?” என அவர் கேட்க,

“மேடம் இவங்க லவ் லெட்டர் கொடுத்திட்டு, வம்பு பண்ணிக்கிட்டு இருக்காங்க” எனக்கூறி கடிதத்தையும் அவரிடம் ஒப்படைத்தாள் மீனா. நேராக அந்த கல்லூரி நிர்வாகத்திடம் சென்று விட்டார் ஆசிரியை. விசாரணை ஆரம்பமானது. 

ஆதியின் நண்பர்கள் உணவகத்தில் வம்பு செய்ததாகவும், பின்னர் ஆதி காதல் கடிதம் கொடுத்து பிரச்சனை செய்ததாகவும் கூறினாள் மீனா. உணவகத்தில் வேலை பார்த்தவனிடம் விசாரிக்க, அவனும் மீனாவை பார்த்துக்கொண்டே மீனா சொல்வதையெல்லாம் ஆமோதித்தான்.

நங்கை பிரச்சனை எதுவும் இல்லை என்று கூறினாள்தான். அவருடைய ஆசிரியை “இந்த பொண்ணு பின்னாடி எதுவும் பிரச்சனை ஆகுமோன்னு இப்படி சொல்லுது. நானே நேர்ல பார்த்தேன் சார்” என்றார்.

ஆதி கல்லூரியில் இருந்து வந்திருந்த பொறுப்பாசிரியரிடம் ஆதி மற்றும் அவனது நண்பர்களை உடனடியாக வெளியேற சொல்ல, அவரும் அவர்களை அனுப்பி வைத்து விட்டார்.

இதையெல்லாம் ஆதியும் அவன் நண்பர்களும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நங்கை தனக்கு சம்மதம் சொல்லவில்லை என்பதற்காகத்தான் ஆதி வருத்தப்பட்டான்.

நங்கை மீனாவை மிகவும் திட்டினாள். பெரிய விஷயம் ஆக்கிவிட்டாய் என கோபப்பட்டவள் அவளிடம் பேசுவதை நிறுத்தி விட்டாள்.

திருச்சியில் ஆதியின் கல்லூரியில் அவர்களின் பெற்றோரை வரவழைத்து எல்லோரையும் இரண்டு வாரம் இடை நீக்கம் செய்யப் போவதாக அவர்களின் பிரின்சிபால் கூறினார்.

உண்மையை எடுத்துக் கூறியும் யாரும் நம்பாததால், ஆதி பிரின்சிபாலிடம், தன் நண்பர்கள் மீது தவறில்லை என்றும், தான் தான் காதல் கடிதம் கொடுத்ததாகவும் பிரச்சனைக்கு தான் தான் முழு காரணம் என்றும் கூறினான்.

ஆதி நண்பர்களின் பெற்றவர்களில் ஒருவர் “பார்த்தீங்களா… அந்தப் பையன் மேல தான் தப்பு. எங்க பசங்கள விட்டுடுங்க” என்றார்.

இன்னொருவர் “இந்த மாதிரி பசங்க கூட பழக்கம் வெச்சுக்காதீங்க” என்றார்.

பழனிவேலுக்கு மிகுந்த அவமானமாகிவிட்டது. என்ன ஏது என்று ஆதியிடம் எதுவும் கேட்காமல், பெல்ட்டை கழட்டியவர் அனைவரது முன்னிலையிலும் அவனை அடித்து விளாசிவிட்டார்.

“படிச்சி உருப்பிடுற வழியில்லாம, லவ் கேட்குதா நாயே” என திட்டவும் செய்தார்.

வெளியிலிருந்து கூட எட்டிப் பார்த்துவிட்டு சிலர் செல்ல, பிரின்சிபால் வந்து அவரைத் தடுத்து நிறுத்தினார். ஆதி மட்டும் இரண்டு வாரங்கள் இடை நீக்கம் செய்யப்பட்டான்.

வேன் மண்டபத்தின் வாசலில் வந்து நிற்க, ஆதியும் நங்கையும் தங்கள் பழைய நினைவுகளில் இருந்து மீண்டனர்.

Advertisement