Advertisement

NVNN-2

அத்தியாயம்-2

பழனிவேல் காலை உணவு அருந்தி கொண்டிருக்க, விஜய்யும் சாப்பிட அமர்ந்தான்.

“ ஏண்டா விஜய் அந்த தறுதலைய இந்த வருஷமாவது அரியர்ஸ எழுதி பாஸ் பண்ண சொல்லேண்டா. அவன் என்னதான் மனசுல நினைச்சுகிட்டு இருக்கான்? இப்படியே ஊர் சுத்திக்கிட்டு இருக்கலாம்னா?” என்றார் பழனிவேல்.

“சொல்றேன் பா” என்றான் விஜய்.

“உன்னை வளர்த்த மாதிரிதானடா அவனையும் வளர்த்தேன். நீ எப்படி பொறுப்பா இருக்க? அவன் மட்டும் ஏண்டா இப்படி இருக்கான்?” எனும் போதே வெளியில் வந்தான் ஆதி.

“ஆளும் தாடியும் பாரு. அடியே! உன் புள்ளைய இப்படியே வெளியில போகச் சொல்லாதே. தீவிரவாதின்னு சந்தேகப்பட்டு புடிச்சிட்டு போயிடப் போறாங்க” என சத்தமாக கூறினார் பழனிவேல்.

கை சட்டையை மடக்கி விட்டுக்கொண்டே சாப்பிட அமர்ந்த ஆதி, “உன் பேர சொன்னா விடமாட்டாங்க?” என தன் அண்ணனிடம் கேட்டான்.

“அடி செருப்பால அவன் பெயரை எதுக்குடா சொல்ற?” என பழனிவேல் கோபப்பட, “ச்சேய்… நிம்மதியா ஒரு வாய் திங்க முடியுதா?” என ஆதியும் கோபமாக எழுந்தான்.

அவன் கையைப் பிடித்து தடுத்த விஜய், “அப்பா, நீங்க கொஞ்சம் சும்மா இருங்க” என்றவன் “சாப்பிட்டுட்டு போடா” என ஆதியிடம் கூறினான்.

“உனக்காக சாப்பிடுறேன்” என அமர்ந்து ஆதி உண்ண, அவனை முறைத்துக் கொண்டே எழுந்து சென்றார் பழனிவேல்.

“ஏண்டா இந்த அரியர்ஸ கிளியர் பண்ணினா என்னடா?” எனக் கேட்டான் விஜய்.

“ஏன் மீசை சந்தோஷப்படுறதுக்கா? அதுக்காக நான் கஷ்டப்பட்டு படிக்கனுமா? முடியாது” என கூறிக்கொண்டே சாப்பாட்டில் கவனமாக இருந்தான் ஆதி.

பெருமூச்சு விட்ட விஜய், “இந்த தலைமுடியை வெட்டி தாடிய எடுத்தா என்னடா? அட்லீஸ்ட் தாடியை ட்ரிம் பண்ணியாவது வச்சுக்கடா” என்றான்.

“நான் பார்க்க இப்படி இருந்தாதானே மீசைக்கு காண்டாவுது. எடுக்க மாட்டேன்” என்றான்.

“டேய் எப்படி இருந்த நீ? ஏண்டா இப்படி இருக்கிற? உன்னை நினைச்சு நினைச்சு அம்மா ரொம்ப ஃபீல் பண்றாங்க டா”

“என்ன நெனச்சு யாரும் ஃபீல் பண்ண வேண்டாம். என்னை என் போக்குல விடுங்க” என்றவன், கைகழுவிவிட்டு, “வண்டிக்கு பெட்ரோல் போட காசு வேணும்” என கூறிக்கொண்டே விஜய்யின் வாலட்டை எடுத்து பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

அவன் வெளியே சென்று விட்டான் என்பதை அறிந்து அறையிலிருந்து வெளிவந்த பழனிவேல், “நீங்க எல்லாரும் அவன் கிட்ட பேசாம இருங்க. குடியை விட்டு அரியர்ஸ் எல்லாம் கிளியர் பண்ணுனாதான் பேசுவோம்னு சொல்லுங்க. எப்படி அவன் வழிக்கு வர்றான்னு பாருங்க” என்றார்.

“அப்பா நீங்க சொல்றது மாதிரி எல்லாம் பண்ணுனா, அவன் வீட்டை விட்டு வெளியில் போய்டுவான். என்ன பண்ணுனாலும் நைட் எந்நேரமானாலும் வீட்டுக்கு வந்துடுறான்தானே. அது இல்லாம கண் காணாம எங்கேயாவது போய்ட்டான்னா என்ன பண்றது?” எனக் கேட்டான் விஜய்.

“நல்லா கேளு டா. உங்கப்பன் ஆளுதான் வளர்ந்து இருக்கான். அறிவு… ம்ஹூம்…” என்று ஒத்து ஊதினார் விசாலம்.

“இப்படி எல்லாரும் அவனுக்கே சப்போர்ட் பண்ணுங்க. குட்டிச்சுவரா போகப் போறான்” என்றவர் கடைக்கு கிளம்பிவிட்டார்.

விஜய் தன் தம்பியின் எதிர்காலத்தை நினைத்து கவலையாக இருக்க, “என்னங்க ஆதியை நினச்சு கவலைப்படுகிறீங்களா? அவனுக்கு இப்போ ஏதோ போறாத காலம். அதான் இப்படி இருக்கான். அவனோட நல்ல மனசுக்கு கண்டிப்பா அவன் நல்லா இருப்பான். நீங்க வேணா பாருங்க” என்றாள் அம்பிகா.

ஆதி தன் நண்பர்கள் முரளி மற்றும் ரஞ்சிதுடன் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தான். முரளியின் தந்தைக்கு சொந்தமாக மூன்று தளங்களுடன் கூடிய பல்பொருள் அங்காடி இருந்தது. அதனை முரளியும் சேர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான். ரஞ்சித், ஆதி போலவே வேலை எதுவும் பார்க்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

ஆதியின் பள்ளி நண்பர்கள் இவர்கள். கல்லூரி வேறு வேறு இடங்களில் படித்தனர். முரளி உள்ளூரிலேயே செட்டிலாகி விட, ரஞ்சித் வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறான்.

ஒரு அளவு குடித்ததும் ஆதி நிறுத்திக் கொண்டான். “டேய் எப்பவும் இப்படி பண்றியே இதுல என்னடா போதை ஏறும்? இதுக்கு நீ குடிக்காமலேயே இருக்கலாம்” என்றான் ரஞ்சித்.

“நான் ஒன்னும் போதை ஏற குடிக்கல. எங்க அப்பனுக்கு கோவம் ஏற குடிக்கிறேன். ரொம்ப குடிச்சி சீக்கிரம் பட்டுன்னு போயிட்டேன்னா என் அம்மா அழுவும் டா” என்றான் ஆதி.

“அப்ப குடிக்கிறதை நிறுத்திட்டு வேற வகையில உங்க அப்பாவ வெறுப்பேத்தேன்டா” என்றான் முரளி.

‘உனக்கு தெரியாதுடா, குடிக்கிறதுன்னா எங்க அப்பாவுக்கு பிடிக்காது. சில்லறை மாத்த கூட ஒயின்ஷாப் போகமாட்டார். அவரை வெறுப்பேத்த இதுதான்டா சரியான வழி” என்றான் ஆதி.

“அப்படி ஏன்டா அவரை வெறுப்பேத்தணும்?” என ரஞ்சித் புதிதாக கேட்பது போல கேட்டான்.

“உனக்கு தெரியாதாடா? மீசை சின்ன வயசுல இருந்தே சரியான டார்ச்சர். எதுவும் ஆசையா கேட்டா உடனே வாங்கி தர மாட்டார். இதை செஞ்சீனா வாங்கி தரேன்னு நமக்கே ஒரு டார்கெட் வைப்பார். இப்படித்தான் ஒரு தடவ ஆசை ஆசையா சைக்கிள் கேட்டேன் டா. நீ போன தடவை எட்டாவது ரேங் தானே வாங்கியிருந்த, முதல் அஞ்சுக்குள்ள வா உனக்கு வாங்கித் தரேன்னு சொன்னார். நானும் சைக்கிள் ஆசையில அரும்பாடுபட்டு படிச்சு அஞ்சாவது ரேங்கும் வாங்கிட்டேன்”

“உங்க அப்பா சைக்கிள் வாங்கி கொடுத்துட்டாறாடா?” எனக் கேட்டான் ரஞ்சித்.

“ம்… ம்… கொடுத்தாரு… கொடுத்தாரு…”

“அப்புறம் என்னடா?”

“சைக்கிள் வாங்கிக் கொடுத்தவரு, பூட்டி வச்சிக்கிட்டு, அடுத்த முறை ஃபர்ஸ்ட் ரேங் எடு, சைக்கிள் ஓட்டலாம் அப்படின்னுட்டாரு”

சத்தமாக முரளியும் ரஞ்சித்தும் சிரிக்க, “என் கதையை கேட்டா உங்களுக்கு சிரிப்பா வருதா?” எனக் கேட்டான் ஆதி.

“சரிடா நீ சைக்கிள் ஓட்டுனியா? இல்லையா?” எனக் கேட்டான் முரளி.

“சைக்கிள் ஓட்டுற ஆசையே போச்சுடா”

“பைக் மட்டும் எப்படிடா வாங்கி கொடுத்தாரு?”

“அது மீசை வாங்கி கொடுத்ததில்லைடா. என் அண்ணன் வாங்கி கொடுத்தது. அதுக்கப்புறமும் எங்க அப்பாகிட்ட கேட்க நான் லூசா என்ன?”

“என் அம்மா எவ்வளவு நல்லவங்க தெரியுமா? அவங்கள கொஞ்சம் கூட மதிக்கவே மாட்டார். பாவம்டா அவங்க, சமையல்கட்டே கதின்னு வாழ்ந்துட்டாங்க. அவங்களை ரொம்ப இளக்காரமா பார்ப்பார். எங்க அம்மா எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டாங்க. அவர் சொல்றதுதான் சரி, அவர் நினைக்கிறதுதான் சரி, அப்படீன்னு அவருக்கு ஒரு எண்ணம்”

“நான் என்னடா பண்ணினேன்? ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தேன். அதுவும் பிடிக்கலைன்னு போயிடுச்சு. அதுக்காக என்னை… என்னை… எல்லார் முன்னாடியும் நிக்க வச்சு பெல்ட்டால அடிச்சாரு டா. எனக்கு எவ்வளவு அசிங்கமாயிடுச்சி தெரியுமா? அவர வெறுப்பேத்த என்ன வேணா செய்யலாம்” என்றான் ஆதி.

“டேய் மச்சி… உன் சோக கதைய கேட்டா ஃபீலிங்கா வருதுடா. உனக்காக ஒரு பெக்” எனக் கூறி மடக் மடக்கென குடித்தான் ரஞ்சித்.

“ஆமாம் இவன் இன்னைக்குதான் அவன் அப்பா கதையை சொல்றான். உனக்கு உடனே ஃபீலிங் ஆயிடுச்சு. போதும் கிளம்புங்கடா. எனக்கு வேற பொண்ணு பாக்குறாங்க. யாரும் வந்து விசாரிச்சா, என்னை குடிகாரன்னு சொன்னா எவன்டா எனக்கு பொண்ணு தருவான்?” என கேட்டு விட்டு அவர்களையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான் முரளி.

அடுத்த நாள் காலையில் பழனிவேலின் தம்பி மாணிக்கவேல் தன் மனைவி கல்பனாவுடன் வந்திருந்தார். தங்களது மூத்த மகன் ஆனந்தின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க வந்திருந்தனர்.

“என்னடா கல்யாண பேச்சுதானே போய்கிட்டு இருந்தது. திடீர்னு பத்திரிகையை கொண்டு வந்து நீட்டுற?” என்றார் பழனிவேல்.

“அண்ணன் உங்களை எல்லாம் கூப்பிட்டுகிட்டு போய்தான் பேசி முடிவெடுக்கலாம்ன்னு இருந்தோம். ஆனந்துக்கு லீவு ரொம்ப இல்லை. 20 நாள் லீவுல தான் வர்றான். அதான் உடனே கல்யாணத்தை பேசி முடிச்சிட்டோம். அவனே அடுத்த வாரம் தான் வர்றான்” என்றார் மாணிக்கவேல்.

பத்திரிகையை வாங்கிப் பார்த்த பழனிவேல், “என்னடா அடுத்த வாரம் வராங்கிற, கல்யாணமும் அடுத்த வாரம்தான்” எனக் கேட்டார்.

“ஆமாண்ணா, கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடிதான் வர்றான். அதுக்கப்புறம் ரெண்டு நாள்ல வர்ற முகூர்த்த நாளை விட்டா நல்ல முகூர்த்தத்துக்கு பத்து நாள் ஆகுது. ஆனந்த் ஏற்கனவே அப்ளை பண்ணி இருந்த லீவ், கேன்சல் பண்ண முடியல. அதான் இப்படி அவசரமா கல்யாணத்த வச்சுட்டேன்”

“நீங்க மனசுல எதுவும் வெச்சுக்காம குடும்பத்தோட ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்துடுங்க” என மாணிக்கவேல் அழைக்க, கல்பனாவும் அழைத்தார்.

“ஏண்டா உன்னை பெத்தவ நான் உசுரோட இருக்கேன். என் கிட்ட ஒரு வார்த்தை கலந்துக்காம உன் இஷ்டத்துக்கு வந்து கல்யாண பத்திரிக்கையை நீட்டுவியா?” என நீட்டி முழக்கினார் விசாலம்.

“கோச்சிக்காத அம்மா, நிலைமை அப்படி, புரிஞ்சுக்க” என சமாதானம் செய்தார் மாணிக்கவேல். பின்னர் மதிய உணவு அருந்தி விட்டு அவர்கள் சென்று விட்டனர்.

“ம்ம்… என் ராசாவோட கல்யாணத்தை பார்த்திட்டேன்னா நிம்மதியா கண்ண மூடுவேன். குலசாமி அய்யனாருதான் கண்ண திறக்கணும்” என விசாலம் புலம்ப,

“நீ இப்படியே பேசிகிட்டு இருந்தா நானே உன் கண்ணை மூடிடுவேன்” என கோவமாக கூறி சென்றார் பழனிவேல்.

இரவில் விஜய்யிடம் ஆனந்தின் திருமணம் பற்றி கூறிய பழனிவேல் “எல்லோரும் போகலாம், உன் தம்பி இங்கேயே இருக்கட்டும். வர வேண்டாம்” என்றார்.

ஏன் என்று கேட்டதற்கு,

“சொந்தக்காரங்க எல்லாம் இவன் என்ன பண்றான்னு கேட்டா, நான் என்ன சொல்றது? மூஞ்சிய எங்க வச்சிக்கிறது? இவன வர வேண்டாமுன்னு சொல்லிடு. வந்து என் மானத்தை வாங்குவான்” எனக் கூறிவிட்டு எழுந்து சென்றார்.

உள்ளறையில் இருந்து கேட்டு கொண்டிருந்த ஆதி முடிவு செய்துவிட்டான், கண்டிப்பாக இந்த திருமணத்திற்கு சென்றே ஆகவேண்டும் என்று.

சிறுவயதில் சொத்துக்கள் எல்லாம் பிரிக்கப்படுவதற்கு முன்பு பழனிவேலும், மாணிக்கவேலும் கூட்டுக் குடும்பமாகத்தான் இருந்தனர்.

ஆனந்த் ஆதியை விட ஒரு வயது தான் பெரியவன். கார்த்திக் ஆதியை விட ஒரு வயது இளையவன். விடுமுறை தினங்களில் இவர்களின் அத்தை மகள்கள் நந்தினியும், நர்மதாவும் வந்துவிட வீடே கலகலப்பாக இருக்கும்.

பின்னர் மாணிக்கவேல் மாற்றலாகிச் சென்று விட, சிறுவர்கள் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகளும் குறைந்து விட்டது. கடைசியாக நந்தினியின் கல்யாணத்தின் பொழுது சந்தித்துக் கொண்டது. அவரவர் வேலைகளில் அவரவர் பிஸியாக இருக்க, ஃபோனில் பேசுவது கூட குறைந்து போனது.

இப்போது ஆதிக்கு அவர்களை எல்லாம் காணப்போகிறோம் என்ற ஆவலை விட, அப்பாவின் டென்ஷனை ஏற்றப் போகிறோம் என்ற சந்தோஷமே அதிகமாக இருந்தது.

தன் அம்மாவிடம் சென்றவன், “நானும் கல்யாணத்துக்கு வரேன்” என்றான்.

“என்னடா திடீர்னு ஆனந்த் மேல பாசம் பொங்குதா? உங்க அப்பா பேசுனது காதுல விழல? நீ இங்கேயே இரு” என்றார் சந்திரா.

“நல்லா பேசுற நீ. ஒன்னு மண்ணா வளர்ந்த பிள்ளைங்க. அவன் கல்யாணத்துக்கு வரணும்னு ஆசைப்படுகிறான். அவன் வர்றதில்ல உங்களுக்கு எல்லாம் என்ன பிரச்சனை? அவன் வரலைன்னா நானும் வரல சொல்லிட்டேன்” என்றார் விசாலம்.

“எல்லாரும் அங்க போயிட்டா அவனோட டாலியை என்ன பண்றதாம்?” எனக் கேட்டார் சந்திரா.

விசாலம் தன் பேரனின் முகத்தை பார்க்க, “டாலியையும் கூப்பிட்டுக்கிட்டு போலாம்” என்றான் ஆதி.

“என்னடா விளையாடுறியா?” எனக் கேட்டார் சந்திரா.

“விளையாட்டெல்லாம் இல்லமா சீரியசாதான் சொல்றேன். கல்யாணத்துக்கு நானும் வரேன் டாலியும் வர்றா”

“உங்க அப்பா கேட்டா என்னடா சொல்றது?”

“எனக்கு அதெல்லாம் தெரியாது. எப்ப பாரு உன் வீட்டுக்காரருக்கு கூழைக் கும்பிடு போட்டுக்கிட்டே இருக்காதே. நீ எல்லாம் சாலாவோட மருமகள்ன்னு சொல்லிக்காத. அந்தக் காலத்துல ராஜவேல எப்படி வெச்சிருந்துச்சு சாலா. நில்லுனா நிப்பாரு, உட்காருன்னா உட்காருவாரு. நீயும் தான் இருக்கியே….” என்றான் ஆதி.

“ஆமாம் அத்தை. நீங்க பயப்பட பயப்பட தான் மாமா உங்கள ரொம்ப மட்டம் தட்டி பேசுறாரு. இந்த முறை நீங்க பேசுற பேச்சுல மாமாவையே பயப்பட வைக்கிறீங்க” அம்பிகாவும் அவள் பங்குக்கு ஏற்றிவிட, சந்திராவுக்கும் அசட்டு தைரியம் பிறந்தது.

‘இனி அம்மா பார்த்துக்குவாங்க’ எனும் எண்ணத்தோடு தன் அறைக்கு சென்றான் ஆதி.

கல்யாண பத்திரிக்கையை கையில் எடுத்து பார்த்த அம்பிகா “பொண்ணு பேரு நல்லா இருக்குல்ல?” என்றாள்.

“அப்படி என்ன பேரும்மா?” என சந்திரா கேட்க,

“தமிழ்நங்கை” என்றாள் அம்பிகா.

Advertisement