Advertisement

“இல்ல மாப்பிள்ள, பனி சேரல அதான்… சுக்குக் காப்பி குடிச்சா சரியாப் போகிடும்…” என்றார் அவர்.
“ஹூக்கும்… இப்படி எதுக்கும் டாக்டரைப் பார்க்காம நீங்களே வைத்தியம் பண்ணிகிட்டா எப்படிப்பா…” என்றாள் மகள்.
“கண்ணம்மா, அப்பாக்கு ஒண்ணும் இல்லடா, நீ சீக்கிரமே எங்களுக்கு ஒரு பேரனோ, பேத்தியோ பெத்துக் குடு… எப்படி ஓடியாடி விளையாடறேன்னு பாரு…” என்றதும் நாணத்துடன் குனிந்து கொண்டவள் கடைக்கண்ணால் கணவனைப் பார்க்க அவன் குறும்புடன் சிரித்துக் கொண்டிருந்தான்.
“ஹூக்கும்… சிரிப்பைப் பாரு, இல்லேன்னாலே இவரு ஓவர் ஆட்டம்… இப்ப அப்பா வேற காலுல சலங்கையைக் கட்டி விடறாரு… என் கதி என்னாகப் போகுதோ…” என மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தாள் யாழினி.
“மாப்பிள, நீங்களாச்சும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போகலாம்ல…” வசந்தா வருத்தமாய் கேட்டார்.
“இல்ல அத்தை, நாளைக்கு கடையைத் திறக்கணும்… தம்பி டூரு போயிருக்கான்… அண்ணனும் இன்னைக்கு அண்ணி வீட்டுக்குப் கிளம்பறதா சொன்னாரு… பசங்க எல்லாம் நாலஞ்சு நாள் கழிச்சு தான் வேலைக்கு வருவாங்க… ஆளில்ல, அதான்…” என்றான் இலக்கியன்.
“ம்ம்… சரி மாப்பிள்ள… அப்பப்ப வந்திட்டுப் போங்க…” என்றார் வசந்தா. நான்கைந்து பெரிய சம்படத்தில் அவர் செய்த பலகாரங்களைப் போட்டு வீட்டுக்குக் கொடுத்து விட்டார்.
மீண்டும் பழையபடி வீட்டு வேலை, படிப்பு என்று யாழினிக்கு பொழுது கழியத் தொடங்கியது. அடுத்த மாதம் மாலினியின் வளைகாப்புக்கு இருவரும் செல்ல அங்கேயும் யாழினி, இலக்கியனிடம் உங்களுக்கு எதுவும் விசேஷம் இல்லியா… என்று ஒவ்வொருத்தரும் குறை போல விசாரிக்க அவர்களுக்கு ஒரு மாதிரி இருந்தது.
இலக்கியன் ஒரு மாதிரி யோசனையுடன் சோர்வாய் தனியே  அமர்ந்திருப்பதைக் கண்ட யாழினிக்கு தாங்கவில்லை.
“என்னங்க, குழந்தை எல்லாம் கடவுள் கொடுக்கிறது… நாம என்ன பண்ண முடியும்…” என்றாள் வருத்தத்துடன்.
“ம்ம்…” என்றாலும் மனம் பொறுக்காமல் பெருமாளிடம் குழந்தைக்காய் வேண்டுதலும் வைத்தான். அது ஒரு கிராமம் என்பதால் அவர்கள் குடும்பத்திலும், அந்த ஊரிலுமே கல்யாணம் முடிந்தால் அடுத்து குழந்தையைப் பற்றி விசாரிக்கத் தொடங்கி விடுவார்கள். 
பொங்கலுக்கு இரு நாட்கள் முன்பு மாலினி அழகாய் ஒரு ஆண் குழந்தையை சுகப் பிரசவத்தில் பெற்றெடுத்தாள். வசந்தா வீடு, ஆசுபத்திரி என்று ஓடிக் கொண்டிருந்தார். யாழினியும் அன்னைக்கு உதவி செய்ய சென்று வந்தாள். இலக்கியனும் குழந்தையைக் காணப் போயிருந்தான்.
பொங்கல் முடிந்து இவர்களின் முதல் வருட கல்யாண நாள் வந்தது. இரவு வேலை முடிந்து தாமதமாய் வந்தவனுக்கு யாழினி தோசை ஊற்றிக் கொண்டிருக்க குளித்து வந்தான்.
“அம்மா எங்க கண்ணம்மா…” சாப்பிட்டுக் கொண்டே இலக்கியன் கேட்க, “அத்தை கால் வலிக்குதுன்னு சொன்னாங்க… தைலம் போட்டு விட்டேன் படுத்திருப்பாங்க…”
“தம்பி வந்தாச்சா…”
“அவர் சாப்பிட்டு படுக்கப் போயிட்டாரு… நீங்க ஏன் இவ்ளோ லேட்…” என்றாள்.
“நாளைக்கு நம்ம கல்யாண நாள் தானே…” அவன் சொல்லவும் திகைத்தவள், “அச்சோ, ஆமாங்க.. மறந்தே போயிட்டேன்…” என்றாள் குற்ற உணர்ச்சியுடன்.
“ம்ம்… அதுக்கு தான் உனக்கு ஒரு ஸ்பெஷல் கிப்ட் வாங்கிக் கொடுக்கணும்னு டவுனுக்குப் போயிருந்தேன்…”
“ஓ… என்ன கிப்ட் வாங்கினிங்க…” அவள் ஆர்வமாய் கேட்க, “வேலையை முடிச்சிட்டு வா… தர்றேன்…” என்றவன் சாப்பிட்டு எழுந்து செல்ல அவளும் சீக்கிரமே சென்றாள்.
கட்டிலில் அமர்ந்திருந்தவனிடம் பால் கிளாசை நீட்டியவள், “எனக்கு நீங்களே பெரிய கிப்ட்தான்… இருந்தாலும் நீங்க வாங்கின கிப்டைக் காட்டுங்க, அப்படி என்ன ஸ்பெஷல்னு பார்க்கலாம்…” என்றாள் ஆர்வத்துடன்.
“ஓ… பார்றா…” என்றவன் தனக்குப் பின்னில் இருந்த கவரை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“எனக்குப் பிடிச்சுது… உனக்குப் பிடிச்சிருக்கா பாரு…” என்றான் அவள் முகத்தை பார்த்துக் கொண்டே.
“சரி, எனக்கு மட்டும் தான் வாங்குனீங்களா… உங்களுக்கு எதுவும் வாங்கலையா…” யாழினி கேட்க,
“எனக்கு இதெல்லாம் வேண்டாம்… ஒரு புள்ளையைப் பெத்துக் குடு… பார்க்கறவன் எல்லாம் என்னமோ எனக்கு உடம்புல பெரிய குறை உள்ள போல விசாரிச்சுட்டுப் போறான்…” என்று வலியோடு சொல்லவும் யாழினிக்கும் வருத்தமாய் இருந்தது.
அவள் வருத்தமாய் இருப்பது தாங்காமல் தன்னைத் தேற்றிக் கொண்டவன், “ஏய் பிளாக் சாக்கலேட்… கிப்ட் எப்படி இருக்குன்னு சொல்லவே இல்ல…” என்றான்.
“உங்களை விட இதெல்லாம் எனக்கு அழகாத் தெரியலை…” என்றாள் அவள் பார்க்காமலே.
“அப்ப சேலைக்குப் பதிலா என்னைக் கட்டிக்கறியா…” அவன் கண்ணடித்து வில்லங்கமாய் கேட்கவும் கையில் கிடைத்த தலையணையை எடுத்து அவன் மீது எறிந்தாள்.
“டேய், பிளடி பிஸ்கட்… எப்பவும் உனக்கு இதே நினைப்பு தானா…” என்று கேட்க, “உன்னைப் பார்த்தாலே எனக்கு இந்த நினைப்பு தாண்டி வருது… நான் என்ன பண்ணட்டும்… அது சரி, அதென்ன, சந்தடி சாக்குல டேய் சொல்லற…” என்றான்.
“ஆத்தி, ஒரு வேகத்துல டான்னு சொன்னதை கவனிக்க மாட்டான்னு நினைச்சா கவனிச்சுட்டான் போலவே…” என நினைத்தவள் அவன் அருகே இடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
அவன் தோளில் சாய்ந்து கொண்டு மீசையை செல்லமாய் பிடித்து இழுத்தவள், “ஏன்… நான் உங்களை டேய் சொல்லக் கூடாதா…” என்று கேட்டுக் கொண்டே இதழ்களை வருட அவனுக்குள் சில்லென்று ஒரு உணர்வு தேகமெங்கும் ஓட திகைத்துப் போய் அமர்ந்திருந்தான் இலக்கியன்.
அவளது கைகள் மெல்ல அவனது நெஞ்சத்தில் கோலமிட்டுக் கொண்டே, “உங்களைத்தான் கேட்டேன்… சொல்லலாமா, வேண்டாமா…” என்று மீண்டும் சிரிப்புடன் கேட்டாள்.
“ஹூம்… நீ இந்த மாதிரி எல்லாம் பண்ணுறதா இருந்தா என்ன வேணும்னாலும் கூப்பிடு தாயி…” என்றவன் அவளை தன்னிடம் இழுத்துக் கொண்டு உதடை நோக்கிக் குனிய தன் கையால் அவன் இதழை மூடியவள், “முதல்ல இதுல என்ன இருக்குன்னு பார்த்திட்டு அப்புறம் அது…” என்று கண்ணடிக்க,
“ஆத்தி… இன்னைக்கு இவ செம பார்ம்ல தான் இருப்பா போலருக்கே… விட்டுடக் கூடாது…” என்றவன் அவளைத் தன் அணைப்பில் வைத்துக் கொண்டே, “ம்ம் பாரு…” என்றான்.
பாக்கைப் பிரித்தவள் கண்கள் வியப்பில் விரிந்தது.
“வாவ்… எனக்குப் பிடிச்ச மயில் பச்சை டிசைனர் சேலை…” என்றவள் ஆவலுடன் பிரித்து தன் மீது வைத்துப் பார்த்து, “நல்லாருக்கா…” என்று அவனிடம் கேட்டாள்.
“ம்ம்… செமையா இருக்குடி…” என்றான் அவன்.
“இதென்ன நகைப் பெட்டி… நெக்லஸா…” கேட்டுக் கொண்டே திறந்தவள் கண்கள் மேலும் விரிந்தன.
“என்னங்க, தங்க கொலுசு வாங்கிட்டு வந்திருக்கீங்க… நம்ம ஊருல இதெல்லாம் போட மாட்டோமே…”
“பரவால்ல, பிளாக் சாக்கலேட்… நீ போடு… எனக்கு எப்பவும் உன் கூடவே இருக்கற போல ஒரு கிப்ட் கொடுக்கணும், தோணுச்சு… வெள்ளிக் கொலுசு எப்பவும் போடறது தானே… அதான், என் பொண்டாட்டி காலுக்கு தங்கத்துல கொலுசு வாங்கினேன்…” என்றான் அவளை அணைத்துக் கொண்டு.
“தங்கம் லட்சுமிங்க… அதை எப்படி காலுல போடுறது…”
“ஏன், வெள்ளி லட்சுமி இல்லையா.. அதைக் காலுல போடல, அது போல இதும் போடலாம்… கொண்டா…” என்றான்.
“சொன்னாக் கேக்க மாட்டிங்க… எதுக்கும் நாளைக்கு அத்தை கிட்ட கேட்டுட்டு போட்டுக்கறேங்க…” என்றாள் அவள்.
“ம்ம்ஹூம்… இப்பவே என் கையால என் கண்ணம்மாவுக்கு இந்தக் கொலுசைப் போட்டு விடுவேன்… இதைப் பார்க்கும் போதெல்லாம் உனக்கு என் நினைவு வரணும்… உனக்கு பிடிச்சிருக்கா இல்லியா…” என்றான்.
“பிடிக்காம என்ன, ரொம்பப் பிடிச்சிருக்கு… டிஸைன் அழகா இருக்குங்க… ஆனா யாரும் எதுவும் சொல்லுவாங்களோன்னு தான்…” என்று தயக்கத்துடன் இழுத்தாள் யாழினி. “மத்தவங்களை விடு… உனக்கும், எனக்கும் இது பிடிச்சிருக்கு… இது நம்ம பர்சனல் விஷயம்…” என்றவன் கொலுசை எடுத்து அவள் காலில் அணிவித்தான்.
மிகவும் அழகாய் அவள் காலுக்குப் பொருந்தி இருந்தது. காலில் கொலுசை அணிவித்தவன் அவள் பாதத்தை மெல்லக் கைகளில் எடுத்து முத்தமிட அவள் பதறினாள்.
“அச்சோ, என்னங்க… காலுல போயி முத்தம் வைக்கறிங்க…”
“எதுக்குப் பதர்ற… அதுவும் என் கண்ணம்மா கால் தானே…” சொல்லி அவள் கால் விரல் ஒவ்வொன்றிலும் அவன் இதழ் பதிக்க நேசமும், காதலுமாய் அவள் நெஞ்சம் விம்மியது.
இதழ் தீண்டும் உன்
முத்தத்தில் என் இதயம்
மட்டுமே தொலைத்தேன்…
என் விரல் தீண்டும்
உன் இதழ்களில் நான்
என்னையே தொலைத்தேன்…

Advertisement