Advertisement

அத்தியாயம் – 9
“ஏன் கண்ணம்மா, உன் அண்ணனுங்க யாரும் தீபாவளிக்கு இங்கே வர மாட்டாங்களா…” கணவன் கேட்கவும் யாழினியின் முகம் வாடிப் போனது.
“முதல்ல எல்லாம் வந்துட்டு தாங்க இருந்தாங்க… மூத்த அண்ணி எப்பவுமே எல்லா விசேஷத்துக்கும் அவங்க அம்மா வீட்டுக்கு அண்ணனையும் அழைச்சிட்டுப் போயிருவாங்க… ரெண்டாவது அண்ணன் எங்களுக்குத் துணி எடுத்துட்டு வர்றது, இங்கே செலவு பண்ணறது பிடிக்காம அண்ணி சண்ட போட்டுட்டே இருப்பாங்க… அதனால அதும் நின்னு போயிருச்சு… மூணாவது அண்ணன் தான் எங்களுக்கு கொஞ்சமாச்சும் செலவு பண்ணும்… எங்களுக்காக பொண்டாட்டி கிட்ட சண்ட போட்டுட்டு யாரும் செய்யவும் வேணாம்… எந்த விசேஷத்துக்கும் பணமும் தர வேணாம்னு கோபமா அம்மா சொல்லிட்டாங்க… அதுல இருந்து யாரும் விசேஷத்துக்கு வர்றதில்ல…” என்றாள் வருத்தத்துடன்.
“ஓ… பெத்தவங்களுக்கும், கூடப் பிறந்தவங்களுக்கும் செலவு பண்ணக் கூட வீட்டுக்கு வந்த மருமக சம்மதிக்கலேன்னா எப்படி… கழுத்துல தாலி ஏறினதுமே ஆம்பளையோட சகல உரிமைக்கும் தான் மட்டுமே அதிகாரின்னு ஒரு எண்ணம் வந்திரும் போலருக்கு… ஹூம், நல்லவேள… என் பொண்டாட்டி அந்த ரகம் இல்ல…” என்றவன் அவள் மடியில் படுத்துக் கொண்டான்.
அவன் மூக்கைப் பிடித்து ஆட்டியவள், “ஏன்… உங்க பொண்டாட்டிக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு…” என்றாள்.
“கொம்பு முளைக்கல… ஆனா…” என்றவன் அவள் தலையைப் பிடித்து தன்னருகே இழுத்து காதில் எதையோ சொல்ல, “ச்சீ… நீங்க ரொம்ப மோசம், பிளடி பிஸ்கட்…” என்றாள் அவன் வார்த்தையில் முகம் சிவந்து.
“என்னடி, உண்மைய தான சொன்னேன்… பேருக்கு தான் சின்னப் பொண்ணு… ஆனா தொடங்கிட்டா…” என்று எதையோ சொல்ல வந்தவனின் வாயைப் பொத்தினாள்.
“ஐயோ, என் லூசுப் புருஷா… நீங்க பேசறதை யாராச்சும் கேட்டு வைக்கப் போறாங்க…”
“கேட்டா கேட்டுட்டுப் போகட்டும்… அவங்களுக்கும் ஓசில ரொமான்ஸ் பார்த்த அனுபவம் கிடைக்கும்ல…” சொன்னவனின் விரல்கள் அவள் சேலைக்குள் சில்மிஷம் பண்ண நெளிந்தவள், “இப்ப உங்க கையை வச்சுட்டு சும்மா இருக்கலேன்னா நான் எழுந்து போயிடுவேன்….” மிரட்டினாள்.
“ஹூம்… இப்படி என்னை மிரட்டிட்டே இருந்தா நான் எப்படி அப்பா ஆகறது… இந்தியாவை எப்படி வல்லரசாக்குறது…”
“அச்சோ, ஏங்க இப்படி அபத்தமா பேசறீங்க… இப்ப என்னதான் வேணும் உங்களுக்கு…” என்றாள் சிணுங்கலுடன்.
முகம் சுருக்கிக் கெஞ்சலாய் கேட்டவளை ரசித்தவன், அவள் கைகளை எடுத்து தன் நெஞ்சத்தில் வைத்துக் கொண்டு, “ஏய், கண்ணம்மா… உன்னை நான் தொந்தரவு பண்ணாம இருக்கணும்னா ஒண்ணு செய்…” என்றான்.
“ஹூக்கும்… என்னவாம்…”
“எனக்கு ஒரு புள்ளையப் பெத்து குடு… உன்னைக் கொஞ்சாம அவளைக் கொஞ்சிட்டுப் போறேன்…” என்றதும் சட்டென்று திகைத்தவள் பிறகு வெட்கத்துடன் குனிந்து கொண்டாள்.
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்… நீங்க எப்பவும் என்னை மட்டுமே கொஞ்சினாப் போதும்…” உதட்டை வளைத்து கண்ணில் மின்னிய சிரிப்புடன் சொன்னவளை அப்படியே வளைத்து தன்னிடம் இழுத்துக் கொண்டான்.
“கண்ணம்மா…” மாடிப் படி அருகே பெரியக்காவின் குரல் கேட்கவும் அவனை உதறி சட்டென்று விலகினாள் யாழினி. இருவரையும் மதிய விருந்து முடிந்து மாடி அறைக்கு ஓய்வெடுக்க அனுப்ப இங்கே கொஞ்சிக் கொண்டிருந்தனர்.
“இ..இதோ வந்துட்டேன்க்கா…” என்றவள் எழுந்து விலகி இருந்த புடவை மடிப்பை சரியாக்கிக் கொண்டு செல்ல இலக்கியன் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
சில நிமிடத்தில் கையில் பூவுடன் வந்தவள், “அக்கா பூ குடுக்க வந்தாங்க… புது டிரஸ் போட்டுட்டு பட்டாசு வெடிக்கலாம் வாங்க… கணேஷ் கேட்டுட்டே இருக்கானாம்…” என்றவள் உற்சாகத்துடன் ரெடியாகத் தொடங்க இலக்கியன் அவளை நெருங்கி பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.
“கண்டிப்பாப் போகணுமா பிளாக் சாக்கலேட்…”
“என்னங்க நீங்க, ரொம்ப தான் பண்ணறீங்க… இங்கயே உக்கார்ந்து கொஞ்சிட்டு இருக்கவா வந்தோம்…”
“இருந்தா நல்லா தான் இருக்கும்… ஆமா, உன் பெரியக்கா வீட்டுக்காரர் வரலியா…” என்றான்.
“அக்கா பாவம், எல்லா விசேஷத்துக்கும் பையனைக் கூட்டிட்டு தனியா தான் வருவா… அவ வீட்டுக்காரர் ஒரு தண்ணிப் பார்ட்டி… எல்லார் முன்னாடியும் தண்ணியப் போட்டு அசிங்கப்படுத்திருவார்… அதனால அக்காவும் அவரை வர சொல்ல மாட்டாங்க…” என்றாள் சோகமாக.
“ஓஹோ… உன் வீட்டுல எல்லாரும் ஒவ்வொரு விதமா தான் இருக்காங்க…” என்றவன் பாத்ரூமுக்கு செல்ல அவள் அவன் வாங்கிக் கொடுத்த புடவையைக் கட்டிக் கொண்டு தலையில் பூவை வைத்துக் கொண்டாள்.
சின்னதாய் ஒரு குளியல் முடித்து வந்த இலக்கியன் இளம் நீல நிற மென்பட்டில் அவனுக்காய் காத்து நின்றவளைக் கண்டு கண்கள் ரசனையில் விரிய, விசில் அடித்தான்.
சட்டென்று கதவைத் திறந்து வைத்து வெளியே ஓடத் தயாராய் நின்று கொண்டவள், “நீங்க வாங்கிக் கொடுத்த சேலை எனக்கு நல்லாருக்கா…” என்று கேட்க,
அவளை எட்டிப் பிடிக்க முடியாத கோபத்தில் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டான் இலக்கியன்.
“ப்ச்… சேலை நல்லாருக்கு… நீதான் சேலைல நல்லா இல்லை…” என்று முகத்தில் அடித்தது போல் சொல்லிவிட்டு உடை மாற்றத் தொடங்க அவளுக்கு சப்பென்று போனது.
“நிஜமா தான் சொல்லறீங்களா பிளடி பிஸ்கட்…”
கேட்டுக் கொண்டே அவனிடம் வந்தவள் அடுத்த நொடியில் அவனது வலிய கரங்களில் சிறைப்பட்டிருந்தாள்.  
“எப்படி, எப்படி… கதவுக்குப் பக்கத்துல போயி நின்னுட்டு நல்லாருக்கான்னு கேப்பியா… ஏன், பக்கத்துல நின்னு கேட்டா நான் என்ன உன்னை தின்னவா போறேன்…”
“ஹூக்கும்… கொஞ்சம் கேப் கிடைச்சாலும் வாழைப்பழத்தை தோலுரிக்குற மாதிரி என் முந்தானையை உரியத் தொடங்க வேண்டியது… அதான் ஒரு பாதுகாப்புக்கு எட்டி நின்னு கேட்டேன்… அதுக்கு நல்லா இல்லன்னு சொல்லுவீங்களா…” என்றாள் அவன் நெஞ்சில் செல்லமாய் குத்திக் கொண்டே.
அவள் நெற்றியில் இதமாய் தலையால் முட்டியவன் பின்னலில் விடுபட்டு அவள் முகத்தில் சுதந்திரமாய் சுழன்றாடிக் கொண்டிருந்த முடிக் கற்றையை ஓரமாய் ஒதுக்கி விட்டான்.
“நல்லா இல்லன்னு எங்க சொன்னேன்… உனக்கு சேலை நல்லா இல்லேன்னு தான சொன்னேன்…” என்றவன் அவள் தலையிலிருந்த மல்லிகையின் சுகந்தத்தை நாசிக்குள் இழுத்து, மெல்ல கழுத்தில் முத்தமிட நெளிந்தவளின் முகம் நோக்கியவன், “சேலை இல்லாம தான்டி நீ ரொம்ப அழகாருக்க…” என்று கிறக்கத்துடன் சொல்ல,
“ச்சீ… போங்க… உங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்தை இல்லை…” என்றவள் நாணத்துடன் அவனை விலக்கி விட்டு கதவருகே சென்றவள், “சீக்கிரம் கீழ வாங்க… எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க…” என்று ஓடி விட அவன் சிரித்துக் கொண்டான்.
பிறகு எல்லாருமாய் பட்டாசு வெடிக்கத் தொடங்கினர்.
பிரகாசமான மத்தாப்பும், புஸ்வானமும், இருட்டை விலக்கி எங்கும் வெளிச்சத்தைப் பரப்பியது. மனிதர்களின் மனதில் உள்ள இருட்டையும், இந்த சூரியனின் வெளிச்சத்தால் இப்படி விரட்ட முடிந்தால் எத்தனை நன்றாய் இருக்கும்…
தீபாவளி இனிதே முடிய அடுத்த நாள் எல்லாரும் வீட்டுக்குக் கிளம்பினர். முதலில் மாலினி கிளம்பினாள்.
“மாலினிக்கு வளைகாப்பு முடியாம இங்கயே இருக்க சொல்லவும் முடியாது… பத்திரமா கூட்டிட்டுப் போங்க மாப்பிள்ள… அடுத்த மாசத்துல நல்ல நாள் பார்த்து சீமந்தம் வைக்க ஏற்பாடு பண்ணறோம்…” என்றார் வசந்தா.
“சரிங்க அத்தை, நான் பார்த்துக்கறேன்… வர்றோம் சகல, சீக்கிரமே செஞ்சுரி அடிக்க டிரை பண்ணுங்க…” என்றான் இலக்கியனிடம் கண்ணை சிமிட்டி. அவர்கள் கிளம்பவும், அடுத்து ரூபிணியும் மகனுடன் கிளம்பினாள்.
“உனக்கு என்னடி அவசரம், ரெண்டு நாள் இருந்துட்டுப் போகலாம்ல…” என்றார் வசந்தா அங்கலாய்ப்புடன்.
“இல்லமா, அந்த மனுஷன் எங்க தண்ணியப் போட்டு மட்டையாகிக் கிடக்குறாரோ… போயிப் பார்க்காம மனசு இங்க ஒட்டாது… நான் கிளம்பறேன்…” என்றாள் ரூபிணி.
“கண்ணம்மா, படிப்புல மட்டும் கவனத்தை வைக்காம மாப்பிள்ளைய நல்லாப் பார்த்துக்கடி… சீக்கிரமே நல்ல செய்தி சொல்லோணும்… நான் வரட்டா…” என்றவள், “வர்றோம் மாப்பிள்ள…” என்று இலக்கியனிடம் சொல்ல,
“பை சித்தி, பை சித்தப்பா…” என்று கூறிய கணேஷின் கையில் இலக்கியன் ஆயிரம் ரூபாயைக் கொடுக்க ரூபிணி வேண்டாம் என்று மறுத்தாள்.
“இருக்கட்டும், கணேஷுக்குப் பிடிச்சதை வாங்கிக் கொடுங்க…” என்று இலக்கியன் சொல்ல, “ப்ச்… பையனுக்கு தான, வாங்கிக்கக்கா…” என்றாள் யாழினியும். 
“சரி மா… நாங்க வர்றோம்…” என்று அவர்களும் கிளம்பினர்.
நடேசன் உடம்பு சரியில்லாமல் இருமிக் கொண்டிருக்க, “மாமா… முடியலைனா வாங்க ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம்…” என்றான் இலக்கியன்.

Advertisement