Advertisement

அத்தியாயம் – 8
“அதென்னது, கடைத் தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைச்ச கணக்கா, கடைக் காசை எடுத்து பொண்டாட்டி வீட்டுக்குத் துணி எடுத்துக் குடுக்கறது… அண்ணன்னு தான் பேரு… ஏதாச்சும் கேக்கறிங்களா…” இலக்கியனின் அண்ணன் ஏதோ மும்முரமாய் எழுதிக் கொண்டிருக்க அருகே புலம்பிக் கொண்டிருந்தாள் கவிதா.
“உனக்கு என்னதான்டி பிரச்சனை, அந்தக் கணக்கெல்லாம் நாங்க பார்த்துப்போம்… நீ உன் வேலையைப் பாரு…”
“ஹூக்கும்… ஏன், எனக்கு கேக்கற உரிமை இல்லையா… உங்க தம்பி எது செய்தாலும் கண்டுக்காம சரின்னு சொல்லிட்டே இருங்க… அவன் இந்தக் கடையையே ஒருநாள் சுருட்டிட்டுப் போயிருவான்…”
“ஏண்டி, இம்சை பண்ணற… நானே அஞ்சாயிரம் எங்கயோ வர வேண்டியது இடிக்குதேன்னு பார்த்திட்டு இருக்கேன்…”
“ஹூம்… நீங்க அஞ்சாயிரம் குறஞ்சதுக்கு கவலைப்படுங்க… அவன் அம்பதாயிரத்தை துணி எடுக்க செலவு பண்ணட்டும்…”
“ப்ச்… உன் தொல்லை தாங்கலடி…” என்றவர் கையிலிருந்த பேனாவைக் கீழே போட்டுவிட்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தார்.
“என்னதான்டி உன் பிரச்சனை… சொல்லு…”
“எனக்கென்ன பிரச்சனை… எல்லாருக்கும் பொதுவான காசை எடுத்து உங்க தம்பி எப்படிப் பொண்டாட்டி வீட்டுக்கு செலவு பண்ணலாம்… நீங்க கேட்க மாட்டீங்களா…”
“உன்னோட பெரிய இம்சைடி… அவன் எங்கிட்ட சொல்லிட்டு தான்…” அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இலக்கியன் யாழினியுடன் அவர் அறைக்கு வர நிறுத்திக் கொண்டார்.
“வாடா தம்பி… வாம்மா…” என்றார் மலர்ச்சியுடன். சிரிக்காமல் முகத்தைத் தூக்கி வைத்திருந்தாள் கவிதா.
“என்னண்ணா, நோட்டும் கையுமா உக்கார்ந்திருக்கீங்க…”
“ஆமாப்பா, ஒரு ஐயாயிரம் வர வேண்டியது இடிக்குது…”
“ஐயாயிரமா…” யோசித்தவன், ஒரு வளைகாப்பு பங்க்ஷன்க்கு வளையல் அலங்காரம் பண்ணிக் கொடுத்தமே… அவங்க ஐயாயிரம் குறைவா தான் செக் கொடுத்தாங்க…” என்றான்.
“அட ஆமால்ல… பாக்கியை பணமா வாங்கிக்க சொல்லி இருந்தாங்க… நான்தான் வாங்காம விட்டுட்டேன் போல… நீயே ஒரு எட்டு போயி வசூல் பண்ணிட்டு வந்திரு தம்பி…”
“சரிங்கண்ணா, அப்புறம் நாங்க இப்ப வந்தது…” என்றவன் யாழினியை புன்னகையுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு அண்ணனிடம் திரும்பி,
“இந்த வருஷம், எங்களுக்குத் தலை தீபாவளி… அதுக்கு இவ வீட்டுக்கு மட்டுமில்லாம நம்ம குடும்பத்துல எல்லாருக்குமே எங்க சார்பாத் துணி எடுத்துக் கொடுக்கணும்னு யாழினி ஆசைப்படறா… அதனால துணி எடுக்க ஆன செலவு முழுசும் என் பேருலயே கணக்கு வச்சிருங்க அண்ணே… கணக்கு பாக்கும்போது என் கணக்குல குறைச்சிடுங்க…” தம்பி சொல்லவும் கவிதா வாயடைத்து நிற்க, அவளை ஏளனமாய் ஒரு பார்வை பார்த்த பெரியவர் தம்பியிடம் திரும்பினார்.
“அட, என் தம்பி பொண்டாட்டி சின்னப் பொண்ணா இருந்தாலும் பெரிய மனசுக்காரிதான்… அதுக்காக, இத்தனை செலவும் உன் புருஷன் கணக்குல வச்சா அவனுக்குன்னு என்ன தொகை நிக்கும்… அதெல்லாம் வேண்டாம்…”
“இல்லண்ணே இருக்கட்டும்… இதுவரைக்கும் அவ என்கிட்டே எதுவுமே கேட்டதில்ல… முதன் முதலா இதைக் கேட்டா… மறுக்க எனக்கு மனசில்ல… நான் என்ன யாருக்கோவா வாங்கிக் கொடுக்கறேன், நம்ம குடும்பத்துக்கு தான… சந்தோஷமா செய்துட்டுப் போறேன்… நீங்க கணக்கு வச்சிடுங்க அண்ணே…” என்றவன் கவிதாவிடம் திரும்பி, “உங்களுக்கும் சந்தோசம் தானே அண்ணி…” என்று கேட்க அவள், “ம்ம்ம்….” என்று தலையை ஆட்டினாள்.
“இதை சொல்ல தான் வந்தோம்… வரோம் அண்ணே…” என்றவன் யாழினியுடன் கிளம்ப மனைவியை ஒரு பார்வை பார்த்தவர், “இப்ப என்னடி சொல்லுவ… உன் புத்தி தெரிஞ்சுதான் என் தம்பி இப்படி சொன்னானோ என்னவோ… எப்படியோ, அவனுக்கு நல்ல பொண்டாட்டி அமைஞ்சு இருக்கு…” என்றவர் எழுந்து செல்ல கவிதாவின் முகத்தில் ஈயாடவில்லை. தன் கணவனே தம்பி மனைவியை மெச்சுதலாய் சொன்னதை ஏற்க முடியாமல் உள்ளே சென்று விட்டாள்.
வீட்டில் அனைவருக்கும் இலக்கியன் கணக்கில் துணி எடுத்துக் கொடுத்ததாய் சொல்லவும் சந்தோஷப்பட்டனர்.      
“ஏங்க… நீங்க தான எல்லாருக்கும் எடுத்துக் கொடுக்கலாம்னு சொன்னிங்க… நான் விருப்பப்பட்டு கேட்டதா பெரியவர் கிட்ட சொல்லிருக்கீங்க…” யாழினி கணவனிடம் கேட்க, அவள் இடுப்பை வளைத்து தன்னை நோக்கி இழுத்தவன், “ஏய்… பிளாக் சாக்கலேட், அண்ணி முகத்தைப் பார்த்தியா… அவங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும், அதான், இந்த கிரெடிட் உன் கணக்குல கிடக்கட்டும்னு அப்படி சொன்னேன்… இப்பப் பாரு, அக்காஸ்ல இருந்து அண்ணி வரைக்கும் பேச்சே காணோம்… எல்லாரும் உன்னை ஆஹா, ஓஹோன்னு நினைப்பாங்க…” என்றவனின் சட்டை பட்டனைத் திருகியவள்,
“சரியான கேடிதான் நீங்க…” என்றவள் எம்பி அவன் கன்னத்தில் ஒரு முத்தத்தைப் பதிக்க, “ஏய், பிளாக் சாக்கலேட், என் லிப்ஸ் என்னடி பாவம் பண்ணுச்சு… கன்னத்துல மட்டும் கொடுக்கற…” என்றவன் அவள் இதழை நோக்கி நெருங்க பிடித்துத் தள்ளியவள், “இப்ப இது போதும்…” என்றுவிட்டு வெளியே ஓடி விட்டாள்.
“யாழினி, எப்ப மா உங்க வீட்டுக்குக் கிளம்பறீங்க…” பர்வதம் மருமகளிடம் கேட்க, “நாளைக்குக் காலைல தான்  கிளம்றோம் அத்தை…” என்றாள். “இன்னைக்கு முறுக்கு, அதிரசம் போட எல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கேன்… நாளைக்குப் போகும்போது அதையும் கொண்டு போ கண்ணு…” என்றதும் புன்னகைத்தாள்.
சிறிது நேரத்தில் கூடத்தில் அமர்ந்து பர்வதம் பலகாரம் செய்யத் தொடங்க அடுக்களையில் சமையலை கவிதாவும், யாழினியும் பார்த்துக் கொண்டனர்.
கவிதா சாம்பாருக்கு புளியைக் கலக்கி ஊற்றிக் கொண்டே, “ஹூம்… இனி தீபாவளி முடிஞ்சு போற வரைக்கும் எல்லாத்துக்கும் சமைச்சுக் கொட்டவே சரியாருக்கும்… இந்த நாத்தனாருங்க மூணு பேரும் குடும்பத்தோட இங்க வந்து உக்கார்ந்துக்குவாங்களே ஒழிய ஒரு வேலை செய்ய மாட்டாங்க… நீயும் நாளைக்கு உன் வீட்டுக்குப் போயிட்டா நான் தான் தனியா கஷ்டப்படணும்…” புலம்பினாள் கவிதா.
“நீங்க ஏன்க்கா அப்படி நினைக்கறீங்க… புகுந்த வீட்டுல பொண்ணுகளுக்கு வேலை, குடும்பம்னு எல்லாத்தையும் கவனிக்கவே சரியாருக்கும்… பிறந்த வீட்டுக்கு வந்தா தான் கொஞ்சம் ப்ரீயா இருக்க முடியும்… அவங்களும் ப்ரீயா இருந்துட்டுப் போகட்டுமே…’ என்றாள் யாழினி.
“சரியாதான் பேரு வச்சாங்க, நாத்..தனாருங்க…” என்றாள்.
“ஹாஹா… அக்கா, உண்மைலயே அது நாத்தனார்  கிடையாது… நாத்துணையாள்ங்கற வார்த்தை தான் இப்படி மாறிடுச்சு…” யாழினி சொல்லவும் “நீ என்னடி, புதுசா ஒண்ணை சொல்லுற…” என்றாள் கவிதா புரியாமல்.
“ஆமாக்கா, நாத்துணையாள் தான் சரியான வார்த்தை… கல்யாணமாகி புகுந்த வீட்டுக்கு வர்ற பொண்ணுக்கு புருஷன் வீட்டுல இல்லாத சமயத்துலயோ, வீட்டு வேலை எல்லாம் முடிஞ்சு ஓய்வா இருக்கற நேரத்துலயோ அந்தப் பொண்ணுக்கு பேச்சுத் துணையா இருக்கறது நாத்தனாருங்க தான்… அதனால தான் பொண்ணோட நாவுக்கு (பேச்சுக்கு) துணையா இருக்கறதால நாத்துணையாள்னு சொல்லி இருக்காங்க… எத்தனை அழகான வார்த்தை… இதுதான் மருவி இப்ப நாத்தனார்னு ஆகிடுச்சு…” என்றாள் யாழினி.
அவள் சொன்னதை அதிசயமாய் கேட்டவள், “இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிஞ்சுது…” என்றாள்.
“நான் ஒரு புக்குல படிச்சிருக்கேன் க்கா…” என்றாள் யாழினி.
முறுக்கைப் போட்டு வைக்க சம்படம் எடுப்பதற்காய் அந்தப் பக்கம் வந்த கிருபாவின் காதில் கவிதாவின் வார்த்தைக்கு யாழினி பேசியது விழவும் திகைப்புடன் நின்று விட்டவள் முழுமையாய் கேட்டாள்.
“ஹூம்… இதெல்லாம் கேக்க நல்லாத்தான் இருக்கு யாழினி… ஆனா, இப்ப எந்த நாத்தனாருங்க இப்படி இருக்காங்க…”
“ஏன்க்கா, அப்படி சொல்லறிங்க… யாரும் அப்படி இல்லேன்னு சொல்லறதுக்கு பதிலா நாம அப்படி இருக்கலாமே… மாற்றம் வரலேன்னு சொல்லிட்டே இருக்கறதை விட அதை நம்ம கிட்ட இருந்தே ஸ்டார்ட் பண்ணறது தான நல்லது…” யாழினியின் பேச்சில் கவிதா வாயடைத்துப் போக கேட்டு நின்ற கிருபாவின் மனதில் ஒரு சபாஷும், தான் அப்படி இல்லையே என்பதில் வருத்தமும் தோன்றியது.
“ம்ம்… நீ பெரிய படிப்பாளி… என்னமோ சொல்லற, இதெல்லாம் என் சின்ன அறிவுக்குப் புரியல… சரி சாம்பாருக்குத் தாளிச்சிடு… நான் இப்ப வந்துடறேன்…” சொல்லிவிட்டு வெளியே வந்தவள் அங்கே கிருபா நிற்பதைக் கண்டதும் அதிர்ந்து பிறகு சிரித்து சமாளித்தாள்.
“நீங்க இங்க தான் நிக்கறிங்களா மதனி… காப்பி எதுவும் வேணுமா…” என்று கேட்கவும் புன்னகைத்தவள், “இல்ல கவிதா… அந்த பெரிய சம்படத்தை எடுக்க வந்தேன்…” என்று சொல்லிக் கொண்டே உள்ளே வர, “அச்சோ… இவ காதுல நாம சொன்னது விழுந்துச்சோ, என்னவோ தெரியலையே…” என நினைத்துக் கொண்டே நகர்ந்தாள் கவிதா.
“யாழினி…” தாளித்துக் கொண்டிருந்தவளை அழைக்க திரும்பியவள், “மதனி… ஏதும் வேணுமா…” என்றாள்.
“இல்லமா…” என்றவளின் பார்வை ஏனோ இன்று யாழினிக்கு வித்தியாசமாய் தோன்றியது. சம்படத்தை எடுத்துக் கொண்டு புன்னகைத்து செல்ல, யாழினியும் சமையல் முடிந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.
“ஏன் யாழினி… உன் அக்காங்க எல்லாரும் வந்துட்டாங்களா…”
“அவங்களும் நாளைக்கு தான் வராங்களாம் மதனி…” என்றவள் மதிய உணவுக்காய் வந்த கணவனைக் கண்டதும் மலர்ந்தாள்.
“தம்பி வந்துட்டான்… நீ அவனுக்கு சாப்பாடு எடுத்து வை மா…” என்று அவளை அனுப்பி விட்டு, “தம்பிக்கு நல்ல பொண்டாட்டி அமைஞ்சிருக்கா மா… உன்னையும் நல்லாப் பார்த்துப்பா…” என்ற மகளைப் புரியாமல் பார்த்தார் பர்வதம்.
அடுத்த நாள் மதியத்தில் கையிலும், வண்டியிலுமாய் நிறைய பொருட்களுடன் வந்திறங்கிய மகள், மருமகனை அன்போடு வரவேற்றனர் வசந்தாவும், நடேசனும்.
“ஏண்டி, அடுத்த ஊருல இருக்கற நானே காலைல நேரமா வந்து சேர்ந்துட்டேன்… மாலினியும் புருஷனோட வந்துட்டா… இந்தா, இங்க சில தெரு தள்ளி இருக்கற உனக்கு இப்பதான் வர முடிஞ்சுதா…” கேட்டுக் கொண்டே அவளிடம் இருந்த பொருட்களை வாங்கிக் கொண்ட மூத்த அக்காவைக் கண்டதும் புன்னகைத்தாள் யாழினி.
“எப்படிக்கா இருக்க… மாமா நல்லாருக்காங்களா… டேய் கணேஷு, நல்லாருக்கியா…” முன்னில் நின்று இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அக்கா மகனைக் கொஞ்சியபடி உள்ளே வந்தாள் யாழினி.
தனது பெரிய வயிற்றில் கை வைத்தபடி அமர்ந்திருந்த சின்னக்காவைக் கண்டதும் ஆவலுடன் கட்டிக் கொண்டாள்.
“அக்கா, எப்படி இருக்க… குட்டிப் பாப்பா என்ன பண்ணுறான்…” கேட்டுக் கொண்டே சிறு பிள்ளை போல் அவள் வயிற்றில் கைவைத்துப் பார்த்தவளைக் கண்டு புன்னகைத்தாள் மாலினி.
“அதை ஏண்டி கேக்கற… என் வயித்துக்குள்ள புட்பால் விளையாடிட்டு இம்சை பண்ணுறான்…” என்று சொல்ல அவள் கணவன் டவலால் முகத்தைத் துடைத்துக் கொண்டே அறையிலிருந்து வந்தான்.
“ஹேய் யாழினி… எப்படி இருக்க… அட, என்ன சகல, அங்க நின்னுட்டு… வாங்க, நல்லாருக்கீங்களா…” வரவேற்றான்.
“உக்காருங்க மாப்பிள…” என்ற வசந்தா, “என்னங்க… பேசிட்டு இருங்க, மோர் எடுத்திட்டு வரேன்…” என்று உள்ளே செல்ல பெண்கள் மூவரும் அவருடன் பின்னில் சென்றனர்.
மதியத்துக்கு விருந்து தயாராகிக் கொண்டிருக்க சிறிது நேரத்தில் சாப்பிட அமர்ந்தனர். வசந்தா அவர்களுக்காய் பார்த்துப் பார்த்து சமைத்திருக்க நிறைவாய் சாப்பிட்டனர்.
அடுத்து அரட்டை அடித்துக் கொண்டு அமர்ந்திருக்க, “ஏய், மாப்பிள, உன்ன டிகிரி படிக்க வைக்கிறாராமே… அதிர்ஷ்டக்காரி தான்டி நீ…” மாலினி சின்னவளிடம் கேட்க, “ஆமாக்கா… நான் உண்மைலயே அதிர்ஷ்டக்காரி தான்…” என்றாள் கணவனைக் காதலுடன் நோக்கி.
சரியாய் அதே நேரத்தில் அவளை நோக்கிய இலக்கியனின் விழிகள், அதை கவனித்துவிட புருவத்தைத் தூக்கி “என்ன…” என்றதும் கண்களால் ஒண்ணும் இல்லை என்று பார்வையை அவனிடமிருந்து மாற்றிக் கொண்டாள் யாழினி.
“என்ன சகல… கல்யாணமான அடுத்த மாசமே செஞ்சுரி அடிப்பீங்கன்னு பார்த்தா நீங்க யாழினியைப் படிக்க வச்சுட்டு இருக்கீங்க… எதுவும் வொர்க் அவுட் ஆகலையா… எங்களைப் பார்த்தீங்களா… அடுத்த மாசம் வளைகாப்புக்கு என் பொண்டாட்டி காத்திருக்கா… சட்டுன்னு வேலைய முடிச்சு, பட்டுன்னு புள்ளைய ரெடி பண்ணியாச்சு…” மாலினியின் கணவன் மீசையை தடவியபடி சொல்லவும் இலக்கியன் என்ன சொல்வதென்று புரியாமல் அமைதியாய் இருந்தான்.
அவர்கள் பேசியது யாழினி காதிலும் விழ நிமிர்ந்தாள்.
“மாமா, அவர் என்னையே புள்ள போலதான் பார்த்துக்கிறார்… அதெல்லாம் மெதுவா பெத்துக்குவோம்…” யாழினி சொன்னதைக் கேட்டு இலக்கியன் மனைவியை அன்புடன் நோக்க, அவள் வார்த்தைகள் பெற்றவரின் மனதைக் குளிர வைத்திருந்தது. நிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இதைத் தவிர வேறு என்ன பெரிய சந்தோஷத்தை பிள்ளைகள் பெற்றவர்களுக்கு கொடுத்திட முடியும்.
கல்யாணமே வேண்டாம் என்று வீறாப்பாய் பேசியவள் இப்போது கணவனை விட்டுக் கொடுக்காமல் பெருமை பேசும் அழகில் சிலிர்த்துத் தான் போயினர். அனைவர்க்கும் அவர்கள் வாங்கி வந்த உடைகளை எடுத்துக் கொடுத்தவள் பெருமையுடன் கணவனை நோக்க, அவன் கண்ணை சிமிட்டி உதட்டைக் குவித்து யாருக்கும் தெரியாமல் ஒரு பறக்கும் முத்தத்தைப் பறக்க விட நாணத்தில் சிவந்தே போனாள்.
“ஹூம்… வசதி இருக்கவங்க எடுத்துக் கொடுப்பாங்க… நாங்கெல்லாம் என்ன பண்ணுறது… வரவுக்கும் செலவுக்கும் சரியா இருக்கு…” மாலினி பெருமூச்சுடன் சொல்லவும், சட்டென்று திகைத்துப் போனாள் யாழினி.
“அச்சோ, அப்படில்லாம் ஒண்ணும் இல்லக்கா… ஒரு ஆசைக்கு எல்லாருக்கும் எடுத்துக் கொடுத்தோம்… மத்தபடி வசதி இருக்குன்னு காட்டிக்க எல்லாம் நினைக்கல… நீ, எடுத்தா என்ன, நான் எடுத்தா என்ன… நாம எல்லாம் ஒண்ணு தானே மாலுக்கா…” என்றாள் சற்று வருத்தத்துடன்.
அதை கவனித்துக் கொண்டிருந்தாலும் இலக்கியன் எதுவும் சொல்லவில்லை.
“அவ ஏதோ ஆசைல செய்தா நீ என்னடி இப்படி சொல்லிட்டு இருக்க… நீங்க எதுவும் நினைச்சுக்காதிங்க மாப்பிள்ள…” என்ற வசந்தாவும் அனைவருக்கும் புத்தாடை வாங்கி வைத்திருக்க கொண்டு வந்து கொடுத்தார்.
“ஏதோ எங்களால முடிஞ்சது… பட்டு வேஷ்டி, சட்டை… பிடிச்சிருக்கா பாருங்க…” என்றார் இலக்கியனிடம் கொடுத்து.
“அன்பா எதைக் கொடுத்தாலும் சந்தோஷம் தான் அத்த…” என்றவன் சந்தோஷமாய் வாங்கிக் கொண்டான்.
“இது தலை தீபாவளிக்கு எங்க சின்னப் பரிசு…” என்று இரண்டு மோதிரப் பெட்டிகளை நீட்டினார் நடேசன்.
“சூப்பரா இருக்குப்பா…” யாழினி அவளது மோதிரத்தைக் கையில் போட்டு சந்தோஷப் பட இலக்கியன் சிரித்தான்.
“இந்தப் பெண்களுக்கு கணவன் எத்தனை வாங்கிக் கொடுத்தாலும் பிறந்த வீட்டில் கிடைக்கும் பொருட்களின் சந்தோசம் கணவன் வாங்கிக் கொடுப்பதில் கிடைப்பதில்லை…” என நினைத்துக் கொண்டான்.
“என்னங்க, பார்த்துட்டு இருக்கீங்க… மோதிரம் சரியா இருக்கான்னு போட்டுப் பாருங்க…” என்றவள் அவன் கையில் உள்ள பெட்டியை வாங்கி மோதிரத்தை எடுத்து அவளே போட்டு விட்டாள்.
“அப்பா, சூப்பரா இருக்கு… ஆனா, எதுக்கு இவ்வளவு செலவு பண்ணறீங்க… இதெல்லாம் நாங்க கேட்டோமா…”
“நீங்க எதிர்பார்க்கலேன்னாலும் செய்ய வேண்டிய முறைன்னு ஒண்ணு இருக்குல்ல கண்ணம்மா…” என்றார் மகளிடம் அன்புடன்.
“போங்கப்பா… இந்தப் பணத்தை உங்க வைத்திய செலவுக்கு வச்சிருக்கலாம்…” என்ற மகளை நெகிழ்வுடன் நோக்கினார்.
“ஹூம்… போன வருஷம் எங்க தல தீபாவளிக்கு அவருக்குப் போட்ட மோதிரத்தை விடக் கொஞ்சம் பெருசு தான் போலருக்கு…” என்றாள் மாலினி.
“ஏய்… என்னடி பேசற…” மூத்தவள் ரூபினி தங்கையின் கையில் இடிக்க, “ஹூம்… மோதிரம் கூட வசதிக்குத் தகுந்த போல தான் சைஸ் மாறும் போலருக்கு…” முணுமுணுத்தபடி அங்கிருந்து செல்ல இலக்கியனின் முகம் சுருங்கியதைக் கண்ட ரூபினி, “அவ கிடக்கறா மாப்பிள்ள… எங்க, எப்படிப் பேசணும்னு இன்னும் தெரியாது… நீங்க ஒண்ணும் நினைச்சுக்காதீங்க…” என்று உள்ளே சென்று விட்டாள்.
மாலினியின் கணவன் ஏதோ போன் வரவும் பேச எழுந்து சென்றிருக்க எதையும் அறியவில்லை.
அவர்களைக் கண்டதும், “என்ன சகலை, மாமனார் வீட்டு தலை தீபாவளிப் பரிசு வாங்கியாச்சா…” என்று புன்னகைத்து விட்டு, “எங்க, உங்க அக்காவைக் காணோம்…” என்று கேட்டபடி மனைவியைத் தேடி அறைக்கு சென்றான்.
“மாப்பிள்ள… மாலினி சட்டுன்னு இப்படி தான் பேசிருவா… நீங்க ஏதும் நினைச்சுக்காதீங்க… கண்ணம்மா, மாப்பிள்ளைய மாடிக்கு கூட்டிட்டுப் போ டா…” என்றார் பர்வதம்.
அடுத்த நாள் அழகாய் விடிய, முதலில் எழுந்து குளித்து பிறந்த வீட்டில் கொடுத்த புத்தாடையை உடுத்துக் கொண்டு கணவனுக்கு காபியுடன் மாடிக்கு வந்த யாழினி அவனைக் காணாமல் திகைத்தாள்.
சட்டென்று பின்னிலிருந்து அவள் இடையைச் சுற்றிப் படர்ந்த கரங்களும் பின் கழுத்தைத் தீண்டிய இதழ்களும் அது அவளவன் தான் என்றது.
ஈர்ப்பு விசை எல்லாம்
உன் இதழில் உண்டென்பேன்…
அறிவியலே அறியாத
உன் இதழ் என் இதழை
ஈர்க்கும் முத்தத்தில்…

Advertisement