Advertisement

“அச்சச்சோ, மாட்டி கிட்டனே… கோபப் படுவாரோ…” என தயங்கிக் கொண்டே, “பி… பிளடி பிஸ்கட்னு…” அவள் சொல்லும் முன் இழுத்து அவளைத் தன் மடியில் கிடத்திக் கொண்டவன், “பிளடி யா… நான் உனக்கு பிளடியா… பிளடி என்ன பண்ணுவான் தெரியுமா…” எனக் கேட்க அவள் கண்களை உருட்டி பாவமாய் முழித்தாள்.
“என்ன பண்ணுவான்….”
“ரத்தக்களரி பண்ணும் டி… ரத்தக்களரி பண்ணும்… யாரைப் பார்த்து பிளடின்னு சொன்ன… என் பிளேக் சாக்லட்டே… பிளடிக்கு அர்த்தம் தெரியுமா…” என்று கேட்க அவள் திருதிருவென விழித்தாள்.
“இப்படி முழிச்சாப் பத்தாது… எனக்கு இப்பவே பதில் சொல்லியாகணும்…” என, “நான் வேணும்னா சாரி சொல்லிக்கவா…” என்றதும் அவனது கண்கள் பல்பாக அடுத்த நிமிடம் அவளது இதழ்கள் அவன் இதழில் மின்சாரத்தைக் கடத்திக் கொண்டிருக்க கைகளுக்குள் தாங்கிக் கொண்டான்.
சற்று நேரத்தில் அவள் இதழை விலக்கிக் கொள்ள பியூஸ் போனவன் போலக் கண்ணைத் திறந்தவன் ஏதோ அற்புதம் நிகழ்ந்தது போல் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். முதன்முதலாய் அவள் அவனிடம் சாரி சொல்கிறாளே.
“போதும்… முழிச்சது… நான் பிளடி பிஸ்கட்னு ஒரு புளோல சொல்லிட்டேன்… அது பிடிக்கலேன்னா சொல்ல வேண்டியது தான… அதுக்குப் போயி கோச்சுகிட்டு ரத்தக் களரின்னு எல்லாம் பயமுறுத்திட்டு இருக்கீங்க…” அவனது சட்டை பட்டனைத் திருகிக் கொண்டே கேட்டாள்.
“அச்சோ, என் கறுப்பு சாக்கலேட் டி நீ… என்னை எப்படிக் கூப்பிட்டாலும் எனக்கு ஓகே தான்… ஆனா, ஒண்ணு ரத்தக் களரிக்கு எப்பத் தயாரோ அப்ப மட்டும் கூப்பிடு… இல்லேன்னா, இப்படி சாரி சொன்னாலும் ஓகே தான்…” என்றவனை செல்லமாய் நெஞ்சில் குத்தினாள் யாழினி.
“என்ன சும்மா அதையே சொல்லி பயமுறுத்தறீங்க…”
“ஆமா, நீ சொன்னதுக்கு அதானே அர்த்தம்…”
“ஆத்தி… அதுக்கு இதுவா அர்த்தம்…” என்றவளின் தலையில் செல்லமாய் முட்டினான் இலக்கியன்.
“நீ வேணும்னா கூகிள் ஆண்டவருகிட்ட கேட்டுப் பாரு…” அவன் சொல்லவும் கையிலிருந்த மொபைலைப் பறித்துக் கொண்டவள் அவன் சொன்னபடி செய்ய, அதுவும் அதையே காட்ட உண்மையிலேயே திகைத்து போனாள்.
“பெரிய ஆளுங்க நீங்க… நான் என்னவோ அதுக்கு ரவுடி, பொறுக்கி, இப்படி தான் அர்த்தம் இருக்கும்னு நினைச்சேன்… உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சுது…” என்றாள்.
“அதுவா, அது வந்து… சொன்னாத் திட்ட மாட்டியே…”
“சும்மா சொல்லுங்க…”
“அது ஒருநாள் என் பிரண்டு ஒருத்தன், லவ் பிரபோஸ் பண்ணப் போறேன்… துணைக்கு வாடான்னு கூப்பிட்டான்…”
“நாம தான் லவ்வுன்னா வேட்டியை வரிஞ்சு கட்டிட்டு முன்னாடி நிப்பமே… அந்த வேகத்துல சரின்னு கூடப் போனேன்… இவன் லவ் லெட்டரைக் கொடுத்தும் அந்தப் பொண்ணு சொல்லுச்சு பாரு…”
“அப்படி என்னங்க சொல்லுச்சு…” என்றாள் ஆவலுடன்.
“ஏண்டா, எடுபட்ட பயலே… உனக்கு லவ் பண்ண வேற யாரையும் கிடைக்கலையா… கல்யாணமாகி குழந்தை இருக்கிறவளை லவ் பண்ணறேன்னு வந்து சொல்லுறன்னு அவனை ஓங்கி அப்பிருச்சு… அப்புறம் என்னைப் பார்த்து சொல்லுச்சு பாரு ஒரு வார்த்தை… பிளடி ராஸ்கல், நீயும் அவனுக்கு துணைக்கு வந்திருக்கியா, உன் அறிவை எங்காவது அடமானம் வச்சுட்டியான்னு கண்ட மாதிரிப் பேசிடுச்சு… ஒரே அவமானமாப் போயிருச்சு… கண்ணம்மா…”
இலக்கியன் பரிதாபமாய் உணர்ச்சியைக் கொட்டி சொல்லிக் கொண்டிருக்க அவனை முறைத்தவள், “உங்களை எல்லாம் சும்மா திட்டி மட்டும் அனுப்பி இருக்கக் கூடாது… கல்யாணம் ஆனா பொம்பளைக்கு லவ் லெட்டர் குடுக்கப் போனானாம்… அதுக்கு இவர் துணை மாப்பிள்ளையாம்… ச்சீ, அசிங்கமா இல்ல…” என்றாள் முகத்தை சுளித்து.
“அசிங்கமா தான்டி இருந்துச்சு… என்ன பண்ண, அதெல்லாம் வயசுக் கோளாறு… இப்பல்லாம் நாங்க அப்படி இல்லல்ல… செம டீசண்டாக்கும்…” பெருமையாய் சொல்ல, “ஹூக்கும், நீங்க தான் உங்க பெருமையை மெச்சிக்கணும்…” என்றாள்.
“ஏன் எங்க பெருமைக்கு என்ன…” கேட்டவன் படுத்திருந்தவள் வயிற்றின் மீது தலை வைத்துப் படுத்துக் கொள்ள அவள் கூச்சத்தில் நெளிந்தாள்.
“சரி, சரி… நீங்க ரொம்ப டீசண்டு தான்… நியூஸ் பேப்பர்லயே போட்டுட்டாங்க… உங்க இடத்துல படுத்துத் தூங்குங்க…”
“ஏன்… இது என் இடம் இல்லையா…” என்றவன் அவளது வயிற்றில் தலையை வைத்து உருட்ட தவிப்புடன் நெளிந்தாள் யாழினி.
“யோவ், பிளடி பிஸ்கட்… கூச்சமா இருக்கு… எழுந்திருங்க…” அவன் தலை முடியைப் பற்றி எழுப்ப முயல எழுந்தவன் அவள் நெஞ்சில் முகம் புதைத்துக் கொள்ள திமிறினாள்.
“ஆ, இம்சை பண்ணறீங்க…” என்றவள் எழுந்து அமர அவள் மடியில் படுத்துக் கொண்டவன், “சரி… நாளைக்கு டாக்டரைப் பார்க்கப் போயிட்டு அப்படியே உனக்கு டிகிரி படிக்க என்ன பண்ணணுமோ விசாரிச்சுட்டு வந்துடலாம்…” என்றான்.
“ம்ம்… சரிங்க…” என்றவள் அவனது தலை முடியைக் கோதிக் கொண்டிருக்க, “அப்படியே என்னைத் தூங்க வச்சிடலாம் நினைச்சியா… வேண்டியது கிடைக்காம தூங்க மாட்டேன் கண்ணம்மா…” என்றவன் அவள் இடுப்பை வளைத்துக் கொள்ள படுக்கையில் சாய்ந்தவளைத் தன் கைக்குள் கொண்டு வந்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். இப்போதெல்லாம் யாழினியும் அவனது கை வளைவிலும் நெஞ்சிலுமே தலை வைத்து உறங்கப் பழகிக் கொண்டிருந்தாள்.
அவன் நெஞ்சத்து ரோமத்தில் வழக்கம் போல் கோலமிட்டுக் கொண்டிருந்தவள், “என்னங்க, உங்ககிட்ட ஒண்ணு கேக்கனும்னு நினைச்சேன்… கேக்கட்டுமா…”
“ஹூம்… இப்பவே கேக்கணுமா…” பெருமூச்சுடன் அவள் இடுப்பைத் தடவிய அவன் கைகளைத் தட்டி விட்டவள், “ப்ச்…” சொல்லுங்க…” என்றதும், “கேளு…” என்றான்.
“நீங்க ஸ்நேக்ஸ், பழம் எல்லாம் அளவா தான் சாப்பிடறீங்க… அப்புறம் நம்ம பர்ஸ்ட் நைட்டுல மட்டும் ஏன் காணாததைக் கண்டவன் போல அப்படி எல்லாத்தையும் விடாம சாப்பிட்டு இருந்தீங்க…” எனக் கேட்கவும் சிரித்தான்.
“அப்ப உன்னை சாப்பிட முடியல, அந்த டென்ஷன்ல தான் என்ன பண்ணன்னு தெரியாம அதை எல்லாம் காலி பண்ணிட்டு இருந்தேன்… நீ என்னை சாப்பாட்டு ராமன்னே முடிவு பண்ணிருப்பியே…” என்றதும், “ஹஹா… கரெக்ட்… அப்படிதான் நினைச்சேன்…” என்றவள் சிரித்தாள்.
“தெரியும்டி… என் சாக்கலேட் பிஸ்கட்டே… சரி, சரி… இன்னும் லைட் ஆப் பண்ணாம நம்ம அரசாங்கத்துக்கு கரண்டை வேஸ்ட் பண்ணக் கூடாது…” சொன்னவன் லைட்டை அணைத்து அவளை அணைக்க புன்னகையுடன் நெஞ்சில் ஒட்டிக் கொண்டாள் அவன் கண்ணம்மா.
அடுத்த நாளே டாக்டரை சென்று பார்க்க அவர், கிருபா சொன்னது போல எந்த காலேஜில் சேரப் போகிறாய்… என்று தான் கேட்டார்.
பிறகு விஷயத்தை சொல்லி கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் B.Com படிக்க பீஸ் கட்டி புக்கை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினர். நாட்கள் அழகாய் நகர பகலில் அத்தைக்கு ஒத்தாசையாய் இருந்து கொண்டே ஓய்வு நேரத்தில் தனது படிப்பையும் இரவில் கணவன் சொல்லித் தரும் பாடத்தையும் கற்றுத் தேர்ந்து கொண்டிருந்தாள் யாழினி.
நாட்கள் அழகாய் செல்ல தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்தது. இவர்களுக்கும் யாழினியின் அக்கா மாலினிக்கும் தலை தீபாவளி என்பதால் இரண்டு ஜோடிகளையும் பிறந்த வீட்டில் தலை தீபாவளி விருந்துக்கு அழைத்திருந்தனர்.
இலக்கியன் வீட்டில் அனைவரும் ஒன்றாக துணிக்கடைக்கு சென்று தீபாவளிக்கு துணி எடுப்பது தான் வழக்கம். அது குடும்ப கடை கணக்கில் ஒன்றாக செய்யும் செலவு.
இலக்கியனின் அக்கா, மாமா, குழந்தைகள், அண்ணன், அண்ணி, குழந்தைகள், தம்பி என்று எல்லாருக்கும் டவுனுக்கு சென்று துணி எடுத்தனர். யாழினிக்கு அவர்கள் எடுத்தது அல்லாமல் தனது ஆசைக்கும் ஒரு பட்டுப் புடவையை எடுத்துக் கொடுத்தான் இலக்கியன். அதோடு மாமனார் வீட்டுக்கு செல்லும்போது அவர்களுக்கு கொடுப்பதற்காய் அவர்களுக்கும் சேர்த்து யாழினியோடு சேர்ந்து பார்த்து வாங்கினான். இதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கவிதாவுக்கு கடுப்பாய் இருந்தது.
“யார் வீட்டுக் காசுல யாருக்கு இத்தனை செலவு பண்ணிட்டு இருக்கான்…” என்று மனதுக்குள் கருவிக் கொண்டே இருந்தாள். அது இலக்கியன் தனது கணக்கில் பற்று வைக்க சொன்னது அவளுக்குத் தெரியாது. வேண்டியதை வாங்கிக் கொண்டு அனைவரும் சந்தோஷமாய் வீடு திரும்பினர்.
நெருங்கும்போது தவிக்கிறேன்…
விலகலிலே துடிக்கிறேன்…
வேண்டாமென்றே வேண்டுகிறேன்…
வேண்டிக் கொண்டே மறுக்கிறேன்…
காதலின் அவஸ்தையில் மனமும்
முன்னுக்குப் பின் முரணாய்
சற்று கலங்கியே போகிறது…

Advertisement