Advertisement

அத்தியாயம் – 7
“இங்க பாரும்மா… நம்ம குடும்பத்துல யாரும் பள்ளிக்கூடப் படிப்பைத் தாண்டாதவங்க… பசங்களைக் கூட காலேஜுக்கு அனுப்பினதில்லை… மார்க் அதிகமா வாங்கிட்டான்னு இப்ப உன் மருமகளை காலேஜுக்கு அனுப்பினேன்னு வை… அப்புறம் எங்க யாரையும் அவ மதிக்க மாட்டா…”
“நீ ஏண்டி அப்படி நினைக்கற… இத்தன நாள்ல அவ எதுவும் மரியாதை இல்லாம நடந்திருக்காளா…”
“இத்தன நாள் எப்படியோ, இவங்கள விட நாம அதிகமாப் படிச்சிட்டம்னு மண்டக் கிறுக்கு பிடிச்சுதுன்னு வை… அப்புறம் தொழில்ல இருந்து எல்லாத்துலயும் அவ படிச்ச புத்தியைக் காட்டத் தொடங்கிடுவா…”
“அதுக்கு என்னை என்னடி பண்ண சொல்லுற…” அரிசியைக் களைந்து கொதிக்கும் தண்ணீரில் போட்டுக் கொண்டே கேட்டார் பர்வதம்.
“அட, நீ என்னமா, இப்படி இருக்க… அவங்க எத்தனை நயமாப் பேசினாலும் வேண்டாம்னு ஒரே பிடிவாதமா சொல்லிருன்னு சொல்லறேன்…” கீரையைக் கிள்ளிப் போட்டுக் கொண்டே சொன்னாள் கிருபா.
“சரி விடு… உன் தம்பி கிட்ட முன்னமே கல்யாணத்துக்குப் பொறவு காலேஜ் அனுப்ப மாட்டோம்னு சொல்லி இருக்கோம்ல… முதல்ல கேக்கட்டும், அப்புறம் பார்க்கலாம்…”
“ச்சே… உன்னைல்லாம் வச்சிட்டு மாமியார் பதவியே அசிங்கப்பட்டுப் போயிரும் போல…” சலித்துக் கொண்டவள் வாசலில் வண்டி சத்தம் கேட்கவும், “அவங்க தான் வராங்க… நான் சொன்னது நினைவிருக்குல்ல… மாத்திப் பேசிடாத…” சொல்லிவிட்டு வாயை மூடிக் கொண்டாள்.
“அத்த…” உற்சாகமாய் அழைத்துக் கொண்டே அவரைத் தேடி வந்தாள் யாழினி.
“மதனி, நீங்க எப்ப வந்தீங்க…” என்றாள் கிருபாவைக் கண்டு.
“இப்ப தான் வந்தேன்… அம்மா தனியா சமைக்குறதைப் பார்த்து மனசு கேக்கல… அதான், முடிஞ்ச உதவியப் பண்ணலாமுன்னு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன்…” என்று தம்பி மனைவிக்கு ஒரு குட்டும் வைத்தாள்.
அது புரிந்தும் கண்டு கொள்ளாத யாழினி, “சாரி அத்த… ஸ்கூல்ல கொஞ்சம் லேட் ஆகிருச்சு… நீங்க போங்க… இனி சமையலை நான் பார்த்துக்கறேன்…” என்றாள்.
“சரிம்மா… நாங்க கீரையை உருவி வைக்குறோம்… எல்லாருக்கும் சூப் போட்டுக்கலாம்…” அவர் சொல்லவும், “ஹாலுக்குப் போயிக்கலாம் மா…” என்ற கிருபா அதை ஹாலுக்கு கொண்டு செல்ல அவளுடன் அமர்ந்தார்.
“கடைக்குக் கிளம்பிட்டியா தம்பி…”
“இல்லக்கா, இனி மதியம் சாப்பிட்டு தான் கிளம்புவேன்… பிள்ளைங்க எல்லாம் எங்கே…” என்றான் இலக்கியன் சோபாவில் அமர்ந்து கொண்டே.
“மாடில பல்லாங்குழி விளையாடிட்டு இருக்காங்க…”
“ம்ம்…” என்றவன் சட்டை பட்டனை அவிழ்த்து விட்டான்.
“இலக்கியா, நம்ம டாக்டர் போன் பண்ணி இருந்தார்… யாழினியைக் கூட்டிட்டு வீட்டுக்கு வர சொன்னார்…” என்றார் பர்வதம்.
“ம்ம்… ஆமாம் மா… இவ ரிசல்ட் வந்ததும் சொல்ல சொன்னார்… நாளைக்குப் போயி பார்த்திட்டு வரோம்…” டாக்டர் புகழேந்தி அவர்கள் குடும்பத்தின் நலம் விரும்பி. நல்ல வழிகாட்டி. இலக்கியனின் தந்தை இறந்த சமயத்தில் நிறைய விஷயங்களில் அவரது உதவி இருந்தது.
அவர் இலக்கியனின் தந்தைக்கு நல்ல நண்பர் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் அவரது ஆலோசனையைக் கேட்டுக் கொள்வர். இவர்கள் கல்யாண சமயத்தில் அவர் அமெரிக்காவில் இருக்கும் மகனிடம் சென்றிருந்ததால் வர முடியவில்லை. அதற்குப் பிறகு அவர் திரும்பி வந்ததும் ஒரு முறை அவர் வீட்டுக்கு யாழினியை ஆசிர்வாதம் வாங்க அழைத்துச் சென்றான் இலக்கியன்.
“அவரைப் பார்க்கப் போனா என்ன சொல்லிடப் போறாரு… இத்தன மார்க் வாங்கிருக்காளே… மேல என்ன பண்ணப் போறிங்கன்னு கேப்பாரு…” சொல்லிக் கொண்டே தம்பியின் முகத்தை பதிலுக்காய் நோக்கினாள் கிருபா.
“நீ சொல்லுறதும் சரிதான்க்கா… அவ இத்தனை மார்க் வாங்கிட்டு மேல படிக்காம இருந்தா நல்லாருக்காதுன்னு சொல்லுற உன் மனசோட அங்கலாப்பு எனக்கும் புரியுது… ஆனா என்ன பண்ணறது… அம்மாக்குத் துணைக்கு ஆளு வேணுமே…” என்ற இலக்கியன் சேலைக்கும், முள்ளுக்கும் நோகாத வண்ணம் சொல்ல பர்வதம் பெருமையாய் மகளை நோக்கிப் புன்னகைத்தார்.
யாழினி எனக்கும், இதற்கும் சம்மந்தமில்லை என்பது போல் சமையலை மும்முரமாய் கவனித்துக் கொண்டே காதை மட்டும் இங்கு கொடுத்திருந்தாள்.
“அதான்க்கா, ஒரு யோசனை பண்ணிருக்கேன்…” இலக்கியன் சொல்லவும் கிருபா என்னவென்பது போல் பார்த்தாள்.
“யாழினியை காலேஜுக்கு அனுப்பினா அம்மா தனியா எல்லா வேலையும் செய்து கஷ்டப்படனும்… எனக்கும் அதுல விருப்பம் இல்லை…” அவன் சொல்லவும் அப்பாடா என்பது போல் கிருபா அன்னையைப் பார்க்க அவர் புன்னகைத்தார்.
“அதான் அவளை காலேஜ் போக வேண்டாம்னு சொல்லிட்டேன்… ஆனா, கரஸ்பாண்டன்ஸ்ல வேணும்னா எதாச்சும் டிகிரி படிச்சிட்டுப் போகட்டுமே… அவளோட ஆசையும் நடக்கும்… நமக்கும் பிரச்சனை இல்லை… நீ என்னக்கா சொல்லற…” என்றான் தம்பி நயமாக.
“ஓ… இப்படி ஒண்ணு இருக்கா…” என்று அவள் யோசனையுடன் பார்க்க, “நான் வரும்போதே சொல்லிட்டேன் மா… இத்தன மார்க் வாங்கி காலேஜ் அனுப்பலேன்னா அக்கா ரொம்ப வருத்தப்படுவா… வேணும்னா கரஸ்பாண்டன்ஸ்ல படிச்சுக்கோன்னு உன் மருமக கிட்ட சொல்லிட்டேன்…”
“ஆஹா, இதென்ன புதுக் கதையா இருக்கு… இவளைக் காலேஜ் அனுப்பலேன்னு நான் வருத்தப்படுவேனா…” என அவள் யோசிக்க, “ஆஹா, உன்னை வச்சே என் மகன் உனக்கு வலையைப் போட்டானா…” எனப் பார்த்துக் கொண்டிருந்தார் பர்வதம்.
“நீங்க என்னம்மா சொல்லறீங்க… உங்களுக்கு இதுக்கு சம்மதமா…” என்றான் அன்னையிடம்.
“எனக்கென்னப்பா, என் கூட வீட்டுல நிக்க ஆளு வேணும்… காலேஜு போகாம அவளுக்கு வீட்ல இருந்து படிக்க சந்தோசம்னா படிச்சிட்டுப் போகட்டும்…” என்றார்.
அதைக் கேட்டதும் அடுக்களையில் இருந்து ஓடி வந்த யாழினி, “தேங்க்ஸ் அத்தை…” என்று அவர் கன்னத்தில் முத்தம் கொடுக்க கிருபாவின் உள்ளம் எரிந்தது.
“ச்ச்சீ… ச்ச்சீ, இவ ஒருத்தி, புருஷனுக்குக் கொடுக்க வேண்டியதெல்லாம் எனக்குக் கொடுத்துட்டு… மேல படிக்கறது எல்லாம் சரித்தான்… அப்படியே எனக்கு ஒரு பேரப் புள்ளையும் சீக்கிரம் பெத்துப் போடணும்… சொல்லிட்டேன்…” என்றவர், கன்னத்தைத் துடைத்துக் கொண்டே எழுந்து செல்ல கிருபாவின் முகம் காற்றுப் போன பலூனாய் சுருங்கிப் போக யாழினியின் முகம் ஆயிரம் வாட்ஸ் லைட்டாகப் பிரகாசித்தது.
அதற்கு மேல் அவர்களிடம் இனி எதிர்ப்பைக் காட்டிப் பிரயோசனைமில்லை எனப் புரிந்து போக, “இவ சரியான கைகாரியா இருப்பா போலருக்கே… என் தம்பியோட அம்மாவையும் கைக்குள்ள போட்டுக்கப் பார்க்கிறா… கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்…” நினைத்துக் கொண்டாள் கிருபா. மாலையில் அன்னையும் யாழினியும் செய்த வடை, போண்டாவை சாப்பிட்டுவிட்டு கணவனுக்கும் பாக் செய்து எடுத்துக் கொண்டே வீட்டுக்குக் கிளம்பினாள்.
இரவு உணவு முடிந்து வேலைகளை முடித்து யாழினி தங்கள் அறைக்கு செல்லும்போது இலக்கியன் கட்டிலில் படுத்து கண்ணை மூடிப் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான்.
சொல்லித் தரவா… சொல்லித் தரவா…
சொல்லித் தரவா…
ஒண்ணு ஒண்ணா… ஒண்ணு ஒண்ணா…
சொல்லித் தரவா…
அலைபேசியில் ஒலித்துக் கொண்டிருந்த பாட்டைக் கூட சேர்ந்து பாடிக் கொண்டிருந்தான் இலக்கியன்.
“ஹூக்கும்… இவரு என்ன சொல்லித் தருவாருன்னு எனக்குத் தெரியாது பாரு… ஆளு தான் ஒரு மார்க்கம்னா கேக்குற பாட்டும் ஒரு மார்க்கமா தான் இருக்கு…” முணுமுணுத்தவள் அவன் அருகே அமர்ந்து அழைத்தாள்.
“ரொம்ப தேங்க்ஸ்ங்க… எனக்கு எவ்வளவு ஹப்பியா இருக்கு தெரியுமா… நீங்க மட்டும் அப்படிப் பேசலைன்னா கரஸ்பாண்டன்ஸ் ல படிக்கக்கூட அத்தையை மதனி சம்மதிக்க விட்டிருக்க மாட்டாங்க…” அவள் சொல்லிக் கொண்டிருக்க அவன் தலையை ஆட்டியபடி பாட்டை ரசித்துக் கொண்டிருந்தான்.
“நான் பாட்டுக்கு எவ்ளோ எமோஷனலா பேசி நன்றி சொல்லிட்டு இருக்கேன்… நீங்க என்னடான்னா காதுல ஒயரை சொருகிட்டு தலையைத் தலையை ஆட்டிட்டு இருக்கீங்க… பிளடி பிஸ்கட்…” சொல்லிக் கொண்டே அவன் காதில் இருந்த இயர் போன் ஒயரைப் பிடுங்க இறுதியில் சொன்ன வார்த்தைகள் அவன் காதில் தெளிவாய் விழுந்தன.
“ஏய் இப்ப என்னடி சொன்ன…”
“என்ன சொன்னேன்… நான் சொல்லுறதைக் கேக்காம பாட்டு கேக்கறீங்கன்னு திட்டினேன்…”
“அதில்லடி… அதுக்கப்புறம் ஏதோ பிஸ்கட்னு சொன்னியே…”
“ஆத்தி… நாம சொன்னது காதுல விழுந்திருச்சு போலருக்கே… பிளடி பிஸ்கட் னு சொன்னா ஒருவேளை கோச்சுப்பாரோ…” என கண்ணை உருட்டி மண்டையைத் தட்டி யோசித்துக் கொண்டிருக்க, “அதை அப்படியே இப்ப சொல்லப் போறியா இல்லியா…” அவன் மீண்டும் கேட்டான்.
“அ… அது வந்து… நான் சும்மா ஒரு வேகத்துல…” என்றவள், “பட்டர் பிஸ்கட் னு சொன்னேன்…” என சமாளித்தாள்.
“இல்லையே, வேற என்னவோ சொன்ன போல இருந்துச்சு… உண்மையை சொல்லு…” என்றான் மிரட்டலாக.

Advertisement