படையல் போட்டு இலக்கியனின் தந்தைக்கு வடை பாயாச விருந்துடன் சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் சாப்பிட்டு முடித்தனர். எல்லாருக்கும் பரிமாறி முடித்து இறுதியில் ஒன்றிரண்டு வகை மட்டுமே மிச்சமிருந்தது.
“என்னக்கா, விதவிதமா சமைச்சும் இப்ப ரசமும் கூட்டும் மட்டும் தான் மிச்சமிருக்கு…” யாழினி கேட்க, “இங்க எப்பவும் இப்படி தான்… பரிமாற நிக்கறவங்களுக்கு ஒண்ணும் கிடைக்காது… அத்தைக்கு மகளுங்க, மாப்பிள்ளை முடிஞ்சு அவங்க ஆம்பளப் பசங்க முடிஞ்சு தான் நாமெல்லாம்… நீதான் அது புரிஞ்சுக்காம அவங்களைத் தாங்கிட்டு இருக்க…” என்று சரியான நேரத்தில் பத்த வைத்தவள்,
“நீ கவலைப்படாத யாழினி, யாருக்கும் தெரியாம நான் கொஞ்சம் தனியா எடுத்து வச்சிருக்கேன்…” என்றவள் ஒளித்து வைத்திருந்த வடை, பாயாசம், இனிப்பு பனியாரம், காரப் பனியாரம் எல்லாவற்றையும் எடுக்க இருவரும் திவ்யமாய் சாப்பிடத் தொடங்க யாழினியின் மனதில் கவிதாவின் வார்த்தைகள் நெருடலைக் கொடுத்தது.
எல்லாரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க பர்வதத்தின் அத்தை யாழினியைக் கண்டதும், “என்ன பர்வதம்… இலக்கியனுக்கு கல்யாணமாகி நாலு மாசம் ஆச்சே… அவன் பொண்டாட்டிக்கு எதுவும் விசேஷம் இருக்கா…” என்று கேட்க சட்டென்று யாழினியின் பார்வை கணவனை நோக்க அவன் அவளையே விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இன்னும் இல்லத்தை…”
“அதென்னடி, கல்யாணமான அடுத்த மாசமே நம்ம வூட்டுப் பசங்க அப்பா ஆகறது தான வழக்கம்… உன் மருமக இன்னும் ஆகலைன்னு சொல்லற…” என்றார் அவளைத் தன் கண்களால் அளவிட்டபடி.
“அது வந்து, அவளுக்கு இப்ப தான பரீட்சை எல்லாம் முடிஞ்சுது…” பர்வதம் சொல்லவும், “அதுக்காக, இதெல்லாம் காலா காலத்துல நடந்தாத் தான நல்லது… மத்தபடி வேற ஒண்ணும் உடம்புக்கு பிரச்சனை இல்லையே…”
அவர் கேட்டதும் யாழினிக்கு திக்கென்று இருந்தது. இலக்கியனின் முகமும் தொங்கிப் போயிருந்தது.
“ச்சேச்சே… அப்படில்லாம் எதுவும் இல்லத்தை… அதெல்லாம் அடுத்த மாசமே நல்ல செய்தி சொல்லுவா பாருங்க…”
“ம்ம்… சொன்னா சரிதான்… மேல படிக்கறேன்னு குழந்தை வேண்டாம்னு தள்ளி வச்சுடப் போறாங்க…”
“இல்ல அத்தை, காலேஜ் எல்லாம் அனுப்ப மாட்டோம்னு கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லி இருக்கோம், இல்ல யாழினி…” என்றார் மருமகளிடம்.
“அ…ஆமாம் அத்தை…” என்றாள் அவள் திணறலுடன்.
“இங்க பாரு கண்ணு… எங்க குடும்பத்துல வாக்கப்பட்டு வந்தவங்களும் சரி, குடும்பத்துப் பொண்ணுகளும் சரி… கல்யாணமான அடுத்த மாசமே உண்டாகறது வழக்கம்… நீயும் சீக்கிரமே ஒரு குழந்தைய பெத்துக் குடு… என் இலக்கியனோட குழந்தையைக் கொஞ்சிட்டு நிம்மதியா நான் போயி சேருவன்ல…” என்றார் யாழினியிடம்.
“ஹூக்கும்… நான் என்ன குழந்தை பெத்துக்கற மிஷினா… பட்டனைத் தட்டுனதும் குழந்தை வர்றதுக்கு… ஏன் குழந்தையைக் கொஞ்சலேன்னா நிம்மதியா சாக முடியாதோ… இந்தக் கிழவி ரொம்பத்தான் பேசுது…” மனதுக்குள் நினைத்தபடி தலையாட்டினாள் யாழினி.
அன்று இரவு கணவனிடம் அன்று நடந்ததை எல்லாம் ஒப்பித்துக் கொண்டிருந்தாள். கவிதா சொன்னதை அப்படியே சொல்லவும் இலக்கியன் சிரித்தான்.
“கண்ணம்மா, அண்ணி இப்படிப் பேசறாங்கன்னு அவங்களை ரொம்ப நல்லவங்கன்னு நினைச்சுடாத… சமயம் கிடைச்சா பத்த வைக்கிறதுல எக்ஸ்பர்ட்… நாம ஒண்ணு சொன்னா அதைத் திரிச்சு வேற போல போட்டுக் கொடுத்திருவாங்க… அவங்க கிட்ட யாரைப் பத்தியும் எதுவும் சொல்லாத…” என்றான் இலக்கியன்.
“ஆத்தி, இது தெரியாம நான் வேற காமெடி சொல்லிட்டனே, அதைத் திரிச்சு வேற சொல்லிடுவாங்களோ…” என்றாள் கவலையுடன்.
“காமெடி தான சொன்ன… அது ஒண்ணும் பரவால்ல விடு…” அவன் சொல்லவும் யோசித்தவள், “இல்லங்க, அது ஒரு வில்லங்கமான காமெடி…” பயத்துடன் சொன்னவள் தான் சொன்ன காமெடியை சொல்ல, கேட்டவனின் முகம் யோசனையைக் காட்டியது.
“இது அம்மா காதுக்குப் போனா கண்டிப்பா வில்லங்கம் ஆகும் தான்… இதை எதுக்கு அவங்க கிட்ட சொன்ன…”
“அது, அந்த டைமிங்ல அப்படித் தோணுச்சா… அதான் அக்கா கிட்ட சொல்லிட்டேன்…” என்றாள் வருத்தத்துடன்.
“ஹூம், டைமிங் காமெடி… நாம மனசுல தோணுறதை வெளிப்படையா சொல்லுறது தப்பில்ல கண்ணம்மா… ஆனா அதை எல்லார் கிட்டயும் சொல்லக் கூடாது… நாம பேசறவங்க நம்பிக்கையானவங்களா இருக்கணும்… இனி மேல யாரா இருந்தாலும் ஒரு வார்த்தையை சொல்லறதுக்கு முன்னாடி யோசிச்சு சொல்லு…”
“ம்ம்… சரிங்க… அக்கா, அத்தை கிட்ட சொல்லிட்டா என்னைத் தப்பா நினைச்சுப்பாங்களா…” அழுதுவிடுவேன் என்பது போல் கேட்டவளின் மூக்கைப் பிடித்து செல்லமாய் ஆட்டியவன்,
“டைமிங்கா காமெடி எல்லாம் சொல்லிட்டு இப்ப கேளு…” என்றவன், “நான் பார்த்துக்கறேன்…” என்றான். அப்போது தான் நிம்மதியானவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
“இனி எதுவும் காமெடி சொல்லனும்னா கூட உங்க கிட்ட மட்டுமே சொல்லிக்கறேன்பா சாமி…” என்றவளைத் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன், “நீ இன்னும் சின்னப்புள்ள தான… அதான் விளையாட்டுத் தனமாவே இருக்க…” என்று சொல்லவும், “ஹூக்கும், சின்னப் புள்ளைங்களை இப்படி மட்டும் பண்ணலாமாக்கும்…” என்று அவன் கை இருந்த இடத்தைக் காண்பிக்க சிரித்தான்.
“மனசும், வயசும் மட்டும் தான்டி உனக்கு இன்னும் வளரல… மத்தபடி…” என்றவனின் பார்வை அவள் உடலெங்கும் அளவெடுக்க, “உடம்பு நல்லாவே வளர்ந்திருக்கு…” என்றவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டு தனது தேடலைத் தொடங்கினான்.
“ஆ… மெதுவா… மீசை குத்துது…” அவளது சிணுங்கல் சிருங்கார ராகமாய் இசைக்க அவன் குஷியானான்.
“பாட்டி சொன்னதைக் கேட்டல்ல… அடுத்த மாசமே உன்னை வயித்தைத் தள்ளிட்டு நிக்க வைக்கலேன்னா என்னை ஆம்பளையே இல்லேன்னு சொன்னாலும் சொல்லிடுவாங்க…”
“ஹூக்கும்… உங்க பாட்டிக்கு விவஸ்தையே இல்லை… குழந்தை என்ன பொம்மையா… நாம நினைச்சதும் வாங்கி வயித்துக்குள்ள வச்சுக்கறதுக்கு… அதெல்லாம் எப்ப நமக்கு கொடுக்கணும்னு கடவுள் நினைக்கிறாரோ அப்ப தான் கொடுப்பார்…” என்றாள் அவன் நெஞ்சத்து ரோமத்தை தன்  விரல்களால் சுருட்டிக் கொண்டே.
“அது மட்டும் போதாது கண்ணம்மா… நாமளும் கொஞ்சம் ஹோம் வொர்க் பண்ணனும் செல்லம்…” என்றவன் அவளை மேலே பேச விடவில்லை.
சில நாளில் யாழினிக்கு ரிசல்ட் வந்துவிட 953 மார்க்குடன் தேறி இருந்தாள். ஸ்கூலுக்கு மார்க் சீட் வாங்க சென்றபோது உமா அவளிடம் காலேஜில் சேருவதைப் பற்றிக் கேட்க வீட்டில் விட மாட்டார்கள் என்று கவலையுடன் சொல்லிக் கொண்டிருப்பதை இலக்கியன் கேட்டான்.
“மேல படிக்கணும்னு ஆசைப்படறியா கண்ணம்மா, நான் வேணும்னா அம்மாகிட்ட சொல்லிப் பார்க்கட்டுமா…” பின்னில் அமர்ந்திருந்தவளிடம் கேட்க அவள் யோசித்தாள்.
“படிக்கணும்னு ஆசையா தான் இருக்கு… ஆனா அத்தை சம்மதிச்சாலும் மதனிங்க சம்மதிப்பாங்களான்னு தெரியல…” என்றவளின் மனம் முன்தினம் வீட்டில் அவர்கள் பேசியதை யோசிக்கத் தொடங்கியது.
“யாழினி, நாளைக்கு தான உனக்கு ரிசல்ட்டு…” கவிதா கேட்க,
“ஆமாக்கா… எவ்வளவு மார்க் வருமோன்னு கொஞ்சம் டென்ஷனா இருக்கு…” என்றாள் யாழினி.
“இங்க பாரு யாழினி, மார்க் எவ்வளவு வேணும்னா வரட்டும்… ஆனா ரிசல்ட்டைப் பார்த்ததும் நீ காலேஜ் போகணும்னு கிளம்பிடாத… பாவம், அம்மாக்கும் வயசாகுது… எல்லா வேலையும் செய்ய முடியாது…” என்றாள் கிருபா.
யாழினி எதுவும் சொல்லாமல் அமைதியாய் நிற்க,
“ஹூம்… எனக்கும் படிக்கணும்னு ஆசை இல்லையா என்ன, இந்த குடும்பத்துல என்ன வழக்கமோ அதை தான செய்ய முடியும்…” என்றாள் பத்தாம் வகுப்பு பெயிலான கவிதா.
“ஆமா, யாழினி கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னது தான… அம்மாக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுக்கணும்… எங்க வீட்டுல கொஞ்ச நாள் கூட்டிப் போயி வச்சுக்கனும்னு நினைச்சாலும் தம்பிங்களுக்கு சோறாக்கணும், துணி துவைக்கணும்னு சொல்லிட்டு அம்மா வர்றதே இல்ல… அதனால மேல படிக்கறதைப் பத்தி யோசிக்காம அம்மாக்கு ரெஸ்ட் கொடுக்கறதைப் பத்தி யோசி…” என்றாள் பிரபா.
நேற்று இரவு யாழினி உறங்க வருமுன்னே இலக்கியன் அலுப்பில் உறங்கி இருந்தான். எனவே அவர்கள் பேசியதை இவள் சொல்லி இருக்கவில்லை. இப்போது சொல்லவும் அவனும் யோசித்தான்.
“அக்காங்க சொல்லுறதை மீறி அம்மாவும் சம்மதிக்க மாட்டாங்க… உனக்கு வருத்தமா இருக்கா கண்ணம்மா…”
“ப்ச்… பரவால்லங்க… எப்ப படிக்கும்போதே கல்யாணத்தைப் பத்தி பேசத் தொடங்கினாங்களோ அப்பவே என்னோட படிக்கற ஆசை எல்லாம் போயிருச்சு… அக்கா, மதனிங்க பேச்சை மீறி காலேஜ் போனா அவங்களுக்கு என் மேல கோபம் வரும்… அது தேவையில்லாத மனக்கசப்பைத் தரும்… நான் படிக்கலைங்க…” என்றாள் வருத்தத்துடன்.
“சரி, நீ வருத்தப்படாத கண்ணம்மா… அவங்களுக்கும் வருத்தமில்லாம, உனக்கும் சேதாரமில்லாம நான் ஒரு வழி சொல்லறேன்…” என்றவன் சொன்னதைக் கேட்ட யாழினியின் முகம் பிரகாசமானது.
“ஹேய்… சூப்பர், ரொம்ப சந்தோஷங்க…” என்றவள் அவனைப் பின்னிலிருந்து உற்சாகத்துடன் கட்டிக் கொள்ள பைக் சீரான வேகத்துடன் விமானமாய் ரோட்டில் பறக்கத் தொடங்கியது.
மெல்லினமாம் அவள்
சொல்லும் சொற்கள்…
வல்லினமாம் அவள்
காட்டும் காதல்…
இடையினமாம் அவள்
யோசிக்கும் செயல்கள்…
என் நேசத்தின் இலக்கணமாய்
அவள் – என்னவள்…