அத்தியாயம் – 6
“போயி கண்டு பிடி…” கண்ணைப் பொத்தியிருந்த கரத்தை யாழினி விலக்கவும் கண்ணைத் தேய்த்துக் கொண்டே ஒளிந்து கொண்டிருந்தவர்களைக் கண்டு பிடிக்க சென்றாள் இலக்கியனின் அக்கா மகள்.
தினமும் மாலையில் பள்ளி விட்டதும் இலக்கியனின் அக்கா மகள்கள் நான்கு பேரும் பாட்டி வீட்டுக்கு வந்து விடுவார்கள். இப்போது விடுமுறை விடவும் இங்கேயே இருந்தார்கள்.
சின்னவள் ஜாடையில் அத்தையிடம் எங்கே என்று கேட்க கண்ணை வலப்பக்கம் உருட்டி சிக்னல் கொடுத்தாள் யாழினி.
பூனை போல் பம்மிக் கொண்டே சென்றவள், “ஹேய்… கண்டு பிடிச்சுட்டேன்… அக்கா அவுட்டு…” என்று குதூகலித்தாள்.
அப்போது வீட்டுக்குள் நுழைந்த கிருபா எதிரில் வந்த மகள் மீது இடித்துக் கொண்டு முகம் சுளித்தாள்.
“ஏய் பார்த்து விளையாடு… இப்படி தான் ஓடி வர்றதா…” என்றவள் யாழினியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அம்மா எங்கே…” என்று கேட்க, “கிச்சன்ல இருக்காங்க மதனி…” என்றாள் அவள்.
“அம்மாக்கு ஹெல்ப் பண்ணாம நீ சின்னப் புள்ளைங்க கூட விளையாடிட்டு இருக்கியா…” என்று கேட்டுக் கொண்டே அவள் அடுக்களைக்கு செல்ல யாழினி முகம் வாடினாள்.
“நான் மட்டும் சின்னப் புள்ள இல்லாம அறுபது வயசுக் கிழவியா…” என மனதுக்குள் சிலிர்த்துக் கொண்டு, “நீங்களே விளையாடுங்க… எனக்கு வேலை இருக்கு…” என்று சொல்ல, “அத்த, வாங்க அத்த… நீங்களும் வந்தா தான் ஜாலியா இருக்கும்…” என்றாள் சின்னவள்.
“இல்ல, அம்மா திட்டுவாங்க… நான் போறேன்… நீங்க விளையாடுங்க…” சொல்லிவிட்டு அடுக்களைக்கு செல்ல அங்கே கிருபா அன்னையிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“ஏன்மா, இத்தன பேருக்கும் நீ தனியா சமைச்சுட்டு இருக்க… உனக்கு ஒத்தாசையா இருக்கணும்னு தான தம்பிக்கு சீக்கிரம் கல்யாணத்துக்குப் பார்த்தோம்… இப்ப அவ அங்க விளையாடிட்டு இருக்கா… நீ தனியா செய்துட்டு இருக்க…”
“ப்ச்… விடுமா, அவளும் சின்னப் புள்ள தான… வீட்டுல சமையல் தவிர எல்லா வேலையும் அவ செய்துட்டு தான் இருக்கா… நான்தான் புள்ளைங்க கூட விளையாடுன்னு அனுப்பி விட்டேன்…”
“என்னம்மா நீ, விவரம் தெரியாத ஆளா இருக்க… இப்பவே மருமகளை அடக்கி ஒதுக்கி அதிகாரத்தை உன் கைல வச்சுகிட்டா தான் உண்டு… அப்புறம் நாளைக்கு அவ எதுவும் செய்யாம கால் மேல கால் போட்டு உக்கார்ந்துக்குவா… நீதான் எல்லா வேலையும் செய்துட்டு வேலைக்காரி மாதிரி இருக்கணும்…” தனது நாத்தனார் (நாரதர்) வேலையை சரியாய் செய்து கொண்டிருந்தாள் கிருபா. அடுக்களைக்கு வந்த யாழினியின் காதில் இது எல்லாம் விழவும் திகைத்து அப்படியே நின்று விட்டாள்.
அவள் வருவதை கவனித்து விட்ட பர்வதம் மகளிடம் கண்ணால் ஜாடை காட்டி, “நீ போயி ஹால்ல உக்காரு கிருபா… யாழினி கிட்ட காப்பிய குடுத்து விடறேன்…” என்று பேச்சை மாற்ற யாழினியின் முகத்தில் எதுவும் கேட்ட பாவம் இருக்கிறதா என்று உன்னிப்பாய் நோக்கிக் கொண்டே ஹாலுக்கு சென்றாள் கிருபா.
யாழினி எதையும் காட்டிக் கொள்ளாமல் அத்தையிடம் சென்றவள், “அத்தை, நானே சமைக்கறேன்… என்ன அளவு எப்படின்னு மட்டும் நீங்க அங்கிருந்து சொல்லிக் கொடுத்தா போதும்…” என்றவள் பாலை அடுப்பில் வைத்து காபி கலந்தவள் அத்தையிடம் கொடுத்து, “இதை மதனிக்கு கொடுத்துட்டு நீங்களும் குடிங்க அத்தை…” என்று சொல்ல,
“சரிம்மா… உலை கொதிச்சதும் அரிசியைப் போட்டிரு… சாம்பாருக்கு காய் நறுக்கி வச்சிருக்கேன்… பொரியலுக்கு மட்டும் கோஸ் அறிஞ்சுக்க…” என்று சொல்லி மகளிடம் சென்று அமர்ந்து கொண்டார் பர்வதம். கிருபா அன்னையுடன் பேசியது யாழினியின் மனதில் நீற்றலாய் உறுத்தியது.
அன்று இரவு தனிமையில் கணவனிடம் இதைப் பற்றி சொல்ல, “இதுக்கெல்லாம் நான் போயி கேட்டா வேற மாதிரி ஆகிரும்… அதனால நீயே சரி பண்ணிக்க…” என்று அவன் சொல்லவும் அவள் முகம் வாடிப் போனது.
“இதுக்கா நான் உங்ககிட்ட சொன்னேன்… என்ன இருந்தாலும் உங்க அக்காவை விட்டுக் கொடுப்பிங்களா…”
“அது அப்படி இல்ல மா… சின்னச் சின்ன விஷயத்துக்கு எல்லாம் நான் போயி கேக்கக் தொடங்கினா அப்புறம் உன்னை எதிரி போல தான் பார்ப்பாங்க… அதென்னவோ, கல்யாணமாகி மருமகன்னு ஒருத்தி வீட்டுக்கு வந்துட்டாலே இந்த மகள்களுக்கு எல்லாம் மனசுல ஒரு பதட்டம் வந்திருது… எங்க தனக்குன்னு உள்ள உரிமையும், அதிகாரமும் இல்லாமப் போயிடுமோ… அம்மாவை அவ கைக்குள்ள போட்டுக்கிட்டு நமக்கு மரியாதை இல்லாமப் பண்ணிருவாளோ… இப்படில்லாம் யோசிச்சு குழப்பிக்கறாங்க, அதான் அக்காவும் இப்படிப் பேசிருக்கா… மத்தபடி அவ அப்படி மோசம் எல்லாம் இல்லை கண்ணம்மா…”
“அதுக்காக இப்படியா சொல்லுவாங்க… நான் என்ன அத்தையை வேலைக்காரி போல ஆக்கிருவேனா…” அவள் பிள்ளை மனம் சமாதானம் ஆகாமல் முரண்டு பிடித்தது.
“என்ன கண்ணம்மா, இவ்ளோ சொல்லறேன் புரிஞ்சுக்கலனா எப்படி… ஆம்பளைங்க நாங்க வேலைக்குன்னு நாலு இடத்துக்குப் போறோம் வர்றோம், பல டென்ஷன் இருக்கும்… அதைப் புரிஞ்சுக்காம வீட்டுல உள்ளவங்களும் இப்படி சின்ன விஷயத்தைக் கூட பெருசா சொல்லி டென்ஷன் பண்ணினா எப்படி…” அவன் எரிச்சலுடன் சொல்லிவிட்டு எழுந்து பாத்ரூம் செல்ல இவளுக்கு கஷ்டமாய் இருந்தது.
“ஒருவேளை, நாம தான் சின்ன விஷயத்தை இவர்கிட்ட சொல்லி பெரிசா கவலைப்பட்டுட்டு இருக்கமோ…” என நினைத்துக் கொண்டாள் யாழினி.
யோசனையுடன் அமர்ந்திருந்தவளின் அருகில் அமர்ந்தவன் அவள் முகத்தை நிமிர்த்த அவன் தோளில் சாய்ந்து கொண்டவளை அணைத்துக் கொண்டான் இலக்கியன்.
“இங்க பாருங்க, விஷயம் சிறுசோ, பெருசோ… அதைப் பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்ல… என்னைப் பொறுத்த வரைக்கும் இதுக்கு முன்னாடி எது நடந்தாலும் என் அம்மாகிட்ட சொல்லிடுவேன்… ஆனா புகுந்த வீட்டு விஷயத்தை அவங்க கிட்ட சொன்னா தேவையில்லாம கவலைப் படுவாங்க… அதனால இனி எது நடந்தாலும் நான் உங்க கிட்ட தான் சொல்லுவேன்… நீங்க கேட்டாக் கேளுங்க… கேக்கலன்னா போங்க… ஆனா நான் சொல்லுறதை சொல்லத்தான் செய்வேன்…” வம்படியாய் பேசியவளை அவனுக்கு மிகவும் பிடித்தது.
“சரிடி, என் வாயாடி… இதுக்கு மேல பேசினா அந்த வாயிலயே கடிச்சு வச்சிருவேன்… சொல்லிட்டேன்…”
“ஹூக்கும்… தோணும் போதெல்லாம் கடிக்க அதென்ன கம்மர் கட்டா… அன்னைக்கு கடிச்சதே காயமாகிட்டு அடுத்த நாள் கேள்வி கேக்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியாம நான் எப்படி முழிச்சேன் தெரியுமா…” கண்ணை உருட்டிக் கொண்டு நாணத்துடன் அவள் சொல்ல வெகுவாய் ரசித்தான்.
“ஏன்… சொல்ல வேண்டியது தான… என் புருஷன் ஆரஞ்சு சுளைன்னு நினைச்சு என் உதட்டுல ஜூஸ் எடுக்க டிரை பண்ணார்னு…” சிரிப்புடன் சொன்னவனை முறைத்தாள்.
“ச்சீ போங்க, இப்படியா கொஞ்சம் கூட வெக்கமில்லாமப் பேசுவாங்க…” அவன் நெஞ்சில் செல்லமாய் குத்தினாள்.
“அடியே, புருஷன் கிட்ட பொண்டாட்டியும், பொண்டாட்டி கிட்ட புருஷனும் கூச்ச நாச்சம் பார்த்து வெக்கப்பட்டுட்டு இருந்தா வேலைக்காகாது… வா, வா… கரண்டு பில்லு அதிகம் ஆயிடப் போகுது… லைட்டை ஆப் பண்ணுவோம்…” சொல்லியவன் லைட்டை அணைத்துவிட்டு அவளையும் அணைத்துக் கொள்ள அவனுள் அடங்கிப் போனாள்.
நாட்கள் அழகாய் நகர யாழினி அழகாய் அந்த வீட்டில் பொருந்திக் கொண்டாள். சமையல் வேலை எதுவும் தெரியாமல் இருந்தவள் இப்போது அத்தையின் உதவியால் அந்த வீட்டில் உள்ளவர்களின் விருப்பம் போல் நன்றாய் சமைக்கக் கற்றுக் கொண்டிருந்தாள்.
அன்று இலக்கியனின் தந்தைக்கு வருடாந்திரம் சாமி கும்பிட அனைவரும் வீட்டில் கூடி இருந்தனர்.
மூன்று மகள்களும் குடும்பத்துடன் காலையிலேயே வந்து விட்டனர். இலக்கியனின் மூத்த அண்ணி, அண்ணனும் வந்து விட்டிருந்தனர். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்… இலக்கியனின் மூத்த அக்காவுக்கு இரண்டு மகள்கள், நடு அக்காவுக்கும், சின்ன அக்காவுக்கும் ஒரு மகள்… அந்தக் குடும்பத்தில் யாருக்கும் இதுவரை ஆண் வாரிசே இல்லை.
படைப்பதற்கு விதவிதமாய் பதார்த்தங்கள் தயாராகிக் கொண்டிருக்க வீடே கலவையாய் மணத்தது.
பர்வதம் கணவருக்குப் பிடித்த உணவுகளாய் ஆசையுடன் செய்ய அவருக்கு உதவிக் கொண்டே அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி. மூத்த மருமகள் கவிதாவிடம் வடை சுட சொல்லிவிட்டு இளைய மருமகளிடம் வாழை இலைகளை துடைத்து ரெடியாக்க சொன்ன பர்வதம் ஹாலுக்கு சென்றார்.
இலைகளை நனைந்த துணியால் துடைத்துக் கொண்டிருந்த யாழினியின் மனதுக்குள் எப்போதோ வாசித்த காமெடி ஒன்று நினைவுக்கு வர சட்டென்று சிரித்து விட்டாள்.
அதை கவனித்த மூத்தவள், “என்ன யாழினி, எதுக்கு சிரிக்குற…” என்று கேட்க மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டாள்.
“அக்கா, நவீன நளாயினின்னு போட்டு ஒரு காமெடி ஒண்ணு படிச்சது நினைவு வந்துச்சு… அதான் சிரிச்சேன்…”
“ஓ… என்ன காமெடின்னு சொல்லு, நானும் சிரிக்கறேன்…”
“ஹாஹா… இருக்கற வரைக்கும் புருஷனுக்கு ஒழுங்கா சோறு கூடப் போடாம இருந்துட்டு செத்த பிறகு விதவிதமா, வகை வகையா சமைச்சுப் போடறவ தான் நவீன நளாயினின்னு ஒரு புக்குல படிச்சிருந்தேன்… இப்ப இங்க விதவிதமா ரெடி பண்ணவும் அந்த நினைவு வந்திருச்சு…” எதார்த்தமாய் சொல்ல அவளும் சிரித்தாள்.