Advertisement

“பிகரா…”
“ம்ம்… நான் இன்னைக்கு அழகா இருந்தேனோ, என்னவோ தெரியல… என்னையே சைட் அடிச்சிட்டு இருந்துச்சு…”
“ஓ… நீங்களும் திருப்பி அடிக்க வேண்டியது தான…”
“பின்ன, கிடைச்ச சந்தர்பத்தை விடுவோமா… நானும் நல்லா அவளை சைட் அடிச்சேன்…”
“ம்ம்… இதுல அப்படி ஒண்ணும் சிரிப்பு வரலையே…”
“எனக்கு வருதே… அப்புறம் என்னாச்சு தெரியுமா…” அவன் ஆர்வத்துடன் சொல்ல, “எனக்கு தூக்கம் வருது… நான் தூங்கப் போறேன்… குட் நைட்…” என்றவள் தன் இடத்தில் படுத்துக் கொண்டாள்.
“என்ன கண்ணம்மா, இன்ட்ரஸ்டிங் ஆ சொல்லிட்டு இருக்கும் போது தூக்கம் வருதுன்னு சொல்லற… அவ பேரும் அவளை போலவே அழகா இருக்கும்… என்ன பேரு தெரியுமா…”
“உஸ்ஸ்… எனக்கு எதுவும் கேட்க வேண்டாம்… நான் தூங்கிட்டேன்… சைட்டாம் ல சைட்டு…” என்றவள் கண்ணை இறுக மூடிக் கொள்ள புன்னகையுடன் படுத்தான் இலக்கியன்.
ரிவிஷன் முடிந்து ஸ்டடி லீவ் வரவே இங்கேயே இருந்து விட்டாள். நடுவில் தந்தைக்கு ஆஸ்துமா அதிகமாகி ஆசுபத்திரியில் சேர்த்து தேறியதும் வந்திருந்தார்.
“அம்மா, ராத்திரி எல்லாம் தூங்காம படிச்சிட்டு இருக்கா… அவளை வேலை வாங்காதிங்க…” என்று இலக்கியன் சொல்லி விடவே பர்வதமும் மருமகளைத் தொந்தரவு செய்யவில்லை. இலக்கியனும் அவளை சீண்டாமல் ஒதுங்கி இருக்க நிம்மதியாய் படித்தாள்.
பப்ளிக் எக்ஸாமை நல்லபடியாய் எழுதி முடித்தாள் யாழினி.
இத்தனை நாட்களின் அருகாமை இருவருக்கும் நல்ல புரிதலைக் கொடுத்திருந்தது. சகஜமாய் பேசிக் கொள்ளவும், ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்ளவும் பழகி இருந்தனர்.
“அத்த… இன்னைக்கு நீங்க சொல்லிக் கொடுங்க, நான் சமைக்கறேன்…” என்ற மருமகளை நோக்கிப் புன்னகைத்த பர்வதம், “ம்ம்… சரிம்மா… நீயே செய்…” என்று சொல்லிவிட, உலைக்கு எத்தனை தண்ணீர் வைப்பது என்பதில் இருந்து அரிசி எத்தனை அளவு, எவ்வளவு நேரம் வேக வேண்டும் என்று விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தாள்.
“அத்த, அரிசி வெந்துடுச்சா பாருங்க…” கரண்டியை நீட்ட பார்த்தவர் பக்குவம் சொல்லிக் கொடுத்தார். அடுத்து குழம்பு வைப்பதும் கேட்டு சமைத்தாள். பர்வதம் இருந்த இடத்தில் இருந்தே பொறுமையாய் சொல்லிக் கொடுக்க அவளும் ஒருவிதமாய் செய்து முடித்தாள்.
இரவு சாப்பிட அமர்ந்த அண்ணன் தம்பி இருவரும் “அம்மா உங்க சமையல் போலவே இருக்கு… ஆனா கொஞ்சம் வித்தியாசமான டேஸ்ட்டா இருக்கு…” என்று குற்றம் சொல்லாமல் சாப்பிட சந்தோஷமாய் உணர்ந்தாள் யாழினி.
வேலை முடிந்து இலக்கியனுக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்ல இலக்கியன் இவளைக் கண்டதும் புன்னகைத்தான்.
“இன்னிக்கு நீதான் சமையலா… நல்லா இருந்துச்சு…”
“ம்ம்… தேங்க்ஸ்…” சொல்லிக்கொண்டே பால் கிளாஸை நீட்டியவள், “அதை அத்த முன்னாடி சொன்னா என்ன குறைஞ்சா போயிருவிங்க…” மனதுக்குள் கேட்டு கொண்டாள்.
அவள் பாத்ரூம் சென்று வந்து கீழே பாய் விரிக்கவும்  இலக்கியன் கேட்டான்.
“கண்ணம்மா, அதான் எக்ஸாம் எல்லாம் முடிஞ்சிருச்சே…”
“ஆமா முடிஞ்சிருச்சு, அதுக்கென்ன…” என்றவள் படுக்கையை விரித்துக் கொண்டே புரியாமல் கேட்டாள்.
“இனியும் நீ கீழ தான் படுக்கணுமா…” என்றவனின் குரலில் இருந்த தவிப்பும், ஆர்வமும் அவளுக்கு திகிலைக் கிளப்ப தலையைக் குனிந்தபடி பேசாமல் நின்றாள் யாழினி.
கல்யாணம் முடிந்த அன்று இலக்கியன் சொன்னதற்காய் கட்டிலில் படுத்தவள் மூன்றாவது நாளே கீழே படுக்கத் தொடங்கி இருந்தாள். முதல் நாள் உறக்கம் வராமல் தவித்தவள் விடியலில் உறங்கி இருக்க அன்று பிரச்சனை இல்லை… ஆனால் அடுத்த நாளே ஒன்றாய் கட்டிலில் படுப்பது சரியில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.
இலக்கியன் நல்ல பிள்ளையாய் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் படுத்த இடத்தில் அப்படியே அசையாமல் படுத்துக் கிடந்தான். ஆனால் யாழினி அப்படி இல்லை. அக்காக்களின் மீது காலைப் போட்டுக் கொண்டு உறங்கிப் பழகியவள் நடுவில் வைத்திருந்த தலையணையை ஓரங்கட்டிவிட்டு அவன் மீது காலைப் போட்டுக் கொண்டு முதுகில் ஒட்டிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.
காலையில் வழக்கம் போல் முதலில் உணர்ந்த இலக்கியன், தன் முதுகை ஒட்டிக் கொண்டு இடுப்பில் கை போட்டுத் தன் மீது கால் போட்டபடி உறங்கும் மனைவியைக் கண்டு திகைத்தான். அவனது அசைவில் உணர்ந்து கொண்டவள் தான் படுத்திருக்கும் நிலையைக் கண்டதும் அதிர்ந்து எழுந்து கொண்டாள்.
“சாரி, தூக்கத்துல தெரியாம…” தவிப்புடன் சொன்னவளைக் கண்டு புன்னகைத்தவன், “ஹேய் கண்ணம்மா, எதுக்கு இவ்வளவு பதட்டம்… நீ என் மேல கை, காலைப் போட்டுப் படுக்கறதுல எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை…” என்றவன் கண்ணை சிமிட்டி,
“ஜாலியா தான் இருந்துச்சு… இனி இப்படியே படுத்துக்கலாமா…” என்று கேட்க, தன்னைத் தானே நொந்து கொண்டு உதட்டைக் கடித்தவள், “ஹூம்… இருக்கும், இருக்கும்… இனி நான் கீழயே படுத்துக்கறேன்…” என்று கடுப்புடன் சொன்னவள் அன்றே அதை பாலோ செய்யவும் தொடங்கி விட்டாள்.
அவள் எதுவும் சொல்லாமல் அப்படியே நிற்பதைக் கண்ட இலக்கியன் எழுந்து அவள் கையைப் பற்றினான்.
அவள் தயக்கத்துடன் அவனை நிமிர்ந்து நோக்க, “என்ன கண்ணம்மா, உனக்கு விருப்பம் இல்லையா…” என்று கேட்க, குனிந்து கொண்டவள், “பயமாருக்கு…” என்றாள்.
அவள் கையைப் பிடித்து கட்டிலில் அமர்த்தி அருகே அமர்ந்தான் இலக்கியன். இருவரும் அருகருகே அமர்ந்திருக்க அவளுக்கு படபடப்பில் உடல் நடுங்க அவள் கரத்தை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்ட இலக்கியன், “பயப்படாத கண்ணம்மா… உன் சம்மதம் இல்லாம எதுவும் பண்ண மாட்டேன்…” என்றதும் தான் சற்று தெளிந்தாள்.
“சரி, நீதான் பெரிய படிப்பாளி ஆச்சே… நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு…” என்றதும் நிமிர்ந்தவள், “என்ன கேக்கப் போறீங்க…” என்றாள் ஆர்வத்துடன்.
“தாம்பத்யம்னா என்ன…”
அவனது கேள்வியில் முழித்தவள் என்ன சொல்லுவதென்று புரியாமல் யோசித்தாள். மனதில் சினிமாவில் கண்ட ஹீரோ, ஹீரோயின் அணைத்து முத்தமிட்டுக் கொண்டதும் இரண்டு மலர்கள் முத்தமிட்டு பிணைந்து கொள்வதும், முதலிரவில் ஒருவரை ஒருவர் முத்தமிட்டதும் லைட்டை அணைப்பதும் எல்லாம் வந்து போக, “முத்தம் கொடுத்து, கட்டிப் பிடிச்சாலே குழந்தை வந்திருமோ…” என அதிதீவிர யோசனையில் இருந்தவள் அதை சொல்லலாமா வேண்டாமா என யோசிக்க
அவள் கைகளில் மெல்ல சொடுக்கெடுத்துக் கொண்டே சொல்லத் தொடங்கினான் இலக்கியன்.
“கண்ணம்மா, தாம்பத்தியம்ங்கறது ரெண்டு பேரோட உடம்பு இயங்குறது மட்டுமில்ல… பரஸ்பரம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு தன்னோட இணையை மகிழ்விக்கணும்ங்கற உந்துதல் ரெண்டு பேருக்குமே இருக்கணும்… என்னைப் பொறுத்த வரைக்கும் வாழ்க்கைத் துணைக்கு அளிக்கக் கூடிய மிகப் பெரிய பரிசு தாம்பத்ய ரீதியா ஒழுக்கமா இருக்கறது தான்… என்னை அந்த விதத்தில் நீ பரிபூரணமா நம்பலாம்… உனக்கு எப்ப இதில் விருப்பமோ அப்ப நாம ஒண்ணு சேர்ந்தாப் போதும்… என்ன, அதுவரைக்கும் பக்கத்துல உன்னை வச்சுட்டே மனசுக்குள்ள ஆசையை மறைச்சு வச்சிட்டு கையைக் காலை அடக்கிட்டு ரொம்ப நல்லவனா நடிக்கணும்… இந்த நல்லவன் வேஷம் போடறது எல்லாம் எவ்ளோ கஷ்டம் தெரியுமா…” அவன் பாவமாய் பாவனையோடு சொல்லவும் “ஹாஹா…” என்று தன்னை மறந்து சிரித்து விட்டாள் அவனது கண்ணம்மா.
அவள் சிரிப்பதையே கண்ணெடுக்காமல் பார்த்து இருந்தவன், “கண்ணம்மா, அவசரமா நான் ஒரு தப்பு பண்ண போறேன்… நம்ம டீல் பிரகாரம் நீ என்னை தண்டிச்சாலும் பரவால்ல…” என்றவன் சட்டென்று அவளைத் தன்னருகில் இழுத்து அவள் சிரிக்கும் இதழ்களைத் தன் வலிய இதழ்களுக்குள் அடக்க முயல முதலில் அதிர்ந்து, திகைத்து, நடுங்கியவள் மெல்ல அந்த முதல் முத்தத்துக்குள் மூழ்கிப் போய் கண்களை மூட அவள் இதழ்த் தடங்களில் தனது வரவின் முத்திரையை அழுத்தமாய் பதித்துக் கொண்டிருந்தான் முத்தக் கள்வன். 
தன்னை உரசி நின்ற அவளது தேகத்தில் நடுக்கத்தை உணர்ந்து மெல்ல விடுவித்தான் இலக்கியன்.
அப்போதும் கண்ணைத் திறக்காமல் கிறக்கமாய் கண்களை மூடிக் கொண்டிருந்தவளின் இமைகளில் மெல்ல முத்தமிட அவன் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் யாழினி.
அவள் தேகமென்னும் மெல்லிய யாழை இயக்க அந்த சம்மதமே போதுமாயிருக்க இலக்கியத்தை தன் இணைக்கு சொல்லிக் கொடுக்க முன்னேறினான் அவன்.
மலரினும் மெல்லியவள் அவள்
மகரந்த மணம் கொண்டவள்…
தொட்டாலே சிலிர்த்துக் கொள்ளும்
தொட்டாற்சிணுங்கி அவள்…
கவிதைகளைத் தனக்குள் கொண்ட
காவியப் பெண்ணவள்…
அவள் என்னவள்…

Advertisement