Advertisement

அத்தியாயம் – 5
திங்கள் கிழமை.
யாழினி அவசரமாய் ஸ்கூலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்க இலக்கியனும், தம்பியும் கடையின் வரவு, செலவுக் கணக்கை சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.
“அத்த… நான் கிளம்பறேன்…”
“ஒரு வாய் சாப்பிட்டுப் போ மா… வெறும் வயித்தோட கிளம்பற…” உண்மையான அக்கறையோடு பர்வதம் சொல்ல,
“நேரமாச்சு அத்த… பிராக்டிகல் எக்ஸாம் இருக்கு…”
“என்னவோ இருக்கட்டும்… நீ சாப்பிடு… உன் புருஷன் வண்டில கூட்டிட்டுப் போயி விடுவான்…
“அம்மா, எனக்கு முக்கியமான வேலை இருக்கு… கோவில் திருவிழாக்கு கட் அவுட்டுக்கு லைட் போடறது விஷயமா பேச வர சொல்லிருக்காங்க… இப்ப கிளம்பிருவேன்…” என்றான் இலக்கியன்.
“ஹூக்கும், அடுத்த மாசம் வர்ற திருவிழாக்கு இவங்க என்னமோ இன்னைக்கே லைட்டு போடற மாதிரி… ரொம்ப தான் பிகு பண்ணுறார்…” என நினைத்தபடி யாழினி கணவனைப் பார்க்க அவனுக்கு கஷ்டமாய் இருந்தது.
“அதை உன் தம்பி போயி பேசிட்டு வரட்டும்… நீ என் மருமகளை கூட்டிப் போயி ஸ்கூல்ல விடு…” அன்னை சொல்லவும், “சரிம்மா…” என்றவன் யாழினியைப் பார்க்க அவள் முகம் யோசனையைக் காட்டியது.
அத்தை சொன்னது போல் வேகமாய் ரெண்டு இட்லியை எடுத்து வாய்க்குள் திணித்துக் கொண்டு தண்ணியைக் குடித்து இறக்கியவள் பாகுடன் கிளம்ப இலக்கியன் வண்டியை எடுத்தான். உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு பின் தொடர்ந்த யாழினி அமைதியாய் பின்னில் ஏறி அமர்ந்து கொள்ள கிளம்பினர்.
பள்ளிக்கு செல்லும் சின்னப் பெண் என்பதால் பர்வதம் அனுசரணையாக மருமகளைப் பார்த்துக் கொண்டார். அவளுக்கு சமையல் எதுவும் தெரியாது என்பதால் மற்ற மேல் வேலைகளை மட்டும் செய்ய சொல்லுவார்.
திங்கள் அன்று இங்கிருந்து கிளம்பினால் அன்னையின் வீட்டிலேயே இருந்துவிட்டு வெள்ளி மாலை மீண்டும் இங்கே வருவது என வழக்கம் ஆக்கி இருந்தாள். அவளுக்கு அம்மா வீடு பக்கம் என்பதால் இலக்கியன் அன்னையிடம் சொல்லி அதற்கான அனுமதியை வாங்கிக் கொடுத்திருந்தான்.
“கண்ணம்மா, ஏன் இவ்வளவு தள்ளி உக்கார்ந்திருக்க… விழுந்துடாம என்னை நல்லாப் பிடிச்சு உக்காரு…”
“ம்ம்… போதும், போதும்… உங்க கூட வர்றதைப் பார்த்தாலே என் பிரண்ட்ஸ் எல்லாம் ரொம்ப ஓட்டுவாளுங்க… என்னை ஸ்கூலுக்கு கொஞ்சம் முன்னாடியே இறக்கி விட்டிருங்க…
“ஹாஹா… அதுக்காகவா இப்படித் தள்ளி உக்கார்ந்திருக்கே…”
“ஹூக்கும், உங்களுக்கு சிரிப்பு… என்னை எப்படி எல்லாம் கிண்டல் பண்ணுறாங்க தெரியுமா… எனக்கு கிளாஸ் எடுக்கற மிஸ்ஸுக்கு கூட இன்னும் கல்யாணம் ஆகல… படிக்கிற எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு நக்கலடிக்குறாங்க…”
“அதுக்கு இனி என்ன பண்ண முடியும்… யாருக்கு எப்ப யோகமோ அப்படி தான நடக்கும்…”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல… நீங்க அவசரமா கல்யாணம் பண்ணதால தான சொல்லுறாங்க…” என்றவளைக் குழந்தை போலவே தோன்றியது அவனுக்கு.
“அப்படின்னா ஸ்கூலுக்குப் போக வேண்டாம்… நிறுத்திடு…” அவன் கூலாக பதில் சொல்லவும் அதிர்ந்தாள்.
“என்னது, ஸ்கூலை நிறுத்துறதா…”
“பின்ன, இதும் முடியாது… அதும் முடியாதுன்னா, எதாச்சும் ஒண்ணு அட்ஜஸ்ட் பண்ணி தான ஆகணும்…”
“ஆத்தி, முதலுக்கே மோசமாப் போயிடும் போலருக்கே…” என நினைத்தவள் வாயை மூடிக் கொள்ள இலக்கியன் பொங்கி வந்த புன்னகையை அடக்கிக் கொண்டான்.
“சாயந்திரம் உன் வீட்டுக்குப் போறியா… நம்ம வீட்டுக்கு வர்றியா…” என்றவன் அவளது வீடு எது என்பதை அழுத்தமாய் மனதில் பதிய வைக்க முயன்றான்.
“அங்க வந்தா உங்க அக்கா பிள்ளைங்க எல்லாரும் சாயந்திரம் ஸ்கூல் விட்டு வந்துடறாங்க… என்னால சரியாப் படிக்க முடியல… நான் எங்க வூட்டுக்கே போறேன்… கொஞ்சம் வேகமாப் போங்க… டைம் ஆகுது…”
“ஹூம்… இப்படி சொல்லியே எஸ்கேப் ஆவறாளே…” என நினைத்தபடி வேகமாய் வண்டியை விட்டான்.
ஸ்கூல் முன்பு தோழியர் யாரும் தன்னைப் பார்க்கிறார்களா என சுற்றிலும் பார்த்துக் கொண்டே யாழினி இறங்க புன்னகையுடன் கிளம்பினான் இலக்கியன்.
மாலையில் வீடு வந்த மகளை நோக்கிப் புன்னகைத்த வசந்தா, “காபி தரட்டுமா கண்ணம்மா…” என்று கேட்க தலையாட்டி விட்டு உள்ளே நுழைந்தாள்.
உடை மாற்றி வந்தவளிடம் காபியை நீட்டிக் கொண்டே, “அப்புறம் கண்ணம்மா… உன் புகுந்த வீட்டுல எல்லாரும் எப்படி நடந்துக்கறாங்க…” என்றார் வசந்தா.
“எல்லாரையும் போல அவங்க வீட்டுலயும் கால்ல தான் நடக்குறாங்க மா…” முன்னர் எல்லாம் இவள் இப்படிப் பேசினால் முறைக்கும் அன்னை இப்போது சிரித்தார்.
“கல்யாணமாகியும் சின்னப் புள்ள மாதிரியே எடக்கு மடக்கா பேசிட்டு இருக்க… அங்கயும் இப்படி தானா…”
“சின்னப்புள்ளைக்கு தான கல்யாணத்தப் பண்ணி வச்சிங்க… அப்புறம் பெரிய புள்ள போலவா பேசுவேன்…”
அவள் சொல்லும்போதே இருமியபடி உள்ளே வந்தார் தந்தை.
“கண்ணம்மா… எப்படா வந்த…” மகளிடம் கேட்டுக் கொண்டே கையில் இருந்த பையை மனைவியிடம் நீட்டினார்.
“என்னங்க, ரொம்ப இருமறீங்க… டாக்டர் கிட்ட போனிங்களா, இல்லையா…” என்றார் கவலையுடன்.
“போனேன்… போனேன்…” சொல்லும்போதே இருமிய தந்தையைக் காண யாழினிக்கு பாவமாய் இருந்தது.
“என்னப்பா, இப்படி இருமறீங்க… டாக்டர் என்ன சொன்னார்…”
“அவர் என்ன சொல்லுவார்… செக் பண்ணி மருந்து மாத்திரைன்னு எழுதி செலவு வச்சிட்டு வீட்ல ரெஸ்ட் எடுங்க… ஹோட்டல் போகாதீங்கன்னு சொல்லுறார்…”
“அப்ப நீங்க வீட்லயே இருங்கப்பா…”
“ஹூம், அதெப்படி முடியும்… இன்னும் உனக்கும், உன் அக்காக்கும் செய்ய வேண்டியது எவ்ளோ இருக்கு… நான் வீட்ல இருந்தா சம்பாத்தியம் வருமா…”
“அதுக்காக முடியாம கஷ்டப்படுவிங்களா…”
“யாருக்கு தான் மா கஷ்டமில்ல… எப்படியோ உன்னையும் நல்ல இடத்துக்கு கட்டிக் கொடுத்துட்டேன்… அந்த நிம்மதி தான் என்னைப் படுக்கப் போடாம நடக்க வச்சிருக்கு…” அவர் சொல்லிவிட்டு உள்ளே செல்ல கவலையுடன் பார்த்து நின்றனர் வசந்தாவும் யாழினியும்.
“அம்மா, அப்பாக்கு நீங்க சொல்லக் கூடாதா…”
“என்னன்னு மா சொல்லுவேன்… மூணு பசங்களைப் பெத்து நல்லபடியா வளர்த்து கட்டிக் கொடுத்து அவங்களா வாழ ஆரம்பிச்சதும் நாங்க எல்லாம் பாரமா போயிட்டோம்… வந்த மருமகளுங்களுக்கு நாங்க வேண்டாம்… அப்பாக்கு முன்னப் போல முடியல… எதுவும் ஆயிட்டா, பொண்ணுங்க உங்களை அப்படியே விட முடியுமா… அதான் படிக்கும் போதே பரவால்லன்னு நல்ல சம்மந்தம் வரவும் கட்டிக் கொடுத்தோம்… நீ அது புரியாம இப்பவும் எங்க மேல கோபமா இருக்க…” என்றவரின் கண்கள் கலங்கியிருந்தது.
இதுவரை அதிகாரமாய் மட்டுமே கேட்டிருந்த அன்னையின் குரலில் ஒலித்த கலக்கம் அவளை வருத்த அமைதியாய் நின்றாள் யாழினி.
மகளின் அருகில் வந்து அவள் தலையை தடவி கொடுத்த வசந்தா அமைதியாய் கூறினார்.
“கண்ணம்மா, எங்களுக்கு எதுவும் ஆகிட்டா உங்க அண்ணனுங்க எதுவும் பண்ண மாட்டாங்க… உங்களுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்துட்டா நாங்க நிம்மதியா கண்ண மூடுவோம்னு தான் பண்ணோம்… உனக்கு விருப்பம் இல்லேன்னாலும் உன் எதிர்காலம் நல்லாருக்கணும்னு தான் பண்ணேன் டா… அம்மா மேல கோபமா…” என்றார்.
“அச்சோ அம்மா, அப்படில்லாம் இல்ல… எப்ப இருந்தாலும் நானும் கல்யாணம் பண்ணிட்டு வேற வீட்டுக்குப் போக வேண்டியவ தானே… படிக்கணும்னு நினைச்சவளைக் கல்யாணம் பண்ணி வச்ச கோபம் தான்… மத்தபடி வேற ஒண்ணும் இல்ல…” என்றாள் அவரது வருத்தம் தாங்காமல்.
“ம்ம்… ஏட்டுப் படிப்பை விட வாழ்க்கை நிறைய கத்துக் கொடுக்கும் மா… நாங்க எல்லாம் அதைப் படிச்சு வந்தவங்க… மாப்பிள்ளை ரொம்ப தன்மையாப் பழகறாரு… அவரு மனசு புரிஞ்சு பக்குவமா நடந்துக்க… படிக்க முடியலன்னு கிடைச்ச வாழ்க்கையை வாழாம வருத்தப்படாத…” சொல்லிவிட்டு சென்ற அன்னையை யோசனையுடன் பார்த்தாள்.
“அம்மா ஏன் இப்படி சொல்லணும்…” யோசித்தாள்.
நாட்கள் அழகாய் நகர கிருபா மதனியின் மகளின் விசேஷம் நல்லபடியாய் முடிந்தது. இவளும் அத்தை முறைக்கு இலக்கியனுடன் ஜோடியாய் நிற்கையில் சந்தோஷமாய் உணர்ந்தாள். அவன் வேறு அடிக்கொரு முறை இவளை அழைத்து உறவினரை அறிமுகப்படுத்தவும், வேறு ஏதாவது சொல்லவுமாய் இருந்தான். அவனது விழிகளில் தெரிந்த ஆர்வம் சந்தோஷத்தைக் கொடுத்தது. வெள்ளை வேட்டி சட்டையில் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தவனை தனை அறியாமலே சைட் அடித்துக் கொண்டிருந்தாள் யாழினி.
விசேஷம் முடிந்து வீட்டுக்கு வந்தவள் சின்னதாய் குளியல் போட்டு உடை மாற்றி நைட்டியைப் போட்டுக் கொண்டு வர உடை மாற்றாமல் சலிப்புடன் அப்படியே கண்ணை மூடிப் படுத்துக் கிடந்தான் இலக்கியன்.
“என்னங்க, எழுந்திருங்க, டிரஸ் மாத்திட்டுப் படுங்க…” அவனைத் தட்டி எழுப்ப எழுந்து கொண்டான். உடை மாற்றி அவனும் குளித்து வர இதமான சூட்டோடு பாலைக் கொண்டு வந்து கொடுக்க புன்னகையுடன் வாங்கிக் கொண்டான்.
“எதுக்கு சிரிப்பு…”
“அது… ஒரு விஷயம் நினைச்சேன்… சிரிச்சேன்…”
“அப்படி என்ன நினைச்சீங்க…”
“அது என்னன்னா…” என்றவன் நிறுத்திவிட்டு, “இல்ல வேணாம் விடு…” என்றான் பிகுவுடன்.
“சொன்னா நாங்களும் சிரிப்போம்ல… சொல்லுங்க…”
“சரி சொல்லறேன்… தப்பா எடுத்துக்காத… இன்னைக்கு மண்டபத்துல ஒரு செம பிகரு…” அவன் சொல்லவும் அவள் முகம் அஷ்ட கோணலாய் போனது.

Advertisement