Advertisement

“எந்த சூழ்நிலையிலும் என்னை விட்டுக் கொடுக்காம, எங்கேயும் என் கவனம் சிதறிப் போகாம, அழகான ஒரு நேசக் கூட்டை அமைச்சுக் கொடுத்தது நீ தான்… அதுக்கு நான் வேலியா இருந்தேன் அவ்ளோ தான் கண்ணம்மா…”
“ஹூக்கும், போங்க மா… எனக்கு ஒரு தாயா, தகப்பனா, நல்ல தோழனா உணர வச்சீங்க… நீங்க மட்டும் என் வாழ்க்கைல வராம இருந்திருந்தா நானும் ஒரு போராட்டமான வாழ்க்கையை தான வாழ்ந்திருப்பேன்.. அந்தக் கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்…”
“ஏன் நீ மட்டும் உன்னை என் அம்மாவா, அப்பாவா, சில நேரம் மகளா உணர வைக்கலையா… நேசம் எத்தனை கொடுத்தேனோ அதை இரட்டிப்பாக்கி எனக்கு அழகான குடும்பத்தை அமைச்சுக் கொடுக்கலியா… நான் ஒரு வட்டப் பூஜியம்டி… எனக்கு முன்னாடி நீ இருந்ததால தான் என்னால எல்லாம் நிறைவா செய்ய முடிஞ்சது… நீ என் வாழ்க்கைல வரலேன்னா நான் ஒரு பூஜ்யமா தான் இருந்திருப்பேன்… நீ என் வாழ்க்கைல வந்த வரம்டி…”
“பாசமும், பாசியும் ஒரு போல தான் மா… ரெண்டிலும் வழுக்காம வாழ்க்கையைக் கடக்கறது ரொம்பக் கஷ்டம்… உங்க கையைப் பிடிச்சுட்டு எந்தப் பக்கமும் திரும்பாம அழகா கடந்து வந்துட்டேன்…” என்றவள் கணவன் நெஞ்சில் நெகிழ்வுடன் சாய்ந்து கொண்டாள்.
இருவரும் எதுவும் பேசாமல் அப்படியே அமைதியாய் அமர்ந்திருக்க மனம் இத்தனை வருட தாம்பத்தியத்தை சந்தோஷமாய் மனதுக்குள் ரீவைண்ட் பண்ணிக் பார்த்துக் கொண்டிருக்க நேசம் மட்டுமே நிறைந்திருந்தது.
பத்து வருடங்களுக்குப் பிறகு.
“பாட்டி, தாத்தா உங்களை ரெடியாகிட்டீங்களான்னு கேட்க சொன்னார்…” கேட்ட வெண்பாவின் மகள் வைஷ்ணவியிடம் புன்னகையுடன் திரும்பினாள் யாழினி.
“ரெடியாகிட்டேன் வைஷு செல்லம்… கிளம்பலாம்…” சொல்லிக் கொண்டே கண்ணாடியில் மீண்டும் தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.
அவளுக்குப் பிடித்த மாம்பழ வண்ண மென் பட்டில் அரக்கு பார்டர் போட்ட பட்டு சேலை உடலைத் தழுவி இருக்க, தலை நிறையப் பூவும், கழுத்தில் கணவன் ஆசையுடன் வாங்கிக் கொடுத்த வைர அட்டிகையுமாய் மங்களகரமாய் புறப்பட்டு நின்றாள். இன்று அவர்களின் சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்கு கோவிலுக்கு செல்ல குடும்பமே தயாராகிக் கொண்டிருந்தது. மூக்கின் மீது கம்பீரமாய் அமர்ந்திருந்த மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொண்டு மனதின் நிறைவு முகத்தில் தெரிய புன்னகையுடன் வந்தாள்.
மனைவியைக் கண்டதும் இலக்கியன் முகத்தில் புன்னகை விரிய, “கிளம்பலாமா கண்ணம்மா…” என்றான். தலையில் இருந்த மிச்ச முடிகள் கறுப்பும், வெளுப்புமாய் கலந்து நிற்க, அதே கம்பீரம் குறையாமல் இருந்தான்.
“பாட்டி, நான் உங்க காருல தான் வருவேன்…” ஒன்பது வயது  வைஷு சொல்ல, “பாத்தி, நானும்…” என்றான் வெண்பாவின் மகன் நரேன். அவர்கள் சொன்னதைக் கேட்ட வசீகரனின் இரண்டு வயது மகன் வருணும் அன்னை வர்ஷாவிடமிருந்து பாட்டியிடம் தாவினான்.
“பாத்தி, நானும் உங்க காது…” என்றவனை “வாடா கண்ணா…” என்று கை நீட்டி வாங்கிக் கொண்டாள் யாழினி,
பேரப் பிள்ளைகளுடன் பின் சீட்டில் யாழினி அமர,
“அப்பா உக்காருங்க…” வசீ சொல்ல இலக்கியனும் மனைவி அருகே அமர வசீகரன் காரை எடுத்தான். அவன் அருகே அவனது அழகான காதல் மனைவி வர்ஷா புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.
“அப்பா, என்னோட வொர்க் பண்ணற வர்ஷாவை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு… அப்பா இல்லாத பொண்ணு… ஆனா, ரொம்ப நல்லவ, அவ தான் அம்மாவைப் பார்த்துகிட்டு தம்பியைப் படிக்க வைக்கிறா… உங்களுக்குப் பிடிச்சா நான் அவளை லவ் பண்ணிகிட்டுமா…” ஒரு நாள் தன்னிடம் தயங்கிக் கொண்டே சொன்ன மகனை திகைப்புடன் நோக்கிப் புன்னகைத்தான் இலக்கியன்.
சென்னையில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் நல்ல வேலையில் இருந்தான் வசீகரன். லவ் பண்ணுகிறேன் என்று சொல்லாமல் உங்களுக்குப் பிடித்தால் லவ் பண்ணிக்கிறேன்… என்று சொன்ன மகனின் வார்த்தைகள் வியப்பைக் கொடுக்க விசாரித்ததில் வர்ஷா அவர்கள் வீட்டு மருமகளாய் சந்தோஷமாய் வலது காலை எடுத்து உள்ளே வந்தாள்.
மகன் சொன்ன வார்த்தைக்கு இன்றளவும் பழுதில்லாமல் நல்ல மருமகளாய் இருக்கிறாள். அவளது தம்பி ஹாஸ்டலில் இருக்க அன்னையை உடன் வைத்துக் கொண்டு வேலைக்கும் செல்கிறாள்.
மாதம் ஒரு முறை குழந்தையுடன் இவர்களைக் காண இங்கே வந்துவிடுவதால் இவர்களுக்கும் சந்தோஷமானது. வெண்பாவும் அவர்கள் வரும்போது தனது குடும்பத்துடன் பிறந்த வீட்டுக்கு வர எல்லாரும் ஒன்று கூடுகையில் சந்தோஷமும், கும்மாளமுமாய் இருக்கும்.
இலக்கியன் யாழினியின் மனம் போலவே அவர்களின் பிள்ளைகளுக்கு வந்த புது உறவும் நல்லதாக அமைய எல்லாம் சந்தோஷமாய் போய்க் கொண்டிருந்தது.
வெண்பாவும் அவள் கணவனும் முன்னமே கோவிலுக்கு சென்று பூஜைக்கான ஏற்பாடை கவனித்தனர். அனைவரும் சந்தோஷமான மனநிலையில் காரில் அமர்ந்திருக்க வைஷ்ணவி பாட்டியிடம், “பாட்டி, அறுபதாம் கல்யாணம்னா என்ன…” என்றாள் ஆவலுடன்.
“அது தாத்தாவுக்கு அறுபது வயசு முடிஞ்சு அறுபத்தொன்னு தொடங்குதில்லையா, அதைத்தான் அறுபதாம் கல்யாணம்னு சொல்லுவாங்க…”
“ஓ… இதை எதுக்குப் பண்ணறாங்க… உங்களுக்கு தான் ஆல்ரெடி கல்யாணம் ஆகிருச்சே…” அறிவாய் கேள்வி கேட்ட பேத்தியுடன் அவள் சொல்லப் போகும் பதிலுக்காய் இலக்கியனும், மகன் மருமகளும் அவளை நோக்க, பெருமையாய் கணவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சொல்லத் தொடங்கினாள்.
“இத்தன வருஷமும் தாத்தா நம்ம குடும்பத்துக்கு பணம் சம்பாதிக்கறது, சொத்து சேர்க்கறது, உன் அப்பா அத்தையைப் படிக்க வைக்கறது, கல்யாணம் பண்ணி வைக்கறதுன்னு வேற எதைப் பத்தியும் யோசிக்காம தன்னோட கடமைக்காக ஓடிட்டே இருந்தார் இல்லியா… அவருக்கு ரெஸ்ட் கொடுத்து இனி எங்களுக்காக நீங்க உழைச்சது போதும், கோவில் குளம்னு நிம்மதியா இருங்கன்னு சொல்லி எங்க பிள்ளைங்க எங்களுக்கு ஓய்வு கொடுத்து, அவங்க சந்தோஷத்தைக் காட்டறதுக்கு தான் இந்த மணவிழாவை நடத்துறாங்க…” அவள் உணர்ச்சியுடன் தனக்குத் தெரிந்ததை சொல்லி முடிக்க கேட்டிருந்தவர்கள் திகைப்புடன் பார்த்திருந்தனர்.
சின்னவளான வைஷுவுக்கு முழுமையாய் புரியாவிட்டாலும் ஒருவிதமாய் புரிந்து கொண்டாள்.
“ஓ… அப்ப உங்களுக்கு இனி ரெஸ்ட்னா ரெண்டு பேரும் எங்களோட எப்பவும் விளையாட வருவிங்க தானே…” என்றாள் சந்தோஷத்துடன்.
“ஆமா டா செல்லம், பேரன் பேத்திங்களோட இருக்கறது தான இனி எங்களுக்கு சந்தோஷம்…” என்ற இலக்கியன் பேத்தியை மடியில் தூக்கி வைத்துக் கொண்டான்.
கோவிலில் வெண்பா ஏற்பாடு செய்திருந்த ஹோமம் தொடங்க பூரண கும்பங்களுடன் பூஜை செய்யப்பட்டது. குடும்பத்தில் அனைவரையும் அழைத்திருந்தனர்.
யாழினியின் அக்கா மாலினி முன்போலில்லை. கணவனின் தொழில் கடனாகி முடிந்துவிடும் தருவாயில் யாழினி கொடுத்த பணமே அவர்களின் வாழ்க்கைக்கு வெளிச்சமாக, தன்னையே குறைச்சலாய் உணர்ந்தவள் மாறிப் போனாள்.
மூத்த அக்கா ரூபினி கணவன் இறந்து போக அவளது மகனையும் யாழினி தான் இலக்கியனிடம் சொல்லிப் படிக்க வைத்தாள்.
கவிதாவும் தேவியும் கூட எத்தனையோ மாறிப் போயிருந்தனர். அவர்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்சனை வந்தாலும், நல்லது கெட்டது என்றாலும் இலக்கியனே முன்னில் நிற்க, அவனை மீறி எதுவும் இவர்களால் பேசவோ, செய்யவோ முடியவில்லை. பெரியவர் மருந்தின் உபயத்தில் நடமாடினாலும் வெகுவாய் தளர்ந்திருந்தார். சின்னவன் தேவியை ஒரு பொருட்டாய் மதிக்கவே இல்லை. எதற்கும் அவனுக்கு அண்ணனும் அண்ணியும் தான் என்பதால் நொந்து போன தேவி அடங்கிப் போனாள்.
பூஜை முடிந்ததும், இலக்கியனும், யாழினியும் மாலை மாற்றிக் கொள்ள மனையாளின் கழுத்தில் இரண்டாம் முறையாய் மங்கலம் அணிவித்தான் இலக்கியன். இருவரின் மனதிலும் சந்தோஷமும், நேசமுமே நிறைந்திருந்தது.
தாய் தந்தையரை மணக்கோலத்தில் கண்ட பிள்ளைகள் மனதில் சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்திருந்தது. நிறைவான வாழ்வை வாழ்ந்த மணமக்கள் மீது புனித நீரைத் தெளித்து வணங்கினர்.
“எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க…” காலில் விழுந்து வணங்கிய வெண்பா, நகுலனை வாழ்த்தினர். அடுத்து வசீகரனும், வர்ஷாவும் விழ, பிறகு இளையவர்கள் ஒவ்வொருவராய் அவர்கள் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.
“அண்ணி வாங்க…” என்று பெரியவரின் அருகில் தனை நிறுத்தி காலில் இருவரும் விழுந்து வணங்க கவிதாவுக்கு கண்ணில் நீர் நிறைந்தது. தன்னை குடும்பத்தின் மூத்தவளாய் நினைத்து வணங்கிய அவர்களின் பண்பை நினைத்து சந்தோஷமாய் வாழ்த்தினாள்.
“வாழ்ந்தா இலக்கியன், யாழினி போல வாழனும்…” என்று சொல்லும் வண்ணம் உதாரணமாய் நின்றனர் இருவரும்.
வந்திருந்த அனைவருக்கும் புடவை, மஞ்சள், மாங்கல்யச் சரடு கொடுத்து விருந்து கொடுத்தனர். எல்லாம் முடிந்து அவரவர் வீடு திரும்ப தங்கள் குடும்பத்துடன் வீட்டுக்கு வந்தனர். எல்லாரும் காரிலிருந்து இறங்க, “ஒரு நிமிஷம், எல்லாரும் இங்கயே நில்லுங்க…” என்ற இலக்கியன் வேகமாய் வீட்டுக்குள் செல்ல யாழினி, மகன் மகளை நோக்க அவர்கள் சிரித்தனர்.
“என்ன அத்தை, எதுக்கு மாமா உள்ள ஓடுறாங்க…” புரியாமல் கேட்ட வர்ஷாவிடம்,
“எதுக்கு, திருஷ்டி சுத்தத்தான்… அப்பா, இன்னும் அந்த பழக்கத்தை விடவே இல்லையாம்மா…” என்றான் வசீகரன்.
“ஹாஹா… நீங்க எத்தன வளர்ந்தாலும் அவருக்குப் பிள்ளைகள் தானே…” என்றாள் யாழினி பெருமிதத்துடன்.
கையில் கடுகு, மிளகாய், உப்பு என்று எடுத்துக் கொண்டு வந்த இலக்கியன் எல்லாருக்கும் திருஷ்டி சுற்றிவிட்டு மனைவியை மட்டும் தனியே நிறுத்தி மீண்டும் சுற்ற அனைவரும் திகைத்தனர்.
“இதென்ன மா, இன்னைக்கு எனக்கு ஸ்பெஷலா ஒரு சுத்து…” கேட்ட மனைவியை நோக்கி நேசத்துடன் சிரித்தவன்,
“இன்னைக்கு விழா நாயகி நீதானே… வந்திருந்தவங்க கண்ணெல்லாம் என் பொண்டாட்டி மேல தான்… அதுக்கு தான் எக்ஸ்ட்ராவா சுத்தினேன்…” இலக்கியன் சொல்ல அனைவரும் சிரித்தனர். ஊரே கண்டு பொறாமைப் பட்டாலும், அவர்கள் சிரிப்பைக் கண்டு இயற்கைக்கே பொறாமை வந்தாலும் அந்த குடும்பத்தைக் காக்கும் வேலியாய் அந்த அன்புத் தந்தையின் நேசம் என்றும் அவர்களுடன் இருக்கும்.
காலில் தங்கக் கொலுசுடன் தன்னிடம் வந்து அமர்ந்த மனைவியை நேசத்துடன் நோக்கினான் இலக்கியன். மகள், மகனுக்கே கல்யாணமாகி பேரப் பிள்ளைகள் வந்தபின்பும் அவள் அந்த கொலுசை கழற்றவே இல்லை.
“என் செல்ல பிளாக் சாக்கலேட்…” குரல் தளர்ந்தாலும் அவனது பேச்சில் சற்றும் நேசம் குறையவில்லை. 
“என் செல்ல பிளடி பிஸ்கட்…” சிணுங்கலும் நாணமுமாய் ஒலித்த யாழினியின் குரலில் நேசம் இன்னும் கூடியிருந்தது. இந்த நேசம் என்றும் அவர்களின் காதலுக்கு வேலியாய் இருந்து காக்கும் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுவோம்…
நேசமென்னும் சோலையில்
நீ வேலியாக வந்தாய்…
நெஞ்சமெங்கும் மஞ்சமென
நித்தம் காதல் செய்தாய்…
வருடங்கள் ஆனாலும்
வாழும் இந்த நேசம்…
வயதே தான் ஆனாலும்
வீழ்ந்திடாது நேசம்…
கண்ணுக்குள் ஒளியாய் நீ
கலந்திருப்பாய் நாளும்…

Advertisement