Advertisement

அத்தியாயம் – 22
மரகத வல்லிக்கு
மணக்கோலம்…
என் மங்கள செல்விக்கு
மலர்க் கோலம்…
கண்மணித் தாமரை
கால் கொண்டு நடந்தால்
கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்…
கோலம்… திருக்கோலம்…
“அப்பா…” கண்ணீருடன் தனைக் கட்டிக் கொண்ட மகளை நெகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டான் இலக்கியன். அவனது கண்களில் உருண்டு நின்ற கண்ணீர் வெண்பாவின் தலையில் விழுந்து தெறித்தது.
தன் மடியிலும், மாரிலும், தோளிலும் இட்டு நேசத்தோடு வளர்த்த மகள் வளர்ந்து, பெரியவளாகி இன்று மணமுடித்து புகுந்த வீட்டுக்கு செல்லப் போவது கண்டு சந்தோஷம் தான் என்றாலும் அவளைப் பிரியப் போவதை நினைத்து கண்கள் அனிச்சையாய் கலங்கியது.
“அடடா, அந்தப் பாட்டைக் கொஞ்சம் நிறுத்துங்கப்பா… இல்லாட்டியே இங்க அன்புள்ள அப்பா சீன் தான் ஓடிட்டு இருக்கு… இதுல பாட்டு வேற…” வசீகரன் சத்தமாய் சொல்ல, அனைவரும் சிரித்தனர்.
“டேய் உனக்கென்ன தெரியும், பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்குப் போற பொண்ணோட வலி… சும்மாரு…” மகனை அடக்கினாள் யாழினி. மாம்பழ வண்ணப் பட்டு சேலையில் கரும்பச்சை பார்டர் மின்ன சற்றுப் பூசிய உடல்வாகுடன் அங்கங்கே தலையில் காணத் தொடங்கிய நரையோடு நிறைவான தாயாய் மகளை நோக்கி நின்றாள்.
அவளுக்கு அருகில் தலையில் முடி குறைந்திருந்தாலும் வாழ்க்கையில் நிறைந்திருந்த இலக்கியன் பட்டு வேட்டி சட்டையில் பளபளத்தான். வசீகரன் தந்தையின் மேற்பார்வையில் அக்காவின் கல்யாணத்துக்கு ஓடியாடி எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தான். இளம் வயது இலக்கியன் போல் அரும்பு மீசை குறும்புப் பார்வையுடன் காண்பவர் நெஞ்சை நிறைத்தான்.
“குட்டிம்மா, அழாம சந்தோஷமாக் கிளம்பனும்… நீ கண்ணீரோட புகுந்த வீட்டுக்கு கிளம்பினா அப்பாவால தாங்க முடியாது…” இலக்கியன் தன்னைத் தேற்றிக் கொண்டு மகளுக்கு ஆறுதல் சொல்ல சுவிட்ச் இட்டது போல் அழுகையை நிறுத்தினாள் மகள். அவள் முதுகில் ஆறுதலாய் தட்டிக் கொடுத்த இலக்கியன் கண்ணைத் துடைத்து விட்டான்.
“அப்பா, பார்த்துத் துடைங்க… அக்காவோட மேக்கப் எல்லாம் கலைஞ்சிடப் போகுது…” கிண்டலாய் சொன்ன தம்பியை முறைத்தவள் அடுத்த நிமிடம், “வசீ…” என்று கலங்க,
“அடடா… கண்ணுல மைக்குப் பதிலா கிளிசரின் போட்டுட்டியா, இப்படி அழுதுட்டு இருக்க…” என்றவன் தனது டவலால் அக்காவின் கண்ணைத் துடைத்துவிட்டு,
“எங்களைப் பார்க்கணும்னு தோணுனா மாமாகிட்ட வண்டி எடுக்க சொன்னா ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வந்துடலாம்… இதுக்குப் போயி கலங்கிட்டு… மாமாவைப் பாரு, ஒருவேள நீ வரமாட்டேன்னு சொல்லிடுவியோன்னு பரிதாபமா உன்னைப் பார்த்திட்டு இருக்கார்…” என்று அவளது கணவனையும் விட்டு வைக்காமல் கிண்டல் செய்ய நிமிர்ந்து தன்னவனை நோக்கியவள் புன்னகைத்தாள். வெண்பாவின் கணவன் நகுலன் அழகாய் மனைவியை நோக்கி சிரித்தான்.
“குட்டிம்மா, உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும்…” படிப்பு முடிந்து இரண்டு மாதம் கழிந்து கேட்ட தந்தையிடம், பட்டென்று சொன்னாள் வெண்பா.
“எனக்கு உங்களைப் போல கேரிங்கான மாப்பிள்ளையா பாருங்கப்பா… பணம், படிப்பு எல்லாம் முன்னப் பின்ன இருந்தாலும் பரவால்ல, உறவுகளை நேசிக்கத் தெரிஞ்சவனா இருக்கணும்…” என்ற ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே வைக்க, கேட்ட யாழினி சிரித்தாள்.
“அடியே, உன் அப்பா போல மாப்பிள்ளை எல்லாம் சான்ஸ் கம்மி தான்… போன ஜென்மத்துல நான் பண்ணின புண்ணியமோ, அவரை பிரம்மன் நல்ல மூடுல இருக்கும்போது படைச்சானோ… அந்த அளவுக்கெல்லாம் எதிர்பார்க்காத…” இப்படியொரு கணவன் கிடைத்தது தான் செய்த பாக்கியம் என்பது போல பெருமையுடன் சொல்லிக் கொண்டே கணவனின் தலையில் எண்ணை வைத்து மசாஜ் செய்து கொண்டிருந்தாள் யாழினி.
“இவ வேற, கேப் கிடைச்சா புருஷனைத் தூக்கி தலையில வச்சுப்பா… அவ சொல்லட்டும் விடு…” என்றான்.
“ஹூக்கும் போங்க மா, கொஞ்சம் பெருமை பேச முடியாதே, உடனே லாக் போடுங்க…” என்றபடி அவன் முடியைப் பிடித்து இழுக்க, “அடியே, இருக்கற கொஞ்சம் முடியையும் பிச்சு எடுத்திறாத… அப்புறம் இந்த சொட்டைத் தலையனை புருஷன்னு சொல்லவே வெக்கமாயிடப் போகுது…”
“ஆமா, இவரு பெரிய மன்மதரு, இவங்க அழகைப் பார்த்து சொக்கிப் போயி தான் கல்யாணம் கட்டிகிட்டோம் பாரு… சொட்டையானாலும், குட்டையானாலும் என் புருஷன் போல உலகத்துல யாருமில்ல, சொல்லிட்டேன்…”
“ஐயோ அப்பா… அம்மா ஒரு இலக்கியப் பைத்தியம்னு உங்களுக்குத் தெரியாதா… தேவையில்லாம வாயக் குடுத்து முழிக்கறீங்க…” வெண்பா சொல்லி சிரிக்க முறைத்தாள்.
“சொல்லுவடி, இப்படி நாளைக்கு நீ உன் புருஷன் பின்னால பைத்தியமா சுத்த மாட்டியானு பார்க்கறேன்…”
“ப்ச்… போங்க மா, எனக்கு கல்யாணமே வேண்டாம்…”
“குட்டிம்மா… அப்படிலாம் சொல்லக் கூடாது டா…”
“எனக்கு உங்களைப் போல மாப்பிள்ள கிடைச்சாப் பாருங்கப்பா, இல்லேன்னா கிடைக்கற வரைக்கும் நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்…” சொல்லிவிட்டு உள்ளே சென்ற மகளை திகைப்புடன் நோக்கினர் பெற்றோர்.
“என்ன மா இவ, அம்மா போல பொண்ணு வேணும்னு பிள்ளையார் கேட்ட கணக்கா, உங்களைப் போல மாப்பிள்ள வேணும்னு கேக்கறா…” என்றாள் யாழினி.
“அவளுக்கு என் மேல பிரியம் அதிகம்ல, அதான் என்னைப் போல வேணும்னு சொல்லிட்டுப் போறா… என் பொண்ணு கேட்ட போல, அதென்னடி கேரிங்கா… ம்ம், கேரிங்கான மாப்பிள்ளையைக் கொண்டு வந்து நிறுத்தறேன் பாரு…”
“ம்ம்… சீக்கிரம் பார்க்கத் தொடங்குங்க மா, எப்படி அப்படி ஒரு மாப்பிள்ளைய கண்டு பிடிக்கப் போறீங்க…”
“அதெல்லாம் என் பாடு கண்ணம்மா… நீ இப்ப என் தலையை கவனி… என்னைப் போல என்ன, என்னைவிட நல்ல மாப்பிள்ளையா என் பொண்ணுக்கு இந்த உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் தேடிக் கொண்டு வந்துட மாட்டேன்…” என்றவனைப் புன்னகையுடன் நோக்கியவள், “ம்ம்… நீங்க செய்விங்க மா…” என்றவள், “தண்ணிய எடுத்து வைக்கிறேன்… உடம்புக்கும் எண்ணை தேச்சுக்கங்க மா… சூடு பிடிச்சுக் கிடக்கு…” என்று எழுந்து சென்றாள்
உடலுக்கு எண்ணை தேய்த்தாலும் மனதில் மகள் சொன்ன வார்த்தைகளே ஒட்டிக் கொண்டிருந்தது.
வெண்பா சொன்னது போல் ஒரு மாப்பிள்ளையைக் கண்டு பிடிக்கவும் செய்தான். இவர்களை விட வசதியில் குறைவாய் இருந்தாலும் கல்லூரி புரபசராய் இருந்த நகுலனின் குடும்பத்தை ஒரு திருமணத்தில் பார்த்ததும் பிடித்துப் போக அவனைப் பற்றி விசாரித்தான்.
தந்தை இறந்த பிறகு தங்கைக்கு மணமுடித்து, தம்பியை படிக்க வைத்து, அன்னையை நல்லபடியாய் கவனித்துக் கொண்டிருந்தான். விசாரிக்கையில் வசீகரினின் கல்லூரிக்கும் அவன் சிறப்புப் பேராசிரியராய் போவது தெரிய மகனிடம் கேட்கவும், ஆஹா, ஓஹோ என்று சர்டிபிகேட் கொடுத்தான்.
“நகுலன் சார் சூப்பர்ப்பா… அவரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு அண்ணனைப் போல தான் தோணும்… பசங்க கிட்ட ரொம்ப கேரிங்கா, காசுவலா பழகுவார்… எங்க பசங்க எல்லாருக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும்… அக்காவுக்கு அவர் ரொம்பப் பொருத்தமா இருப்பார்ப்பா…” என்று இருவரைப் பற்றியும் நன்கு அறிந்த மகனே சொல்லவும் நகுலனை சந்தித்தான் இலக்கியன்.
தன்னைக் காண இலக்கியன் என்று யாரோ வந்திருப்பதாய் சொல்லவும் குழப்பத்துடனே வந்த நகுலன் இலக்கியனைக் கண்டதும் பரிச்சயமாய் சிரித்தான்.
“சார் நீங்களா, யாருன்னு யோசிச்சுட்டே வந்தேன்… என்னைப் பார்க்க வந்திருக்கீங்க, சொல்லுங்க சார்…”
“நான் நேரடியாவே விஷயத்துக்கு வந்திடறேன் தம்பி… உங்களுக்கு பொண்ணு பார்த்திட்டு இருக்கிறதா தெரிஞ்சுது… என் பொண்ணுக்கு நானும் மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்கேன்… உங்களை அந்தக் கல்யாணத்துல பார்த்ததுல இருந்தே மனசுல என் பொண்ணுக்கு நீங்க பொருத்தமா இருப்பீங்கன்னு தோணிட்டே இருந்துச்சு… உங்களுக்கு விருப்பம்னா மேற்கொண்டு பேசலாம்…” எந்தவிதப் பூச்சும் இல்லாமல், சுற்றி வளைத்து நேரத்தை விரயமாக்காமல், மகளின் கல்யாண விஷயத்துக்கு வேறு யாரையும் அனுப்பாமல் நேரடியாய் தன்னிடமே பேச வந்த இலக்கியனின் அணுகுமுறை அவனுக்கு ரொம்பப் பிடித்தது.
“நாங்க உங்களவுக்கு…”
“தெரியும் தம்பி, என் பொண்ணு என்கிட்டே ஒரே ஒரு விஷயம் தான் கேட்டா, மாப்பிள்ளை என்னைப் போல உறவுகளை நேசிக்கிறவரா, கேரிங்கா இருக்கணும்னு… உங்ககிட்ட அந்த சுபாவம் இருக்கு… அது போதும்…”    
எல்லாமே அவனுக்குத் தெரிந்திருக்கிறது என்றால் தன்னைப் பற்றி நன்றாக விசாரித்துவிட்டு தான் வந்திருக்கிறார் என்பது புரிய புன்னகைத்தான் நகுலன்.
“நாங்க எப்ப பொண்ணு பார்க்க வரலாம் சார்…”
“சார் இல்ல, மாமா…” என்ற இலக்கியனும் புன்னகைத்தான்.
இலக்கியன் மகளிடம், “நீ சொன்ன போல என்னைப் போல ஒருத்தனை கண்டு பிடிச்சுட்டேன் குட்டிம்மா, உனக்கு சந்தோசம் தானே…” என்று கேட்க தந்தையை சந்தோஷத்துடன் கட்டிக் கொண்டாள் மகள்.
அடுத்து காரியங்கள் வேகமாய் நடக்க பெண் பார்த்து, நாள் குறித்து அனைவரும் வியக்கும்படி கல்யாணமும் முடிந்தது. வெண்பாவின் அருகே வந்த யாழினி, “குட்டிம்மா, நல்ல நேரம் முடியறதுக்குள்ள மாப்பிள வீட்டுக்குப் போகணும்… கிளம்பு டா…” என்று சொல்ல, “அம்மா…” என்று அவளையும் கட்டிக் கொண்டாள். மகளின் அன்பில் கண்களோடு நெஞ்சமும் நிறைந்தது. அவள் அருகே வந்த நகுலன், “கிளம்பலாமா…” என்று புன்னகையுடன் கேட்க, “ம்ம்…” என்று தலையாட்டியவளை கை பிடித்து காருக்கு அழைத்துச் சென்றான். கண்ணீருடன் பெற்றவர்களைத் திரும்பிப் பார்த்தபடியே காருக்குள் அமர்ந்தாள் மகள்.
அதுவரை தனது வேதனையை மனதுக்குள் வைத்திருந்த இலக்கியன் அவர்களின் கார் கிளம்பியதும் வேகமாய் அங்கிருந்து சென்றுவிட்டான். தான் கல்யாணம் முடிந்து வரும்போது கண்கலங்கி நின்ற தந்தையை யாழினிக்கு நினைவு வந்தது. காலகாலமாய் தொடரும் இந்தப் பிரிவு பெண்களின் வரமோ சாபமோ, இயல்பு இதுதானே… 
“மா… ஏன் இங்க வந்து நிக்கறீங்க, குட்டிம்மா நினைவு வந்திருச்சா… போன் பண்ணித் தரேன், பேசறீங்களா…” நிலவின் வெளிச்சத்தில் மகளைப் பற்றிய நினைவில் கசிந்த கண்களை மனைவி காணாமல் துடைத்துக் கொண்டான்.
“இல்ல கண்ணம்மா, சும்மா காத்து வாங்கலாம்னு வந்தேன்… அவங்க ஹனிமூன் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வரட்டும்… டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்…” வெண்பாவும், நகுலனும் கல்யாணம் முடிந்து தேனிலவுக்கு கிளம்பி இருந்தனர்.
“குட்டிமா இல்லாம வீடே சத்தமில்லாம இருக்கு… இந்த வசீ கூட ரூம்லயே உக்கார்ந்துட்டு இருக்கான்…”
“ம்ம்… எல்லாத்துக்கும் அக்கான்னு அவ பின்னாடியே சுத்திட்டு இருப்பான்… அவ இல்லாதது அவனுக்கும் கஷ்டமா இருக்கும்ல… பழகிடும்…”
சொன்ன கணவனின் கையைக் கோர்த்துக் கொண்டு தோளில் சாய்ந்து கொண்டாள் யாழினி.
சற்று நேரம் அமைதியாய் இருந்தவள், “மனசுக்கு ஒருமாதிரி நிறைவா இருக்கு மா… வெண்பா கேட்டபோல ஒரு வாழ்க்கையை அவளுக்கும் அமைச்சுக் கொடுத்துட்டிங்க… இந்த அமைதியும், நிறைவான வாழ்க்கையும் உங்களால தான கிடைச்சது…” என்றாள்.
நெகிழ்வுடன் அவளை அணைத்துக் கொண்டான்.

Advertisement