Advertisement

அத்தியாயம் – 21
சமையல் முடிந்து பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருக்க அவர்களுக்கு லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொண்டே கணவனுக்கு போனில் அழைத்தாள் யாழினி.
“இன்னும் வீட்டுக்கு வராம என்ன பண்ணறார்… எப்பவும் ஒரு மணி நேரத்துல ஜாகிங் முடிச்சிட்டு வந்திடுவாரே… ப்ச்… போன் பண்ணாலும் எடுக்கலை…” எரிச்சலுடன் அதைக் கீழே வைத்துவிட்டு வாட்டர் பாட்டிலில் நீர் நிறைத்தவளுக்கு மனது சுணங்கத் தொடங்கியது.
“ஒருவேளை, யாரையாச்சும் வழியில பார்த்துப் பேசிட்டு நிப்பாரோ… இல்ல, ஏதாச்சும் வேலைன்னு அப்படியே கிளம்பிட்டாரா… ஏன் போன் எடுக்க மாட்டேங்கிறார்…”
“அம்மா, அப்பாவை இன்னும் காணோமே… நாங்க பஸ் ஸ்டாப்புக்கு நடந்தே போயிடட்டுமா…” மகள் சாப்பிட்டு கையைக் கழுவிக் கொண்டே கேட்க யாழினி யோசித்தாள். இலக்கியன் தான் எப்போதும் அவர்களை ஸ்கூல் பஸ் நிற்கும் ஸ்டாப்பில் கொண்டு போய் விடுவது வழக்கம்.
“அப்பாவை இன்னும் காணோம்டி…” சொல்லிக் கொண்டே வாசலைத் தவிப்புடன் பார்த்த அன்னையிடம் வந்தான் வசீ.
“அம்மா, எதுக்கு டென்ஷன் ஆகறீங்க, காரணமில்லாம அப்பா லேட் பண்ண மாட்டார்… ஏதாச்சும் வேலை வந்திருக்கும்… பஸ் ஸ்டாப் கொஞ்ச தூரம் தானே… நான் அக்காவை பத்திரமா கூட்டிட்டுப் போறேன்…” சொன்ன மகனை நோக்கி சிரித்தவள், “சரிடா பெரிய மனுஷா… ரெண்டு பேரும் பார்த்து பத்திரமாப் போயிட்டு வாங்க…” என்றாள்.
“இவன் என்னைப் பார்த்துக்குவானா…” வெண்பா கிண்டலாய் கேட்க, “பின்ன, சின்னவனா இருந்தாலும் ஆம்பளைப் பையன்டி… நாளைக்கு உனக்கு என்ன நல்லது, கெட்டதுன்னாலும் அவன்தான் பார்த்து செய்யணும்…” யாழினி சொல்ல வசீகரன் அக்காவைப் பெருமையுடன் பார்த்தான்.
“ஓஹோ… சரி, நாங்க கிளம்பறோம் மா…” இருவரும் பாகை எடுத்துக் கொண்டு கிளம்ப மீண்டும் யாழினியின் மனம் கணவனைத் தேடி வாசலையே சுற்றி வந்தது.
“இவ்ளோ நேரம்லாம் வராம இருக்க மாட்டாரே… அதும் போனை எடுக்காம இருக்க மாட்டார்…” மனம் ஏதேதோ சிந்திக்க, பயப்பந்து ஒன்று நெஞ்சுக்குள் சுழலத் தொடங்கி பதட்டத்தில் வேர்க்கத் தொடங்கினாள் யாழினி.
மீண்டும் அலைபேசியை எடுக்க செல்கையில் அதுவே சிணுங்கத் தொடங்க வேகமாய் எடுத்தாள்.
கணவனின் எண்ணைப் பார்த்ததும் ஒரு நிம்மதி நெஞ்சில் பரவ, காதுக்குக் கொடுத்து ஹலோவினாள்.
“என்னமா, எங்க போயிட்டிங்க… பிள்ளைங்க இவ்ளோ நேரம் உங்களுக்கு காத்திட்டு இருந்துட்டு அவங்களே கிளம்பிட்டாங்க… ஏதாச்சும் வேலை வந்திருச்சா… போனைக் கூட எடுக்கல…” விடாமல் படபடவென்று கேட்டாள்.
“ஹலோ, மேடம் நாங்க அன்னை ஹாஸ்பிடல்ல இருந்து பேசறோம்…” ஒரு பெண் குரல் கேட்கவும் திகைத்தாள்.
“எ..என்னது, ஹாஸ்பிடலா… அ…அவர் எங்கே… நீங்க எதுக்குப் பேசறீங்க, அவரைப் பேச சொல்லுங்க…” அதிர்ச்சியில் மனம் எதையோ கணக்குப் போட வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது. சட்டென்று கண்ணில் நிறைந்த நீருடன் படபடப்பாய் கேட்டாள்.
“பயப்படாதீங்க மேடம், இந்த நம்பர் உங்க வீட்டுக்காரர் நம்பர் தானே… நீங்க கொஞ்சம் உடனே கிளம்பி ஹாஸ்பிடல் வர முடியுமா…”
“எ…என்ன சொல்லறீங்க… ந..நான் எதுக்கு வரணும், அ…அவருக்கு என்னாச்சு… அவர்க்கு ஒண்ணுமில்ல தானே…”
“அது.. வந்து மேடம்… அவர் மேல ஒரு லாரி மோதி…” அவள் சொல்லி முடிக்கும் முன்னே கதறத் தொடங்கினாள் யாழினி.
“ஐயோ… அவருக்கு என்னாச்சு… ஒண்ணும் இல்லேன்னு சொல்லுங்க, எனக்கு பயமாருக்கு… ம்மா… என்னாச்சு மா…, உங்களுக்கு என்னாச்சு… ஐயோ, நான் என்ன பண்ணுவேன்… மா… வந்திருங்க மா….” அலறலுடன் எழுந்து அமர்ந்தவள் தலையில் அடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள்.
அவளது சத்தத்தில் அருகே உறங்கிக் கொண்டிருந்த இலக்கியன் திடுக்கிட்டு எழுந்தான்.
“மா, என்னை விட்டுப் போயிடாதீங்க… நானும் உங்களோடவே வந்துடறேன்… மா…” என்று தலையில் அடித்துக் கொண்டிருந்தவளின் கையைப் பிடித்தவன், “ஏய் கண்ணம்மா, என்னடி ஆச்சு… எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க…” என்றதும் பித்துப் பிடித்தது போல் அழுது புலம்பிக் கொண்டிருந்தவள் அவன் குரலில் திரும்பினாள்.
“கண்ணம்மா, நான் இங்கதானே இருக்கேன்… ஏதாச்சும் கனவு கண்டியா… எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க…” என்றவன் அவளது கன்னத்தில் தட்ட திருதிருவென்று முழித்தாள்.
“மா… வந்துட்டிங்களா… உங்களுக்கு ஒண்ணும் ஆகல தானே… என்னை விட்டுப் போக மாட்டிங்கள்ள…” தேம்பியபடி அவன் முகமெங்கும் பதட்டத்துடன் முத்தமிட்டாள்.
“என்னடா, என்னாச்சு… நான் உன்னை விட்டு எங்க போகப் போறேன்… அழாத மா…” குழந்தை போல அணைத்து ஆறுதல் சொல்ல அப்போதும் நிறுத்தாமல் விசும்பிக் கொண்டே இருந்தாள்.
“ப்ச்… இப்ப நீ அழறதை நிறுத்தப் போறியா இல்லியா…” அவன் சற்று கோபமாய் சொல்லவும் நிமிர்ந்தவள் அவன் நெஞ்சில் செல்லமாய் குத்தி மீண்டும் அழத் தொடங்கினாள்.
“ஏய், நீ இப்ப சொல்லப் போறியா இல்லியாடி… அப்படி என்னத்த கனவு கண்ட…” என்றான் அதட்டலுடன்.
“க…கனவுல நீங்க… ஐயோ… என்னால அதை யோசிக்கக் கூட முடியல… என்னை விட்டுப் போயிட மாட்டிங்கல்ல மா… எப்பவும் போக மாட்டிங்க தானே…” அவள் மீண்டும் விசும்ப, தன்னைத் தான் கனவில் கண்டு கலங்குகிறாள் என்பது புரிய நெகிழ்ச்சியுடன் அணைத்துக் கொண்டான்.
“ஹேய் கண்ணம்மா, என்னடா இது… கனவு கண்டதுக்கு எல்லாம் சின்னப்புள்ள போல அழுதுட்டு இருக்க… நான் உங்களை விட்டு எங்க போயிடப் போறேன்… போனா தான் நீ விட்டிருவியா… போதும், கண்ணைத் துடை…”
“கனவுல என்னை பயமுறுத்திட்டு, பேசாதிங்க மா… நீ…நீங்க இல்லேன்னா நான் ஒண்ணுமே இல்ல… நிலத்துல கிடக்குற மண்ணுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை… நீங்கதான் அந்த மண்ணுல சிலை செய்து என்னைக் கொண்டாடிட்டு இருக்கீங்க… நீங்க இல்லாம நான் இல்ல… உங்களுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி நான் செத்துடனும்னு தான் எப்பவும் கடவுளை வேண்டிட்டு இருக்கேன்… அது எப்பவா இருந்தாலும் சரி… நீங்க இல்லாத இந்த உலகத்தை என்னால நினைச்சு கூடப் பார்க்க முடியாது…” கேவிக் கொண்டே சொன்னவளின் நேசம் அவனை நெகிழ்த்தியது.
“ஹேய், பிளாக் சாக்கலேட்… என்னடி இது, இப்படில்லாம் பேசற… நம்ம பிள்ளைகளை நினைச்சுப் பார்த்தியா… ஒருவேளை, அவங்களுக்கு நான் இல்லேன்னாலும்…” மீதி சொல்ல விடாமல் அவன் வாயைப் பொத்தினாள்.
“இல்ல மா, நீங்க இல்லாம எனக்கு என் பிள்ளைங்க கூடப் பெருசில்ல… உங்கள்ல தான் எனக்கு எல்லாமே… அது பிள்ளைகளா இருந்தாலும் சரி, வாழ்க்கையா இருந்தாலும் சரி, நீங்க இல்லாம என்னால நினைக்க கூட முடியாது…”
“சரி, இப்ப எதுக்கு இந்தப் பேச்சு… கனவெல்லாம் மறந்துட்டு நல்லாத் தூங்கு, தலை வலிக்கப் போகுது…”
“இல்ல மா… கண்ணை மூடினா மறுபடி அந்தக் கனவு வந்துட்டா என்ன பண்ணுறது… நான் தூங்கல…”
“ஆனா, எனக்குத் தூக்கம் வருதேடி… நான்தான் உங்களை விட்டு எங்கயும் போக மாட்டேன்னு சொல்லறேன்ல… படுத்துத் தூங்கு மா…” என்றான் தலையைக் கோதிவிட்டு.
அப்போதும் அவள் கலங்கிய கண்களுடன் அவனைப் பார்க்க, “கண்ணம்மா, நான் உன் கழுத்துல கட்டினது தாலி மட்டும் இல்லடி… என் நேசத்துக்கான வேலியும் கூட தான்… உங்களைத் தவிக்க விட்டு என் உசுரு போகாது… போனாலும் இங்கயே தான் உங்களை சுத்திகிட்டு இருக்கும்…” எனவும் அவன் கன்னத்தில் அறைந்தாள் யாழினி.
“யோவ், நீ என்னை விட்டுப் போகவே கூடாதுன்னு சொல்லிட்டு இருக்கேன்… போனாலும்னு இழுக்கற… அவ்ளோ தான் மரியாதை, பார்த்துக்க…” என்று மிரட்டலாய் சொல்ல அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் இலக்கியன்.
“சரியான ரவுடி கண்ணம்மா…” அவள் கன்னத்தைக் கிள்ளியவன் இதழ் நோக்கி குனிந்தான்.
ஆனாலும் அவளது அழுகையும் பதட்டமும் அவன் மனதில் ஆழமாய் பதிந்துவிட்டது. ஒருவேளை தனக்கு எதுவும் ஆனால் இவர்கள் பரிதவித்துப் போவார்களோ என்ற தவிப்பு மனதுக்குள் கூடிவிட்டது.
அடுத்தநாள் முதல் கடைக் கணக்கு எழுதும்போது யாழினியை அருகில் அமர்த்தி அவளை எழுத சொன்னான்.
“நான் எதுக்கு மா, நீங்க தான எப்பவும் எழுதுவிங்க…” டீவி பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் அழைக்க சிணுங்கினாள்.
“எனக்கு கண்ணு கொஞ்சம் மங்குதுடி… நாளைக்கு கண்ணை செக் பண்ணனும்… நீ ஒருத்தி படிச்சிட்டு சும்மா தான இருக்க… இதை எழுதிக் கொடுத்தா எனக்கு உதவியா இருக்கும்ல…” அவன் சொல்லவும் மறுக்க முடியாமல் வந்து அமர்ந்தாள்.
ஒவ்வொரு பில்லையும் எழுதி வரவு, செலவு நோட் பண்ண சொல்லிக் கொடுத்தான். யாழினியும் சீக்கிரமே பழகிக் கொண்டாள்.
ஒருநாள் லாக்கரில் உள்ள பெரிய பைலை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவனிடம், “இதுல என்ன மா பார்த்துட்டு இருக்கீங்க…” என்றாள் யாழினி.
“நம்ம வீட்டுப் பத்திரம், வசீ பேருல வாங்கின இடத்துப் பத்திரம், இன்சூரன்ஸ், பாஸ்புக், ஆதார்ல இருந்து எல்லாமே இதுல தான் தனித்தனியா போட்டு வச்சிருக்கேன்… ஆனா ஏதாச்சும் தேவைன்னா எல்லாம் எங்கே வச்சோம்னு நினைவு வர மாட்டேங்குது… நீயும் தெரிஞ்சு வச்சுக்க…”
“சரி மா, இப்ப எதைத் தேடறீங்க…” என்றாள் யாழினி.
“தண்ணி வரி கட்டணும்னு சொன்னாங்கல்ல…. போன வருஷம் கட்டின பில்லைத் தேடிட்டு இருக்கேன்… அதுல நம்ம கனக்ஷன் நம்பர் இருக்கும்ல… கொஞ்சம் எடுத்துக் குடேன்…” என்றவன் அவளையே தேட விட்டான். அவள் ஒவ்வொன்றையும் பார்த்து என்னவென்று கேட்க விவரமாய் சொல்லிக் கொடுத்தான்.
“நம்ம குட்டிம்மாவுக்கு வாங்கின நகை எங்க கண்ணம்மா…” என்றான் லாக்கரைப் பூட்டும் முன்பு.
“அலமாரில இருக்கு மா…” என்றாள் அவள்.
“ம்ம்… இதுல கீழ் லாக்கர்ல தான் நகை செய்யக் கொடுத்த பாக்கித் தங்கம் இருக்கு… டயரில எல்லா வரவு செலவும் அப்பப்ப எழுதி வச்சிருக்கேன்…”
“இதெல்லாம் என்கிட்ட எதுக்கு மா சொல்லறீங்க…”
“உன்கிட்ட சொல்லாம பக்கத்துக்கு வீட்டு பாட்டிகிட்டயா சொல்லுவாங்க… எனக்கு தான் எல்லாம் மறக்குதுன்னு சொன்னேன்ல…” சமாளிப்பாய் சொன்னான்.
“ஓ… சரிமா, நான் நினைவு வச்சுக்கறேன்…”
இப்படி எல்லா விஷயமும் அவளுக்குத் தெரியும்படி செய்யத் தொடங்கினான் இலக்கியன். சரியான உடற்பயிற்சி, அளவான ஆரோக்கியமான உணவு என்று எல்லாவற்றிலும் கவனமாய் இருந்தான்.
நாட்கள் அழகாய் நகரத் தொடங்க வெண்பா நல்ல மதிப்பெண்ணுடன் பிளஸ் டூ பாசாகி இருந்தாள்.
“குட்டிம்மா, அடுத்து உனக்கு என்னடா படிக்கணும்…” இலக்கியன் கேட்க, “எஞ்சினியரிங் படிக்கிறேன் பா…” என்றாள் மகள்.
“மூத்தவரு பொண்ணுங்க எல்லாம் டிகிரி தான படிச்சிருக்காங்க, இவளை மட்டும் எஞ்சினியரிங் சேர்த்துனா எதுவும் சொல்லப் போறாங்க…” என்றாள் யாழினி.
“அவங்க எல்லாம் மார்க் கம்மியா வாங்கினாங்க, எஞ்சினியரிங் படிக்க நினைச்சாலும் சீட் கிடைச்சிருக்காது… நம்ம குட்டிம்மா அப்படி இல்ல, நல்ல மார்க் வாங்கிருக்கா… படிக்க ஆசைப்படறா… நான் பார்த்துக்கறேன்…” என்றான்.
யாழினி நினைத்தது போலவே கவிதா தொடங்கி வைத்தாள்.
“என்ன வெண்பா, அடுத்து என்ன டிகிரி படிக்கப் போற… அக்கா காலேஜுக்கே போயிக்கலாம்ல… பீஸ் கூட அதிகம் கிடையாது…” என்றாள் மகள் படிக்கும் கலைக் கல்லூரியின் பெயரைக் குறிப்பிட்டு.
“ஆனா, அங்க எஞ்சினியரிங் இல்லையே பெரிம்மா…” என்றதும் கவிதாவின் முகம் சிறுத்துப் போனது.
“நம்ம வீட்டுல எல்லாப் பொண்ணுகளும் டிகிரி தான படிச்சிருக்காங்க, நீ மட்டும் என்ன எஞ்சினியரிங்…” என்றாள்.
“நம்ம வீட்டுப் பொண்ணுங்க யாரும், நான் வாங்கின மார்க் வாங்கலையே பெரியம்மா… எனக்கு மெரிட்ல சீட் கிடைக்கும்… பீஸ் கம்மியா கட்டினாப் போதும்…”
“ஓ… அதெல்லாம் படிச்சு என்ன வேலைக்கா போகப் போற… நம்மூட்டுப் பொண்ணுகளை வேலைக்கு அனுப்பற வழக்கமும் கிடையாது… அப்புறம் எதுக்கு கஷ்டப்பட்டு அதேல்லா படிச்சுகிட்டு… பேருக்கு ஒரு டிகிரி படிச்சாப் போதாதா… இல்லங்க…” என்றாள் கணவனை நோக்கி.
“படிக்கப் போறது அவ, உனக்கு எதுக்கு அந்தக் கவலை… அவ விருப்பப்பட்டதைப் படிச்சிட்டுப் போகட்டும்…” என்றார் பெரியவர்.
“என்னங்க, நீங்க புரியாமப் பேசிட்டு… பெரிய படிப்புப் படிச்சா அதுக்கு தகுந்தாப் போல தான் மாப்பிள்ள பார்க்கணும்… அப்புறம் நாம வழக்கமா கொடுக்கிற நகை பத்தாதுன்னு சொல்லுவாங்க… இதெல்லாம் யோசிக்க வேண்டாமா…”
அவள் சொன்னதைக் கேட்டு பெரியவரே அசந்து போனார்.
“அதெல்லாம் இப்ப எதுக்கு யோசிச்சுட்டு இருக்க, அந்த சமயத்துல பார்த்துக்கலாம்…”
“அதுக்கில்லங்க, நான் என்ன சொல்ல வரேன்னா…” உள்ளே வந்த இலக்கியனைக் கண்டதும் வார்த்தை பாதியில் நின்றது. யாழினி ஒரு பக்கம் நின்று எதுவும் சொல்லாமல் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“வாங்கண்ணா, காப்பி சாப்பிட்டீங்களா…” என்றவன் கவிதாவிடம் திரும்பிக் கேட்க, “அதெல்லாம் குடிச்சாச்சு தம்பி… வெண்பா ரிசல்ட் வந்திருச்சுல்ல, அதான் மேல என்ன படிக்கப் போறான்னு கேக்க வந்தோம்…”
“அவ எஞ்சினியரிங் தான் படிக்க விருப்பப்படறா… அதையே படிக்கட்டும்… நம்ம குடும்பத்துல ஒரு எஞ்சினியர் வர்றது பெருமை தானே… என்னண்ணா நான் சொல்லுறது…” என்று அண்ணனிடம் கேட்க, “ஆமா தம்பி, சரியா சொன்ன… நம்ம புள்ள பெரிய படிப்பு படிச்சா நமக்கு தான பெருமை… சீக்கிரமே அதுக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் பண்ணிடுப்பா…” என்றான் புன்னகையுடன். கவிதா கடுப்புடன் எதுவும் சொல்லாமல் கணவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.
“நீங்க இந்த மாச செக்கப் போக டைம் ஆச்சே… நாளைக்குப் போயிட்டு வரீங்களா… டாக்சி வர சொல்லறேன்…”
“சரிப்பா… கடைல வேலை கம்மியா இருக்கற நாள் பார்த்துப் போயிக்கறேன்… உனக்கு தான் சிரமம்…”
“அதெல்லாம் ஒண்ணும் சிரமம் இல்லண்ணா, எங்களுக்கு உங்க ஆரோக்கியம் தான் முதல்ல…” என்ற தம்பியை நெகிழ்வுடன் பார்த்தார்.
“சரி டா தம்பி, நாளைக்கு போயிட்டு வந்துடலாம்டி…” என்றார் மனைவியிடம். அவர்கள் கிளம்பி சென்றதும் வசீகரன் தந்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.
“என்னடா கண்ணா…”
“அப்பா செம கெத்து இல்லமா… அப்பா சொன்னதும் பெரிம்மா ஒரு வார்த்தை மறுத்துப் பேசல பாருங்க…”
“ஆமாப்பா, நீங்க வரதுக்கு முன்னாடி பெரிம்மா என்ன சொன்னாங்க தெரியுமா…” என்ற வெண்பா நடந்ததை சொல்ல அவன் புன்னகைத்தான்.
“குடும்பத்துக்குள்ள விட்டுக் கொடுத்துப் போறது தப்பில்ல… ஆனா நம்ம இலக்கு சரியா இருந்தா, அதுக்காக எதையும் விட்டுக் கொடுக்கக் கூடாது… மத்தவங்க விருப்பத்துக்காக மட்டுமே வாழத் தொடங்கினா நமக்குன்னு ஒரு வாழ்க்கை அமையாமலே போயிடும்… அதனால, நாமளும் வாழணும், மத்தவங்களையும் வாழ விடனும்…” என்றான்.
“சூப்பர் ப்பா…” என்ற வசீகரன் சந்தோஷத்தில் தந்தையின் சொட்டைத் தலையில் முத்தமிட்டான்.
“நீங்க எப்படிப்பா, எந்த யூனிவர்சிட்டிலயும் படிக்காம இப்படிப் பேசறிங்க…” என்றாள் வெண்பா.
“ஹாஹா, வாழ்க்கை ரொம்பப் பெரிய யூனிவர்சிட்டி மா… அது கத்துக் கொடுக்கிற அனுபவம் தான் என்னைப் பேச வைக்குது…” என்றவன் புன்னகையுடன் காபிக் கோப்பையை நீட்டிய மனைவியை நோக்கி புருவத்தைத் தூக்கி, “நான் சொல்லுறது சரிதான கண்ணம்மா…” என்றான்.
“ரொம்ப சரிதான்… கவிதாக்கா நான் நினைச்ச போலவே சொன்னாங்க… நீங்க சொல்லவும் மறுத்துப் பேசாம போயிட்டாங்க…”
“தேவி கணக்கு சொன்ன போல அவங்க மூணு பொண்ணைப் படிக்க வச்சாங்கன்னு நாம கணக்கா சொல்ல முடியும்… அவங்க சுபாவத்துக்கு இப்படி தான் சொல்லணும்…” என்றான்.
“ம்ம்… யாருகிட்ட எப்படிப் பேசணும்னு சரியாத் தெரிஞ்சு வச்சிருக்கீங்க…” என்றவள், “நாம கோவிலுக்குப் போயிட்டு வரலாமா…” என்றாள்.
“ம்ம்… போகலாமே… ஒரு குளியல் போட்டுட்டு வந்துடறேன்…” என்றவன் எழுந்து செல்ல காபிக் கோப்பையை வைத்துவிட்டு புறப்படத் தயாரானாள் யாழினி. கணவனின் நினைவில் மனம் பூரித்திருந்தது.
நேசம் என்னும்
காரணம் ஒன்றே
போதுமாகிறது…
நித்தமும் நான்
உன்னைத் தேட…
எத்தனை கொடுத்தாலும்
எத்தனை கிடைத்தாலும்
தேடல் மட்டும்
முடிவதே இல்லை…  

Advertisement