Advertisement

அத்தியாயம் – 20
“கணக்கு கணக்கா இருக்கனும்ல, கவிதாக்கா…” தேவி சொல்ல அவளது கணவன் அதட்டினான்.
“ஏய், நீ கணக்கும் சொல்ல வேண்டாம், கருத்தும் சொல்ல வேண்டாம்… அமைதியா இரு…”
“ஆமா தேவி, எல்லாரும் நம்ம பிள்ளைங்க தான… எல்லாரையும் நல்லபடியா கட்டிக் கொடுத்து தான ஆகணும்… இதுல கணக்கு பார்க்கக் கூடாதுல்ல…” யாழினி.
“நீங்க அப்படி சொல்லலாம்க்கா… இருந்தாலும் அது நியாயம் இல்ல தானே…”
“என்னடி சொல்லற, என் மூணாவது புள்ளைக்கு கொடுத்த நகையை திரும்ப கொடுக்க சொல்லுறியா…” கவிதா கோபமாக ஆண்கள் தங்களுக்குள் பார்த்துக் கொண்டனர்.
“இங்க பாரு தேவி, எல்லாரும் நம்ம பொண்ணுங்க தான… கவிதாவுக்கு மூணு பொண்ணுன்னு நினைக்காம யாழினிக்கு ரெண்டு பொண்ணா நினைச்சுக்க… கணக்கு சரியாகிடும்…”
பர்வதம் சொல்லவும் தேவி அதற்குமேல் பேசாமல் அமைதியானாலும் முகத்தைத் தூக்கி வைத்திருந்தாள்.
வெண்பாவுக்கு கொடுக்க வேண்டிய தங்கத்தை பூஜை செய்து இலக்கியன் யாழினியிடம் கொடுத்துவிட்டு மதிய உணவு முடிந்து அனைவரும் கிளம்பினர். நாட்கள் அழகாய் தேய்ந்து கொண்டிருக்க பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருந்தனர்.
பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கு சென்றிருக்க மதிய உணவு முடிந்து யாழினி பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள். இலக்கியனின் அலைபேசி சிணுங்க அக்கா பிரபாவின் எண்ணைக் கண்டவன் எடுத்துப் பேசினான்.
“சொல்லுக்கா, இந்த நேரத்துல கூப்பிட்டிருக்க…” கேட்கவும் எதிர்ப்புறம் அக்காவின் அழுகையோடு குரல் ஒலித்தது.
“தம்பி, உன் மாமாவும் நானும் ஒரு கல்யாணத்துக்குப் போன இடத்துல நெஞ்சை அடைக்கிற போல இருக்குன்னு சொன்னார்னு சோடா வாங்கிக் குடிச்சார்… அப்பவும் வலிக்குதுன்னு சொல்லவும் ஆசுபத்திரிக்கு அழைச்சிட்டுப் போனோம்… டாக்டர் பார்த்திட்டு இருக்காங்க… எனக்கு ரொம்ப பயமாருக்கு… நீ சீக்கிரம் வாப்பா…” என்றார்.
“அச்சோ… எந்த ஆசுபத்திரிக்கா…” பதட்டமாய் கேட்டவனிடம் அவள் பெயரை சொல்ல. “பயப்படாம இருக்கா, இதோ வந்துடறேன்…” அவன் பேசும்போதே கேட்டுக் கொண்டு வந்த யாழினி, “என்ன மா, “என்னாச்சு…” என்றாள்.
“கண்ணம்மா, நம்ம பிரபாக்கா வீட்டுக்காரர்க்கு முடியாம ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்களாம்… பார்த்திட்டு வந்துடறேன்…” என்றவன் வேகமாய் வண்டியை எடுத்தான்.
முதலில் ஹார்ட் அட்டாக் என்றவர்கள் இதயத்துக்கு செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதால் சரி செய்ய ஆப்பரேஷன் வேண்டுமென்று கூறி விட்டனர்.
அதைக் கேட்டு பிரபா கதறி அழ பணத்துக்குப் பிரச்னை இல்லை என்பதால் உடனே அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய சொல்லி விட்டனர். பிரபாவின் கணவர் வேலையில் ஓய்வு பெறுவதற்கு முன்பே இரண்டு மகள்களைக் கல்யாணம் முடித்து விட்டார். இரண்டு வீடு, பாங்கில் பாலன்ஸ் என்று பிரச்சனை இல்லாத ஜீவிதம். மூத்த மகளை பக்கத்துக்கு ஊரில் ஒரு பாங்கு மானேஜரும் இரண்டாவது மகளுக்கு ஆடிட்டரையும் மணமுடித்து கொடுத்திருந்தனர்.
அந்த ஆடிட்டர் மாப்பிள்ளைக்குத் தெரிந்த ஆசுபத்திரியில் தான் இப்போது அட்மிட் பண்ணி இருந்தனர். தனியார் மருத்துவமனை என்பதால் அங்கே சென்ற பிறகு விடும் மூச்சைக் கூட காசாக்கிக் கொண்டிருந்தனர். மாப்பிள்ளைக்குத் தெரிந்த இடம் என்பதால் ரூமுக்கு மட்டும் வாடகை இல்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு ஆப்பரேஷன் முடிவானது. ஆப்பரேஷன் முடிந்து நல்லபடியாய் வார்டுக்கு மாற்றினர். இரண்டு நாட்கள் அவர்கள் கவனிப்பில் இருந்தார். எல்லாம் பிரச்சனை இல்லாமல் நல்லபடியாய் முடிந்தது என்று அனைவரும் நிம்மதியில் இருக்க, அன்று இரவு அவருக்கு பயங்கர மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மீண்டும் ஐசியூ வுக்கு கொண்டு சென்று சிகிச்சை செய்தும் பலனின்றிப் போனது. திணறிய மூச்சு நின்று போக குடும்பமே அவரது இழப்பில் தளர்ந்து போனது. பர்வதம் மகளின் கதறலைக் காண முடியாமல் தவித்துப் போனார்.
கடமைகள் எல்லாம் நல்லபடியாய் முடித்து அவர் உலகை விட்டு சென்றிருந்தாலும் துணையை இழந்த மகளின் நிலை அவர் மனதை வாட்டியதோ என்னவோ மகளின் கண்ணீரைக் காண முடியாமல் ஒரு மாதத்திலேயே அவரும் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார். நித்திரையில் கண்ணை மூடியவரின் இதயத்தை எமன் சுருக்கிட்டு இழுத்தானோ, உறங்கும்போதே இதயம் துடிப்பை நிறுத்திக் கொண்டது.
அடுத்தடுத்து குடும்பத்தில் நடந்த இழப்புகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்த அத்தையின் மறைவு யாழினியை மிகவும் வருத்தியது. அடிக்கடி அவரை யோசித்து அழுது கொண்டிருக்கும் மனைவியைத் தேற்ற இலக்கியன் தனது துக்கத்தை மறைத்துக் கொள்ள வேண்டி வந்தது.
“அப்பா, அம்மா எப்பவும் அழுதுட்டே இருக்கா…” வசீகரன் சோகமாய் சொல்ல மனைவியிடம் சென்றான்.
“கண்ணம்மா, இப்படியே அழுதுட்டு இருந்தா அம்மா வந்திடப் போறாங்களா… பசங்க பீல் பண்ணறாங்க பாரு…”
“அத்தை என்னை ஒரு மகளைப் போலப் பார்த்துகிட்டாங்க… ரெண்டு அம்மாவும் இல்லேன்னு நினைக்கும்போது என்னால தாங்க முடியலைங்க…” கண்ணீருடன் சொன்ன மனைவியை இதமாய் அணைத்துக் கொண்டவன், “நான் இருக்கேன்ல…” என்றதும் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
“இந்த பூமிக்கு வந்தவங்க எல்லாம் ஒரு நாள் மண்ணுக்குள்ள போயி தான ஆகணும்… இறப்பை நினைச்சு அழுதுட்டே இருந்தா வாழ முடியாது கண்ணம்மா… நாம நல்லாருக்கணும்னு தான் அவங்களும் நினைப்பாங்க…”
“ம்ம்… மூளைக்குப் புரியுதுங்க… மனசுக்குப் புரியல…” என்றவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள முதுகில் ஆறுதலாய் வருடிக் கொடுக்க மெல்லத் தெளிந்தாள்.
சோகம் நடந்த வீட்டில் சீக்கிரமே நல்ல காரியம் நடத்த வேண்டுமென்று யாரோ சொல்ல மூத்தவரின் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். இரண்டு மாதத்திலேயே நல்ல சம்மந்தம் அமைந்தது. கல்யாண ஓட்டத்தில் அனைவரின் கவனமும் மெல்ல உற்சாகத்துக்கு மாற துணி எடுப்பது, நகை வாங்குவது, பத்திரிகை கொடுப்பது என்று பிசியாகத் தொடங்கினர்.
“கண்ணம்மா, குட்டிம்மாவுக்கு கல்யாணத்துக்குப் போட ஒரு நெக்லஸ் செட் ஆர்டர் கொடுத்துடலாம்…” இலக்கியன் சொல்ல, “சரிங்க…” என்றாள் யாழினி.
மகளுக்கு நெக்லஸ் கம்மல் செட்டுடன் மனைவிக்கும் ஒரு ஜோடி வளையல், ஆரம் செய்ய ஆர்டர் கொடுத்தான்.
“எனக்கெதுக்குங்க… அவளுக்கு மட்டும் போதும்…”
“நீ சும்மாருடி… கல்யாணத்துக்கு என் பொண்டாட்டியும்  ஜொலிக்க வேண்டாமா…” என்று அவள் வாயை அடைத்தான். வெண்பா பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவள் பெரிய மனுஷி ஆனபோது மீண்டும் பத்து பவனுக்கு தங்கத்தைக் கொடுத்திருந்தனர். அதில் தான் இப்போது புதிய நகைக்கு ஆர்டர் கொடுத்தான் இலக்கியன்.
“என்னங்க, அவளுக்கு கொடுத்த தங்கத்தை எடுத்து எனக்கு நகை வாங்கினா கணக்கு குறையாதா…”
“அவளோடதுல எடுக்கலடி, இது நம்ம பங்குல உள்ள பணம்… என் பொண்டாட்டிக்கு என் காசுல பண்ணறேன்…” என்றான். கல்யாணத்துக்கு உறவுகள் அனைவரும் வந்திருக்க யாழினியின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். விலை உயர்ந்த பட்டு சேலை, புது நகை என்று வளைய வந்த தங்கையை மாலினியின் கண்கள் பலாப்பழத்தில் ஈ போல விடாமல் மொய்த்துக் கொண்டிருந்தன.
“பளபளன்னு இருக்கு… புதுசா…  நீ கூட பணம் வந்ததும் கறுப்பெல்லாம் போயி பளபளன்னு ஆகிட்ட…” என்றவளின் பொறாமைப் பெருமூச்சு சூடாய் தங்கையை சுட்டது.
அவளுக்கு பதில் சொல்லாமல் புன்னகைத்து அவள் மகனிடம் திரும்பியவள், “டேய் மகனே, காலேஜ் எல்லாம் கட்டடிக்காம ஒழுங்காப் போறியா…” என்றபடி அக்கா மகனிடம் பேசியபடி நகர்ந்தாள் யாழினி.
அண்ணன் குடும்பத்தினரும் கல்யாணத்துக்கு வந்திருக்க அழகு தேவதையாய் புன்னகையுடன் வலம் வந்த யாழினியின் செல்வ மகள் அவர்கள் கண்ணை நிறைத்தாள்.
சின்ன அண்ணனின் மனைவி கணவனிடம் கிசுகிசுத்தாள்.
“வெண்பா நல்லா வளர்ந்துட்டாங்க… இப்பவே பொண்ணுக்கு எவ்ளோ நகை போட்டிருக்காங்க, எப்படியாச்சும் நம்ம பையனுக்கு இவளைப் பேசி முடிச்சிடனும்… அவனுக்கு முறைப்பொண்ணு தானே…” என்றாள் ஏதோ கணக்கோடு.
“ஆமா, ஒழுங்கா காலேஜ் போகாம ஊரை சுத்திட்டு இருக்கற உன் புள்ளைக்கு என் மாப்பிள்ள பொண்ணைக் கொடுப்பாரு பாரு… என் தங்கச்சி சம்மதிச்சாலும் மாப்பிள சம்மதிக்க மாட்டார்…” என்றான் யாழினியின் அண்ணன்.
“நீங்க என்னங்க எடுத்ததும் முடியாதுன்னு பேசிட்டு… எல்லாம் பக்கத்து பக்கத்துல இருக்கோம்… முறைப்பொண்ணு வேற… நம்ம பையன் கிட்ட சொல்லி அவளை கரக்ட் பண்ண சொல்லுவோம்…” என்ற மனைவியை முறைத்தார் அவர்.
“ஏய், இங்க பாருடி, கல்யாணத்துக்கு வந்தமா, சாப்பிட்டமா, மொய்யை வச்சிட்டுப் போனமான்னு இருக்குறது தான் நமக்கு நல்லது… நீ தேவையில்லாம உன் பையன் கிட்ட எதையும் சொல்லி உசுப்பேத்தி விடாத… மாப்பிள்ளைக்கு இல்லேன்னாலே எங்க யாரு மேலயும் நல்ல மதிப்பில்ல, அநாவசியமா அசிங்கப்பட வைக்காத… இத்தோட இந்த நினைப்பை விட்டுட்டு நடக்கறதை மட்டும் யோசி… தேவை இல்லாம என் தங்கச்சி குடும்பத்துல சிங்கி அடிக்க நினைக்காத…” என்றவர் அங்கிருந்து நகர்ந்தார்.
“ம்க்கும்… பொழைக்கத் தெரியாத மனுஷன்… எத்தன காலத்துக்கு தான் நாமளும் பெருசா வருமானம் இல்லாத ஹோட்டல்ல ஈ ஓட்டிட்டு இருக்குறது… பசையான இடத்துல ஒட்டிக்கப் பார்க்காம வேதாந்தம் பேசிட்டுப் போறாரு…” என்றவளின் பார்வை பாவாடை தாவணியில் புன்னகையுடன் நடமாடிக் கொண்டிருந்த வெண்பாவின் மீதே இருந்தது.
“வெண்பா, இங்க வா கண்ணு…” வார்த்தையில் தேன் தடவி அழைத்த சின்னத்தையை வியப்புடன் நோக்கிவிட்டு அவர் அருகே வந்தாள் வெண்பா.
“என்னத்தை, ஏதாச்சும் வேணுமா… சாப்பிட்டிங்களா…”
“அதெல்லாம் சாப்பிட்டேன் மா…” புன்னகையுடன் அவள் கையைப் பற்றிக் கொண்டவள், “சட்டுன்னு பெருசான போல இருக்கியே…” என்றபடி அவள் கன்னத்தை வருடி கழுத்தில் பளபளத்த நெக்லசை உள்வாங்கி, “நீ ஏன் நம்ம வீட்டுக்கு வர்றதே இல்ல… ஸ்கூல் விட்டு வர்ற வழி தானே… அப்பப்ப வீட்டுக்கு வரலாம்ல…” என்றாள் அன்புடன்.
“ஸ்கூல் விட்டு வந்ததும் டியூஷனுக்குப் போக நேரம் சரியாருக்கும் அத்தை… அதான் வர்றதில்லை…”
“உன் அத்தான் எப்பவும் உன்னைப் பத்தி தான் சொல்லிட்டு இருப்பான்… எதுக்கெடுத்தாலும் வெண்பா பேச்சு தான்…” என்றதும், “அவன் எதுக்கு நம்மைப் பற்றி பேச வேண்டும்…” என நினைத்தவள் புன்னகைத்தாள்.
“அது அத்தானுக்கு நீங்க ஒரு தங்கச்சியைப் பெத்துக் குடுக்காம விட்டுட்டிங்கல்ல… அதான் என்னைத் தங்கச்சியா நினைச்சுப் பேசிட்டு இருக்கார் போல…” என்று சிரிக்க அத்தைகாரிக்கு பத்திக் கொண்டு வந்தது.
“என்ன வெண்பா, உன் அத்தானை அண்ணன் ஆக்கிட்ட…”
“எனக்கும் அண்ணன் இல்லைல்ல அத்தை, அதான்… சரி, வந்திடறேன்…” என்றவள் நழுவினாள். அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்த இலக்கியன் மகளை அழைத்து “என்னவாம் உன் அத்தைக்கு…” என்று கேட்க பேசியதை சொன்னாள். மகளின் பேச்சைக் கேட்டவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.
“நான் சொன்னது சரிதானே அப்பா…” என்ற மகளின் தோளில் தட்டிக் கொடுத்தவன் “ரொம்ப சரிடா, குட்டிம்மா…” என்றான்.
“அப்பா, ரெண்டு பேரும் வாங்க, எல்லாரும் பாமிலி போட்டோ எடுத்துக்கலாம்… அம்மா உங்களைத் தேடறாங்க…” வசீகரன் வந்து அழைக்க இருவரும் சென்றனர்.
எல்லாம் நல்லபடியாய் முடிந்து வீடு திரும்பினர்.
“எல்லாரும் இங்கயே நில்லுங்க… அப்பா இப்ப வந்திடறேன்…” வேகமாய் பூட்டைத் திறந்து உள்ளே சென்றவனை நோக்கி யாழினி புன்னகைத்தாள். மூன்று பேருக்கும் திருஷ்டி சுற்றிய பிறகே அவர்களை உள்ளே விட்டான்.
“அப்பா, “எங்களுக்கு மட்டும் தான் திருஷ்டி இருக்குமா, உங்களுக்கும் சுத்துங்க…” என்றாள் மகள்.
“என் மேல எல்லாம் உன் அம்மாவைத் தவிர யாரு குட்டிம்மா கண்ணு வைக்கப் போறா…” என்றான் சற்று சொட்டை விழத் தொடங்கியிருந்த தலையைத் தடவியபடி.
“ஹூக்கும்… போங்க நீங்க…” சிணுங்கியபடி யாழினி சிரித்துக் கொண்டே உள்ளே செல்ல, “அம்மாக்கு வெக்கம் போலப்பா…” வசீகரன் சொல்ல சிரித்தனர். ஆனால் எல்லாருக்குமாய் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் அவனுக்கும் கண்ணு படலாம் என்பதை யோசிக்க மறந்து விட்டான்.
“சரி டயர்டா இருக்கும்… போயி டிரஸ் மாத்தி படுங்க…” தந்தை சொல்ல பிள்ளைகள் சென்றனர்.
இலக்கியன் அறைக்குள் வர யாழினி பட்டு சேலையில் அங்கங்கே குத்தி வைத்திருந்த பின்களைக் கழற்றிக் கொண்டிருந்தாள்.
“மா… இந்த நகை எல்லாம் கொஞ்சம் கழற்றிக் குடுங்க…” கணவனைக் கண்டதும் அழைக்க அருகே சென்றான்.
“நகையை மட்டும் கழற்றினா போதுமா…” கேட்டுக் கொண்டே அவள் காதைக் கடிக்க நெளிந்தாள்.
“ப்ச்… கம்முனு இருங்க, இதெல்லாம் எப்படா கழற்றுவோம்னு இருக்கு…”
“அதுக்கென்ன நான் ஹெல்ப் பண்ணறேன்…” என்றவன் சேலையைப் பற்றி இழுக்க பின்னை அவிழ்த்திருந்ததால் சேலை கையோடு வர பிளவுசுடன் நின்றவள், முறைத்தாள்.
“என்னமா நீங்க, சேலைல பின்னு இழுத்திருந்தா என்ன பண்ணறது…” என்று சிணுங்கியவளை கைக்குள் சிறை வைத்தவன் தன்னிடம் இழுக்க நெஞ்சில் சாய்ந்தாள்.
“ரொம்ப டயர்டா இருக்கு… தூங்கலாமா…” கெஞ்சலாய் கேட்கவும் கையை விரித்தவன், “தூங்கு…” என்றான். பாத்ரூமுக்குள் நுழைந்தவள் நைட்டியில் வெளியே வந்தாள். அதற்குள் பட்டுசேலையை மடித்து ஹேங்கரில் போட்டுவிட்டு அவனும் உடை மாறி இருந்தான்.
வெறுமனே கட்டிலில் படுத்திருந்தவனின் அருகில் வந்தவள், “பாத்ரூம் போகலையா…” என்று கேட்க, “கால் எல்லாம் வலிக்குது, ரொம்ப டயர்டா இருக்கு மா…” என்றவனின் நெற்றியில் முத்தமிட்டாள்.
“நான் வேணும்னா காலைப் பிடிச்சு விடட்டுமா…”
“ப்ச்… வேண்டாம், உனக்கும் டயர்டு இருக்கும், தூங்கு…”
“நான் என்ன உங்களைப் போல எல்லா வேலையும் இழுத்துப் போட்டு ஓடிட்டா இருந்தேன்… அலுப்பெல்லாம் சின்னதா குளியல் போட்டதும் ஓடிப் போயிருச்சு…”
அவன் மூக்கில் உரசிக் கொண்டே சொன்னவளை நோக்கி சிரித்தவன், “அப்ப நானும் குளியல் போட்டு வந்துடட்டுமா…” என்று கண்ணடிக்க, அவனது உடல் சோர்வை மாற்றும் சக்தி எது என்பதை அறிந்தவள் நாணத்துடன் தலையாட்டினாள். குளித்து வந்தவனுக்கு வேண்டியது கிடைத்ததும் சந்தோஷ அலுப்பில் கண்ணயர்ந்தவன் நல்ல உறக்கத்துக்கு சென்றான்.
வழக்கம் போல் அவனது கையில் தலை வைத்துப் படுத்திருந்த யாழினிக்கு ஏனோ உறக்கம் வரவில்லை. சிறு புன்னகையுடன் உறங்கும் கணவனின் முகத்தையே கண் எடுக்காமல் பார்க்கத் தோன்றியது.
மனதில் நிறைந்த நெகிழ்ச்சியுடன் இதழில் உறைந்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவள், “ச்சே, தூங்கற மனுஷனை இப்படி ரசிச்சிட்டு இருக்கேனே…” என எண்ணியபடி அவன் கன்னத்தில் முத்தமிட, உறக்கத்திலேயே அவளை அணைத்து இறுக்கிக் கொண்டான் இலக்கியன்.
அவனது நெஞ்சத்து ரோமத்தை வருடிக் கொண்டே கண்ணை மூடிக் கொண்டவள் சுகமான உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
“கண்ணம்மா, எழுந்திருடா…” காதில் ஒலித்த கணவனின் குரலில் கண்ணைத் திறந்தாள் யாழினி.
அவன் ஜாகிங் செல்லத் தயாராய் உடையணிந்து நிற்க சுவரில் திரும்பிப் பார்த்தாள்.
“மணி ஆறாகிடுச்சா, விடிஞ்சதே தெரியலைங்க…” சொன்னபடி எழுந்தவளிடம், “நீ வேணும்னா படும்மா… கதவை மட்டும் சாத்திட்டு வந்திடு…” என்றான்.
“இல்லங்க, அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க, காபி தரேன்… குடிச்சிட்டுப் போகலாம்…”
“நீ பாத்ரூம் போயிட்டு வா, நான் காபி கலந்து வைக்கறேன்…” சொன்னவன் அடுக்களைக்கு செல்ல தலையை இட வலமாய் சந்தோஷமாய் ஆட்டிவிட்டு எழுந்து குளியலறைக்குள் நுழைந்தாள் யாழினி. அவள் வருவதற்குள் ஆவி பறக்கும் காபி தயாராய் இருந்தது.
அவளுக்கு ஒரு கப்பை நீட்டிவிட்டு தானும் ஒரு கப்பை எடுத்துக் கொண்டான்.
அவள் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவன் திரும்பி, “என்ன கண்ணம்மா, ஏதாச்சும் சொல்லனுமா…” என்று கேட்க புன்னகைத்தாள் யாழினி.
“ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் என்னைப் போல லக்கி யாருமே இல்லன்னு உணர வைக்கறிங்க மா…” சொல்லிக் கொண்டே எழுந்து அவன் கழுத்தை தனது கரங்களால் சுற்றிக் கொள்ள சிரித்தான்.
“இது என் குடும்பம் மட்டுமில்ல கண்ணம்மா, என் உலகமே என் குடும்பம் தான்… நான் என் உலகத்தை ரொம்ப நேசிக்கிறேன்…” அவன் சொல்லவும் கண்கள் பனிக்க அவன் காதை செல்லமாய் கடித்தவள், “லவ் யூ மா… லவ் யூ சோ மச்…” என்று பின்னிருந்து அணைத்துக் கொண்டாள்.
அவள் மிகவும் நெகிழ்ந்திருப்பதை உணர்ந்த இலக்கியன், “எதுவா இருந்தாலும் தமிழ்ல சொல்லுங்க மேடம்… நமக்கு இந்த இங்க்லீஷ் எல்லாம் செட் ஆவாது…” என்றான் புன்னகையுடன்.
“இங்க்லீஷ் தெரியாதவனுக்கும் ஐ லவ் யூ க்கு அர்த்தம் தெரியாம இருக்காது… ரொம்ப தான் பண்ணாதிங்க மா…” என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.
உன் முத்த மழைக்கு
என் வெட்கங்கள்
குடை விரிக்கிறது…
“சரி டைம் ஆச்சு, நான் போறேன்…” அவன் சொல்லவும், “ப்ச்… எத்தன முறை இப்படி சொல்லாதிங்கனு சொல்லிருக்கேன்…” அவள் முறைக்க, “ஓ… சாரி, சாரி… போயிட்டு வரேன்…” என்றவன் எழுந்து கொண்டான்.
அவன் சென்றதும் கதவை சாத்திவிட்டு வந்தவள் பிள்ளைகளை எழுப்பி விட்டு சமையலைத் தொடங்கினாள்.
ஒவ்வொரு நொடியிலும்
நேசத்தை விதைக்கிறாய்…
பார்க்கும் பூவிலெல்லாம்
உன் வாசம் நுகர்கிறேன்…
நேசமெனும் வேலிக்குள்
கருவறை சேயாய்
நிதமும் உணர்கிறேன்…

Advertisement