Advertisement

அடுத்து வந்த நாட்களும் இவர்கள் இருவரும் அன்னையின் நினைவில் அழுது கொண்டிருக்க, இயல்பாய் இருந்த மாலினியைக் கண்டு எப்படி இவளால் இப்படி இருக்க முடிகிறதென்று மலைப்பாய் இருந்தது.
ஐந்தாம் நாள் காரியம் வைப்பதாய் முடிவு செய்திருந்தனர். 
“யாழினி, தினமும் புதுசு புதுசா சேலை கட்டற… உன் புருஷன் துணிக் கடையே உனக்கு வாங்கிக் கொடுத்துட்டாரா என்ன… ஹூம், நான் உடுத்துற சேலையும் பாரு… நீ கொடுத்து வச்சவடி…” பெருமூச்சு விட்ட அக்காவைக் கண்டு எரிச்சல் தான் வந்தது அவளுக்கு. அன்னைக்கு இப்படி என்றதும் அப்படியே ஓடி வந்திருந்தாள் யாழினி. கடைக்கு சென்றிருந்த இலக்கியன் தான் பிறகு வீட்டுக்கு சென்று அவளுக்கு மாற்று உடைகளை எடுத்து வந்திருந்தான்.
அது கூட, அதுவும் மரண வீட்டில் அக்காவின் கண்ணை உறுத்துவதைக் கண்டு மலைத்துப் போனாள். அவளுக்கு பதில் சொல்லும் நிலையிலும் யாழினி இல்லை. அன்னையின் இழப்பு அவளைத் துவண்டு போக செய்திருந்தது.
அவர்களின் வீட்டை வாடகைக்கு கொடுப்பது என அண்ணன்கள் முடிவு செய்தனர். ஹோட்டலில் கிடைக்கும் வருமானத்தில் மற்ற சகோதரர்களுக்கும் மாதம் ஒரு தொகை பிரித்துக் கொடுக்க வேண்டும் என சொல்ல சின்ன அண்ணனின் மனைவி சம்மதிக்கவில்லை.
“ஹோட்டலைப் பார்த்து நடத்துறது எல்லாம் என் புருஷன்… பங்கு மட்டும் எல்லாருக்கும் வேணுமா…” என்று கேட்க, மாதம் அவருக்கு ஒரு தொகையை சம்பளம் போல் எடுத்துக் கொள்ள சம்மதித்தனர் மூத்த அண்ணன்கள். வீட்டை வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தையும், ஹோட்டலில் மீதமுள்ள வருமானத்தையும் சமமாய் பிரிக்க வேண்டும் என்று உடன்படிக்கை செய்து கொண்டனர்.
அன்னையின் காரியம் முடிவதற்குள் வீடு, ஹோட்டல், உடன் பிறப்புகள் என எல்லாமே அந்நியமாகிப் போனது போல் தோன்றியது யாழினிக்கு.
எல்லாம் முடிந்து அவரவர் வீட்டுக்கு கிளம்பினர். வீட்டுக்கு வந்த பிறகும் அடிக்கடி அன்னையை நினைத்து அழுது கொண்டு சுருண்டு படுத்துக் கொண்டாள்.
“அம்மா, அழாத… பாட்டி சாமியா இருந்து நம்மளைப் பார்த்துப்பாங்க…” தந்தை அவளை சமாதானப்படுத்த சொன்னதை தன் அன்னைக்கு சொன்னாள் வெண்பா.
வசீகரன் அன்னையின் மடியில் அமர்ந்து கொண்டு அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான்.
குழந்தைகளுக்கும் அவளுக்கும் ஹார்லிக்ஸ் கலந்து எடுத்து வந்த இலக்கியன், “கண்ணம்மா, என்னடா இ,து இப்படி அழுதுட்டே இருந்தா பிள்ளைங்களும் பீல் பண்ணறாங்க பாரு… எழுந்து இதைக் குடி…” என்றான்.
“வெண்பா, ரெண்டு பேரும் இதைக் குடிச்சிட்டு டீவி பாருங்க… அப்பா, அம்மாவை அழைச்சிட்டு வரேன்…” என்று சொல்லியவன் வெண்பாவுக்கு ஒரு கிளாசையும், வசீகரனுக்கு ஸ்ட்ரா உள்ள பாட்டிலையும் நீட்ட வாங்கிக் கொண்டவள் தம்பியின் கை பிடித்து அழைத்துச் சென்றாள்.
“வசீ, வா… அம்மா ரெஸ்ட் எடுக்கட்டும்… நாம கார்ட்டூன் பார்க்கலாம்…” என்றவளுக்கு அந்த வயதிலேயே நல்ல புரிதலும், சூழலைப் புரிந்து நடந்து கொள்ளும் பக்குவமும் இலக்கியனைப் போல இயல்பாகவே இருந்தது.
“ப்ச்… எனக்கு வேண்டாம்… அம்மா இப்ப இல்லியேங்க… இனி அம்மாவைப் பார்க்க முடியாதுன்னு நினைக்கும்போது என்னால தாங்கிக்கவே முடியல… எனக்கு எதுவும் வருத்தம்னா அம்மா மடில தான படுத்திட்டு அழுவேன்… எனக்கு உடம்புக்கு முடியலினா அம்மாவத்தான தேடுவேன்… இனி அந்த அம்மா இல்லியே… நான் யாரை அம்மான்னு கூப்பிடுவேன்…” என்றவள் மீண்டும் அழத் தொடங்க அருகே அமர்ந்து தோளோடு அணைத்துக் கொண்டான்.
அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு தேம்பினாள் யாழினி. சிறிது நேரம் அழ விட்டவன் அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணைத் துடைத்து விட்டான்.
“கண்ணம்மா, ப்ச்… அழாம ஒரு நிமிஷம் என்னைப் பாரு…” என்றவனைக் கண்ணீருடன் ஏறிட்டாள் யாழினி.
“உனக்கு எதுவும் வருத்தம்னா என்கிட்ட சொல்ல மாட்டியா… என் மடில படுத்துக்க மாட்டியா… நீ என் முதல் குழந்தைடி… உனக்கு அம்மாவா நான் இருக்கேன்… அம்மா இல்லேன்னு அழாம என்னை உன் அம்மாவா நினைச்சுக்க…” என்றவனை திகைப்புடன் நோக்கியவள் விழிகள் மீண்டும் உடைப்பெடுக்க கண்ணீருடன் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
“ம்மா… ம்மா…” என்று அரற்றினாள்.
“சரி கண்ணம்மா, இதைக் குடி…” என்றவன் அவளுக்கு ஹார்லிக்ஸ் கிளாசை எடுத்து நீட்ட, “ம்மா…” என்று கேவியவள் வாங்காமல் அவனையே பார்க்க, “அம்மா சொன்னா கேட்க மாட்டியா… குடிமா…” என்று சொல்ல அவனில், அன்னையின் பரிவும், அக்கறையும் உணர்ந்தாளோ என்னவோ வாங்கிக் கொண்டவள், “சரிம்மா… நான் குடிக்கறேன்…” என்று ஒரே மூச்சில் குடித்து முடித்தாள்.
“தலை ஒழுங்கா சீவாம கலைஞ்சு கிடக்குது பாரு… நான் சீவிவிடறேன்…” என்றவன் அவள் தலையை சீவி ஒதுக்கி தெரிந்த போல பின்னல் போட்டு விட்டான்.
“முகத்தைக் கழுவிட்டு வா…” என்றதும் சென்று முகம் கழுவி வந்தவள் அவன் முகத்தையே பார்த்தாள்.
“என்னம்மா…” என்றவனின் அன்பான குரலில், “ஒண்ணும் இல்லம்மா… நான் அழலைமா… பாரு, கண்ணுல தண்ணியே வரலைம்மா…” என்றவள் அவனையே உற்றுப் பார்க்க அவள் தோளில் கையிட்டு அணைப்புடனே பிள்ளைகளிடம் அழைத்து வந்தான் இலக்கியன். “கண்ணம்மா, இன்னிக்கு ஏதும் சமைக்க வேண்டாம்… ஹோட்டல்ல வாங்கிக்கலாம்…” என்றவன் குழந்தைகளுடன் அவளை அமர்த்தினான்.
“அம்மா, ஜெர்ரி பாவம் தான… டாம் கித்த அவனை அதிக்க வேண்டாம் சொல்லு…” அவள் மடியில் ஏறி அமர்ந்து கொண்ட வசீகரன் சொல்லவும், மெல்ல புன்னகைத்தாள்.
“டேய் வசீ, என்ன நீயும் அம்மா போல ஜெர்ரி பாவம் சொல்லற… என்னெல்லாம் வேலை பண்ணறான்… டாம்க்கு அவனால தான் அடி விழுந்துச்சு…” என்றாள் வெண்பா.
அவர்கள் பேசுவதைக் கேட்டு மனசு லேசாக இலக்கியனின் தோளில் சாய்ந்தபடி மகனை மடியில் அமர வைத்திருந்தாள். வெண்பாவும் அவளது அருகில் வந்து அமர்ந்து கொள்ள அவளை ஒரு கையால் அணைத்துக் கொண்டாள்.
“கண்ணம்மா, நீ இவங்களோட டீவி பார்த்திட்டு இரு… நான் ஹோட்டலுக்குப் போயிட்டு வந்திடறேன்…” இலக்கியன் சொல்லவும், “ம்ம்… சரிம்மா…” என்று இயல்பாய் தன்னை அன்னையாய் ஏற்றுக் கொண்டவளை மெல்ல அணைத்து நெற்றியில் முத்தமிட, “ப்பா… நானும் வதேன்…” தந்தையிடம் தாவினான் வசீகரன்.
“சரிடா, என் சிங்கக் குட்டி…” மகனை எடுத்துக் கொண்டவன், “வெண்பா, அம்மாவைப் பார்துக்கடா செல்லம்… அப்பாவும், தம்பியும் சாப்பாடு வாங்கிட்டு வந்துடறோம்… உனக்கு என்ன வேணும்…” என்றான் மகளிடம்.
“எனக்கு பிரியாணிப்பா…” என்ற வெண்பா, “அம்மாக்கும் பிரியாணி தான் பிடிக்கும், அதே வாங்கிக்கங்க…” என்று சொல்ல, யாழினியின் முகத்தைப் பார்த்தான் இலக்கியன். “ம்ம்… அதே போதும் மா…” அவள் சொல்லவும் இருவரும் பைக்கில் கிளம்பினர்.
அதற்குப் பிறகு இன்னும் அவளை அக்கறையுடன் பார்த்துக் கொண்டான் இலக்கியன். அவனது நேசத்தில் தாய்க்கான தேடல் மறந்து அவனில் தன் தாயை உணர்ந்து கொண்டிருந்தாள் யாழினி. பர்வதமும் மருமகளுக்குத் தனிமை கொடுக்காமல் அவளைப் தன் மகள் போல் பார்த்துக் கொண்டார். நாட்கள் அதன் பாட்டில் செல்ல குழந்தைகள் வளரத் தொடங்கினர். யாழினியும் கால ஓட்டத்தில் இயல்பாகி இருந்தாள்.
“ம்மா… வெண்பா ஸ்கூல்ல எல்கேஜி அட்மிஷன் தொடங்கிட்டாங்க போல… அவ மிஸ் சொல்லி விட்டிருக்காங்க… நாளைக்குப் போயி நம்ம வசிக்குட்டிக்கு அட்மிஷன் போட்டுட்டு வந்துடலாமா…” குளித்து தலை துவட்டிக் கொண்டிருந்த கணவனிடம் கேட்டாள் யாழினி.
“ம்ம்… சரி கண்ணம்மா… நாளைக்குப் போகலாம்… சாப்பிட எடுத்து வை… நான் கடைக்கு கிளம்பறேன்…” என்றவன் உடை மாற்றத் தொடங்க யாழினி அடுக்களைக்கு சென்றாள். பேன்ட்டை மாட்டிக் கொண்டு பெல்ட்டை எடுத்தவன் அது கீழே விழவும் எடுப்பதற்காய் குனிந்தான்.
சுளீர் என்று மின்னலாய் அடி வயிற்றில் ஒரு வலி பரவ தாங்க முடியாமல் முகத்தை சுளித்தவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு நின்று விட்டான். ஒரு நிமிடத்தில் அந்த வலி நின்று போக குனிந்து வயிற்றில் அங்கங்கே அமர்த்திப் பார்க்க, வலிக்கவில்லை. எங்கிருந்து வலித்ததென்று கண்டு பிடிக்க முடியாமல் தவிப்புடன் அதையே யோசித்தபடி நின்றவன் யாழினியின் குரலில் கலைந்தான்.
“ம்மா, சாப்பிட வாங்க, சூடாறிடப் போகுது…”
“இதோ வரேன் மா…” என்றவன் உடையை அணிந்து கொண்டு சாப்பிட வந்தான். எப்போதும் தனக்கு முதலில் ஒரு வாய் ஊட்டிவிட்டு சாப்பிடுபவன், இன்று அமைதியாய் சாப்பிடுவதைக் கண்ட யாழினி யோசனையுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
உன் கருவை
வயிற்றில் சுமந்ததால்
தாயாகினேன் நான்…
நித்தம் மனதில்
எனை சுமந்து
சேயாக்கினாய் நீ…
முன்னது தொப்புள் கொடி
பந்தமென்றால் பின்னது
தாலிக் கொடி
சொந்தமன்றோ…

Advertisement