Advertisement

அத்தியாயம் – 18
“வசீ, அக்கா பாரு, சிரி…”
வெண்பா சொல்லவும் அவளை நோக்கி பளிச்சென்று சிரித்தான் வசீகரன். அன்னையின் நிறத்தில் தந்தையின் ஜாடையில் மனதை அள்ளினான் குழந்தை. அவனை மடியில் வைத்திருந்த பர்வதத்தின் முகமும் மலர்ந்தது.
“என் பேரனுக்கு சிரிப்பைப் பாரு… அப்படியே அவன் அப்பாவை உரிச்சு வச்சிருக்கான்…” சொன்னவர் அவன் கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தார்.
“பொய் சொல்லாத பாட்டி… நான்தான் அப்பா மாதிரி கலரா இருக்கேன்… இவன் அம்மா மாதிரி கறுப்பு…”
“கறுப்பா இருந்தாலும் என் பேரன் எவ்ளோ களையா இருக்கான் பாரு…” அவர் சொல்லும்போது மீண்டும் சிரித்தவனை, “என் செல்லம்…” என அணைத்துக் கொண்டார்.
குழந்தை வசீகரனுக்கு ஆறு மாதம் ஆகியிருந்தது. வெண்பாவை பிரசவத்துக்கு தாய் வீட்டுக்கு அனுப்பாமல் வசந்தாவை இங்கே அழைத்து வந்து விட்டான் இலக்கியன்.
குழந்தை பிறந்து மூன்று மாதத்திற்குப் பிறகே அவர் தனது வீட்டுக்கு சென்றார். இப்போது கடையை முழுமையாய் சின்ன மகனின் பொறுப்பிலேயே விட்டுவிட்டார்.
“யாழினி குழந்தைல ஒல்லியா இருப்பா… ஆனா இவன் கொழு கொழுன்னு குட்டி கிருஷ்ணன் போல இருக்கான்…” குழந்தையைக் காண வந்த மாலினி வாய் விட்டு சொன்னதைக் கேட்ட இலக்கியனுக்கு பிடிக்கவில்லை.
“ஹூம்… முன்னமே அவளைத் தலைல வச்சிட்டு ஆடுவாங்க… இப்ப இந்த குடும்பத்துக்கு ஆண் வாரிசை வேற பெத்துக் கொடுத்திருக்கா… இனி சொல்லவே வேண்டாம்…” மனதுக்குள் ஓடிய கவிதாவின் எண்ணம் முகத்திலேயே தெரிந்தது. தேவி அதிகம் ஒட்டாமல் விலகியே இருந்தாள். குழந்தையின் பெயர் வைக்கும் விசேஷத்திற்கு வந்தவர்களின் முகத்தைக் கண்ட இலக்கியன் அன்று மூன்று பேருக்கும் திருஷ்டி கழித்தான். அன்றிலிருந்து தினமும் இரவு மனைவி, குழந்தைகளை நிற்க வைத்து சுற்றிப் போடுவதை வழக்கமாக்கிக் கொண்டான்.
“என்னங்க, இதெல்லாம் நீங்க பண்ணனுமா… பாக்குறவங்க என்ன நினைப்பாங்க அம்மாவோ, அத்தையோ பண்ணட்டும்…” யாழினி சொல்லியும் அவன் கேட்பதாயில்லை.
“மத்தவங்க நினைக்கறதைப் பத்தி எனக்கு கவலை இல்லை… நான் செய்தா தான் எனக்கு திருப்தியா இருக்கும்… ஒவ்வொரு கண்ணையும் பார்த்தேல்ல… எல்லாம் கொள்ளிக் கண்ணு… வயிதெரிச்சல்லயே பொசுக்கிருவாங்க போல…” என்றவனிடம் என்ன சொல்லவென்று புரியவில்லை.
“டேய் மருமகனே… இத்தனை பொண்ணுகளைப் பெத்து வச்சிருக்கோம்… யாரையும் கட்டிக்க முடியாம இப்படி ஜூனியர் மாப்பிள்ளையா போயிட்டியேடா…” கிருபா சொல்லி வருத்தப்பட அவளது மகள் சிரித்தாள்.
“பரவால்ல மா… எனக்கு இவனையே கட்டி வை… நான் இடுப்புல வச்சுப் பார்த்துக்கறேன்…” எனவும் சிரித்தனர்.
“நீலாக்கா, அப்படி சொல்லாத… நாங்க என் தம்பியை யாருக்கும் கட்டித் தர மாட்டோம்… நாங்களே வச்சுப்போம்…”
“இதப்பாருடா, அக்காகாரி பேசறதை…” என்ற பிரபா, “ஏண்டி வெண்பா, உன் அப்பாவை உன் அம்மாக்குக் கட்டிக் கொடுக்காம நாங்களே வச்சிருந்தா எப்படி நீங்க வந்திருப்பீங்க…” எனவும் அனைவரும் சிரிக்க வெண்பா புரியாமல் முழித்தாள்.
“ஏய், சின்னப்புள்ள கிட்ட பேசற பேச்சைப் பாரு…” பர்வதம் மகளைத் திட்ட, “வெண்பாக்குட்டி, உனக்கு யாரைப் பிடிக்கும் சொல்லு… உன் தம்பியா, என் தம்பியா…” என்றாள் கிருபா.
“எனக்கு என் தம்பியை தான் பிடிக்கும்… ஆனா என் அப்பாதான் எனக்கு உயிரு…” என்ற மகளை நோக்கிப் புன்னகைத்தான் இலக்கியன்.
“அப்ப அம்மாவைப் பிடிக்காதா…” நீலா வேண்டுமென்றே கேட்க, “ஓ பிடிக்குமே… அப்பா எனக்கு உசுருன்னா அம்மா அப்பாவோட உசுரு… எப்படிப் பிடிக்காம இருக்கும்…” மகளை நெகிழ்வுடன் பார்த்தவன் மனைவியை நோக்க அவள் பெருமையுடன் கணவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நாட்கள் அழகாய் நகரத் தொடங்கியது வசீகரனும் வளரத் தொடங்க இரண்டு வயது முடிந்திருந்தது. வெண்பா இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா, நாளைக்கு எனக்கு லீவு தான, வசந்தாப் பாட்டி வீட்டுக்குப் போலாமா…” வெண்பா கேட்க, “ம்ம்… சரிடா குட்டி… பாட்டிக்கு உடம்பு சரியில்லன்னு காலைல போன் பண்ணினப்ப சொல்லிட்டு இருந்தாங்க, போயிட்டு வரலாம்…” என்றாள் யாழினி.
கணவனிடம் அன்னையின் வீட்டுக்கு செல்லுவதாய் சொல்ல அவனே காலையில் விட்டுவிட்டு மாலை அழைத்துக் கொள்வதாய் சொன்னான்.
இவர்கள் செல்லும்போது வசந்தா படுத்திருந்தார்.
“பாட்டி….” அழைத்துக் கொண்டே வெண்பா வீட்டுக்குள் ஓட, மகனை எடுத்துக் கொண்டு மனைவியுடன் உள்ளே வந்தான் இலக்கியன்.
“அம்மா…” யாழினியும் அழைக்க அறைக்குள்ளிருந்து குரல் கொடுத்தார்.
“கண்ணம்மா… வரேன்டா…” என்றதும் அங்கே செல்ல கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தவர் இலக்கியனைக் கண்டதும் எழுந்தார்.
“வாங்க மாப்பிள்ள… என்னமோ ரெண்டு நாளா தலை சுத்தலாவே இருக்கு… முடியல, அதான் படுத்திருந்தேன்…”
“என்னம்மா, முடியலைனா தனியா எதுக்கு இருக்க, அங்க வந்துட வேண்டியது தான…” யாழினி சொல்ல, “வாங்கத்தை, டாக்டர் பார்த்திட்டு வந்திடலாம்…” என்றான் இலக்கியன்.
“நேத்தே சின்னவன் கூட்டிட்டுப் போனான் மாப்பிள… மாத்திரை குடுத்திருக்கார்… நீங்க உக்காருங்க, காபி போடறேன்…” என்றவரை, “நீ படும்மா நான் பார்த்துக்கறேன்…” என்றவளிடம், “எனக்கு எதுவும் வேண்டாம் மா, அத்தைக்கு எதுவும் வேணுமா பாரு… நான் கிளம்பறேன்…” என்றவன் அவரிடமும் சொல்லிவிட்டு சென்றான்.
அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த வசீகரன், “பாத்தி, வா…” என்று சொல்ல அவனிடம் புன்னகையோடு குனிந்தவரின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தவன், “ஸ்ஸ், பாத்தி பாவம்… டாத்தர் ஊசி போணும்…” என்றான்.
“என் செல்லமே…” என்று பேரனை அணைத்துக் கொண்டவரிடம், “பாட்டி… நானும் இங்கதான் இருக்கேன்…” என்றாள் வெண்பா. “வாடி என் ராசாத்தி…” என்றவர் அவளையும் உச்சி முகர்ந்து முத்தமிட்டார்.
“அம்மா, ஏதாச்சும் சாப்பிட்டியா…” யாழினி கேட்க, “கொஞ்சம் கஞ்சி குடிச்சேன் மா…” என்றார் வசந்தா.
“சரி, நீ படு… அண்ணன் டாக்டருகிட்ட காட்டிட்டு உன்னைத் தனியா இங்க விட்டுட்டுப் போயிருச்சா…”
“அவன் என்னடி பண்ணுவான்… அந்த வீட்டுக்கு அழைச்சிட்டுப் போனா உன் அண்ணிகாரி மூஞ்சக் காமிப்பா… அதுக்கு இங்கயே நிம்மதியாப் படுத்துக்குவேன்…”
“சரி, சமைக்க எதுவும் இருக்கா… நான் சமைக்கிறேன்…”
“காய் இருக்கும் பாரு… புள்ளைகளுக்கு காய் போட்டு பிரியாணி செய்து குடு…” என்றார்.
“முதல்ல உனக்கு சூப் வச்சுத் தரேன்… சூடாக் குடிக்கறியா…” என்ற மகளிடம், “சரி கண்ணம்மா… புள்ளைகளைப் பார்த்ததுமே எனக்கு தெம்பா இருக்கு…” என்றவரை நோக்கி  சிரித்துவிட்டு அடுக்களைக்கு சென்றாள். மதியம் கணவனை அங்கே சாப்பிட வருமாறு அழைக்க அவனுக்கு ஏதோ வேலை இருப்பதால் வர முடியாது மாலை வருகிறேன்… என்று சொல்லிவிட்டான்.
மாலையில் அவன் வந்து இவர்களை அழைத்துச் செல்லவும் மீண்டும் வீடு நிசப்தமானது. தன்னையும் வீட்டுக்கு அழைத்த மகளிடம் பிறகு வருவதாய் சொல்லி மறுத்துவிட்டார். ஆணும் பெண்ணுமாய் ஆறு குழந்தைகளைப் பெற்றும் அனாதை போல் தனித்துக் கிடந்தவரின் மனம் வெறுமையில் வாடியது. கணவரின் நினைவில் மனம் ஏங்க பிரிவுத்துயர் தனிமைத்துயருடன் சேர்ந்து வருத்தியது.
இரவு படுத்த வசந்தா காலையில் கண் விழிக்கவே இல்லை.
அவரைத் தனிமையில் விட்டுச் சென்ற மகன்களும் கலங்கி ஓடி வந்தனர். இருக்கும்போது சுமையாய் தோன்றிய உறவுக்கு இறந்த பின்பு கண்ணீர் வடித்தனர். பெண் பிள்ளைகள் தாய் வீட்டு உறவு முடிந்து போன துக்கத்தைக் கண்ணீர் விட்டுக் கரைத்துக் கொண்டிருந்தனர். யாழினி தான் மிகவும் அழுதாள்.
“ஐயோ அம்மா… உன்னை வற்புறுத்தி என்னோடவே கூட்டிட்டுப் போகாம விட்டுட்டனே…” என கலங்கினாள்.
எல்லாம் முடிந்தது. சுடர் விட்டு எரியும் தீபத்தின் முன் அழகாய் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார் வசந்தா.  உறவுப் பெண்கள் வீட்டைக் கழுவிக் கொண்டிருக்க இரவு உணவுக்கு உப்புமா தயாராகிக் கொண்டிருந்தது.
யாழினி, சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த ரூபினியின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்க, வெண்பா கவலையுடன் அன்னையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இலக்கியன் மகனை வைத்திருந்தான். எல்லாரும் அழுததில் களைத்து சோர்ந்திருந்தனர். ஆண்கள் அடுத்து செய்ய வேண்டியதைப் பற்றி வாசலில் போட்டிருந்த  பந்தலுக்கடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
குளித்து உடை மாற்றி வந்த மாலினி சகோதரிகளின் அருகில் வந்து அமர்ந்தாள்.
சிறிது நேரம் சோகமாய் அமர்ந்திருந்தவளின் பார்வை யாழினியின் மீது படிய அடிக்கடி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“போதும்டி, அழுதது… எழுந்து உக்காரு… இனி எத்தனை அழுதாலும் அம்மா வரப் போறதில்லை…” என்றவளின் வார்த்தைகளைக் கேட்டு ரூபினியும் யாழினியும் அதிர்ந்து நோக்க, “யாழினி, அழுதழுது உனக்கு முடியாமப் போயிடப் போகுது… நீ வேற முன்னமே உடம்புக்கு முடியாம மாத்திரை போடறவ…” என்று சொன்னவளை ஏறிட்டுப் பார்த்த யாழினிக்கு வார்த்தை வரவில்லை.
அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் கூட தனக்கு வலிப்பு வந்ததற்கு இப்போதும் மாத்திரை போடுவதைப் பற்றி குத்தலாய் சொன்ன அக்காவை அதிர்ச்சியாய் பார்த்தாள்.
“ஏய், எந்த நேரத்துல என்னடி பேசற…” ரூபினி தங்கையை அதட்ட, “உண்மைய தானக்கா சொன்னேன்… அம்மா தான் போயி சேர்ந்துட்டாங்க… அழுதழுது இவளுக்கும் ஏதாச்சும் ஆயிட்டா, பசங்க பாவம் தான…” என்றவளை சுட்டுப் பொசுக்கி விடும் கோபம் மூத்தவளின் கண்ணில்.
“நல்லது சொன்னா முறைக்கிற…” என அமைதியானாள்.
“ச்ச்சீ… இந்த நேரத்தில் கூட தன் உடன் பிறந்தவளால் இப்படி நாக்கை சவுக்காய் சுழற்ற முடியுமா என யோசித்தாலும் யாழினி அமைதியாய் இருந்தாள்.

Advertisement