Advertisement

அத்தியாயம் – 17
காதல் கசக்குதையா…
மனம் தான் லவ்
லவ்னு அடிக்கும்
லபோன்னு தான் துடிக்கும்…
தோத்துப் போனா குடிக்கும்…
பைத்தியம் பிடிக்கும்…
டிவியில் ஓடிக் கொண்டிருந்த பாடலை தானும் உடன் முணுமுணுத்துக் கொண்டே மகளின் யூனிபார்மை இஸ்திரி போட்டுக் கொண்டிருந்தான் இலக்கியன்.
வெண்பா மேடம் இப்போது LKG போகத் தொடங்கி விட்டார்.
“சீக்கிரம் சாப்பிடுடி, வண்டி வந்திரும்…” மகளை சாப்பிட வைக்கப் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தாள் அவள் மம்மி.
“மம்மி, போதும்… இனி சாப்பித்தா வயிறு வெதிச்சிடும்…” என்று வயிற்றைத் தொட்டிக் காட்டியவளை முறைத்தாள்.
“ஒரு இட்லி சாப்பிட்டா உன் வயிறு வெடிக்குமா… வெடிச்சாலும் பரவால்ல, இன்னொண்ணு சாப்பிடு…”
“டாதி, மம்மி பாரு… டாச்சர் பண்ணறா… எனக்கு போதும் சொல்லு…” என்றாள் சிணுங்கலுடன்.
“ஏன் உன் வயிறு என்ன, உன் அப்பாகிட்டயா இருக்கு… ஒழுங்கா வாயைக் காட்டு…” மிரட்டியவளிடம், “சரி விடு கண்ணம்மா… அவ தான் போதும்னு சொல்லுறாளே…” என்று சப்போர்ட்டுக்கு வந்த கணவனையும் முறைத்தாள்.
“நீங்க இப்படி செல்லம் கொடுத்து தான் அவ ஓவராப் போயிட்டு இருக்கா…”
“அதெல்லாம் வயித்துக்கு வேண்டியதை சாப்பிட்டுப்பா… நீ வாடா செல்லம், அப்பா யூனிபார்ம் மாட்டி விடறேன்…”
“ம்ம்… குட் டாதி… இந்த மம்மி தான் எப்பவும் தித்திட்டே இருப்பா, பாட் மம்மி…” என்ற மகளின் வாயை பொத்தினான்.
“அடியே… நீ கிளம்பிப் போயிருவ… உன் அம்மா கிட்ட நான்தான் மாட்டிட்டு முழிக்கணும்… மூச்…” என்று வாயில் விரல் வைத்து சொல்லிவிட்டு உடையை அணிவிக்கத் தொடங்க லஞ்ச் பாகுடன் வந்தாள் யாழினி.
சரியாய் வாசலில் ஸ்கூல் வேன் வந்து நிற்கவும், “பை டாதி, பை மம்மி…” கையசைத்து கிளம்பினாள் வெண்பா.
புது வீட்டுக்கு வந்து சில மாதங்கள் ஓடியிருந்தது. இரண்டு படுக்கை அறை, ஹால், சின்னதாய் அடுக்களை என்று சின்ன குடும்பத்திற்குப் போதுமானதாய் அளவான வீடு. மாடியில் அறை கட்டும் பிளானில் வீட்டின் உள்ளேயே மாடிக்குப் படிக்கட்டு வைத்திருந்தனர்.
வீட்டுக்கு வந்ததுமே அவசியமான பொருட்களை எல்லாம் இலக்கியன் வாங்கி இருந்தான். பர்வதம் உபயோகிக்காமல் எடுத்து வைத்திருந்த பாத்திரங்களை எல்லாம் இவர்களுக்கு கொடுத்து விட்டார். கவிதாவும், தேவியும் கணவர்களின் மிரட்டலில் சற்று அடங்கிப் போயிருந்தனர்.
“உஸ்ஸ்… இந்த வெண்பா ஸ்கூலுக்கு கிளம்பறதுக்குள்ள நம்ம பெண்டை எடுத்திடறா…” என்றவன் அடுக்களையில் இருந்த மனைவியிடம் சென்றான்.
“கண்ணம்மா, என்ன பண்ணிட்டு இருக்க… இன்னும் வேலை முடியலையா…”
“ம்ம்… முடிஞ்சுதுங்க, இட்லி ஊத்தி வச்சிருந்தேன்… வெந்திருச்சா பார்த்தேன்… நீங்க குளிக்கப் போகலையா…” கேட்டவளின் அருகில் வந்து நின்றவனின் பார்வை மாற்றத்தைக் கண்டவள் புருவத்தைத் தூக்கி, “என்னவாம்…” என, “ப்ச்…” தோளைக் குலுக்கியவன், “நேத்து புதுசா ஒரு சோப் வாங்கிட்டு வந்தனே… அது நல்லா மணக்குதான்னு பார்த்தேன்…” என்றான் அவள் கழுத்தில் மூக்கால் உரசி.
“நான் குளிச்சிட்டேன், காலைலயே ரொமான்ஸ் பண்ணாம போயி கிளம்பற வழியைப் பாருங்க…” என்றாள் சிலிர்ப்புடன்.
“ப்ச்… மெதுவா கிளம்பலாம்…”
சொல்லிக் கொண்டே அவள் இடுப்பைப் பிடிக்க கூச்சத்தில் நெளிந்தவள், “பிளடி பிஸ்கட்… பேசாமப் போங்க…” என்றாள்.
அவளை இழுத்து கை வளைவுக்குள் கொண்டு வந்தவன், முகமெங்கும் முத்தமிடத் தொடங்க சிணுங்கினாள்.
“ப்ச்… விடுங்க…”
முத்தங்களால்
பூஜை செய்கிறேன்…
சத்தங்களால்
கலைக்காதே…
என்றவன் அவள் இதழ் நோக்கிக் குனிய தள்ளி விட்டவள், “இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை…” என்றாள்.
இதற்கொன்றும் குறைச்சலில்லை
என் கன்னங்களில் உன்
முத்தங்களின் விளைச்சலில்லை…
என்றவனை அதிசயமாய் பார்த்தாள்.
“என் பிளடி பிஸ்கட்டுக்கு என்னாச்சு… இன்னைக்கு கவிதை எல்லாம் பின்னறிங்க… எங்க சுட்டிங்க…”
“போடி… மனுஷனுக்கு இருக்கற காதல் மூடுல கவிதை தானா வருது… அதைக் கிண்டல் பண்ணற…”
“ஓஹோ…”
ஆஹா என்று
சொல்லி நின்றவள்
இன்று ஓஹோ என்று
எள்ளி நிற்கிறாய்…
என் அன்பைக் கிள்ளாதே…
“கிள்ளவும் இல்லை… எள்ளவும் இல்லை… எட்டி நில்லுங்க வேலை இருக்கு…” என்றவளை விடாமல் தன்னோடு இறுக்கிக் கொண்டான் இலக்கியன்..
நீ கவிதை
நான் இலக்கியம்…
எப்படிப் பிரிக்க…
“ஆத்தி, இன்னைக்கு செம பார்ம்ல தான் இருக்கீங்க… விடுங்க வேலை முடிக்கணும்… போயி கிளம்புங்க…”
“ப்ச்… கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பண்ண விடறியாடி… போ போ னு துரத்திட்டே இருக்க…” என்றவன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அறைக்கு சென்றுவிட புன்னகைத்தாள்.
“திருட்டுப் பையா… நீ கோச்சுட்டுப் போனா நான் பின்னாடியே வந்து உன்னை சமாதானம் பண்ணுவேன்… காரியத்தை சாதிச்சுக்கலாம்னு பார்க்கறியா… நடக்காது ராஜா…” என நினைத்துக் கொண்டே மீதமிருந்த வேலைகளை முடித்துவிட்டு வர அப்போதும் இலக்கியன் குளிக்கப் போனது போல் தெரியவில்லை.
அறைக்கு சென்று பார்க்க கட்டிலில் படுத்திருந்தான்.
“என்னங்க கிளம்பலையா…”
“தலை வலிக்குது மா, கொஞ்சம் படுத்திருக்கேன்…” அவன் சொல்லவும் கவலையுடன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.
“தைலம் தேச்சு விடட்டா…” கேட்டவளின் கையை எடுத்து நெஞ்சில் வைத்துக் கொண்டவன், “உன் மடில படுத்துகிட்டா சரியாப் போகிடும்…” என்று சொல்ல, அருகில் அமர்ந்து அவன் தலையை மடியில் எடுத்து வைத்துக் கொண்டாள்.
அவள் இடுப்பைக் கையால் வளைத்துக் கொண்டவன், “இப்ப மாட்டுனியா…” என்று சிரிக்க திணறினாள்.
“ச்சீ… நீங்க ரொம்ப மோசம்… இப்படிதான் என்னை ஏமாத்துறதா…” சிணுங்கினாள்.
“பின்ன… கொஞ்ச நேரம் கொஞ்சலாம்னு கூப்பிட்டா ரொம்ப தான் சிலிர்த்துக்குற…” தன் கைக்குள் வாகாய் அவளைப் பிடித்து மடியில் அமர்த்தினான்.
“வர வர காதல் எல்லாம் காணாமப் போயிருச்சு போல…”
“யாருக்கு எனக்கா… நீங்கதான் நேரத்துல காதல் கசக்குதையா னு பாடிட்டு இருந்திங்க…”
“அப்ப பாடினது சும்மா… இப்ப குடுக்கறேன் உம்மா…” என்றபடி அவள் கன்னத்தில் முத்தமிட நெளிந்தாள்.
“டர்ட்டிப் பையா, குளிக்காம அலும்பு பண்ணிட்டு இருக்க…”
“நீ வேணும்னா என்னைக் குளிக்க வை…” என்றான் அவன்.
“டேய் பிளடி பிஸ்கட், ரொம்பதான் லொள்ளு பண்ணற நல்லதுக்கில்ல…” விரல் நீட்டி மிரட்ட அதில் முத்தமிட்டான்.
“என்னடி பிளாக் சாக்கலேட்… ரொம்ப தான் சிலிர்த்துக்கற… நம்ம பட்டர் பிஸ்கட்டுக்குத் துணையா ஒரு சாக்கலேட் பிஸ்கட் வேண்டாமா… அவளும் எவ்ளோ நாளா எனக்கு ஒரு தம்பிப் பாப்பா வேணும்னு கேட்டுட்டே இருக்கா…”
“அதுக்காக… நாம என்ன பேக்கரியா நடத்தறோம்… கேட்டதும் எடுத்துட்டு வந்து கொடுக்கிறதுக்கு… அதுக்கெல்லாம் ஒரு நேரம் காலம் வரணும்ல…” சொல்லிக் கொண்டே போனவளிடம், “அதெல்லாம் வந்தாச்சு, இனியும் உன்னைப் பேச விட்டா சரியா வராது…” என்றவனின் இதழ் அவள் இதழை நோக்கிக் குனிய முதலில் திமிறியவள் அவனது காதலில் கரைந்து போகத் தொடங்கினாள்.
அவளது விரல்கள் அவன் நெஞ்சத்து ரோமத்தில் விளையாடிக் கொண்டிருக்க அவளில் விளையாட்டை ஆரம்பித்திருந்தான் இலக்கியன்.
எல்லாம் முடிந்து கலைந்து, களைத்து ஒருவருக்குள் ஒருவராய் அணைத்துக் கண் மூடிக் கிடந்தவர்களை அலைபேசி சிணுங்கி எழுப்பி விட்டது.
கடையிலிருந்து போன் வரவே, இலக்கியன் பேசிக் கொண்டிருந்தான். யாழினி குளிக்க சென்றாள்.
அவள் வந்து சாப்பிட எல்லாம் எடுத்து வைக்கும் நேரத்தில் வேகமாய் குளித்துவிட்டு வந்தான் இலக்கியன்.
“சீக்கிரம் கடைக்குப் போகணும் கண்ணம்மா… கோவில் கமிட்டில இருந்து இந்த வருஷத் திருவிழாக்கு லைட் செட்டிங்க்ஸ் போடுற விஷயமா பேச வரேன்னாராம்…”
“ஓ… சாப்பிட எடுத்து வச்சிருக்கேன்…”
“நேரமில்லை கண்ணம்மா… மதியம் வந்துக்கறேன்…” என்றவன் தலையைத் துவட்டி உடை மாற்றத் தொடங்க தட்டில் இட்லியுடன் அவனிடம் வந்தாள். அதைக் கண்டு அவன் சிரிக்க, “என்ன பண்ணுறது… பிள்ளைக்கு தான் ஊட்டி விடணும்னா, புருஷனுக்கும் அதே போல தான்… வாயைத் திறங்க…” என்று சொல்ல வேகமாய் வாங்கிக் கொண்டவன்,
“அப்ப நான் உன் பிள்ளை இல்லையாடி…” என்று வில்லங்கமாய் கண்ணடிக்க முறைத்தாள்.
“அச்சோ, இப்படில்லாம் பேசினா நீங்க சாப்பிடவே வேண்டாம்னு போயிடுவேன்… வேலைக்குப் போற நேரத்துல வில்லங்கம் பண்ணிட்டு, இப்ப சாப்பிடாம கிளம்ப வேண்டியது… அப்பனும் புள்ளையும் ஒரே மாதிரி…” புலம்பினாலும் அவனுக்கு ஊட்டி விடத் தவறவில்லை.
“சரி கண்ணம்மா, நான் கிளம்பறேன்… நீ சாப்பிட்டு மாத்திரை போட மறந்துடாத…” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு கடைக்குக் கிளம்பினான்.
அன்னையின் வீட்டுக்கு நேர் எதிர் வீட்டில் தான் இவர்கள் இருந்தனர். எனவே பர்வதம் அடிக்கடி இவளுக்கு உதவி செய்ய இங்கே வருவார். இலக்கியன் சென்ற சிறிது நேரத்திலேயே முருங்கைக் கீரையுடன் வந்தவர், “யாழினி… அந்த முறத்தை எடுத்திட்டு வா… நான் உருவித் தரேன்… மதியம் இந்த இலையை வனக்கி பொரியல் பண்ணிடு… இலக்கியனுக்கு ரொம்பப் பிடிக்கும்…” என்றார்.
“அத்தை, இட்லி சாப்பிடறீங்களா…”
“சரி, குடு மா… என்னதான் சமையல் சொல்லிக் கொடுத்தாலும் சின்னவளுக்கு உன்னோட கைப்பக்குவம் வர மாட்டேங்குது… உன் சமையல் அப்படியே என் சமையல் போல இருக்கும்…” என்றவருக்கு தட்டில் இட்லியை வைத்துக் கொடுத்துவிட்டு தானும் அமர்ந்தாள்.
இருவரும் பேசிக் கொண்டே இலையை உருவ நிறைய சின்ன வெங்காயம் போட்டு பொரியல் செய்தவள், “இதை வீட்டுக்கு கொண்டு போங்க அத்தை… சின்னவருக்கும் இது பிடிக்கும்…” என நெகிழ்வுடன் மருமகளை நோக்கினார்.
“சரிம்மா… நாளைக்கு கண் ஆசுபத்திரிக்குப் போகணும்… கண்ணு ரொம்ப மங்குது… நீ என்னோட வரியா…”
“சரிங்கத்தை, அவரையும் வர சொல்லறேன்… நாளைக்கு டாக்ஸில போயிட்டு வந்திடலாம்…” சொல்லும் போதே அவளுக்கு ஒருமாதிரி வயிற்றைப் புரட்ட, வாயை மூடிக் கொண்டு ஓடியவள் வாந்தி எடுக்க பர்வதம் மருமகள் பின்னிலேயே ஓடி வந்தார்.
அவளுக்கு சற்று ஆசுவாசமானதும் தண்ணி குடிக்க வைத்தவர், “இந்த மாசம் குளிச்சிட்டியாம்மா…” என்று கேட்க யோசித்தவளுக்கு அப்போது தான் நாள் தள்ளிப் போனது புரிய நாணத்துடன் குனிந்து கொண்டவள், “இல்ல அத்த, தள்ளிப் போயிருக்கு…” எனவும் புன்னகைத்தார்.
“சந்தோசம், முதல்ல உனக்கு டாக்டரைப் பார்த்திடுவோம்… எல்லாரும் பேத்தியா பெத்துக் கொடுத்துட்டாங்க… நீயாச்சும் அடுத்து ஒரு பேரனைப் பெத்துக் குடு…” என்றார் சிரிப்புடன். “சூடா சுக்குக் காபி குடிக்கறியா மா…” கேட்டவரிடம் தலையாட்ட, வைத்து கொண்டு வந்தார்.
“மதியம் இலக்கியன் வரும்போது டாக்டரைப் பார்த்து உறுதி செய்திடுங்க… இப்ப படுத்துக்க… ஏதும் பண்ண வேண்டாம்… ரெஸ்ட் எடு… நான் இதைக் கொடுத்திட்டு வந்திடறேன்…” என்றவர் அவரது வீட்டுக்கு சென்றார்.
“தேவி… இன்னுமா சமைச்சு முடிக்கல… என் பையன் சாப்பிடவே வந்திருவான் போல… இந்தப் பொரியலை அவனுக்குக் கொடு…” என்றவர் மீண்டும் யாழினி வீட்டுக்குக் கிளம்ப அவள் முகத்தை சுளித்தாள்.
“ஹூக்கும், இந்தக் கிழவிக்கு ரொம்ப தான்… இங்க அதிகாரம் பண்ணிட்டு அவ வீட்டுல போயி உக்கார்ந்துக்க வேண்டியது… எனக்கு ஏதாச்சும் ஹெல்ப் பண்ணலாம்ல, தனியா சமைக்க விட்டுட்டு பேச்சுக்கொண்ணும் குறைச்சல் இல்ல…” சொன்னவள் சமையலை கவனிக்கத் தொடங்கினாள்.
மதியம் இலக்கியன் வரவும், “இலக்கியா, சாப்பிட்டு என் மருமகளை டாக்டர் கிட்ட கூட்டிப் போ…” அன்னை சொல்லவும், யோசனையுடன், “என்னம்மா, அவளுக்கு என்னாச்சு…” பதட்டமாய் கேட்டவனிடம், “டேய்… டாக்டர்னா முடியாததுக்கு மட்டும் தான் போவாங்களா… நல்ல விஷயத்துக்கும் போக மாட்டோமா…” எனவும் அவனுக்கு மெல்லப் புரிய குபீரென்று ஒரு உணர்வு தேகத்தில் பரவ முகம் மலர்ந்தவன் மனைவியை நோக்கி, “அப்படியா…” என்று தலையாட்ட அவள் நாணத்துடன், “அப்படிதான்…” என்று பதிலுக்கு தலையாட்டினாள்.
“சரிப்பா, டாக்டர் பார்த்திட்டு சொல்லு… நான் வீட்டுக்குப் போறேன்…” என்ற பர்வதம் கிளம்ப, மனைவியை நோக்கிப் பாய்ந்தவன் அவளைத் தூக்கி சுற்றினான். “அச்சோ விடுங்க…” வெட்கத்துடன் சிணுங்கியவளை இறக்கி விட அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
மஞ்சள் பூசிய முகத்தில்
வெட்கமெனும் குங்குமம்
கலந்து ரசித்திடும்
சாமர்த்தியசாலி நீ…
“கண்ணம்மா, எனக்கு எவ்ளோ சந்தோஷமாருக்கு தெரியுமா… ஆனா எனக்கு ஒண்ணு புரியவே இல்ல…”
“என்ன புரியல…” என்றாள் அவள் யோசனையுடன்.
“காலைல ஜெட் வேகத்துல இருந்தமே… அதான் உடனே ஆயிருச்சா…” என்றவனை முறைத்தவள் செல்லமாய் அவன் நெஞ்சில் குத்தினாள்.
“இருந்தாலும் ரொம்ப தான் உங்களுக்கு குசும்பு… எனக்கு ஆல்ரடி நாள் தள்ளிப் போயிருக்கு…” என்றவளின் நெற்றியில் முத்தமிட்டவன், “என் செல்லம்…” என்று கொஞ்சினான்.
டாக்டரைப் பார்த்து உறுதியாகவும் சந்தோஷமானான். முன்னமே அவளைத் தாங்குபவன் இப்போது தாங்கோ தாங்கென்று தாங்கினான். அவளைக் குழந்தை போல் கவனித்துக் கொண்டான். அவனது சகோதரிகள் அடிக்கடி அவளைக் காண வந்தனர். வசந்தாவும் மகளுக்குப் பிடித்ததை செய்து கொண்டு வருவார். ரூபினி, மாலினியும் வந்து கண்டு சென்றனர். கவிதா, தேவிக்கு பொறாமையில் வயிறு எரிந்தாலும் யாழினியை எந்த விதத்திலும் பாதிக்காமல் வேலியாய் நின்றான் இலக்கியன். அவளை சுடுசொல் பேசும் எவரிடமும் தனியாய் விடாமல் கூடவே இருப்பான். வெண்பா குட்டிக்கு மிகவும் சந்தோஷம்.
“அம்மா… எனக்கு அப்பா போல தம்பிப் பாப்பா தான் வேணும்… தங்கச்சிப் பாப்பா வேணா…”
“ஏன் வேண்டாம்…” யாழினி கேட்க யோசித்தாள். “ஏன்னா, எனக்கு அப்பாவ நொம்ப பிதிக்கும்… அப்ப, தம்பிப் பாப்பாவும் நொம்பப் பிதிக்கும்…” என்ற மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள்,
“உன் அப்பா போல யாராலயும் இருக்க முடியாது குட்டிம்மா…” என்று சொல்ல குழந்தை தலையை பலமாய் ஆட்டி, “என் தம்பி, அப்பா போல தான் இதுப்பான்… எனக்கு தம்பி போதும்…” என்றாள்.
“சரி சரி, தம்பி பிறந்தா எனக்கும் சந்தோஷம் தான்… ஆனா தங்கச்சி பிறந்தா பீல் பண்ணக் கூடாது…”
“இல்லமா, நான் தினமும் சாமிகித்த சொல்லுவேன்… எனக்கு தம்பிப் பாப்பா குதுன்னு…” என்றாள் குழந்தை. அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்த இலக்கியன்,
“அம்மாவும் மகளும் ஏதோ டிஸ்கசன் போலருக்கு…” என்று கேட்க, “என் பொண்ணுக்கு உங்களை மாதிரி தம்பிப் பாப்பா வேணுமாம், வாய்ப்பில்ல மகளேன்னு சொல்லிட்டு இருந்தேன்…” என்றாள் யாழினி.
அவளைக் காதலுடன் நோக்கியவன், “என் வாரிசு என்னைப் போல தானே இருப்பான்…” என்றான் கொஞ்சிக் கொண்டே.
“அச்சோ, ரெண்டு பேரும் கொஞ்சத் தொதங்கியாச்சா… இனி என்னை கவனிக்க மாத்திங்களே… தள்ளுங்க…” என்ற வெண்பா இருவரையும் விலக்கிவிட்டு எழுந்து செல்ல,
“பாருங்க இவளை… எப்பவாச்சும் தான என்னைக் கொஞ்சறீங்க, அது பொறுக்கல அவளுக்கு…” என்று சொல்ல,
“எப்பவும் உன்னைக் கொஞ்சிட்டே இருக்கட்டுமா…” அவளைக் காதலுடன் நெருங்க, “ப்ச்… வயிறு இடிக்குது…” என்றாள். மேடிட்டிருந்த மனைவியின் ஆறு மாத வயிற்றை நேசத்துடன் முத்தமிட்டவன், “நம்ம நேசத்துக்கு வேலியா என் மகன் இருப்பான் கண்ணம்மா…” என்றான்.
“மகன்னு முடிவே பண்ணிட்டிங்களா… ஒருவேளை பொண்ணாப் போயிட்டா, ஏமாந்துடப் போறீங்க…”
“இல்லமா, நிச்சயம் நமக்கு மகன் தான் பிறப்பான்…” என்றவனின் வார்த்தை பலிக்கும் நாள் வந்தது. அந்தக் குடும்பத்தின் அத்தனைப் பெண் வாரிசுகளுக்கு நடுவே ஒரே ஒரு ஆண்மகனாய் தனது அழகான மகனைப் பெற்றெடுத்தாள் யாழினி.
குடும்பமே சந்தோஷித்தாலும் அனைவரின் அடி மனதிலும் தங்களுக்கு ஆண்குழந்தை இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. அதுவும் மூன்று பெண்களைப் பெற்ற கவிதாவின் நிலையும், இதுவரை உண்டாகாமல் இருந்த தேவியின் நிலையும் சொல்லவே முடியாது.
கவிதைக்குப் பஞ்சமெனில்
என் அவளைக் காணுங்கள்…
அவளின் ஒவ்வொரு அழகும்
நேசத்தின் கவி சொல்லும்…

Advertisement