Advertisement

“மாப்பிள, வெண்பாவைக் குளிக்க வச்சிட்டு நீங்களும் குளிச்சிட்டு வாங்க… நைட் எல்லாம் தூங்கிருக்க மாட்டிங்க… சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க…” என்றார் வசந்தா.
எல்லாரும் குளியல் முடிந்து வர வெண்பா அன்னையின் மடியில் அமர வேண்டுமென்று அடம் பிடித்தாள்.
“ப்பா… நானு அம்மாத்த…”
“வேண்டாம் டா, அம்மா டயர்டா இருக்கா… அப்பா ஊட்டி விடறேன்…” இலக்கியன் சொல்ல, “அம்மா இத்தி தா… ப்பா நானா…” என்று தலையை இட வலமாய் ஆட்டிய குழந்தை வாயை இறுக மூடிக் கொள்ள யாழினி மெல்ல சிரித்தாள்.
“இன்னைக்கு என்ன, அம்மா மேல பாசம்…” என்றவள், “டேபிள்ள உக்கார வைங்க… நான் ஊட்டறேன்…” என்று சொல்ல மகளை மேசையில் அமர்த்தினான்.
“ம்மா, கைல என்ன… டாத்தர் ஊசி போத்தாங்களா…”
“ம்ம்… அம்மா குட் கேர்ள் இல்லியாம்… அதான் ஊசி போட்டாங்க… நீ குட் கேர்ளா, பேட் கேர்ளா…” என்று மகளிடம் கேட்டுக் கொண்டே கணவனின் முகத்தைப் பார்க்க அவன் முகம் சிவந்திருந்தது.
மனைவியைப் பார்க்காமலே, “ப்ச்… இது என்ன பேச்சு… சீக்கிரம் சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கப் போ…” என்றான்.
“ஏன், நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா…” என்றவள் அன்னை வருகிறாரா எனப் பார்த்துவிட்டு,
“எனக்கு இப்பவே உங்ககிட்ட ஸ்ட்ராங்கா சாரி சொல்லணும் போலருக்கு…” என்றதும் அவன் கண்கள் கலங்க, எழுந்து கொண்டான்.
“ஏன் மாப்பிள்ள, அதுக்குள்ள எழுந்துட்டிங்க… இட்லி வேண்டாம்னா தோசை ஊத்தட்டுமா…” வசந்தா பதட்டமாய் வந்து கேட்க, “இல்ல அத்த, பசிக்கல…” என்றவன், கை அலம்பி விட்டு அறைக்கு சென்று விட்டான். குழந்தைக்கு ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டு முடித்த யாழினி, “அம்மா அவர் இந்த நேரத்துல சாப்பிட மாட்டார்… ஹாட் பாக்ஸ்ல வச்சிருங்க… அப்புறம் சாப்பிட்டுப்பார்…” என்றுவிட்டு எழுந்து சென்றாள். காலையில் நேரமே எழுந்ததில் இருந்து உறங்காததால் குழந்தைக்கு உறக்கத்தில் கண்கள் சொருகத் தொடங்கியது.
“வெண்பாக் குட்டிக்கு தூக்கம் வருதே… வா, பாட்டி படுக்க வைக்கிறேன்…” என்றவர் அவரது அறைக்குப் பேத்தியைக் கொண்டு சென்று படுக்க வைத்து தட்டிக் கொடுக்க அவள் சட்டென்று உறங்கத் தொடங்கினாள்.
மாத்திரையைக் குடித்துவிட்டு வந்த யாழினியிடம், “நீ போயி படு மா… இவ என்னோட படுக்கட்டும்…” என்றார். மெல்ல மாடிக்கு வந்த யாழினி கணவனை அறையில் காணாமல் மொட்டை மாடிக்கு வர அங்கே நின்று கொண்டு வானத்தை வெறித்தபடி யோசித்துக் கொண்டிருந்தான்.
அவன் பின்னில் வந்து நின்று கையைக் கட்டிக் கொண்டு தோளில் சாய்ந்து கொண்டவளிடம், “காத்துல எதுக்கு மாடிக்கு வந்த…” என்று கேட்க, “நீங்க இங்க தானே இருக்கீங்க பிளடி பிஸ்கட்…” என்றாள் மென்மையாக. “ப்ச்… வா, கீழ போகலாம்…” என்றவன் அவள் கையைப் பிடித்து கீழே அறைக்கு அழைத்து வந்தான்.
“படுத்துத் தூங்கு… டாக்டர் நல்லா ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லி இருக்கார்…” அவன் எங்கோ வெறித்தபடி சொல்ல, “மாட்டேன்… நீங்க என் முகத்தைப் பார்த்துப் பேசுங்க… அதுக்கப்புறம் தூங்கறேன்…” என்றதும் சட்டென்று அவளைப் பார்த்தவன் கண்களில் தெரிந்த தவிப்பும், கண்ணீரும் அவளை உலுக்கிப் போட்டது.
“ஹேய் பிளடி பிஸ்கட்… என்ன இது… குழந்தை போல…” என்றவள் அவனைத் தன்னிடம் இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொள்ள மௌனமாய் அழுதவனின் தலையை அன்போடு கோதி விட்டாள்.
“இன்னொரு முறை உனக்கு எதும் ஆச்சுனா செத்திடுவேன்டி, என்னால தாங்கிக்க முடியல…” என்றவனின் கண்ணீர் அவள் மார்பை நனைக்க அவன் நேசத்தில் நெகிழ்ந்து போனாள்.
“என்னை பயமுறுத்திட்டல்ல… நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்லன்னு காட்டிட்டல்ல… நீ மயங்கி விழுந்த நிமிஷம் என் இதயமே நின்னு போயிடும் போல இருந்துச்சு… எந்தப் பிரச்சனை வந்தாலும் நிமிர்ந்து தைரியமா நிக்காம எவளோ ஏதோ சொன்னதுக்கு இப்படியா இடிஞ்சு போவ… உனக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னோட, வெண்பாவோட நிலமை என்ன… சொன்னவளைப் பளார்னு கன்னத்துல ஒண்ணு விடாம இப்படியா தளர்ந்து போவ…” என்றவனின் கண்ணீர் அவளை சுட்டது.
அவள் மௌனமாய் இருக்க அவளை இழுத்துத் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன், “நீ என் உசுருடி… நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூடப் பார்க்க முடியாது… எல்லாரையும் நேசிச்சு, விட்டுக் கொடுக்கிறது தப்பில்லை… அந்த நேசத்துக்கு அவங்க தகுதியானவங்களா இருக்கணும்… உன்னை சொன்னவளை நீ பளார்னு அறைஞ்சிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்… இப்படி அறுந்து போன பட்டம் போல சரிஞ்சு விழுந்து என்னைக் கலங்க வச்சுட்டியே கண்ணம்மா…”
“ம்ம்… புரியுதுங்க… அவ ஏதோ என் மேல உள்ள பொறாமைல, புருஷன் மேல உள்ள கோபத்துல அப்படிப் பேசிட்டா… அதுக்கு நான் இவ்வளவு சீரியஸ் ஆகியிருக்கக் கூடாது… என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா என்ன… நான் எதுக்கு கவலைப்படணும்…” என்றவளை நோக்கிப் புன்னகைத்தவன், அவள் முகம் முழுதும் முத்தமிட்டான்.
“நாளைக்கு நாம வீட்டுக்குப் போறோம்… நீ தேவியை அறையறதை நான் பார்க்கணும்…” என்றான் ஆணையாக.
“அச்சோ, அவ ஏதோ சொல்லிட்டா, அதுக்காக நான் எப்படிங்க அறையறது… அதெல்லாம் வேண்டாம்…”
“ப்ச்… என் மேல நீ வச்சிருக்கிற நேசம் மேல ஆணையா சொல்லறேன்… எனக்காக நீ இதைப் பண்ணியே ஆகணும்…”
அவனது கண்களில், வார்த்தைகளில் தெரிந்த உறுதியைக் கண்டவள், “ம்ம்… சரி… ஆனா, நீங்க என் கிட்ட சாரி கேட்டா தான் பண்ணுவேன்…” என்று குறும்புடன் சொல்ல அவளை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு இதழ் நோக்கிக் குனிந்தான் இலக்கியன். அவனது கைகளைத் தலையணையாக்கி சுகமாய் உறங்கும் மனைவியை நேசத்துடன் நோக்கிக் கொண்டிருந்தவன் அசதியில் உறங்கத் தொடங்கினான்.
அடுத்த நாள் காலையில் மனைவியுடன் தங்கள் வீட்டுக்கு சென்றான் இலக்கியன். கணவன், அத்தையிடம் நன்றாய் வாங்கிக் கட்டிக் கொண்டிருந்த தேவிக்கு அவளைக் கண்டதும் முகமே செத்துப் போனது.
பயத்துடன் நோக்கிக் கொண்டிருந்தவளின் அருகே சென்றவள், “இனி யாரையும் இப்படி ஒரு வார்த்தை நீ சொல்லக் கூடாது தேவி…” என்றபடி அவளை ஓங்கி அறைந்துவிட்டு கணவனை நோக்கிப் புன்னகைக்க, அவனும் சந்தோஷமாய் சிரித்தான்.
கலங்கிப் போன தேவி, “ஐயோ அக்கா, நான் கோபத்துல தெரியாம சொல்லிட்டேன்… என்னை மன்னிச்சிருங்கக்கா… நாங்க வேணும்னா தனிக்குடித்தனம் போயிடறோம்…” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்க பர்வதமும், இலக்கியனின் தம்பியும் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“பரவால்ல மா, இதுக்காக நீங்க தனியாப் போக வேண்டாம்… நாங்க தனியாப் போயிக்கறோம்…” என்ற இலக்கியனை வியப்புடன் பார்த்த பர்வதம், “என்னப்பா சொல்லற…” என்றார்.
“அம்மா… எங்களோட நீங்களும் வந்திருங்க… நம்ம வாடகைக்கு கொடுத்த எதிர்வீட்டு ஆளுங்க வீட்டைக் காலி பண்ணறோம்னு சொல்லிருக்காங்க… நாம அங்க போயிடுவோம்… இனி எல்லாரும் ஒண்ணா செட் ஆகாது…”
“என்னங்க சொல்லறிங்க, நாம தனியாப் போறதா…” யாழினி கேட்க, “ம்ம்… அதுதான் இனி நம்ம குடும்பத்துக்கு நல்லது…” என்ற மகனை யோசனையுடன் பார்த்தார் பர்வதம்.
“இலக்கியா, நீ சொன்னது சரிதான்… கூட்டுக் குடும்பமா சண்ட போட்டுட்டு இருக்கிறதை விட தனியா இருக்கறதே நல்லது… நீங்க நம்ம எதிர் வீட்டை சரி பண்ணி குடி போயிக்கங்க… ஆனா நான் இங்க தான் இருப்பேன்… இது என் புருஷன் வாழ்ந்த வீடு… அதும் இல்லாம என் சின்ன மருமக வந்து கொஞ்ச நாள் தானே ஆச்சு… அவளுக்கு நல்லது, கெட்டது கத்துக் கொடுக்க நான் கூட இருக்கணும்…” என்றார் புன்னகையுடன்.
“சரிம்மா, உங்க விருப்பம்…” என்று இலக்கியன், அவசியத்துக்கு உடைகளை எடுத்துக் கொண்டு மனைவியை அவள் வீட்டில் கொண்டு போய் விட்டான். வாடகைக்கு இருந்தவர்கள் காலி செய்ததும் அந்த வீட்டில் சிறிது சில்லறை வேலைகளை சரி பண்ணி இப்போது பெயிண்டிங் செய்து கொண்டிருந்தனர். இலக்கியனும் அன்னையைக் காண அங்கே சென்று வந்தாலும் இரவு மனைவியிடம் வந்து விடுவான். இந்த ஒரு வாரத்தில் அவள் தேறி இருந்தாலும் மீண்டும் எந்த ஒரு சோதனைக்கும் அவன் தயாராயில்லை. தேவியும் இப்போது சற்று அடங்கிப் போயிருந்தாள்.
கவிதாவே அவளது பேச்சைக் கேட்டு மிரண்டு, “என்ன இருந்தாலும் இப்படி எல்லாம் பேசி இருக்கக் கூடாது… இப்ப அவங்க தனியாப் போக இதுவே வசதியாப் போயிருச்சு பாரு…” என்று அதற்கும் புலம்பிக் கொண்டிருந்தாள். தினமும் கவிதா வரும்போது இரு மருமகள்களுக்கும் பர்வதம் வேலை கொடுக்கவே அவளும் வருவதைக் குறைத்துக் கொண்டாள். கிருபா, பிரபாவும் தேவியிடம் “சொந்தத்துல கல்யாணம் பண்ணினா குடும்பத்தைக் கலைக்க மாட்டேன்னு நினைச்சா இப்படிப் பண்ணிட்டியே…” என்று குத்தம் சொல்ல தேவிக்கு தனது செயலின் வீரியம் புரிய தவித்துப் போனாள்.
பெரியவரிடமும் சின்னவன் விஷயத்தை சொல்லி, கவிதாவைப் பற்றியும் சொல்ல அவர் மனைவியைக் கண்டிக்க அவளும் சற்று அடங்கிப் போனாள்.
மேலும் ஒரு வாரம் முடிந்திருக்க புது வீட்டுக்கு குடி போக நல்ல நாள் பார்த்து முடிவு செய்தான் இலக்கியன். எல்லாரையும் விசேஷத்துக்கு அழைத்து கணபதி பூஜையுடன் புது வீட்டில் சந்தோஷமாய் குடியேறினர்.
தனக்கென ஒரு வீடு கட்ட
துணுக்குகளைத் தேடி
அலையும் குருவியென
நமக்கென ஒரு கூடு
கட்டுகிறேன் நினைவலையில்…
நேசத்தின் வேலி கொண்டு
தடுப்புச் சுவர் அமைக்கிறேன்…
நேசம் மட்டுமே என்றும்
இங்கு வாழ்ந்திருக்கட்டும்…

Advertisement