Advertisement

அத்தியாயம் – 16
ஒரு வாரம் ஓடி இருந்தது.
“கண்ணம்மா, இந்தா, வல்லாரைக் கீரை சூப்… குடி…” அன்னை கொடுத்த கப்பை வாங்கிக் கொண்டாள் யாழினி.
“எதுக்குமா இதெல்லாம்… எனக்கு தான் சரியாகிடுச்சே…”
“அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா… இந்த ஒரு வாரத்துல எப்படி முகமெல்லாம் வாடிப் போச்சுன்னு பாரு… இந்த சூப் குடிச்சா நல்லதுன்னு சொன்னாங்க…” என்றவர் மகள் அருகே அமர்ந்தார். குடித்து முடித்ததும் அன்னையின் மடியில் தலை வைத்துப் படுக்க, மகளின் தலையை இதமாய் தடவிக் கொடுத்தவரின் கண்கள் கலங்கின.
“உன்னைப் போயி அப்படி சொல்ல அந்தப் பாவி மகளுக்கு எப்படி மனசு வந்துச்சோ… யாருக்கும் ஒரு துரோகமும் நினைக்காம எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கற குழந்த மனசு இவளுக்கு… இவளை இப்படிப் படுக்கப் போட்டுட்டாளே…” மனதுக்குள் நினைத்தாலும் எதுவும் சொல்லாமல் தலையை வருடிக் கொண்டிருந்தார்.
சுகமாய் கண்ணை மூடிக் கொண்டவள், “வெண்பா இன்னும் எழுந்துக்கலையா மா…” என்றாள்.
“அவ எழுந்து பால் குடிச்சிட்டு பக்கத்துக்கு வீட்டுப் பிள்ளைங்களோட விளையாடிட்டு இருக்கா…”
“ம்ம்… ஒரு வாரமா நீ ஹோட்டலுக்குப் போகலியே… உனக்கு நான் சிரமம் கொடுக்கிறேன்ல…”
“என்னடி பேசற… உன்னை விட எனக்கு ஹோட்டலுக்குப் போறது தான் பெருசா… அதெல்லாம் உன் சின்னண்ணன் பார்த்துப்பான்… நீ முன்னமாதிரி எழுந்து உற்சாகமா இருந்தாப் போதும்…”
“ம்ம்…” என்றவள் அமைதியானாள்.
கை கால்கள் வெட்டிக் கொண்டு இழுக்க, வாயில் நுரை தள்ளக் கீழே விழுந்தவளைக் கண்டு இலக்கியன் பதறிப் போனான். கண்கள் மேலே சொருகிக் கொண்டு நாக்கு பற்களுக்கிடையில் சிக்கி கடிபட்டு வாயிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கவும் பயந்து கலங்கியவன் கதறினான்.
“கண்ணம்மா, ஐயோ, என்னடி ஆச்சு உனக்கு…” அவனது கதறலில் மாத்திரை போட்டு நல்ல உறக்கத்தில் இருந்த பர்வதமே முழித்துக் கொண்டு எழுந்து வந்தார்.
தேவி பயத்துடன் நடுங்கிக் கொண்டு நிற்க, சின்னவன் வேகமாய் சென்று அருகில் உள்ளவரின் காரை வாங்கி வந்தான். டாக்டர் புகழேந்திக்கு போனில் விஷயத்தைக் கூறி அவரது கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றனர்.
அதற்குள்ளேயே அவளுக்கு சுய நினைவு லேசாய் திரும்பத் தொடங்கி இருந்தது. சோர்ந்து, கசங்கிய புஷ்பமாய் கிடந்தவளைக் காணக் காண கண்ணில் நீர் நிறைந்து கொண்டே இருந்தது இலக்கியனுக்கு.
டாக்டர் பரிசோதித்து உதட்டில் காயமாகி இருந்த இடத்தில் மருந்து போட்டு அவள் உறங்குவதற்கு ஊசி போட எல்லாம் மறந்து உறங்கத் தொடங்கினாள்.
டாக்டரைக் கண்டதும், “என் கண்ணம்மாக்கு என்னாச்சு டாக்டர்…” என்றவனைப் பரிவுடன் பார்த்தார் புகழேந்தி.
“ம்ம்… பயப்படாத, பெரிய பிரச்சனை எதுவுமில்லை… இப்ப தூங்க ஊசி போட்டிருக்கு… நல்லாத் தூங்கி எழுந்ததும் சரியாகிடுவா… நீ கொஞ்சம் என்னோட வாப்பா…” என்றவர் அவரது அறைக்கு செல்ல தொடர்ந்தான் இலக்கியன்.
“ப்ளீஸ் சொல்லுங்க டாக்டர், அவளுக்கு ஏன் இப்படி வந்துச்சு… அவ துடிச்சதை இப்ப நினைச்சாலும் என்னால தாங்க முடியலை…” என்றவனின் கண்ணில் கண்ணீர்.
“இலக்கியா… உன் பொண்டாட்டிக்கு மனசுல ஏதோ தாங்கிக்க முடியாத வருத்தம்… சட்டுன்னு பிளட் பிரஷர் கூடினதுல இப்படி பிட்ஸ் வந்திருக்கு…”
“அச்சோ, என்ன சொல்லறீங்க டாக்டர், வலிப்பா…”
“ம்ம்… பூமிக்குள்ள வர்ற அதிர்வுகள் எப்படி நிலநடுக்கத்தை உண்டாக்குதோ, அப்படி தான் மூளைல உண்டாகுற மின் அதிர்வுகள் வலிப்புக்கு காரணமாகுது… ஏதோ மனசுக்குத் தாங்கிக்க முடியாத அதிர்ச்சியோ, வருத்தமோ அவ பிரஷரைக் கூட்டி இருக்கு… இப்போதைக்கு ரெஸ்ட் எடுக்கட்டும்… நாளைக்கு பிளட் டெஸ்ட், ஸ்கேன் எல்லாம் எடுத்துப் பார்த்திடலாம்…”
“ஒண்ணும் பிரச்சனை இல்லையே டாக்டர்…” அவன் மீண்டும் கவலையுடன் கேட்க ஆதரவாய் தோளில் தட்டியவர், “இப்ப இந்த அதிர்ச்சிக்கு என்ன காரணம்னு முதல்ல தெரிஞ்சுக்கப்பா… அது மறுபடியும் அவளுக்கு வராமப் பார்த்துகிட்டா சரி பண்ணிடலாம்…” என்றார் நம்பிக்கையுடன்.
இலக்கியனுக்கு தேவியின் முகத்தைக் கண்டபோதே சின்னதாய் சந்தேகம் இருந்தது. அவள் கன்னத்தில் தம்பி அறைந்ததில் கை அடையாளம் வந்திருந்தது. முன்னமே யாழினி அவளைப் பற்றி சொன்னதெல்லாம் நினைவு வர இந்தப் பிரச்சனைக்கு அவள் தான் காரணம் என்று முடிவுக்கு வந்திருந்தான். இலக்கியன் உறங்காமல் இருந்ததால் இவர்களின் சத்தம் மாடிக்கும் கேட்டிருந்தது. கணவன், மனைவிக்குள் ஏதோ வாக்குவாதம் என நினைத்து தான் இடையில் செல்ல வேண்டாம் என்று கண்டு கொள்ளாமல் இருந்தான்.
ஆனால் இப்போது அவர்கள் வாக்குவாதம் தான் தன் மனைவியின் நிலைக்குக் காரணமோ என யோசித்தவனுக்கு யாழினி மகளைத் தன்னிடம் விட்டுவிட்டு வேகமாய் பால் கிளாசை எடுத்துக் கொண்டு கீழே சென்றது நினைவு வந்தது. யாழினியுடன் இலக்கியனும், தம்பியும் மட்டுமே வந்திருந்தனர். பர்வதத்தை குழந்தையைப் பார்த்துக் கொள்ள சொல்லி வர வேண்டாம் என்றிருந்தான்.
கவலையுடன் தலையில் கை வைத்து அமர்ந்திருந்த தம்பியின் அருகே சென்று அமர்ந்தான்.
“என்ன பிரச்சனை…” மொட்டையாய் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் அதிர்ச்சி.
“அ…அண்ணா, அது வந்து…” அவன் தயங்க, “தம்பி… உனக்கு உன் அண்ணி மேல ரொம்ப அன்பும், மரியாதையும் இருக்குன்னு தெரியும்… அவளுக்கு இனியும் இப்படி வராம இருக்கணும்னா என்ன நடந்துச்சுன்னு முழுசா தெரியணும்… ப்ளீஸ், எதுவா இருந்தாலும் மறைக்காம சொல்லிடு…” அவனது குரலில் கெஞ்சலும் அதே நேரம் சொல்… என்ற ஆணையும் இருந்தது.
தம்பி தயக்கத்துடனே அடிக்கடி யாழினியிடம் தேவி எடுத்தெறிந்து பேசுவதைப் பற்றியும், கவிதாவுடன் சேர்ந்து கொண்டு உதாசீனப் படுத்துவதையும் சொன்னவன் அன்று நடந்ததையும், அவள் சொன்ன அசிங்கமான வார்த்தையைக் கேட்டு யாழினி அதிர்ந்து போனதையும், தான் மனைவியைக் கண்டித்து அடிக்க அவள் கோபத்தில் தன்னுடன் யாழினியை இணைத்து வாய்க்கு வந்ததைப் பேசியதையும் குனிந்த தலையுடன் கண்ணீரோடு சொல்லி முடித்தான்.
அவன் சொல்ல சொல்ல தாடை இறுகி, கண்கள் சிவக்க கோபத்துடன் எழுந்து நின்றான் இலக்கியன்.
அவன் முகத்தின் கடினம் கண்டு பயந்து போன தம்பி, சட்டென்று அண்ணனின் கையைப் பிடித்துக் கொண்டான்.
“அண்ணே, என்ன சொல்லறோம்னு யோசிக்காம கோபத்துல வாய்க்கு வந்ததைப் பேசிட்டாண்ணா… நீங்க எதுவும் நினைச்சுக்காதிங்க… அதுக்கு நானும் ஒரு காரணம்…” என்றவனின் கண்ணீர் இலக்கியனின் மனதை உலுக்க கேள்வியாய் தம்பியைப் பார்த்தான்.
“என்னை மன்னிச்சிருங்க அண்ணே… அவ மனசுல எப்படி இத்தனை வன்மமும், பொறாமையும் வந்துச்சுன்னு தெரியல… நான் எதார்த்தமா எல்லாத்துக்கும் அண்ணி, அண்ணின்னு அவங்களை உசத்தியா சொல்லி இவ மனசுல நஞ்சை விதைச்சுட்டேன் போல… இனி இப்படி நடக்காமப் பார்த்துக்கறேன்…” என்றவன் குழந்தை போல் அழுதான்.
“ச்சீ… என் யாழினியை இப்படி சொல்ல எப்படி அவளுக்கு மனசு வந்தது… கோபம் வந்தா என்ன வேணும்னாலும் பேசிடலாமா… தாய்க்கும், தாரத்துக்கும் வித்தியாசம் இல்லாமப் போயிடுமா…” கோபத்துடன் கேட்டவனின் கையைப் பிடித்துக் கொண்டான் தம்பி.
“ப்ளீஸ் அண்ணே… இப்படிப் பேசினதுக்கான தண்டனையை அவளுக்கு நான் கொடுக்கிறேன்… நீங்க பீல் பண்ணாதீங்க…”
“எப்படிடா என்னால அமைதியா இருக்க முடியும்… என் கண்ணம்மாவை என்ன சொன்னாலும் அது என்னை சொன்ன போல இல்லையா… அவளோட வலி எனக்கு வலிக்காதா… இப்படி வேரறுந்த மரம் போலக் கிடக்கறதைப் பார்த்ததும் என் உசுரே போயிடும் போலருக்கே…” கண் கலங்கியவனின் கையை ஆறுதலாய் பற்றிக் கொண்டான் தம்பி.
“பயப்படாதீங்க அண்ணா, இனி இப்படி ஒருநாளும் நடக்க விட மாட்டேன்… அண்ணி எனக்கு அம்மாவுக்கு சமம்…” அவன் கண்ணிலும் கண்ணீரைக் கண்டு அமைதியானான்.
அன்றைய நாள் தூங்கா இரவாய் கழிய, அடுத்தநாள் காலையில் தான் யாழினிக்கு முழிப்பு வந்தது. விடிந்ததுமே வெண்பா, வசந்தாவை அழைத்துக் கொண்டு பர்வதம் வந்து விட்டார். இலக்கியன் வீட்டுக்கு அழைத்து பயப்பட ஒன்றுமில்லை என்று சொல்லியிருந்தும் பர்வதத்திற்கு இருப்புக் கொள்ளவில்லை. வசந்தா இருந்தால் உதவியாய் இருக்குமென்று அவரையும் அழைத்துக் கொண்டார்.
“என்ன மாப்பிள, என் பொண்ணுக்கு என்னாச்சு… இதுக்கு முன்னாடி அவளுக்கு இப்படில்லாம் வந்ததே இல்லையே… எப்படி வலிப்பு வந்துச்சு…” என்று கண்ணீர் விடத் தொடங்க, “பயப்படாதீங்க அத்தை… ஏதும் பிரச்சனை இல்லை, தூங்கிட்டு இருக்கா, இப்ப எழுந்திருவா…” என்றான்.
“இலக்கியா, நம்ம வீட்டுல என்னதான் நடக்குது… சின்னவன் பொண்டாட்டி என்னடான்னா மூஞ்சியத் தூக்கி வச்சிட்டு நான் என்ன ஏதுன்னு கேட்டும் பதிலே சொல்லல, நைட்டு ரூமுக்குள்ள போனவ கதவைத் திறக்கவே இல்ல…… எனக்கு ஒண்ணுமே புரியல…” தளர்வுடன் கேட்ட அன்னையைப் பரிவுடன் நோக்கியவன், “கவலைப் படாதீங்க மா… எல்லாம் சரியாகிடும்…” தீர்மானமாய் கூறினான் இலக்கியன்.
“எல்லாம் அந்தப் பாவி தேவியால தான்மா… அண்ணியைக் கண்டபடி அசிங்கமாப் பேசி படுக்கைல தள்ளிட்டா மூதேவி…” என்று அன்னையைக் கண்டதும் உடைந்து போன தம்பி வீட்டில் நடந்ததை அப்படியே சொல்ல கேட்ட இரண்டு அன்னையரும் அதிர்ந்து போயினர்.
“இப்படில்லாமா ஒரு வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு இன்னொருத்தி மேல பழி சொல்லுவா… ச்சே… நினைக்கும்போதே பகீர்னு இருக்கு… அவளை ரெண்டு அறையோட விட்டது தப்பாப் போயிருச்சு… என் கைல மட்டும் கிடைச்சா கொன்னே போட்டிருவேன்…” என்றார் பர்வதம் கோபத்துடன்.
“எப்படி தம்பி, என் பொண்ணைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தை உங்க பொண்டாட்டியால சொல்ல முடிஞ்சது…” என்ற வசந்தாவும் வாயைப் பொத்திக் கொண்டு அழுதார்.
“நடந்தது நடந்திருச்சு, இனி எப்படி சரி பண்ணலாம்னு பார்க்கலாம் அத்தை… அழாதீங்க…” சமாதானம் சொன்னான்.
அதற்குப் பிறகு யாழினி கண் விழித்ததும் அவளைப் பார்க்க அனுமதிக்க, வெண்பா அன்னையைக் கண்டதும் தாவினாள். சோர்ந்த முகத்துடன் உதட்டில் காயத்துடன் தளர்ந்து கிடந்தாள் யாழினி. அவளைக் காணும்போதே கண்கள் கலங்க காட்டிக் கொள்ளாமல் இருக்க சிரமப்பட்டான்.
“அம்மாக்கு உடம்பு முடியலடா குட்டிம்மா… வா, அப்பா எடுத்துக்கறேன்… அப்புறமா அம்மா எடுப்பாங்க…” என்று மகளை எடுத்துக் கொண்டான் இலக்கியன். கூட்டத்துடனே அவளைக் கண்டவன் தனிமை கொடுக்கவில்லை.
பிளட் டெஸ்ட், பிரஷர், ஸ்கேன் எல்லாம் பரிசோதித்து பிரச்சனை இல்லை என்றார் டாக்டர். மூன்று நேரமும் தவறாமல் மாத்திரை குடிக்க வேண்டும் என்றவர் மாலையில் வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். ஆனால் கொஞ்ச நாள் ஓய்வில் இருக்கும்படி சொன்னார்.
“அத்தை, யாழினி கொஞ்ச நாள் உங்க வீட்டுல இருக்கட்டும்…” இலக்கியன் சொல்லவும், “ஏன்ப்பா, நம்ம வீட்டுக்கே வரட்டும்… என் மருமகளை நான் பார்த்துக்க மாட்டேனா… வேணும்னா சம்மந்தியும் நம்ம வீட்டுல வந்து இருக்கட்டும்…” என்ற அன்னையின் வார்த்தையில் நெகிழ்ந்தவன், “காரணமா தான் சொல்லறேன் மா… கிளம்புவோம்…” என்றான்.
“அண்ணா, ப்ளீஸ் நம்ம வீட்டுக்கே அண்ணி வரட்டும்… அவளை சரி பண்ண நானாச்சு…” என்றான் தம்பி குற்ற உணர்வுடன்.
“எல்லாம் வீட்டுல போயி பேசிக்கலாம்… முதல்ல கிளம்பலாம்…” என்றவன், டாக்டரிடம் சொல்லிவிட்டு ஆசுபத்திரி பில்லை செட்டில் செய்துவிட்டு வர கிளம்பினர்.
யாழினியின் முகத்தை ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் அவள் தன்னையே பார்ப்பதை உணர்ந்தும் பார்வையைத் தவிர்த்துக் கொண்டிருந்தான் இலக்கியன்.
அன்னை, தம்பியை வழியில் அவர்கள் வீட்டில் இறக்கிவிட்டு, “நான் காலைல வரேன் மா…” என்று சொல்லிவிட்டு யாழினியின் வீட்டுக்கு சென்றனர்.
சூடான தண்ணீரில் மகளைக் குளிக்க அனுப்பிவிட்டு வேகமாய் இட்லியை ஊற்றி அதற்கு ஒரு சட்னியை அரைத்து வைத்தார் வசந்தா.

Advertisement