Advertisement

அது இரு பாலருக்குமான உள்ளாடைகள். இலக்கியனுக்கும், யாழினிக்கும் வாங்கி இருப்பான் போலும். அதைக் கண்டதும் மூஞ்சியை சுளித்தவள், “பொண்டாட்டிக்கு ஜட்டி, பாடி கூட இவர் தான் வாங்கிக் கொடுப்பார் போலருக்கு…” என நினைத்துக் கொண்டே அப்படியே கவரை மடக்கி வைத்தாள்.
“ஹூம், இப்படி ஒரு மனுஷனுக்கு அப்படி ஒரு தம்பி… இவர் பொண்டாட்டிக்கு நாப்கின்ல இருந்து எல்லாத்தையும் இவர் தான் வாங்கிக் கொடுப்பார் போல… இருந்தாலும் இது ரொம்ப டூ மச் தான்…” என நினைத்தபடி அறைக்கு சென்றுவிட்டாள்.
மேலும் சில நாட்கள் கழிந்திருந்தது.
“யாழினி…” அத்தையின் குரல் கேட்டு அடுக்களையில் இருந்த யாழினி கையைத் துடைத்துக் கொண்டு வந்தாள்.
“வாங்கத்த… நேரமாவே வந்துட்டிங்க…”
“மாப்பிள காலைல வந்துட்டாரு மா, அதான் வந்துட்டேன்…” கிருபாவின் கணவர் வெளியூர் சென்றிருந்ததால் மகளுக்குத் துணையாக ராத்திரி அங்கே தங்க சென்றிருந்தார் பர்வதம்.
“ஓ… தோசை ஊத்தட்டுமா அத்தை…”
“வேண்டாம் மா. சாப்பிட்டு தான் வந்தேன்… இந்தா, இதுல மொச்சையும், முருங்க பீன்சும் இருக்கு, கிருபா கொடுத்து விட்டா… எடுத்து வை… கொஞ்சம் தண்ணி குடு மா…”
“தரேன் அத்தை…” என்றவள் அவர் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டு தண்ணியுடன் வந்தாள்.
“தேவி எங்க மா… நீ மட்டும் தனியா செய்துட்டு இருக்க… வெண்பாவையும் காணோம்…”
“வெண்பா சசிக்கா (பக்கத்து வீடு) வீட்ல விளையாடிட்டு இருக்கா… தேவி இன்னும் எழுந்துக்கல போலருக்கு…”
“என்னது, மணி ஒன்பதாச்சு… இன்னுமா அவளுக்கு விடியல…” என்றவரின் முகம் வெறுப்பைக் காட்டியது.
“சரி, அலுப்புல தூங்குறாளோன்னு கூப்பிடல அத்த…”
“வீட்டுப் பொம்பளைங்க இப்படித் தூங்கினா வீடு எப்படி விளங்கும்… சின்னவன் எங்கே, அவனாச்சும் எழுந்தானா…”
“ம்ம்… அவர் யாரையோ பார்க்கனும்னு நேரமா சாப்பிட்டுக் கிளம்பிட்டார்…”
“புருஷனுக்கு நேரத்துக்கு சமைச்சு கொடுக்காம, அப்படி என்ன அவளுக்குத் தூக்கம்…” பொருமினார் பர்வதம்.
அவர்கள் சத்தம் கேட்டோ என்னவோ, அறைக்குள் இருந்த தேவி எழுந்து வெளியே வந்தாள்.
“வாங்கத்தை… தலை வலிக்குதுன்னு படுத்துட்டேன்… என்னைப் கூப்பிட்டு விட்டிருக்கலாம்ல க்கா…” என்றவளின் பார்வை யாழினியை முறைப்புடன் பார்க்க அவளுக்குக் காரணம் புரியவில்லை.
“சரி, தூங்கட்டும் பரவால்லன்னு தான் கூப்பிடல தேவி…”
“இப்ப உங்களால அத்தை என்னைத் தப்பா நினைக்க மாட்டாங்களா…” என்றவளின் கேள்வி அவளுக்கு சர்வ நிச்சயமாய் புரியவில்லை.
“அத்தை என்னால இவளை எதுக்குத் தப்பா நினைக்கப் போறாங்க…” இவள் யோசிக்கும்போதே பர்வதம் சொன்னார்.
“புருஷன் வீட்டை விட்டு வெளியே கிளம்பிப் போறதுக்கு முன்ன அவனுக்கு என்ன வேணுமோ பார்த்து செய்து கொடுக்க வேண்டாமா, இப்படித் தூங்கிட்டு இருக்கவா உன்னை அவனுக்குக் கட்டி வச்சோம்… ஏதோ யாழினி இருக்கவும் அவன் சாப்பிட்டுப் போயிருக்கான்…”
“பரவால்ல விடுங்கத்தை, தலவலின்னு தான படுத்திருக்கா…” யாழினி சொல்லவும், “அத்தை வந்ததும் நைசாப் போட்டுக் கொடுத்துட்டு இப்ப நல்லவ மாதிரி மூஞ்சை வச்சிட்டு எனக்கு சப்போர்ட் பண்ணிட்டு நிக்கறதைப் பாரு…” என்பது போல் யாழினியை முறைப்புடன் நோக்கினாள் தேவி.
“நீ குளிச்சிட்டு வா தேவி… சாப்பிடலாம்…” யாழினி சொல்லவும் வெடுக்கென்று தலையைத் திருப்பிக் கொண்டு அறைக்குள் சென்று விட்டாள்.
அவள் சென்றதும், “நீ இப்படி எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்யாம அவளையும் வேலை செய்ய சொல்லு… அவளா கண்டறிஞ்சு செய்யுற விதம் எல்லாம் இல்ல… சரியான சோம்பேறிப் பொண்ணு…” என்றபடி பர்வதம் அங்கிருந்து செல்ல யாழினி வேலையை கவனித்தாள்.
தினமும் மாலையில் கவிதா அங்கே வந்து விட தேவி அவளுடன் உக்கார்ந்து ஊர்க்கதை, குடும்பக்கதை பேசிக் கொண்டிருப்பாள். நடுவில் யாழினியின் மீது இல்லாத பொல்லாத குற்றமெல்லாம் சொல்லி அவள் மனதில் வெறுப்பை ஏற்றிக் கொண்டிருந்தாள் கவிதா.
இரவு உணவுக்கு இவள் மேலோட்டமாய் ஏதாவது வேலை செய்து விட்டு டீவி முன்னால் அமர்ந்து கொள்ள யாழினி தனியே வேலை செய்து கொண்டிருப்பாள். பர்வதத்துக்கும் இப்போதெல்லாம் பழைய போல முடிவதில்லை. சுகர், பிரஷர் தொல்லையால் அடிக்கடி படுத்துக் கொண்டார்.
“ஏன் தேவி, அண்ணி தனியா சப்பாத்தி செய்துட்டு இருக்காங்க, நீயும் ஹெல்ப் பண்ணலாம்ல…” இலக்கியனின் தம்பி மனைவியிடம் ஏதாவது கேட்டாலும், “நான் கேட்டதுக்கு அவங்களே பண்ணிக்கறேன்னு சொல்லிட்டாங்க, நான் என்ன பண்ணட்டும்… நான் செய்யறது அவங்களுக்குப் பிடிக்கல போலருக்கு…” என்று வாயை அடைத்து விடுவாள்.
இலக்கியனும் வேலையில் பிசியாக ஓடிக் கொண்டிருக்க யாழினி ஏதாவது சொன்னாலும் “இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் கண்ணம்மா, நான் எப்படி சொல்லுறது… நீயே பார்த்துக்க…” என்று சொல்லி விட்டான்.
யாழினி அவ்வப்போது அன்னையைக் காண அவள் வீட்டுக்கு சென்று விடுவாள். யாழினி எதார்த்தமாய் ஏதாவது சொன்னாலும் தேவி வெடுக்கென்று ஏதாவது சொல்லி விடுவதால் அனாவசியமாய் பேச்சுக் கொடுப்பதில்லை.
யாழினி அடுக்களையில் இரவு உணவு முடிந்து பாத்திரத்தைக் கழுவி வைத்துக் கொண்டிருக்க பர்வதம் சாப்பிட்டதும் படுக்க சென்று விட்டார். அதுவரை வேலை செய்வது போல் பாவ்லா செய்து கொண்டிருந்த தேவி அத்தை சென்றதும் கணவன் அருகே அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்த வெண்பா தூக்கம் வரவே அன்னையை அழைத்தாள்.
“ம்மா வா…”
“இதோ வந்துடறேன் செல்லம்…” என்றவள் கழுவிய பாத்திரங்களை எடுத்து வைத்து விட்டு அடுக்களைத் திண்டை துடைத்துக் கொண்டிருந்தாள்.
“ம்மா, வா…” என்ற வெண்பா சிணுங்கத் தொடங்கினாள்.
“வெண்பாக் குட்டி, இங்க சித்தப்பாகிட்ட வா… தூக்கம் வருதா…” என்றவன் குழந்தையை எடுத்து மடியில் வைத்துக் கொள்ள தேவி எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“தேவி, அண்ணியை அனுப்பிட்டு நீ பாக்கி வேலையைப் பாரு… குழந்தைக்குத் தூக்கம் வரும் போலருக்கு…”
“அதுக்கென்ன எனக்கும் தான் தூக்கம் வருது… என்னமோ சொந்தக் குழந்தை போல தூக்கி வச்சு கொஞ்சறதைப் பாரு… ஹூம், யாரு கண்டா…” சொல்லியபடி அவள் அறைக்கு செல்ல கேட்டபடி வந்த யாழினி அதிர்ந்து போனாள்.
இலக்கியனின் தம்பியும் அதிர்ச்சியுடன் பார்க்க, “அ… அவ என்னங்க சொன்னா…” என்றாள் அதிர்ச்சியுடன்.
அவளது அதிர்ந்த முகமும் நடுங்கிய குரலில் தெரிந்த பதட்டத்தையும் கண்டவன் தன்னை இயல்பாக்கிக் கொண்டு, “அவ கிடக்கறா அண்ணி, ஏதோ உளறிட்டுப் போறா… நீங்க வெண்பாவைக் கொண்டு போயி தூங்க வைங்க…” என்றான்.
குழந்தையை வாங்கிக் கொண்டு அதிர்ச்சியுடன் படியேற கோபமாய் தங்கள் அறைக்கு சென்றவன் கட்டிலில் அமர்ந்திருந்தவளை ஓங்கி அறைந்தான்.
“என்ன வார்த்தைடி சொன்ன, எப்படி இப்படி ஒரு வார்த்தையை உன்னால சொல்ல முடிஞ்சுது…” என்றவன் அதிர்ச்சியில் கண்ணீர் வழியப் பார்த்துக் கொண்டிருந்தவளை மீண்டும் அறைய நிலைகுலைந்து போனாள் தேவி.
“நான் என்ன இல்லாததையா சொன்னேன்… என்னை எதுக்கு அடிக்கறீங்க…” என்றாள் கோபத்துடன்.
“என்னடி பேசற… ச்சீ… நீ எல்லாம் ஒரு பெண்ணா, மனசுல எவ்வளவு வக்கிரம் இருந்தா இப்படி சொல்லிருப்ப…”
“நான் என்ன இப்பத் தப்பா சொல்லிட்டேன்… எதுக்கெடுத்தாலும் அண்ணி, எதை செய்யனும்னாலும் அண்ணிகிட்ட கேட்டுக்க… எனக்கு எதுவும் வாங்கனும்னாக் கூட அண்ணிகிட்ட சொல்லி வாங்கிக்கன்னு எல்லாத்துக்கும் உங்க அண்ணிய தான சொல்லுறிங்க… அண்ணி போல பழகணும், அண்ணி போல நடக்கணும், அண்ணி போல சிரிக்கணும்னு நான் வந்ததுல இருந்து அண்ணி புராணம் தான் கேட்டுட்டு இருக்கேன்… எப்பவாச்சும் என் விருப்பம் தெரிஞ்சு ஏதாச்சும் பண்ணி இருக்கீங்களா…”  அவள் பட்டாசாய் பொரியவும் திகைத்துப் போய் பதில் சொல்லக் கூடத் தெரியாமல் அதிர்ச்சியில் நின்றான்.
கணவனிடம் குழந்தையை விட்டுவிட்டு அவனிடம் தன் கலங்கிய முகத்தைக் காட்டாமல் கீழே இறங்கி வந்த யாழினியின் காதில் அவர்கள் பேசுவது விழ தீயைத் தொட்டது போல் துடித்துப் போனாள்.
கணவன் குடித்துவிட்டுத் தந்த பால் கிளாஸ் கையிலிருந்து கீழே விழ கேட்ட அதிர்ச்சியான வார்த்தைகளின் வீரியம் மூளைக்குள் மின்னலாய்ப் பாய வேரற்ற மரம் போல் அப்படியே மயங்கி சரிந்து விழுந்தாள்.
சத்தம் கேட்டு மேலிருந்து இலக்கியனும், அறையிலிருந்து தம்பி, தேவியும் வெளியே வந்தனர். யாழினியின் வாயில் நுரை தள்ளி, கை கால்கள் இழுத்துக் கொண்டு கண்கள் சொருக துடித்துக் கொண்டிருந்தவளைக் கண்டு இலக்கியன் “கண்ணம்மா…” என்று பதறிக் கொண்டு வர, தேவியே அதிர்ந்து உறைந்து போனாள்.
நெஞ்சைப்
பதம் பார்ப்பதில்
வாளுக்கு நிகர்
வார்த்தைதான்… 
நினைவுள்ள வரை
நெஞ்சில் வலியிருக்கும்…

Advertisement