Advertisement

அத்தியாயம் – 15
சில மாதங்கள் ஓடி இருந்தது.
“என்னங்க, சாயந்திரம் கோவிலுக்குப் போகலாம்… சீக்கிரம் வீட்டுக்கு வரீங்களா…” இலக்கியனின் தம்பியிடம் அவனது மனைவி கேட்க, “எனக்கு சாயந்திரம் வர முடியாது தேவி… நீ யாழினி அண்ணியை அழைச்சிட்டுப் போயிட்டு வா…” என்றதும் அவள் முறைத்தாள்.
“நான் கட்டிகிட்டது உங்களையா, உங்க அண்ணியையா… நீங்க கூட்டிப் போனா என்ன…”
“ப்ச்… எதுக்கு இப்ப கத்தற… எனக்கு முடியாதனால தான சொன்னேன்… அண்ணி எல்லாம் இப்படி ஒரு நாள் கூட அண்ணன் கிட்ட கத்தி சண்ட போட்டுப் பார்த்ததே இல்ல… அண்ணன் வார்த்தைக்கு மறுவார்த்தை பேச மாட்டாங்க…”
“ஓ… அப்ப என்னை சண்டக்காரின்னு சொல்லுறிங்க…”
“நான் எங்க அப்படி சொன்னேன்… எதுக்கு இவ்ளோ கோபம்…”
“நீங்க பேசினதுக்கு கோபப்படாம கொஞ்சுவாங்களா…”
“சரி விடு தேவி… சாயந்திரம் அண்ணன்கிட்ட சொல்லிட்டு வந்திடறேன்… கோவிலுக்குப் போகலாம், போதுமா…”
“போனாப் போகுதுன்னு ஒண்ணும் யாரும் வர வேண்டாம்…”
“அப்படில்லாம் இல்லமா, சரி எனக்கு டைம் ஆச்சு… சாப்பிட எடுத்து வை…” என்றான் சட்டையைப் போட்டுக் கொண்டே.
“ஏன், அதை உங்க அண்ணி எடுத்து வைக்க மாட்டாங்களா…”
“ப்ச்… இவ ஒருத்தி, நேரம் காலம் புரியாம டென்ஷன் பண்ணிக்கிட்டு…” என்றவன் கிளம்பி வெளியே வந்தான்.
அப்போது மாடியிலிருந்து கீழே வந்த யாழினி, “என்னங்க, சாப்பிடாம கிளம்பறிங்க, உக்காருங்க இட்லி வைக்கறேன்…” என்று வேகமாய் தட்தை எடுத்து வைத்தாள்.
அவன் கிளம்பி செல்லும் வரை தேவி வெளியே வரவே இல்லை. அவன் அடிக்கடி அவனது அறைக்கதவைத் திரும்பிப் பார்ப்பதைக் கண்ட யாழினி, “தேவி கிட்ட எதுவும் சொல்லணுமா, கூப்பிடட்டுமா…” என்று கேட்க, “இல்ல வேண்டாம் அண்ணி…” என்றவன் நொந்தபடி கிளம்பினான்.
“கண்ணம்மா…” புறப்பட்டு மகளை எடுத்துக் கொண்டு படியிறங்கிய இலக்கியன் வரும்போதே மனைவியை அழைத்துக் கொண்டு கீழே வர சாப்பிட்டுக் கொண்டிருந்த தேவிக்கு வயிறு எரிந்தது.
“ஹூம், கண்ணம்மாவாம், கண்ணம்மா… ரொம்ப தான் கொஞ்சல்… ஒண்ணைப் பெத்ததுக்குப் பிறகும் அடங்குதுகளா பாரு…” என்று நினைத்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் மரியாதைக்கு எழுவது போல் செய்ய, “சாப்பிடும்போது எழுந்திருக்கக் கூடாது… உக்காரும்மா…” என்றவன் மகளை மேசையில் அமர்த்தி அவளுக்கு ஊட்டிக் கொண்டே சாப்பிடத் தொடங்கினான்.
“அம்மா எங்க கண்ணம்மா…”
“காலைல போனா தான் கீரை பிரஷா கிடைக்கும்னு மார்கெட்டுக்கு வாங்கப் போயிருக்காங்க…”
“ஓ… அப்ப நீயும் உக்கார்ந்து சாப்பிடு கண்ணம்மா…”
“இல்லங்க, அத்தை வந்ததும் ஒண்ணா சாப்பிட்டுக்கறோம்…” என்று விட்டாள்.
“அப்பா, இத்தி வேணா…” வெண்பா வாயைத் திறக்க மறுக்க, “உனக்கு வேண்டாம்னு சொன்னா அம்மாக்குக் கொடுத்திருவேன், கண்ணம்மா ஆ காட்டு…” என்று சொல்ல அவள் வாயைத் திறக்கவும் ஊட்டி விட்டான். அதைக் கண்ட தேவியின் வயிறு அடுப்பில்லாமல் எரிந்தது.
“ஹூம் ரொம்பத்தான்… இதெல்லாம் பார்க்கணும்னு என் தலைவிதி… எனக்கும் தான் ஒண்ணு வாச்சிருக்கே… நான் தின்னனா, தூங்கினனா எதும் தெரியாது… அவரு வயிறு நிறைஞ்சாப் போதும்… ஒரு கொஞ்சலும் கிடையாது, மிஞ்சலும் கிடையாது… எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும்… புருஷனை கைக்குள்ள போட்டுக்க இவளைப் போல நம்மால முடியாது சாமி…” என நினைத்தபடி எழுந்து உள்ளே சென்றாள்.
“என்னங்க, எனக்கு கொஞ்சம் இன்னர்ஸ் எல்லாம் வாங்கணும், கவிதாக்கா கடைக்குப் போறேன்னு சொன்னாங்க… நானும் போயிட்டு வந்திடட்டுமா…” தேவி கணவனிடம் கேட்க,
“தாராளமா போயிட்டு வா… என்னைத் தொந்தரவு செய்யாம விட்டா சரி…” என்றான் தம்பி.
“சரி பணத்தைக் கொடுங்க, நானே வாங்கிக்கறேன்…”
“காலைல யாழினி அண்ணிகிட்ட சொல்லிப் பணம் வாங்கிக்க… அவங்க என் கணக்குல எழுதி வச்சுப்பாங்க…” என்றதும் தேவியின் கோபம் உச்சத்தில் ஏறியது.
“ஏன், உங்ககிட்ட பணம் இல்லையா… அவகிட்ட பணம் வாங்கி தான் நான் ஜட்டி, பாடி கூட வாங்கணுமா… அதெல்லாம் எனக்குத் தெரியாது, நீங்களே வாங்கிக் கொடுத்திருங்க…” என்றாள் தேவி.
“சரி, சரி… நானே அண்ணன்கிட்ட சொல்லி வாங்கித் தர்றேன்… புலம்பாத…” என்றவன் அதோடு முடித்துக் கொண்டான்.
இரவு வீடு திரும்பிய இலக்கியன் கையில் துணிக்கடைப் பையுடன் வர அதைக் கண்டாலும் தேவி என்னவென்று கேட்கவில்லை.
“கண்ணம்மா…” கணவனின் அழைப்பில் அத்தையின் அறையிலிருந்து வந்தவள், “ஏங்க லேட்டாகிருச்சு… சாப்பிட  எடுத்து வைக்கட்டுமா…” என்றதும் அவளிடம் கவரை நீட்டியவன், “நம்ம கடைல வேலை செய்யற ராமு குழந்தைக்கு நாளைக்குப் பிறந்த நாள்னு சொன்னான்… சரின்னு ஒரு டிரஸ் வாங்கப் போனேன்… அப்படியே உங்களுக்கும் வாங்கிட்டு வந்தேன்… பிடிச்சிருக்கா பாரு…” எனவும், “சரிங்க, முதல்ல பிரஷாகிட்டு வாங்க… சாப்பிட்டுப் பார்க்கலாம்…” என்றாள் யாழினி.
“ஹூம்… எவன் குழந்தைக்கோ எல்லாம் கடைக்காசுல துணி போலருக்கு… கூடவே இவங்களுக்கும் வேற… கவிதாக்கா சொல்லற போல கடைப் பணத்தை நல்லா தான் சுரண்டுறாங்க… புருஷனும், பொண்டாட்டியும்…” என நினைத்தபடி கண்டு கொள்ளாமல் டீவி பார்த்தாள். குளித்து உடை மாற்றி வந்த இலக்கியன், “அம்மா சாப்பிட்டாங்களா கண்ணம்மா… இப்ப கால் வலி எப்படி இருக்காம்…” என்றான்.
“எண்ண போட்டு நீவி விட்டிருக்கேங்க, படுத்திருக்காங்க…”
“ஹூம்… எத்தனை டாக்டரைக் காட்டியும் இந்தக் கால்வலி சரியாகலையே… குட்டிம்மா எங்கே…” என்றான்.
“மதியம் தூங்காம விளையாடிட்டு நேரமா தூங்கிட்டாங்க…” என்றவள் பரிமாற சாப்பிடத் தொடங்கினான்.
“நீங்கல்லாம் சாப்பிட்டாச்சா… தம்பி எங்கே…”
“ம்ம்… அவர் சாப்பிட்டு ரூமுக்குப் போயிட்டார்…” அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்க கவரை எடுத்தாள் யாழினி.
“கண்ணம்மா, அந்த வெள்ளைக் கவரை மட்டும் எடுக்க வேண்டாம்… மத்ததெல்லாம் பிரிச்சுப் பாரு…”
“சரிங்க…” என்றவள் மற்ற இரண்டு கவரைப் பிரிக்க அதில் ஒரு கவரில் இரண்டு சைசில் உடுப்பும், ஒரு கவரில் கிரேப் சில்க் சேலை ஒன்றும் இருந்தது.
“குட்டிம்மாக்கு பெரிய உடுப்பை எடுத்து வச்சுக்க… சின்னது அந்தக் குழந்தைக்கு.
“ம்ம்… நல்லாருக்குங்க… ஒரே மாதிரி வாங்கிருக்கீங்க…”
“ம்ம்ம் பிடிச்சதால தான் ஒரே போல வாங்கினேன்… சேலை பிடிச்சிருக்கா… உனக்கு மாம்பழக் கலர் கிரேப் சில்க் பிடிக்கும்னு கேட்டிருந்தியே…”
“ம்ம்… இப்ப எதுக்கு எனக்கு சேலை… இதை தேவிக்கு கொடுத்திடறேன்…” என்றதும் கேட்டுக் கொண்டிருந்த தேவியின் கண்களில் ஒரு பிரகாசம் தெரிந்தது. ஆனாலும் கேட்காத போலவே அமர்ந்திருந்தாள்.
“ஏன்மா, உனக்கு இந்தக் கலர் பிடிக்கும்னு சொன்னதால பார்த்ததும் வாங்கினேன்… தேவிக்கு வேற கூட வாங்கிக்கலாம்…” என்றான் இலக்கியன்.
“இல்ல பரவால்ல, தேவிக்கு அடுத்த வாரம் பிறந்தநாள் வருது… இந்தப் புடவை நம்ம பரிசா இருக்கட்டும்…” என்றவள் ஹாலில் அவளிடம் வந்தாள்.
“தேவி, உனக்கு இந்த சேலை பிடிச்சிருக்கா பாரு…”
“எனக்கெதுக்கு க்கா சேலை எல்லாம்… மாமா உங்களுக்காக ஆசையா வாங்கிட்டு வந்திருப்பார்… நீங்களே வச்சுக்கோங்க… நாளைக்கு நான் கடைக்குப் போயி எனக்கு வேற வாங்கிக்கறேன்…” என்றாள்.
“இல்ல தேவி, உன் பிறந்த நாளுக்கு எங்க பரிசா இருக்கட்டும்… வாங்கிக்க…” என்றதும், “சரி, இவ்ளோ தூரம் ஆசையா சொல்லறீங்க… அதனால வாங்கிக்கறேன்…” என்றவள் வாங்கிப் பார்க்க, மாம்பழக் கலரில் சன்னமான சிவப்பில் தங்க சரிகை வைத்து வழுவழுவென்று இருந்த புடவை உண்மையில் அவளுக்கு மிகவுமே பிடித்தது.
“ஹூம்… மாமா நல்ல ரசனைக்காரன் தான்… சூப்பரா புடவை வாங்கி இருக்கார்…” என நினைத்தாலும் சின்ன பார்டர் எனக்கு எடுப்பா இருக்காது, இருந்தாலும் உங்க ஆசைக்கு வாங்கிக்கறேன்… தேங்க்ஸ் மாமா…” என்றாள்.
“இருக்கட்டும் உனக்கு பிடிச்சிருக்கா…” என்றான் இலக்கியன்.
“ம்ம்…” என்றவளுக்கு அந்த இன்னொரு கவரில் இவளுக்கு வேறு சேலையை மறைத்து வைத்துக் கொண்டு எனக்கு இதைக் கொடுப்பது போல இருவரும் நடிக்கிறார்களோ என்ற சந்தேகமும் வந்தது. அதில் என்ன இருக்கிறதென்று தெரிந்து கொள்ள அவள் மனம் துடித்தது.
இலக்கியன் சாப்பிட்டு முடிந்ததும் அன்னையைக் காண அவரது அறைக்கு செல்ல யாழினியும் உடன் செல்ல மெல்ல எழுந்தவள் அந்தக் கவரைப் பிரித்தாள்.
முன்னமே பில்லை சேர்த்துப் பின் பண்ணிய இடத்தில் கிழிந்திருக்க மெல்ல விரலால் இன்னும் கிழிக்க உள்ளே சின்னச் சின்னப் பெட்டிகளில் எதுவோ இருக்க எடுத்துப் பார்த்தவளுக்கு ச்சே… என்றிருந்தது.

Advertisement