Advertisement

அத்தியாயம் – 14
இரண்டு வருடம் அழகாய் ஓடியிருந்தது.
“ஹேய் வெண்பாக் குட்டி, என்ன பண்ணறீங்க… அம்மா எங்கே…” கட்டிலில் அமர்ந்து பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்த மகளைக் கொஞ்சிக் கொண்டே உள்ளே வந்தான் இலக்கியன்.
“ப்பா…” எழுந்து கட்டிக் கொண்டவள், “ம்மா…” என்று பாத்ரூமைக் கை காட்டினாள்.
“என் செல்லத்தை தனியா விட்டுட்டு உன் அம்மா அங்க என்ன பண்ணிட்டு இருக்கா…” அவன் சொல்லும்போதே வெளியே வந்தவள், “ஹூம்… பாத்ரூம்ல பிக்பாஸ் ஷோ பார்த்திட்டு இருந்தேன்… கேக்குறார் பாரு கேள்விய…” கணவனை நக்கலடித்துக் கொண்டே அருகே அமர்ந்தாள்.
“என்ன, இன்னைக்கு ஐயா நேரமா கடைல இருந்து வந்துட்ட போல இருக்கு… அதிசயமாச்சே…”
“உன்னைக் கொஞ்சனும் போல இருந்துச்சு, வந்துட்டேன்…” அவளை நோக்கிக் கண்ணடித்தவனை முறைத்தாள்.
“யாரு நீங்க, புள்ள வந்த பின்னாடி நான்லாம் எங்க கண்ணுக்குத் தெரியறேன்… எப்பப் பாரு, அவளைத் தான தூக்கிக் கொஞ்சிட்டு இருக்கீங்க…” அவள் சொல்லவும் மடியில் இருந்த மகளை கட்டிலில் விட்டவன், மனைவியை இழுத்து வளைத்துக் கொண்டான்.
“இப்ப என்னடி, உன்னைக் கொஞ்சணும் அவ்ளோ தான…” எனவும், “ஹூக்கும்… ஒண்ணும் வேண்டாம்… ஆளை விடுங்க சாமி…” என்று திமிறியவளை தன்னிடம் இழுத்து அணைத்துக் கொள்ள வெண்பா அவளை அடித்தாள்.
“ப்பா, ம்மா நானா… அடி…” என்று அவர்களுக்கு நடுவில் வர முயன்றாள்.  “ஹூக்கும், என்னைக் கொஞ்சினா இவளுக்குப் பொறுக்காதே…” என்றவள், அவன் மடியில் படுத்துக் கொண்டு “என் புருஷனையும், என்னையும் பிரிக்க வந்த வில்லி, போடி…” என்று மகளைத் திட்ட அவன் சிரித்தான்.
“ஹஹா… இதுல யாரு குழந்தைன்னே எனக்கு மறந்திடும் போலருக்கே… ஏய், பிளாக் சாக்கலேட்… என் பட்டர் பிஸ்கட்டை இப்படிலாம் சொல்லாதடி…” என்றவன் இருவரையும் இரு கையால் அணைத்துக் கொண்டான்.
குழந்தை வெண்பா தந்தையைப் போல நிறமும், அன்னை போன்ற மெல்லிய உருவமும் கொண்டிருந்தாள். மெதுவாய் முளைக்கத் தொடங்கிய பால் பற்கள் தெரிய அவள் சிரிக்கும்போது பார்ப்பவரின் முகமும் அதைக் கண்டு இனிதாய் புன்னகைக்கும்.
“என்னங்க, அம்மா கூப்பிட்டிருந்தாங்க, நாளான்னிக்கு அப்பாக்கு முதல் வருஷம் சாமி கும்பிடற நாள்… வர சொன்னாங்க…”
“ம்ம்… என்ன பண்ணனும் சொல்லுமா, பண்ணிடலாம்…”
“எவ்ளோ சீக்கிரம் நாள் ஓடுது… இப்பதான் நமக்கு கல்யாணம் ஆன போல இருக்கு, அதுக்குள்ளே பிள்ளையைப் பெத்து அவளுக்கும் ரெண்டு வயசு ஆகிடுச்சு… அப்பா இறந்து அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிடுச்சு…”
“ம்ம்… ரொம்ப ஸ்பீடா தான் போகுது… அம்மா, ஏதோ சொல்லனும்னு உனைக் கூட்டிட்டு வர சொன்னாங்க… இரு பாத்ரூம் போயிட்டு வந்திடறேன்…” என்றான்.
குழந்தையின் முதல் பிறந்தநாள் முடிந்த சமயத்தில் யாழினியின் தந்தை நடேசனுக்கு மிகவும் உடல்நிலை முடியாமல் போக டாக்டர் நுரையீரலில் ஏதோ பிரச்சனை இருப்பதாகக் கூறி ஆப்பரேஷன் வேண்டுமென்றார். ஆனால் இவர்கள் அட்மிட் ஆன அதே நாளில் ஆப்பரேஷனுக்கு முன்னாடியே மைல்ட் அட்டாக்கில் அவர் இதயம் துடிப்பை நிறுத்திக் கொண்டிருந்தது.
அழுது கரைந்த மனைவியைத் தேற்ற முடியாமல் தவித்தான் இலக்கியன். தந்தை இல்லாத அவனுக்கு அவளது தந்தையை மிகப் பிடிக்கும். அவரது கண்ணம்மா என்ற அன்பான அழைப்பு நெகிழ்வைக் கொடுக்கும்.
வசந்தாவுக்கு ஆறுதல் கூறித் தேற்றினர். தந்தை மறைவுக்கு பிள்ளைகள் எல்லாரும் வீட்டில் இருந்ததால் யாழினியை அங்கே விடப் பிடிக்காவிட்டாலும் காரியம் முடியும் வரை அமைதியாய் இருந்தவன் அன்றே அழைத்து வந்தான்.
மூத்தவள் ரூபினியிடம் வசந்தா முன்னமே மாலினி சொன்னதைப் பற்றிக் கூறி இருந்ததால் அவள் தங்கையை அழைத்துத் திட்டி இருந்தாள். எனவே இப்போது எல்லாரும் ஒரே வீட்டில் இருக்கையில் மாலினி தங்கையிடம் வலியப் போய் பேசவும், எதற்கு பழையதை மனசுக்குள் வைத்திருக்க வேண்டுமென்று யாழினியும் அதை ஒதுக்கிவிட்டு பழையபடி பேசத் தொடங்கி விட்டாள்.
வசந்தா தான் இப்போது ஹோட்டலை சின்ன மகன் உதவியுடன் பார்த்துக் கொள்கிறார்.
மற்ற மகன்கள், ஹோட்டலை விற்று விடலாம் என்று நச்சரிக்க, “எனக்குப் பின்னால என்னமோ பண்ணிக்கோங்க…” என்று பிடிவாதமாய் மறுத்து விட்டார்.
இரண்டாவது வருடத் தேர்வுக்கு கைக்குழந்தையுடன் இலக்கியன் டாக்ஸியில் எக்ஸாம் சென்டர் வாசலில் காத்திருக்க யாழினி சென்று எழுதி வருவாள். இறுதி வருடத் தேர்வுக்கு இரண்டு மாதம் முன்னர் தான் தந்தை இறந்திருந்தார். இருந்தாலும் விடாமல் அந்த செமஸ்டர் தேர்வையும் எழுதி தேர்வாகி இருந்தாள் யாழினி.
அவளது முயற்சிக்குப் பின்னில் முழுக் காரணமாய், துணையாய் நின்ற கணவன் மீது அவளது காதல் மிகவும் கூடி இருந்தது. சட்டென்று பழைய நினைவுகள் மனதில் வர யோசித்து நின்றவளை இலக்கியன் அழைத்தான்.
“கண்ணம்மா, என்னடா, அப்படியே நிக்கற, வா…” இலக்கியன் சொல்லவும் எழுந்தவள் அவனைத் தொடர்ந்தாள்.
“ஹூம், மகளை மட்டும் தூக்கிட்டுப் போறது, நான் மட்டும் கஷ்டப்பட்டு படி இறங்கி வரணும்…” அவள் முணுமுணுத்தது காதில் விழவே நின்றவன், “உன்னையும் வேணும்னா தூக்கிகிட்டுமா…” என்றதும் முழித்தாள்.
“பாத்தி…” பர்வதத்தைக் கண்டதும் வெண்பா தாவ, “வாடி செல்லம்…” பேத்தியை வாங்கிக் கொண்டார்.
“யாழினி, நம்ம புரோக்கர் சின்னவனுக்கு நாலஞ்சு பொண்ணுங்க போட்டோவும், ஜாதகமும் கொடுத்து விட்டிருக்காரு… பிடிச்ச பொண்ணுங்க ஜாதகத்தை நாளைக்கு ஜோசியர் கிட்டப் போயி பொருத்தம் பார்த்திட்டு வரணும்… எனக்கு கொஞ்சம் முடியல, நீயும் கிருபாவும் போயிட்டு வந்திருங்க… நான் வெண்பாவைப் பார்த்துக்கறேன்…” என்றார்.
“சரிங்கத்தை…”
“டேய் இலக்கியா, நம்ம கவிதாவும் அவ குடும்பத்துல ஏதோ பொண்ணோட ஜாதகத்தைக் கொடுக்கறேன்னு சொன்னா, அதையும் வாங்கிட்டு வந்திரு… நாளைக்கு அதையும் சேர்த்துப் பார்த்திட்டு வந்திடட்டும்…”
“சரிம்மா… உடம்புக்கு என்ன பண்ணுது… டாக்டர் கிட்டப் போகனுமா…” பரிவுடன் கேட்டான் மகன்.
“அதெல்லாம் வேண்டாம்ப்பா, வயசாகுதுல்ல… அதான், அப்பப்ப உடம்பு சோர்வாகிடுது…” அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மூத்தவர் உள்ளே வந்தார்.
அவரைக் கண்டதும் வெண்பா, “ஹே பெப்பா… நானு பெப்பாத்த போனு…” என்று குதிக்க, “வாப்பா… இந்தா, உன் மகளைப் பிடி…” என்று மகனிடம் நீட்டினார்.
“வாடி செல்லம்…” என்று வாங்கிக் கொண்டவர் பாக்கெட்டில் இருந்த ஜெம்ஸ் பாக்கெட்டை எடுத்து நீட்டினார்
“ஐ… மித்தா…” என்று ஆவலுடன் வாங்கிக் கொண்டவள் வேகமாய் கீழே இறங்கி சோபாவில் ஏறி அமர்ந்து கொண்டு, “ப்பா… வா உக்கா…” என்று சொல்ல,
“என் பேத்திக்கு அறிவைப் பார்த்தியா… பெரியப்பன் கிட்ட மிட்டாய் வாங்கிட்டு அப்பாவைப் பக்கத்துல உக்காரக் கூப்பிடறா…” என்று பர்வதம் கிண்டல் செய்ய சிரித்தனர்.
“வெண்பா செல்லம், நான் உக்காரட்டா…” யாழினி கேக்க, “ம்மா நானா, ப்பா…” என்று தலையாட்டினாள் குழந்தை.
“படு விவரம்டி நீ, நான் உன் மிட்டாயை வாயில போட்டிருவேன்னு தான உன் அப்பாவைக் கூப்பிடற, சரியான கேடி…” என்று மகளை முறைக்க இலக்கியன் சிரிப்புடன் அவளிடம் அமர்ந்தான்.
“குழந்தை கிட்ட மிட்டாயைப் பறிச்சு தின்னா அப்படிதான் பண்ணுவா… அப்பா பாக்கெட்டை பிரிச்சுத் தரேன்டா குட்டி…” இலக்கியன் சிரிப்புடன் சொல்ல முறைத்தாள்.
“ம்ம்… ப்பா, மித்தா…” என்ற வெண்பா பாக்கெட்டை தந்தையிடம் நீட்ட, வாங்கி ஓபன் பண்ணிக் கொடுத்தான்.
“உக்காருங்க மாமா, காபி கொண்டு வரேன்…” யாழினி சொல்ல, “வேண்டாம் மா, தண்ணி மட்டும் குடு…” என்றவர் சோபாவில் அமர்ந்தார்.
“என்னப்பா, ஏதாச்சும் சொல்லனுமா…” என்றார் பர்வதம்.
“அம்மா, கோவிலுக்குக் கொஞ்சம் தள்ளிக் கிழக்கால ஒரு இடம் விலைக்கு வருது… முப்பது சென்ட் இருக்கும் போல… நல்ல இடம்… வாங்கிப் போட்டா சில வருஷத்துல இன்னும் அதிகமாகிடும்… ரெண்டு வருஷமா நம்ம கடைக் கணக்கைப் பிரிக்கல, அந்தப் பணத்துல இடத்தை வாங்கிப் போடலாமான்னு யோசிச்சேன்… அதான், உன்கிட்ட கேக்கலாம்னு வந்தேன்…” என்றார் பெரியவர்.
“அது நல்ல சென்டரான இடமாச்சே பெரியவனே… விலை அதிகமா இருக்குமே…”
“ஆமாம் மா, அந்த இடத்துக்காரருக்கு வெளிநாட்டுல இருக்கற பையனோட போயி செட்டில் ஆகற ஐடியா போல… இந்த நேரத்துல கேட்டா கொஞ்சம் கம்மி பண்ணுவார்…”
“அப்படினா வாங்கிப் போடுப்பா… எல்லாரும் பொண்ணுகளா வச்சிருக்கீங்க… வாங்கிப் போட்டா பின்னாடி நல்ல விலை கிடைக்கும்…” என்றார் பர்வதம்.
“ம்ம்… உன் பேருலயே வாங்கிடட்டுமா…” அவர் கேட்க, “இனி எதுக்குப்பா என் பேருல… கடைல எல்லா வேலையும் பார்த்துக்கறது நீங்க மூணு பேரு தான… உங்க பேருலயே வாங்கிப் போடு…”
“சரிம்மா… நாளைக்கே பார்த்துப் பேசிடறேன்…” என்றவர் காலி தண்ணி சொம்பை யாழினியிடம் நீட்டினார்.
“டேய் தம்பி, கணக்கெல்லாம் சரி பார்த்து வை… நாளைக்கு நாம ரெண்டு பேரும் போயிட்டு வருவோம்…”
“சரிங்கண்ணா…” என்றான் இலக்கியன்.
“அப்ப நான் கிளம்பறேன் மா… கடைல கொஞ்சம் வேலை இருக்கு…” என்றவர் கிளம்பினார்.
“நான் டிபன் செய்யறேன் அத்தை… நீங்க ரெஸ்ட் எடுங்க…”
“சரி மா… இவளை நான் பார்த்துக்கறேன்…” என்றவர் பேத்தியை தன்னுடைய அறைக்கு எடுத்துச் சென்றார்.
சிறிது நேரம் ஹாலில் அமர்ந்திருந்த இலக்கியன் அன்னையின் அறைக்கதவு சாத்தி இருப்பதைக் கண்டதும் மெல்ல பூனை போல் அடுக்களைக்கு சென்றான்.
முன்னமே பிசைந்த சப்பாத்தி மாவை பலகையில் தேய்த்துக் கொண்டிருந்தவளை பின்னிலிருந்து அணைக்க நெளிந்தாள்.
“கண்ணம்மா… நானும் ஹெல்ப் பண்ணட்டுமா…”
“ஹெல்ப் தான, பண்ணுவீங்க, பண்ணுவீங்க…” என்றவள் அவன் கையை விலக்கி விட, “ப்ச்… பொண்டாட்டி தனியா கஷ்டப்படும்போது ஒரு அன்பான புருஷனால எப்படி பார்த்திட்டு சும்மா இருக்க முடியும்…”
“சும்மா இருக்க வேண்டாம், போயி டிவி பாருங்க…”
“ப்ச்… தனியாவா…”
“வேணும்னா நாலஞ்சு பேரைத் துணைக்கு கூப்பிடுங்க… என்னங்க ஆச்சு, உங்களுக்கு…”
“என்னமோ தெரியல, பிளாக் சாக்கலேட், மனசு ஒருமாதிரி உன்னையே சுத்தி வருது…” என்றவன் அவள் பின் கழுத்தில் இதழ் பதிக்க கூச்சத்தில் நெளிந்தவள் திரும்பினாள்.
“ம்ம், வந்தா சுத்தியல்லயே ஒண்ணு போடுங்க… வராது…”
“ப்ச்… நீ சரியில்லடி, பக்கத்துல வந்தா விரட்டுற… எட்டி நிக்கும்போது கொஞ்சலேன்னு புலம்பற… நான் என்ன தான் பண்ணுவேன்…” என்றான் சலிப்புடன்.
“ஓ… அப்ப நான் சொன்னதுக்காக தான் கொஞ்ச வந்திங்க… நீங்களா ஆசைப்பட்டு பண்ணல…” என்றதும், “ச்சே… இதுக்கு நான் பேசாம கடைலயே இருந்திருக்கலாம்…” என்றவன் அங்கிருந்து மாடிக்கு சென்றுவிட புன்னகைத்தாள்.
நேரமே குருமா செய்து விட்டதால் வேகமாய் சப்பாத்தியை செய்து ஹாட் பாக்ஸில் வைத்துவிட்டு அத்தையை அழைக்க செல்ல அங்கே பாட்டியும், பேத்தியும் சுகமான நித்திரையில் இருந்தனர்.
“ஆத்தி, குட்டிப்பிசாசு இப்பத் தூங்கினா ராத்திரி தூங்காதே…” யோசித்தவள் அழைத்தாள்.
“அத்தை, சப்பாத்தி ஆயிடுச்சு… சாப்பிட்டுப் படுக்கறீங்களா…”
“இல்லமா, சின்னவனும் வரட்டும், ஒண்ணா சாப்பிடலாம்…”
“வெண்பாவை எடுத்துகிட்டுமா…”
“நல்லாத் தூங்கறா, இங்கயே இருக்கட்டும் மா…”
“ம்ம்… சரி அத்தை…” என்றவள் கணவனைத் தேடி வந்தாள்.
தலைக்கு குறுக்கே கையை வைத்து படுத்திருந்தவன் அருகில் வந்து படுத்துக் கொண்டவள் அவன் மீசையை மெல்ல இழுக்க, “ப்ச்…” என்று கையைத் தட்டி விட்டவன் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
“பார்றா… ஐயா கோபத்துல இருக்காராம்…” என்றவள் அவன் முதுகில் ஒட்டிக் கொண்டு படுக்க, உதற முயன்றான்.
“ப்ச்… இப்ப என்னதான் உங்க பிரச்சனை…” என்றவள் அவனைத் தன் பக்கம் திருப்பினாள்.
“எனக்கென்ன, எனக்கொரு பிரச்னையும் இல்ல… நீதான் முன்னப் போல இல்ல…” என்றவனின் காதில் மெல்லக் கடிக்க அவன் நெளிந்தான்.
“நாங்கலாம் அபப்டியே தான் இருக்கோம்… நீங்கதான் சரியான தொடை நடுங்கிப் புருஷன்…” எனவும் நிமிர்ந்தான்.
“என்னடி சொல்லற…”
“பின்ன, நான் பிரசவிக்கப் போனபோது உங்க வீரத்தைப் பத்தி எல்லாரும் சொல்லிக் கேட்டனே… என்னை விட நீங்கதான் அதிகம் வேதனைல துடிச்சிருப்பீங்க போலருக்கு… ஒரு நிமிஷம் உக்காராம கை கால் நடுக்கத்தோட பூனை மாதிரி லேபர் ரூம் முன்னாடி வாக்கிங் போன ஆளு தான நீங்க…”
“அ..அதுக்கு…”
“பிரசவம் முடிஞ்சு என்னைப் பார்க்க வந்ததும் என்ன சொன்னிங்க, நான் உன்னை அப்படிப் பண்ணிருக்கக் கூடாது… நீ இப்படி வேதனைல துடிக்கறதை என்னால பார்க்கவே முடியல… எனக்கு ரத்தக் கண்ணீரே வந்திடும் போலருக்கு… அதனால இந்த ஒரு குழந்தையே நமக்குப் போதும்னு சொன்னிங்களே…” 
“அடடா, அன்னைக்கு உணர்ச்சி வசப்பட்டு சொன்னதை இப்படி நினைவுல வச்சுக்கிட்டு தொட விடாம இம்சை பண்ணறாளே ராட்சசி…” என மனதுக்குள் திகிலுடன் யோசித்துக் கொண்டிருந்தான் அவன்.
“என்ன முழிக்கறீங்க… அப்ப மட்டும் அப்படியே உருக்கமா பேசிட்டு இப்ப அடுத்ததுக்கு அடி போட்டா என்ன அர்த்தம்…” வாய்க்குள் பொங்கிய புன்னகையை அடக்கிக் கொண்டு அவள் கேட்க திருதிருவென்று விழித்தான் அவள் கணவன்.
“தெரியாம தப்பா சொல்லிட்டேன்டி… அதுக்காக இப்படியா அதையே சொல்லிட்டு இருப்ப…” எரிச்சலுடன் கேட்டான்.
அவன் முகத்தைத் தன்னிடம் திருப்பியவள், “தப்புப் பண்ணினா என்ன பண்ணனும்னு தெரியாதா… ஹூம்..” என்று புருவத்தைத் தூக்கி கண்களில் காதலுடன் கேட்க அவன் கண்ணில் மின்னல் வெட்டியது.
“பிளாக் சாக்கலேட்… எனக்கு அப்படியே உன்னைத் தின்னுடனும் போல இருக்குடி…” அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டவன் காதில் கிசுகிசுத்தான்.
“அச்சோ, அப்படிலாம் பண்ணிடாதிங்க… அப்புறம் நீங்க  ஜீரணமாகாம கஷ்டப்பட்டா எனக்குதான் வலிக்கும்…”
“ம்ம்… அப்படியா…”
“ஹூம்… அப்படித்தான்…” என்றாள் அவள் கண்ணைச் சிமிட்டி. அதற்கு மேல் ஆவல் பொறுக்க முடியாமல் தனது தவிப்பை அவளைத் தழுவி தீர்க்க முயன்றான் அவன். இருவரும் ஒருவரையொருவர் பின்னிக்கொண்டு நேசத்தின் வலை பின்ன முயன்று கொண்டிருந்தனர்.
நாட்கள் அழகாய் சிறகடிக்க இலக்கியனின் தம்பிக்கு பெண் உறுதியாகி கல்யாணமும் முடிந்தது. கவிதாவின் தூரத்து சொந்தத்தில் உள்ள பெண்ணின் ஜாதகமே ஒத்து வந்ததால் அவளையே முடிவு செய்து சீக்கிரமே கல்யாணமும் நடந்தது.
கல்யாணம், விருந்து என்று வீட்டில் உறவினர்கள் இருந்து கொண்டே இருந்ததால் யாழினிக்கு ஓய்வில்லாமல் வேலை இருந்தது. மாப்பிள்ளையும், பெண்ணும் மறுவீடு விருந்து முடிந்து வீட்டுக்கு வந்திருக்க யாழினி பம்பரமாய் சுழன்று எல்லாருக்கும் சமையல் செய்து கொண்டிருந்தாள்.
அப்போது இலக்கியனுக்கு யாரோ போனில் அழைத்து வசந்தா சட்டென்று ஹோட்டலில் மயங்கி விழுந்து விட்டதாகவும் ஆசுபத்திரிக்கு அழைத்துச் சென்றிருப்பதாக சொல்லவும் யாழினி பயந்து பதறிப் போனாள்.
அழத் தொடங்கியவளை “ஒண்ணும் இருக்காது மா… நீயா யோசிச்சு அழாத… கிளம்பு, போயிட்டு வந்திடலாம்…” என்றான் இலக்கியன்.
அடுக்களையில் அப்படியே எல்லாவற்றையும் விட்டுவிட்டு அழுகையுடன் கிளம்பினாள் யாழினி.
“யாழினி, மயக்கம் தான… சரியாகிடும்… அழாமப் போ…” என்றார் பர்வதம்.
“கவிதா, நீ போயி அடுப்பை கவனிச்சுக்க…” பர்வதம் சொல்லவும் முகத்தை சுளித்தவள் முறைப்புடன் எழுந்து சென்றாள். யாழினி செல்கையில் வசந்தா மயக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்திருந்தார்.
“பிரஷர் ஜாஸ்தியாகிடுச்சு… மாத்திரை எழுதிருக்கேன்… கரக்டா கொடுங்க… அதிகம் அலைச்சல் இல்லாமப் பார்த்துக்கங்க…” என்ற டாக்டர் வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று சொல்ல அன்னையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தனர்.
“ஏன்மா, இப்படித் தனியா கஷ்டப்படற… இதெல்லாம் அண்ணனுக்கு கொடுத்துட்டு எங்களோட வா, நாங்க உன்னைப் பார்த்துக்கறோம்… அப்பாவைத்தான் கவனிக்காம இழந்துட்டோம்… எங்களுக்கு நீயும் இல்லாமப் போயிட்டா அநாதை போல ஆகிடுவோம் மா…” அழுகையுடன் சொன்ன மகளை அணைத்துக் கொண்டார் வசந்தா.
“ஏய் அசடு… சும்மா பிரஷர் ஏறினதுக்கு இப்படி அழுது ஆர்பாட்டம் பண்ணற, ஒண்ணுமில்ல கண்ணம்மா…” என்றார். யாழினி அங்கேயே இரண்டு நாள் இருந்துவிட்டு வருவதாக சொல்ல, இலக்கியன் வீட்டுக்கு கிளம்பினான்.
உன் அன்பை சேமித்திட
ஒரு நெஞ்சம் போதவில்லை…
தாய்மடி தேடிப் பாய்ந்திடும்
கன்றென மாறினேன் நான்…
என்னை ஈன்றெடுத்த
அன்னைக்கு ஈடான
என் தாயுமானவன்
நீ தானே என்னவனே…

Advertisement