Advertisement

அத்தியாயம் – 13
“வாங்க மாப்பிள்ள… யாழினி உள்ளதான் இருக்கா, போயி பாருங்க… நான் காபி எடுத்திட்டு வரேன்…” அன்னையின் குரலைக் கேட்டதும் வெறுமனே கண் மூடிப் படுத்திருந்த யாழினி எழுந்து அமர்ந்தாள்.
முன்தினம் தான் வளைகாப்பு முடிந்து அவளை தாய் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தனர். ஏழாம் மாதம் வளைகாப்பு வைத்தால் கணவனை விட்டு அதிக நாள் பிரிந்திருக்க வேண்டுமென்று ஒன்பதாம் மாதத்தில் தனக்கு வளைகாப்பு போதுமென்று சொல்லிவிட்டாள் யாழினி.
அவள் பெற்றோரும், பர்வதமும் ஏன் இலக்கியனும் சொல்லிக் கூட ஏழாம் மாதத்தில் வேண்டாமென்று சொன்ன மனைவியின் நேசத்தில் நெகிழ்ந்து போனான் இலக்கியன்.
“அவ தான் இங்கயே இருக்கேன்னு சொல்லுறாளே அத்தை… ஒன்பதாம் மாசமே சீமந்தம் வச்சுக்கலாம்…” இலக்கியனும் சொல்லி விட வேறு வழியின்றி அவர்கள் அமைதியாகி விட்டனர். நேற்று தான் சீமந்தம் முடிந்து தாய் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தனர். அதற்குள் இன்று காண ஓடி வந்து விட்டான் அவளது அன்புக் கணவன்.
“பிளடி பிஸ்கட்…” தனைக் கண்டதும் ஆவலுடன் விழிகளை  விரித்த மனைவியை மெல்ல அணைத்து விடுவித்தான்.
“கண்ணம்மா, எப்படிடா இருக்க… நீ இல்லாம என்னால நம்ம வீட்டுல இருக்கவே முடியல… நைட் எல்லாம் தூக்கமே வரல… எனக்கே இப்படி இருக்கே, நீ என்ன பண்ணுவியோன்னு தான் உனைப் பார்க்க ஓடி வந்தேன்…”
அவன் சொன்னதும் நெகிழ்ந்தவளின் கண்கள் மெல்லக் கலங்க பதறினான்.
“என்னடா, இங்க இருக்கப் பிடிக்கலேன்னா சொல்லு… நம்ம வீட்டுக்கே போயிடலாம்…” என்றவனின் நெஞ்சத்தில் முகம் புதைத்து மௌனமாய் அணைத்துக் கொண்டாள்.
“ச்சே… என் புருஷனை நல்லா கட்டிப் பிடிக்க விடாம இந்த வயிறு வேற நடுவுல இடிக்குது…” என்றவளை நோக்கிப் புன்னகைத்தவன், “நம்ம பாப்பாவை அப்படில்லாம் சொல்லாத கண்ணம்மா…” என்றான்.
“ஹூம்… உங்க பாப்பா வந்து தான நம்மளைப் பிரிச்சு வச்சிருச்சு… நீங்க இல்லாம ராத்திரி எல்லாம் தூக்கமே வராம எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா… கைக்குள்ள வச்சு நல்லா பழக்கப்படுத்தி வச்சிருக்கீங்க…” குழந்தையாய் கொஞ்சியவளை அவனுக்கு அவ்வளவு பிடித்தது.
“அச்சச்சோ, என் செல்லம் தூங்கலையா… என்னடா மா, பேசாம நம்ம வீட்டுக்கே வந்திடறியா…”
“ப்ச்… எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன, ஆனா சடங்கு, சம்பிரதாயம்னு இந்த அம்மா ஏதேதோ சொல்லுவாங்க… அதும் இல்லாம ஏழாம் மாசமே என்னை இங்க அழைச்சிட்டு வந்து கவனிச்சுக்க முடியலைன்னு அப்பா ரொம்ப வருத்தப்பட்டார்… அவங்களுக்காகவும் யோசிக்க வேண்டிருக்கு…” என்றாள் வருத்தத்துடன்.
“ம்ம்… நீ இப்படி தூங்காம இருந்தா என்ன பண்ணுறது…”
“விடுங்க, சமாளிப்போம்… தூக்கம் வராதப்ப படிச்சுக்கறேன்… வரும்போது தூங்கிக்கறேன்…” என சிரித்தாள் யாழினி.
“குழந்தை வர்ற சமயத்துல இந்த எக்ஸாம் எழுத முடியுமா…”
“பார்க்கலாங்க… நீங்க இருக்கும்போது எனக்கென்ன கவலை…”
“என்னை எக்ஸாம் எழுத சொல்லறியா… அதெல்லாம் முடியாதுப்பா…”
“ஹூக்கும்… உங்க எக்சாமே ஒழுங்கா எழுதாத உங்ககிட்ட அதை சொல்லுவேனா… சரியான மக்குப் பிளாஸ்திரி…” என்றவள் அவன் காதைப் பிடித்து திருக,
“ஆ… விடுடி… வலிக்குது…” அலறினான் அவன்.
“மாப்பிள்ள, காபி சாப்பிடலாம் வாங்க…” அதற்குள் வசந்தாவின் குரல் கேட்க இருவரும் வெளியே வந்தனர்.
காபியுடன் சூடாய் பக்கோடாவும் இருந்தது. எடுத்து சாப்பிட்டுக் கொண்டே, “மாமா எப்ப வருவார் அத்தை…” என்றான் இலக்கியன்.
“கொஞ்ச நேரத்துல வந்திருவார் மாப்பிள… இவ சின்ன அண்ணன் ஹோட்டலுக்குப் போயி கை மாத்தி விடனும்…”
“ம்ம்… அவருக்கு தான் அடிக்கடி உடம்புக்கு முடியலையே… வீட்ல ரெஸ்ட் எடுக்கக் கூடாதா…”
“சொன்னா அந்த மனுஷன் எங்க கேக்கறாரு… என்னவோ கடையவே இவரு தான் தாங்கிப் பிடிச்சிருக்க போல தான் சொல்லுவாரு… இவளுக்குப் பிடிக்குமேன்னு வீட்ல கொஞ்சம் முறுக்கும், அதிரசமும் செய்தேன்… வீட்டுக்குக் கொண்டு போயி கொடுங்க மாப்பிள்ள…” என்றவர, இரண்டு பாத்திரங்களில் கொண்டு வந்து வைத்தார்.
“சரி அத்தை… அப்ப நான் கிளம்பறேன்… ரெண்டு நாள் கழிச்சு செக்கப் போகணும்… நான் வந்து கூட்டிப் போறேன்…”
“இருங்க மாப்பிள்ள… டிபன் ரெடி பண்ணிடறேன்… சாப்பிட்டுப் போகலாமே…” வசந்தா சொல்லவும் மனைவியின் முகத்தை நோக்க உதட்டை சுளித்து தலையை ஆட்டி, “ப்ளீஸ்…” எனவும் புன்னகைத்தவன், “சரி அத்தை…” என்றான்.
“நீங்க பேசிட்டு இருங்க… நான் ரெடி பண்ணிடறேன்… கண்ணம்மா, மாப்பிள்ளைய அழைச்சிட்டுப் போ மா…”
அவர் சொல்லவும், “நாங்க மாடில இருக்கோம் மா…” என்றவள் பெரிய வயிற்றைத் தூக்கிக் கொண்டு மாடியேற, பின்னிலேயே பிடித்துக் கொண்டு வந்தான் இலக்கியன். மாலை நேரக் காற்று சுகமாய் தேகத்தைத் தழுவ, அவளது கூந்தல் காற்றில் படபடத்தது. எங்கும் இருள் சூழத் தொடங்கி இருக்க, அங்கங்கே மின் விளக்குகள் நட்சத்திரமாய் பளிச்சிட்டது. அவன் கையை அணைத்துக் கொண்டு தோளில் சாய்ந்து நின்று கொண்டாள் யாழினி.
“கண்ணம்மா….”
“ம்ம்ம்…”
“இப்படி நின்னா கால் வலிக்கப் போகுது….”
“ப்ச்… வலிக்காது…”
“காத்து வேற அடிக்குது, சேராமப் போயிடப் போகுது…”
“ப்ச்… இப்ப என்னதான்யா உன் பிரச்சனை, மனுஷனை இந்த நிமிஷத்தை அனுபவிக்க விடாம நொச்சு நொச்சுன்னு பேசிட்டு இருக்க… நானே நீங்க கொஞ்ச நேரத்துல கிளம்பிப் போயிருவிங்களேன்னு பீல் பண்ணிட்டு இருக்கேன்…” சொன்னவளை தனக்கு நேராய் நிறுத்தியவன், அவளையே குறுகுறுவென்று பார்க்க புன்னகையுடன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
மாலை நேரத்தில் மனதுக்குப் பிடித்தவரின் அருகாமையில் மனம் மயங்கித்தான் போகிறது.
அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவளை இதமாய் அணைத்துக் கொண்டு முதுகில் தட்டிக் கொடுத்தான்.
“நேத்து விசேஷத்துக்கு வந்தவங்க கண்ணெல்லாம் உன் மேல தான்… அத்தை, வீட்டுக்கு வந்ததும் உனக்கு சுத்திப் போட்டாங்களா இல்லையா…”
“ம்ம்… அதெல்லாம் பண்ணாங்க… சின்னக்கா வரலேன்னுதான் அவங்களுக்கு வருத்தம்…”
“ம்ம்… அவங்க பையனுக்கு மொட்டை போடறப்ப நாம போகலேன்னு வராம இருந்துட்டாங்க போலருக்கு…”
“ம்ம்… வரலேன்னா போகட்டும்… அவ சொன்ன வார்த்தை இப்பவும் என் மனசுக்குள்ளயே இருக்கு… பார்த்தா எதாச்சும் கேட்டாலும் கேட்டிருவேன்…” என்றாள் சிறு கோபத்துடன்.
“ம்ம்… விடுமா… கூடப் பிறந்தவ மேல இத்தனை வன்மம் அவங்களுக்கு இருக்கக் கூடாது… என்ன பண்ணுறது, எல்லாரும் ஒரே மாதிரி இல்லையே… இவங்க ஆகாதுன்னா நாம தான் விலகி இருந்துக்கணும்…”
“ம்ம்… ஆமாங்க, அன்னைக்கு எனக்கு எப்படி வலிச்சுது தெரியுமா… நீங்க பீல் பண்ணக் கூடாதுன்னு தான் அதிகமா காட்டிக்கல… நீங்க போகலாம்னு சொல்லியும் அதான் அவ பிள்ளைக்கு மொட்டை அடிக்கிற பங்க்ஷன்க்கு போக வேண்டாம்னு சொல்லிட்டேன்…” என்றவளின் தோளில் சமாதானமாய் தட்டிக் கொடுத்தான் இலக்கியன்.
“சரி, அதை யோசிச்சு பீல் பண்ணாத விடும்மா…”
“ம்ம்… கூடப் பிறந்தவளே இப்படி இருந்தா கவிதாக்கா அப்படி இருக்கறதுல ஒண்ணும் அதிசயம் இல்லை… அவங்களும் எல்லாருக்கும் அனுசரிச்சு பிரியமா நடந்துகிட்டா அவங்களையும் எல்லாரும் நேசிக்கப் போறாங்க… இது தெரியாம என் மேல பொறாமப்பட்டு என்னாகப் போகுது…”
“ம்ம்… சரி, அவங்களை எல்லாம் விடு… நம்மளைப் பத்தி பேசுவோம்…” அவன் சொல்லவும் புன்னகைத்தாள்.
“நிஜமாலுமே என்னால நீங்க இல்லாம தூங்க முடியலங்க, ரொம்ப கஷ்டமாருக்கு… பேசாம நைட்டு நம்ம வீட்டுக்கு வந்துட்டு காலைல இங்க வந்துக்கலாமான்னு கூட யோசிக்கறேன்…” என்றவளை நோக்கி சிரித்தான்.
“எனக்கொண்ணும் பிரச்சனை இல்ல, உன்னை தான் எல்லாரும் புருஷனைப் பிரிஞ்சு இருக்க முடியல போல, இப்படி ஓடி வந்துடறான்னு சொல்லுவாங்க…”
“சொன்னா சொல்லிட்டுப் போகட்டும், அதான உண்மை…” என்றவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.
“வேண்டாம் கண்ணம்மா, எனக்கு டைம் கிடைக்கும் போதேல்லாம் உன்னை வந்து பார்த்திட்டுப் போறேன்… உன்னை யாரும் எதுவும் சொல்லிட்டா என்னால தாங்க முடியாது…” என்றவனை எம்பி கன்னத்தில் முத்தமிட்டாள்.
“கண்ணம்மா, உனக்கு எப்ப என்னைப் பார்க்கணும், பேசணும்னு தோணுதோ எனக்கு போன் பண்ணு… வந்துடறேன்… இந்தா, இதை வச்சுக்க…” என்றவன் பாக்கெட்டில் இருந்து ஒரு மொபைலை எடுத்து நீட்ட,
“வாவ்… புது மொபைலா… எனக்காக வாங்கினீங்களா…” என்று ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டு ஆசையுடன் பார்த்தாள். அதிலிருந்து அவனது எண்ணை அழுத்த ரிங் போகவும் புன்னகைத்தாள்.
“உன்னோட பேசாம இருக்கும்போது கஷ்டமா இருந்துச்சு… அப்பத்தான் தோணுச்சு மொபைல் வாங்கலாம்னு… காலைல வாங்கி சிம் ஆக்டிவேட் பண்ணி, முக்கியமான நம்பர் எல்லாம் நானே பதிஞ்சு வச்சுட்டேன்… சந்தோஷமா…” என்றதும், “என் புருஷன்னா புருஷன் தான்… உம்மா…” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு சிரித்தாள்.
இரவு அத்தை கொடுத்த டிபனை சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான் இலக்கியன். இரவு அவளது அழைப்புக்காய் அழைக்காமல் காத்திருந்தான் இலக்கியன். பனிரெண்டு மணி வரை அழைக்காமல் இருக்கவே, உறங்கி விட்டாளோ என நினைத்து கண்ணை இறுக்க மூடி உறங்க முயன்றான். ஆனால் நித்திரா தேவி சண்டித்தனம் செய்ய புரண்டு கொண்டிருந்தவன் அலைபேசி சிணுங்கவும் வேகமாய் எடுத்தான்.
கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை…
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன்மழை…
உன்னை நினைத்திருந்தால்
அம்மம்மா நெஞ்சமே
துள்ளிக் குதித்ததுதான்
எங்கெங்கும் செல்லுமே…
யாழினிக்காய் செட் பண்ணி வைத்திருந்த ரிங் டோன் ஒலிக்கவும் ஆர்வத்துடன் காதில் வைத்தான்.
“ஹலோ, கண்ணம்மா…”
“ம்ம்… தூங்கிட்டீங்களா… டிஸ்டர்ப் பண்ணிட்டேனா…”
“இல்லடா மா… உன் போனுக்கு தான் காத்திருந்தேன்…”
“அப்ப என்னைக் கூப்பிட வேண்டியது தான… நீங்க தூங்கி இருப்பிங்களோ, டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு தான் இவ்ளோ நேரம் கூப்பிடல, உங்க குரலாச்சும் கேட்காம கண்டிப்பா தூங்க முடியாதுன்னு தோணுச்சு… அதான் கூப்பிட்டேன்…” சிணுங்கினாள்.
“ம்ம், நானும் நீ தூங்கிருப்பியோ நினைச்சுதான் மா கூப்பிடல…” என்றான் இலக்கியன்.
“நல்லா நினைச்சிங்க… போங்க, இனி டெய்லி எனக்கு நீங்களே கூப்பிடணும் சொல்லிட்டேன்…”
“சரிம்மா… இனி கூப்பிடறேன்… இப்படித் தூங்காம இருந்து நம்ம பாப்பாவோட தூக்கத்தையும் கெடுக்கற நீ…” என்றான் இலக்கியன் சிரிப்புடன். 
“உங்க பாப்பா ரொம்ப மோசம், அப்பப்போ வயித்துக்குள்ள என்னை எப்படி எட்டி உதைக்கிறா தெரியுமா… வெளிய வந்ததும் இருக்கு அவளுக்கு…”
“ஹஹா… என் குட்டி செல்லத்தை அப்படி எல்லாம் சொல்லாத கண்ணம்மா…”
“ஹலோ, என்ன இது… உங்களுக்கு நான் மட்டும் தான் செல்லம், வெல்லம் எல்லாம்… புள்ள வந்ததும் பொண்டாட்டிய மறந்திங்க… அப்புறம் இருக்கு உங்களுக்கு…”
“ஹாஹா… என்னடி, ரவுடி மாதிரிப் பேசற…”
“பின்ன, உரிமைய விட்டுக் கொடுக்கிற பிரச்சனை இல்ல, சொல்லிட்டேன்…” அவளுக்கே சிரிப்பு வந்தது. 
“சரி, சரி… நீ என் முதல் குழந்தை, பிறக்கப் போறது என்னோட ரெண்டாவது குழந்தை… உன்னைக் கொஞ்சிட்டு தான் குழந்தையக் கொஞ்சுவேன் போதுமா…”
“ம்ம்… இந்த டீலை எப்பவும் மறந்திடக் கூடாது புருஷா…”
“சரிடி, டைம் ஆச்சு… நீ தூங்கப் பாரு…”
“ம்ம்… எனக்கு இப்ப உங்க கிட்ட ஸ்ட்ராங்கா சாரி கேக்கணும் போலருக்கு…”
“எதுக்கு சாரி, என்னடா தப்புப் பண்ணின…” என்றான் அவன் யோசனையுடன்.
“ஹூக்கும், சாரி சொல்லப் பழக்கினவங்களே மறந்து போனா எப்படி… நான் போனை வைக்கிறேன்…” என்று வைத்து விட யோசித்தவனுக்கு சில நிமிடத்திற்குப் பின் பல்பெரிந்தது.
“அச்சோ, என் செல்லமே… என்னைப் பார்க்காம உனக்குள்ள இவ்வளவு ஏக்கமா… இன்னும் எத்தன குழந்தை வந்தாலும் நீ தான்டி என் முதல் குழந்தை… உனக்குப் பின்னாடி தான் அவங்க எல்லாம்… நீ என் காதல் ராட்சசிடி…” அப்படியே தலையணையைக் கட்டிக் கொண்டு உறங்கிப் போனான்.
நாட்கள் அழகாய் நகர போனிலும், நேரம் கிடைக்கும்போது நேரிலுமாய் மனைவியைக் கொஞ்சிக் கொண்டிருந்தான்.
இரண்டு நாள் கழித்து செக்கப் போனபோதே, “வயிறு இறங்கி விட்டது, கவனமா இருக்கணும்…” என்று டாக்டர் கூறினார். “அதிகம் உக்காரக் கூடாது, நடந்துட்டே இருக்கணும்…” என்றெல்லாம் அவர் கூறியதை பாலோ செய்து கொண்டிருந்தாள் யாழினி.
கால் அடிக்கடி வீங்கி தங்கக் கொலுசு அழுந்துவதால் அவிழ்த்து வைக்கும்படி அன்னை சொல்ல மறுத்துவிட்டாள்.
“எப்படியும் பிரசவத்துக்கு போகும்போது எல்லா நகையும் கழற்ற சொல்லிடுவாங்க… நம்மலே அவிழ்த்து வச்சிடலாம்…” என்று அவர் சொல்லவும், மனசில்லாமல் கழற்றி வைத்தாள்.
காலையில் வீட்டுக்குள்ளேயே அங்குமிங்குமாய் நடந்து கொண்டிருந்தவள் தந்தை நடேசன் இருமிக் கொண்டே இருக்கவும் அவரிடம் வந்தாள்.
“என்னப்பா, ரொம்ப இருமறீங்க… டாக்டரைப் போயி பார்த்திட்டு வரலாம்ல…” என்ற மகளிடம், “ம்ம்… நாளைக்குப் போகறேன் கண்ணம்மா…” என்றார் நடேசன்.
“ஏன் இன்னைக்கு நல்ல நாள் இல்லையாக்கும்…” என்றார் வசந்தா.
“அதில்ல வசந்தா, புள்ள பிரசவத்துக்குன்னு சீட்டு போட்டிருந்தமே, இன்னைக்கு அது எடுக்கப் போகணும்… ஆசுபத்திரி செலவு, பேரப் பிள்ளைக்கு நகை போடற செலவுன்னு ஒரு தொகை ஆகும்ல… கேட்டிருந்தேன்… இன்னைக்கு வர சொன்னாங்க… போயிப் பார்த்திடறேன்…”
“ஏன்ப்பா, இப்படி உங்க உடம்பை கவனிக்காம எங்களைப் பத்தியே யோசிச்சிட்டு இருக்கீங்க… எங்களுக்கு நீங்களும் முக்கியம் தானப்பா…” என்றவள் சென்று விட்டாள். 
மேலும் பத்து நாள் ஓடியிருக்க மண்டபத்தில் சீரியல் லைட்ஸ் கட்டுவதைப் பார்த்துக் கொண்டு நின்ற இலக்கியனின் அலைபேசி சிணுங்க யாழினியின் எண்ணைப் பார்த்தவன் எடுத்து காதுக்குக் கொடுத்தான்.
“எ..என்னங்க… எ..என்னால முடியல, ரொம்ப வலிக்..குது… சீக்கிரம் வீட்டுக்கு வா…ங்க…” என்று திக்கித் திணறி சொல்ல பதறிப் போனவன், “கண்ணம்மா, அ..அத்த அங்க இருக்காங்க தானே…” என்றான் வேகமாக.
“அ..ம்மா இருக்காங்க… நீ…ங்க வாங்க… ஆ… முடியலங்க…” என்றாள் அழுகையுடன்.
“டேய் கண்ணம்மா, பயப்படாத… நான் இப்ப வந்திடறேன்…” எனும்போதே “மாப்பிள்ள, கொஞ்சம் சீக்கிரம் வாங்க, இவ ரொம்ப பயப்படறா… உங்களைப் பார்த்தா கொஞ்சம் தைரியமா இருப்பா…” என்ற வசந்தா போனை வைத்துவிட,  தம்பியிடம் விஷயத்தை சொல்லிவிட்டு வண்டியில் அவள் வீட்டுக்குப் பறந்தான் இலக்கியன். போனில் டாக்ஸிக்கு சொல்லிவிட்டு வீட்டுக்கு செல்ல அவர்கள் ஆசுபத்திரி செல்ல தயாராய் இருந்தனர்.
“ஆ…. ஊ…” என்று இடுப்பைப் பிடித்தபடி அனத்திக் கொண்டு இருந்த யாழினி கணவனைக் கண்டதும், “என்னங்க… ரொம்ப வலிக்குது…” என்று அழத் தொடங்க, “பயப்படாத கண்ணம்மா, இதோ ஆசுபத்திரிக்கு போயிடலாம்… எல்லாம் எடுத்துட்டீங்களா அத்தை… மெடிகல் ரிபோர்ட் எடுத்தாச்சா…”
என்றவன் அவர் தலையாட்டவும் கைத்தாங்கலாய் மனைவியைப் பிடித்து டாக்ஸிக்கு அழைத்துச் சென்றான்.
பள்ளம் தேடிப் பாயும்
வெள்ளம் என என் உள்ளம்
உன் நினைவுகளில்
ஆர்ப்பரிக்கையில்
அணை போட முடியாமல்
துணைபோகிறேன்
ஓடமென நானும்…
கொண்டாட யாருமில்லா
பிள்ளையென திண்டாடுறேன்
நீ அருகில் இல்லாத பொழுது…

Advertisement