Advertisement

அத்தியாயம் – 12
காலண்டரில் மேலும் 3 மாதங்கள் கிழிபட்டிருந்தன.
“யாழினி கொஞ்சம் இங்க வா மா…” கீழிருந்து அத்தையின் குரல் கேட்கவும் கட்டிலில் படுத்திருந்த யாழினி அவசரமாய் எழுந்திருக்க, தடுமாறி விழப் போனாள். அதை கவனித்த இலக்கியன் வேகமாய் தாங்கிக் கொண்டான்.
“என்ன கண்ணம்மா, மெதுவா எழுந்திருச்சுப் போ…”
“ம்ம்… சட்டுன்னு எழவும் தலை சுத்திருச்சு… அத்தைகிட்ட என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன்…” என்றவள் படியிறங்க அவனும் அவளுடனே சென்றான்.
“என்னமா, எதுக்கு கூப்பிட்டீங்க…” என்றான் அன்னையின் முன்னில் நின்று.
“நான் என் மருமகளைத் தானே கூப்பிட்டேன்… நீ எதுக்கு முன்னாடி வந்து நிக்கற…” என்றார் அவர் முறைப்புடன்.
“சொல்லுங்கத்த…” என்றால் யாழினி பின்னில் இருந்து.
“நானும், என் பொண்டாட்டியும் ஒண்ணு தான்… சும்மா சொல்லுங்கம்மா…” என்றான் அவர் கன்னத்தைக் கிள்ளி.
“ஓஹோ… உன் லொள்ளுக்கு  அளவில்லை… எம்மா, யாழினி… எதை சாப்பிட்டாலும் வாந்தி எடுத்திட்டே இருக்கியேன்னு கொஞ்சம் பசலைக் கீரை சூப் செய்தேன்… குடி…” என்று ஒரு கிளாசில் பச்சை நிற ஜூஸை நீட்ட அவள் முகம் அஷ்டகோணலாய் போனது.
“என்னமா, மூஞ்சிய சுளிக்கற… பிறக்குற குழந்தை நல்லா ஆரோக்கியமா இருக்க வேண்டாமா… என் பொண்ணுங்க மாசமா இருக்கும்போது இப்படிதான் தினமும் பொரியல், குழம்புன்னு கீரைல கொடுத்தா மூஞ்சிய சுளிக்கறாங்கன்னு சூப் வச்சுக் கொடுத்திருவேன்… மாசமா இருக்கும்போது நல்லா சாப்பிடணும் மா… வாந்தி வருதுன்னு சாப்பிடாம இருந்தா வயித்துல இருக்கற குழந்தைக்கு ஆரோக்கியமான வளர்ச்சி கிடைக்காது… இந்தா குடி…” நீட்டினார்.
மீண்டும் முகத்தை சுளித்த யாழினி, “எனக்கு சூப்பே பிடிக்காது அத்தை… அதும் இந்த பசலைக்கீரை சுத்தமாப் பிடிக்காது… பிடிக்காம குடிச்சா வாந்தி வந்திரும்… வேண்டாம் அத்த…” என்றாள் கெஞ்சலாக.
“அம்மா தான் இவ்வளவு சொல்லுறாங்கல்ல… அதும் உனக்காக கஷ்டப்பட்டு செய்ததை வேண்டாம்னு சொல்லறது தப்பு… கண்ணை மூடிட்டு கப்புன்னு அடிச்சிரு…” என்ற இலக்கியன் அன்னையின் கையிலிருந்த கிளாசை வாங்கிக் கொள்ள, “உன் பொண்டாட்டியைக் குடிக்க வைக்க வேண்டியது உன் பொறுப்புடா மகனே… விட்டுறாத…” என்றவர் சிரிப்புடன் நகர்ந்தார்.
அவருக்குத் தெரியும்… நல்லது என்று சொன்ன பின்னர் மகன் அவளைக் குடிக்க வைக்காமல் விட மாட்டான் என்று. அவள் உண்டாகி இருக்கிறாள் என்பது தெரிந்தது முதல் கொஞ்ச நஞ்ச அலும்பா பண்ணிக் கொண்டிருக்கிறான். மனைவியைத் தாங்கோ தாங்கென்று அல்லவா தாங்கிக் கொண்டிருக்கிறான்.
“ப்ளீஸ் வேணாங்க… எனக்கு இப்பவே குமட்டிட்டு வருது…”
“அதெல்லாம் முடியாது… காலைல சாப்பிட்டதும் வாந்தி எடுத்திட்ட… இப்ப வாந்தி வந்தாலும் பரவால்ல, குடி…”
அவளை விடாமல் விரட்டிப் பிடித்து வாயில் கிளாஸை வைக்க முகத்தை சுளித்துக் கொண்டே கண்ணை மூடி அதைக் குடித்தாள் யாழினி. அடுத்த நிமிடம் வயிற்றுக்குள் ஏதோ யுத்தம் நிகழ வாயை மூடிக் கொண்டு வாஷ் பேசினுக்கு ஓடியவளின் பின்னில் இலக்கியனும் சென்றான்.
பச்சை, பச்சையாய் வாந்தி எடுத்தவளின் முதுகில் தடவிக் கொடுத்து தண்ணீர் குடிக்கக் கொடுத்து அழைத்து வந்து சோபாவில் அமர்த்தினான்.
“நீ போயி கொஞ்சம் படுத்துக்க யாழினி…” சொன்ன அன்னையிடம், “என்னமா, இவ இப்படி வாந்தி எடுக்கிறா… சாப்பிட்ட எதுவும் வயித்துல தங்காது போலருக்கு…” இலக்கியன் கவலையுடன் கேட்க சிரித்தார் அவர்.
“இதுக்குப் பேரு தான் மசக்கை… இன்னும் கொஞ்ச நாள் இப்படி இருக்கும்… சரியாகிடும்…” சொன்னவர் அடுக்களைக்கு சென்று சூடாய் இஞ்சி டீ செய்து எடுத்து வந்து கொடுத்தார்.
“இந்தாம்மா, இஞ்சி தட்டிப் போட்ட டீயைக் குடிச்சா கொஞ்சம் குமட்டல் நிக்கும்…” என்றதும் வாங்கிக் குடித்தாள்.
“மதிய சமையல் நான் பார்த்துக்கறேன்… இலக்கியா, இவளை மாடிக்கு அழைச்சிட்டுப் போப்பா…” அன்னை சொல்லவும், அவளை எழுப்பி மாடிக்கு அழைத்துச் சென்றான் இலக்கியன்.
“வேலை இருக்குன்னு சொன்னிங்க, கடைக்குப் போகலியா…” கேட்டவளிடம், “நான் மதியம் போயிக்கறேன்… இப்ப தம்பி பார்த்துப்பான்…” என்றவன் கட்டிலில் அமர்ந்து அவளது தலையை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டான்.
இதமாய் கோதிக் கொடுக்கவும் களைப்பில் மெல்ல கண் மூடி உறங்கத் தொடங்கினாள் யாழினி. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்லப் புன்னகைத்தான்.
ஒரு மாதம் முன்பு தோழி உமாவின் நிச்சயத்துக்கு இருவரும் சென்றிருந்தனர். கலகலவென்று தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த யாழினி எல்லாம் நல்லபடியாய் முடிந்து வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில் சட்டென்று தலை சுற்றி கீழே விழப் போக அனைவரும் பதறிப் போயினர்.  
தண்ணீர் தெளித்து அவளுக்கு மயக்கம் தெளிவித்தாலும், டாக்டரிடம் அழைத்துச் சென்றவனுக்கு மிகவும் இனிப்பான செய்தியைக் கூறினார் டாக்டர்.
“வாழ்த்துகள் இலக்கியன்… நீ அப்பா ஆகப் போற…” சிரிப்புடன் அவர்களின் குடும்ப டாக்டர் புகழேந்தி சொல்லவும் அவனுக்குள் குப்பென்று ஒரு சந்தோஷ உணர்வு தோன்ற திக்கு முக்காடிப் போனான்.
எத்தனை நாள் காத்திருப்பு… எத்தனை கேள்விகளுக்குப் பதில்… தன்னை வாழ்வின் அடுத்த படிக்கு உயர்த்தும் அப்பா என்ற பதவி… சந்தோஷத்தில் அவர் கையைப் பிடித்து ஆட்டியவன் மனைவியைத் தூக்கிக் கொண்டு சுற்றினான்.
“என்னங்க, பார்த்து…” என்றவளுக்கும் ஆனந்தமாய் இருந்தது. தனக்கு ஒரு குழந்தை வரப்போகும் சந்தோஷத்தை விட தன் உயிருக்கு உயிரான கணவனின் வாரிசை சுமக்கிறோம் என்ற சந்தோஷம் மனத்தைக் குளிர்விக்க கணவனின், குதூகலம் கண்டு நெகிழ்ச்சியுடன் அவனைக் கட்டிக் கொண்டாள்.
“பிளடி பிஸ்கட், நமக்கு குழந்தை வரப் போகுது… உங்க ஆசை நிறைவேறப் போகுது…”
“பிளாக் சாக்கலேட், நா… நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா… இனி யாரும் கையாலாகாதவன்னு என்னைப் பார்த்து லுக் விட மாட்டாங்க… ஒரு குட்டி சாக்கலேட் பிஸ்கட்டை எனக்குப் பெத்துக் கொடுத்திரு…” என்றான் அவள் வயிற்றில் முத்தமிட்டு.
“ம்ஹூம்… எனக்கு உங்களைப் போல அழகா, கலரா பட்டர் பிஸ்கட் தான் வேணும்…” என்றவளை அணைத்துக் கொண்டவன், “எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே தான்… நல்லபடியா பெத்துக் குடு போதும்…” என்றவன் அதற்குப் பின் கண்ணுக்குள் வைத்துத் தாங்கினான். மூன்று மாதம் முடியும் வரை கவனமாய் இருக்க வேண்டுமென்று டாக்டர் புகழேந்தி சொல்லவும் சமையல் வேலையைக் கூட பர்வதமே பார்த்துக் கொண்டார். அவரும் பேரப் பிள்ளை வரப் போகிற சந்தோஷத்தில் இருந்தார்.
இலக்கியனின் அக்காக்களும் அடிக்கடி இவளுக்குப் பிடித்த மாதிரி சமையலை செய்து வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்தனர். கவிதாவுக்கு எல்லாருமாய் அவளைக்  கொண்டாடுவதைக் கண்டு வயிறு எரிந்தாலும் காட்டிக் கொள்ள முடியவில்லை. அவளும் மூன்று பெண்களைப் பிரசவித்திருக்கிறாள்.
மாசமானதுமே டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொன்னதாகக் கூறி தாய் வீட்டுக்கு ஓடி விடுவாள்… அவளைப் புருஷனும் தாங்கியதில்லை… புகுந்தவீடும் கொண்டாடியதில்லை எனும்போது இவளுக்கு எல்லாரும் பார்த்து செய்யும்போது பொறாமையில் பொங்கிய மனதைத் தடுக்க முடியவில்லை.
யாழினியை சிறிது நாள் தங்கள் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்வதாக வசந்தா மருமகனிடம் கேட்டும் இலக்கியன் அனுப்பவில்லை. யாழினிக்கும் கணவனை விட்டு இருக்க முடியுமென்று தோன்றவில்லை. நாட்கள் அழகாய் நகரத் தொடங்க அவளது சின்ன வயிறு மேடிடத் தொடங்கி குழந்தை வளரத் தொடங்கியது.
கண்ணாடி முன்னில் நின்று தலை வாரிக் கொண்டிருந்த மனைவியைப் புன்னகையுடன் நோக்கியவன் அவள் பின்னில் வந்து நின்றான். இருவரும் உமாவின் கல்யாண ரிஷப்ஷனுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். யாழினிக்கு ஆறு மாதம் ஆகியிருந்தது. தாய்மையின் பூரிப்பும், வீட்டினரின் கவனிப்பும் உடலை செழுமையாக்கி இருந்தது.
பட்டு சேலை மடிப்பை சரி பண்ண முடியாமல் வயிறு தடுக்க அதைக் கண்டு சிரித்த இலக்கியன், “என்கிட்ட சொல்ல வேண்டியது தான கண்ணம்மா…” என்று அவள் முன்னில் அமர்ந்து சரி பண்ணிக் கொடுத்தான்.
இடுப்பு மடிப்பை சரி பண்ணியவன் அவள் மணி வயிற்றில் முத்தமிட சிலிர்த்தவள் சிரித்தாள்.
“இதுக்கு தான் உங்களை எதுவும் பண்ண சொல்லறதே இல்ல…” என்றவளின் பின்னில் வந்து அவள் தோளில் முகம் வைத்துக் கண்ணாடியில் பார்த்தவன், “ஏய், பிளாக் சாக்கலேட், நான் என்ன அவ்ளோ மோசமா… இப்ப உன்னைப் பார்த்தா எனக்கு அந்த மூடு தோணல… என் குழந்தையைத் தாங்கி நிக்கற தேவதையா தான் தெரியுற…” என்றவனின் தலையைக் கலைத்தவள்,
“ஹூம், குழந்தை வயித்துல இருக்கும்போதே என்னைப் பொண்டாட்டியாத் தெரியல… இனி குழந்தை வந்துட்டா என்னை எல்லாம் மறந்தே போயிடுவிங்க…” என்றாள் அவன் சட்டை பட்டனைத் திருகிக் கொண்டே.
“ஹேய் கண்ணம்மா, என்னடா சொல்லற… தாய்மை ஒரு வரம், வயித்துல குழந்தையோட இருக்கற பெண்களைப் பார்க்கும் போது எனக்கு அம்மாவைத்தான் நினைவு வருது… ஒரு குழந்தைக்கு உயிர் கொடுக்கிறது தந்தையா இருந்தாலும் வயித்துல சுமக்கிற ஒவ்வொரு நொடியும் குழந்தைக்காக யோசிச்சு, தன்னோட ஊண், உறக்கம் எல்லாத்தையும் அதுக்காக விட்டுக் கொடுத்து பத்து மாசம் வரமிருந்து குழந்தையைப் பெத்தெடுக்கறீங்க… உலகத்துக்கு ஒரு புதிய உயிரைக் கொடுக்கற தாய்மை, கடவுளுக்கு சமமானது… நீயும் இப்ப எனக்கு சாமி போலத்தான்…” என்றவனின் நெஞ்சில் சந்தோஷமாய் குத்தினாள் யாழினி.
அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும், தாய்மையின் மீது அவன் கொண்டிருந்த மதிப்பையும் பிரமிப்பையும், உணர்த்த, இப்படிப்பட்டவனின் குழந்தையைத் தான் சுமக்கிறோம் என்ற பெருமையில் மனம் நெகிழ்ந்தது.
“ஏய் கண்ணம்மா, இப்ப எதுக்குடா இப்படி கண்ணைக் கசக்கிட்டு நிக்கற… இப்பவே டைம் ஆச்சு… நாம கிளம்ப இன்னும் லேட்டானா உன் பிரண்டு வளைகாப்பு பங்க்ஷன்க்கு தான் போக வேண்டி வரும்… வா வா…” அவன் அவசரப்படுத்த புன்னகைத்து கன்னத்தில் இதழ் பதித்தாள்.
அவளை நெகிழ்ச்சியுடன் பார்த்தவன், “என்னடா…” என்று நெற்றியில் முத்தமிட்டு விடுவிக்க இருவரும் கிளம்பினர்.
பைக்கில் போக வேண்டாமென்று டாக்ஸிக்கு சொல்லி இருந்தான் இலக்கியன். பர்வதத்திடம் சொல்லிவிட்டு டாக்ஸியில் அமர புறப்பட்டனர். உமாவின் மாப்பிள்ளை வீடு மதுரை என்பதால் கல்யாணம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முடித்துவிட்டு ரிஷப்ஷனும் அங்கேயே ஒரு மண்டபத்தில் மாலையில் ஏற்பாடு செய்திருந்தனர். கோவிலில் கூட்டமாய் இருக்குமென்பதால் கல்யாணத்துக்கு செல்லாமல் ரிஷப்ஷனுக்கு மட்டும் கிளம்பினர்.
“யாழினி…” தோழியைக் கண்டதும் மேடையில் நின்ற உமா கண்களை சந்தோஷத்தில் விரித்து கட்டிக் கொண்டாள்.
“நல்லாருக்கியா, செக் அப் எல்லாம் கரக்டா போறியா… அண்ணா உன்னை நல்லா கவனிச்சிக்கிறாரா…” கேள்விகளை அடுக்கியவளை நோக்கி சிரித்த யாழினி, “அதெல்லாம் கொஞ்சம் அதிகமாவே கவனிச்சிக்கிறார்… அதான் இம்சையா இருக்கு…” என்றவள் பெருமையுடன் கணவனை நோக்க அவன் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.
“ஏண்டி, இப்படி சொல்லற… நான் இவர்கிட்ட கூட எப்பவும் உங்க ரெண்டு பேரைப் பத்தி தான் பெருமையா சொல்லுவேன்… அண்ணா நிஜமாலுமே கிரேட் தெரியுமா…”
“ம்ம்… போதும்டி, அவர் காதுல விழற போல சொல்லிடாத… உன் அண்ணனைக் கைல பிடிக்க முடியாது… சரி அதை விடு, இனி நீயும் சென்னை போயிடுவ… நினைச்ச நேரத்துல பார்த்துக்க முடியாது… சட்டுன்னு கல்யாணம் வச்சு உன் படிப்பை நிறுத்திப் போட்டாங்களே… அதையாவது முடிச்சிருக்கலாம்…” என்றாள் வருத்தத்துடன்.
“என்னடி பண்ணறது… குடும்பத்த மதுரைல விட்டுட்டு சென்னைல தனியா இருக்கணும்னு தான் இவருக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணுறாங்க… எனக்கும் இப்பவே கல்யாணம் முடிக்கலேன்னா ரெண்டு வருஷம் கழிச்சு தான் யோகம் இருக்காம்… அதான் வீட்ல சொன்னப்ப தட்ட முடியல…”
அதற்குள் யாரோ மேடைக்கு வரவும், “ம்ம்… சரிடி, அப்பப்ப போன் பண்ணு…” என்றாள் யாழினி.
சிறிது நேரம் அவளது குடும்பத்திடமும் தெரிந்தவர்களிடமும் பேசிக் கொண்டிருந்துவிட்டு சாப்பிட்டு கிளம்பினர். காரில் தோழியைப் பற்றியே பேசிக் கொண்டு வந்தாள் யாழினி.
ஹாலில் பர்வதமும், தம்பியும் அமர்ந்திருந்தனர்.
“சாப்டீங்களா அத்தை…” என்று விசாரித்தாள்.
“ம்ம்… உன் சிநேகிதி ரிஷப்ஷன் நல்லா முடிஞ்சுதா… நீ நல்லா சாப்பிட்டியா…”
“ம்ம்… ஆனா, இப்ப மறுபடி லைட்டா பசிக்குது அத்தை…”
“ஹஹா… உன் புருஷன் என் வயித்தில் இருந்தப்பவும் இப்படி தான்… எத்தன சாப்பிட்டாலும் மறுபடி பசிக்கும்… அவன் புள்ளையும் அவனைப் போல தான் போலிருக்கு… இட்லி இருக்குமா, சாப்பிடு…” என்றார்.
“அதுசரி, என் குழந்தை என்னைப் போல தான் இருக்கும்… இது கூட இந்தப் பாட்டிம்மாவுக்குத் தெரியலையே…” என்று அவர் கன்னத்தைப் பிடித்துக் கிள்ள, “ஆ… விடுடா… நானே பல்லு வலிக்குதுன்னு இருக்கேன்…” என்றார் அவர்.
“ஏன்மா, தம்பிய நேரமா வர சொல்லி டாக்டரைப் போயி பார்த்திருக்கலாமே…”
“நானும் சொன்னேன்ணா… அம்மா தான் வேண்டாம்னு சொல்லிடுச்சு…” என்றான் தம்பி.
“இப்பதான் கொஞ்ச நேரமா வலி… நாளைக்கும் இருந்தாப் போயி பார்த்திட்டு வரலாம்… பல்லைப் புடுங்கினா தான் சரியாகும் போலருக்கு…” என்றார் அவர்.
“அச்சோ, வலியோடவே வேலை செய்திங்களா அத்தை…” யாழினி கவலையுடன் கேட்க, “இட்லி தானே ஊத்தினேன்… அதொண்ணும் பரவால்ல மா… நீ டிரஸ் மாத்திட்டு சாப்பிடு… நான் படுக்கறேன்… மறக்காம பால் குடி…” என்றார்.
“ஹாங்… சொல்ல மறந்துட்டேன்… இலக்கியா, ஞாயித்துக் கிழமை கிருபா நம்மள அவ வீட்டுக்கு வர சொல்லிருக்கா… யாழினிக்கு விருந்து வைக்கணுமாம்…”
“ஓ… சரிம்மா, போகலாம்… நீங்க போயி ரெஸ்ட் எடுங்க…”
“ம்ம்…” என்றவர் எழுந்து அறைக்கு செல்ல, “தம்பி, நாளைக்கு அம்மாவ சாயந்திரம் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயிட்டு வந்திடு… எனக்கு மண்டபத்துல கொஞ்சம் வேலை இருக்கு…”
“சரிண்ணா, நான் பார்த்துக்கறேன்…” என்றான் அவன்.
இருவரும் உடை மாற்ற மாடிக்கு சென்றனர். யாழினியின் காலைப் பார்த்த இலக்கியன் பதறினான்.
“என்ன கண்ணம்மா இது, உன் காலு இப்படி வீங்கிருக்கு…” எனவும் காலை கட்டில் மீது வைத்துப் பார்க்க, நீர் கோர்த்துக் கொண்டு தங்கக் கொலுசு அசைய முடியாமல் அப்படியே காலில் பதிந்து இறுகிக் கிடந்தது.
அவளுக்கு வெகு நேரமாகவே கால் வலித்துக் கொண்டு தான் இருந்தது. இவனிடம் சொன்னால் வருத்தப்படுவானோ என்று தான் சொல்லாமல் இருந்தாள்.
“சரி, நீ டிரஸ் மாத்து… நான் வந்திடறேன்…” என்றவன் வேகமாய் அவனது உடைஇலிருந்து லுங்கிக்கு மாறி கீழே சென்றான்.
அன்னையிடம் என்ன செய்வதென்று கேட்டு சுடுதண்ணீர் வைத்து எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றான். அவள் அதற்குள் நைட்டிக்குள் புகுந்திருந்தாள்.
“கண்ணம்மா, இப்படி உக்காரு…” என்றவன் அவளை காலை நீட்டி அமர வைத்து சுடு நீரில் ஒத்தடம் கொடுத்தான்.
“நீ இங்கயே இரு… நான் இட்லி எடுத்திட்டு வரேன்…” என்றவன் இட்லியோடு பாலையும் ஒரு கிளாசில் இளம் சூடில் கொண்டு வந்து கொடுக்க நெகிழ்வுடன் அவனைப் பார்த்தவள் மௌனமாய் சாப்பிட்டு முடித்தாள்.
“நீ தூங்கு கண்ணம்மா, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு…” அவன் சொல்லவும் ஒருக்களித்து படுத்துக் கொண்டாள். கடைக் கணக்கு நோட்டை சரி பார்த்துக் கொண்டிருந்தவன் அடுத்த நாள் யாரிடமெல்லாம் கலக்ஷன் பண்ண வேண்டுமென்று நோட் பண்ணிக் கொண்டிருந்தான்.
கணவனையே பார்த்துக் கொண்டிருந்த யாழினி அவனை ஒட்டிப் படுத்துக் கொள்ளவும் திரும்பியவன், “என்னடா, கால் வலிக்குதா…” கேட்டுக் கொண்டே அவள் நெற்றியை வருடிக் கொடுக்க இரண்டு கைகளையும் விரித்து தலையை ஆட்டி வா என்பது போல் அழைக்க, “பக்கத்துல படுக்கணுமா…” என்றவன் கையிலிருந்த நோட்டை மூடி விட்டு படுத்தான்.
தாய் மடி தேடும் குழந்தை போல் அவன் நெஞ்சம் தேடி முகத்தைப் பதித்துக் கொண்டவள் அவனை ஒட்டியபடி அணைத்தவாறு படுக்க, புன்னகையுடன் அவள் நெற்றியில் முத்தமிட்டு முதுகில் மெல்லத் தட்டிக் கொடுக்கும் தாயானான் அவன். தன் கணவனிடம் தாயை உணர முடிந்த பெண் மிகுந்த பாக்கியசாலி.
யாழினியால் அதை உணர முடிந்தது. தன் தாய் மடியின் கதகதப்பை அவனது நேசத்தின் அணைப்பில் உணர்ந்தவள் சுகமாய் கண் மூடி நிம்மதியான நித்திரைக்கு சென்றாள்.
ஜீரோ வாட்ஸ் வெளிச்சத்தில் தன் நெஞ்சத்தை மஞ்சமாய் கொண்டு உறங்கும் மனையாளை நேசத்துடன் உச்சி முகர்ந்தான் இலக்கியன். தினமும் ஒரு புது நேசத்தை அவனிடம் உணர்ந்தவளுக்கு அவனே உலகமாகிப் போனான்.
அன்னையிடம்
அடைக்கலமாக துடிக்கும்
அடிபட்ட பிள்ளையென
எப்பொழுதும் உன்னிடம்
தஞ்சம் கொள்ளவே
மனம் ஏங்குகிறேன்…
உன் நேசமென்னும்
வேலியே எனக்கு
என்றும் அரணாய்…

Advertisement