Advertisement

அத்தியாயம் – 11
குக்கூ… குக்கூ…
சுவரிலிருந்த கடிகாரத்தின் கிளிகள் ஐந்து முறை கூவி ஓய்ந்தன. கணவனுக்காய் காத்திருந்து சோபாவில் அப்படியே தலை சாய்த்து உறங்கிப் போயிருந்த யாழினி கடிகாரத்தின் ஓசையில் திடுக்கிட்டு உணர்ந்தாள்.
சட்டென்று எல்லாம் நினைவு வர, “அஞ்சு மணியாச்சு… இன்னும் இவங்களைக் காணோமே…” என பதைப்புடன் யோசித்துக் கொண்டிருக்க வாசலில் வண்டி சத்தம் கேட்டது. சட்டென்று எழுந்து கதவைத் திறக்க அண்ணனும், தம்பியும் பைக்கிலிருந்து இறங்கினர்.
சோர்வுடன் பின்னிலிருந்து இறங்கிய கணவனைக் கண்டதும் பாய்ந்து சென்ற யாழினி, “என்னங்க, உங்களுக்கு ஒண்ணும் இல்லையே… ஏன், போன் எடுக்கல… நான் ரொம்ப பயந்து போயிட்டேன் தெரியுமா…” வாசலென்று கூடப் பார்க்காமல் கணவனைக் கட்டிக் கொண்டு தேம்பியவளைக் கண்டு நெகிழ்ந்தான் இலக்கியன்.
“எனக்கு ஒண்ணும் இல்லமா, நல்லாருக்கேன் பாரு…” அவன் சொல்லியும் கேட்காமல் அவனது உடலெங்கும் பார்வையை ஓடவிட்ட பின்னரே சமாதானமானாள். அவர்களை நோக்கி நின்ற தம்பியின் கண்களே அந்த நேசப் பிணைப்பில் கலங்கிப் போனது.
“அண்ணா, நீ அண்ணிய கூட்டிட்டு மாடிக்குப் போ… ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க…” என்றதும் அவளைத் தன்னோடு அணைத்தபடி மாடி ஏறினான் இலக்கியன்.
“எதுவும் பிரச்சனை இல்லையென்றால் இவன் முகத்தில் ஏன் இத்தனை சோர்வு…” என்று யாழினி நினைத்தாலும் “இரவெல்லாம் தூங்காதது தான் காரணமாய் இருக்குமோ…” என நினைத்துக் கொண்டாள். கட்டிலைக் கண்டதும் உடை கூட மாற்றாமல் இலக்கியன் அப்படியே படுத்துக் கொள்ளவும் திகைத்தாள்.
“பாவம், டயர்டு போலருக்கு… ரெஸ்ட் எடுக்கட்டும்…” என நினைத்தவள் அருகே அவனை அணைத்தபடி படுத்துக் கொண்டு சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள்.
“என்ன, இந்தப் பொண்ணை இன்னும் காணோம்… நைட்டு எத்தன மணிக்கு வந்திங்க சின்னவனே…” யாழினியைக் காணாததால் சின்னமகனுக்கு தானே காபி கலந்து எடுத்து வந்த பர்வதம் கேட்டார்.
“நாங்க காலைல அஞ்சு மணிக்கு தான்மா வந்தோம்… பாவம், அது வரைக்கும் அண்ணியும் தூங்காம இங்கயே காத்திட்டு இருந்துச்சு போல…”
“ஓ… அதான் ரெண்டு பேரும் தூங்கறாங்க போலருக்கு…”
அன்னை சொல்லவும் மாடிப்படியை ஒரு பார்வை பார்த்துவிட்டு மெல்லிய குரலில், “அம்மா, நேத்து ஷாக் அடிச்சது வேற யாருக்கோ இல்ல, அண்ணனுக்கு தான்…” என்றான் மகன்.
“ஐயோ, என்னடா சொல்லுற…”
“ஆமாம் மா, மயக்கம் போட்டு விழுந்தவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிட்டாங்க… டாக்டர் பார்த்து மயக்கம் தெளிஞ்சதும், வீட்ல சொல்லுறோம்னு சொன்னவங்க கிட்ட வேண்டாம் பயப்படுவாங்கன்னு சொல்ல வேண்டாம் சொல்லிட்டான்… நான் நேர்ல போகவும் தான் எங்கிட்ட விஷயத்தை சொன்னாங்க… நான் போன் பண்ணது கூட ஆசுபத்திரில இருந்து தான்… டாக்டர் தான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போனாப் போதும்னு சொல்லிட்டாங்க…”
“அடக் கடவுளே… என் பையனுக்கு இப்படி ஆனது கூடத் தெரியாம நான் பாட்டுக்கு தூங்கப் போயிட்டேனே… அண்ணனுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே தம்பி…” என்றார் கலக்கத்துடன்.
“இல்லமா, இப்ப ஒண்ணும் இல்ல… ரெஸ்ட் எடுத்தாப் போதும்… வரும்போது கூட அண்ணன் இதே தான் சொல்லி புலம்பிட்டு வந்தான்… அண்ணிகிட்ட சொல்ல வேண்டாம்… பாவம் பயந்திருவாங்க…”
“ம்ம்… சரிதான், யாருக்குன்னு தெரிய முன்னவே பயந்து அழுதுட்டு இருந்தா… புருஷனுக்குன்னு தெரிஞ்சா கலங்கிப் போயிருவா… நானும் சொல்லல…”
“அவங்க நல்லாத் தூங்கி எந்திரிக்கட்டும், எழுப்ப வேண்டாம்… கடைக்கு நான் போயி பார்த்துக்கறேன்…”
“சரிப்பா…” என்றவர் கவலையுடன் காலை டிபனை தயாரிக்க சென்றார்.
கணவனின் அணைப்பில் சுகமாய் உறங்கிக் கொண்டிருந்த யாழினி உறக்கம் கலையவும் தலையைத் தூக்கி சமயம் பார்க்க பதினொன்றைக் காட்டவும் பதறினாள்.
“அச்சோ, இவ்ளோ நேரமா தூங்கிட்டோம்… அத்தை என்ன நினைப்பாங்க…” தன்னைத் தானே கடிந்தபடி எழுந்தவளை இழுத்து மீண்டும் தன் மேல் போட்டுக் கொண்டான் இலக்கியன்.
“அச்சோ இவர் வேற, நேரம் காலம் தெரியாம… என்னங்க, எழுந்திருங்க… கடைக்குப் போக வேண்டாமா…”
அவள் குரலில் கஷ்டப்பட்டு கண்ணைத் திறந்த இலக்கியன், “ப்ச்… இன்னைக்குப் போகல, வா இன்னும் கொஞ்சம் தூங்குவோம்…” என்றதும் அவள் அதிர்ந்தாள்.
“என்னங்க சொல்லறிங்க, டைம் என்னாச்சு பாருங்க… நீங்க வேணும்னா தூங்குங்க…” என்றவள் மாற்று உடையுடன் பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.
குளித்து ஒரு சேலையை சுற்றிக் கொண்டு கீழே சென்றாள். இலக்கியனுக்கு பகலில் நைட்டி அணிவது பிடிக்காது என்பதால் அவள் சேலை, சுரிதார் தான் உடுத்துவாள்.
“வாம்மா, நல்லத் தூங்குனியா…”
கீரையை அரிந்து கொண்டிருந்த பர்வதம் புன்னகையுடன் கேட்க, “சாரி அத்தை, டைம் ஆனது தெரியாம தூங்கிட்டேன்…” தயக்கத்துடன் சொல்ல சிரித்தார்.
“பரவால்ல மா, எப்பவும் நேரமா எழுந்து வர்ற புள்ள இன்னைக்குத் தூங்கவும், நைட்டெல்லாம் கண்ணு முழிச்ச அலுப்பு தான்னு புரிஞ்சிடுச்சு… இட்லி ஊத்தி வச்சிருக்கேன்… போயி சாப்பிடு… இலக்கியன் எழுந்துட்டானா…”
“ம்ம்… காபி குடுத்து எழுப்பறேன் அத்தை…” என்றவள் காபியைக் கலந்து கணவனுக்கு கொண்டு சென்றாள்.
“என்னங்க, காபி இந்தாங்க… எழுந்திருங்க…” ஒற்றைக் கண்ணைத் திறந்து அவளைப் பார்த்தவன், “அங்க வச்சிடு கண்ணம்மா…” என்றதும் மேசை மீத வைத்தவள் அவன் அருகில் அமர்ந்து நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.
“இப்படி நீங்க தூங்க மாட்டிங்களே… உடம்புக்கு ஒண்ணும் இல்லையே…” கவலையுடன் அவள் குரல் ஒலித்தது.
அவள் வருத்தம் மனதை உருக்க கண்ணைத் திறந்தவன் அவளை இயல்பாகக வேண்டி புன்னகையுடன் அவளை அருகே இழுத்து முத்தமிட சிணுங்கினாள்.
“ஹேய், டர்ட்டி பையா… பல்லு கூட விளக்காம என்னைக் கிஸ் பண்ணாத… நான் குளிச்சுட்டேன்…”
“அதுக்கென்ன, மறுபடியும் குளிச்சிட்டாப் போகுது…” சொல்லிக் கொண்டே மீண்டும் முத்தமிட செல்லவும் சட்டென்று விலகிக் கொண்டவள், “நீங்க ரொம்ப மோசம்… எழுந்து காபியக் குடிங்க… எனக்கு வேலை இருக்கு…” என்று கீழே ஓடி விட்டாள். 
முன்தினம் நடந்த சம்பவமும், தன்னைக் காணாமல் குழந்தை போல் தேடிய அவளது தவிப்பும் கண்ணீரும் தன் மீது அவள் எத்தனை நேசம் வைத்திருக்கிறாள் என்பதை உணர்த்த, அவளை எதற்கும் வருத்தப்பட விடக் கூடாது என்று மனம் சொன்னாலும் இன்னொரு பக்கம் தனக்காய் அவள் தவிப்பதை சந்தோஷமாய் உணர்ந்தான்.
அவள் நினைவுகளுடனே காபியைப் பருகியவன் எழுந்து குளித்து புத்துணர்வுடன் கீழே வந்தான்.
யாழினி மதிய சமையலில் மும்முரமாயிருக்க இவனைக் கண்டதும் பர்வதம், “இலக்கியா, என்னடா நேத்து உனக்கு…” என்று கேட்க வந்த தாயின் வாயைப் போத்தியவன் யாழினியைக் காட்டி, “சொல்லாதீங்க மா…” என்றான்.
“ம்ம்… ஒண்ணும் முடியாம இல்லையே…” மெல்லிய குரலில் மகன் மீது கொண்ட அக்கறையோடு கேட்டார்.
“இல்லமா, இப்ப நல்லாருக்கேன்…”
“பார்த்து செய்யறதில்லையாப்பா… நீ கவனமா இருப்பியே…”
“ம்ம்… விடுங்கமா, இனி கவனமா இருக்கேன்…”
“சரிப்பா… அந்தப் புள்ள ரொம்ப பதறிப் போயிடுச்சு… போ, உனக்கு தான் சாப்பிடாம இருக்கா… ரெண்டு பேரும் முதல்ல டிபன் சாப்பிடுங்க…” என்றார்.
அன்றைய பொழுது சில்மிஷமும், சிணுங்கலுமாய் சிறப்புடன் கழிந்தது. அடுத்த நாள் முதல் வழக்கம் போல் நாட்கள் இனிமையாய் நகர யாழினி முதல் வருடத் தேர்வு முடிந்து  அவளது வீட்டுக்கு சென்றிருந்தாள்.
சின்னக்காவின் குழந்தைக்கு குலதெய்வம் கோவிலில் மொட்டை போடுவதற்காய் வந்திருந்தார்கள்.
“ஹேய் குட்டிப் பையா… எப்படி இருக்கீங்க… மொட்டை போடப் போறீங்களாமே…” குழந்தையை எடுத்து கொஞ்சிக் கொண்டிருந்தவள், “நல்லாருக்கியாக்கா, மாமா எங்கே…” என்று நலம் விசாரித்தாள்.
“அவர் பூஜைக்கு சாமான் வாங்கப் போயிருக்காரு…”
“என்ன கண்ணம்மா, தனியாவா வந்த… மாப்பிள வரலியா…”
“அவர்தான் கூட்டிட்டு வந்தார் மா… கடைல வேலை இருக்குன்னு தெரு முனைல விட்டுட்டுப் போனாரு…”
“ஓ… சரி, உனக்குப் பிடிச்ச கருவாட்டுக் குழம்பு வச்சிருக்கேன்… போயி சாப்பிடு…”
“ம்ம்… அப்பா, சாப்பிட வரலியா…”
“வர்ற நேரம் தான்… நீ பரீட்சை நல்லா எழுதுனியா…”
“அதெல்லாம் சூப்பரா எழுதிருக்கேன்… நீ சாப்பிட்டியாக்கா…”
“ம்ம்… வந்ததும் பசில சாப்பிட்டேன்…” பிறகு ஏதேதோ குடும்ப நியாயம் பேசிக் கொண்டிருந்தனர். இருட்டத் தொடங்கியதும் யாழினி வீட்டுக்குக் கிளம்ப ரெடியானாள்.
“மாப்பிள தான் வரேன்னு சொன்னாரே… வந்ததும் போடி…”
“இல்லமா, அவர் ஏதாச்சும் வேலையா இருப்பாரோ என்னவோ, நான் நடந்தே போயிக்கறேன்…” என்றவள் “குட்டிப் பையா, சித்தி கிளம்பறேன்… மொட்டை அடிக்க கோவில் போகும்போது வரேன்… பை டா குட்டி…” என்று அதன் குண்டுக் கன்னத்தில் முத்தமிட்டு கிளம்பினாள்.
“அம்மா, அடுப்புல கனல் இருக்கா…”
“இருக்குடி… எதுக்கு கேக்கற…”
“இரு வரேன்…” என்றவள் குழந்தையை அன்னையிடம் கொடுத்துவிட்டு சில நிமிடத்தில் திரும்பி வந்தாள்.
ஒரு துண்டு காகிதத்தில் கடுகு, மிளகாய், உப்பு எடுத்துக் கொண்டவள் குழந்தையிடம் வந்து “ஊரு கண்ணு, உறவுக் கண்ணு, நாய் கண்ணு, நரிக்கண்ணு, கண்ட கண்ணு, கள்ளக்கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு, உன் சித்தியோட நொள்ளக் கண்ணு, எல்லாக் கண்ணும் கண்டபடி தொலையட்டும்… கடுகு போல வெடிக்கட்டும்…” என்றபடி இடமிருந்து வலமும், வலமிருந்து இடமும் சுற்ற அவள் வார்த்தைகளைக் கேட்ட வசந்தா அதிர்ந்து போனார்.
“மாலினி, என்னடி சொல்லற… யாழினி கண்ணையா சொல்லற…” என்றார் அதிர்ச்சியுடன். பதில் சொல்லாமல்  அடுப்பை நோக்கி சென்றாள் மாலினி.
“ஆமா, கல்யாணமாகி இத்தன நாளாச்சு… ஒரு குழந்தையைப் பெத்துக்க வக்கில்லாம என் குழந்தையைக் கொஞ்சிட்டுப் போறா… கண்டிப்பா அவ மனசுல அந்த ஏக்கம் இல்லாமையா இருக்கும்…” கையிலிருந்ததை அடுப்பில் போட்டுவிட்டு அவள் சொன்ன வார்த்தைகளின் வீரியம் மிளகாய் நெடியைக் காட்டிலும் அதிகமாய் பரவியது.
தனது கவரை வீட்டில் மறந்து வைத்துவிட்டு திரும்ப எடுப்பதற்காய் உள்ளே வந்த யாழினியின் காதில் உடன் பிறந்தவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நீற்றலாய் விழுந்து காரத்தை நிரப்பியது.
விக்கித்து கண்ணில் நிறைந்த நீருடன் அப்படியே நின்று விட்டவளைக் கண்ட வசந்தா, “கண்ணம்மா…” என்று அதிர்ச்சியுடன் அழைக்க கவரை எடுத்துக் கொண்டவள் பதில் எதுவும் சொல்லாமல் வேகமாய் கண்ணீருடன் வெளியே வர பைக்குடன் இலக்கியன் நின்றிருந்தான். அவனைக் கண்டதும் திகைத்தவள் சட்டென்று தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டு “போலாங்க…” என்று ஏறி அமர்ந்தாள்.
ஆனாலும் அவனது மௌனம் அவளைக் கண்டு கொண்டது என்பதை உணர்த்த கலங்கிய கண்களை அவனிடமிருந்து மறைக்க முடியாமல் தவித்துப் போனாள் யாழினி.
வண்டியை வீட்டுக்கு விடாமல் அருகில் இருந்த ஐஸ்க்ரீம் பார்லருக்குள் விடவும் அவளும் புரிந்து கொண்டாள். அவள் கையைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றவன், “ஒரு பட்டர்ஸ்காட்ச், ஒரு சாக்கலேட்…” என்று ஆர்டர் சொல்லி வாங்கிக் கொண்டு அமர்ந்தான்.
“என்னடா, கண்ணம்மா… என்னாச்சு…“ அவனது அழைப்பைக் கேட்டதும் கண்கள் கரகரவென்று கண்ணீரை சுரக்க மூக்கை உறிஞ்சிக் கொண்டாள் யாழினி.
“அ..அக்கா என்னை…” என்றவளுக்கு மேலே சொல்ல முடியாமல் கண்ணீர் வழிந்தது.
“நீ முதல்ல அழறதை நிறுத்து… யாருக்காவும் இலக்கியன் பொண்டாட்டி அழக் கூடாது…” என்றான் கண்டிப்புடன்.
சட்டென்று கண்ணைத் துடைத்துக் கொண்டவள், “அதானே நான் எதுக்கு அழணும்…” என்று அவன் தோளில் சாய்ந்து கொள்ள ஆறுதலாய் கையைப் பற்றியவன். “என்ன நடந்துச்சுன்னு சொல்லுடி…” என்றான்.
உதட்டைக் கடித்து தனை நிதானப்படுத்திக் கொண்டு  மாலினி சொன்னதைக் கூற கோபத்தில் முகம் சிவந்தான்.
“உன் அக்காக்கு எப்பவும் உன் மேல ஒரு பொறாமை இருக்கு… சரி, எதையும் கண்டுக்கக் கூடாதுன்னு நினைச்சா ரொம்ப ஓவரா தான் போறா… வா, இப்பவே போயி என்னன்னு கேட்டுட்டு வரலாம்…” என்று எழுந்து விட்டான்.
அவனிடம் விஷயத்தை சொன்னதுமே அவள் மனது லேசாக, “ப்ச்… அதெல்லாம் வேண்டாம்…” என்றாள்.
“ஏன் வேண்டாம்… என் பொண்டாட்டியை சொல்ல அவளுக்கு என்ன அதிகாரம் இருக்கு… அவங்ககிட்ட எதார்த்தம் இல்ல கண்ணம்மா… வா, போயி பேசிடலாம்…” என்றான்.
“ப்ச்… வேண்டாம்னு சொன்னா விடுங்களேன்… அவ எப்பவுமே பொறாமை பிடிச்சவ தான்… நீங்க என்னை நல்லா வச்சிருக்கிங்கறதைப் பார்த்து அது அதிகமாகிடுச்சு…”
“அதுக்காக என்ன வேணும்னாலும் பேசலாமா… நமக்கும் நாளைக்கு குழந்தை பிறக்காமப் போயிருமா…” என்றான் கோபத்துடன்.
“ம்ம்… அதானே, அவகிட்ட நியாயம் கேக்கறதை விட்டுட்டு முதல்ல குழந்தையைப் பெத்துகிட்டு அவ முகத்துல கரியப் பூசுவோம்… இப்ப உக்கார்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிடுங்க… கரையத் தொடங்கிருச்சு…” என்றவள் வேகமாய் ஐஸ்க்ரீமை ஸ்பூனில் எடுத்து வாய்க்குள் திணிக்க, அதைக் கண்டவனுக்கு சிரிப்பு பொங்கி வந்தது.
“கடைசில ஒரு ஐஸ்க்ரீம்க்கு உன் வீறாப்பு எல்லாம் முடிஞ்சு போச்சே கண்ணம்மா…” என்றவன் சிரிப்புடன் அவள் அருகில் அமர்ந்து சாப்பிடுபவளையே நோக்க, ஒரு ஸ்பூனில் எடுத்து அவனுக்கு நீட்டினாள் யாழினி.
“எனக்கு இது வேண்டாம்…” என்றவனின் காந்தப் பார்வை அவளது ஐஸ்க்ரீம் மின்னும் இதழ்களில் படிய வெட்கத்துடன் குனிந்து கொண்டாள் யாழினி.
“இங்க கூலா இதை சாப்பிட்டா, வீட்டுக்குப் போயி ஹாட்டா அதைத் தருவேன்…” என்றவளின் வார்த்தைகளும் “நான் உனக்கொன்றும் மோசமில்லை…” என்றது.
அதைக் கேட்டதும் உல்லாசமாய் சிரித்தவன், “ஏய் பிளாக் சாக்கலேட், எனக்கு இப்பவே சாக்கலேட்டை கடிச்சு திங்கணும் போலருக்கு…” என்றான் அவள் கைகளைத் தன் கைகளால் இறுகக் கோர்த்து.
“நோ, நோ… ஐஸ்க்ரீமில் வன்முறை வேண்டாம் புருஷா…” என்றவள் தனது ஐஸ்க்ரீமை முடித்து அவனுடையதையும் தன்னிடம் இழுக்க, அவள் சாப்பிடும் அழகைப் பார்த்துக் கொண்டே சூடாகிக் கொண்டிருந்தான் இலக்கியன். போதையூட்டும் பிளாக் சாக்கலேட் அருகில் இருக்கையில் சாதாரண ஐஸ்க்ரீம் அவனுக்கெதற்கு.
இருவரும் வீட்டுக்குக் கிளம்பினர்.
“ஏய் பிளாக் பிஸ்கட்… உன் கண்ணீரைப் பார்த்து நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா…”
“ம்ம்… எனக்கும் அக்கா சொன்னதைக் கேட்டு கோபம், அழுகை எல்லாம் வந்துச்சு… ஆனா உங்களைப் பார்த்ததும், உங்ககிட்ட சொன்னதும் எல்லாமே காணாமப் போயிருச்சு…” குழந்தை போல் தன் மடியில் படுத்துக் கொண்டு சொன்னவளை புன்னகையுடன் நோக்கினான் இலக்கியன்.
“உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா…”
“எவ்ளோன்னு எல்லாம் தெரியாது பிளடி பிஸ்கட்… ஆனா உன் பக்கத்துல இருக்கும்போது கருவறைக்குள்ள இருக்குற குழந்தை எந்த பயமும் இல்லாம சந்தோஷமா இருக்குமே… அப்படி ஒரு பாதுகாப்பான, நிம்மதியான பீல் எனக்குத் தோணும்… எதுவா இருந்தாலும் நீ பார்த்துக்குவியே…” என்ற அவள் இதழை காதலுடன் நெருங்கினான் இலக்கியன்.
மாலினியின் வார்த்தைக்கு பதிலடி கொடுக்கும் வேகம் அவன் முயற்சியில் இருந்தது.
மனதின் தவிப்போ, தானும் சீக்கிரமே தாயாக வேண்டுமென்ற நினைப்போ அவளும் அவன் வேகத்துக்கு ஈடு கொடுத்தாள். அவர்கள் நேசத்துக்கு அடையாளமாய்  சிப்பிக்குள் முத்து வளரும் நேரமும் கனிந்தது.
என் காதலை சுமக்கும்
உன் இதயம் போல்
உன் முத்தினை சுமக்கும்
சிப்பியாய் நான்…
எனக்குள் குடிகொண்ட
உன் நேசத்தின் பிரதிபலிப்பை
முத்தாகப் பரிசளிப்பேன்…
சிப்பி தேடும் மழைத்துளியாய்
உன் நேசம் தேடும்
ஏந்திழை நான்…

Advertisement