Advertisement

அத்தியாயம் – 10
புத்தகத்தை விரித்து வைத்திருந்தாலும் யாழினியின் கருத்தில் அதில் ஒரு வார்த்தை கூட பதியவில்லை.
கண்கள் காலில் பளபளத்த தங்கக் கொலுசிலேயே இருக்க, கைகள் இதமாய் தடவிக் கொண்டிருந்தது. இதழ்களில் ஒரு மென்னகை நெளிந்து கொண்டிருக்க மனதுக்குள் ஒருவித பரவசத்துடன் அமர்ந்திருந்தாள்.
“இது வெறும் கொலுசு இல்ல… என் புருஷனோட மனசு… ரெண்டுமே தங்கம் தான்…” மெல்ல முணுமுணுத்தவளுக்கு கணவனின் நினைவில் நெஞ்சம் கனிந்தது.
கல்யாண நாள் அன்று காலையில் குளித்து பர்வதத்திடம் இருவரும் ஆசி வாங்கிக் கொண்டனர்.
“புடவை நல்லாருக்கா, அத்தை… அவர் வாங்கிக் கொடுத்தாரு…” என்றாள் யாழினி அத்தையிடம்.
“ரொம்ப நல்லாருக்கு மா… என் பையனுக்கு புடவை செலக்ட் பண்ணத் தெரியும்னு நீ வந்த பிறகு தான் எனக்குத் தெரியும்… அழகா வாங்கிருக்கான்…”
“போங்க மா, கிண்டல் பண்ணிட்டு… உங்க மருமக காலைப் பாருங்களேன்…” என்றதும் சிரித்தவர்,
“ஓ கொலுசும் வாங்கினியா…” என்று கேட்க, யாழினி தயக்கத்துடன் சேலையை சற்றுத் தூக்கி காலைக் காட்ட அவரது முகம் சுருங்கியது.
“என்னடா இது, தங்கத்துல கொலுசு வாங்கிருக்க…” அவர் கேட்டதும் யாழினியின் முகம் கவலையுடன் அவனை நோக்க, அவன் சிரித்தான்.
“அம்மா… நம்ம உடம்புல எல்லா இடத்துயும் தங்கத்துல தான நகை போடறோம்… காலு மட்டும் என்ன பாவம் பண்ணுச்சு… அதுக்கு வெள்ளில மட்டும் தான் போடணுமா  என்ன…” என்றவனை யோசனையுடன் பார்த்தார் பர்வதம்.
“அதுக்கில்லடா இலக்கியா… லச்சுமிய கால்ல போடக் கூடாதுன்னு சொல்லுவாங்களே…”
“வெள்ளியும் லட்சுமி தானம்மா… அதும் இல்லாம பாதத்துல பட்டா தானே மிதிக்கிற போல ஆகும்… இது கால்ல தானே…”
“என்னவோ சொல்லற… ஆனாலும் நம்மளுக்கு இதெல்லாம் வழக்கம் இல்லையேப்பா…”
“நாம மாத்துவோம் மா… நான் கொடுக்கிற முதல் பரிசு அவளுக்கு மறக்க முடியாததா இருக்கணும்னு நினைச்சேன்… அதான் தங்க கொலுசை வாங்கினேன், தப்பாம்மா…”
மகன் சொல்லவும் யோசித்தவர், “ஹூம், இந்தப் பழக்கமும், வழக்கமும் எல்லாம் மனுஷங்க உருவாக்கினது தான… உனக்கு பிடிச்ச போல செய்ப்பா… ரெண்டு பேரும் கோவிலுக்குப் போயிட்டு அப்படியே அவ வீட்டுல போயி சம்பந்தி கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிக்கங்க…” அன்னை சொல்லவும் அவரைக் கட்டிக் கொண்டான் மகன்.
“என்ன இருந்தாலும் என் அம்மா மனசு ரொம்பப் பெருசு…” என்றவன் அவர் கன்னத்தைப் பிடித்துக் கிள்ள, “ஆ… வலிக்குதுடா மடப் பயலே… நீ கிள்ளவும், கொஞ்சவும் தான் உனக்குன்னு ஒருத்திய கட்டி வச்சிருக்கோம்ல… அவளைக் கிள்ளு…” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு உள்ளே செல்ல மனைவியை நோக்கி புருவத்தைத் தூக்கினான்.
உதட்டைப் பிதுக்கியவள், “பெரியாளு தான் நீங்க… யாரை எப்படிக் கவுக்கணும்னு நல்லாத் தெரிஞ்சு வச்சிருக்கீங்க…” என்றவள், “இனி இந்த கொலுசுக்கு என் அம்மா என்ன சொல்லுவாங்களோ…” எனவும், “யாரு கேட்டாலும், என் புருஷனுக்கும், எனக்கும் பிடிச்சிருக்கு… போட்டிருக்கேன்னு சொல்லிடு…” என்றான் இலக்கியன்.
அதே போல் திகைப்புடன் கேட்ட அன்னையிடமும், பொறாமையில் வாயைப் பிளந்த சின்னக்காவிடமும் கூறி அவர்கள் வாயை யாழினி அடைத்து விட்டாள். அன்று கோவில், யாழினியின் வீடு என்று போய்விட்டு வீட்டுக்கு வர பர்வதம் வடை பாயசத்துடன் விருந்து தயாரித்திருந்தார்.
மாலையில் இலக்கியனின் அக்காக்களும், மூத்தவரும் குடும்பத்துடன் வந்து விட கேக் வெட்டி எல்லாருக்கும் ஹோட்டலில் பிரியாணி ஆர்டர் பண்ணி அசத்தி விட்டான்.
அவள் காலில் கிடந்த தங்க கொலுசைக் கண்டு அவன் சகோதரிகள் வாயைப் பிளக்க, கவிதாவுக்கோ வயிறு எரிந்தது.
“ஹூம்… என் தங்கச்சியைக் கட்டிக்க சொல்லிக் கேட்டதுக்கு வேண்டாம்னுட்டு இப்ப இவளுக்கு கால்ல தங்க கொலுசு கேக்குதா… அற்பனுக்கு வாழ்வு வந்த கதையா இவளுக்கு வந்த வாழ்வைப் பாரு… எனக்கும் தான் ஒரு புருஷன் இருக்கார்… இத்தனை வருஷத்துல கல்யாண நாளையும் நினைவு வச்சுகிட்டதில்ல, என்னோட பிள்ளைங்க பிறந்த நாளும் தெரியாது… ஹூம் எல்லாம் தலை எழுத்து…” என்று மனதுக்குள் அரற்றிக் கொண்டிருந்தாள்.
அவளது முகமும், செயல்களுமே அதை அப்பட்டமாய் மற்றவருக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தது.
“என்னங்க, கவிதாக்கா மூஞ்சியைப் பார்த்திங்களா…”
“ம்ம்… நீ கண்டுக்காத விடு…” என்றான் இலக்கியன்.
“ப்ச்… இதுக்குதான் இப்படி யாரு கண்ணையும் உறுத்துற போல தங்கத்துல கொலுசு வேண்டாம்னு சொல்லறேன்…”
அவளைக் கோபமாய் நோக்கியவன், “என்ன பேசற நீ… நாம வாழுற வாழ்க்கை கூட மத்தவங்களுக்குப் பொறாமையா இருக்கலாம்… அதுக்காக வாழாம இருக்க முடியுமா…”
“ஹூக்கும், உங்களைப் பேசி ஜெயிக்க முடியுமா…”
“ஏன் வேற எதுலயும் நாங்க மோசமா…” என்றவன் யாரும் அறியாமல் அவள் இடையில் கிள்ள, “ஆவ்வ்..” சட்டென்று துள்ளியவள் கணவனை முறைத்தாள்.
“என்னாச்சு யாழினி…” கிருபா கேட்க, “ஒ… ஒண்ணுமில்ல மதனி… எ…எலி…” என்றாள் குழறலாக.
“நம்ம வீட்டுல எலி எதுவும் இல்லையே…” என்றவர், இலக்கியனின் திருட்டு முழியைக் கண்டதும் புரிந்து கொண்டு, “ஒருவேள, பெருச்சாளியா இருக்கப் போகுது மா… உன் புருஷன் கிட்ட சொல்லி அடிக்க சொல்லு…” என்று விட்டு செல்ல தலையில் அடித்துக் கொண்டாள்.
“ச்சே… மதனி என்ன நினைச்சிருப்பாங்க…” என்று சொல்ல அவளைத் தன்னிடம் இழுத்தவன், “என்ன நினைப்பாங்க… சின்னஞ்சிறுசுக, விளையாடுதுன்னு நினைப்பா…” என்றான்.
“போங்க, நீங்க…” சிணுங்கிக் கொண்டே சென்றவளை சிரிப்புடன் பார்த்து நின்றான் இலக்கியன். இரவு வெகு நேரம் அவர்கள் கிளம்பிய பின்னும் வீட்டை ஒதுக்கி பாத்திரம் கழுவி வைத்து என்று யாழினிக்கு வேலை இருந்தது.
அவளுக்காய் காத்திருந்த இலக்கியன் சலிப்பில் அப்படியே உறங்கிப் போயிருந்தான். அவன் அருகே படுத்தவள் கணவனின் முகத்தையே குறுகுறுவென்று பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு கையை நெஞ்சின் மீது வைத்து மறு கையை தலைக்கு மேலே வைத்து படுத்துக் கொண்டிருந்தான். அவன் செய்த சேட்டைகள் எல்லாம் நினைவு வர புன்னகைத்தாள்.
“குழந்தை மாதிரி தூங்குறதப் பாரு… பண்ணுறதெல்லாம் குரங்கு சேட்ட…” என்றவள் ஆசையுடன் பார்த்தாள்.
பரந்த நெற்றி, கூர் மூக்கு, சற்றே அழுத்தமான உதடுகள்…
“போதும்… தூங்குற புள்ளையை ரசிச்சா ஆயுள் குறையும்னு அம்மா சொல்லுவாங்க…” அவனது குரல் கேட்கவும் திகைத்தவள், அவன் முகத்தைப் பார்க்க அவளை நோக்கி சிரித்துக் கொண்டிருந்தவனை முறைத்தாள் யாழினி.
“அது சின்னப் புள்ளைங்களுக்கு… உங்களை மாதிரி பெரிய  தடிமாடுங்களுக்கு இல்ல…”
“யாரைப் பார்த்துடி தடிமாடுன்னு சொல்லுற…” என்றவன் அவளை இழுத்து தன் நெஞ்சில் போட்டுக் கொண்டான்.
அவன் கைகளுக்குள் சுகமாய் அடங்கிக் கொண்டவள், “ஏன் சந்தேகம்… உங்களைத் தான்… நான் வர்றது தெரிஞ்சு தூங்குற போல நடிக்கவா செய்யறிங்க…” என்றாள்.
“அது சும்மா, நீ என்ன பண்ணுறன்னு பார்க்க… ஆனா, இப்படி என்னை சைட் அடிப்பேன்னு நினைக்கலை…”
“ஹூக்கும்… நான் ஒண்ணும் சைட் அடிக்கல, நானும் சும்மா தான் பார்த்தேன்…”
“சரி, சும்மாக்கு சும்மா சரியாப் போச்சு… இனி உம்மாக்கு உம்மா கொடுத்து விளையாடலாமா…”
“ப்ச்… போங்க… காலைல இருந்து வேலை சரியாருக்கு… காலெல்லாம் வலிக்குது… எனக்குத் தூங்கணும்…”
“அச்சோ, என் கண்ணம்மாவுக்கு காலு வலிக்குதா…” என்றவன் எழுந்து அமர்ந்து கொண்டு அவள் காலை எடுத்து தன் மடியில் வைத்துக் கொள்ள பதறியவள் எழுந்தாள்.
“ப்ச்… என்னங்க பண்ணறிங்க… சும்மா இருங்க…”
“நீதானடி கால் வலிக்குதுன்னு சொன்ன… அதான் அமுக்கி விடறேன், நீ படுத்துக்க…” என்றவன் காலில் கிடந்த கொலுசை ஒதுக்கி மெல்ல பிடித்து விடத் தொடங்கவும் சிரித்தாள் யாழினி.
“இதெல்லாம் ரொம்ப ஓவருங்க… பொண்டாட்டி காலைப் பிடிக்கறவன்னு நாளைக்கு உலகம் உங்களைப் பழிக்கப் போகுது பாருங்க…”
“ஊரு, உலகத்தைப் பார்த்தெல்லாம் எனக்கு பயமில்லை… என் பொண்டாட்டிக்கு கால் வலிச்சா நான்தான் புடிச்சு விடணும்… நான் என்ன, அடுத்தவன் பொண்டாட்டி காலையா பிடிச்சு விடறேன்…” சொல்லிக் கொண்டே இதமாய் பிடித்து விட்டான். நிஜமாலுமே அவளுக்கு சுகமாய் இருந்தது.
“சூப்பரா பிடிச்சு விடறிங்க, இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியுது…” கேட்டவளை நோக்கிப் புன்னகைத்தான்.
“அது, இதுக்கு முன்னாடி நான் குற்றாலத்துல ஆயுள் மசாஜ் செய்யற வேலைல இருந்தேன்… அதான்…”
“ஹூக்கும்… ஏகத்தாளத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல…”
“வேற எதுல குறைச்சல்னு சொல்லுடி, சரி பண்ணிக்கறேன்…” என்றவன் அவளைப் பார்த்த பார்வையில் வாயை மூடிக் கொண்டாள் யாழினி.
“சரி, கால் வலி போயிடுச்சு, படுங்க…” என்றாள் அவள்.
“ஹூம்… உனக்கு கால் வலி போயிடுச்சு… ஆனா, எனக்கு எங்கெல்லாமோ வலிக்குதே…” என்றவனின் பார்வை அவளை ஆவலுடன் நோக்க, “நான் தூங்கிட்டேன்…” என்று திரும்பிப் படுத்து கண்ணை மூடிக் கொண்டாள் யாழினி.
பின்னிலிருந்து அணைப்பான் எனக் காத்திருந்தவள் அவன் எதுவும் செய்யாமலிருக்கவே அவனைத் திரும்பிப் பார்க்க அவனும் சுவரை நோக்கித் திரும்பிப் படுத்திருந்தான்.
“ஏய், பிளடி பிஸ்கட்…”
“ம்ம்…”
“கோபமா…”
“ப்ச்… எதுக்கு…”
“என்ன எதுக்கு… நான் திரும்பிப் படுத்தா நீயும் திரும்பிப் படுத்திருவியா… உன்னை ஒட்டிப் படுக்காம எனக்குத் தூக்கம் வராதுன்னு தெரியாதா…” என்றவள் அவனைப் பிடித்து தன்னிடம் திருப்பி நெஞ்சத்தில் முகம் வைத்து ஒட்டிக் கொள்ள புன்னகையுடன் அணைத்துக் கொண்டான்.
“ப்ச்… இதாண்டி கஷ்டம்…” என்றான் பாவமாக.
“எது…”
“இப்படி நீ என்னைக் கட்டிகிட்டாலும் கையைக் காலை வச்சிட்டு சும்மா இருக்கறது…”
“யாரு சும்மா இருக்க சொன்னாங்க…” என்றவளின் குரலில் இருந்த மாற்றம் அவனுக்குள் ஹார்மோனைத் தட்டி விட அவளை இறுக்கிக் கொண்டான் இலக்கியன்.
அவளது சிப்பி வயிற்றில் முத்தை விதைத்தே ஆக வேண்டுமென்ற முயற்சியில் அவன் தீவிரமாக, அவளும் சளைக்காமல் ஒத்துழைத்தாள்.
முன்தினம் நடந்ததை அசை போட்டதில் படிப்பெல்லாம் எங்கோ பறந்து போக அவனுக்காய் காத்திருந்த யாழினியின் மனம் கடிகாரத்தை நோக்க பதினொன்று தாண்டி இருந்தது.
“இன்னும் எங்க, இந்த பிளடி பிஸ்கட்டைக் காணோம்…” யோசித்தவள் எழுந்து கீழே வந்தாள். பர்வதம் படுக்கப் போயிருக்க இலக்கியனின் தம்பி தான் டீவி பார்த்துக் கொண்டிருந்தான்.
இவளைக் கண்டதும், “என்ன அண்ணி, அண்ணாவுக்கு வெயிட் பண்ணறீங்களா…” என்றான்.
“ஹூம்… ஏன், இவ்ளோ லேட்டு…” மனதிலுள்ள பதட்டத்தை மறைத்து இயல்பாய் கேட்டாள்.
“ஒரு ரிஷப்ஷன் ஹால்ல லைட்டிங்க்ஸ்ல ஏதோ பிரச்சனைன்னு பார்க்கப் போனார்…” என்றான் அவன்.
“போன் பண்ணிப் பார்க்கறேன்…” என்றவள் தொலைபேசியை எடுத்து நம்பரை அழுத்தி காதில் வைத்தாள். அது முழுதும் அடித்து ஓய மனதுக்குள் ஒரு அச்சம் எழுந்தது.
“எடுக்கலையே…”
“ஓ… வேலையா இருப்பாங்க, வந்திருவாங்க அண்ணி… நீங்க போயி தூங்குங்க…”
“இல்ல, அவர் வரட்டும்…” என்றவள் அங்கேயே அமர்ந்தாள். பேச்சு சத்தம் கேட்டு எழுந்து வந்த பர்வதம் இவளைக் கண்டதும், “என்னமா நீ இன்னும் தூங்கலையா… இலக்கியன் வந்துட்டானா…” என்றார்.
“இல்ல அத்த, அவரை இன்னும் காணோம்… எ..எனக்கு பயமா இருக்கு…” என்றவளின் குரல் நடுங்கியது.
“ஏய் என்னமா இது… விசேஷமான நாள்ல எல்லாம் அவங்க வேலை முடிஞ்சு கொஞ்சம் முன்னப் பின்ன தான் வருவாங்க… இதுக்குப் போயி கலங்கிட்டு, வந்திருவான்மா…” என்றவர், “டேய் சின்னவனே… யாருக்காச்சும் போனைப் போட்டு உன் அண்ணன் எங்க இருக்கான்னு பாரு… பாவம் புள்ள, பயப்படுதுல்ல…” என்றார்.
“நான் நேர்லயே வேணும்னாலும் போய் பார்த்திட்டு வந்திடறேன்…” என்றவன் சட்டையை மாட்டிக் கொண்டு பைக்கை எடுத்துக் கிளம்பினான்.
மணி பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்க போயவனிடம் இருந்தும் எந்த விவரமும் இல்லை. இங்கே பெண்களின் இதயத் துடிப்பு தாறுமாறாய் எகிறி பிரஷரை ஏற்றிக் கொண்டிருக்க யாழினியின் கண்கள் எப்போது வேண்டுமானாலும் அழுதிடுவேன் என நிறைந்து நின்றது.
சற்று நேரத்தில் தொலைபேசி சிணுங்கவும் யாழினி இதயத்தைக் கையில் பிடித்துக் கொண்டு பயத்துடன் பார்த்தாள். அவளைப் பார்த்த பர்வதம் தானே சென்று போனை எடுத்து ஹலோவினார்.
“ஹலோ….”
……..
“ஆமாடா சின்னவனே, அம்மா தான் பேசறேன்…”
…….
“என்னடா சொல்லற… ஓ அப்படியா…”
…….
“சரி, நான் பார்த்துக்கறேன்… பெருசா ஒண்ணும் பிரச்சனை இல்லையே…”
……..
“ம்ம்… நீ போறியா…”
…….
“சரிப்பா… நீ போயி பார்த்துக்க… வச்சிடறேன்…” என்றவர் போனை வைக்க ஒன்றும் புரியாமல் கண்ணீருடன் நின்றாள்.
“அத்த… என்னாச்சு அத்த, அவருக்கு ஒண்ணும் பிரச்சன இல்லையே… அவர் நல்லாருக்கார்ல…” படபடப்பாய் கேட்டவளின் கண்ணில் கண்ணீர் முட்டி நின்றது.
“என்னமா இது… ஒண்ணுமில்ல, எதுக்கு இப்படி பயப்படற… நாம கரண்டுல தொழில் பண்ணறவங்க… இதெல்லாம் அப்பப்ப இருக்கறது தான் நீ பயப்படாத… உன் புருஷனுக்கு ஒண்ணும் இல்ல…”
“இல்லத்த, நீங்க எதையோ என்கிட்டே மறைக்கறீங்க… தம்பி என்ன சொன்னார், ப்ளீஸ் சொல்லுங்கத்த…” என்றவளின் கன்னத்தில் கண்ணீர் கரகரவென்று வழிந்தது.
“என்னமா நீ… சொன்னாப் புரிஞ்சுக்காம இப்படி அழற… நம்ம பசங்க யாருக்கோ மண்டபத்துல வேலை செய்யும்போது கரண்டு ஷாக் அடிச்சிருச்சு போல… உன் புருஷன் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போயிருக்கான்… பிரச்சனை எதுவும் இல்ல, கொஞ்ச நேரத்துல வந்திருவாங்களாம்…” அவர் சொல்லி முடிக்க சற்று நிம்மதியானாலும் அவனைக் காணாமல் அவள் மனம் முழுமையாய் சமாதானமடைய மறுக்க கண்ணீர் சுரப்பி வேலையை செய்து கொண்டிருந்தது.
“நீ போயி படு யாழினி… இலக்கியன் எப்படியும் அந்தப் பையனை ஆசுபத்திரில இருந்து வீட்டுக்குக் கொண்டு போயி விட்டுட்டு தான் வருவான்… அது வரைக்கும் அழுதுட்டே இருக்கப் போறியா…”
“இல்லத்த… அவரைப் பார்த்தா தான் எனக்கு நிம்மதியாகும்… அவர் வர வரைக்கும் நான் இங்கயே வெயிட் பண்ணறேன்..” என்றவள் அங்கே சோபாவிலேயே அமர்ந்து கொண்டாள்.
பர்வதம் கால் வலி காரணமாய் அதிக நேரம் நிற்க முடியாமல், “சரிம்மா, என்னால நிக்க முடியல கால் வலிக்குது… நான் படுக்கறேன்…” என்று அறைக்கு சென்று விட்டார். கண்களில் நீர் வழிய வாசலைப் பார்த்து நின்றவள் குத்துகாலிட்டு அமர்ந்து கொண்டாள். காலில் மின்னிய கொலுசை இதமாய் தடவிக் கொண்டாள். மனம் கணவனைத் தேடிக் கலங்கியது.
“பிளடி பிஸ்கட்… சீக்கிரம் வந்திடுடா… எ..எனக்கு உன்னை உடனே பார்க்கணும்…” அதில் உள்ள சலங்கையை வருடிக் கொண்டே சொன்னவளுக்கு அப்போது தான் கணவன் மீது தனக்கிருந்த அன்பின் நேசம் புலப்பட்டது.
அவன் அருகிலுள்ள ஒவ்வொரு நொடியையும் மிகவும் பாதுகாப்பாய் சந்தோஷமாய் உணர வைத்திருந்தான். இந்த ஒரு வருடத்தில் அவன் காட்டிய நேசம் எத்தனையோ ஜென்மங்களாய் அவனோடிருந்த பிணைப்பைத் தந்திருந்தது.
உன்னோடு நான் சொல்லிய
நேசங்கள் மிகக் குறைவே…
சொல்லாத நேசத்தை
வானப் பெருவெளி
எங்கும் விதைத்திருக்கிறேன்…
நட்சத்திரக் கண் சிமிட்டல்
எல்லாம் அந்த நேசத்தின்
வெளிப்பாடு தானோ…

Advertisement