Advertisement

நாதம் 27
       அஞ்சலையின் பதட்டம் எல்லாம் சில நொடிகள் தான். அத்தனை கூட்டத்தில் அவள் கண்கள் அவள் அம்மாவையும் குருவையும் இனம் கண்டு கொண்டது.
அவர்களின் புன்னகை தவழும் முகங்கள் அவளிடம் இருந்த பதட்டத்தை துரத்தியது.
      சாரதா புன்னகையுடன் கட்டை விரலை உயர்த்திக் காட்ட அஞ்சலை அவளை அறியாமல் நிமிர்ந்து நின்றாள்.
      அன்று கோயிலில் சொன்னபடி மறுநாளே வீடு தேடி வந்தவர் இசைப்பயிற்சியை தொடர்ந்ததோடு மகளிடம் கோபமாக இருந்த வாணியிடம் அஞ்சலை கேட்காமலே என்ன நடந்தது என்று விளக்கம் கொடுத்தார். 
 இந்த மூன்று மாதங்களும் வீட்டுக்கு வந்து அவளுக்கு பயிற்சி கொடுத்ததோடு தினமும் அவர்கள் வீட்டுக்கு மளிகை, காய்கறிகள், பழங்கள் என ஏதாவது காரணம் சொல்லி கொண்டு வந்து கொடுப்பார்.
அஞ்சலை வேண்டாம் என்று சொல்லிப் பார்த்து பிறகு அலுத்துப்போய் விட்டு விட்டாள். குடும்பமே ஒரே மாதிரி போல என்று சலித்துக் கொண்டதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை. வாணியை வைத்து அவள் வாயை அடைத்திருந்தார்.
  இது போல சாரதா அவளுக்கு செய்திருக்கும் உதவிகளை அந்த நொடியிலும் அஞ்சலை நன்றியுடன் நினைத்துக் கொண்டாள்.
       அதற்குள் தங்கள் அபிமான பாடகி அஞ்சலையை நேரில் கண்ட பரவசத்தில் அவள் ரசிகர்கள் அவள் முகமும் பெயரும் பதித்த போஸ்டரை தூக்கி காட்டியபடி ஆராவாரம் செய்ய அஞ்சலைக்கு இனிதான அதிர்ச்சி.
இரண்டு கைகளையும் கன்னத்தில் வைத்து அவர்களின் வரவேற்பை விழிகள் விரிய ரசிக்க அதை ரசித்தது மேடையில் இருந்த நிஷா, தீபக் மட்டும் அல்ல. 
கீழே அமர்ந்திருந்த வாணி, சாரதாவோடு மேடைக்கு பின்னே நின்று பார்த்துக் கொண்டிருந்த கௌசிக்கும் தான்.
இவர்களோடு லைவ் டெலிகாஸ்ட் என்பதால் வாசுதேவனும் வீட்டில் இருந்து இதைப் பார்க்க அவருக்கு இப்போது கோபத்தை விட அஞ்சலை மேல் வெறுப்பு தான் அதிகமாக இருந்தது.
அவர் கிழித்த கோட்டைத் தாண்டாத மகனும் அன்பு மனைவியும் இன்று அவரை விட்டு வெகுதூரம் விலகக் காரணம் அவள் தானே?
 என்ன தான் மகன் மேல் கோபம் என்றாலும் இன்று அவனுடைய திறமையை நேரில் போய் பார்த்து பெருமைப்பட கூட முடியாதபடி போய் விட்டதே!
இன்று பினாலே நிகழ்ச்சிக்கு கௌசிக் அவரை அழைக்கவே இல்லை. இந்த மூன்று மாதங்களாக அவரோடு பேசுவதே இல்லை. இதற்கு முன்பும் இது போல அப்பாவுக்கும் மகனுக்கும் உரசல்கள் வரும் போது நடுவில் நின்று பஞ்சாயத்து செய்யும் சாரதா இப்போது   இதை கண்டுகொள்ளவேயில்லை.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதோடு சரி. அதற்கு மேல் அவரும் பேசுவதே இல்லை. அதனால் வாசுதேவனின் வருத்தம் எல்லாம் மனைவி மேல் தான்.
தான் செய்வதெல்லாம் அவன் நன்மைக்கு தான் என்று மகனுக்கு தான் புரியவில்லை. இவளாவது எடுத்து சொல்ல வேண்டாமா?
வெளியில் காட்டிக்கொள்ள மாட்டாரே தவிர வாசுதேவன் மகன் மேல் உயிரையே வைத்திருந்தார்.
அவனுக்கு எல்லாமே சிறப்பாக தான் கிடைக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து அவன் படிப்பு, வேலை என்று செய்தது போல தானே அவன் வாழ்க்கைத்துணையையும் சிறப்பாக தேர்ந்தெடுத்தார்?
 அவன் தான் எல்லாவற்றையும் விட்டு விட்டு அந்த குப்பத்துப் பொண்ணு பின்னால போனால் இவளும் அங்க போய் அந்த பொண்ணுக்கு பாட்டு சொல்லிக் குடுக்கறா! அதுவும் தனக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சும்!
மகனிடம் ரத்த பாசத்தில் இளகிய மனம் மனைவியிடம் இன்னும் கோபம் தான் கொண்டிருந்தது.
அதனால் சாரதா நிகழ்ச்சிக்கு அழைத்த போது கூட ஜம்பமாக வர மறுத்து விட்டார்.
சாரதாவும் வற்புறுத்தாமல் தான் மட்டும் கிளம்பி விட்டார். அவரும் ஒரு பிரபலம் என்ற முறையில் கேமரா அவரையும் காட்ட அவர் பக்கத்தில் வாணியை பார்த்ததும் வாசுதேவன் கோபத்தில் பல்லைக் கடித்தார்.
அஞ்சலை இப்போது நிரம்பி வழிந்த அரங்கத்தை பார்த்த போது கௌசிக் சொன்னது நினைவு வர தன்னை எதிர்பார்த்து வந்த ரசிகர்களை ஏமாற்ற கூடாது என்று உறுதி கொண்டாள்
நிஷா அவளை பெருமையாக அறிமுகம் செய்து வைத்தாள்.
ஒவ்வொரு சீசனிலும் எங்களுக்கு ஒரு சாதனையாளரை அடையாளம் காட்ட வாய்ப்பு கிடைக்கும். இந்த முறை அஞ்சலையை அறிமுகம் செய்வதில் கிரேட் சிங்கர் நிகழ்ச்சி மட்டுமல்ல ஜாலி டிவியும் பெருமை கொள்கிறது.
எங்கள் பெருமை மிகும் பார்ட்டிசிபென்டை மீண்டும் ஒரு முறை ஆரவாரம் செய்து வரவேற்க வேண்டுகிறோம்!
அதில் முன்னை விட அரங்கில் விசிலும் கரகோஷமும் தூள் பறக்க வாசுதேவனுக்கு எரிந்தது.
பார்த்தியா அஞ்சலை? உனக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்காங்க என்று? அவங்கள எல்லாம் இம்ப்ரெஸ் பண்ண நீ ரெடியா?
தீபக் கேட்க அஞ்சலை தலையசைத்தாள்.
இருவரும் அதில் மேடையை விட்டு போக அந்த பிரம்மாண்ட மேடையில் தனியாக அஞ்சலை மட்டுமே.
அரங்கில் அத்தனை பேரின் பார்வையும் அவள் மேல் இருக்க ஒரு நொடி அமைதிக்கு பிறகு அஞ்சலையின் தனித்துவமான குரல் மட்டுமே அரங்கில் கேட்டது.
 
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்
   கவலை ஏதுமில்ல ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேர வேணும் அதுக்கும் பாட்டப் படி
ண்ணியே பாரு எத்தன பேரு
தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டும் பாடு
சொன்னது தப்பா தப்பா…ஆஆஆ…
சொன்னது தப்பா தப்பா ராகத்தில் புதுசு என்னதப்பா ! அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்புத்துல சொன்னதப்பா 
அந்த சரணத்தில் பாடி முடித்தவள் படத்தில் வருவது போல மரிமரி நின்னே என்று சாரமதியில் பாடாமல் அந்த ராகத்தில் ஸ்வரங்களை மட்டும் பாடியவள் ஸ்ரீ வல்லி தேவ சேனாபதே என்று சாரமதியின் தாய் ராகமான நடபைரவியில் ஆரம்பித்தாள்.
அதிலும் ஸ்வரங்களைப் பாடி மறுபடி பாடறியேன் படிப்பறியேன் என்று வந்து நிறுத்த இசை மழையில் நனைந்திருந்த அரங்கமே அமைதியில் ஒரு நொடி உறைந்தது.
அடுத்த நிமிஷமே கரகோஷம் அரங்கை அதிர வைத்தது. போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த இசையமைப்பாளர்களும் பிரபலமான பாடகர்களும் அவள் திறமையில் அசந்து போய் எழுந்து நின்று கைதட்டி பாராட்ட பாலு சொல்லியே விட்டார்.
சுருதி சேராமல் இருந்த அஞ்சலையா இது? அற்புதமா பாடிட்டே மா. நட பைரவிக்கும் சாரமதிக்கும் நடுவில அழகா கோடு கிழிச்சு காட்டிட்டே. இந்த மூணு மாசத்துல எங்கேயோ போயிட்டே மா! ரொம்ப பெருமையா இருக்கு.
அவரே சொன்ன பிறகு அப்பீல் ஏது? அரங்கமே அவள் படம் பதித்த பேனரை காட்டிசெய்த ஆரவாரம் அடங்கவே ஐந்து நிமிடங்கள் ஆனது.
அஞ்சலை சாரதாவை சரியா பாடினேனா என்று பார்க்க சாரதாவின் மலர்ந்த புன்னகையே அவர் நிறைவை சொன்னது.
சாரதா இந்த மூன்று மாதங்களில் அஞ்சலையின் திறமையை புரிந்து கொண்டார்.
அருமையான களிமண்ணை தேர்ந்த சிற்பி எப்படி தட்டி தட்டி சிற்பமாக செய்யலாமோ அது போல நல்ல குரு கிடைத்ததும் அஞ்சலையின் உள்ளே ஒளிந்திருந்த திறமை முழுதும் வெளிப்பட்டது.
என்ன சொன்னாலும் அவள் குரல் சொன்னபடி வளைந்து கொடுத்தது.
ஸ்ருதியோடு பாடுவதற்கும் அவர் சொன்ன பயிற்சிகளை அஞ்சலை தட்டாமல் செய்ய கொஞ்ச நாட்களிலேயே நல்ல முன்னேற்றம்.
சாரதா முழு நேரமும் அவளை பாடல் பயிற்சி செய்யச் சொல்லி மீன் கடை வேலையை விடச்சொன்னார். ஆனால் அஞ்சலை அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
இல்ல மேடம்! நான் வேலைக்கு போனா தான் எங்க நிலைமைக்கு சரி வரும். நான் மிச்ச நேரம் எல்லாம் நீங்க என்ன சொல்றீங்களோ செய்றேன்.
அவர் அந்த சம்பளத்தை தருவதாக சொன்னதற்கு கூட மறுத்து விட்டாள்.
நீங்க காசு வாங்காம சொல்லிக் குடுக்கிறதே பெரிய விஷயம். இதெல்லாம் வேண்டாம் மேடம்! என்று மறுத்து விட்டாள்.
அவள் பிடிவாதமாக இருப்பதால் அதை வாணியிடம் பேசிக் கொள்ளலாம் என்று சாரதாவுக்கு தோன்றியது.
சரி என்னை ஆன்ட்டின்னு தானே கூப்பிடுவே? இப்ப என்ன புதுசா மேடம்?
அஞ்சலை அதற்கும் அழுத்தமாகவே இருக்கட்டும் மேடம்! அது தான் நல்லது! என்று முடித்து விட்டாள். வாசுதேவனின் வார்த்தைகள் அவளை ரொம்பவே காயப்படுத்தி இருக்கிறது என்று சாரதாவுக்கு புரிந்தது.
ஒரு பெருமூச்சோடு சாரதா அதற்கு மேல் அஞ்சலையை எதுவும் கேட்கவில்லை. அவள் விருப்பத்திற்கே விட்டு விட்டார்.
ஓகே அஞ்சலை! உங்களுக்காக உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் இப்ப வோட் பண்ண ரெடியா இருக்காங்க! அவங்க கிட்ட என்ன கேக்கப் போறீங்க?
எனக்கு இந்த அளவு ஆதரவு கொடுத்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி! நான் எனக்கு ஓட்டு போடுங்கனு கேக்க மாட்டேன். யாருக்கு திறமை இருக்கோ அவங்களுக்கு உங்க வோட்டை போடுங்க. அது தான் இசைக்கு நாம் தரும் மரியாதை. நன்றி!
அஞ்சலை நேர்மையாக பேசியது மக்களை இன்னும் கவர்ந்து விட மறுபடி ஒரு கரகோஷம்.
இதைக் கேட்ட கௌசிக் தான் தான் அவளை முன்பு தவறாக புரிந்து கொண்டதை மீண்டும் நினைத்து வருந்தினான்.
அடுத்த போட்டியாளர் கௌசிக்கை மேடைக்கு அழைக்கிறோம்! என்று நிஷா குரல் கொடுக்க அவன் மேடையேறினான்.
எதிரே வந்த அஞ்சலையைப் பார்த்து சூப்பரா பாடினே! என்பது போல கட்டை விரலை உயர்த்த அவள் ஒரு புன்னகையோடு சென்றாள்.
அஞ்சலைக்கு இப்போது பாடி முடித்த பிறகு பதட்டம் குறைந்து விட கௌசிக்கிடம் அதிக நெருக்கம் கூடாது என்று அறிவு எச்சரித்தது.
அவள் போய் அடுத்த ரௌண்டுக்காக கருப்பு நிறத்தில் ஒரு பென்சில் பிட் பேண்டும் மேலே பல வண்ணங்கள் உள்ள வெல்வெட் ப்லௌசும் அணிய அது அவள் மெலிந்த உடலுக்கு அவ்வளவு அழகாக பொருந்தி இருந்தது.
மறுபடியும் அவளுக்கு உடைக்கு பொருத்தமாக ஹேர் ஸ்டைல் மேக்கப் எல்லாம் செய்ய ஆரம்பிக்க அறிமுகம் முடிந்து கௌசிக் பாட ஆரம்பித்து இருந்தான்.
 
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

Advertisement