Advertisement

அதனால் இரவு தூங்க மட்டுமே அந்த வீட்டுக்கு வந்தான். காலையில் எழுந்து குளித்து கிளம்புபவன் வீட்டில் சாப்பிடுவதை அறவே நிறுத்தி இருந்தான்.
கௌசிக் தன் காதலை சொன்ன ஷோவின் ப்ரோமோவில் பரபரப்புக்காக அவன் பேசியதும் பிறகு அஞ்சலை பக்கத்தில் அமர்ந்திருந்ததையும் போட மாப்பிள்ளை வரும் ஷோ என்று ஆர்வமாக பார்த்த ஐஸ்வர்யா இதைப் பார்த்து கடும் கோபம் கொண்டாள். எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று அப்பாவிடம் சொல்லி விட்டாள்.
 பொய் சொல்லி ஏமாற்றியதால் அவள் அப்பாவும் கொதித்துப் போக வாசுதேவனை அழைத்து அவரை விளக்கம் கொடுக்கவே விடாமல் கிழித்து விட்டார்.
இங்கே எல்லாம் சரிகட்டி சரியாகும் நேரம் அவர் இப்படி பேசவும் பதறிப்போய் வாசுதேவேனும் அவர்களை சமாதானம் செய்ய அடுத்த நாளே கோயம்புத்தூர் போய் விட வீட்டில் அமைதி மட்டுமே.
சாரதா கணவரும் மகனும் நடந்து கொண்ட விதத்தில் வெறுத்துப் போய் என்ன நடக்கிறது என்றே பார்க்காமல் ஒதுங்கிக் கொள்ள கௌசிக் வீட்டில் சாப்பிடுவதில்லை என்பதே அவருக்கும் தெரியவில்லை.
இரண்டு நாட்கள் எதோ காரணம் என்று அமைதியாக இருந்த மணியும் அதன் பிறகு என்னவோ சரியில்லை என்று தோன்ற இந்த விஷயத்தை சாரதாவின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
அதைக் கேட்டதும் மகன் மேல் இருந்த வருத்தம் எல்லாம் ஒரு ஓரமாய் போய் விட சாரதாவே மகனை தேடி வந்தார்.
மணி பத்து ஆகியிருக்க கௌசிக் அப்போது தான் வீட்டுக்கு வந்திருந்தான். பகலெல்லாம் அலைந்த களைப்பில் அப்படியே கட்டிலில் படுத்திருந்த மகனைப் பார்க்க அந்த தாய்க்கு ரத்தக்கண்ணீர் வந்தது.
மகனை உற்றுப் பார்க்க அவன் கொஞ்சம் இளைத்து முகத்தில் அப்படி ஒரு சோர்வோடு தெரிந்தான்.
எப்போதும் பளிச்சென்று உடை அணியும் மகன் இப்போது கலைந்த தலையும் கசங்கிய உடையுமாய் படுத்திருப்பதைப் பார்க்க அந்த தாய்க்கு தாங்கவே இல்லை.
எவ்வளவு செல்லமாக வளர்த்த பிள்ளை? இப்படி களைத்துப் போகும் அளவுக்கு என்ன செய்கிறான்? தாய்க்கு கவலையாகவும் வேதனையாகவும் இருந்தது.
 பிள்ளைகளுக்கு தான் வீராப்பெல்லாம். பெற்றவளுக்கு ஏது?
என்னடா கண்ணா? என்ன செய்யுது? உடம்பு சரியில்லையா?
கட்டிலில் அமர்ந்து அவன் தலை முடியை கோதியவருக்கு கண் கலங்கி விட்டது. சந்தோஷமாகப் போய்க் கொண்டிருந்த குடும்பத்தில் ஏன் இப்படி சண்டை பிரிவு எல்லாம்?
கௌசிக்குமே அம்மா வந்து கேட்டதும் தன் வருத்தத்தை எல்லாம் மறைத்து அவர் மடியில் முகம் புதைத்தவன் எதுவும் பேசவுமில்லை. அவர் மடியை விட்டு தலையை தூக்கவும் இல்லை.
சற்று நேரத்தில் புடவை நனைவதில் இருந்து மகன் கண்ணீர் விடுகிறான் என்று புரிந்து கொண்ட சாரதா அவனைத் தன் வயிறோடு அணைத்துக்கொள்ள அந்த அணைப்பில் இருவருமே கண்ணீர் வடித்தாலும் ஆறுதல் அடைந்தனர்.
எப்போதுமே கோபமாக பேசும் தன் கணவர் இந்த முறை வரம்பு மீறி பேசியது மகனின் மனதை மிகவும் காயப்படுத்தி விட்டது என்று சாரதாவுக்கு புரிந்தது.
கண்ணா! அப்பா சொன்னதுக்காக வருத்தப்படறியாபா?
ஆறுதலாக அவன் முதுகை வருடியபடி கேட்க கௌசிக் பதிலே பேசவில்லை.
பிள்ளைகள பெத்தா அவங்கள படிக்க வெச்சு ஆளாக்க வேண்டியது பெத்தவங்க செய்ய வேண்டிய கடமை டா. அதை சந்தோஷமா செஞ்சிட்டு இப்ப சொல்லிக் காட்டறார்னா அவருக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான்…
அப்போதும் கௌசிக் மௌனமாகவே இருக்க சாரதா பேச்சைத் தொடர்ந்தார்.
நீ அதை நினைச்சு மனச கஷ்டப்படுத்திக்காதே கண்ணா!
மேலே என்னவென்று ஆறுதல் சொல்வது என்று அவருக்கும் புரியவில்லை.
அஞ்சலை பற்றி பேச அவருக்கு இன்னும் மனம் வரவில்லை.
கௌசிக் அவர் பழையபடி பேசியதில் எழுந்து அமர்ந்தவன் அம்மாவின் முகத்தை வருத்தத்தோடு பார்த்தான்.
 அம்மா! அஞ்சலை என்னை காதலிக்கிறேன் என்று சொல்லவே இல்லை. நான் தான்மா சொன்னேன்….
வேண்டாம் வேண்டாம்னு ஒதுங்கிப் போனவள விடாம நான் தான் லவ் ப்ரொபோஸ் பண்ணேன். அப்பவும் அவ இது ஒத்து வராது என்று தான் சொன்னா.
நான் தான் அவளை வற்புறுத்தி நம்ம வீட்டுக்கு கூட்டி வந்தேன். என் மனச புரிஞ்சிக்கலன்னு இழுத்து கி…கிஸ் பண்ணேன்….
அம்மாவிடம் சொல்லும் போதே அவமானத்தில் அவன் முகம் சிறுத்துப் போனது.
சாரதா இப்போது மகனுக்கு எந்த ஆறுதலும் சொல்லவில்லை. தான் செய்தது தப்பு என்று தானே ஒத்துக்கொள்பவனை ஒரு இறுக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் பார்வையிலேயே கௌசிக் தானாகவே மேலே பேசினான்.
நான் செஞ்சது ரொம்பத் தப்பு மா! அது இப்ப தெரியுது….
சாரதா மகன் மேல் பிரியம் அதிகம் வைத்தவரே தவிர அவன் தப்பை எப்போதும் ஆதரித்ததில்லை. இதே சின்ன வயதில் என்றால் நிச்சயம் அடித்திருப்பார்.
வளர்ந்து விட்டான் என்று அடிக்கவில்லையே தவிர தன் மகனா இப்படி ஒரு பெண்ணிடம் நடந்து கொண்டான் என்ற வேதனை அவர் முகத்தில் தெளிவாக தெரிந்தது.
அவர் பார்த்த பார்வையில் குன்றிப் போன கௌசிக் தப்பு தான் மா நான் செஞ்சது! ஆனா எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு மா….அந்த ஆசைல தான் இப்படி நடந்துகிட்டேன். ஆனா அதுக்கு விலை அவ தான் குடுத்தா. அது தான் மா ரொம்ப வலிக்குது.
தப்பு செஞ்சது நான் தானே! அப்பா என்னை சொன்னது கூட எனக்கு ஒண்ணும் தோணல. பெத்து வளர்த்த என்னை என்னவும் பேச அவருக்கு உரிமை இருக்கு. ஆனா அவளை தப்பா பேசினது தான் என்னால ஏத்துக்க முடியல. அதுவும் அவங்க வீட்டுக்கே போய் அங்கே இருக்க எல்லார் எதிர்லயும் மோசமா பேசினத இங்க வந்து பெருமையா பேசும் போது…..
என்று சொல்லும் போதே கோபத்தில் அவன் முகம் சிவந்து குரல் கரகரத்தது.
சாரதா பேசாமல் அப்படியே அமர்ந்திருக்க சில நொடிகள் அமைதிக்கு பின் உங்களுக்கும் அஞ்சலையைப் பிடிக்கலியா அம்மா என்று கௌசிக் காரியத்தில் கண்ணாய் கேட்க சாரதாவின் முகத்தில் இப்போது புன்னகை வந்தது.
அவன் தலையைப் பிடித்து ஆட்டியவர் உனக்கு உன் கவலை தான் இவ்வளவு நடந்த பிறகும்…. என்றவர் முதலில் அந்த பொண்ணை எந்த தொல்லையும் செய்யாம நிம்மதியா பாட விடு…இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்… என்று கண்டிப்பாக முடித்தார்.
அவ கிட்ட போய் ஓடிப் போய் கல்யாணம் செஞ்சுக்கலாமா என்று கேக்கறது! செட்டுல எல்லோரும் பாக்க ரோமியோ மாதிரி லவ் ப்ரோபோசல் பண்றது இதெல்லாம் விட்டுட்டு முதல்ல உன் இலட்சியத்தை நோக்கி கவனம் செலுத்து.
அந்த பொண்ணையும் முன்னேற விடு….
என்று ஒரு கொட்டு வைத்தே அறிவுரை சொன்னார்.
அவர் பேச்சில் இருந்தே அவருக்கு தான் அஞ்சலையிடம் பேசியது எல்லாம் தெரிந்து விட்டது என்று கௌசிக்கிற்கு புரிந்து போனது.
அதில் நாக்கை கடித்துக்கொண்டவன் இப்போது துணிச்சலாய் அதுவும் நான் செஞ்ச மடத்தனம் தான்…. எனக்கு பிடிச்ச பெண்ணை கல்யாணம் பண்ணி வெக்க என் செல்ல அம்மா இருக்கும் போது அப்படி அவ கிட்ட சொல்லி இருக்கக்கூடாது தான்…. என்று நல்லவன் போல பேச சாரதா பிடி கொடுக்காமல் எழுந்து கொண்டார்.
டேய்! இதப் பேச இது நேரமில்லை. ஒழுங்கா இப்ப போட்டியில மட்டும் கவனம் செலுத்து. அந்த பொண்ண அது வரைக்கும் தொல்லை பண்ணக் கூடாது. சொல்லிட்டேன்.
போன தடவை மாதிரி என் கிட்ட சத்தியம் பண்ணிட்டு பின்னால உன் வேலைய காட்டக் கூடாது. புரிஞ்சுதா?
என்று அதட்டியே சொல்லிவிட்டுப் போனார்.
கௌசிக் சாரதாவிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றவதற்காகவே அஞ்சலையிடம் கஷ்டப்பட்டு ஒதுங்கிப் போனான்.
அவனைப் பார்க்கும் போது அவள் பார்வையில் தொக்கி நிற்கும் ஏன் என்ற கேள்வி புரிந்தாலும் அதற்கான பதில் அவனிடம் இல்லையே.
சாரதாவுமே நீ அஞ்சலையைத் தொல்லை செய்யக் கூடாது என்றாரே தவிர அவள் தான் என் மருமகள் என்று பிடி கொடுக்கவில்லையே!
வாசுதேவனும் தான் எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் ஏற்கவில்லை என்று புரிந்ததும் வேறு பெண்ணைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்.
ஆனால் அந்த ப்ரோமோ எல்லா இடத்திலும் வில்லனாக வர எதுவும் செட் ஆகவில்லை.
சாரதா முன்பு போல முகம் கொடுத்து பேசாததில் அவருக்கு பாதி பலம் குறைந்தது போல ஆனது. மகனும் அன்றைக்குப் பிறகு சுத்தமாக பேச்சை நிறுத்தி விட சொந்த வீடே அவருக்கு அந்நியமாகத் தெரிந்தது.
மீண்டும் கோயம்புத்தூர் போகலாம் என்று சாரதாவைக் கூப்பிட அவர் வர மறுத்து விட்டார். அதோடு இப்போதைக்கு பாடும் மனநிலை இல்லை என்று கச்சேரியும் தன்னை நம்பி ஒத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லிவிட வீட்டில் ஒரு இதமில்லாத அமைதி தான் நிலவியது.
சாரதா இப்போதும் அஞ்சலை வீட்டுக்குப் போய் பாட்டு சொல்லிக்கொடுப்பது தெரிந்தும் அவரால் தடுக்க முடியவில்லை.
கௌசிக் இப்போதும் காலையில் போனால் இரவு படுக்க மட்டுமே வர என்ன நடக்கிறதென்றே அவருக்கு புரியாமல் தவித்துப் போனார்.
இன்று பினாலே என்று சாரதா அஞ்சலையோடு நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திற்கு வர கௌசிக் தனியாக வந்திருந்தான்.
அவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்கு அவரை அழைக்க ஆளில்லாமல் வாசுதேவன் மட்டும் தனியாக வீட்டில் லைவில் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
முதலில் அஞ்சலை வந்து மேடையில் நிற்க அவர் பார்வை அவளை வெறித்தது.

Advertisement