Advertisement

அத்தியாயம் 8
“ம்ப்ச். நீ ஒரு விஷயத்தை மறந்துட்ட ஆஷு, கம்பெனி சம்மந்தமான எதையும் வச்சு நாம லோன் வாங்க முடியாதுன்னு அப்பா உயில் எழுதி இருக்கார்.”
“ஆனா அதுல என்னோட பேடண்ட் வராது ஸார். தவிர பேங்க் நம்ம ரெகுலரா புழங்கற பேங்க்தான். இன்னும் சொல்லப்போனா வேல்யூபில் கஸ்டமரா அந்த பேங்க்-கோட ரிஜினல் மேனேஜர் வரைக்கும் நம்மளை நல்லாத் தெரியும். ஈஸியா பணத்தை புரட்டிடலாம்”, என்றான் இலகுவாக.
“எத்தனை நாளாகும்னு ஐடியா இருக்கா?”
“சுந்தர் சார் என்னோட வருமானவரி, ஆதார், பேங்க் ஸ்டேட்மென்ட்ஸ் தான் கேப்பாங்கனு நினைக்கறேன். கவலையே படாதீங்க, எல்லா டாக்குமெண்ட்டும் என்கிட்ட இருக்கு. மெயில் அனுப்பினா ப்ராசஸ் பண்ணிடுவாங்க. அதிகபட்சமா ஒரு வாரத்துக்குள்ள வர்ற மாதிரி பண்ணிடலாம் ஸார்”, என்றான் ஆஷு.
சுந்தர் இன்னும் சில பல சந்தேகங்கள், கேள்விகள் ஆஷுதோஷ்ஐப் பார்த்து கேட்டுக்கொண்டிருக்க, இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த ரங்கராஜனுக்கோ, ‘ஆஷுதோஷ் ஏன் சுந்தருக்கு ஹெல்ப் பண்றான்? வேற ஏதாவது காரணம்  இருக்குமோ?’, என்ற ரீதியில் யோசித்தான்.
இடையே யுவாவும் ஸ்ரீநிதியும் அவர்களுக்கு விருப்பமான கேக் வாங்கித் தர சொல்லி தந்தையிடம் கேட்க, சுந்தர் அவர்களை மறுத்து ஒரு வார்த்தை கூட சொல்லாமல் நேரே அந்த உயர்தர கேக் கடைக்கு (?) செல்லுமாறு ஓட்டுனரைப் பணித்தான். 
“ஸார்,அப்ப நா இறங்கிக்கறேனே?”, என்று ஆஷு சொல்லவும், “லோன் விஷயம்..?” என்று சுந்தர் இழுத்தான்.
“நாளைக்குள்ள எல்லா பேப்பரும் குடுத்துடலாம் சார்”, என்று உறுதியளித்துவிட்டு ரங்காவை பார்த்து, “ஆபீஸ்ல பாக்கலாம்”, என்று விட்டு கிளம்பி விட்டான். 
கேக் வேர்ல்ட் சென்ற சுந்தரின் மக்களுக்கு அவர்களுக்குப் பிடித்த கேக் செலெக்ட் செய்வதற்கே பத்து நிமிடங்களுக்கு மேலானது. அதன் பிறகு பிள்ளைகள் இருவரும் அதை உண்டு முடிக்க அரைமணி நேரத்துக்கு மேல் ஆக, அந்தி சாயும் நேரம் வந்தது. 
ரங்கராஜனுக்கு அதற்குள்ளாகவே இரண்டு மூன்று அழைப்புகள். எல்லாம் மாலையில் இவன் இலவசமாக அள்ளித்தெளிக்கும் சோமபானத்தில் முங்கி எழும் கூட்டத்திடமிருந்துதான். நேற்று ஒருநாள் மஹதி கடிந்து சொல்லவும் ரங்கா வீடடங்கி இருந்தான்.  
சுந்தர் பில் செட்டில் செய்வதற்காக அவனது வங்கி அட்டையை சர்வரிடம் கொடுத்திருந்தான். ரகசிய எண்ணை பதிவதற்காக காசாளர் சுந்தரை அழைத்ததால் அங்கு சென்றான்.
இதுதான் சமயமென்று எண்ணி  “ஓகே, யுவா ஸ்ரீகுட்டி சித்தப்பாக்கு அவசரமா வெளியே வேலை இருக்கு. அப்பாட்ட சொல்லிடுங்க. பை”, என்று விட்டு நைசாக நழுவினான். 
சுந்தர் பணம் செலுத்தி வந்த பிறகு, தம்பியை காணாமல் புருவமுயர்த்த, யுவா “சித்தா அவசரமா வெளில போகணும்னு சொல்லட்டு போனார் டாட்”, என்றான். 
சுந்தருக்கு விஷயம் இன்னதென புரிய உடனே முகம் சுருக்கினான் “போய்ட்டானா?’,வாய்க்குள் முணுமுணுத்து, “ஓகே டா நீங்க என்ஜாய் பண்ணுங்க”, என்று சொல்லி மகளுக்கு கைகளை சுத்தம் செய்துவிட்டான். எல்லாம் முடித்து இவர்கள் அங்கிருந்து புறப்பட மேலும் அரை மணி நேரமானது. 
சிறிது நேரத்திற்கெல்லாம் வீடு வந்துவிட, மகளை தூக்கிக்கொண்டு இறங்கும் கணவனை மேலே மாடியில் மஹதி அறையின் ஜன்னலில் இருந்து பார்த்து நின்றாள் பார்கவி. 
‘இதோ இப்போது பொதியை விட்டு செல்வதுபோல மகன் மகள் இருவரையும் விட்டு சென்று விடுவான்’, என்று நினைத்தவள் அவசரமாக மஹதியிடம் திரும்பி, “மஹி, மாமா காரியம் முடியற வரைக்கும் உங்க அண்ணனை இங்கேயே தங்க சொல்லேன்”, என்றாள்.
மஹதி ‘ஏன்?’ என்பது போல கேள்வியாக அண்ணியைப் பார்க்கவும், மெலிதாக முகம் சிவந்த பார்கவி, “ஒரு பத்து நாள் இந்த பசங்க என்னைப் போட்டு தொல்லை பண்ணாம இருப்பாங்க”, பார்வையை தழைத்து முணுமுணுத்தாள். 
இந்த பத்து நாட்களில் எப்படியாவது கணவனுடன் பேசி சமாதானமாகி விடலாம் என்று அண்ணி நினைக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு, “சொல்லி பாக்கறேன் அண்ணி’, என்று சொல்லிவிட்டு அண்ணனைப் பார்க்க கீழே கூடத்துக்கு சென்றாள் மஹதி.
“அட ஸ்ரீகுட்டி?”,என்று கொஞ்சியபடி அரைத்தூக்கத்தில் இருந்த அண்ணன் மகளை தூக்கிக் கொண்ட மஹதி, “ரூமுக்கு போயி குளிச்சிட்டு வாங்க  அண்ணா, சாப்பிடலாம்”, என்று சொல்லி தனது அறைக்கு செல்ல திரும்பினாள்.
‘இல்ல, நா வீட்டுக்கு போறேன்’, என்று மறுத்துப் பேச வந்த சுந்தர், மகன் கண்களில் எதிர்பார்ப்போடு தன்னையே பார்த்து நிற்பதை அறிந்து, “ம்ம்”,என்று முனகினான்.
அப்பாவின் ம்ம்-ல் யுவராஜின் முகம் பளிச் சென்றாக, பார்த்த சுந்தரின் மனம் சஞ்சலப்பட்டது.
‘என்னோட  கனவுகளுக்காக என் பசங்கள தொல்லை பண்றேனோ?’, தனது தந்தை கவலைப்பட்ட போது அவர்மீது கோபப்பட்ட சுந்தர், மகனது சின்ன முக மாற்றத்தில் தன் செயல்களுக்கு வருத்தப்பட்டான். 
‘பட் நா பண்றது சரியான இன்வெஸ்ட்மென்ட் ஆச்சே? இதுல எவ்ளோ ஈஸியா பணம் புரளும்னு இவங்களுக்கு எப்ப புரியும்? ஹும். ரெண்டு படம் எடுத்து பணத்தை காமிச்சா தானா தெரியப்போகுது. அது மட்டுமா? பப்ளிசிட்டி.. பெரிய பெரிய ஆளுங்களோட ஃப்ரெண்ட்ஷிப்..’, என்று மனதுள் பொருமினான் சுந்தர்.
அவனருகே இரண்டடி எடுத்து வைத்த மஹதிக்கு சின்ன அண்ணனைக் காணோமே என்று அப்போதுதான் உரைத்தது. “அண்ணா ரங்கண்ணா எங்க? உங்க கூடத்தான வந்தான்?”, கேட்டவளின் குரலில் மெல்லிய பதட்டம்.
“ம்ப்ச். அவன் வர்ற வழில வேலையிருக்குன்னு சொல்லி கிளம்பிட்டான் மஹி”,  சலிப்போடு பதில் வந்தது. 
‘ஹும் மறுபடியும் ஆரம்பிச்சிட்டான்?’, என்று அண்ணன் தங்கை இருவரும் நினைத்தனர். 
சில நொடிகள் அமைதியாக கடக்க.., மஹதி இதுதான் சமயமென நினைத்து, “அண்ணா அப்பாவோட ரிச்சுவல்ஸ்-ல்லாம் முடியறவரைக்கும் இங்கேயே இருங்களேன்.ரொம்பவே லோன்லியா இருக்கு..”,என்று வருத்தத்தோடு சொல்ல.., வீட்டுக்கு பெரியவனாக இருப்பவன் மறுக்கவா முடியும்? சரியென்று தலையாட்டினான். 
தவிர அவனது பண பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வந்து விட்டதே? எனவே சுந்தரின் கோபம் தணிந்திருந்தது. மனைவியும் இங்கே தான் இருக்கிறாள் என்று தெரிந்த போதும் தெரிந்தாற்போல காட்டிக்கொள்ள வில்லை. 
இரவு உணவு வேளையின்போது பிள்ளைகளுக்கு தேவையானதை தட்டில் போட்டு ஊட்டிவிடும் மனைவியை சுந்தர் ஒருமுறை பார்த்ததோடு சரி. 
அப்போது ஸ்ரீநிதி சாப்பிடாமல் அடம் பிடிக்க, பார்கவி அவளுக்கு வலுக்கட்டாயமாக ஊட்டி விட்டாள்  சின்னவள் அழ ஆரம்பிக்க, “மதியம் சாப்பிட்டதே அவளுக்கு ஹெவியா இருக்கும். வேண்டாம்னா விட்டுடு”, என்று மனைவியிடம் நேரடியாக பேசினான். கடுகடுவென்றுதான் பேசினான்,ஆனாலும் ஒரு வழியாக மௌனம் கலைந்து பேசினானே என்று இருந்தது பார்கவிக்கு. 
“ம்ம்.”, என்று சொல்லி ஊட்டுவதை நிறுத்தினாள். 
ஸ்ரீநிதியோ விட்டால் போதும் என்று நேரே அண்ணனோடு சேர்ந்துகொண்டு அப்பா இருந்த அறைக்கு சென்று விட்டாள். 
இவையனைத்தையும் அலைப்பேசியை மேய்ந்த படி சாப்பிட்டு கொண்டிருந்த மஹதி கண்டும் காணாதது போல இருந்தாள்.
கணவன் மனைவி இருவருக்கும் தனிமை தேவை என்பதை உணர்ந்து, தட்டில் இருந்த இரு விள்ளல்களை ஒரே வாயில் போட்டுவிட்டு எழுந்து கொண்டாள்.
“ரங்கண்ணா மொபைல் ஸ்விச் ஆப் ஆயிருக்கு. அவன் இந்த நேரத்துல எங்க போவான்னு மிஸ்டர் ஆஷுதோஷ்க்கு தெரியுமாம். பேசும்போது சொன்னார். அவர்ட்ட போயி கேட்கலாம்னு இருக்கேன். அண்ட் அண்ணா நாளைலேர்ந்து  ஆபீசுக்கு வர்றேன்”, என்று சொல்லி விட்டு உணவு மேஜை விட்டு நகர்ந்தாள் மஹதி. 
போகும் வழியில் உணவு பரிமாறுபவர்களைப் பார்த்து, “நீங்க போவேண்டாம் அவங்க பாத்துப்பாங்க”, என்று சொல்லிச் சென்றாள்.
‘அண்ணி இனி உன் பாடு.. அண்ணா கால்ல விழு, இல்ல தலைல கல்லைத்தூக்கி போடு. ஆனா என்கிட்டே வந்து கண்ணைக் கசக்காத’, என்று எண்ணியவாறே மேலே மாடிக்குச் சென்றாள்.
ஆஷு வழமைபோல அவனது அறைக்கே உணவு எடுத்து வருமாறு சொல்லியிருந்தான். உணவு வந்ததும் சாப்பிட்டு படுப்பதற்கு ஆயத்தமாக இருந்தான். அரை ட்ராயரும், டி ஷர்ட்டுமாக கையில் மொபைலோடு  ஐக்கியமாகி இருந்தான். 
மஹதி கதவை தட்டவும், ‘எஸ்’,என்றவன் வந்தது யார் என்று பாராமல், “தட்டை அங்க டேபிள்ல வச்சிடுங்க.அரை மணி நேரம் கழிச்சு எடுத்துட்டு போ …”, நிமிர்ந்தவனின் கண்ணில் மஹதி தென்பட, சட்டென எழுந்து அமர்ந்தான். 
“ஓஹ் நீங்களா? ஸாரி, நா வேலைகாரங்கன்னு நினைச்சேன். யாருன்னு பாக்கல மேம்”, உளறி கொட்டி கிளறி மூடினான். 
“இட்ஸ் ஓகே, நீங்களும் கீழ எங்களோட வந்து டின்னர்ல ஜாயின் பண்ணியிருக்கலாமே?”
“இல்ல ராஜ் இருந்தவரைக்கும் நாங்க சேந்துதான் சாப்பிடுவோம். அவர் எப்போவாவது ஜாலி ட்ரிப் போனா தனியா ரூம்-ல தான் சாப்பிடுவேன்”,என் நட்பு உன் தந்தையிடம் மட்டும்தான் என்பதை சொல்லாமல் சொன்னான்.
“ம்ம்ம்”,என்று அவனது அறையை ஒருமுறை நோட்டம் விட்டாள்.சுத்தமாக இருந்தது. அதைவிட அனைத்தையும் நேர்த்தியாக வைத்திருந்தான்.   
வேலைக்காரர்கள் வரும் நேரத்தில், இப்படி இந்த பெண் தனது அறையில் நிற்கின்றாள் என்பது ஆஷுவுக்கு ஒரு வித பதட்டத்தைத் தந்தது. அவனது அறையின் கதவோ ஆட்டோ லாக் வசதியோடு தானாக மூடிக்கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டது. இதையும்விட முக்கிய காரணம், மஹதியின் வருகை அந்த அறை முழுதும் வியாபித்து இருந்தது. அவளின் வாசமா, ஆளுமையா, வைப்ரேஷன் என்பார்களே அந்த அதிர்வா என்று பிரித்தறிய முடியாமல் ஆஷு திணறினான். 
“வந்து.. என்ன விஷ்யம்னு…?”
“ஆங். அது..”,என்று தயங்கி, ”ரங்கண்ணா ரெகுலரா எங்க போவான்னு தெரியும்னு நீங்க சொன்னீங்க இல்லியா?”,கேட்டாள். 
“ஓஹ்?”,எனும்போதே விஷயம் அவனுக்கு விளங்கிவிட்டது. “ம்ம். தெரியும். நா கால் பண்ணி அவரை வர சொல்றேன், நீங்க போயி படுங்க”,என்று கொஞ்சம் வேகமாக (காட்டமாக?) சொன்னான் ஆஷுதோஷ்.
“ம்ம் சரி”,என்று சொல்லி மஹதி வெளியேற, ஆஷுவிற்கு அப்பாடா என்று இருந்தது. 
உடனடியான ரங்கா செல்லும் பப் மேலாளருக்கு அலைபேசியில் அழைத்தான். 
“ஹலோ,ஆஷு ஸார்..?”
“ஆமா, அங்க ரங்கராஜன் இருக்காரா?”
“இருக்கார் சார், அவரோட பிரெண்ட்ஸ் கூட பேசிட்டு தான் இருக்கார். இன்னும் பார்ட்டி ஆரம்பிக்கல.”
“நல்லதாப்போச்சு, அவரை கூப்பிட முடியுமா?”,எனக் கேட்டான்.
“இதோ ஸார்..”, என்று அவன் பேசியை தாங்கியில் வைத்து சில நிமிடங்களில் ரங்கா லைனுக்கு வந்தான்.
“சொல்லு ஆஷு..?, நா இன்னும் அரைமணி நேரத்துல வீட்ல இருப்பேன்னு மஹி கிட்ட சொல்லிட முடியுமா?”, என்று ஆஷு பேச வாய்ப்பே தராமல் அவனே பேசி முடித்து விட்டான். 
“மேடம் வெயிட் பண்றாங்க ஸார்”
ரங்கா, “எங்க? பக்கத்துலயா இருக்காங்க?”,என்றான் யோசனையாக.     “இல்ல சார், அவங்க நீங்க எங்க இருப்பீங்கன்னு கேட்டாங்க, கூடவே உடனடியா வர சொல்லவும் சொன்னாங்க”  
“சரி வர்றேன்னு சொல்லிடுங்க:,என்றவன் இந்த நேரத்தில் இவன் தங்கையோடு பேசுவதா என்று தோன்றவும் அவசரமாக, “இல்லல்ல நானே மஹிக்கு போன்ல சொல்லிடறேன்”,என்றான் ரங்கராஜன்..
‘என்னாடா நடக்குது இங்க? ஆறு மணிக்கு மேல எப்போவும் தண்ணீல மிதக்கறவன் பொறுப்பா பேச ஆரம்பிச்சுட்டான்.எப்படியோ நல்லா இருந்தா சரி’,என்று சொல்லிவிட்டு படுக்கயை சரி செய்தான் ஆஷுதோஷ்.
அவனது இரவு உணவு மேஜைமீது காத்திருக்க, ஆற அமர நிதானமான சாப்பிட்டு முடித்தான். 
கையில் இருந்த அலைபேசியில் தேவையற்ற தகவல்களை அழித்தவனின் பார்வையில் வரதராஜனின் உயில் போட்டோ வர,சற்று நேரமத்தை  பார்வையிட்டான். 
‘என்ன சொல்ல வரீங்க ராஜ்?, எனக்கு உங்க போஸ்ட் குடுத்துருக்கீங்க ஆனா போறதா இருந்தா ரெண்டு வருஷம் ரேவால இருந்துட்டு அப்பறம் போகணும்னு வேற சொல்லி இருக்கீங்க?  நா ரேவா-ல இருக்கறதா வேணாமா?’,என்று தனக்குள்ளாக பேசிகொண்டவன், சிறிது நேரம் அமைதியாக இருந்தான். 
பின், “ஓகே ராஜ்..நீங்க சொல்ல வர்றது எனக்கு புரியலைன்னாலும்,ரேவா-வோட முன்னேற்றத்துக்கு என்னாலான முயற்சியை செய்யறேன். நீங்க இருக்கும்போது கம்பெனி எப்படி சக்ஸஸ்புல்லா நடந்துச்சோ அதே மாதிரி இனியும் நடக்கும்”, என்று வாய் விட்டு சொல்லி உறங்கச் சென்றான்.  
))))))))))))
ஆயிற்று அப்படி இப்படி என்று நான்கு நாட்கள் கடந்திருந்தது. மஹதிக்கு ரேவா அலுவலகம் முன்பே ஓரளவு பழக்கமானதுதான். இந்த நான்கு நாட்களில் முழு முனைப்பாக ஒவ்வொரு துறையையும் கவனித்தாள். அது அத்தனை சுலபமான விஷயமாக இல்லை. 
ஆனாலும் மஹதி தனது இருப்பை ஒவ்வொரு துறைக்கும் நேரே சென்று பதிவு செய்தாள். சுந்தரும் ஆஷுவும் வங்கி கடன் விபரமாக அலைந்ததால், மஹதி தனக்குத் துணையாக சின்ன அண்ணன் ரங்காவை கூடவே வைத்துக் கொண்டாள்.
ரங்கராஜனுக்கு மற்ற பிரிவுகளை பற்றி சுமாராகவே தெரிந்திருந்தாலும், அவனது விற்பனை பிரிவு பற்றி மிக நன்றாக தெரிந்திருந்தது. அவனின் கீழ் பணி புரியும் தொழிலாளர்கள் அனைவரின் பெயர் குடும்ப விபரம் அனைத்தும் அவனது ஞாபகத்தில் இருந்ததைக் கண்ட மஹதிக்கு,அண்ணனை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது. போனஸாக தொழிலாளர்களின் மரியாதையையும் நன்மதிப்பையும் ரங்கராஜன் நன்றாகவே சம்பாதித்து இருந்தான். 
இன்னொரு ஆச்சர்யமாக,  அன்று ஒருநாள் அஸ்தி கரைக்க சுந்தரோடு சென்றபோது மது கூடத்துக்கு சென்ற ரங்கா, அதன் பின் போதையை நாடி செல்லவேயில்லை.
சுந்தரின் குடும்பம் மஹதி கேட்டுக்கொண்டதற்காக (?), இன்னமும் வரதராஜனின் வீட்டில்தான் இருந்தனர். கணவன் மனைவி பூசல் சரியானதா என்று கேட்டால், மஹிக்கு தெரியாது ஆனால், பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருந்தனர். அங்கிருந்தே பள்ளி சென்று வரத் துவங்கி இருந்தனர். 
கூடுதலாக, வீட்டு நிர்வாகம் தானாகவே பார்கவி வசம் சென்று இருந்தது. அதில் அக்கா பூர்ணாவிற்கு மெத்த மகிழ்ச்சி. பார்கவி முன்பே இந்த வீட்டு நிர்வாகம் செய்தவள்தானே? எனவே இனி வீட்டைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்ற நிம்மதியோடு பூர்ணா திட்டமிட்டபடி இரண்டொரு நாளில் மகள் மற்றும் கணவனோடு ஊருக்கு சென்று விட்டாள். பூர்ணாவின் பங்குகளை மஹதி வாங்கிக் கொள்வதாக ஏற்பாடாகி இருந்தது. பண பரிமாற்றதிற்கு ஒரு வருட காலம் அவகாசம் கேட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. 
இதற்கிடையே மஹதிக்கு அவளோடு பயிலும் ஆராய்ச்சி மாணவர்களிடமிருந்து தொடர்ச்சியாக குறுந்தகவல்களும் அழைப்புகளும் வந்து குவிந்த வண்ணம் இருந்தது.   
மஹதி அங்கிருந்து வரும்போதே லண்டன் திரும்ப செல்ல முன்பதிவு செய்துவிட்டுத்தானே வந்திருந்தாள்?. இதோ தந்தையின் பதிமூன்றாம் நாள் காரியம் வரப்போகிறது. அடுத்து என்ன செய்வது? திரும்ப லண்டன் செல்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாள் மஹதி. அவளுக்கு ‘மூன்று வருட உழைப்பு வீணாவதா? இங்கேதான் அனைத்தும் சரியாக போய்க் கொண்டிருக்கிறதே? ஒரு இரண்டு மூன்று மாதங்கள் தான் இல்லாவிட்டால் என்ன ஆகிவிடும்? சரி இன்னுமிரண்டு நாட்களில் முடிவு செய்யலாம்’, என்று அந்த பிரச்சனையை தற்காலிகமாக ஒத்திப் போட்டாள்.

Advertisement