Advertisement

பார்கவி அண்ணிக்கு ஆறுதல் சொல்லும் வகையாக அவளது கையை பிடித்துக் கொண்டு, “அட அண்ணி எனக்கு ஒரு போன் பண்ணி சொன்னா நானே வந்துடப்போறேன், இதுக்காக அலைவீங்களா?”, என்றாள் மஹதி.
ஆறுதலாக ஒரு வார்த்தை கேட்க மாட்டோமா? என்ற விளிம்பு நிலையில் இருந்த பார்கவியோ, “அதில்ல மஹி, உங்கண்ணாட்டேந்து என் நம்பருக்கு  நேரடியா போன் வந்ததும் ஏதோ ‘நா திருந்திட்டேன் இப்போ அப்பா வேற இல்ல, சோ அவர் இடத்துல நா நின்னு கம்பெனிய பாத்துக்க வேண்டிய கட்டாயம் இருக்கு அதனால உனக்கு இஷ்டமில்லாத காரியமெலாம் பண்ண மாட்டேன்’-னு சொல்லத்தான் கூப்பிடறார்ன்னு நினைச்சேன். ஆனா பாரு, போன எடுத்ததும் யுவராஜ் கிட்ட  குடுன்னு சொல்லிட்டார். அவனும் அப்பாகூட பேசியதும் கிடுகிடுன்னு கிளம்பறானே ஒழிய, என்ன விஷயம்னு என்கிட்டே ஒரு வார்த்த கூட சொல்லல”,  எனும்போதே அவளுக்கு கண்ணில் இருந்து நீர் வழிந்து விட்டது.
“ம்ச். அண்ணி..”, என்ற மஹதி, பார்கவியின் தோளில் கை போட்டு ஆறுதல் சொன்னாள்.   
அதிலும் சமாதானமாகாத பார்கவி, தான் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாள். “கிடுகிடுன்னு போயி அவன் தங்கச்சிகிட்ட சொல்றான், அப்படித்தான் இவங்க எல்லாரும் மாமாவோட அஸ்திய கரைக்கப போறாங்க-ங்கிற விஷயம் எனக்கு தெரிஞ்சது”, கண்ணைத் துடைத்தபடி, “எல்லாம் உங்க அண்ணா சொல்லிக் கொடுத்திருப்பார்”, என்று நொடித்துக் கொண்டாள்.
“அப்டில்லாம் நீங்களே முடிவு பண்ண கூடாது அண்ணி, யுவா செம ஸ்மார்ட். நீங்க ரெண்டு பேரும் முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்கறதை பாத்தே உங்களுக்குள்ள சண்டைன்னு கண்டுபிடிச்சிருப்பான். ஏழு வயசு பையனுக்கு இது கூட தெரியாதா?”
“யுவாக்கு எட்டு முடியப்போகுது மஹி”, “சின்னவளுக்குத்தான் ஏழு ஆரம்பிச்சிருக்கு”  
“ரொம்ப ஒல்லியா இருக்கானா அதான் வயசு தெரில”
“இவங்க ரெண்டு பேரும் சரியான அப்பா செல்லம் மஹி. அதனால ஒழுங்கா    சாப்பிடறதே இல்ல மஹி. பாரேன் இவங்க என்ன அம்போன்னு விட்டுட்டு உங்க அண்ணா கூட இருக்கேன்னு கோர்ட்-ல சொல்லப்போறாங்க. அப்படி மட்டும் என் பசங்க சொல்லிட்டா, கண்டிப்பா நா தற்கொலை பண்ணிப்பேன்”, என்று கேவினாள் பார்கவி.
“அட அண்ணி, இதென்ன பேச்சு? அண்ணாக்கும் உங்களுக்கும் நடுல என்ன நடக்குது?”
“என்ன நடக்க கூடாதோ அதெல்லாம் நடக்குது, சினிமா எடுக்கறேன், ஷூட்டிங் சரியாப் போகுதான்னு பாக்கறேன்னு ஊர் ஊரா சுத்தறார். தினசரி நாலஞ்சு ஹீரோயின் கிட்ட இருந்து இவருக்கு போன் வருது. இவரோட மெயில்ல, நல்ல குடும்பத்தை சேர்ந்தவங்க பாக்க முடியாத போஸ்-ல எல்லாம் பொண்ணுங்க போட்டோஸ் வந்து குவியுது. என்ன ன்னு கேட்டா.. சினிமா சான்ஸ் கேக்கறவங்க அப்படித்தான் போட்டோஸ் அனுப்புவாங்கங்கிறார்.”
“அதுவாவது கண்ணராவின்னு ஒத்துக்கிட்டு இருக்க முடியும். ஆனா, பணம் தண்ணீ மாதிரி செலவாகுது. என்ன பண்றாருன்னு எதுவும் சொல்ல மாட்டேங்கிறார். லாக்கர்-ல இருந்த என் நகை உட்பட எல்லாத்தையும் ப்ளெட்ஜ் பண்ணியிருக்கார். மாமா எனக்குன்னு குடுத்த ரெண்டு கடைய வித்துட்டார். இன்னும் என் பேர்ல இருக்கறது நீலாங்கரைல இருக்கிற ரெண்டு ஏக்கர் நிலம்தான். அதையும் விக்கறேன்னு சொன்னார். அப்போதான் முடியாதுனு அவரை எதுத்துப் பேசினேன். அப்போலேர்ந்து ஒரே சண்டை, நீ இதை குடுக்கலைன்னா என்னோட இருக்கணும்னு அவசியமில்லைன்னு ஒரே பேச்சு.”
அதுவரை சீராக பேசிக்கொண்டிருந்த பார்கவி, இப்போது பார்வையை தழைத்துக்கொண்டு, “நானும் எத்தனை நாள்தான் பொறுத்துப் போக முடியும் சொல்லு? அதான் பதிலுக்கு பேசினேன். கொஞ்சம் அழுத்தமா அவருக்கு வலிக்கறா மாதிரி பேசினேன். அது பெரிய குத்தமாயிடுச்சு. என்னைப் புரிஞ்சுக்காதவ என்னோட குடும்பம் நடத்த தேவையில்லைன்னு..”, மொத்தமாக உடைந்து அழுதாள்.   
‘கணவன் மனைவி இருவருக்கிடையே இருக்கும் மனஸ்தாபத்திற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? முதலில் மூன்றாமவரிடம் சொல்லும் அளவுக்கு விஷயத்தை வளர விட்டதே தவறு. யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து.. ஹ்ம். சுந்தராண்ணாவாவது வீட்டுக் குடுப்பதாவது? அண்ணி பாவம்தான்’, என்று எண்ணிக்கொண்டாள். 
“உனக்கொன்னு தெரியுமா? டிவோர்ஸ்க்கு பேப்பர் அனுப்பினா அட்லீஸ்ட் திட்றதுக்காவது வீட்டுக்கு வருவாருனு நினைச்சேன். ஆனா பாரு, மறுநாளே பேப்பர்-ல கையெழுத்து போட்டு ட்ரைவர்ட்ட குடுத்து அனுப்பறார். எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? சரி, ஆனது ஆகட்டும், இந்த மனுஷன் கோர்ட் ஹியரிங்-க்கு வந்துதானே ஆகணும்னுதான் கேஸ் பைல் பன்னினேன். எங்க வீட்ல எல்லாரும் என்னைத்தான் திட்றாங்க. இவர் பண்றது எல்லாமே சரி சரின்னு போகணும்னு ஒரே அட்வைஸ்.”
“சரி என் வீட்டு ஆளுங்கதான் அப்படின்னு பாத்தா, மாமா கிட்ட சொன்னேன். முழுக்கவா சொல்ல முடியும்? அதுவும் அவரோட மகனைப் பத்தி? ஓரளவு சொன்னேன். ஆனா உங்க ரெண்டு பேர் பிரச்சனைக்குள்ள நா வரக்கூடாது,, அது நல்லாயிருக்காதும்மா-ன்னு சொல்லிட்டார். உங்கண்ணாவை  ரெண்டொரு வார்த்தை தட்டி கேட்கக்கூடிய ஆளு உங்கப்பாதான். அவரும் போய் சேர்ந்துட்டார்.”
“இந்த பசங்க ரெண்டு பேருமா..?, பெரியவன் பேசாம கழுத்தறுக்கறான். சின்னவ எப்போம்மா நம்ம வீட்டுக்கு போவோம்னு கேட்டு தினசரி நச்சரிக்கறா. இதுக்கு நடுல இன்னும் பைத்தியம் பிடிக்காம எப்படி இருக்கேன்னுன்னு எனக்கே தெரில”
“நீதான் இதுக்கு ஏதாவது பண்ணனும் மஹி. இந்த படங்களோட சினிமா பீல்டை விட்டுடறேன்னு சொல்லக் சொல்லு. நா அந்த இடத்தை இப்போவே  குடுத்துடறேன். அதுக்காக இப்படி பேசாம, பார்க்காம என்னால இருக்க முடில”, என்று ஒரு பாட்டம் பாடி முடித்தாள் பார்கவி.
))))))))))))))))
வரதராஜனின் அஸ்தியை கரைத்துவிட்டு, சுந்தர், ரங்கா, ஆஷு அவர்களோடு சுந்தரின் மகன் யுவராஜ், மகள் ஸ்ரீநிதி அவைவரும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
பின்னிருக்கையில் மகன் அருகே அமர்ந்திருக்க, சுந்தர்ராஜனின் மடியில் ஸ்ரீகுட்டி தூங்கிக்கொண்டு இருந்தாள். மகளின் முடியை கோதியவாறே உறங்கும் அவளை ஆதூரமாக பார்த்துக்கொண்டு வந்தான் சுந்தர்ராஜன். அதே நேரத்தில் அவனது அலைபேசி அதிர (வைப்ரேஷன் மோடில் போட்டிருந்தான்), பேசியை எடுத்து அழைப்பை ஏற்றான்.
“ஹலோ”
“ஸார் நீங்க ஃபிரீயா? பேசலாமா?”, என்று மறுமுனை கேட்டது.
“சொல்லுங்க, அந்த அசிஸ்டென்ட் என்ன சொல்றான்? கேஸ் திரும்பி வாங்கறானா இல்ல, இப்போவும் கதை என்னுது, காப்பிரைட் என்னுதுன்னு சொல்லிட்டு திரியாறானா?”, என்று சுந்தர் கேட்டான்.
“ஸார், எப்படியாவது ஒரு ரெண்டு கோடி மட்டும் ரெடி பண்ணிடுங்க, இந்த அசிஸ்டென்ட் டைரக்ட்டரை சரி கட்டடலாம். இவன் தொல்லை முடிஞ்சிதுன்னா படத்தை ரிலீஸ் பண்ணிடலாம். கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்க சார். ஏன்னா, இந்த படம் ரிலீஸ் ஆனாத்தான், பாதில நிக்கற அடுத்த படத்துக்கு பைனான்ஸ் பண்ண முடியும். ஹீரோ ஹீரோயின் கால்ஷீட்டை ஏற்கனவே ஒருதடவை மாத்திட்டோம். இப்போ மறுபடியும் மாத்துங்கன்னு சொன்னா கஷ்டம் ஸார்”, என்று சுந்தர் தயாரித்த படத்தின் இயக்குனருடைய அசிஸ்டென்ட் சொன்னான்.
“ம்ம். பாக்கறேன்”, என்று அழைப்பை துண்டித்த சுந்தர், “டேய் ரங்கா உன்கிட்ட ரெண்டு கோடி இருக்குமாடா?”, என்று நம்பிக்கையின்றி கேட்டான்.
“இல்ல சுந்தர், அவ்ளோல்லாம் இருக்காது, ஒரு நாலஞ்சு லட்சம் இருக்கலாம்”
“மூணு மாசத்துல திருப்பிடலாம்டா, பத்து வட்டி கூட தர்றேன்”
“டேய்.. வட்டி கிட்டின்னுட்டு? எதுக்குடா அவ்ளோ பணம்?”
“ஒரு படத்தை ரிலீஸ் பண்ண முடியாம ஒருத்தன் தொல்லை பண்றான். அவனை சரி கட்டணும். அப்போதான் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் வரும். முதல் படங்கிறதாலதான் இந்த தொல்லையெல்லாம். சுத்தி கடன் வாங்கி பைனான்ஸ் பண்ணி இருக்கேன். இதுவே நாலஞ்சு படம் போயிடுச்சுன்னு வை..  என் ரேன்ஜ்-ஜே வேற. ஹூம் சொன்னா யாருக்கு புரியுது?”, என்று நைந்து போன குரலில் பேசினான் சுந்தர்ராஜன்.
“ரெண்டு கோடி இருந்தா போதுமா ஸார்?”, என்று கேட்டான் ஆஷுதோஷ்.
“ஹே.. உன்கிட்ட இருக்கா?”
“ஐயோ இல்ல.ஸார் ஆனா என்கிட்டே என் பேடண்ட் இருக்கு. அதை வச்சு பேங்க்-ல பணம் புரட்ட முடியும்”, என்றான் ஆஷு.

Advertisement