Advertisement

அத்தியாயம் 7
“ஹெலோ மை லிட்டில் பிரின்சஸ்.. எப்படி இருக்க? என்னடா இந்த அப்பா சொல்லாம கொள்ளாம பரலோகம் போயிட்டானேன்னு திட்டினியா?”, என்று புன்னகைத்தவாறே வீடியோவில் பேசும் தந்தையைப் பார்க்கும்போது மஹதிக்கு, அவர் அவளுக்கு எதிரே நின்று பேசுவதுபோல தெரிந்தது.
“டாட்”, என்று வாய் தானாக மொழிய இடதுகை அந்த காணொளியில் தெரிந்த தந்தையின் முகத்தை வருடியது. 
“எந்த மெஷினா இருந்தாலும் ஒருநாள் வேலை பாக்க முடியாம நின்னு போகணும் இல்லியா? கொஞ்ச நாள் ரிப்பேர் பண்ணி ஓட்டிட்டு இருக்கலாம், பட்.. அதோட லைஃப் முடிஞ்சுபோச்சுன்னா.. ஒன்னும் பண்ணமுடியாதில்ல?”, என வரதராஜன் காணொளியை தொடர்ந்தார். 
“கொஞ்சம் கொஞ்சம் ரிப்பேர் பண்ணி பார்த்தேன்டா.  ஆனா என்ன? சர்வீஸ் பண்ணினவன், மெஷினுக்கு கியாரண்டி தர முடியாதுன்னு சொல்லிட்டான். சோ நாம தயாரா இருக்கனுமில்லையா?, அதான்”, என்று இந்த காணொளிக்கான காரணத்தை அவரது பாணியில் தெரிவித்தார் வரதராஜன். 
பின் அவரது முகம் தீவிரமடைந்தது. “உன்கிட்ட ஒரு பெரிய பொறுப்பை கொடுக்க போறேன் கண்ணா, காரணம்”,என்று கண்களை மூடிக்கொண்டவர், “ஹ்ம்ம்….”, என்று சொல்லி மஹதியைப் பார்த்து, “உங்கண்ணன்ல ஒருத்தன்.. எதிர்கால கனவுலயும், இன்னொருத்தன் இறந்தகால நினைவுகள்லயும் வாழ்ந்திட்டு இருக்காங்க. அவங்களை நிகழ்காலத்துல நில்லுங்கடான்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். நேரடியா..  மறைமுகமா.. கடைசி கடைசியா ரெண்டு நாள் முன்னாடி கூட அவங்க கிட்ட பேச முயற்சி செய்தேன். பட்..  நோ யூஸ்”
“உனக்கு பதிலா பூர்ணா சரி வருவாளான்னு யோசிச்சு பாத்தேன்.  ஹ்ம்ம். ? என்ன சொல்ல? அவ.. லைஃப்-ல செட்டில் ஆயிட்டா. இனிமே அவளை இங்க கூப்பிட்டு நம்ம  கம்பெனியை நடத்த சொல்றதுங்கிறது சரி வராது.”
“சோ எனக்கிருக்கற ஒரே கடைசி ஆப்ஷன் நீ. மை டியர் ப்ரின்ஸி, ஆப்ஷன்லதான் நீ கடைசி, ஆனா நம்பிக்கைன்னு எடுத்துக்கிட்டா என்னோட முதல் சாய்ஸ் நீ”
“நீதான் எப்போதும் என்னோட முதல் சாய்ஸ்-சா இருப்ப, இருந்த. அதனால.. முடிவு  பண்ணிட்டேன். எனக்கடுத்து நீதான்”, என்று ஆள்காட்டி விரலால் மஹதியை சுட்டிக் காட்டினார் வரதராஜன். 
“பூரிக்குட்டி அநேகமா வெளிய போயிடுவா, தடுக்காத, அவ என்ன கேக்கறாளோ குடுத்துடு. சுந்தரை எப்போதும் வாட்ச் பண்ணிட்டே இரு, அவனுக்கு இன்னும் யாரை நம்பனும்,  யாரை நம்பக்கூடாதுன்னு தெரில.”
“ரங்கா.. ஹூம் .. அவனா திருந்தி வெளில வந்தாத்தான் உண்டு. கல்யாணம் பண்ணினா திருந்துவான்னு சொல்றதுக்கு நா பழைய பஞ்சாங்கம் இல்லியே? சோ அவனை நம்பி ஒரு பொண்ணு வாழ்கைல ரிஸ்க் எடுக்கமுடில. உன்னால ஏதாவது முடிஞ்சா ட்ரை பண்ணி பாரு”
“பெரிய பெரிய பொறுப்பெல்லாம் ரொம்ப சின்ன குட்டிக்கு கொடுக்கறேன். ஆனா, யூ ஆர் மை லிட்டில் பிரின்சஸ் இல்லியா?”, என்று கேமரா லென்ஸை ஊடுருவிப் பார்த்து சிரித்த வரதராஜன் தலை சாய்த்து புருவம் உயர்த்தி, ‘தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?’, என்று கேட்டார்.
பள்ளிப்பருவத்தில் மாறுவேடப் போட்டியின்போது மஹதி எடுத்துக்கொண்ட பாத்திரம் முண்டாசுக்கவி பாரதி. பாடியது ..‘
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
இதை மஹிக்கு அர்த்தத்தோடு புரியும்படி சொல்லித்தந்து பாட வைத்தது சாட்சாத்  அவளது அப்பா வரதராஜன்தான்.
அவரே நேரடியாக பேசியிருந்தால் கூட மஹதிக்கு உடலில் இப்படி ஒரு விதிர்ப்பு, மயிர் கூச்செறிதல் ஏற்பட்டிருக்குமோ தெரியாது, ஆனால் இப்போது அவரது இந்த அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை காணொளியில் கேட்ட மஹதிக்கு உணர்ச்சி வேகத்தில் கண்ணில் இருந்து ஒரு சொட்டு இருந்து நீர் சட்டென கீழே இறங்கியது.
“உன்னால முடியும்னு எனக்குத் தெரியும். சோ.. ப்ரொஸீட்”, சொல்லி கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தார். பின் ஏதோ நினைவு வந்தவராக, “ ஆங்.  துணைக்கு ஆஷு.. இந்த ஆஷு இருக்கானில்ல?”, என்றவருக்கு நண்பனின் நினைவு வந்தது போலும், முகம் மென்மையாகியது .”அவனை விட்டுடுடாத. அவன் வல்லாளகண்டன். ஹஹஹ, வெரி ஸ்மார்ட் ஃபெல்லோ. நீ அவனை ஒன் ஹன்ட்ரட் பர்சன்ட் நம்பலாம்.”
“கம்பெனி சம்பந்தப்பட்ட எல்லா விஷயத்தையும் நீங்க நாலு பேரும் சேர்ந்து டிஸ்கஸ் பண்ணுங்க. ஆனா முடிவை மட்டும் தனியா நீ எடு.”
… சொன்ன வரதராஜன், சிறிது நேரம் கண்மூடி யோசனைக்குச் சென்றார். பின் நீண்டதொரு பெருமூச்சை வெளியிட்டு, “உன் கல்யாணம் பத்தி ஒரு  பிளான் வச்சிருந்தேன். மூணு வருஷம் முன்னாடி நீ பிஜி முடிச்சபோதே பண்ணியிருக்கணும். ஹ்ம்ம். தீஸிஸ் முடிச்சு பாக்கலாம்ன்னு சொன்ன.. நானும் சரி பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்”, என்றவர் பெருமூச்சு விட்டு, “ஹூம். இனி நீதான் முடிவெடுக்கணும்”
“வெல்.. என் தூக்கத்துக்கான நேரம் கிட்ட வந்துட்டு இருக்கு. இதோ, இந்த நொடி வரைக்கும் நா என் கடமையை சரியா செய்திருக்கேன்.”
“ராபர்ட் ஃப்ராஸ்ட் சொன்ன மாதிரி, லைஃப்-ல எவ்வளவோ மேடு பள்ளங்கள், உங்களோட ஸ்பென்ட் பண்ணிட இனிமையான நிகழ்வுகள், உங்கம்மாவை பறிகொடுத்த கொடுமையான கணங்கள். ஆனா எங்கேயும் எதிலேயும் தேங்கி நின்னுடாம என் ஓட்டம் தொடர்ந்து கிட்டே இருந்தது. இதோ இப்போ நா ஓய்வெடுக்கற நேரம். “, என்று சொல்லும்போது குரல் அவரையறியாமல் கமறியது. மகளுக்கு தான் செய்ய வேண்டிய கடமையை முடிக்காமல் செல்கிறோமே என்ற வலி அவரது கண்ணில் தெரிந்தது. 
ஆனால் அதெல்லாம் சில நொடிகளே, ஏனென்றால்… அவர் வரதராஜன். தன் ஆருயிர் காதல் மனைவி இறந்த மறுநாளே சுடுகாடு சென்று வீடு திரும்பியதும், தன்னை சுத்தப்படுத்திக் கொண்ட  கையோடு அலுவலகத்திற்கு சென்ற இரும்பு இதயத்துக்கு சொந்தக்காரர் ஆயிற்றே? 
“க்.க்க்ஹ்.ஹ்ம்”, தொண்டையை செருமிக்கொண்டவர், “என்னோட பேஸ்புக் அக்கவுண்ட்டை நீ கண்ட்ரோல் பண்ணலாம்னு செட்டிங் பண்ணி வச்சிருக்கேன். அதுல இருக்கிற போஸ்ட்-ல நிறைய நாஸ்டால்ஜிக் மெமரிஸ் எல்லாம் பழைய போட்டோஸ் வீடஇருக்கும். நிறைய போஸ்ட் எனக்கு நானே ஷேர் பண்ணிக்கிட்டதுதான்”, மெலிதாக சிரித்தார். 
“ஸ்கூல் டேஸ்-ல மே மாசம் லீவ்ல ஹாஸ்டல்லேர்ந்து வந்தா, நீயும் நானும் இதைத்தான் பார்த்துட்டு இருப்போமில்ல? ஹஹ. ஆனா இப்போ உன் கூட சேர்ந்து என்ஜாய் பண்ண நா இருக்கமாட்டேன். பட் மை குட்டி ப்ரின்சஸ், டோன்ட் வொரி,  உங்கம்மாவும்  நானும்  உன்னை கைட் பண்ணிட்டே இருப்போம்”, என்று சொல்லி விட்டு புகைப்பட கருவியின் அருகே வந்த வரதராஜன், “நீ நல்லா அமோகமா இருப்படா”, என்று உள்ளார்ந்து ஆசி கூறி விட்டு திரையில் இருந்து மறைந்தார். 
கணினித் திரையில் இதுவரை உயிர்ப்போடு பச்சை பசேலென்று பசுமையாக இருந்த வீட்டின் பின்புற தோட்டம் இப்போது வெறுமையாகத் தெரிந்தது.
அப்பா பேசிய வீடியோவை மீண்டும் பார்க்கவேண்டும் என வெகுவாக தோன்றிய உந்துதலை தள்ளிப் போட்டாள். உணர்வு குவியலாக இருக்கும் இந்த மனநிலையில் மீண்டும் அதை பார்க்க வேண்டாம் என்று தோன்றியது. இதுவரை அவர் சொன்னதை கிரகிக்க அவளது மனம் முற்பட்டது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் தனது அறையில் ஒருமுகப்படுத்தப்பட்ட மனதோடு யோசித்த மஹதி, ஒரு முடிவுக்கு வந்தவளாக மீண்டும் அப்பா அனுப்பி வைத்திருந்த காணொளியைப் பார்த்தாள்.
“ஓகே ப்பா, நிச்சயமில்லாத எதிர்காலத்த யோசிக்காம,கடந்துபோன இறந்தகாலத்துல நின்னுடாம, இப்போ நடக்கிற இந்த நொடிதான் நிஜம்ங்கிற உங்க கொள்கை எனக்கு புரியுது. இதுல என்ன சிறப்பா செய்யமுடியுமோ அதை பண்ண முயற்சிக்கிறேன்”, என்று சொன்னாள்.
அடுத்து அவளுடன் பயிலும் நண்பன் ஒருவனின் மின்னஞ்சலுக்கு பதிலளித்து, அவன் தொடர்பு கொள்ள தனது இந்திய எண்ணையும் அனுப்பி வைத்தாள். 
பிறகு தந்தையின் முகப்புத்தக பக்கத்தை திறந்து பார்வையிட ஆரம்பித்தாள். 
அப்பா சொன்ன மாதிரி எல்லா பாதிக்கும் மேற்பட்ட பதிவுகள் ‘ஒன்லி மீ’ என்று அவர் மட்டுமே பார்ப்பதற்காக பதிவிடப்பட்டு இருந்தது. சில முக்கிய குறிப்புகள், பல புகைப்படங்கள், அதில் அதிகமாக இருந்தது அம்மாவும் அவரும் திருமணமான புதிதில் எடுத்த புகைப்படங்கள்,  அதற்கு அடுத்ததாக அப்பாவோடு சுந்தர், ரங்கா மற்றும் நான் மூவருமாக அவரது ராஜதூத் வாகனத்தில் அமர்ந்து நால்வரும் சிரித்தபடி இருந்த புகைப்படம். எத்தனை மகிழ்ச்சியான நாட்கள், என்று நினைத்துக்கொண்டிருந்த மஹதியை கதவு தட்டும் ஓசை கலைத்தது.
“எஸ்…? யாரது?”
“மஹி, நான்தான்டா”, என்று அண்ணியின் குரல் கேட்டது. 
சட்டென எழுந்து சென்று கதவைத் திறந்தாள் மஹதி. “என் ரூமுக்கு நீங்க வர்றதுக்கு பர்மிஷன் கேட்கணுமா அண்ணி?”, என்று கடிந்து, “எப்போ வந்தீங்க?”, கேட்டாள்.  
“மாமாவோட அஸ்தி கரைக்கறதுக்காக யுவா-வை வரச் சொல்லி இருந்தாங்க, ஸ்ரீநிதி போன்ல அப்பா குரலைக் கேட்டதும் அவரை பாக்கணும்னு அடம். ஹ்ம். நமக்குத்தான் தன்மானம் ரோஷமெல்லாம் பசங்க முகம் சுழிச்சாலே காணாமே போயிடுதே? என்ன பண்றது? தலை எழுத்துன்னு இவங்களை கூட்டிட்டு பீச் போனேன். ஒரு நடை உன்னை பாத்து பேசிட்டு போலாம்னு வந்தேன்”, என்று சொன்ன பார்கவியின் முகம் கசங்கி இருந்தது. அழுத்திருப்பாள் போல. 

Advertisement