Advertisement

நீயொரு திருமொழி சொல்லாய்
அத்தியாயம் 3 1
“அண்ணா..?”,  என்று கூப்பிட்டபடி தனது சின்ன அண்ணனின் அறையின் கதவை இருமுறை தட்டி வாசலில் காத்திருந்தாள் மஹதி.
வரதராஜனின் வாரிசுகள் நால்வரில் முதலாவது பூர்ணா, அடுத்த இரு வருடங்களில் சுந்தர்ராஜன், ஏழு வருட இடைவெளிக்கு பிறகு ரங்கராஜன், கடைசியாக மஹதி. இவள் ரங்கராஜனுக்கு மூன்று வயது இளையவள். பூராணாவுக்கும் மஹதிக்கும் பனிரெண்டு வயது இடை வெளி இருக்க, அவள் அக்கா என்பதை விட அம்மா என்றே கொள்ளுமளவுக்கு பாசம் காட்டுவாள். ஆனால் சேர்ந்து விளையாடுவது, சரிசமமாக சண்டை போடுவது என்றெல்லாம் கிடையாது.
பூர்ணா மட்டுமல்ல, சுந்தர்ராஜனுமே இந்த இளையவர்கள் இருவரிடமும் கொஞ்சம் தள்ளியே நின்றார்கள். அதற்கு அவர்களது ஹாஸ்டல் வாசமும் கூடுதலாக ஒரு காரணம். பொதுவாக பாசம்,அக்கறை என்னவோ இருந்தது ஆனால் உரிமை வரவில்லை. 
ஓரளவு தன் வயதை ஒட்டி வளர்ந்த ரங்கண்ணாவோடு மஹதிக்கு தனது அக்காவிடமும் பெரியண்ணனிடமும் இல்லாத நெருக்கம் இருந்தது. ஒரு காதல் தோல்வியால் ரங்கராஜன் மதுவுக்கு அடிமையாகும் வரை, அது தொடரவும் செய்தது.
மஹதி பலமுறை தன்மையாக சொல்லிப் பார்த்தும் ரங்கராஜன் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடாததால் முதலில் அவனோடு பேசுவதை நிறுத்தினாள். அப்படியே மஹதி தனது படிப்பதற்காக வெளிநாடு சென்றுவிட ஒரு பெரிய இடைவெளி இருவருக்குள்ளும் ஏற்பட்டுவிட்டது.
மஹதியின் குரல் கேட்டு, “வா மஹி”, என்று சொல்லி கதவை விரியத் திறந்த ரங்கண்ணா எனப்படும் ரங்கராஜன், தங்கையை நேராக பார்ப்பதை தவிர்த்து தலையை துடைத்துக் கொண்டிருந்தான். குளித்திருந்தான். ஆனாலும் அவனது சற்றே வீங்கிய முகமும் ரத்தச்சிவப்புடன் இருந்த கண்களும் அவன் இன்னமும் சகஜ நிலைக்கு வரவில்லை என்பதை  பறையறிவித்தன.  
அவனது நிலை பார்த்து மஹதிக்கு கோபம் வர, “நீ இன்னும் திருந்தவேயில்லையா?”, “இந்த மாதிரி நேரத்துல வீட்ல இல்லாம எங்க போன நீ? அப்பா.. “, என்று அண்ணனை கோர்வையாக திட்டக் கூட முடியாமல் அனலாய் மூச்சு விட்டவள், “நாம நாலு பசங்க இருந்தும்..  அவர் கூட நிக்கறதுக்கு கூட யாருமே இல்ல, இத விட முக்கிய வேலை என்ன கிழிக்கறீங்க நீங்கல்லாம்?”
“இல்ல மஹி, அவர்.. திடீர்னு இப்படி சடனா போவாருன்னு எதிர்பாக்கல”,  என்று குற்ற உணர்வுடன் பதில் சொன்னான் ரங்கராஜன். 
தமையனது பதிலில் மேலும் உஷ்ணமான மஹதி, “கரெக்ட், இனிமே செத்துப்போறவங்க எல்லாரும் திடீர்னு சாகாம, புப்ளிக் நோட்டீஸ் குடுத்து  அனௌன்ஸ் பண்ணிட்டு சாக சொல்லுவோம். சரியா?”, என்று பல் கடித்தாள்.
அண்ணன் வேதனையுடன் தலைகுனிவதைப் பார்த்து, சற்றே சமன்பட்டவளாக, “ஹால்-ல அப்பாவை பார்க்க யார் யாரோ வர்றாங்களாம், நீ வெளிய போயி இரு. அப்பறம் சுந்தரண்ணா எங்க? அப்பா கூட அவருக்கு என்ன தகராறு?”, என்று கேட்டாள் மஹதி.
ஒருநொடி அவனது கண்களில் வலி வந்து போனது. “விடு மஹி, அதை ஆற அமர பேசிக்கலாம். இப்போ அதுக்கு நேரமில்லை, சுந்தர் எங்க இருப்பான்னு எனக்கு ஒரு கெஸ் இருக்கு. நா கூப்பிடறேன்”, என்று விட்டு தனது அலைபேசியை எடுத்து ரங்கா யாருக்கோ அழைத்தான். 
மறுமுனை பேசியை எடுக்கவில்லையோ என்னவோ, அடுத்து அடுத்த எண்களுக்கு முயன்று கொண்டே இருந்தான். 
அதில் பொறுமையிழந்த மஹதி, “இவ்ளோ நேரம் அண்ணாவுக்கு விஷயம் தெரியாமலா இருக்கும்?”, என்று மஹி கேட்டாள்.
கையறு நிலையில் தங்கையைப் பார்த்தவன், ஒரு முடியெடுத்தவனாக,  “தெரிஞ்சுதான் இருக்கும். எதுக்கும் நீ கூப்பிடு”, என்றான் ரங்கராஜன் அலைபேசியில் இருந்து சுந்தரின் எண்ணை தங்கைக்கு தகவலாக அனுப்பினான். 
அந்த இடைப்பட்ட நேரத்தில், “ப்ச். என்ன நடக்குது இங்க?”, “எனக்கு ஜெட் லாக்-னால தல வேற வலிக்குது”, என்று சொன்ன மஹதி நெற்றிப்பொட்டில் கை வைத்து தேய்த்துக் கொண்டாள். 
 “இந்தா இதுதான் அவன் நம்பர்.  நீ உன் போன்லேர்ந்து வாட்சப்ல கூப்பிடு.எனக்கென்னமோ நீ பேசாம அவன் இங்க வரமாட்டான்-னு தோணுது”, என்றான். 
அவன் தந்த எண்ணுக்கு அழைத்த மஹதி, “ஏன் நா பேசனும்?”, என்று ரங்காவிடம் கேட்கும்போதே பெரியண்ணன் இவளது அழைப்பை ஏற்றிருந்தான்..
“ஹலோ..?”
“அண்ணா எங்க இருக்கீங்க?”
“பத்து நிமிஷத்துல வர்ற தூரத்துல தான் இருக்கேன்”
“இங்க இருக்க வேண்டிய நேரத்துல, வேற எங்கேயோ என்ன பண்றீங்க?, ரங்காண்ணா கூப்பிட்டா ஏன் போன எடுக்கல?”
“…”
“அண்ணா?”
“அதான் நீ இருக்க இல்ல? நா எதுக்கு? ஒப்புக்கு சப்பாணியாவா?”, என்று குதர்க்கமாக சுந்தர் கேட்டான். 
அண்ணனின் பேச்சு புரியாமல், “என்ன நா இருக்கேன்? வாட் ஒப்புக்கு…?”, என்று கேட்ட மஹதிக்கு தொடர் தூக்கமின்மை காரணமாக தலை விண் விண் என்று வலித்தது. “ஸ்ட்ரெயிட்டா புரியிறா மாதிரி பேசுங்கண்ணா”
“அவன் ஒன்னும் சொல்லலியா?”, சுந்தர் அண்ணன் சொல்லும் அவன் – ரங்கண்ணா என்பதுவரை மஹதிக்குப் புரிந்தது. .
நெற்றி சுருக்கி சின்ன அண்ணனை முறைத்துப் பார்த்தபடி, “ஏதாவது சொல்ற நிலைமைல இருந்தாத்தான?.  எப்போதும் போல ப்ளாட் டா கிடந்தான். அப்பாவோட பி ஏ தான் இவனை தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்தான்”, என்று சொன்ன மஹதி, ஆஷுதோஷ் சொன்ன அவசர வேலைகளை நினைத்து,  “ப்ச்.”, சொல்லி இந்த தாற்காலிக பிரச்சனைகளை நொடியில் புறம் தள்ளினாள். 
பின் அழுத்தமாக, “அண்ணா.. நீங்க சொல்ற எல்லா ப்ராப்ளம்ஸையும் அப்பறமா வச்சுக்கோங்க. இல்லன்னா, உங்க யாருக்கும் காத்திட்டு இருக்காம அப்பாக்கு செய்ய வேண்டிய எல்லாத்தையும் நானே செஞ்சிட்டு போயிட்டே இருப்பேன். எனக்கு ஒரு வாரம்தான் லீவ் இருக்கு. எவ்ளோ க்ருஷியலான ஸ்டேட்-ல என்னோட ப்ராஜெக்ட் போயிட்டு இருக்கு தெரியுமா?”,என்று மஹதி சொன்னதும்..,
ஒரு “வரேன்”-னை உதிர்த்து போனை வைத்தான் சுந்தர்ராஜன். 
“ரங்கண்ணா அண்ணா கிளம்பிட்டான். சுந்தரண்ணா என்ன சொல்றாங்க? ஒப்புக்கு சப்பாணி அது இதுன்னு சொல்றாங்க? ஒன்னும் புரியல? பத்து வருஷமா அப்பா கூட இருந்து ஆபிஸ் பாக்கறாங்க. எப்போ எதுக்கு ப்ரையாரிட்டி கொடுக்கணும்னு தெரில”, என்ற மஹதி, பரபரப்பாக அவர்கள் இருந்த அறையை நோக்கி வந்த ஆஷுதோஷைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தினாள். 
இவளை பார்த்ததும், “இங்க இருக்கீங்களா? உங்களை தேடி ரூமுக்கு போனேன், மினிஸ்டர் இன்னும் அஞ்சு நிமிஷத்துல வர்றார், ஜங்ஷன் தாண்டிட்டாங்களாம். நீங்க ரெண்டு பேரும் அங்க போங்க. அண்ணியையும் கூட வச்சுக்கோங்க, பூர்ணா மேம் இப்போதான் வந்தாங்க. கீழே உங்களுக்காக காத்துட்டு இருக்காங்க”,  என்றவன்..
“அவர் துக்கம் விசாரிக்கும் போது நீங்க எல்லாரும் இருந்தா நல்லாயிருக்கும். நல்லவேளையா உங்க சொந்தகாரங்க நிறைய பேர் வந்துருக்காங்க,பார்கவி அண்ணியும் அங்க இருக்கறதால ஓரளவுக்கு மேனேஜ் ஆகுது. சுந்தர் ஸார்..?”, என சந்தேகத்தோடு கேட்ட அடுத்த நொடியிலேயே அவனது அலைபேசிக்கு ஒரு அழைப்பு.. 
“ஆங்.ஆங். எங்க கம்பெனி ஐ.டீ கார்ட் இருக்கிற ஆளுங்களை மட்டும்தான் இங்க சார் பக்கத்துக்கு நிக்கறாங்க. பயமில்லை வாங்க”, என யாருடனோ பேசியபடி செல்ல ஆரம்பித்தான். அவன் பேசி முடித்து விட்டான் என்பதை அறிந்த மஹதி, “சுந்தரண்ணாட்ட பேசிட்டேன். வந்துடுவாங்க”,என்று அவனுக்கு கேட்கும்படி சொன்னாள்.
திரும்பி இவளை பார்த்து தலையசைத்துவிட்டு சென்றான் ஆஷுதோஷ்.
தனது இரண்டாவது அண்ணனிடம் “ரங்கண்ணா நா ஹாலுக்குப் போறேன். அப்பாக்கு ஹோமேஜ் செய்யறதுக்கு பொலிட்டிக்கல் லீடர் வர்றார்.  நீயும் எதையாவது வயத்துக்கு போட்டுட்டு உடனே வா”, என்ற மஹதி ரங்காவின் அறையில் இருந்து வெளியேறி இருந்தாள்.
வெளியே கூடத்தில் அத்தனை கூட்டம். இவளது அப்பாவை சுற்றி, இவர்களது ரேவா குழும நிறுவனங்களின் பிரதிநிதிகள், மேல் மட்டத்தில் இருந்து கீழே வரை அனைத்து தொழிலாளர்களும்,லான் முழுவதுமாக நிறைந்திருந்தனர். 
வீடு வாசலில் இருந்து வெளியே பிரதான வாயில் வரையுமே மனித தலைகள். கையில் பூ மாலை, சந்தன மாலை, மலர் வளையம் என்று விதவிதமாக அப்பாவுக்கு மரியாதை செய்ய திரண்டிருந்தனர். 
‘அப்பாவை இவ்ளோ பேரை தெரியுமா?’,
இவர்கள் நால்வரும் இல்லாதது அங்கே அவ்வளவாக கவனிக்கப்படவில்லை என்பது மஹதிக்கு கொஞ்சம் ஆறுதலித்தது. சுற்றி பார்வையை சுழற்றிய மஹதிக்கு அங்கே ஹாலின் வலது கடைசியில் பார்கவி அண்ணியும்,பூர்ணா அக்காவும் சிற்சில அறிமுகமான கூட்டத்தினரிடையே இருப்பது தென்பட,நேரே அங்கே சென்றாள். அங்கிருந்த அனைவரும் இவர்களது சொந்தங்களே. (மஹதியின் அம்மா இருந்தவரை இவர்களது வருகை இருந்தது. பின் படிப்படியாக குறைந்து போனது)  
மஹதியைப் பார்த்து கண்கள் பணிக்க நின்ற அண்ணி பேசவில்லை, இவள் அருகே சென்றதும் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.
அக்கா பூர்ணாவோ, “உன்னை பாக்கணும்னு நினைச்சிட்டே இருந்தேன்,இப்படி ஒரு சந்தர்ப்பத்துல பாக்க வேண்டி வரும்னு நா நினைக்கலையே?”, என்று அழுதபடி மஹதியை கட்டிக்கொண்டாள்.  
“ஹூம் அக்கா, அமைதியா இருங்க. வாங்க அப்பா பக்கத்துல போயிடலாம்”,என்று மஹதி சொல்ல, மூன்று பெண்களோடு, நெருங்கிய சொந்தங்கள் சிலரும் வரதராஜனை நோக்கி நடந்தனர். 
அப்பாவைப் பார்த்ததும்,“இப்படி திடீர்னு போயிட்டாரே மஹி?”, பூர்ணா ஆரம்பிக்க.., மஹதிக்கு துக்கம் கப்பியது. 
சட்டென்று அந்த இடத்தில் ஒரு பரபரப்பு தொற்றியது. கூடத்தில் குழுமியிருந்த கூட்டத்திடம், ஆஜானுபாகுவான இருவர், “ப்ளீஸ் கொஞ்சம் ஓரமா தள்ளி நில்லுங்க”, என்று சொல்லி அவர்களை விலக்கினார்கள். அவர்கள் சொன்ன அந்த ப்ளீஸ்-ல் கண்டிப்பும் அதிகாரமும் இருந்தது. 
அதற்குள் ரங்கராஜன் மஹதியுடன் வந்து நின்று கொண்டான். பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர நடக்கிறதா என்று பார்க்கும்  பொருட்டு ஆஷுதோஷும்  அங்கே இருந்தான். 
மந்திரி இலகுவாக உள்ளே வந்து செல்வதற்கு பாதை ஏற்படுத்திய  பாதுகாப்பு காவலர்கள் சுற்றும் முற்றும் பார்த்தவாறே நின்றனர். அப்போது வெள்ளை வேட்டி சட்டை சகிதம் ஒருவர் வந்தார்.
சம்பிரதாயமாக வரதராஜனின் மீது மலர் வளையம் வைத்த அவர், சில நொடிகள் அவரைப் பார்த்து நின்று பின் மஹதி & கோ அருகே வந்து, ரங்கராஜனிடம் இரண்டொரு வார்த்தை பேச,  சரியாக அந்த நேரத்தில் சுந்தர்ராஜன் வந்துவிட, செய்திபிரேக்கிங் நியூஸ் -ல் தொலைக்காட்சியில் ‘ரேவா குழும நிறுவனருக்கு அமைச்சர் நேரில் சென்று அஞ்சலி’, வந்தது. குடும்ப அங்கத்தினர் அனைவரும் அங்கே பதிவாகி இருக்க.., உள் புகைச்சல்கள் வெளியே தெரிய வாய்ப்பின்றி அமுங்கி விட்டது.  
அடுத்தடுத்து வரதராஜனின் அந்திம காரியங்களை கவனிக்கவென ஆஷுதோஷ் ஏற்பாட்டின் படி புரோகிதர் வந்துவிட, மளமளவென செயல்கள் நடந்தேறியது. 
வரதராஜனின் உடல் மின்மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட, அவரது வாரிசுகள் நால்வரோடு ஆஷுவும், வரதராஜனின் பால்ய நண்பர்கள் சிலரும் உடன் வந்தனர்.  அனைத்தும் முடித்து வீடு திரும்ப இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆனது. 
நேற்று இரவிலிருந்து கண் மூடாமல் பிரயாணம் செய்து வந்த களைப்பு மஹதிக்கு மேலோங்க, “எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு, குளிச்சிட்டு படுக்கறேன், அப்பறம் பாக்கலாம்”,என்று பொதுவாக அனைவர்க்கும் சொல்லிவிட்டு நேரே அவளது அறைக்குச் சென்று விட்டாள். 
மஹதி சென்றதுதான் தாமதம், பார்கவி தம்பியோடு தாய் வீடு சென்றுவிட, 
மஹதியுடன் பேசவேண்டும் என்று நினைத்த சுந்தர், அவள் படுக்கப் போகிறேன் என்று சொன்னதும், நேரே ஆஷுதோஷிடம், “நா சாயங்காலம் இல்லேன்னா நைட் வர்றேன்”, என்று தகவல் தெரிவித்து விட்டு,, ரங்கராஜனின் அறைக்குச் சென்று தம்பியிடம், “இன்னும் நீ மஹிட்ட சொல்லலியா?”,என்று கேட்டான். 
“இல்ல டைம் கிடைக்கல, அதுவுமில்லாம இபோ அது முக்கியமுன்னு எனக்குத் தோணல”
“உனக்கு எதுதான்டா முக்கியமா பட்டிருக்கு?”,என்று ரங்கராஜனை திட்டிவிட்டுச் சென்றான் சுந்தர். 
பூர்ணா வீட்டிற்கு மூத்தவளாக வந்திருந்த சொந்தங்களின் தேவைகளை பார்த்துக் கொண்டாள். 

Advertisement