Advertisement

நீயொரு திருமொழி சொல்லாய்

அத்தியாயம் 19

ஆஷுதோஷ் குடும்பத்தினர் மறுநாள் அதிகாலை இரண்டு மணிக்கு அனந்தபூர் சென்றதும் ஆரத்தி எடுத்து மணமக்களை உள்ளே அழைத்த சாம்பவி, முதல் வேலையாக “மஹதி, நீ முதல்ல ப்ரெஷ் அப் பண்ணிட்டு வா”, என்று மருமகளிடம் சொன்னார்.

பின் மகளிடம், “சின்னும்மா, எதிர் கடைல பிரெட்டும் பாலும் வாங்கிட்டு வாடா”, என்று கடைக்கு அனுப்பினார்.

ஆஷு அவனது அறையை ஒழுங்குபடுத்த சென்றிருந்தான். அவன் பல் தேய்த்து முகம் திருத்தி வரும்போது அந்த வீடு மதிக்கு பழகிய வீடாகி இருந்தது. இரண்டு பெரிய படுக்கையறையும், விசாலமான கூடமும், நேர்த்தியாக கட்டப்பட்ட அடுக்களையும் கூடவே நிறைய அன்பும் பாசமும் இழையோடிய வீடு.

அத்தையின் சொல்படி காலை மிதமான உணவு எடுத்துக் கொண்டு படுத்தவள்தான், எழுகையில் மதியம் மூன்று மணி ஆகி இருந்தது. அதுவும் சாம்பவி எழுப்பியதால்தான். 

“மஹி..மஹி”

“ஹ்ம்ம்”, தூக்கக் கலக்கத்தில் எழுப்புவது யார் என்று தெரியாமல் மஹதி நெளிய..

“எதுவும் சாப்பிடாம தூங்கிட்டே இருக்கப்பாரு எழுந்துக்கோ”, என்றார் சாம்பவி.

மெல்ல கண் விழித்த மஹதி, மசமசவென்றிந்த அறை வெளிச்சத்தில் (ஜன்னல்கள் திரைச்சீலை கட்டியிருந்தது) கண்களால் கணவனைத் துழாவினாள். அவனைக் காணாததால் சட்டென ஒரு வெறுமை தோன்ற, “அவர் இல்லையாத்த?”, என்று கேட்டவாறு எழுந்து அமர முயற்சித்தாள். ஆனால் அவளது உடல் நிலை ஒத்துழைக்க மறுக்க தலை கிறுகிறுவென சுற்றியது. 

இயலாமையால் தலையணையில் மீண்டும் சாய்ந்து கொள்ளப் போன மனைவியை, அவள் பின்னால் நின்ற ஆஷுதோஷ் இரண்டெட்டில் அவளருகே வந்து தாங்கிப் பிடித்து, “இங்கதான் இருக்கேன்”, என்றான். இருவரிடையே தான் எதற்கு நந்தி போல என்று நினைத்தாரோ என்னவோ சாம்பவி மெல்ல அறையை விட்டு வெளியேறினார். 

தான் வந்து தாங்கிக் கொண்டதும் நிமிர்ந்து அவனது  முகம் பார்த்து சோர்வான சிரிப்பை உதிர்த்த மனையாளை பார்க்கையில், ராஜ் இறந்த செய்தி கேட்டு தனி விமானத்தில் லண்டனில் இருந்து நேரடியாக கோவை வந்து இறங்கிய மஹதி.., அவள் அன்று துக்கத்தோடு இருந்த போதும் துடிப்பாக இருந்தது ஆஷுவின் நினைவுக்கு வந்தது. 

இவளை மிகவும் அலைக்கழிக்கின்றோமோ? என்ற எண்ணம் அவனுக்குக்கு தோன்ற, ‘ஹ்ம்ம். இரண்டு நாட்களுக்கு முன் மருதமலையில் திருமணம், மாலையே வரவேற்பு, உடனே நாஞ்சில் பிரயாணம். குலதெய்வக் கோவில் நேர்த்திக்கடன், பின் அங்கிருந்து ரயிலில் அனந்தபூர்..’, என்று வரிசைக் கிரமமாக அலைச்சல் ஞாபகம் வந்தது. 

‘ஏறினால் விமானம், இறங்கினால் கார்’ என்று இருப்பவளை பேருந்து, ரயில் என்று என் வாழ்க்கை முறைக்கு இழுக்கிறேனோ?’, யோசித்தவனுக்கு இருவரின் அந்தஸ்து பேதம் புரிய பெருமுச்சொன்று தானாக எழும்பியது. எப்போதும் தன் படிப்பையும் அறிவையும் அளவுகோலாக வைத்து பழகியவனுக்கு வசதி ஒரு பொருட்டாக இருந்ததில்லை.

ஆனால் மனைவியின் வாழ்க்கை முறை பற்றி தெரிந்தவனாதலால்  அவனையுமறியாது மஹதியை வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். குனிந்து ஆறுதல் சொல்வது போல, “ஜஸ்ட் இன்னும் ஒரு வாரம், கோவைக்கு போயிடலாம்டா”, என்றான்.

அவன் கவலையான முகம் பார்த்து புன்சிரிப்புடன் கணவனை அணைத்துக் கொண்ட மஹதி, “ம்ப்ச். இதுவும் நல்லாத்தான் இருக்கு. நா இவ்ளோ லாங் டிஸ்டன்ஸ்-லாம் சர்ஃபேஸ் ட்ராவல் பண்ணினதே இல்ல தெரியுமா?”, என்றாள்.

“ஹ்ம்ம். உங்கப்பா உனக்கு இந்த சிக்னஸ் இருக்குன்னு தெரிஞ்சிருந்தா,  ரெண்டு சாப்பர் (ஹெலிகாப்டர்) வாங்கி நிறுத்தி இருக்க மாட்டார்?”, என்று பதில் கேள்வி எழுப்பினான். ஆஷுவின் கேள்வியில் சிரிப்பும் கேலியும்  இழையோடினாலும், அதில் வருத்தமும் பொதிந்து இருந்தது. 

கேள்விக்கு பதில் சொல்லும் முன் அவனை இன்னமும் இறுக கட்டிக்கொண்ட மதி, “எனக்குப் பிடிச்சிருக்கு ஏட்டி.”, என்று அண்ணாந்து அவனது முகம் பார்த்து சொன்னாள். நன்றாக ஓய்வெடுத்ததில் அன்று மாலையே மஹதி சரியாகிவிட, சாம்பவியின் சுற்றங்கள் வந்து பார்த்துச் சென்றனர்.

அனந்தபூரில் ஆஷு மஹதி இருவருக்கும் நேரம் இறக்கை கட்டி பறந்தது எனலாம். ஆஷு படித்த பள்ளி துவங்கி அவன் விளையாடிய மைதானம், இன்றுவரை தொடர்பில் இருக்கும் நண்பர்கள் குழாம், அவன் வியந்து பார்த்த க்ளாக் டவர், சிறு வயதிலேயே அவனுக்கு அறிவியலில் ஆர்வம் வர காரணமான மாவட்ட அறிவியல் அருங்காட்சியகம், மாதமொரு முறை சுற்றுலா போல, நீலகண்டன் குடும்பம் அவ்வப்போது சென்று வரும் சிவகாமேஸ்வரி கோவில் என்று சுற்றிப்பார்க்க அத்தனை இடங்கள் இருந்தது. 

இவற்றை தவிர, ரங்கா ஏ எம் சி எடுத்து நடத்தும் சுரங்கத்தையும் ஒருமுறை பார்வையிட்டு வந்தார்கள். ரங்கா, மஹதி இருக்கும்போது இரண்டு முறை ஆஷுவின் வீட்டுக்கு வந்தான். அரைமணி நேரம் ஒரு மணி நேரத்துக்கு மேல், “நா கிளம்பறேன், அங்க சைட்-இன்ச்சார்ஜ் என்ன பண்றானோ?”, என்று  பறந்து விடுவான்.

இந்த ஒரு வாரத்துக்குள்ளாக மஹதியின் எளிமை சாம்பவிக்கு பிடித்துப்போக, அவளது ‘ஏட்டி’ என்ற விளிப்பு மட்டும் அவரை புருவம் சுருக்க வைத்தது. “ஏன்ட்ரா.. நின்னு ஏட்டி அனி பிலுஸ்துந்தி?’ என்று ஆஷுவிடம் கேட்க..  “அது.. இவர் சிக்னேச்சர் போடும்போது  ஏ-வும் டி-யம் வித்தியாசமா இருந்ததால அப்படி கூப்பிட ஆரம்பிச்சேன். தென் அப்படியே பழகிடுச்சு”, என்று தயங்கியவாறு மஹதி பதில் சொல்ல.. 

இடையிட்ட ஆஷு, “ஏன்? நீ அப்படி கூப்பிட்டா என்ன? வேணும்னா அவங்க வீட்டுக்காரரை மாத்திக்க சொல்லட்டும்”, என்று நமுட்டுச் சிரிப்போடு சொன்னான் ஆஷு. 

சாம்பவி ஆ என்று பார்த்து, “முப்பது வருஷமா உங்கப்பா அப்படிதாண்டா கூப்பிடறாரு. அவரு மாத்திக்கணுமா?”, என்று அங்கலாய்த்தார். 

சாம்பவியின் முக பாவனை மதிக்கு சிரிப்பை வர வரவழைக்க, ஆஷு அன்னையை மேலும் வெறுப்பேற்ற, மேஜையில் தாளம் போட்டபடி, “யம்மோவ். இனிமே அப்பா ஏட்டின்னு கூப்பிட்டா நான்தான் எட்டிப்  பாப்பேன்னு சொல்லுங்க. அடுத்த செகண்ட் மாத்திப்பார்”, என்றதும், வராண்டாவில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த நீலகண்டன், திரும்பி ஆஷுவை முறைக்க.., மஹதி சாம்பவி உட்பட அனைவரும் சிரித்தனர்.

அன்று இரவு ஓய்வான சமயத்தில், கணவன் நீலகண்டனிடம்,  “உங்க புள்ள உங்களுக்கு மேல இருப்பான் போல. ஒரு வார்த்த, அவ்ளோ ஏன் ஒரு பார்வ கூட அவன் பொண்டாட்டிய பாக்க விட மாட்டேங்கிறான். உடனே வரிஞ்சு கட்டிட்டு சப்போர்ட்டுக்கு வந்துடறான்”, என்று சாம்பவி சொன்னார்.

“பொண்ணு நல்ல பொண்ணுதான் இல்ல? எதுன்னாலும் அவன் முகம் பாத்து செய்யறா”, என்று மருமகளுக்கு புகழாரம் சூட்டினார் நீலகண்டன். 

சாம்பவி ஏற்பாடு செய்திருந்த கெட் டு கெதர் அன்று, அம்மாவுக்கும் தங்கைக்கும் தான் எடுத்து வைத்திருந்த நகை செட்-டை பரிசளித்தான் ஆஷு. 

“எப்படா எடுத்த? எங்கிட்ட சொல்லவேயில்ல?”, என்று கேட்ட அன்னையிடம் “தாலி வாங்கறதுக்கு நகைக்கடைக்கு போனேன்ல்ல? அப்ப மூணு செட் ஜுவல்ஸ்., உனக்கு ஆன்ட்டிக் செட், மதிக்கு லைட் வெயிட், சின்னுக்கு ஹாரம் செட் வாங்கினேன். கோயம்புத்தூர்லயே குடுத்துருப்பேன், அத்தை இருந்தாங்க. அதுலயும் ஏதாவது  குறை கண்டுபிடிச்சு இருப்பாங்க. அதான் தரல”, என்றான்.

“எவ்ளோடா ஆச்சு? இப்ப எதுக்குடா?”, என்று வாய் சொன்னாலும் ஆஷு கொண்டு வந்த மஹாலக்ஷ்மி பதக்கம் வைத்த டெம்பிள் கோல்ட் நகையின் வேலைபாடு அவருக்குப் பிடித்திருந்தது. 

“கேள்வில்லாம் கேக்காதம்மா.. பிடிச்சிருக்கா சொல்லு?”

“ம்ம். நல்லாருக்கு. ஆனா, இது சின்னு கல்யாணத்துக்கு இருக்கட்டும். இப்ப எனக்கெதுக்கு நகை?”

“ம்மா. அவளுக்கு எப்ப என்ன தேவையோ நா செய்யறேன். இத நீ போட்டுக்க”, என்று அதட்ட.. அந்த பேச்சு அப்போது முடிந்தது.

மதி தனக்குத் தேவைப்படும் என்று கோவையிலிருந்து புறப்படும் போதே இரெண்டு செட் நகை எடுத்து வந்தாள். அதில் ஒன்று ஆஷு வாங்கித் தந்த நகை செட். 

சாம்பவி & நீலகண்டன் ஏற்பாடு செய்த விழாவில் கலந்து கொண்ட மஹதி ஆஷு வாங்கிதைத்தான் அணிந்து கொண்டாள். அதில் அஷுவுக்குப் பெருமையோ என்னவோ தெரியாது சாம்பவிக்கு அவ்வளவு நிறைவு.

தவிர, விழாவுக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் பேராசிரியர்கள் மற்றும்  விரிவுரையாளர்கள் அல்லவா? இவளது படிப்பு மற்றும் ஆராய்ச்சி பற்றி கேட்க, மஹதி மடை திறந்த வெள்ளம் போல அவளது ஆராய்ச்சி மற்றும் கட்டுரை குறித்து விளக்கி பாராட்டுதலைப் பெற்றாள். 

மதி இவ்வளவு இயல்பாய் இங்கே அவர்கள் வீட்டில் பொருந்தி விட்டாளே என்று ஆஷுவுக்கே ஆச்சர்யம்.

அன்றிரவு உணர்வுகள் பரிமாறி களைத்திருந்த தருணத்தில், தன் சரிபாதியிடம் தனது சந்தேகத்தைக் கேட்டான் ஆஷு. “எப்படி இங்கே இவ்ளோ ஈஸியா மிங்கிளாயிட்ட? வீடு சின்னது, பிரைவசி இல்ல, நினைச்ச நேரத்துல சாப்பிட தூங்க முடியாது..”

என்று அவன் சொல்லிக்கொண்டே போக, அவன் தோள் வளைவில் தலை வைத்திருந்த மதி, “ம்ப்ச்”, என்று சொல்லி மறுப்பாக தலையசைத்து அவன் வாயை மூடினாள்.

“இல்லடா, உன் வீடு பத்தாயிரம் ஸ்கொயர் ஃபீட், இந்த வீடு ஒரு கிரௌண்ட் இருக்கும். அதுவும் நைன் ஹண்ட்ரட் ஸ்கொயர் ஃபீட் கட்டி இருப்பாங்க.  எப்படி அட்ஜஸ்ட் பண்ணிக்கற?” 

“உங்கம்மா”, என்று ஒற்றை வார்த்தையில் காரணம் சொன்னாள்.

“???”

“பேச்சுத் துணைக்கு யாரவது இருந்தா போதும்ன்னு நீ எப்போவாவது நினைச்சிருக்கியா?”, கேட்டாள்.

இல்லை என்பது போல தலையசைத்த ஆஷுவிடம், “அந்தக் குறைய எந்த ஹெலிகாப்டரும் லெவல் பண்ணாது தெரியுமா?”, என்றாள். அனந்தபூர் வந்த அன்று மஹதியின் தந்தை ராஜ்.. அவளுக்கு பேருந்து / ரயில் பிரயாணம் ஒவ்வாது எனத்  தெரிந்திருந்தால், ஹெலிகாப்டரே வாங்கி தந்திருப்பார் என்று தான் சொன்னதற்கு, இத்தனை நாள் கழித்து மறுமொழி சொல்லும் மதியை வித்தியாசமாக பார்த்தான்.  

“ம்ம்.”, என்று அவன் தோள் சாய்ந்தவள், “உங்கம்மா கடுகடுன்னு பேசினாலும், பேசிட்டேதான் இருப்பாங்க. அண்ட் பேசிக்கலா நல்லவங்க.”

“உனக்கே தெரியும்.. ரேவா வீட்ட பொறுத்தவரைக்கும் நா முக்காவாசி நேரம் என்னோட ரூம்லதான் இருப்பேன்.டைனிங்-க்கு கூட யாராவது கம்பெனி இருந்தாத்தான் கீழ வருவேன். ஆனா இங்க நம்ம வீட்ல சாப்பிடறது எப்பவும் சேர்ந்து தான் சாப்பிடறோம். இங்க யார் எங்கேருந்து பேசினாலும் எல்லாருக்கும் கேக்கும். ஹ்ம்ம். வேற என்ன சொல்றது? இங்க ஒரு லைவ்லினஸ் இருக்கு”

“வீடு சின்னது சொன்னல்ல? உனக்குத் தெரியுமா? லண்டன்-ல நா இருந்தது சிங்கிள் பெட்ரூம்  அபார்ட்மெண்ட்தான். பத்தாயிரம் ஸ்கொயர்ஃபீட்டோ தொள்ளாயிரம் ஸ்கொயர்ஃபீட்டோ.. வீடு வீடா இருக்கறது அங்க இருக்கற மனுஷங்கள பொறுத்தது. ஐயம் ஹாப்பி இன் திஸ் அட்மாஸ்பியர்.”

மதியின் வார்த்தைகள் அவள் சிறுவயதில் எதிர்கொண்ட தனிமையை விவரிக்க.. மனைவியை ஆதூரமாக அணைத்துக் கொண்டவன், “நமப லஃப்ல இந்த  அட்மாஸ்பியர் எப்பவும் இருக்கும்டா.  ஐ வில் பி தேர் ஃபார் யூ ஆல்வேஸ்”,  என்றான் உளமாற, இன்னும் சில மாதங்களில் அவளை விட்டுப் போகப் போவதை அறியாமல்.

“எஸ். ஐ நோ தட், இல்லன்னா நா சும்மா விட்டுடுவேனா?”, என்று சிரித்தாள்.

மனைவியின் குறும்பான பதிலைக் கேட்டு மனம் மகிழ்ந்த ஆஷு கலைந்து கிடந்த மனைவியை இன்னமும் கலைக்க விருப்பம் கொண்டான்.

)))))))))))))

இதோ ஆயிற்று. ஆஷுதோஷ் மஹதி திருமணம் முடிந்து  இரு மாதத்திற்கும் மேல் கடந்திருந்த நிலையில். முன்போல் அவரவர் அவரவர் வேலைகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர். அனந்தபூரில் இருந்து கோவை வந்த மறுதினமே ஆஷு அலுவலகம் செல்ல ஆரம்பிக்க, மறு வாரத்தில் இருந்து மஹதியும் அவள் பணியை துவக்கினாள்.

இந்த முறை மஹதிக்கு அட்மின் எனப்படும் அலுவலக வேலைகளை மட்டுமல்லாமல், ஆஷு தனது உற்பத்திப் பிரிவினை பற்றி கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான்.

முன்பிருந்த இயந்திரங்கள் என்றால் மதிக்கு ஓரளவு பரிச்சயமானவை. காரணம், அப்பாவோடு பேசும்போது இயந்திரங்கள் பற்றியும் பேசுவார்கள்.

ஆனால் இப்போது தயாராகும் இயந்திரங்கள் மற்றும் கைவசமிருக்கும் ஆர்டர்கள் அனைத்துமே ஆஷுவின் புதிய தயாரிப்பு அல்லவா? அது பற்றி அவனைத் தவிர வேறு யாருக்கும் ஒன்றும் தெரியாதே? 

சொல்லப்போனால் விற்பனைப்பிரிவு தலைமையில் இருக்கும் ரங்காவுக்குக் கூட இதன் விபரங்கள் தெரியாது. ஏனென்றால், இந்த ஆர்டர்கள் அனைத்துமே  ஜெர்மனியில் நடந்த இயந்திர கண்காட்சியின் மூலம் கிடைக்கப் பெற்றவை. 

எனவே இந்த இயந்திரத்தின் திட்டமிடலில் ஆரம்பித்து வரைபட தயாரிப்பு, உற்பத்தி பொருள் கொள்முதல் என்று அனைத்தும் மஹதிக்கு சொல்லிக் கொடுத்தான். 

கிரீஸிட்ட இயந்திரம் போல வாழ்க்கை ஒரே தாள கதியில் செல்கையில்., ஒரு நாள் அதிகாலை ஆஷுவுக்கு ரங்காவிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது.

“ஆஷு, கொஞ்சம் கீழ ஹாலுக்கு வர்றியா?”, என்று கேட்டான்.

உறங்கும் மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ரங்காவைப் பார்க்கச் சென்றான் ஆஷுதோஷ்.

“சொல்லுங்க ரங்கா”, என்று கேட்டபடி கூடத்தை அடைந்தவன், அங்கே நீலோத்பவியைக் கண்டதும் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.

Advertisement