Advertisement

அத்தியாயம் 18 2
மறுநாள் காலை எட்டு மணி வாக்கில் நாகர்கோவில் சென்றடைந்தவர்கள், முன்பே பதிவு செய்யப்பட்டிருந்த அறைகளில் குளித்து முடித்து, தங்களை சுத்தம் செய்து கொண்டார்கள். அப்போது சுந்தர்ராஜனும் வந்து சேர்ந்து கொள்ள, நேரே கோவில் சென்றனர். 
கேரளா அருகில் இருந்ததாலோ என்னமோ வனமாலீஸ்வரர் கோவில் முற்றிலும் கேரளா முறைப்படி கட்டப்பட்டிருந்தது. உள்ள்ளூரில் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்தாலும், அளவில் சிறியது. கோவிலின் உள்ளே ஈஸ்வரர் மற்றும் சரஸ்வதி சன்னிதானம் மனதிற்கு சொல்லொணா அமைதியை தந்தது. சளசளவென பேசும் திலகாவின் அன்னை கூட அமைதியாக ஈசனை சரணடைந்து இருந்தார். 
அன்றைய தினத்திற்கான கோவில் கட்டளை நீலகண்டன் குடும்பத்தினருடையது  என்பதால், எம்பெருமான் ஈஸ்வரனுக்கு அபிஷேகம் பூஜை அனைத்தும் இவர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், பிள்ளைகள் கூட அமைதியாக அமர்ந்து பார்த்து ரசித்தனர். 
அத்தை வீடு அங்கிருந்த போதும், குடும்பத்தினர் தங்கி இளைப்பாற ஹோட்டலில் அறைகள் ஏற்பாடு செய்திருந்தான்  ஆஷுதோஷ். மதிய உணவினை முடித்து சற்று நேரம் ஓய்வெடுத்து மாலை நாகராஜா கோவிலுக்குச் சென்று வந்தார்கள். காரணம் மறுநாள் அதிகாலையில் தான் அனந்தபூர் செல்லும் தொடர்வண்டி இருந்தது. இரவு கோவில் வளாகத்திலேயே அத்தை வீட்டு சொந்தங்கள் அனைவரும் விடைபெற, சுந்தராஜனும் பார்கவி மற்றும் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு கோவை செல்வதாக ஆஷுவிடம் தெரிவித்தான். 
ஆஷு சரியென்றதும் சுந்தர் குடும்பத்தோடு புறப்பட்டு விட, சாம்பவி நீலகண்டனிடம், “க்கும். பொண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பும்போது கூட வரணும்ங்கிற சம்ப்ரதாயம் கூட தெரில. என்ன குடும்பமோ?”, என்று நொடித்தார். தனிமையில்தான்.
“அவங்கவங்களுக்கு என்ன அசௌவுகரியமோ? ஏன் எல்லாத்தையும் பெரிசு பண்ற?”, என்று கண்டித்தார் நீலகண்டன்.
பெண்கள் முவரும் ஒரு அறையை பகிர்ந்து கொள்ள, ஆஷுவும் அவனது தந்தையும் ஒரு அறையில் உறங்கினர்.
மதிக்கு மறுநாள் ரயில் நிலையம் புறப்படும்போதுதான், அவள் வாங்கி வைத்த எலுமிச்சை பழங்கள் அண்ணியின் கைப்பையோடு போய் விட்டது தெரிந்தது. நான்கு மணிக்கு எந்த கடை திறந்து இருக்கும்? எங்கே சென்று பழங்களை வாங்குவது என்று அரண்டு போய் நின்றாள் மஹதி. காரணம்  மதிக்கு சிறுவயதில் இருந்தே ரயில் பயணம் ஒத்துப்போகாது. அப்படி மீறி பிரயானித்தால், அரைமணிக்கு ஒருமுறை வயிற்றை பிரட்டி வாந்தி எடுப்பாள். பால் உட்பட எந்த உணவும் எடுத்துக் கொள்ள இயலாது.
ஹோட்டல் அறையில் இருந்து வெளியே செல்ல ஆயத்தமாக இருந்த சாம்பவி, “என்ன இன்னும் தேடிட்டு இருக்க? கிளம்பலையா?”,என்று கேட்க..
‘இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது?’ என்ற யோசனையோடு, “யா. இதோ..”, என்று தனது பெட்டிகளோடு புறப்பட்டு விட்டாள்.
இவர்களுக்கு முன்பதிவு செய்திருந்த டூ டயர் ஏ சி கம்பார்ட்மெண்ட் டிக்கெட்டுகளில் ஒன்று மட்டும் இரண்டு பெட்டிகள் தள்ளி பதிவாகி இருக்க, தந்தையை அலைய விட வேண்டாமென்று ஆஷுதோஷ் அங்கே சென்றான். யாரிடமாவது சொல்லி இருக்கை மாற்றிக்கொண்டு வருகிறேன் இல்லையென்றால் டிடிஈ வந்தபின் அவரிடம் கேட்டு இருக்கை மாற்றிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லி சென்றிருந்தான்.
மஹதி எதிர்பார்த்தாற்போல ரயில் ஏறிய அரை மணி  நேரத்துக்குள்ளாக, அவளது உடல் கோளாறு செய்ய.., ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை கழிவறை சென்று வந்தவளை பார்த்த சாம்பவி, “என்ன பண்ணுது?”, என்று கேட்டார்.
“எனக்கு ட்ரெயின் ட்ராவல் ஒத்துக்காது. லெமன் இருந்தா ஓரளவு சமாளிக்கலாம். நேத்தே வாங்கி வச்சிருந்தேன். ஆனா அது அண்ணி பேக்-ல போயிடுச்சு”, என்றாள்.
“ஆஷுக்கு தெரியுமா?”
“எது?”,லெமன் அண்ணி பையோடு போனதா? இல்லை எதை குறித்து கேட்கிறார் என்பது புரியாமல் மஹதி கேட்டாள்.
“உனக்கு ட்ராவல் சிக்னெஸ் இருக்குன்னு அவனுக்கு தெரியுமா?”
மஹதி, இல்லையென்பது போல தலையசைத்தாள்.
“சரி.. எங்கிட்ட சொல்லியிருக்கலாம்தான?”
“…”
“என்ன? கேக்கறேன் பதிலை காணோம்? இவகிட்டல்லாம்  எதுக்கு சொல்றதுன்னு நினைப்பா?”, என்று சாம்பவி அதிகாரமாக கேட்க..
‘இவங்க நம்மள மிரட்றாங்களா?’ என்று யோசனையாக தனது மாமியாரைப் பார்த்த மஹதி, “இல்ல. பழக்கமில்ல”, என்றாள்.
“அப்டின்னா?”
அமைதியாக, “என் பிரச்சனைய யாருக்கும் சொல்லி பழக்கமில்லை, இந்த சிக்னஸ் பத்தி எங்க அண்ணிக்கு கூட தெரியாது”, என்றாள் மஹதி.
“ஏன்?”
“இல்ல சின்னப்போலேர்ந்து ஹாஸ்டல்ல இருந்தேன். அப்படியே பழகிடுச்சு”,என்றாள்.
“ஓ!..”, என்று ஒருமுறை அவளை ஆழமாகப் பார்த்த சாம்பவி, “இனிமே எதுவாயிருந்தாலும் சொல்லணும்”, தன்னை காண்பித்து, “என்கிட்ட.. இல்லைனா உன்னைக் கட்டினானே அவன்கிட்ட”, “சரியா?”, என்றார்.
ஒரு ஆசிரியர் மாணவனை மிரட்டுவது போலவே இருந்தது சம்பவியின் செய்கை. எனவே மஹதி, “ம்ம்”, என்று எல்லா பக்கமும் தலையசைத்து ஆமோதித்தாள்.
அடுத்து, “இங்க உட்காரு”, என்று மஹதிக்கு சொல்லி, அருகே அமர்ந்திருந்த மகளிடம், “சின்னு, தேடிப் பாத்தியா?”, என்று  கேட்டார்.
“பைல தேடிட்டேன்மா, லெமன் இல்ல”, என்றாள் நீலோத்பவி aka சின்னு.
“சரி. நாங்குநேரி வரும்போது நல்ல வெளிச்சம் வந்துடும்.ஸ்டேஷன் வந்தா வெளிய பாத்துட்டே வா. அப்படியே இல்லேன்னாலும் தின்னவேலில பாத்து வாங்கிடலாம்”,என்ற சாம்பவி, கணவனிடம், “வண்டி அங்க அஞ்சு நிமிஷம் நிக்குமில்லீங்க?”, கேட்டார்.
நீலகண்டன், “ம்ம்”, என்று மனைவியை ஆமோதித்தார். அப்போதுதான் ஆஷுவின் முன்கோபம் சாம்பவியின் கொடை என்று மஹதி புரிந்து கொண்டாள்.
சில கவர்களையும், டிஷ்யூவையும் குடுத்து, “வாமிட் வந்தா இதுல எடு, இல்ல பாத்ரூம் போகணும்ன்னா சொல்லு, நான் கூட வர்றேன். என்ன?”, என்று மஹதியை ஜன்னலுக்கு அருகே படுக்கச் சொன்னார் சாம்பவி.
சிறிது நேரத்தில் இருக்கையை வேறு ஒருவரிடம் மாற்றிக்கொண்டு வந்த ஆஷுதோஷிடம், “ஏன்டா, அவளுக்கு ட்ராவல் சிக்னஸ் இருக்கறது கூட தெரியாம, டிக்கெட் புக் பண்ணி இருக்க?”, என்று சண்டை பிடித்தார்.
மஹதிக்கோ, “இல்ல அவருக்கு தெரியாது”, என்று சொல்லக்கூட தெம்பில்லை. தவிர எழுந்தால் திட்டுவாரோ என்று எண்ணமும் வர அமைதியாக கண்ணை மூடிக்கொண்டு படுத்திருந்தாள்.
அவனுக்கென்ன தெரியும்? திருதிருவென்று விழித்து மஹதியைப் பார்க்க, அல்லித்தண்டாக துவண்டு இருந்தாள். “எனக்குத் தெரியாதுமா”,என்றான் பாவமாக.
“தெரிஞ்சிக்கணும். டிக்கட் புக் பண்றத்துக்கு முன்னாடி அவ கிட்ட கேட்டிருந்தா சொல்லி இருப்பா-ல்ல?”, முறைத்தார்.
இப்போது மு(கு)றைப்பது ஆஷுவின் முறை. “எனக்கு எங்க நேரமிருத்தது சொல்லுங்க?இதுக்குத்தான் உங்கள முன்னாலேயே வர சொன்னேன். செஞ்சீங்களா?  அடிலேர்ந்து நுனிவரைக்கும் எல்லாம் நானே பாக்கனும்னா நீங்கல்லாம் எதுக்கு? இதுல அது சொள்ளை, இது சொட்டை, ஏன் கேக்கல? எதுக்கு தெரிஞ்சிக்கலைன்னு தொணதொணன்னு ஆயிரத்தெட்டு கேள்வி வேற”, ஆஷு இதுவரை அடக்கி வைத்திருந்த ஆதங்கம் வெடித்துக் கிளம்பியது.
“சரிடா, இதுவரைக்கும் தெரிலைன்னா பரவால்ல, இனிமே தெரிஞ்சிக்கோ. அடுத்த ஸ்டேஷன்-ல லெமன் கிடைச்சா வாங்கு. இல்லியா லெமன் பிளேவர் ட்ரிங்க்ஸ் ஏதாச்சும் கிடைக்குதா பாரு. அப்டியே தின்னவேலி ஜங்ஷன் வந்தா, மோஷன் சிக்னஸ் மருந்து வேணும்னு மெடிக்கல்ஸ்-ல கேட்டு வாங்கிட்டு வா. சரியா?”, ஒருவழியாக சாம்பவி சமாதானமாகி மலையிறங்கினார்.
அது மட்டுமல்ல, மஹதிக்கு மருந்து வரும் வரை சாம்பவி அவளை தனியாக பாத்ரூம் கூட அனுப்பவில்லை. திருநெல்வேலியில் மாத்திரை கிடைக்க, அதை மஹதிக்குத் தந்து, வாந்தி நின்ற அரைமணி நேரம் கழித்து இலகு உணவாக இட்லி சாம்பார் தந்து அவள், “சரியாயிருச்சு”, என்று சொல்லி படுத்துக் கொள்ளும் வரை சாம்பவியும் தூங்கவில்லை.
இதையெல்லாம் பார்த்த ஆஷுதோஷ் தந்தையிடம்,  “ஏம்ப்பா, இவங்க நல்லவங்களா? கெட்டவங்களா?”, கேட்டான்.
இதைக் கேட்ட மஹதிக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவருக்குமே சிரிப்பு வந்தது. சாம்பவி,”டேய்..”, என்று மிரட்டலாக மகனிடம் எதோ சொல்ல வர..
அதற்கு முன்பாக, “தெரிலையேப்பா, தெரிலையே”, என்று சிவாஜிகணேசன் ஸ்டைலில் நீலகண்டன் பதிலுரைக்க, சாம்பவி உள்பட அனைவரும் வெடித்துச் சிரித்தனர்.

// ஒருமுறை கூட எபி ய படிச்சு பாக்கல. தப்பிருந்தா சொல்லுங்க தோழமைகளே…

அப்பறமா கரெக்ஷன் பண்ணிடறேன். //

Advertisement