Advertisement

அத்தியாயம் 18 1
மஹதியும் ஆஷுவும் காதலிக்கிறார்கள் என்று முரளிக்குத் தெரிய வந்தபோது, ‘அப்பாடா, தப்பிச்சோம்’ என்ற எண்ணமே அவனுக்கு பிரதானமாக வந்தது. 
தப்பித்தவறி மஹதியோடு திருமணமானால்.. அவளோடு ஒரு மேலதிகாரி என்ற மனோபாவத்தோடுதான் பழக முடியும் என்ற அச்சத்தில் இருந்தவனுக்கு இவர்கள் காதலர்கள் என்று தெரிந்ததும் ஒரு வித விடுதலை உணர்வு தோன்றியதென்னவோ நிஜம்.  
‘ஆஷுதோஷ் சாதாரண சம்பளம் வாங்கும் வேலைக்காரன் என்று அன்று  எதேச்சையாக சொன்னபோது எத்தனை அழுத்தமாக பதில் சொன்னாள்? அப்போதே இவர்களுக்குள் இருக்கும் புரிதலை கோடி காண்பித்தாள் போல’, என்றெண்ணினான் முரளி. 
அடுத்தொரு (இன்ப?) அதிர்ச்சியாக.., முரளிக்கு சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் ஒரு முக்கிய காரணம். வாய்ப்பு உபயம், ரேவாவின் வெற்றி விழா கொண்டாட்டம்  + தயாரிப்பாளர் சுந்தர்ராஜன். 
ரேவாவின் விழா மேடையில்  இவனது நடிப்புத் திறமையை பார்த்த சுந்தர்ராஜன், அவனுக்குத் தெரிந்த இயக்குனர் ஒருவருக்கு முரளி நடித்த காணொளியைப் போட்டுக் காட்ட, இவனது உடல் மொழியும் நகைச்சுவை உணர்வும் அவருக்கு மிகவும் பிடித்துப்போகவே, முரளியை நேரில் ஒரு முறை வந்து பார்க்கச் சொன்னவர், பார்த்துப் பேசிய கையோடு அவரது அடுத்த படத்தின் கதாநாயகனாக  முரளியைத் தேர்வும் செய்துவிட்டார். இன்னும் பத்திருபது தினங்களில் படப்பிடிப்பு துவங்கும் என்ற செய்தியோடு. 
இத்தகவலை ஆஷுவிடமும், மஹதியிடமும் பகிர்ந்த போது, இருவரும், நம்ப முடியாத பாவனையோடு, “ரியலி?”, “நிஜமாவா?”, என்று கேட்டனர். 
“எவ்ளோ ஆக்டர்ஸ நா கிண்டல் பண்ணி இருப்பேன். நானும் மீம்ஸ் தோழர்களுக்கு கன்டென்ட் குடுக்கணும்ல?”, என்று சிரித்தான் முரளி.
சட்டென ஆஷுவுக்கு முரளியை நம்பி குடுத்த வேலை நினைவுக்கு வர, “அது சரி, நம்ம மெஷினோட சாப்ட்வேர் என்னாச்சு?”, என்று வேகமாக கேட்டான். 
“அதான பாத்தேன். எங்கடா இன்னும் சின்சியர் சிகாமணி, என்னோட வேலை பத்தி கேக்கலியேன்னு நினைச்சேன். ப்ராஜெக்ட் முடிச்சிட்டேன் ஸார். டெஸ்டிங் ப்ராசஸ் போயிட்டு இருக்கு. உங்களுக்கு ப்ராமிஸ் பண்ணிட்டு அத முடிக்காம வேற வேலை செய்ய ஓடிடுவேன்னு நினைச்சீங்களா?. ஜஸ்ட் ரெண்டு மாசம்தான் கால்ஷீட் கேட்டு இருக்காங்க. முடிச்சதும் இங்க வந்துடுவேன்”, என்றவன்.. “படம் ஹிட் அடிச்சா தொடர்ந்து அந்த லைன்-ல போயி ஒரு சி.எம். மா.. அட குறைஞ்சது ஒரு அமைச்சரா ஆயிடலாமில்ல?”, என்று சிரிக்காமல் சீரியஸாக சொன்னான். 
அதைக்கேட்ட ஆஷுவும் மஹியும் வாய்விட்டு சிரித்தனர். 
சிரிப்பினூடே, “அந்த காலமெல்லாம் மலையேறிப் போயாச்சு, இப்போல்லாம் மக்கள் தெளிவா இருக்காங்க”, என்றான் ஆஷு.
“அதென்னவோ கரெக்ட்தான். நல்லவனோ இல்லியோ.. தன் ஜாதிக்காரனுக்குத்தான் வோட்டுப் போடணும்ங்கிறதுல மக்கள் ரொம்பத் தெளிவா இருக்காங்க”, என்று மஹதி பதிலுரைக்க.. 
“ஆஹா, இதுக்கு நாம எந்த பதிலும் சொல்ல முடியாதே, எஸ்கேப்”, என்ற முரளியோடு ஆஷு மஹதி இருவருக்கும் நல்ல நட்பு  உண்டானது. 
)))))
ஆஷுதோஷ் மஹதியின் திருமணம் எளிமையாக மருதமலை முருகனின் சந்நிதியில் முடிந்திருக்க, அன்று மாலையே தடபுடலாக வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. சும்மாவா? ராஜ் குடும்ப வாரிசின் திருமணம் ஆயிற்றே? 
தவிர விழாவை ஏற்பாடு செய்தது சுந்தராஜன் முன்பாவது ரேவாவின் இயக்குனர் என்று மட்டுமே உலகுக்கு அறியப்பட்டவன். இப்போது சினிமா தயாரிப்பாளர். குறிப்பாக சுந்தர் தயாரித்து வெளியிட்ட முதல் படமே வியாபார ரீதியாக வெற்றிப் படமாகி இருக்க  கேட்கவும் வேண்டுமா?  நட்சத்திர பட்டாளத்தையே அழைத்திருப்பான் போல.. பணம் பணம் பணம்.  தண்ணீராய் செலவழிந்தது. சுருங்கச் சொல்லின், கோவை மாநகரமே கலகலத்தது. 
விழாவின் ஆடம்பரம் ஆஷுதோஷை மலைக்க வைத்தது. ஒரு புறம் காதைக் கிழிக்கும் இசை. திரைப்பாடல்கள் என்று அமளிதுமளிப் பட்டது. வரவேற்பு மேடையில் ஆடிக்கொண்டே வந்து இவர்களையும் ஆட அழைத்த சிலரிடம் நாசூக்காக மறுத்து, தலைவலி வந்ததுதான் மிச்சம்.  
அந்த விழா அரங்கில் தனது சொந்தங்கள் மற்றும் சில வயதான தம்பதிகள், சென்ற தலைமுறையை சார்ந்தவர்கள் என கொஞ்சம் பேர் ஓரமாக இந்த டாம்பீகத்தில் அயர்ந்து போய் அமர்ந்திருந்ததை பார்த்த ஆஷுதோஷ்க்கு மனம் துணுக்குற்றது. 
ராஜ் வீட்டின் வசதி ஆஷுவுக்குத் தெரியும்தான். பிரம்மாண்டமான வரவேற்ப்பாக இருக்கும் என்று ஓரளவு எதிர்பார்த்து இருந்தான்  ஆனாலும் இத்தனை ஆர்ப்பாட்டம்..? அவனுக்கு ரசிக்கவில்லை. ஆயினும் விழா நாயகனாயிற்றே? முகம் திருப்பவா முடியும்? முடிந்தவரை வந்தவர்களிடம் இன்முகத்தோடு ஓரிரு வார்த்தை பேசி சமாளித்தான். 
ஆஷுதோஷ்க்கு மட்டுமல்ல, ரங்காவுக்குமே இந்த ஆடம்பரத்தில் விருப்பமில்லை போல. அவனும் ஏனோ தானோ என்ற உடை அணிந்து வளைய வந்தான். ஆஷுதோஷின் முக சுணுக்கத்தைக் கண்ட மஹதி, ரங்காவை மேடைக்கு வருமாறு அழைத்து, “அண்ணா, இந்த பூரிக்கா எங்க? அவங்கள கூப்பிட்டு ஆஷு வீட்டு ஆளுங்க பக்கத்தில நிக்க சொல்லுங்க. மாமா (பூரிக்கா கணவர்) சுந்தரண்ணாவோட இருக்கட்டும். அப்படியே நம்ம அம்மா வீட்டு சொந்தக்காரங்களையும் இங்க வந்து இவங்களோட வந்து உக்காந்துக்க சொல்லு. உனக்கு அவங்கள நல்லா தெரியும்தான? கூட இருந்து பேசிட்டு இரு”, என்றாள். 
ஆஷு அவனது கல்லூரி நண்பர்களோடு அளவளாவியதில் மஹதியிடம் இருந்து சற்று தள்ள நிற்க.., அந்த இடைவெளியில் ரங்காவை கூப்பிட்டு மேற் சொன்னவாறு செய்யச் சொன்னாள். 
“ப்ச். இப்போ எதுக்கு இவ்ளோ போஷ்-ஷா ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணினீங்க?”, என்று கேட்கவேறு செய்தாள்.
““நா ஏற்பாடு பண்ணல மஹி, இது சுந்தர் பண்ணினது. எப்படி இருந்தாலும்  நம்ம வீட்டு பங்ஷன்னா இப்படித்தான நடக்கும்?”, என்ற ரங்கா. “ஏதாவது பிரச்சனையா மஹி?”, தங்கையின் முகக் குறிப்பறிந்து கேட்டான். 
“ப்ச். ஏட்டி வீட்ல எல்லாரும் முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்காங்க. ஏற்கனவே கோவில்ல நம்ம வீட்டு வழக்கம்னு மேரேஜ் வச்சதுக்கு முணுமுணுன்னு பேசினாங்க. நல்லவேளை கோவில்ல நடந்தாலும் அவங்க சம்பிரதாயப்படி அண்ணி எல்லாம் அரேன்ஞ் பண்ணி இருந்தாங்க. இல்ல, கோவில்லயே ஒரு சண்டை நடந்திருக்கும்.”, என்ற மஹதிக்கு கவலையும் ஆதங்கமும் சரி விகிதத்தில் இருந்தது. 
ஆஷுவின் சொந்தங்கள் அனந்தப்பூரில் இருந்து வந்து இரண்டு நாளாகிறது. இன்னமும் சாம்பவி மஹதியிடம் முகம் கொடுத்து பேசவில்லை. ஆஷுவின் அத்தை மகள் திலகா, வெட்டவா குத்தவா என்பதுபோலத்தான் இவளைப் பார்த்தாள். ஆஷுவின் தங்கை நீலோத்பவி சொல்லவே வேண்டாம், இன்னும் நேராக மஹதியின் முகம் கூட பார்க்கவில்லை. 
நல்லவேளையாக நீலகண்டன் எல்லோருக்கும் சேர்த்து வைத்து நிறைய பேசினார். ஆனால், பொதுவான ஆரோக்கியமான யாரையும் காயப்படுத்தாத உரையாடல்கள் மட்டுமே. 
திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பே கோவை வந்து எல்லா ஏற்பாடுகளையும் கவனியுங்கள் என்று அவனது பெற்றோரிடம் ஆஷுதோஷ் படித்துப் படித்து சொல்லியிருக்க, அவன் குடும்பம் வந்ததென்னமோ விருந்தாளிகள் போல திருமணத்திற்கு முதல் நாள் காலையில். அதில் அத்தை குடும்பமும் அடக்கம். 
தாமதமாக வந்ததோடு இல்லாமல், இது செய்தாயிற்றா? அது அப்படி இருக்கவேண்டுமே? என்று ஆஷுவின் அத்தை முணுமுணுத்தவாறே இருந்தார். முதலில் அவர் சொன்னதை சட்டை செய்யாமல் இருந்த ஆஷு.. திருமாங்கல்யத்தைப் பார்த்து., “நம்ம சைட் தாலி எல்லாம் ஒரு சவரன்-ல எடுக்கற வழக்கமில்லயே? ஹூம். கழுத்து வரைக்கும் காசிருக்கு. கூன் விழுந்தாலும் பரவால்லன்னு ரெண்டென்ன இருபது சவரன்ல கூட போட்டுப்பாங்க. ஹூம். நமக்கெதுக்கு வம்பு?”, என்று தம்பி மனைவியான சாம்பவியிடம் பேச.., அடுத்த அறையில் இருந்த ஆஷு எழுந்து அவரோடு மல்லுக்கட்டப் போனான்.
அவனை நீலகண்டன் தடுத்து விட, மகன் தந்தையிடம் பாய்ந்தான். “இது உங்க பையன் கல்யாணமா? இல்ல மூனாவது மனுஷன் வீட்டு கல்யாணமா? கரெக்ட்டா கெஸ்ட் மாதிரி வந்திருக்கீங்க? இதுல ஆயிரத்தெட்டு குத்தம் குறை வேற? நீங்க தாலி போட்டோ எடுத்து அனுப்பினீங்கல்ல?  இந்தனை சவரன்லதான்  எடுக்கணும்னு சொன்னீங்களாப்பா?”, என்று அவரைக் காய்ந்தான். என்ன செய்வது? அவனுக்கு அகப்பட்டது அவர்தான்.
“அக்கா ஏதோ மனசுல வச்சுட்டு பேசறாங்க, பல்லைக் கடிச்சிட்டு நாலுநாள் பொறுத்துக்க. அப்பறம் எல்லாம் சரியாயிடும்”, என்றார். 
“அதுக்குள்ள எனக்கு ஹிஸ்டீரியா வர வச்சிடுவாங்க போல”, என்று முணுமுணுத்துவிட்டு சென்றான். 
அவர்கள் சம்பிரதாயத்தில் மாப்பிள்ளை வீட்டில் செய்ய வேண்டிய எல்லா முறைமைகளையும் நீலகண்டன் ஆஷுவுக்கு சொல்லி இருக்க, அதை செயல்படுத்த ஆளில்லாமல் அனைத்து வேலைகளையும் இவனே முன்னின்று செய்ய வேண்டியதாயிற்று. நல்லவேளையாக ஆஷுதோஷ்க்கு துணையாக முரளியும், அடிபொடியாக ரேவா உற்பத்திப் பிரிவில் வேலை பார்க்கும் இருவரும் இருந்தனர்.  
நிறுவனத்துக்கு சென்று வர வசதியாக இருக்கும் என்று  ஆஷுதோஷ் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த வீட்டில்தான் திருமணத்திற்காக வந்த தனது பெற்றோர்கள் மற்றும் முக்கிய சொந்தங்களை தங்க வைத்தான். அப்போதுதான் இப்படியான வம்பு பேச்சுக்கள். 
இவற்றையெல்லாம் சமாளித்து ஒருவழியாக ஆஷு மஹதி திருமணம் நல்லபடியாக முடிந்தது. திருமணத்துக்குப் பிறகான வைபவங்கள் எல்லாம் எங்கள் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வந்த பின்பு நடப்பதுதான் வழமை என்று ஆஷுவின் வீட்டினர் முன்பே சொல்லி இருந்தனர். 
எனவே பார்கவி சாம்பவியிடம், “அம்மா இப்போ ஆஷுவும் மஹியும் எங்க கூட்டிட்டு போனும்? மஹி வீட்டுக்கா இல்ல..”, என்று தயங்கி தயங்கி கேட்டாள்.                                         
“அதென்ன அப்படி கேட்டுடீங்க? கல்யாணம் முடிச்சு நேர நாகர்கோவிலுக்குத்தான் போகணும். ஆஷு சொல்லலியா? ஆமா நீங்களும் கூட வர்றீங்கதான?”, என்று சாம்பவி பதில் கேள்வி கேட்டு பார்கவியை திகைக்க வைத்தார். 
‘ஆஷு இது பத்தி ஒண்ணுமே சொல்லலியே? ஆனால் சொல்லலைன்னு சொன்னா இந்த அம்மா எப்படி எடுத்துப்பாங்களோ?’, என்ற கவலை பார்கவிக்கு வந்தது. எதுவாயினும்  மஹதிக்கு எடுத்து கூட்டிச் செய்ய அன்னை இல்லாத போது அண்ணியாக தான் செய்ய வேண்டிய கடமையை செய்துதான் ஆக வேண்டுமல்லவா? என்று அமைதியாக இருந்தாள் பார்கவி.   
சாம்பவி கோவை வந்த அன்றே ஆஷுவிடம், “நம்ம ஊரு வனமாலீஸ்வரர் கோவிலுக்கு போயிட்டு அனந்தபூர் போகணும். ஒரு.., ஒரு வாரமாவது அங்க இருப்ப இல்ல? எங்க கலீக்ஸ்க்காக  சின்னதா ஒரு கெட் டு கெதர் வச்சிருக்கோம். எல்லாம் உங்கள பாக்கணும்னு சொல்லி இருக்காங்க”, என சொல்லி இருந்தார்.
“ம்ம்.”, என்பதைத் தவிர வேறு ஏதும் சொல்வதில்லை என்று அப்போது ஆஷு முடிவு  செய்திருந்தால், அவர்கள் எது சொன்னாலும் சரியென்று விட்டான். ‘முதலில் நாகர்கோவில், அதன் பின் அனந்தபூரில் ஒரு வாரம்.. ஹ்ம்ம். ஒரு வாரம் என்பது பத்து நாளாகி விடும்’, என்றெல்லாம் யோசித்த ஆஷுதோஷ், இந்த பிரயாணம் பற்றி மதியோடு கலந்து பேச நினைத்தான். ஆனால் திருமண சந்தடியில் மறந்து விட்டான். 
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் இவர்கள் புறப்பட, இரண்டு குளிரூட்டி மற்றும்  படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரவேற்பு முடிந்து இவர்கள் அனைவரும் பிரயாணத்திற்கு தயாரானபோது மணி நள்ளிரவு பனிரெண்டைத் தாண்டி இருந்தது. 
காலையில் இருந்து திருமணம், தொடர்ந்து வரவேற்பு என்று அசதியில் இருந்த மஹதிக்கு அப்போதுதான் இந்த பிரயாணம் குறித்து தெரியவந்தது. எப்போதடா சிறிது நேரம் படுத்து கண்ணயர்வோம் என்று இருந்தவளுக்கு இன்னும் பத்து மணி நேரம் பிரயாணம் செய்யவேண்டும் என்பது ஆயாசத்தை தந்தது. இருந்தபோதும் முன்பெப்போதோ பேச்சுவாக்கில் எங்கள் வழமை திருமணம் முடித்ததும் நேரே கோவிலுக்கு செல்வது என்று ஆஷு சொல்லியிருக்க, ஓரளவு சமாதானமானாள். 
சுந்தர் நேரே நாகர்கோவில் வந்து விடுகிறேன் என்று சொன்னதால், மணமகள் தரப்பில் சென்றது மணப்பெண்ணான மஹதி, அண்ணி பார்கவி, மற்றும் அவளது குழந்தைகள் ஸ்ரீநிதி, யுவராஜ் மட்டுமே.
அடுத்த அரைமணி நேரத்தில் பேருந்து புறப்பட தயாராக இருக்க, அனைவரும் ஏறிக்கொண்டனர். ஆஷுதோஷ் உள்ளே அனைவரும் படுத்து விட்டார்களா, அனைத்தும் வசதியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து விட்டு தனது இருக்கைக்கு வந்தான்.
முன் பக்கத்து இருவர் படுக்கும் படுக்கையில் யுவராஜ் மற்றும் பார்கவி உறங்கி இருக்க, பின்னால் மஹதியின் அருகே ஸ்ரீகுட்டி படுத்திருந்தாள். 
தன்னருகே வந்த ஆஷுவைப் பார்த்து மஹதி சோபையாக சிரிக்க, அவளை பார்த்து, “ஹாய்“, சொல்லிவிட்டு அருகே வந்து அவள் நெற்றியில் புரண்ட முடியை பின் தள்ளி, “கம்ஃபார்ட்டா இருக்கா?”,கேட்டான்.
“ம்ம். நோ ப்ராப்ளம்”, என்றாள்.
“ஆக்சுவலா பிளைட்-ல திருவனந்தபுரம் போயி நாகர்கோவில் போயிடலாம்னு யோசிச்சேன். ட்ரிவேன்றத்துலேர்ந்து ஜஸ்ட் ரெண்டு மணிநேர ஜர்னிதான். பட் கோயமுத்தூர்லேர்ந்து டைரக்ட் பிளைட் இல்லயா? பிளைட் மாறி மாறி போகணும்னா அதுக்கே ஆறு மணி நேரமாகும் அதைவிட பஸ் பெட்டர்ன்னு  தோணுச்சு”, என்றான் தன்னிலை விளக்கமாக.
“ம்ம். இட்ஸ் ஓகே பா. காலைலேர்ந்து அலைஞ்சிட்டு இருக்க. படு ஏட்டி”, என்று சொல்லி தன் தலைகோதும் ஆஷுவின் விரல்களை பிடித்துகொண்டாள்.
“இவ்ளோ இடம் இருக்கே? பக்கத்துல படுத்துக்கவா?”, மனைவியின் காதில் கிசுகிசுத்தான். அவளருகே படுத்து இருப்பது ஸ்ரீகுட்டிதானே?
கணவன் கண்ணில் இருந்த குறுகுறுப்பைப் படித்த மஹதி, அவனது காதைப் பற்றி இழுத்து, “ஓடற பஸ்-ல பர்ஸ்ட் நைட் கொண்டாட நினைக்காத. நம்ம சுத்தி முப்பத்தஞ்சு பேர் இருக்காங்க”, என்று ரகசியம் பேசி சிரித்தாள்.  
“ம்ப்ச். சும்மா படுத்துக்கறேன் மதி”, என்றான். இத்தனை பேர் சூழ இருக்கையில், அவன் சொல்லும் ஜஸ்ட் படுப்பது (?) கூட இயலாது என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும்..? 
அப்போது மதியின் அருகில் இருந்த ஸ்ரீகுட்டி திரும்பிப் படுத்து காலை தூக்கி போட்டு, மதியை இடுப்போடு கட்டிக்கொள்ள, சின்னவளைப் பார்த்து “ஹூம்”, என்று ஆஷு பெருமூச்சு விட்டான்.
சிரிப்பை வாய்க்குள் கட்டுப்படுத்திய மஹதி, “போய் போத்திகிட்டு தூங்குங்க”, என்றாள். அவள் கிண்டலைப் புரிந்து கொண்டு, எட்டி அவள் கன்னம் கடித்து, “குட் நைட்”, சொல்லி விட்டு எதிரே இருந்த ஒற்றை படுக்கையில் உறங்கினான்.  
)))

Advertisement