Advertisement

நீயொரு திருமொழி சொல்லாய்..

அத்தியாயம் 17

மதி & ஏட்டி திருமணத்திற்கு மஹதி வீட்டில் அனைவரும் ஒப்புதல் அளிக்க, ஆஷுதோஷ் வீட்டில் நிலைமை நேர்மாறாக இருந்தது. அவனது தந்தை நீலகண்டன் அமைதியாக தனது மறுப்பை தெரிவிக்க தாய் சாம்பவி அழுது கரைந்தார். 

“ஏன்ட்டரா,  பை நெல நீக்கு கால் சேசேட்டப்புடு ஏஞ் (yeanch) செப்பேவ்? இப்புடு ஏஞ்சேஸ்துன்னாவ்? (ஏன்டா, போன மாசம் போன் பேசும்போது நீ என்ன சொன்ன? இப்போ என்ன செய்துட்டு வந்துருக்க?) 

இனி உரையாடல் தமிழில்.. (ட்ரான்ஸ்லேட் பண்ணி.. முடில)

“ம்மா, அப்போ பண்ணல, இப்போ பண்றேன். இது ஒரு தப்பா?”, ஆஷு கடுப்படித்தான். 

மதி மற்றும் சுந்தராஜன் இருவரும் வீட்டில் சென்று திருமணம் குறித்து கலந்து பேசி வருமாறு சொன்னதன் விளைவாக, ஆஷுதோஷ் அனந்தபூர் வந்திருந்தான். காதல் திருமணம் செய்த பெற்றோர் என்பதால் தனது விருப்பத்திற்கு மாறாக ஏதும் சொல்ல மாட்டார்கள் என்று நினைத்து ஆஷுதோஷ் வந்திருக்க, இங்கே நிலைமை தலைகீழ்.

“தப்புதாண்டா,  உங்கப்பா திலகாவை மருமகளா ஆக்கலாம்னு நினைச்சிட்டு இருக்கும்போது இப்படி திடுதிப்புனு யாரோ மதி.. மண்ணாங்கட்டிய கல்யாணம் பண்ணிக்கறேன்னு வந்து நின்னா என்ன அர்த்தம்?”, என்று சாம்பவி அசராமல் ஒரு குண்டைப் போட்டார்.

அதிர்ந்த ஆஷுதோஷ், “ம்மா, நா போன்ல பேசும்போது அத்தை பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எப்பவாவது சொன்னேனா?”

ஆஷுதோஷை அழுத்தமாகப் பார்த்த சாம்பவி, “நீ எங்கடா போன்ல பேசற? இல்ல கேக்கறேன். எப்பவாவது மாசத்துல ஒரு தடவ பேசற. அதுவும் என்ன சொல்லுவ தெரியுமா?  ‘அம்மா நல்லாயிருக்கியா?’, ‘அப்பா என்ன பண்றாரு?’, ‘வீட்டோட ஈ எம் ஐ கட்டியாச்சு’, ‘உங்க பி பி எஃப்-க்கு பணம் கட்டிட்டேன்’, ‘ஐ தி ரிட்டர்ன் முடிச்சிட்டேன்’-னு என்னவோ ஆடிட்டர் பேசறா மாதிரி பார்மாலிட்டிக்கு நாலு வார்த்த பேசுவ. ரெண்..டு வருஷமா கேக்கறேன், கல்யாணம் பண்ணிக்கடான்னு. எப்பவாவது காதுல வாங்கினியா? அதான் நாங்களே முடிவு பண்ணினோம். ஏன் நாங்க பண்ணகூடாதா? எங்களுக்கு அந்த ரைட்ஸ் இல்லியா? அதுவும் உன்ன கேட்டுட்டு தான் பண்ணோம்..”, என்று பாயிண்ட் பாயிண்டாக வக்கீலைப்  போலக் கேட்டார். 

“ம்மா.., மறுபடி சொல்றேன். நீ எங்கிட்ட கல்யாணம் பத்தி கேக்கவே இல்ல”

“டேய் காதலிக்கிறியான்னு கேட்டேனா இல்லியாடா?”

“ஷ்.. ம்மா. உன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்ல, நீ என்னவேணா சொல்லிக்க. எனக்கு மேரேஜ் மதியோடதான் நடந்தாகணும். நடக்கும்.”

“இதுக்கெதுக்குடா எங்ககிட்ட வந்த? ஓஹ்? எங்க வீட்ல பர்மிஷன் கேட்டுட்டு வரேன்னு நல்ல பிள்ளை மாதிரி சொல்லிட்டு வந்தியாக்கும்?”, எதிர்ப்பை பதிவு செய்யும் கிண்டலான த்வனியில் கேட்டதும்.. ஆஷுதோஷ்க்குக் கோபம் வர, 

“அப்பா நா கிளம்பறேன். என்னால இந்த குத்தல் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. அதுக்கு எனக்கு நேரமும் இல்ல”

“ப்ச். ஆஷு..”, நீலகண்டன் மகனைக் கண்டிக்க.

முன்பே கொதிநிலையில் இருந்த சாம்பவி விட்டனே பார் என்று பிடிப்பிடியென பிடித்தார். “ஆமாடா, உனக்கு நேரமிருக்காது. நீதான் பெரிய பிஸினெஸ்மேனாச்சே? என்கிட்ட பேசறதா முக்கியம்? போ போ நல்லா பணம் காய்ச்சி மரமா பாத்து பிடிச்சிட்ட. சும்மாவே இங்க வரமாட்ட. படிக்கற வரைக்கும் ரிசர்ச் அது இதுன்னு சாக்கு சொல்லுவ. இனி கேக்கவே வேணாம்.”

“நாந்தான் இந்த மனுஷன் கிட்ட சொன்னேன். நம்ம புள்ள நம்ம பேச்சு தட்டமாட்டான். நீங்க திலகாவை பொண்ணு கேளுங்கன்னு. சொன்னதுக்கு என் புத்திய செருப்பால அடிச்சுக்கணும்”, கோபம் வந்தால் படித்த படிப்பு செய்யும் வேலை அனைத்தயும் காணாமல் போய், சாதாரண நடுத்தர வர்க்க பிரதிநிதியாக சாம்பவி புலம்பினார்.  

“நம்ம கல்யாணத்துனால விட்டுப்போன உங்க சொந்தமெல்லாம் இந்த கல்யாணத்துனால ஒண்ணா ஆயிடும்னு நினைச்சேன். ஸ்ரீவாரு, நே நிசங்கா ச்செப்த்தானு, இலா ஜரகபோதுந்த்தனி தெலிசி உண்ட்டே, அசலு நேனு மிம்மல்னி பெல்லி ச்சேஸே உண்டனு”     

(ஸ்வாமி, உண்மையா சொல்றேன். இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நிஜமா நா உங்களை கல்யாணம் பண்ணியே இருக்கமாட்டேன்), என்று கண்ணீர் உகுக்க.. ஆஷுதோஷ் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.  

“ம்மா, முப்பது வருஷம் முன்ன நடந்த ஒரு விஷயத்துக்கு என்னை பிராயசித்தம் பண்ண சொல்லறீங்களா?”, என்று கேட்ட ஆஷுதோஷ்..,

“அதான் அப்பா அவங்க அக்கா வீட்டுக்கு இன்னிக்கு வரைக்கும் செஞ்சிட்டேதான இருக்கார்?. வேதமூர்த்தி படிப்புக்கு சப்போர்ட்  பண்ணினது அப்பாதான? அவன் வெளிநாடு போயி செட்டில் ஆனதுக்கப்பறம் கூட அத்தை வீட்டுக்கு குடுத்திட்டேதான் இருக்காரு. ஏன்? அவன் தங்கச்சி திலகா பிஜி பண்றதுக்கு நாந்தான பணம் கட்டினேன்?, எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கும்மா”, இவனது நெடுநாளைய ஆதங்கம் வெடித்தது. 

“அவங்களுக்கு நீங்க ரெண்டு பேர் சம்பாதிக்கிறீங்கல்ல? குடுத்தா என்னன்னு நினைக்கறாங்க. விடுங்க. அவங்கள பத்தி பேசறது வேஸ்ட். அப்பா, உங்களுக்கு நாகர்கோயில் போயி செட்டில் ஆகணும்னா சொல்லுங்க. அங்க நல்ல வீடா பாத்து வாங்கித் தர்றேன். ஆனா, அரிசி குடுத்து அக்கா உறவு எதுக்குப்பா? இனிமேலாவது  காச குடுத்து குடுத்து போண்டியா நிக்காதீங்க”, என்று கடிந்தான் மகன்.

“டேய். உனக்கென்னடா தெரியும்? உங்கப்பா சின்ன வயசுல சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டபோது அவங்கதான் உதவி பண்ணினாங்க. இவர் காலேஜ் கடைசி செமஸ்டர்-ல இருந்தப்ப ஸ்டைபண்ட் வர லேட்டாச்சு. யார் கட்டினா?  திலகா அம்மாதான் குடுத்தாங்க.”

“கரெக்ட்மா. ஆனா அதுக்கு மேல நிறைய நிறைய அவங்களுக்கு அப்பா பண்ணிட்டார். அவங்க ஆயுட்கால அடிமையா இவர் இருக்கணும்னு நினச்சா அது உங்க பிரச்சன. உங்க செண்டிமெண்ட். ஆனா, என்னை இதுல இழுக்காதீங்க”, என்று திட்டவட்டமாக சொல்லிய ஆஷுதோஷ், தந்தையைப் பார்த்து, “அப்பா என் மேரேஜ் நீங்க வந்து நடத்தி குடுக்கறீங்களா? இல்ல நானே பண்ணிக்கட்டுமா?”, என்று சட்டமாகக் கேட்க..

“டேய்..”, என்ற சாம்பவி கையை தூக்கியபடி ஆஷுவை அடிக்கவே வந்துவிட்டார். 

“சவி”, என்று கடினமாக கூப்பிட்டு அவரைத் தடுத்து நிறுத்திய நீலகண்டன், “கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்துட்டு தகவல் சொல்லு, நாங்க வர்றோம்”, என்றவர், “இப்ப நீ கிளம்பு, இன்னும் இருந்தா அம்மா ஏதாவது பேசிட்டே இருப்பா, அவளுக்கு பிபி ஜாஸ்தியாகும்”, என்றார்.

எப்போது வீடு வந்தாலும், இன்னும் இரண்டு நாள் இருந்துவிட்டுப்போ என்று சொல்லும் தந்தை, வீட்டுக்கு வந்த இரண்டே மணி நேரத்துக்குள் புறப்படு என்றதும் ஆஷுவுக்கு என்னவோ போலிருந்தது. 

மேற்கொண்டு எதுவும் பேசாமல், அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆஷு  தயாராகி விட, “அவனை சாப்பிட்டு போகச் சொல்லுங்க, அவனுக்கு பிடிச்ச ஸ்டஃப்ட் பொரியல் பண்ணி இருக்கேன்”, என்று முணுமுணுத்தார் சாம்பவி. 

மறுப்பேதும் செல்லாமல் அமைதியாக சாப்பிட்டுவிட்டு ஆஷு புறப்பட அவனோடு பேருந்து நிறுத்தம் வரை வந்த நீலகண்டன், “போன வாரம் கோவில் கொடைக்கு போனபோதுதான் இந்த பேச்சு ஆரம்பிச்சோம். ‘போன்ல பேசும்போது நல்லா கேட்டுட்டேன், அவன் யாரையும் காதலிக்கல’ன்னு உங்கம்மா உறுதியா சொன்னா. உன் விஷயம் தெரிஞ்சிருந்தா வாக்கு தந்திருக்க மாட்டேன் ஆஷு”, என்றவர் சிறிது நொடிகள் அமைதியாக இருந்தவர், “காசு பணம் புகழ் சம்பாதிக்கிறது மட்டுமே லைஃப் இல்ல ஆச்சு, ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடின்னு சொந்தங்கள் சூழ ஆலமரம் மாதிரி இருக்கறதுதான் லைஃப்”, நெடுமூச்சுடன் சொன்னார்.  

“ப்பா. ஐ டோன்ட் ஹவ் எனி..”, என்று ஆரம்பித்தவன், “நீங்க உங்க சொந்தத்துக்கு செய்யறதுக்கு நா அப்ஜெக்ட் பன்னலப்பா”, என்றவன் எப்படி அவனது நிலையை புரிய  வைப்பது என்று தெரியாமல் திணறி, “ப்பா. நா ஆலமரமா இருக்க நினைக்கலப்பா, அதுக்கும் மேல ஆகாயமா, எல்லா செடி கொடி மரங்களுக்கும் மழை தர்ற மேகமா.. இருக்கணும்னு நினைக்கிறவன்”, என்று அவரது வாக்கியத்தைக் கொண்டே அவனை விளக்க முற்பட்டான். ‘பெரிதினும் பெரிது கேள்’ என்ற பாரதி சொன்ன பதத்தின் தீவிரம் ஆஷுதோஷின் கண்களில் தெரிந்தது.  

மென்மையாக சிரித்து அவனது முதுகை தட்டிக்கொடுத்த நீலகண்டன், “போயிட்டு வா. அம்மாவை நா சரிக்கட்டி கூட்டிட்டு வர்றேன். நம்ம முறையெல்லாம் என்னன்னு உனக்கு போன்-ல சொல்றேன். என்ன?”, என்றார்.

“ம்ம்ம்”, என தலையசைத்து சம்மதித்தான். பின் அங்கிருந்த பேருந்தைப் பார்த்து, “ப்பா. அந்த லோக்கல் பஸ்-ல ஏறிக்கறேன் பா. ரங்காவை பாத்துட்டு அப்படியே சைட்டையும் ஒரு முறை பாத்துட்டு போறேன்”, என்று சொல்லி தந்தையிடம் விடை பெற்றான் ஆஷுதோஷ்.

அரை மணி நேரத்தில் ரேவா குழுமம் பணி புரியும் சுரங்கத்தை பார்வையிட, அங்கே மும்மரமாக வேலை பார்த்த ரங்காவை பார்த்து, “ஹலோ ஸார்..”, என்றான்.

“அட.. ஆஷு..? ஹவ் ஆர் யூ?”, முகமெலாம் தூசு ஒட்டி, தொழிலாளியின் நீலச் சீருடையில் பாதுகாப்புக்கு தலைக்கவசத்தை அணிந்த ரங்கா மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தான். சிறிது நேரம் அங்குள்ள கள நிலவரத்தைப் பற்றி பேசிவிட்டு, குடும்ப விஷயத்துக்கு வந்தனர்.

“கங்கிராஜுலேஷன்”, என்று மனமுவந்து கைகொடுத்து வாழ்த்து சொன்னான் ரங்கராஜன்.

“தேங்க்யூ ஸார்”

“இன்னும் என்ன சார் மோர்ன்னுட்டு?, கால் மீ ரங்கா”, என்று சொன்ன ரங்கா, “வீட்ல சொல்லியாச்சா?”

“ஹூம். ம்ம்ம் அதுக்குத்தான் வந்தேன்”, என்று ஆஷு சொன்ன விதத்திலேயே எதோ சரியில்லை என்பதை அறிந்த ரங்கா..”என்ன சொன்னாங்க?”

“அம்மா கொஞ்சம் சத்தம் போட்டாங்க. பட் அப்பா ஏற்பாடு பண்ண சொல்லிட்டாங்க”, என்று சுருக்கமாக முடித்தான்.

“அப்போ.. சென்னை கிளம்பியாச்சா?”, என்று யோசனையாக ரங்கா கேட்க..

வறட்சியான சிரிப்புடன், “ரெண்டு நாள் இருக்கலாம்னுதான் வந்தேன். ஆனா.. ஒரு வேளை கூட இருக்க முடியல”

“ம்ப்ச். சரி. மெஸ்-க்கு போலாம் வா”

சுரங்கத்தின் உள் வளாகத்திலேயே இருந்த உணவகத்தை நோக்கி இருவரும் நடந்தார்கள்.

மெஸ்ஸை நெருங்கியதும் நினைவு வந்தவனாக, “இந்த ஊரு சாப்பாடு உங்களுக்கு சேருதா? இல்ல இன்னும் ப்ராப்ளம் இருக்கா?”, ஆஷு கேட்க..

“தமிழ்நாட்டு சமையல் பண்றதுக்கு ஆளுங்கள ஏற்பாடு பண்ணிட்டேன். ஜஸ்ட் போன வாரம்தான் அரேன்ஜ் பண்ணினேன். அதுவுமில்லாம, எனக்கு இந்த ஊரு சாப்பாடும் ஒத்துப்போக ஆரம்பிச்சிடுச்சு. எதுக்கும் இருக்கட்டும்னு இவங்களையும் இருங்கன்னு சொல்லிட்டேன்”, என்ற ரங்கா.. “இப்போல்லாம் தொடர்ச்சியா வேலை இருக்கறதால இங்க பக்கத்திலேயே இருக்க வேண்டியதா இருக்கு”, என்றான்.

“அப்போ அப்பா வீடு பக்கத்துல நீங்க தங்கி இருக்கிற பிளாட்..?”

“இப்போதைக்குச் சும்மாதான் இருக்கு. இருக்கட்டும். மேரேஜ் ஆனா நீங்க வர போக இருப்பீங்க இல்ல? உங்களுக்கு யூஸ் ஆகுமில்லையா?”

“யா..”, என்றவனுக்கு ஆயிரமாயிரம் சிந்தனைகள். திருமணம் முடித்தபின் எங்கே செல்வது? நியாயமாக பார்த்தால் மதியை இங்கே கூட்டிவருவதுதான் முறை. ஆனால் அம்மா..? என்று யோசனை விரிய.. கவலை வந்தது.

“ஆஷு.. பஜ்ஜி எடுத்துக்கோ”

“ம்ம்”, சொல்லி சிறுதீனியின் வாசனையில் ஈர்க்கப்பட்டு அதை ருசிக்கத் துவங்கினான். அடுத்து வந்த தேநீரும் அருமையாக இருக்க, “டீ சூப்பரா இருக்கு”, என்றான்.

மென்னகை பூத்த ரங்கா.., “ஆக்சுவலா முதல்ல எனக்கு இது ஒத்துக்கல, தென் பழகிடுச்சு”, என்றவன், “ஆஷு..  இப்போ எத பத்தியும் யோசிக்காத, எல்லாம் போகப்போக சரியாயிடும்”, என திருமணம் + உணவு இரண்டு விஷயத்திற்கும் பொதுவாக சொன்னான்.

)))))

அடுத்த மாதத்தில் நல்ல முஹூர்த்த நாளில் ஆஷுதோஷ் மஹதி இருவரின் திருமணம், ராஜ் குடும்ப வழக்கப்படி மருதமலை முருகனின் சந்நிதியில் இனிதே நடந்தேறியது.

Advertisement