Advertisement

அத்தியாயம் 15 1
ரேவா குழுமத்தின் ஜெர்மனி பயணம் முடித்து ஒரு மாதம் கடந்திருந்த நிலையில், இன்னும் சில வர்த்தகங்கள் உறுதி செய்யப்பட்டன. எனவே, ரேவாவின் இந்த வெற்றியை தொழிற்சாலையிலும், வீட்டிலும் விழா கொண்டாடிட  சுந்தர் முடிவு செய்தான். 
இவ்வெற்றிக்கு பாடுபடும் தொழிலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வாக ரேவா பிரதான அலுவலகத்தில் விழா ஏற்பாடாகியிருந்தது. பதினைந்து தினங்களுக்கு முன்பே விழா அறிவிப்பினை வெளியிட்டு, ரேவாவில் வேலை செய்பவர்கள் தத்தமது குடும்பத்தினரோடு கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. எனவே, தொழிலாளர்கள் அனைவரும் மனமகிழ்வோடு விழாவில் அவரவர் தனித்திறமையை வெளிப்படுத்த ஆயத்தமாக இருந்தனர்.  
விழா நாள் அன்று அனைவரும் ஆடல், பாடல், நகைச்சுவை நாடகம் என்று அதகளப்படுத்தி விழாவை உயிர்ப்பித்தனர். காலை ஏழு மணிக்கு ஆரம்பித்த விழா மாலை ஏழு வரை களை கட்டியது. ஆஷுதோஷ் கூட தனது பங்காக ஐந்து நிமிடம் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து அனைவரையும் கவர்ந்தான். 
ரங்கராஜனின் விற்பனைப் பிரிவை சேர்த்தவர்கள் திரை இசைப் பாடல்களை கலந்து கட்டி மேஷ் அப் செய்து பாடினார்கள். முத்தாய்ப்பாக, ”நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன்தான் ; ராஜனுக்கு ராஜன் எங்கள் ரங்கராஜன்தான்’ என்று.. அனைவரும் ஒருசேர கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்த ரங்கா-வை சுட்டிக் காண்பிக்க, இதற்காகவே காத்திருந்த ஆஷுதோஷும் முரளியும் ரங்கராஜனை (அவன் வேண்டாமென்று தடுத்தும் கேளாமல்) இழுத்துச்சென்று மேடையில் நிறுத்தினர். மீண்டும் அதே வரிகள் மேடையில் பாடப்பட, அவர்கள் அன்பில் ரங்கா நெகிழ்ந்தான். 
தினசரி மாலையானால் பப் இல்லையென்றால் பாரில் கிடக்கும் குடிகாரன் என்ற ரங்காவின் பழைய உருவகம் இப்போது இல்லாமல் போய், தொழிலாளர்களால் மதிக்கப்படும் நல்லவன் என்ற இமேஜ் உருவானது. 
அடுத்ததாக மேடையேறிய முரளி, இந்திய திரைப்படங்களின் அபத்தங்கள் என்ற தலைப்பில் தனி ஆவர்த்தனமாக நடித்துக் காண்பித்தான். நம்மூர்  சினிமாக்களில் பொதுவாக துப்பாக்கி தோட்டா (புல்லட்) பாய்ந்த அடுத்த நொடியே வில்லன்கள் மண்டையைப் போடுவார்கள். ஆனால், அந்தோ பரிதாபம்.. படத்தின் நாயகிக்கோ அல்லது இரண்டாவது நாயகிக்கோ குண்டடி பட்டால், தோட்டா துளைத்து ஒன்னரை மணி நேரமாகியும் அவர் மூச்சு இழுத்து இழுத்துப் பேசி, கன காரியமாக ஹீரோவையும் மற்றொரு ஹீரோயினோடு சேர்த்து  வைத்து இறந்து போவார் அல்லவா? அதை முரளி குரல் பேதங்களோடும், முக பாவனையோடும் நடித்துக் காட்ட..  பார்த்தவர்களுக்கு சிரித்து சிரித்தே வயிறு புண்ணாகிப் போனது.  
அடுத்ததாக சுந்தராஜன் தயாரித்த படத்தில் கதாநாயகன் நடிக்கும் ஒரு காட்சியை நடித்துக் காட்டப் போவதாக மேடையில் அறிவித்து விட்டு, தனது அக்கா கணவனைப் பார்த்து, “சுந்தர் சார் இது வெறும் ஃபன்தான். சீரியஸா எடுத்துக்க கூடாது, ஓகே?”, என்று அங்கிருந்தபடியே கேட்க..
நல்ல மூடில் இருந்த சுந்தர் சிரித்தபடி கட்டை விரலை உயர்த்திப் பிடித்து, “கலக்கு மச்சான்”, என்று அனுமதி வழங்கினான்.  
திரைப்படத்தின் கதாநாயகன், வில்லனின் அடியாட்களோடு பேச்சுவார்த்தை நடத்தும்போது (???), கடினமான போல்ட் நட்டுகளை கழற்றுவதற்கு உபயோகப்படும் ஸ்பானர்களைக் (wrenches) கொண்டு பூஜ்ஜியம், ஆறு, கார் போன்ற உருவங்களை பேச்சுவாக்கில் வளைத்து வளைத்து (அவர்களை பயமுறுத்துகிறாராம்) காண்பிக்க, வில்லனின் அடியாட்கள், ‘அப்டியே ஷாக்காயிட்டேன்’ என்று மிரண்டு போய் ஹீரோவை ஒரு அடிகூட அடிக்காமல் தலை தெறிக்க ஓடுவதாக இருந்தது அக்காட்சி. 
இதை மேடையில் நடித்துக் காட்டும்போதே முரளி சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து வைக்க.. அவன் உபயோகித்ததென்னமோ நன்கு வளையும் தன்மையுள்ள ரப்பர்தான்,அதுவே வளைவதற்கு சற்று போக்கு காட்டியது. 
ஸ்பானர்களின் உறுதித்தன்மை தெரியாத மற்றவர்களுக்கு, இக்காட்சியை ‘ஆ’என்று அதிசயித்துப் பார்க்கத் தோன்றுமோ என்னமோ? ஆனால், அவற்றின் ஸ்திரத்தன்மை குறித்துத்  தெரிந்த ரேவாவைச் சேர்ந்தவர்களுக்கு கட்டுப்படுத்த முடியாமல் சிரிப்பு பொங்க, குறிப்பாக முரளியின் முக சேஷ்டைகள் வைகைப் புயல் வடிவேலுவோடு போட்டி போட,  அரங்கம் சிரிப்பொலியை நிறுத்த பல நிமிடங்கள் ஆனது.
இறுதியாக மேடை விட்டு இறங்கும்போது, “மாமா, இனிமேயாவது லாஜிக் இடிக்காம படம் எடுங்க மாமா”, என்று சுந்தரை கிண்டல் செய்து தனது பங்களிப்பை பக்காவாக முடித்தான். சுந்தர் முரளியின் அந்த விமர்சனத்தை இலகுவாகவே எடுத்துக் கொண்டான். அவனது எண்ணமும் நல்ல திரைப்படங்களை தரவேண்டும் என்பது தானே? 
முரளியின் நிகழ்ச்சி முடியும்வரை அவனையே பார்த்துக்கொண்டிருந்த மஹதியின் எண்ணங்கள் வேறு உலகத்தில் இருந்த தந்தையோடு பேசியபடி இருந்தன. “டாட், இவனையா எனக்கு ஏத்த ஜோடின்னு நீங்க நினைச்சு இருந்தீங்க? நல்லாதான்  இருக்கான், நல்ல ஹ்யுமர் சென்ஸ் இருக்கு, படிச்சிருக்கான்தான்.  பட்.. ப்பா. எனக்கு இவனை பாத்தா ஒரு சின்ன சலனம் கூட வரலையேப்பா? ம்ம்..? ஒருவேளை முரளி.. அண்ணியோட தம்பி..  அதோட நமக்கு ரிலேஷனா இருக்கறதால பின்னால எனக்கு எந்த பிரச்னையும் வராதுன்னு யோசிச்சீங்களோ?’, என்ற யோசனையோடு தலையை இடது புறம் திருப்பியவளுக்கு ஏட்டி கண்ணில் பட.., 
‘அப்பா, உங்களுக்கு ஒன்னு தெரியுமா? உங்க ஃபிரென்ட் ஏட்டி மேல எனக்கு சின்னதா கிரேஸ் இருக்கு. க்ரஷ்-ன்னு வச்சுக்கோங்களேன்.. ஹ்ம்ம். என்ன விட ஒரு வருஷமோ என்னவோதான் பெரியவனா இருப்பான். ஆனா, உங்க அளவு திறமையை வளத்துக்கிட்டு, சான்ஸே இல்ல. செம ஸ்மார்ட். மே பி உங்க கூட இருந்ததாலயோ என்னமோ?’, முயன்று தனது பார்வையை மீண்டும் மேடைக்குத் திருப்பினாள்.
‘டாட்..உங்க பேச்சை நா எப்போவுமே தட்டினதில்ல, ஏன்னா எங்கப்பா எது செய்தாலும் அது என்னோட நல்லதுக்காகத்தான் இருக்கும்னு எனக்குத் தெரியும். இப்போ இந்த விஷயத்துல முரளியை பிடிக்கலன்னு சொல்றதை விட, கல்யாணத்துக்கு தனியா ஒரு ஸ்பார்க் வேணுமில்லியா? ஒரு  மியூச்சுவல் ஈர்ப்பு.. அது அவன்ட்ட வரல டாட்.’
‘ப்பா.., நீங்க எனக்கு அனுப்பின வீடியோல எல்லா விஷயத்துலேயும் கைட் பண்ணுவேன்னு சொன்னீங்க இல்ல? ப்ளீஸ் டாட் கைட் மீ நௌ’, என்று தனது மானஸீகப் பேச்சை மஹதி முடிக்கவும், விழா இனிதே முடியவும் நேரம் சரியாக இருந்தது.
வெள்ளியன்று ரேவா நிறுவனத்தில் தொழிலார்களுக்காக விழா நடந்து முடிய, ஞாயிறு அன்று ரேவா இல்லத்தில், ஹை கிளாஸ் எனப்படும் பெரிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள், முக்கிய அரசியல் புள்ளிகள், சுந்தரின் திரைத் துறை பிரபலங்கள் என்று அவர்களுக்கான பிரத்யேக விழாவாக ஏற்பாடாகி இருந்தது. 
ரங்கராஜன் இந்த விழாவில் மிஸ்ஸிங். அவன் வேலை இருக்கிறது ஒருநாள் வந்ததே பெரிது என்று சொல்லிவிட்டு சிட்டாக அனந்தபூர் பறந்து விட்டான். 
பூர்ணா வழமை போல, வீடியோ காலில் தலை காட்டி வாழ்த்து தெரிவித்ததோடு சரி. மீதம் இருப்பது சுந்தர் மற்றும் மஹதி இருவர்தான். சுந்தரின் ஆலோசனையின் பேரில்  வீட்டின் கூடம் காலி செய்யப்பட்டு அதை விழா அரங்கமாக மாற்றி இருந்தனர்.
இடது ஓரத்தில் கிடார் கீபோர்ட் சகிதம் இருந்த மெல்லிசைக் குழுவினர், காதை உறுத்தாத பாடல்களைப் பாட, கிசுகிசுவென பேசும் மேல்தட்டு வர்க்கத்தினர் அல்லவா? மரியாதை நிமித்தம் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு, வீட்டின் வெளியே புல்வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஃபட் உணவினையும், கூடவே தீர்த்தவாரியையும் ருசிக்கக் கிளம்பிவிட்டனர்.
லானில் ஐம்பது பேர் வரை.. நான்கு நான்கு பேராக அமர்ந்து சாப்பிட வசதியாக வட்ட வடிவிலான மேஜைகளும், சரிகை வேலைப்பாடமைந்த சட்டை போட்ட நாற்காலிகளும் விருந்தினர்கள் வருகைக்காக தயாராய் இருந்தன.  வலதுபுறத்தில் வரிசையாக ஒரே அளவில் இருந்த தவாக்களில் (பெரிய சைஸ் வாணலி என்று சொல்வது சரியோ?) வகை வகையான தென்னிந்திய, வடஇந்திய உணவுகள் மூடி போட்டு சுடச்சுட தயாராக இருந்தது. அருகில் சிறிய மற்றும் பெரிய அளவிலான தட்டுகள், கிரண்டிகள், முள்கிரண்டிகள் இத்தியாதி இத்தியாதிகள்..   அடுத்து சில அடி இடைவெளியில் ஐஸ்க்ரீம் வகையறாக்கள் என்று தயாராக இருந்தன. பார்பிகியூ ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. 
மெல்ல ஒருவர் பின் ஒருவராக ஹாலில் இருந்து தோட்டத்தில் உள்ள baffet க்கு வருகை தர, வீட்டில் வெளியாட்கள் குறைந்தனர். அப்போது முரளியின் அம்மா சற்றே கடுகடு முகத்துடன் மஹதியின் அருகே வந்து, “என்ன பொண்ணும்மா நீ? வெளிநாட்டுக்கு போயிட்டு வந்தா, பாந்தமா ட்ரெஸ் பண்ணிக்கக் கூடாதுன்னு இருக்கா என்ன? இதென்ன கையில்லாம ஒரு ட்ரெஸ்?”, என்றார்.., அவர் அத்தோடு நிறுத்தி இருக்கலாம்.
ஆனால் தொடர்ந்து,”ஹூம். என்ன பண்றது? தாயில்லாத பொண்ணா வளந்துட்ட. அதனால நல்லது கெட்டது சொல்லித்தர ஆளில்லாமதான் இப்படியெல்லாம்..”, “இப்போவே சொல்லிட்டேன் மஹதி, நம்ம வீட்டுக்கு வந்தப்பறம் இந்த மாதிரியெல்லாம் ட்ரெஸ் பண்ணக்கூடாது.  புரிஞ்சிதா? எங்க பார்கவி இப்படி ட்ரெஸ் பண்ணினா அவங்கப்பா வெட்டிப் போட்ருவாரு”,என்றார்.
அவர் அப்படி சொல்லுமளவு மஹதியின் ஆடை அப்படி மோசமாக ஒன்றும் இருக்கவில்லை. போட் நெக் வைத்த  கையில்லாத சைட் ஸ்லிட் நீளமான குர்தி அணிந்து அதற்கேற்றாற்போல் கணுக்கால் அளவுள்ள ஸ்கின்னி ஜீன்ஸ் போட்டிருந்தாள். அணிகலனாக ஒற்றை வைரக்கல் வைத்த மெல்லிய பிளாட்டின சங்கிலி, அதற்கு மேட்சாக பிரேஸ்லெட்.  அவ்வளவே.
முதலில் அவர் பேச ஆரம்பித்த போது பார்கவி அண்ணியின் அம்மா என்னமோ சொல்ல வருகிறார் என்று மஹதி  மரியாதையாகத்தான் கேட்க ஆரம்பித்தாள். எப்போது அம்மா இல்லை என்று ஆரம்பித்தாரோ அப்போதே மஹதியின் பார்வை மாறியதை அவர் அறியவில்லை.
அவர் பேசி முடித்ததும், சற்றே மேலேறிய புருவத்தோடு வலது புறம் தலைசாய்த்து ‘என்னை நான் பார்த்துக்கொள்வேன்’ என்ற தன்னம்பிக்கை  நூறு சதவீதம் தெறிக்கும் முகத்தோடு, “அப்படியெல்லாம்  நீங்க அனாவசியமா கவலைப்பட வேண்டாம் ஆன்ட்டி, முரளிக்கு அம்மா இருக்கிற பொண்ணா.. நல்..ல பா.ந்தமா ட்ரெஸ் பண்ற பொண்ணா பாத்து கட்டி வைங்களேன். பாவம் மாமா, இந்த வயசுல கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போனா நல்லாருக்காதில்ல?”, என்று சொல்லி சின்ன முறுவலுடன், கூடத்தை விட்டு வெளியேறி தோட்டத்திற்குச் சென்றாள். அவளது மனம் கனகனவென காந்தியது. அங்கே கூடத்திலோ மஹதியின் பதிலைக் கேட்ட முரளியின் அம்மா பேந்த பேந்த விழித்தார்.
எப்போதும் ஓரிரு வார்த்தைகளோடு அமைதியாக வளைய வரும் மஹதியிடம் இப்படி ஒரு பதிலை எதிர்பாராதவர், திகைத்து நிற்க.., பார்கவி வந்து விபரம் கேட்டாள். விஷயம் பகிர்ந்தவரிடம், “ஏம்மா உங்களுக்கு இந்த வேலை? அவ ட்ரெஸ்-ல என்ன குறை உங்களுக்கு? ஸ்லீவ்லெஸ் போடறதெல்லாம் தப்புன்னு ..? அவ ஆபீஸ் போகும்போது எப்படி ட்ரெஸ் பண்ணுவா பாத்துருக்கீங்களா? ஒரு நக இணுக்கு கூட வெளில தெரியாது. இது பார்ட்டி, அதுவும் வீட்ல நடக்கிற பங்க்ஷன்..?”
“கல்யாணத்துக்கு இன்னும் அவ ஓகே சொல்லவேயில்லை, அதுக்குள்ள நிச்சயமே ஆயிட்டா மாதிரி மாமியார்த்தனம் காமிச்சிருக்கீங்க? உங்கள..”, என்று கடிந்து கொண்டு, வெளியே சென்ற மஹதியைத் தேடிப் போனாள்.
ஓரோரு மேஜையாக பார்த்தவாறு வந்த பார்கவிக்கு, விளக்கு வெளிச்சம் குறைவாக இருந்த பகுதியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் இடது கையில் கால் கிண்ணம் நிரம்பி இருந்த மதுக்கோப்பையுடன் மஹதி யாருமில்லா எதிர்புறம் பார்த்து அமர்ந்திருந்தது தெரிந்தது.
பின்னாலிருந்து பார்த்த பார்கவிக்கு சர்வமும் பதறிப் போனது. மஹியின் உடல் இறுகி முதுகுத்தண்டுவடம் விறைப்பாய் இருக்க எவ்வித அசைவுமின்றி செதுக்கிய சிற்பம்போல உட்கார்ந்திருந்தாள்.
இப்போது அவளோடு பேசினால் கோபமாக ஏதும் பேசி ரசாபாசம் ஆகிவிடுமோ என்று தயங்கிய பார்கவி, நாத்தியை சமாதானம் செய்ய தனது கணவனை பார்வையால் துழாவினாள்.

Advertisement