Advertisement

அத்தியாயம் 14
மஹதி அவளது உணர்வுகளில் உள்ளார்ந்திருந்தால், ஆஷுவின் ‘மதி’ காதில் விழுந்தும் முழு கவனமும் அதில் இல்லை. காரணம் கையில் தூக்கி வைத்திருந்த ஸ்ரீநிதி, “மயி சாக்லெட்?”, என்று தொண தொணக்க.., கைப்பையில் இடிந்து சின்னவளுக்குப் பிடித்த ஃபெர்ராரோ சாக்லெட்டை அதன் டப்பாவில் இருந்து பிரித்துக் கொடுத்தாள். 
கூடவே, ஏட்டி கேட்ட, “எதுக்கு தேங்க்ஸ்?”, என்ற கேள்விக்கு என்ன பதில் சொன்னால் சரியான சமாளிப்பாக இருக்கும் என்று மனம் யோசித்ததில்  ஏட்டியின் ‘மதி’ விளிப்பு பின்னுக்கு சென்றிருந்தது. 
ஆனால் அவளருகே நின்ற ஆஷுவுக்கோ, “ராஜ் இறந்தபோது கூட கலங்காம இருந்தாங்க, இப்போ என்ன ஆச்சு?’, என்று குழம்பியவன், திடுமென மதி என்று மஹதியை சொன்னது நினைவு வர, ‘எப்போலேர்ந்து மேம்-மை  மதின்னு யோசிக்க ஆரம்பிச்சேன்?’, அடுத்த கேள்வி உள்ளே தொக்கி நின்றது. மனதின் குழப்பம் வெளியே தெரியக்கூடாது என்று நினைத்தவனோ, ட்ராலியில் இருந்த அவளது சூட்கேஸ்களை அடுக்குவது போல குனிந்து கொண்டான்.     
’சரி என்னைவிட சின்ன வயசுங்கிறதால அப்படி யோசிக்க ஆரம்பிச்சிட்டேன் போல’, என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு ட்ராலியை தள்ளியவாறு ஆஷு நிமிர, கூப்பிடு தூரத்தில் நின்ற மஹதி,  “ஆங். தேங்க்ஸ் எதுக்குன்னு கேட்டீங்கல்ல? இதோ இவங்கள கூட்டி வந்ததுக்கு”, என்று அண்ணன் மகளை அணைத்தபடி பதிலளித்தாள். முகம் புன்னகை பூசி தெளிவாக இருந்தது. 
“ஓஹ்!”, சின்னதாக முறுவலித்து, ““போலாமா?”, கேட்டான்.
“யா”, “யுவா..”, பராக்கு பார்த்த அண்ணன் மகனின் கவனத்தைத் திருப்பி,  “காருக்கு போ”, என்றாள். மேற்கொண்டு உரையாடல்கள் இல்லாமல் காருக்கு நால்வரும் செல்ல, பிரயாணத்தின் போதும் பிள்ளைகள் பேசியபடி வந்ததால் ஆஷு, மஹதி இருவருக்கும் பேச வாய்ப்பு கிடைக்காமல் போனது.  
வீடு சேர்ந்ததும் பிள்ளைகள், “அத்த இங்கியே நில்லுங்க,  அம்மா ஆர்த்தி குடுப்பாங்க”, என்று சொல்லி முடிக்கும் முன் பார்கவி ஆலம் கொண்டு  வந்தாள். உடன் வீட்டை நிர்வாகம் செய்யும் பெண்மணியும் இருந்தார்.  
“ஹாய் அண்ணி, இன்னும் இந்த பழக்கத்தை விடலியா நீங்க?”, என்று பகடி பேசினாலும்,  வாசலை தாண்டி உள்ளே வராமல் போர்டிக்கோவில் நின்றாள். 
இருவருமாக மஹதி மற்றம் குழந்தைகளுக்கும் சேர்த்து ஆலம் சுற்ற,”ஆண்ட்டி எப்படி இருக்கீங்க?” என்று அவரை நலம் விசாரித்துவிட்டு, அண்ணியிடம் திரும்பி, “எப்படி இருக்கீங்க? படமெல்லாம் நல்லா போகுதாம், அப்பறம்..”, என்று நிறுத்தி குறும்பு கொப்பளிக்க, “யாரோ குலு மானாலி-ல்லாம் போனதா கேள்விப்பட்டேன்?”, என்று இழுக்க, “ஆமா மயி, அதான் கார்ல வரும்போது சொன்னேனே?”, என்றது ஸ்ரீநிதி. இதைக் கேட்ட பார்கவி வெட்கப்பட, அவளோடு ஆரத்தி எடுத்த பணிப்பெண் சிரித்தார். 
அனைவரும் உள்ளே செல்லத் துவங்க, “ஓகே நா கிளம்பறேன்”, என்றான் ஆஷு.
“ஓஹ்! அப்ப சொன்னமாதிரி நீங்க ஃப்ளாட்க்கு போயிட்டிங்களா?”
“யா, பட்  இங்க என் ரூம்லேர்ந்து தேவையானது மட்டும்தான் எடுத்துட்டு போயிருக்கேன். வெகேட் பண்ணல”
“தட்ஸ் ஓகே”
“நீங்க எப்போலேர்ந்து ஆபீஸ் வர்றீங்க?”, ஆஷு.
“ம்ம். தெரில. மே பி ஒரு டென் டேஸ்.?
“?”, பத்து நாளாகுமா?  என்பதுபோல ஆச்சர்யமாக பார்த்தான். 
“ஐயம் டாம் டயர்ட். முதல்ல நல்லா தூங்கனும், தென் ப்ரெண்ட்ஸ் ரெண்டு மூணு பேரைப் பாக்கணும். ம்ம். மருதமலைக்கு போனும்”, மஹதி லிஸ்ட் போட..
“யே, நானும் நானும்”, என்றாள் ஸ்ரீநிதி..
“எல்லாரும் போலாம் டா”, என்று அவளை அமர்த்திவிட்டு..
“சோ கண்டிப்பா பத்து நாளாவது ஆகும்ன்னு தோணுது”, என்றாள்.”
“ஓகே டேக் யுவர் டைம். ஸீ யூ”,சொல்லி விடைபெற்றான் ஆஷு.
))))))))))))
ஆஷுவிடம் சொல்லியபடி மஹதி, கோவை வந்த முதலிரண்டு நாட்களை தூங்கியே கழித்தாள். விழித்திருந்த நேரத்தில் சாப்பிட எடுத்துக்கொண்ட நேரம் தவிர மீதம் இருந்த நேரத்தை  ஸ்ரீ நிதியும், யுவாவும் பிடித்துக் கொண்டனர். அடுத்த இரண்டு நாட்களை தனது நட்பு வட்டாரத்துக்கு ஒதுக்கினாள். இவளது படிப்பு உறைவிடப்பள்ளியில் என்பதால் பெரிதான  நட்பு வட்டம் ஏதும் இல்லை. அங்கு படித்த நான்கைந்து பேரோடு மட்டுமே தொடர்பில் உள்ளாள். 
அடுத்து மருதமலை பயணம். மஹதியைப் பொறுத்தவரை, முருகனைப் பார்க்க செல்லும்போது ஆரவாரமின்றி அமைதியாக சென்று வருவாள். வரதராஜன் இருந்தவரையும் அப்படித்தான், கோவில் அர்ச்சகர்கள் முன்வந்து மரியாதை செய்ய நினைத்தாலும் தடுத்திடுவார். ஆனால், இம்முறை பார்கவி அண்ணியின் குடும்பமும் மஹாதியோடு வர, அது ஒரு மினி பிக்னிக் ஆனது. வழியெங்கும் சளசளவென பேச்சு வேறு. 
அடுத்த தலைவலியாக, தரிசனம் முடித்து கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த போது, அண்ணியின் பெரிய பாட்டி ஒருவர் மஹதியிடம் நேரடியாக, “எப்போடிம்மா எங்க முரளிய கல்யாணம் கட்டிக்க போற?”,என்று கேட்க.. பதில் சொல்லத் திணறினாள். சுற்றி முற்றி அண்ணி கண்ணில் தெரிகிறாரா என்று பார்க்க, பார்கவி தொலைவில் இருந்தாள்.  
மஹதியின் நல்லநேரமோ என்னவோ, சுற்றி இருந்தவர்கள் பிரசாதத்தில் மூழ்கி இருந்ததால், இவள் தப்பித்தாள். மெதுவாக, “இன்னும் முடிவு பண்ணல பாட்டி”,என்று சமாளித்தாள்.  மொத்தத்தில் மருதமலை சென்ற மஹதிக்கு  அவள் எதிர்பார்த்த அமைதி கிஞ்சித்தும் கிடைக்கவில்லை. ஆனாலும், கூட குழந்தைகள் அநேகம் பேர் இருந்ததால் மஹதியால் சமாளிக்க முடிந்தது.  
வீட்டில் பார்கவி வீட்டு மனிதர்கள் அடிக்கடி வர ஆரம்பிக்க, குறிப்பாக பெண்கள் வந்து போக ஆரம்பிக்க, மஹதிக்கு வீட்டில் இருப்பதே அசவுகரியமாகப் போனது.    பத்து நாட்கள் வீட்டில் இருக்க நினைத்தவளை ஒரே வாரத்தில் ‘இனி தினசரி அலுவலகம் செல்வோம்’ என்று முடிவெடுக்க வைத்தனர், 
சுந்தரண்ணா இரட்டைக்குதிரை சவாரி போல, நிறுவனத்தையும் கவனித்து, அவனது பட வேலைகளையும் பார்த்து வந்தான். இரு முறை வீடியோ அழைப்பில் பேசியதோடு சரி. நேற்று கூட, மருதமலை சுற்றுலா புகைப்படங்கள் பார்த்து விட்டு, “கல்யாணம் பத்தி ஏதாவது முடிவெடுத்தியா?”, என்று கேட்டு தகவல் அனுப்பியிருந்தான்.
இது அவனாக அனுப்பியதா அல்லது அண்ணியோ அவர்களது சொந்தங்களோ அவனை நெருக்குவதால் கேட்கப்பட்ட கேள்வியா என்று மஹிக்கு தோன்றியது. இரவு உணவு எடுத்துக்கொள்ளும்போது, அண்ணியிடம், மறுநாளில் இருந்து அலுவலகம் செல்லப்போவதாக அறிவித்தாள். 
“மஹி. அப்பறம்..முரளி பத்தி..?”
“அண்ணி ப்ளீஸ்.. இன்னும் அதைப் பத்தி யோசிக்கல.”
“இல்ல.. இப்ப நல்ல வேலைல வேற இருக்கானா? வரன் மேல வரனா வந்துட்டு இருக்கு அதான்..?”,என்று இழுத்த அண்ணி, “பாட்டி வேற நா கண்ண மூடறதுக்குள்ள என் பேரனுக்கு ஒரு நல்லது பாத்துடனும்னு சொல்லிட்டு இருக்காங்களாம்.” 
‘ஏன் இவங்க கண்ண மூடிட்டா பேரன் கல்யாணமே பண்ணிக்காம பிரம்மசாரியா இருந்துடுவானாமா?’, என்று இடக்காக யோசித்த மஹதி, வாய் திறந்து ஏதும்சொல்லாமல் அழுத்தமான புன்னைகையோடு பேச்சை நிறுத்தினாள். 
))))))))))))))
இரவு படுக்கும்முன் அண்ணன்களுக்கு தகவல் தர நினைத்து முதலில் சுந்தரண்வை அழைத்து, “அண்ணா நாளைலேர்ந்து ஆபீஸ் போறேன்னா”, என்றாள். “ஓகே மஹி, நா இந்த வீகென்ட் அங்க வந்துடுவேன், பாக்கலாம்.”
அடுத்து ரங்கராஜனை அழைக்க, அது நாட் ரீச்சபிள் என்று வந்தது. இந்த நேரத்துக்கு போனை ஆஃப் பண்ண மாட்டானே? அதுலயும் இப்போ இந்த நேரத்துக்கு சைட்-ல கூட இருக்க மாட்டான், ஏட்டி வீடு பக்கத்துல நல்லா சிக்னல் கிடைக்குமே? என்று நினைக்க, மனதில் ஓரம் எங்கோ ஒரு அபாய மணி அடித்தது. ‘மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறதோ?’
அப்படி ஒருவேளை ரங்கண்ணா தடம் மாறினால்,இப்போது அவன் ஏற்றிருக்கும் பொறுப்பு.? என்று கன்னாபின்னாவென யோசனைகள் வர, நேரம் பார்த்தாள். மணி இரவு பத்து கூட ஆகவில்லை, என்பதால் AT எண்ணுக்கு உடனடியாக அழைத்தாள்.
காலை ஏழுமணியில் இருந்து தொழிற்சாலையில் இருந்த ஆஷு,  இரண்டாவது ஷிஃப்ட்-டை மேற்பார்வை பார்த்து, வரும் வழியில் கண்ணில் தென்பட்ட உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு படுத்தவனுக்கு, பேசியில் மஹதியின் எண்கள் மங்கலாகத் தெரிந்தது.“ஹலோ”, எழுந்த கொட்டாவியை அடக்கினான்.    
“நா மஹதி ..”
“எஸ்  சொல்லுங்க என்ன விஷயம்?”
“ரங்கண்ணா போன் எடுக்கல. அண்ணா.. உங்க வீடு பக்கத்துல தான இருக்கான்? உங்க வீட்ல யாராவது இருந்தா கொஞ்சம் பாத்து கால் பண்ண செல்ல முடியுமா? அவன் எந்த நிலமைல.. ஐ மீன்..?”,என்று நிறுத்த..
“பேச சொல்றேன்”, என்று போனை வைத்து விட்டான். 
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ரங்காவிடமிருந்து அழைப்பு வந்தது. “என்ன மஹி ஏதாவது அவசரமா? யாருக்காவது உடம்பு சரியில்லையா?”
“சே சே அதெல்லாமில்ல, நீ போன் எடுக்கல, நாட் ரீச்சபிள்ன்னு வந்துச்சா அதான் கொஞ்சம் டென்ஷானாயிட்டேன்”
“ரிடிக்குலஸ். என்ன பாத்துக்க எனக்குத் தெரியாதா? நீயும் அப்பா மாதிரி பண்ணாத மஹி. யூ நோ? நீலகண்டன் அங்கிளுக்கு பிபி சுகர் இருக்கு. ரிட்டையர்டு ஆகற வயசு. நீ போன் பண்ணினதால மூணு மாடி ஏறி வந்து தகவல் சொல்லிட்டு போறார்”, என்று படபடவென வெடித்தான். 
“டே அண்ணா உன்கூட பேச முடிஞ்சா நா ஏன் வேற யாருக்கோ கால் பண்ணி உன் விஷயம் கேக்கறேன்?. நீ ஏன் போனை ஆஃப்பண்ணி வைக்கற? அத சொல்லு முதல்ல“, அண்ணனுக்கேற்ற தங்கையாய் பொரிந்தாள் மஹதி. 
“அது.. இங்க ஒரே தொல்லை மஹி”, என்றவனின் ஸ்ருதி குறைந்திருந்தது. 
“என்ன தொல்ல?”
“அது…ஹோம் லோன், பர்சனல் லோன் இத வாங்கிக்கோ, அத வாங்கிக்கோ ன்னு ஒரே தொல்லை… அதான்”, இப்போது ரங்கா குரலில் சிரிப்பு இருந்தாற்போல் இருந்தது. 
“சரி அண்ணா, நீ தூங்கு, நாளைலேர்ந்து ஆபிஸ் போறேன்-ன்னு சொல்லத்தான் கூப்பிட்டேன்.”
“இனி எதுவா இருந்தாலும் எனக்கே கால் பண்ணு. ஓகே?”
“ஓகே.  பை குட் நைட்.”
)))))))))))))))))
மஹதி அலுவலகம் செல்ல ஆரம்பித்த நான்கே நாட்களில், ஒன்று  தெரிந்துகொண்டாள். ரேவா-வில் ‘ஆஷுதோஷ் இன்றி ஒன்றும் நடவாது’ என்பதுதான் அது. அவனின்றி அணுவும் அசையாது என்பதுபோல அவனறியாமலும் ஏதும் நடப்பதில்லை. 
முன்பே எல்லா துறைகளையும் புள்ளி விபரக்கணக்காக சொன்னவனாயிற்றே? இப்போது ரேவாவின் உற்பத்தி பிரிவு முழுவதும் ஏட்டி வடிவமைத்தது எனும்போது கேட்பானேன்?
விற்பனை பிரிவு தவிர மற்ற அனைத்தும் அவனது கட்டளைக்கு காத்திருந்து செயல்பட்டது. ரங்கண்ணா அங்கிருந்த படி அதை கவனித்தால் அது சீராக சென்றது. ஆனால் தற்சமயம் வெளிநாட்டில் நடைபெற உள்ள இயந்திர பொருட்காட்சியில் ரேவா-வுக்கான விற்பனை நிலையத்திற்கான (ஸ்டால்) வேலைகளை விற்பனை பிரிவுக்கு ஆஷு பகிர அந்த வேலை கனஜோராக நடந்தது.  
சுந்தர் பாதி நாட்கள் அலுவகம் வராததால், அங்குள்ள அன்றாட நடப்புகளுக்கும் தீர்வைத் தேடி அனைத்து துறையினரும் ஆஷுவிடம் தான் வந்தார்கள். வேலைப்பளு அதிகமாக இருந்ததில் மெலிந்து கன்னத்து எலும்புகள் துருத்தியபடி இருந்தான். 
மஹதி ஆபீஸ் சென்ற முதல் நாளே, “இது இப்போ பண்ற புது மெஷினோட டிசைன் & டிராயிங். பாருங்க பாத்து ஸ்டெடி பண்ணுங்க. எதாவது டவுட் இருந்தா கேளுங்க. பட் அதோட இந்த அட்மின் டிபார்ட்மென்ட் நீங்க பாத்தா, எனக்கு கொஞ்சம் வேலை குறையும்”, என்றான். 
சரி என்ற ஒப்புக்கொண்ட பின்னர், நாட்கள் இறக்கை கட்டி பறந்தது. சிலநாட்கள் ஏட்டியை பார்ப்பது கூட அரிதாக இருக்கும். அவன் ஏதாவது துறையில் அதி தீவிரமாக வேலையை மேற்பார்வை செய்து கொண்டிருப்பான். முரளிகூட இப்போது அனாவசிய பேச்செல்லாம் விடுத்து தனது வேலையில் மும்முரமாக இருந்தான். நிறுவனமே ஜூரவேகத்தில் பணியாற்றி ற்று என்று சொல்லலாம். எல்லோரின் கவனமும் குவியமாக நடைபெறப்போகும் பொருட்காட்சியில் இருந்தது. அது ஆரம்பிப்பதற்குள் இந்த இயந்திரம் தயாராக இருக்க வேண்டும் என்பது ஆஷுதோஷின் இலக்கு. 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில், ஜெர்மனியில் நடைபெற வேண்டிய ‘மெஷினரி எக்ஸ்போ’ இரண்டு மாதங்கள் தள்ளி போனது.அதை ரேவாவுக்கு சாதகமாக ஆஷு பயன்படுத்திக்கொண்டான். முன்பானால் மினியேச்சர்களை மாடல்களாக தர எண்ணி இருந்தான். இப்போதோ,முழு இயந்திரத்தையும் உருவாக்கி அதன் செயல்முறையை காணொளியாக காண்பிக்க திட்டமிட்டு இருந்தான். 
எதிர்பார்த்த கெடுவுக்கு ஒருவாரம் முன்னதாகவே இயந்திரத் தயாரிப்பு முடிந்துவிட, அதிக நேரம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையுடன் விடுப்பும் வழங்கினான் ஆஷுதோஷ். 
சனிக்கிழமை மாலை நேரத்தில் உற்பத்தி பிரிவு வேலையாட்கள் அனைவரும் வேலை முடிந்து சென்றிருக்க, அவ்வியந்திரம் வேலை செய்வதை காணொளியாக பதிவு செய்ய தேர்ந்த புகைப்பட வல்லுநர்களை ஆஷுதோஷ் வரவழைத்திருந்தான்.  அங்கே வீடியோ பதிவு நடந்து கொண்டிருந்தது. முக்கியமான ஆப்ரேட்டர்களைத் தவிர வேறு யாரும் தேவைப்படாததால் ஆஷுதோஷ் அவனது அலுவலகம் நோக்கி நடை போட்டான். 
அறையில் அமர்ந்து அடுத்த வேலைக்கான திட்டமிடலை துவங்கலாமென்று எண்ணிய ஆஷுதோஷின் காதுகளில் வரதராஜன் பேசும் சப்தம் கேட்க,
“ஒருவேளை பிரமையா?”, என நினைத்தவன் 
காதை கூர்மையாக்கி  மற்றொரு முறை கேட்டு அது ராஜின் குரல்தான் என்று  ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான். 
உடனடியாக எழுந்தவனின்  கால்கள் குரல் வந்த இடம் நோக்க தானாக நடந்தன. அப்படி  ஆஷுதோஷ் சென்றது சிலமாதங்கள் முன்பு வரை வரதராஜனின் அலுவலக அறையாகவும் இப்போது மஹதியினுடையதாகவும் இருக்கும் அறை. 
மஹதியின் கணினியில் இருந்துதான் வரதராஜனின் குரல் வருகிறது என்பதை அறிந்தவன், ‘ராஜ் பேசறத கேக்கலாமா கூடாதா?’ என யோசித்து ஓரிரு நொடிகள் நின்றான். திடீரென ஆஷு கனெக்டிங் டோர் திறந்து உள்ளே வர, ஒரு நொடி திகைத்து, பின் அவனது பார்வை கணினியில் இருப்பதையே அறிந்து அமைதியானாள். ‘தந்தைக்கும் ஏட்டிக்கும் இருந்த நட்பு குறித்து மஹிக்கு நன்றாகத் தெரியுமே?’ 
ஏதும் பேசாமல் தனது அருகே இருந்த இருக்கையை மஹதி இழுத்துப் போட, ஆஷுவும் அமர்ந்துகொண்டான். வீடியோ முடியும்வரை,ஏன் முடிந்து சில நொடிகளுக்கு ஆஷு அமைதி காத்தான். 
“இத உங்களுக்கு எப்போ அனுப்பினார்?”
“டாட் இறந்ததும் எனக்கு வர்ற மாதிரி செட் பண்ணி இருந்தார்போல, சோ நெக்ஸ்ட் டே எனக்கு இந்த வீடியோ வந்துச்சு.”
“ஹ்ம்ம். ராஜ் என்கிட்டே கடைசியா பேசும்போது இந்த டிஷர்ட் தான் போட்டுட்டு இருந்தார்”, என்று சின்ன வருத்தம் இழையோட ஏட்டி சொன்னான்.
“ம்ம்?”, மஹதியின் ம்ம் தொண்டைக்குள்ளேயே அடங்கியது. 
நீண்ட பெருமூச்சொன்றை விட்டு கண்களை மூடிக்கொண்ட ஆஷு, “வெல் எக்ஸ்போ க்கு ரெடியாயிட்டிங்களா மேம்?”, என்று பேச்சை மாற்றினான். மஹதி அவனை இலக்கின்றி வெறிக்க,  “நமக்கான வேலைகள் நிறைய இருக்கு, மைல்ஸ் டு கோ. இல்லையா மேம்?”
‘ஆம். எத்தகைய இழப்பாக இருந்தாலும் எங்கும் எதிலும் தேங்கிவிட முடியாதே? யார் ஆற்றுவார் ? காலம் ஆற்றும்மெல்ல இயல்பிற்கு வந்து ஆமோதிப்பாக தலையசைத்தாள் மஹதி.
ஜெர்மனி பொருட்காட்சிக்கு நிறுவன பிரதிநிதியாக சுந்தர், ஆஷு மற்றும் மஹதி மூவரும் சென்றனர். அவர்களுக்கு முன்பாக ரேவா-வின் நால்வர் அடங்கிய குழு ஒன்று அங்கே சென்று ஸ்டால் கட்டமைப்பு வேலைகளை செய்திருந்தது. விற்பனைப்பிரிவை தன் வசம் வைத்திருக்கும் ரங்கராஜன், தற்போதுள்ள சூழலில் அங்கே வர இயலாது என்று சொன்னதால் அவனது பிரிவில் இருந்த நால்வரை அனுப்பி வைத்தான். 
சர்வதேச அளவிலான விளம்பரங்கள், ரேவாவின் புது இயந்திரங்கள் தேவைப்படும் நிறுவனங்களுக்கு இவர்கள் அனுப்பிய பிரத்யேக அழைப்புகள் என்று ஏராளமான முஸ்தீபுகள் செய்திருந்ததால், புது இயந்திரத்துக்கான எதிர்பார்ப்பும் ஆர்வமும் அதிகமாக இருந்தது. 
இவர்கள் ஸ்டாலுக்கு வந்த நிறுவனங்களுக்கு சிற்றேடு மற்றும் இயந்திரத்தின் மினியேச்சர் இரண்டையும் கொடுத்து, பார்வையாளர்களை அங்கே பிடித்து வைத்தார்கள். அடுத்து அதன் செயல்முறை விளக்க காணொளியும் காட்சிப்படுத்தப்பட, இயந்திரத் தேவை உள்ளவர்கள் மட்டுமல்லாமல், அனைவரும் பாராட்டினர். ஐந்து நாட்கள் நடந்த கண்காட்சியில் கிட்டத்தட்ட இருபது நிறுவனங்கள் இவர்களது இயந்திரத்தை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது. 
மூன்று நிறுவனங்கள், முன் பணத்தையும் தந்து வியாபாரத்தை உறுதி செய்தது. சர்வதேச அளவில் ரேவா-வின் மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. 
அதிலும் கடைசி நாளன்று, இந்த ஆண்டின் ‘சிறந்த ஆக்கபூர்வமான தயாரிப்பு’ விருது ரேவா-வுக்கு கிடைக்க, மஹதி சுந்தர், மற்றும் இவர்களோடு வந்த அனைவருமே உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். 
ஆஷுதோஷ்க்கோ வரதராஜன் சொன்ன ‘இந்த ப்ரொடக்ட் மட்டும் மார்க்கெட்க்கு வந்தா ரேவா தான் வேர்ல்ட் நம்பர் 1’ அவனது காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. “நா குடுத்த வார்த்தையை காப்பாத்திட்டேன் ராஜ் (i’ve kept my promise Raj) நண்பனிடம் மானசீகமாக சொன்னான்.
ஆனால் அவனுக்குத் தெரியும் இது முடிவல்ல, ஆரம்பம். இன்னும் ரேவா போக வேண்டிய தூரம் அதிகம். தன் நண்பனின் நம்பிக்கையை காப்பாற்ற ஆஷுதோஷ் இதுவரை செய்தவை ஒன்றுமில்லை என்பதுபோல அதை தக்க வைக்க இனி ஆஷுதோஷ் செய்யப்போகும் வேலைகளும் அதிகம்தான்.

Advertisement