Advertisement

அத்தியாயம் 13
மஹதி லண்டன் சென்று பத்து தினங்களுக்கு மேல் ஆகியிருந்தது. சுந்தர் அவ்வப்போது தொடர்பு கொண்டு தங்கையின் நலம் விசாரித்தான். ரங்கா தினமும் பேசுவான். விஷயமில்லை என்றாலோ அல்லது அவனுக்கு வேலை அதிகமிருந்தாலோ ஒரு காலை வணக்கம் மட்டுமாவது வரும்.  
ஆஷுதோஷைப் பொறுத்தவரை, அவள் லண்டன் வந்த பின் இருமுறை தொடர்பு கொண்டான்.
முதல் முறை வாட்சப் காலில் லண்டன் சென்று சேர்ந்த பின் பரsபர விசாரிப்புக்காக. மற்றொரு முறை நிறுவன கோப்புகள் வருடாந்திர தணிக்கை அறிக்கை என்ற தலைப்பில், ‘உங்கள் பார்வைக்கு’ என்ற குறிப்போடு மின்னஞ்சலில் வந்தது. இதே தகவல் அறிக்கையை அனைத்து இயக்குனர்களுக்கும் அனுப்பி இருந்தான். 
ஆடிட்டர் அங்கிள் அனுப்ப சொல்லியிருப்பார் என்று நினைத்தவள், அந்த இனைப்பை திறந்து பார்த்தாள். 
அவ்வறிக்கைகளைப் பார்த்த மஹதிக்கு முதலில் அதில் இருப்பது ஆங்கிலம் என்பதைத் தவிர வேறொன்றும் புரியவில்லை. பிறகு, இது ரேவா-வின் சென்ற ஆண்டுக்குண்டான லாப நட்ட கணக்கு என்பது புரிந்தது. 
தீர ஆராய்ந்து பார்க்கும் அளவு அவளுக்கு நேரமில்லை என்பதோடு, நிறுவன தணிக்கைகள் ஆடிட்டர் அங்கிளின் வேலை என்பதால் அந்த விஷயத்தை அதோடு விட்டாள்.
அந்த விஷயம் மட்டுமல்ல அடுத்து எந்த விஷயமுமே முக்கியமானது அல்ல என்பது போல அவளது படிப்பு மற்றும் அது சம்பந்தமான வேலைகள் மஹதியை ஆட்கொள்ள, அங்கே பொறுப்பானவர்கள் கவனிக்கும்போது, வீணாக இங்கே கவலைப்படுவானேன் என்று முழுமூச்சாக தன் ஆராய்ச்சிக் கட்டுரையில் இறங்கினாள் பெண்.
)))))
இடையிடையே ஒரு சில நிகழ்வுகள் நடந்தன. மஹதி சென்ற இரண்டாவது வாரமே சுந்தர் பாதியில் நிற்கும் தனது இரண்டாவது பட வேலைகளை ஆரம்பித்து விட்டான். தினமும் மதியம் அல்லது மாலை ஒருமுறையாவது ரேவா செல்லும் தனது வழக்கத்தை வாரம் மூன்று முறை என்று மாற்றி அமைத்துக் கொண்டான். நிறுவன பொறுப்பு முழுதும் ஆஷுதோஷிடம் ஒப்படைத்திருந்தான். 
ஆஷுதோஷ் முன்பே சொல்லியிருந்தபடி ரேவா வின் உற்பத்திப் பிரிவு மூன்று ஷிஃப்ட் வேலை செய்தது. மூன்றிலும் ஆஷுவின் புதிய இயந்திரமே பகுதி பகுதியாக தயாரிக்கப்பட்டது. அவனது இலக்கு இரண்டு மாதத்தில் வரப்போகும் சர்வதேச கனரக இயந்திர பொருட்காட்சி. அங்கு காட்சிப்படுத்துவதற்காக இவனது தயாரிப்பை மினியேச்சராக (* இயந்திரத்தின் மிக சிறிய வடிவம் ஆனால் அச்சு அசலா அது போலவே இருக்கும்) வடிவமைத்து அதில் பங்கேற்பவர்களுக்கு தருவதற்கு ஆயத்தமாகிக் கொண்டு இருந்தான். 
அங்கே அனந்தபூரில் ரங்கராஜனின் மேற்பார்வையில் வேலை ஒப்பந்தம் (ஒர்க்ஸ் காண்ட்ராக்ட்) சரியாக நடந்தேறத் துவங்கியது. ஸ்கில்டு, செமி-ஸ்கில்டு வகையான தொழிலாளர்களை ரங்காவே நேரடியாக நியமித்தான். தினக்கூலிகளை மட்டும் இதற்கென இருக்கும் பிரத்யேகமான ஏஜென்ட் மூலம் தருவித்துக் கொண்டான்.
அவனது துறையான விற்பனை பிரிவு மட்டுமல்லாமல் இப்போது விற்பனைக்கு பின்னான சேவை துறையிலும் சீரான வேகத்தில் கால் பதிக்க ஆரம்பித்தான். 
அங்கே ரங்கராஜனின் ஒரே பிரச்சனை உணவு. ஆம். அந்த சுரங்கத்தில் அமைந்திருந்த மெஸ் உணவு அவனுக்கு ஒவ்வாமையைத் தந்தது. முதல் வாரம் ஏதும் தெரியவில்லை. அடுத்தடுத்த நாட்களில் வயிற்றுப்போக்கு, ஜுரம் என்று ஒருநாள் விட்டு ஒருநாள் ஏதேனும் சங்கடம் ஏற்பட்டது. முதலுதவிக்கு எடுத்து வந்த மருந்துகளை வைத்து இரண்டு வாரங்கள் ஒப்பேத்தினான் என்றுதான் சொல்லவேண்டும். 
ஆனாலும் மஹதி போன் செய்தபோது தனது உடல்நலம் குறித்து மறைக்காமல் தெரிவித்தான். “முடிலைன்னா விடுண்ணா, அடுத்த ஆர்டர்-ல பாத்துக்கலாம்”, என்று கூட மஹி சொல்லிப் பார்த்தாள். ஆனால் ரங்காவுக்கு அப்படி விட்டு செல்ல மனமில்லை.
ரங்கராஜனின் வேலை என்னவோ மேற்பார்வைதான் ஆனாலும் மணலும் தூசியும் தும்பும் நிறைந்த பொட்டல் காட்டில் (Site) இருந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.
ஒருபுறம் ரேவாவின் போட்டி நிறுவனமோ, எப்போதடா ரங்கராஜன் சென்னை போவான்?,  ரேவா-வில் பணியிலுள்ள  தினக்கூலிகளையோ, அவர்களுக்கு மேல் வேலை செய்பவர்களையோ அவர்கள் பக்கம் இழுத்து ரேவா-வின் இயந்திரத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தோடு கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்த்திருந்தனர். 
அவர்களுக்கும் இதுதானே சமயம்? ரேவா குழுமத்தைப் பொறுத்தவரையில்  இதுநாள் வரை திறம்பட தொழிலை நடத்தி வந்த வரதராஜன் இறந்துவிட்டார், அடுத்து தலையெடுத்த வாரிசுகளில் ஒருவன் திரைப் படமெடுக்கிறேன் என்று போய் விட்டான்.
அடுத்த உள்ளவனோ இதுகாறும் போதையில் முழ்கிக் கிடந்தவன், இனி ரேவா அவ்வளவுதான், என்று தொழில் வட்டத்தில் பரப்ப வேண்டுமென்றால், ரங்கா இந்த வேலையை வெற்றிகரமாக முடிக்கக் கூடாது. இதை துவக்கமாக கொண்டு மேற்கொண்டு வெளிவட்டாரத்தில் கொஞ்சம் கயிறு திரித்தால் போதுமானது. தொழில் துறையைப் பொறுத்தவரை ஒருமுறை நம்பகத்தன்மையில் சந்தேகம் வந்தால் அதிலிருந்து மீள்வது கடினம்.
இவர்களுடைய ரேவா மிகப்பெரிய நிறுவனம் என்றாலும், கணிசமான ஆர்டர்களை இழக்க வாய்ப்புள்ளது. ஆனால் அடிப்படை உறுதியாக இருப்பதால் வீழ்ந்தாலும் மீண்டு எழுமென்பது நிச்சயம். அதற்கு குறைந்தது இரு வருடங்களேனும் ஆகும். ரங்கராஜன் அந்த வாய்ப்பை அடுத்தவர்களுக்கு கொடுக்கத்  தயாராக இல்லை. 
தந்தை இறக்கும்வரை அவருக்குத் தராத நிம்மதியை ஈடு செய்ய ரங்கராஜனால் இயன்ற காரியம், அவர் உயிராக நினைத்த தொழிலை லாபகரமாக கொண்டு செல்வது என்று முடிவெடுத்தான். 
இதை ஒரு பிராயச்சித்தம் போல ரங்கா செய்ய நினைத்தது தவறில்லை. ஆனால், உடலை கெடுத்துக் கொண்டாவது இக்காரியத்தை செய்து தீர்வது என்று முடிவெடுத்தது, அவன் வாழ்க்கை பாதையை அடியோடு மாற்றப் போவதை அறியாமல், தற்போதைய உடல் உபாதைகளையும் வலியையும் பொறுத்தான்.
முரளியோ முழு மூச்சாக ஆஷுதோஷின் இயந்திரத்துக்கு தேவையான மென்பொருள் கட்டுமானத்தில் இறங்கி இருந்தான். அவன் ஆஷுதோஷை பார்க்கும் பார்வையே மாறி இருந்தது. ‘கற்றாரை கற்றாரே காமுறுவர்’ என்று மூதுரையில் சும்மாவா சொன்னார்கள்? இருவருக்குமே மற்றவர் பால் பரஸ்பர மதிப்பு தோன்றியிருந்தது. சிறப்பென்னவென்றால், முரளிக்கு உதவியாக மூன்று மென்பொறியாளர்களை வேறு ஆஷுதோஷ் நியமித்து இருந்தான். மொத்தத்தில் அனைவரும் அவரவர் வேலைகளில் மூழ்கியிருந்தனர்.
வேலை நேரத்தில் ஒருநாள் ஆஷுதோஷ்க்கு அழைப்பு வர, யாரென்று பார்த்தான். தொழிற்சாலையின் டை செக்ஷனில் வேலையாக இருந்தான். “ஹலோ சொல்லுங்க”
“ஸார், நேனு இக்கட சைட்-லனுச்சி மாட்லாடுதானு” [சார் நா சைட்-லேர்ந்து பேசறேன்”]
“செப்பண்டி ஏ சைட்டு?” [சொல்லுங்க , எந்த சைட்டு?”  (இவர்களது இயந்திரம் பல்வேறு மாநிலங்களில் இருப்பதால் எந்த சைட் என்று கேட்டான் ஆஷு.)]
“ஸார் அனந்தப்பூர் ஸார்”
“ஹா? ஏன்ட்டி?” [சரி, என்ன?]
“இக்கட ரங்கா சாரு கிந்த படி போயிரண்டி, ஹாஸ்பிடலுக்கு தீஸ்கெல்லேம்..”  [இங்க ரங்கா ஸார் கீழ விழுந்துட்டார், ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம்]
குரலில் பதட்டம் வந்து அமர, “ஆய்னக்கு எவைந்தி?”[அவருக்கு என்னாச்சு?]
“தெல்லேத்  சார், டாக்டர் ஏமோ இன்டி மனுஷி எவரென உன்ட்ட பாகுன்டுந்தி அனி..”, என்று இழுக்க.. [“தெரில சார், டாக்டர் என்னமோ வீட்டு ஆளுங்க இருந்தா நல்லா இருக்கும்னு…”]
வீட்டு ஆட்களோ? இங்கே யார் இருக்கிறார்கள்? பார்கவி அண்ணி? போவார்களா? இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு..? சுந்தர் இருப்பது மேற்கு வங்கத்தில் இருக்கும் துர்காபூரில், அங்கு  இருக்கும் செயில் (SAIL) நிறுவனத்தோடு மொத்த இரும்பு கொள்முதலுக்கான பேச்சு வார்த்தைக்காக சென்றிருந்தான். மூன்று தினங்களுக்கு முன்புதான் ஹைதையில் இருந்து வந்திருந்தான். வந்து இரு தினங்களுக்குள் மேற்கு வங்கம் சென்று விட்டான் 
 “சரி. ஆய்ன இப்புடு எலா உன்னாரு?” [சரி அவர் இப்போ எப்படி இருக்கார்?]
“இப்புடு ஷ்ருக ஒச்சிந்தண்டி. மாட்லாடுத்தாரா?” [இப்போ நினைவு வந்துடுச்சு.பேசறீங்களா?]
“ஹ்ம்ம். இவ்வன்டி“ [ ம்ம்.குடுங்க],என்றதும் போன் கைமாறியது.
 “சார் என்னாச்சு?”            
“ம்ப்ச். புட் பாய்சன்னு சொல்றாங்க”, தீனமாக ரங்காவின் குரல் வந்தது. “எனக்கு ஒண்ணுமில்ல. இப்போ சரியாயிடுச்சு. இங்கத்தி புட் எனக்கு சேரல. அதான்…”,  என்று ஆஷுவுடம் பேசிய ரங்கா, அருகே நின்றவனைப் பார்த்து, “மீரு வெல்லண்டி, அக்கட ப்ரொடக்ஷன் ஆகி போதுந்தேமோ?”, என கவலைப்பட்டான். [நீங்க போங்க, அங்க ப்ரொடக்ஷன் நின்னு போயிடுமோ என்னமோ?]     
“லேதுசார், நா ஜூனியர்னி சூஸ்க்கோமனி செப்பே ஒச்சேனு” [இல்ல சார், என் ஜுனியர் கிட்ட பாத்துக்கன்னு சொல்லிட்டுதான் வந்தேன்]. ஆஷுவை அம்போவென விட்டு ரங்கராஜன் அங்கே அவனிடம் பணியில் இருக்கும் சீனியர் சர்வீஸ் எஞ்சினியரிடம் பேசிக் கொண்டிருந்தான்.  
“சார் .. சார்”,ஆஷு இரண்டு மூன்று முறை அழைக்க, அலைபேசியை தனது காதருகே கொண்டு சென்றான் ரங்கராஜன்.
“ம்ம். சொல்லு ஆஷு..”
“சார் நீங்க இப்போதைக்கு அங்கேயே இருங்க. அனந்தப்பூர்க்கு பிளைட் சர்வீஸ் இல்ல. சார்ட்டட் பிளைட் புக் பண்ண முடியுமா பாக்கறேன்.அப்படி இல்லன்னா, என் ஃப்ரெண்ட் கிட்ட உங்களை பெங்களூர் ஏர்போர்ட் வரைக்கும் துணைக்கு வர ஏற்பாடு பண்றேன். இங்க வந்துடுங்க”
“நோ வே ஆஷு. அந்த XXX கம்பெனிக்காரன் இங்கேயே ஸ்டெ பண்ணி நா எப்படா அசருவேன்னு பாத்துட்டுருக்கான். இப்ப அங்க வந்தா சரியா வராது, லீவ் இட். நா பாத்துக்கறேன்”, என்றான் ரங்கராஜன்.
“ஸார், இப்போ அது முக்கியமில்லை..”
“எனக்கு முக்கியம் ஆஷு”, என்ற ரங்காவின் குரல் எஃகு போல உறுதியாக இருந்தது. 
அடுத்து என்னமோ பேச வந்த ஆஷு, சிலநொடி நிதானித்தான். “சார் நா மறுபடி கூப்பிடுறேன்”, என்று விட்டு இணைப்பை துண்டித்தான்.
சொன்னதுபோல அரைமணி நேரம் பொறுத்து ரங்காவை அழைத்தான். ஆனால் அதற்குள்ளாகவே ரங்கா அவன் உட்கொண்ட மருந்தின் வீர்யத்தினால் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான்.
இரண்டு மணிநேரம் சென்ற நிலையில் ரங்கா கண்விழித்த போது அவன் அருகே ஆஷுவின் அப்பா நீலகண்டன் இருந்தார்.
“வணக்கம், நா ஆச்சு அப்பா, அவன் உங்கள பாத்துக்க சொல்லியிருக்கான்”, என்றார்.
ஆச்சு-ன்னா ஆஷுவா? அறிவு தர்க்கிக்கும்போதே, ‘அப்பாடா தமிழ்’, தன்னைப்போல மனம் ஆசுவாசம் கொண்டதை அறிந்த ரங்காவின் எண்ணம்.. ‘இங்கிலீஷ் பேசினாலும் தமிழன்டா’. நிஜம்தானே?
கீற்றாக புன்னகை முகத்தில் படர, அவனையறியாமல், “நம்மூர் சாப்பாடு கிடைக்குமா?”, என்று கேட்டான்.
“ஹஹஹ”, வாய் விட்டு சிரித்து, “கையோட கொண்டாந்திருக்கேன், வாங்க சாப்பிடலாம்”, என்றார் நீலகண்டன். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து அன்று மாலையே அவரது வீட்டுக்கு அருகே இருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைத்தார் நீலகண்டன்.
))))))))))
மஹதியின் ஆராய்ச்சி இதோ அதோவென அவள் சென்ற இரண்டரை மாத காலத்தில் முடிந்தே விட்டது. அவளது ஆராய்ச்சி பற்றிய கட்டுரையை பிரசுரிக்க ஏற்பாடாகி இருக்க, மஹதி தனது சக மாணவனிடம், “இனிமே நீ பாத்துக்க. எனக்கு இந்தியாக்கு போகணும்”, என்று கிளம்பி விட்டாள்.
சென்ற முறை போல அல்லாமல் அவளுக்கு கொண்டு செல்ல ஏராளமான லக்கேஜ் இருந்தது. இங்கே அவள் தங்கி இருந்த வீட்டில் புழங்குவதற்காக வாங்கிய பொருள்கள் (நண்பர்களுக்கு இலவசமாக கொடுத்தது போக மீதமுள்ளவை), அண்ணன்களுக்கு, அண்ணி அக்கா மற்றும் யுவா ஸ்ரீநிதிக்கு என்று பார்த்து பார்த்து வாங்கிய பரிசுகள், இவளது ஆடைகள். இவை தவிர புத்தகங்கள் மட்டுமே இரண்டு ஸ்டோரிலியை நிறைத்துக் கொண்டன.
சகோதரர்களுக்கு தனது வருகை குறித்து தெரிவிக்கும்போது, வழமைபோல ரங்கா அனந்தபூரிலும், சுந்தர் எங்கோ தொலைதூர மலைப்பிரதேசத்தில் நடக்கும் படிப்பிடிப்பு தளத்திலும் இருப்பதை தெரிந்துகொண்டாள்.
இப்போது ஹீத்ரு வி.நி. வந்ததும் ரங்காவுக்கு, ‘லண்டனில் இருந்து புறப்பட்டுவிட்டேன்’,  என்று சொல்வதற்காக  பேசியில் அழைத்தாள்.
‘இதே அப்பா இருந்திருந்தா எந்த வேலையா இருந்தாலும் விட்டுட்டு ஏர்போர்ட் வந்துருப்பார்’, குண்டூசிக் குத்தலாக பெற்றவருக்கும் சகோதரர்களுக்குமான ஒப்புமை தோன்ற.., மனம் விம்மியது. சுந்தர்,ரங்கா இருவருக்கும் வேலைதான், முன்பை விட பொறுப்பாகத்தான் இருக்கிறார்கள். ஆனாலும்..?, மஹதிக்கு என்னவோ ஒரு ஏமாற்றம்.
‘நீ எப்போ இருந்து சென்டிமென்டல் ஃபூல் ஆன மஹி?’, விமான நிலையத்தில் தடுப்புக்காக போடப்பட்டிருந்த  கண்ணாடி முன் நின்று புருவம் உயர்த்தி தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள். கலங்கிய கண்களில் இருந்த கண்ணீர் தானாக உள்ளிழுக்கப் பட்டிருந்தது.
ரங்கராஜன் லைனில் இருப்பதை உணர்ந்தவள் , “அண்ணா, இதோ கிளம்பிட்டேன். லக்கேஜ் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. இங்க ஏர்போர்ட் வரைக்கும் என் பிரெண்ட்ஸ் கூட ஹெல்ப்புக்கு வந்தாங்க. அங்க பிக்கப்-க்கு வரும்போது நம்ம ட்ரைவரோட இன்னொருத்தரையும் வர சொல்லுண்ணா”, என்று ரங்காவிடம் தெரிவித்தாள்.
“ஓகே மஹி, இன்பர்ம் பண்ணிடறேன். இப்போ சைட்-ல இருக்கேன் நீ வந்ததுக்கப்பறம் எனக்கு பிங் பண்ணு. ஓகே?”
“ம்ம்”, என்று சொல்லி செக் இன் செய்து ஒவ்வொரு ஸ்ட்ரோலியிலும் தனது பெயர் கொண்ட சிறிய சிட்டையை  (tag) கோர்த்தாள். அது பொதிகளுக்கான தானியங்கு வார்பட்டியில் ஏறி விமானத்தின் வயிற்றுப்பகுதிக்குள் ஏற்றப்படும். ‘இனி கோவை வரை பெட்டிகளை பாதுகாக்கும் கவலையில்லை. இந்த ஷோல்டர் பை ஒன்று மட்டும்தான்.’
முன்பு கோவையில் இருந்து ஹீத்ரு வந்த பயணத் திட்டபடி அவளது இப்போதைய பயணமும் இருக்க, எந்த சிரமமும் இன்றி கோவை விமான நிலையம் வந்திறங்கினாள் மஹதி.
வி.நி . வந்து சேர்ந்ததும் ரங்காவுக்கு ஒரு தகவல் அனுப்பி விட்டு, தனது லக்கேஜ்களை திரட்டிகொண்டு வெளியே வந்தவள் ஓட்டுநருக்காக காத்திருந்தாள்.
அந்நேரத்தில் யார் வரவுக்காகவோ காத்திருந்த ஒரு குடும்பம், ஒரு பெண், ஏழு மற்றும் ஐந்து வயதில் இரு பிள்ளைகள் இருந்தார்கள். சட்டென மலர்ந்த புன்னைகையுடன் விடுவிடுவென வேகமெடுத்து மஹ்தியின் அருகே வந்தவரை  “டேடி”, என்று கட்டிக்கொண்டனர். யாரும் ஆரவாரமாக கத்தி கூச்சல் போடவில்லை என்றாலும், அக்குடும்பத்தின் மகிழ்ச்சி அங்கே அனைவர்க்கும் தெரிந்தது. அத்தனை நெகிழ்வானதொரு காட்சி.
அத்தருணத்தை படம் பிடிக்க மஹதிக்கு ஆவலாய் இருந்தபோதும் அவர்களின் ப்ரைவசியை கெடுக்கக் கூடாதென்பதற்காக சற்றே தள்ளி நின்றாள். மீண்டும் ஒருமுறை அவர்களை பார்த்து விட்டு தலை திருப்பியவளுக்கு, ‘அந்த பொண்ணுக்கு ஏறக்குறைய என் வயசு இருக்குமா? ரெண்டு அல்லது மூணு வருஷம் பெரியவளா வேணா இருப்பா, அப்பா சொன்னபோதே எனக்கு ஏன் கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணல? பண்ணியிருந்தா குட்டியா பசங்க இருந்திருப்பாங்க இல்ல? இப்படி அனாதையா நிக்க வேண்டி..’, என்று நினைத்தவள், “ஹே .. இது என்ன இன்னிக்கு பூரா தப்புத்தப்பா யோசிக்கிறேன்’, வாய்க்குள் முணுமுணுவென  சொல்ல..,  ‘உண்மையைத்தானே சொன்னேன்?’ என்று மனசாட்சி கேள்வி கேட்டது.
“ஹலோ..”,என்ற பரிச்சயமான குரலில் திரும்பியவள்,அங்கே ஆஷுதோஷ் நின்றதும்,
‘ஓ! ஏட்டி வந்திருக்கானா?’, சின்ன மலர்ச்சி வந்தது.
“ஹாய்”, என்று மஹதி சொல்லி முடிக்கும்முன்.. ,
“அத்த.. “, என்று இன்னும் இரண்டு குரல்கள் வர, அங்கே யுவராஜ் மற்றும் ஸ்ரீநிதி.
“ஹே யுவா, நித்துமா”, எதிர்பாரா ஆனந்தத்தில் அகமும் முகமும் மலர கீச்சிட்டாள் மஹதி.
வேகநடைபோட்டு வந்த ஸ்ரீநிதி தன் அத்தையைக் கட்டிக்கொள்ள, மஹதியோ அவளை இறுகப் பற்றி தூக்கிக்கொண்டாள். சொடக்கிட்டாற்போல் அவள் மனதின் வெறுமை காணாமல் போனது.
“என்னடா ஏர்போர்ட்கே வந்துட்டீங்க? ஸ்கூல் இல்லியா?”, மஹதிக்கு உணர்ச்சி வசப்பட்டதில் தொண்டை கரகர வென்றது.
“இன்னிக்கு லீவ் அத்த. நாங்க கார்டன்-ல விளையாட்டு இருந்தோமா ஆஸு அங்கிள்தான் உங்கள பாக்கலாம்ன்னு சொல்லி கூட்டிட்டு வந்தாரு”, யுவராஜ்.
அவன் எங்கே என்று தேடிய மஹதி, இவளது லக்கேஜ் ட்ராலியோடு வெளியே சென்றவனைப் பார்த்தாள். மற்றுமொரு ட்ராலி இருந்தபடியால் அதற்கு காவலாக இவர்கள் நின்றனர்.
அந்த பெட்டிகளை காரினுள் வைத்துவிட்டு உள்ளே வந்த ஆஷுதோஷ், மஹதியின் அருகே இருந்த ட்ராலியை எடுப்பதற்காக கிட்டே வர, இவளது உணர்வுகள் அவனுக்கு நிச்சயம் புரியாது என்று தெரிந்த போதும் மெல்லிய குரலில் ‘தேங்க்ஸ்’ என்றாள்.
“எதுக்கு தேங்க்ஸ்? பிக் அப் பண்ண வந்ததுக்கா?”, என்று கேட்டவனுக்கு அவளது கலங்கி இருந்த கண்கள் தெரிய, ‘மேம்?’ என்று கேட்க நினைத்தவன்.. “மதி..?”, என்று நிறுத்தினான்.

Advertisement