Advertisement

நீயொரு  திருமொழி சொல்லாய்
அத்தியாயம் 12 1
மஹதி லண்டன் புறப்பட்டு செல்லும் நாள் இதோ வந்தே விட்டது. ரங்கண்ணாவுடன் இது குறித்து ஏற்கனவே பேசி இருந்ததால், காலையில் அலைபேசியில் விபரம் தெரிவித்ததோடு சரி. அடுத்து சுந்தரண்ணா நேரே மஹதியின் அறைக்கு வந்து உன்னை வழியனுப்ப விமான நிலையம் வரை வருகிறேன் என்று சொன்னது எதிர்பாரா ஆச்சர்யம். 
பொதுவாக அப்பாதான் இவளை வழியனுப்ப வருவார். சுந்தரண்ணா கூட ஒருமுறை தந்தையிடம், “அப்பா.. இன்னும் நாலு மணி நேரத்துல அவ பெஹ்ரைன்-ல இறங்கணும். அடுத்து ஒரு கனெக்டிங் பிளைட் பிடிச்சு லண்டன் போகணும். அதுவரைக்கும் கூட போவீங்களா? இதெல்லாம் அவளுக்கு டவுன் பஸ் மாதிரி”’, என்று இதைக் குறித்து கிண்டல் செய்துள்ளான். இப்போது அண்ணாவே வழியனுப்ப வருகிறேன் என்று சொல்லவும், ‘அப்பாவை மிஸ் பண்ணுவேன்னு நினைச்சு வர்றார் போல’, என்று மஹதிக்குத் தோன்றியது. 
இரவுதான் புறப்பாடு என்பதால், காலையில் மஹதியும், சுந்தரும்  அவரவர் அலுவலகங்களுக்குச் சென்று விட்டனர். மஹதி தனது காரில் ஏறும் நேரம் பார்த்து முரளி தனது இரு சக்கர வாகனத்தில் வர, “குட் மார்னிங் முரளி”, சொன்னாள். 
“மார்னிங் மஹி”, என்றவன், “ஆபீஸ்தான? ஜஸ்ட் ஒரு ரெண்டு நிமிஷம் இரு. நானும் வந்துடறேன்”, என்று விட்டு தனது தமக்கையைப் பார்க்கச் சென்றான். 
கார் ஓட்டுநர் மஹதி பக்கம் திரும்பி ‘என்ன செய்யட்டும்?’ என்பது போல பார்க்க, “வெயிட் பண்ணுங்க”, என்றாள். 
முரளிக்கு காத்திருந்த இடைப்பட்ட நேரத்தில் ஏட்டியோ அல்லது ஏட்டியின் வாகனமோ கண்ணில் தென்படுகிறதா என்று பார்த்தாள். ஆஷுவை நேற்று அலுவலகத்தில் பார்த்ததோடு சரி, அதன் பிறகு உற்பத்தி பிரிவுக்குச் சென்றான் என்ற தகவல் மட்டுமே மஹதிக்கு வந்தது. 
வீட்டிலும் மஹதி தன் வழமையான உறங்கும் நேரமான இரவு பதினோரு மணிக்கு, தனது அறையைத் தாள் போடும்போது கூட கவனித்தாள். அவன் வந்ததற்காக எந்தவித அடையாளமும் இல்லை. ஒருவேளை உறங்குகிறானோ என்று நினைக்க முடியாமல், அவன் எப்போதும் விடிவிளக்கு போட்டபடிதான் தூங்குவான் என்பதால் அப்படியும் கொள்ள முடியவில்லை. 
‘சரி எப்படியும் அலுவலகத்தில் பார்த்து விடலாம்’, என்று நினைத்து, ‘எங்க இந்த முரளி? இன்னும் காணோம்?, தனது கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்தாள்.
நல்லவேளையாக மேலும் மஹதியைக் காக்க வைக்காமல் முரளி வந்துவிட, இருவருமாக அலுவலகம் கிளம்பினார்கள்.
“அப்பறம் முரளி, ரேவா எப்படி இருக்கு?”
“ப்ரம்மாண்டமா இருக்கு”, என்று சிரித்தான்.
“உங்களுக்கு பிடிச்சிருக்கா?”
“கண்டிப்பா.. “
“நேத்து என்ன பண்ணினீங்க? என்ன தெரிஞ்சிகிட்டீங்க?”
“ம்ம். ப்ரொடக்ஷன் யூனிட் பாத்தோம், என்னவோ ஒரு புது மெஷின் தயாரிக்கிறாங்க. பட் அதைவிட, ஆட்டோமேஷன் யூனிட் எனக்கு பிடிச்சிருந்தது. ஏன்னா, அது என்னோட ஃபீல்ட் பாரு?”
“ஓ! அப்டியா?  எனக்குத் தெரியாதே?”, ‘ஆனா ஏட்டிக்கு நேத்தே தெரியும்’
“ஹஹா தானியங்கு தொழில்முறை, தட் ஈஸ் இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் அதுலதான் நா பிஜி பண்ணினேன். ஆப்வியஸ்லி, பெரிய பெரிய இயந்திரங்களை, நம்ம கைக்குள்ள வச்சு வேல வாங்கறது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்”, என்றான் முரளி கண்கள் மின்ன. 
“ம்ம்? உங்களுக்கு அந்த டிபார்ட்மென்ட் சரியா வரும்னு ஏட்டி நேத்திக்கே சொன்னார்.”
“ரியலி?”, என்று கேட்ட முரளி, “அதென்ன மஹி? நீ மட்டும் ஆஷுவ ஏட்டின்னு கூப்பிடற? அதையே நா சொன்னா அந்தாளு முறைக்கறார்?”   
“உஷ். முரளி அந்தாளு அப்டின்னு எல்லாம் சொல்லாதீங்க, அவர் அப்பாவோட பிரென்ட். அப்பாவே என்னோட போஸ்ட்-க்கு ஆஷுவை போடறேன்னு சொல்ற அளவு எஃபிஷியன்ட் பெர்சன்.”
“என்னதான் இருந்தாலும் அவன் மாச சம்பளம் வாங்கற ஒரு எம்பிளாயி தான?”, முரளியின் பேச்சில் அலட்சியம் இருந்தது. 
புருவம் மேலேற, “ம்ஹும்..“, என்றவள், “அப்படி பாத்தா நாங்களும் மாச சம்பளம்தான் வாங்கறோம் முரளி. நா நாங்கன்னு சொன்னது ரங்கண்ணா, சுந்தரண்ணா அவ்ளோ ஏன்  எங்கப்பா அப்பா உட்பட எல்லாருமே.. மாச சம்பளக்காரங்கதான். என்ன ஒன்னு டிவிடெண்ட்-ங்கிற பேர்ல அதை வாங்கிட்டு இருந்தோம். நா ரேவா-க்கு உபயோகமா இருக்கணும்ங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் மேற்படிப்பு படிக்கறேன். எனக்கு வர்றது ஸ்டைபண்ட் மாதிரி. அதுகூட இன்னும் ரெண்டே மாசம்தான்”, அழுத்தமான குரலில் கூறிய மஹதி, “இனிமே நீங்களும் ஜஸ்ட் மாச சம்பளம் வாங்கப்போற தொழிலாளிதான்”, சிரித்தாள். 
மஹதியின் சிரிப்பில், அழகாய் சிரிப்பது & ஆளுமையாய் சிரிப்பது இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் முரளிக்கு நன்றாகத் தெரிய, தன்னுள்  சட்டென ஒரு அசௌகரியம் உணர்ந்தான்.
தனக்கு மேலான அந்தஸ்தில் உள்ளவர்களோடு அல்லது ஒரு உயர் அதிகாரியோடு இருக்கும்போது  ஏற்படும் உணர்வு அது. முரளியை விட சிறியவளான மஹதி, தன் உடல்மொழியால் அந்த உணர்வை அவனுக்குத் தந்து கொண்டிருந்தாள்.  
சில நிமிடங்களில் சூழலை இலகுவாக்கும் பொருட்டு மஹதி அவளாகவே , “எனிவே, வெல்கம் டு ரேவா”, என்று முரளிக்கு வாழ்த்து சொல்லி கை  நீட்ட, முன் வந்த அவனது கைவிரல் நுனியைப் பற்றி குலுக்கினாள்.  
“ஆங். சொல்லணும்னு இருந்தேன், இந்த புது மெஷினுக்கு தேவையான சாஃப்ட்வேர் நீங்க ரெடி பண்ணனும்னு மிஸ்டர் ஆஷுதோஷ் பேசிட்டு இருந்தாரு. வேற டீடைல்ஸ் வேணும்னா அவர்கிட்ட வாங்கிங்க”, என்ற மஹதி, ‘உனது மேலதிகாரி ஆஷுதோஷ்தான்’ என்பதை மறைமுகமாக முரளிக்குத் தெரிவித்தாள். 
“யா  ஸ்யூர்”, முரளி சொல்லும்போதே அலுவலகம் வந்துவிட, “முரளி நா என்னோட ஆபீஸ் போறேன். நீங்க..?”, என்று இழுத்தாள். அதில், ‘உனக்கு என் அலுவலகத்தில் வேலை இல்லை, எங்கே வேலை உள்ளதோ அங்கே செல்’, என்ற பொருள் பொதிந்து இருந்தது.
“நா கம்ப்யூட்டர் செக்ஷனுக்கு போறேன் மஹி ஷ்.. ஐ மீன் மேம்”, என்றான் முரளி. 
அமர்தலான சிரிப்போடு மஹதி ரேவா-வின் பிரதான அலுவலகத்தில் இறங்கிக்கொள்ள, முரளி அவனது துறைக்குச் சென்றான்.
தனதறைக்குச் செல்ல மின்தூக்கியில் ஏறிய மஹதிக்கு, இப்போதே ஏட்டியைப் பார்த்து ‘நீங்க நினைச்சது சரிதான், முரளி ஆட்டோமேஷன் ஸ்பெஷலிஸ்ட்தான். அண்ட் கொஞ்சம் வாய் துடுக்கும் அதிகம்தான். அதான் அவனுக்கு நல்லா ஒரு லெக்சர் குடுத்தேன்’, என்று எண்ணியவளுக்கு காரில் நடந்த சம்பாஷணையை ஏட்டியுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.  
ஆஷுவின் அறையைக் கடந்துதான் அவளறைக்குச் செல்ல வேண்டும்? செல்லும் வழியில் அவனது அறைக்கதவு முழுமையாக திறந்திருக்க, உள்ளே அறையை சுத்தம் செய்யும் பெண் ஒருவர் கண்ணாடி மேஜையை துடைப்பதை பார்த்தாள்.     
அலுவலகத்திலும் அவன் இல்லை எனத் தெரிந்ததும் சற்றே சுணங்கி, ‘எங்க எனக்கு ட்ரெய்னிங் தர்றேன்னு சொன்ன இந்த பிரகஸ்பதியை காணோம்?’, என்றெண்ணினாள். 
நேற்று ஏட்டி தன்னிடம் பேசிய விதத்தை நினைத்து மெல்ல குறுநகை பூக்க, “ஸ்மார்ட் அண்ட் ஷார்ப் ”, என்று தனக்குள் பேசிக் கொண்டாள். சிறிது நேரத்தில் உதவியாளரை அழைத்து ஆஷுதோஷ் எங்கே எனக் கேட்க.., 
“மேம், ஸார் ஆடிட்டர் வீட்டுக்கு போயிருக்காரு, இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவார்”, என்ற பதில் கிட்டியது.    
 உதவியாளர் சொல்லி முடிக்கவும், ‘திங்க் ஆஃப் தி டெவில்’ என்ற சொலவடைக்கு ஏற்ப ஆஷுவிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது.
“ஹலோ?”
“மேம், ஆபிஸ் வந்தாச்சா?”
“எஸ்”
“உங்க ரூம்ல தான இருக்கீங்க?”
“ஆமா”
“ஓகே, உங்க டேபிள் மேல ஒரு ஃபோல்டர் பைல் இருக்கும்.  அத கொஞ்சம் பாத்துடுங்க”, என்றான்.
“ஓகே. ஆனா..?”
“நாங்க அங்க தான் வந்துட்டு இருக்கோம். வந்ததும் விபரம் தெரியும்”, என்று அழைப்பை துண்டித்தான்.
மஹதி அந்த கோப்புகளை பார்வையிட்டாள். நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர்களின் கூட்டம் குறித்த கடிதம், மேலும் அது சம்பந்தப்பட்ட இன்னபிற சட்ட வரைவு முதலானவைகள் இருந்தன. தான் இந்தியாவின் இல்லாத நேரத்தில் நிறுவனத்தை நிர்வாகம் செய்ய ஏதுவாக சுந்தரண்ணா,  ரங்கண்ணா இருவருக்கும் அலுவல் ரீதியான முடிவெடுக்கும் அதிகாரத்தை தருவதாக இயக்குனர் குழு ஒப்புதலளிக்கும் தீர்மானம் என்று மஹதிக்கு புரிந்தது.
சிறிது நேரத்தில் சொன்னபடி ஆஷு மற்றும் ஆடிட்டர் இருவரும் மஹதியின் அறைக்கு வந்தனர். 
தன் அப்பாவின் நண்பரான ஆடிட்டர் அங்கிளை பார்த்ததும் மஹதி எழுந்து இரண்டடி முன் சென்று, “வாங்க அங்கிள்”, வரவேற்றாள்.
“எப்டிர்றா இருக்க?”, என்று சொல்லி ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டார். நண்பன் இல்லாததை எண்ணி மனதில் வலி வந்து செல்ல அவர் குரலில் சின்ன கமறல்.
“ஹ்ம்ம்”, என்று இயலாமையோடு வெற்றுப் புன்னகை சிந்திய மஹதி, “லைஃப் ஹஸ் டு கோ ஆன்.. இல்லியா அங்கிள்?”, என்றாள். 
“ஆமாடா”, என்று அதற்கு மேல் அவளது தந்தை பற்றி பேசி சங்கடத்துக்கு உள்ளாக்காமல், “சுந்தர் அவன் சொன்ன மாதிரியே படம் ரிலீஸ் வரைக்கும் வந்துட்டானே?”, என்று கேட்டார்.
“ஆமா அங்கிள், நேத்து ரொம்ப சந்தோஷமா அண்ணா சொன்னாங்க.”
“ம்ம்.. ஊரெல்லாம் கடன் வாங்கி..? எப்டியோ ஒருவழியா முடிச்சிட்டான்.”
கவலையோடு, “எஸ் அங்கிள்”, சொன்ன மஹதி,
“அப்பாக்கு சுந்தரண்ணா படம் பண்றது பிடிக்கலைன்னாலும் அட்லீஸ்ட் பைனான்ஸ் பண்ணியிருக்கலாமே ? ஐ மீன் கடனாவாவது குடுத்துருக்கலாமே?”
“ஓ! அதுவா? இதமா கேட்டிருந்தா குடுத்துருப்பானோ என்னவோ? ஆனா உங்கண்ணன் வரதன் கிட்ட கேட்டது என்ன தெரியுமா? கம்பெனில அவனோட பங்கு-ன்னு எவ்ளோ இருக்கோ அதை எல்லாத்தையும் சினிமால போடணும்னு கேட்டான். அதுக்கு உங்கப்பா ஒத்துக்கல. உனக்குத்தான் உங்கண்ணனைத் தெரியுமே? ‘வச்சா குடுமி சரைச்சா மொட்டை’ கேஸ். உங்ககிட்ட இருந்து ஒரு பைசா கூட வாங்காம படம் ரிலீஸ் பண்ணி காமிக்கறேன்-னு சவால் விட்டான்.என்னவோ நேரம் நல்லா இருக்கப்போயி முடிச்சிட்டான்”, என்ற அவர் மஹதியை தன் கையருகே இருந்த இருக்கையில் அமர்த்தினார். பின், “சரி கதை அப்பறமா பேசலாம், நைட் லண்டன் போறியாமே?”
“ஆமா அங்கிள்,பட் சீக்கிரமே ரிட்டர்ன் வந்துடுவேன்”
“அதான் அந்த கேப்-ல இங்க கம்பெனி ரன் பன்னனுமில்லியா? அதுக்கு சில பேப்பர்ஸ் ரெடி பண்ணி இதோ இவன்கிட்ட குடுத்து விட்டேன். அதெல்லாமில்ல, நீங்களே கூட இருந்து எல்லா பார்மாலிட்டிஸும் முடிச்சி குடுங்கன்னு.. பாரு, காலைல எட்டு மணிக்கெல்லாம் வீட்ல வந்து நிக்கறான். பிரேக் பாஸ்ட் முடிச்சிட்டு வர்றேன், நீ போ-ன்னு சொன்னாலும் கேக்கல.  வெயிட் பண்றேன் வாங்க-ங்கிறான். இவனை என்ன விரட்டியா விடமுடியும்? சரின்னு என்னோட மத்த ப்ரொக்ராம்ஸ் தள்ளி வச்சிட்டு இங்க வந்தேன்”, சொன்னவர் சலிப்போடு சொன்னாலும் அதில் ஒரு பாராட்டு ஊடாடியது.  
இப்பாராட்டுக்கு உரியவனான ஏட்டியின் புறம் மஹதியின் பார்வை திரும்ப,அவனோ இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல நின்றான். முகத்தில் படர்ந்திருந்த அந்த மந்தஹாஸ முறுவல் இல்லையென்றால், இவர் என்னவோ இட்டுக்கட்டி பேசுகிறார் என்றதான் நினைத்திருப்பாள்.
‘பிடித்தால் உடும்பு பிடிதான் போல’, “ஓகே அங்கிள், அப்ப அந்த வேலைய உடனே முடிச்சிடலாம்.”
“உங்கண்ணனுங்க ரெண்டு பேரும், ஆறு மாசத்துக்கு ரேவா-வை நிர்வாகம் பண்ணலாம்னு எழுதியிருக்கேன். ஓகே தான?”
‘உயில் பற்றி கேள்விப்பட்டவுடன் மஹதியும்  இதைத்தானே ரங்காவிடம் சொன்னாள்?’ “எனக்கு அப்பாவோட வில் பத்தி தெரிஞ்சதும் இதத்தான் அங்கிள் ரங்கண்ணா கிட்ட சொன்னேன்”, என்று புன்னகைத்தாள் மஹதி. 
“ஓகே, அப்போ சைன் பண்ணிடு, நானும் ஒரு டைரக்டரா கையெழுத்து போட்டுடறேன். சுந்தரும் ரங்காவும் எங்க இருக்காங்க?”
அவர் சுட்டிய இடங்களில் கையெழுத்திட்டபடி, “அண்ணா பட ரிலீஸ் சம்பந்தமா வெளிய போயிருக்கார் அங்கிள், எப்படி இருந்தாலும் டெய்லி ஈவ்னிங் ஆபீஸ்க்கு வந்துடுவார். ரங்கண்ணா கம்பெனி விஷயமா அனந்தபூர் போயிருக்கான்.”
“ஓகே மா அப்ப நா புறப்படறேன். ஏதாவது தேவைன்னா என்னோட பர்சனல் நம்பர் இருக்கில்ல அதுல கூப்பிடு”, என்று தனது கண்ணாடியை கழட்டி அதற்குரிய டப்பாவில் போட்டு, தனது  இருக்கையில் இருந்து எழுந்தார். 
பின்னால்  நின்றவனைப் பார்த்து, “என்னப்பா ஆஷு, என் வேலை முடிஞ்சது. நா கிளம்பலாம் இல்லியா?”, என்று அவன் தோளைத் தட்டியவர், மஹதியைப் பார்த்து,“உங்கப்பாக்கு ஏத்த ரைட் ஹாண்ட் இவன்தான். வேலை முடியிற வரைக்கும் விடமாட்டான்”, என்று விட்டு கிளம்பினார். 
)))))))))))))

Advertisement