Advertisement

அத்தியாயம் 12 3
எது செய்தாலும் நேர்த்தி, திட்டமிடல் அதோடு அக்கறை என்று ஆஷுவின் குணங்களை மஹதியின் மனம் உணர்ந்ததுபோல, அவனது வெம்மையை மஹதியின் உள்ளங்கை உணர்ந்தது.
ஒரு வழியாக வீடு வர, ஆஷுதோஷ் “சார் நா மறுபடியும் ஆபீஸ் போகணும்.”
“என்ன?”
“ஏன்?”
“இன்னும் ரெண்டு மாசத்துல புது மெஷின் ரெடியாயிடனும். அதோட அடுத்து வர்ற இன்டெர்னஷனல் எக்ஸிபிஷன்-ல நம்ம ப்ராடக்ட் டிஸ்பிளே பண்ணனும்னு ஐடியா. சோ அது முடியற வரைக்கும் வேற எந்த ப்ரொடக்ஷனும் பண்ணப் போறதில்ல”,என்றவன்.. எதோ நினைவு வந்தது போல, “வர்ற வாரத்துலேர்ந்து ஒர்க்கை மூணு ஷிப்ட் -டா மாத்தப்போறேன் சார்”, என்றான்.
அப்போது வாசலில் அரவம் கேட்டு வீட்டின் உள் விளையாடிக்கொண்டிருந்த சுந்தரின் பிள்ளைகள் இருவரும் எட்டிப்பார்த்து, ‘டாடி’ என்று மலர சிரித்தனர்.  பதிலுக்கு கையாட்டி சிரித்த சுந்தர், ஆஷுவிற்கு அவசரமாக, “ஓகே ஓகே” சொல்லி வேகநடை போட்டு குழந்தைகளைக் காணச் சென்றான்.
பின்னால் வந்த மஹதி,  ‘ஹ்ம்ம். சுந்தரண்ணா எப்படி பசங்க இல்லாம கொஞ்ச நாள் இருந்தார்ன்னு தெரில’, யோசித்தபடி வீட்டினுள் செல்ல ஆரம்பிக்க…
“உங்க முரளி ரொம்ப வேகமா இருக்கார்”, என்ற ஏட்டியின் குரல் மஹதியை நிறுத்தியது.
“ஆஹான்?”, அட நேற்று அவனைப் பற்றி குறையாக சொன்னவன் இன்று பாராட்டுகிறானே? என்று மஹதி நினைத்தாள்.
“யா, நம்ம புது மெஷினுக்கு ஆட்டோமேஷன் அவர்தான் பண்றார்”, என்றான்.
சற்றே தலை சாய்த்து, “அப்போ உங்க கிட்ட ட்ரெயினிங் எடுக்கற அளவு முரளி இருக்காருன்னு சொல்லுங்க”, சின்ன சிரிப்போடு கேட்டாள்.
“ஹ ஹ, நோ வே. அவரால ஒரு மெஷின் ஓடறதுக்கு உண்டான சாப்ட்வேர் தயாரிக்க முடியும். ஆனா மெஷினை.. ?”, வாய்ப்பே இல்லை என்பதுபோல இடவலமாக தலையசைத்து கட்டைவிரலை கவிழ்த்து காண்பித்தான்.
“ஹ்ம்ம்.”
“பட் சொன்னா புரிஞ்சிக்கிறார். நல்ல ஸ்பார்க் இருக்கு”, என்றவன் “ஓகே. கொஞ்சம் வேலை இருக்கு, போகணும்”.. அண்ட் கைநீட்டி, “போன் வோயாஜ்”, சொல்லி அவளது வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைய  வாழ்த்தினான்.
கைகுலுக்கி, ஒரு “தேங்க் யூ”, வோடு வாழ்த்தை ஏற்றுக் கொண்டாள் மஹதி.
))))))))))))
இரவு உணவு முடித்து மேலே தனது அறைக்குச் சென்ற மஹதி, மளமளவென பயணப்பொதியை தயார் செய்தாள். புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் விமானநிலையத்தில் இருக்கவேண்டும் என்பதால் சற்று துரிதமாகவே கிளம்பினாள்.
பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி பயனச் சுமை ஏதும் இல்லை. ஒரு ஸ்ட்ரோலி அதோடு ஒரு தோள் பை அவ்வளவே. கடவுசீட்டு, விமான பயணசீட்டு முதலானவற்றை தோள் பையில் வைத்து ஜிப் போட்டாள்.
அப்போது இந்த ஜிப்பினால் மாலையில் நெற்றியில் ஏற்பட்ட காயமும், அக்காயத்தை ஏற்படுத்தியவனின் அந்நேர பதைபதைப்பும் மஹதியின் நினைவடுக்கில் வந்து சென்றது. எழுந்து சென்று நிலைக் கண்ணாடி முன் நின்று முகத்தைப் பார்த்தாள்.
அப்போது ரோஜா நிறத்தில் இருந்த காயம் கருப்பாக மாறி பொருக்கு தட்டி இருந்தது. அவளது மாசு மருவில்லா முகத்தில் கோடு கிழித்தாற்போல் இருக்க, தடவிப்பார்த்தாள். பொருக்கு  இரண்டொரு நாளில் உதிர்ந்துவிடும். ‘ஆனா இந்த தழும்பு..? போகுமா?, அது இனிமேதான் தெரியும்’
மஹதியின் சிந்தனை இழையை, “எல்லாம் எடுத்து வச்சுட்டியா மஹி? ரெடியா?”, என்ற அண்ணனின் குரல் அறுக்க, பின்னோடு பார்கவி அண்ணியும் வந்தாள்.
“எஸ் அண்ணா, எல்லாம் பாக்ட்(packed)”
“குட்”, சுந்தர்.
“மஹி உன்கிட்ட ஒன்னு கேக்கனுமேடா?”, பீடிகையோடு அண்ணி.
“சொல்லுங்க அண்ணி”
“நீ அங்க வெளிநாட்ல யாரையாவது… ?”
‘என்ன கேக்க வர்றீங்க?’ என்பதுபோல புருவம் முடிச்சிட கேள்வியாக பார்கவியைப் பார்த்தாள் மஹதி.
“அது வந்து.. நீ யாரையாவது பாட்னரா.. ஐ மீன்..?”
“சுத்தி வளைக்காம நேரா கேளு கவி. ஒண்ணுமில்ல மஹி, நீ யாரையாவது லவ் பண்றியா-ன்னு கேக்கறதுக்குத்தான் இப்படி உங்க அண்ணி திக்கித் திணர்றா”, என்றான் சுந்தர்.
விரிந்த புன்னகையுடன், “ஹாஹா இல்லைண்ணி, நானும் தேடிகிட்டேதான் இருந்தேன். ஒரு வெள்ளைக்காரனும் நம்ம டேஸ்ட்க்கு கிடைக்கல”, என்றாள்.
மஹ்தி பதில் சொன்ன தோரணையில் சுந்தர், பார்கவி இருவருமே சிரித்தனர். “அப்போ நாங்க மாப்பிளை பாத்தா.. ?”,என்று பார்கவி இழுக்க…
“இவ தேறமாட்டா”, என்று மனைவியைப் பார்த்து சலித்துக்கொண்ட சுந்தர், தங்கையிடம் திரும்பி, “மூணு வருஷம் முன்னாடி, அப்பா கிட்ட முரளிக்கு உன்னை பொண்ணு கேட்டாங்கடா. இப்போ உன்னை இங்க பாத்ததும் பார்கவி அம்மா அப்பா என்கிட்ட கேட்டாங்க. அப்போ அப்பா கூட அதுக்கு ஓகே சொன்னதா ஞாபகம். நீ படிக்க போகலைனா முடிச்சிருப்பார் கூட. அதான்..”, என்ற சுந்தர் தொடர்ந்து..
“ஓஹ்!”, ‘இதனால்தான் பத்தாம் நாள் காரியத்துக்கு வந்தவர்கள் அநேகம்பேர் இவளை குறுகுறுவென பார்ப்பது போலவும், என்னமோ கைகாண்பித்து கிசுகிசுப்பது போலவும் தனக்குத் தெரிந்ததா?’
“முரளி பத்தி எனக்கு, ரங்காக்குன்னு எல்லாருக்குமே நல்லா தெரியும், வெளிநாட்ல படிச்சிருக்கான். பொறுப்பா இருப்பான். இதெல்லாம் விட, அப்பா ஓகே சொன்ன சம்பந்தம். ஏன் முடிக்கக்கூடாதுன்னு தோணுது”, சுந்தர் தொடந்தான்.
“…”, உண்மையில் மஹதிக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் வாளாவிருந்தாள்.
“அதை மனசில வச்சுத்தான் நம்ம கம்பெனிக்கே வேலைக்கு வர சொன்னேன். அதோட, ப்ரொடக்ஷன் பத்தி ஆஷு யாருக்காவது சொல்லித் தரனுமில்லியா? ஒருவேளை சட்டுனு ஆஷு பெரிய வேலை கிடைச்சு நம்ம கம்பெனி விட்டு வெளிய போனாலோ, ஒருவேளை அவன் தனியா கம்பெனி ஆரம்பிச்சாலோ, ஆஷு அப்படியெல்லாம் திடுதிப்புனு பண்ண மாட்டான்னு வச்சுக்கோ, ஆனாலும் ஒரு பேச்சுக்கு சொல்றேன், நமக்கு ஒரு பேக்கப் (back-up) வேணுமில்லையா? எல்லாமும் யோசிச்சுதான் முரளியை அப்பாயிண்ட் பண்ணினேன். கரெக்ட்தான?”
இப்போது பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று உணர்ந்த மஹதி, “அண்ணா, முரளிய அப்பாயிண்ட் பண்ணினதெல்லாம் ஓகேதான். ஆனா, மேரேஜ்..? அப்படி ஒரு ஃப்ரேம்க்குள்ள இன்னும் நா என்னை பிக்ஸ் பண்ணிக்கல. இப்போதைக்கு என்னோட ரிசெர்ச் முடியணும். தென் இங்க வந்து அடுத்து என்னன்னு பாக்கணும். சோ அது வரைக்கும் ..”
“ஓகே மா டேக் யுவர் டைம். ஆனா, அப்பா இறந்து ஒரு வருஷத்துக்குள்ள ஒரு நல்ல காரியம் நடந்தா அவர் ஆத்மா சாந்தியாகும்னு பெரியவங்க சொன்னாங்க.”
“பாக்கலாம்ண்ணா”, தட்டிக் கழித்தாள்.
“ஓகே அப்ப புறப்படலாமா?”
“ம்ம்.”, என்று சொன்ன மஹதி பார்கவியிடம், “அண்ணி நா இப்படி சொன்னேன்னு எதுவும் மனசுல வச்சுக்காதீங்க, நிஜமாவே அண்ணா சொன்னதுல இப்போதைக்கு எனக்கு எந்த ஐடியாவும் இல்ல.”
“பரவால்ல மஹி. நீ என்ன முடிவெடுத்தாலும் சரி, முன்னால நின்னு நடத்த நாங்க இருக்கோம். சந்தோஷமா போயிட்டு வா”, என்று வழியனுப்பினாள் பார்கவி.
கோவை விமான நிலையம் சென்று, போர்டிங் பாஸ் எடுத்து விமானத்துக்காக காத்திருக்கும் வரை இந்த பேச்சுகள் மீண்டும் மீண்டும் ஓடியது.
அவளது பயண திட்டப்படி, முதலில் கோவையிலிருந்து டெல்லி பின் டில்லியிலிருந்து லண்டன் ஹீத்ரு செல்ல வேண்டும் என்பதால் டெல்லி விமானத்துக்காக மஹதி காத்திருந்தாள்.
‘முரளி நம்ம மெஷினுக்கு ஸாப்ட்வேர் ரெடி பண்ணுவார் ஆனா மெஷினை?’ என்று கேட்டு கட்டை விரலை கவிழ்த்துக் காட்டிய ஆஷுதோஷும் நினைவில் வந்தான்.
அப்போது டெல்லி செல்லும் விமானத்தில் ஏறவேண்டிய பயணிகள் குறிப்பிட்ட வாசல் (கேட்) வழியாக செல்லாம் என்ற அறிவிப்பு வர, தனது போர்டிங் பாஸை மஹதி பையிலிருந்து எடுத்தாள். பாஸோடு டிக்கெட்டும் அவற்றோடு ஆஷுதோஷின் கைக்குட்டையும் கூடவே வந்தது.
தன்னை உரிமையாக ஏட்டி கடிந்ததும், கிஞ்சித்தும் பயமின்றி சுந்தரண்ணாவை குற்றம் சாட்டி பேசியதும், கடைசியாக அவனது கிண்டலான ‘ரெண்டு நாள் ட்ரெயினிங் வாங்க.. பாத்துட்டு சொல்றேன்’-னும் ஸ்லைட் ஷோவாக கண்முன் தெரிய, மஹதியின் இதழ்கடையில் முறுவல் தோன்றியது. அது அவளது பயணம் முழுக்க தொடரவும் செய்தது.

Advertisement