Advertisement

அத்தியாயம் 10

ரங்கராஜன் அவனது அலுவலகத்துக்குச் சென்ற பின்னர், ஆஷு, “என்ன மேம் புதுசா ஏட்டி-ன்னு..?”, என்று மஹதியிடம் கேட்டான்.

“அதுவா? உங்க சைன்-ல  A யும் T யும் கிராபிக்ஸ் மாதிரி அழகா இருந்துச்சு. தவிர, இந்த ஸுஷுல்லாம் இல்லாம கூப்பிடறதுக்கு ஈஸியா இருந்தது. அதான்”, என்றவள், தொடர்ந்து அவனிடம் அனுமதி கேட்பது போல, “ஓகே ஃபார் யூ?”, கேட்டாள்.  

“தட்ஸ்.. நோ ப்ராப்ளம்”, எனும்போதே நாகர்கோவில்காரரான தனது தந்தை அம்மாவை செல்லமாக ஏட்டி என்றழைப்பார்  என்பது ஆஷுவின் நினைவுக்கு வந்து சென்றது. பெற்றோர்களை யோசித்தவுடன் அவனையும் மீறி முகத்தில் ஒரு மென்னகை. நல்லவேளையாக மஹதி இவன் தந்த கோப்புகளில் பார்வை  வைத்திருந்ததால், ஆஷுவின் முகபாவத்தை கவனிக்கவில்லை.  

“அதென்ன கையெழுத்துல ஏ க்கும் டி க்கும் மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு குடுத்திருக்கீங்க? கேலிக்ராஃபி* படிச்சீங்களா?”, என்று அவன் தந்த பைலைக் குறிப்பிட்டுக் காட்டிக் கேட்டாள். 

“ஜஸ்ட் மூணுமாச கோர்ஸ் பண்ணினேன். அதும் ஆன்லைன்ல. பெரிசா என்னை ஈர்க்கல, சோ விட்டுட்டேன். ஆனா, அப்ப கத்துக்கிட்டது எனக்கே தெரியாம  கையெழுத்துல ரிஃப்ளக்ட் ஆகுது போல”, என்றான். 

“ம்ம். நைஸ்”, என்று விட்டு, மஹதி வேலையில் கவனமானாள். “ஓகே. நீங்க குடுத்த இந்த பேப்பர்ஸ் ஸைன் பண்ணிட்டேன், மெட்டீரியல் அனுப்பினவங்களுக்கு பணம் ட்ரான்ஸ்ஃபெர் பண்ணிட சொல்லுங்க”.

“ஷுயர் மேம்”, என்று அங்கிருந்த தொலைபேசியில் ஓரிரு எண்களை அமுக்கி, “அக்கவுண்ட்ஸ் ஹெட்..?”

“எஸ் ஸார்”

“இப்போ சப் ஸ்டாஃப் பெண்டிங் லிஸ்ட் பைல் தருவாங்க, பேமென்ட் பண்ணிடுங்க. ஆஸ் யூசுவல் எல்லா ரெஃபரன்ஸ்ம் மெயில் பண்ணிடுங்க. ஆங். மேம் மெயில் ஐடி மெசேஜ் பண்றேன். அதுக்கும் ஒரு காபி அனுப்பிடுங்க. ஓகே?”

“எஸ் ஸார்”, என்று பதில் வர, தொலைபேசி அழைப்பை துண்டித்து, உதவியாளரை அழைத்த ஆஷு, அக் கோப்பினை எடுத்து செல்லச் சொன்னான். 

பின், “நம்ம ஆபீஸ்ல எந்த எக்ஸ்டென்சன் நம்பர் எந்த டிபார்ட்மென்ட்டோட ஹெட்டொடதுன்னு உங்களுக்கு வாட்சப் மெசேஜ் அனுப்பி இருக்கேன். செக் பண்ணிக்கோங்க மேம். ஏதாவது டீட்டைல்ஸ் வேணும்ன்னா நேரடியா அவங்ககிட்ட கேக்கறத்துக்கு வசதியா இருக்கும்”

“ஓகே”, என மஹதி சொல்ல,டீ தொடர்ந்த சில பல உரையாடல்களுடன் அன்றைய தினத்துக்கான அலுவல் முடிந்தது. 

)))))))

வீட்டில் இரவு ஏழு மணி சுமாருக்கு மஹதி அறையின் கதவு மெலிதாக தட்டப்பட்டது. “எஸ் கமின்”, என்றதும்.., ரங்கா உள்ளே வந்தான். கொஞ்சம் பரபரப்பாக இருந்தான். 

“வாண்ணா” 

“மஹி,ஒரு விஷயம்”, என்று சொன்னவன் எங்கோ வெளியே புறப்படுபவன் போல முழு ஃபார்மல் உடையுடன் இருந்தான்.

அவனது பரப்பரப்பைப் பார்த்ததும் ‘ஒருவேளை பழைய ஞாபகம் தலை தூக்குகிறதோ?’ என்று ஒருகணம் துணுக்குற்ற மஹதிக்கு காலை அலுவலகத்தில் ரங்கா தனது தவறை உணர்ந்து பேசியது நினைவுக்கு வந்தது. ‘இல்ல வேற என்னவோ வேலையா இருக்கும்’, “என்னண்ணா வெளிய போறியா?”

“ஆமா மஹி, காலைல பேசினோமில்ல? அந்த ஆர்டர்.அது விஷயமாத்தான் கிளம்பிட்டு இருக்கேன். ஆர்டர் த்ரூ ஆயிடுச்சு.  25% அட்வான்ஸ் க்கு சரின்னு சொல்லியிருக்காங்க. ஆனா,நாம வழக்கமா 50% வாங்குவோம். நேர்ல வாங்க பேசி பைனல் பண்ணிக்கலாம்ன்னு சொன்னாங்க. சோ, புறப்படறேன்.”

“வாவ்! கங்கிராட்ஸ்ண்ணா. எப்படி போற? பஸ்லயா இல்ல ட்ரெயினா?”

“ட்ரெயின் ட்ரை பண்ணினேன் மஹி, டிக்கெட் இல்ல, அந்த ஊருக்கு நேரடியா பிளைட் இல்ல, பெங்களூரு போயி அங்கிருந்து டாக்சி பாத்து போகணும். அதைவிட பஸ்ல போயிடலாம்னு தோணுது.”

“உன்னோட கார் எடுத்துட்டு போலாமே அண்ணா?. இல்லியா கேப்(cab) பாக்கலாமே? எதுக்கு நெரிசல்ல பஸ்ல போயிட்டு?”, அக்கறையோடு மஹதி.

“ம்ப்ச். வேஸ்ட் ஆஃப் மணி மஹி,  அதுவுமில்லாம இன்னிக்கு நா டாக்சி-ல போனேன்னா, நாளைக்கு சின்ன சின்னதா ஸ்பேர்ஸ் ஆர்டர் எடுக்க போறவனும் டாக்சில போகணும்னு நினைப்பான். இப்ப நானே பப்ளிக் பஸ்ல போனா அவனும் அதையே பாலோ பண்ணுவான்”, என்றான் பொறுப்பானவனாக.

“ஆஹா.. ரங்கண்ணா, உன்கிட்ட நிறைய நுணுக்கங்கள் கத்துக்கணும் போல இருக்கே..?”, அண்ணனைக் கிண்டல் செய்தாள்.

தங்கையைப் பார்த்து சிரித்துக்கொண்டே, ரங்கா அலைபேசியில் சில எண்களை அழுத்தினான். 

“ஆஷு.. நான்தான் ரங்கா..”

“சொல்லுங்க ஸார்”

“அனந்தப்பூர் போறேன். அங்க எந்த லாட்ஜ் இல்லனா கெஸ்ட் ஹவுஸ் நல்லா இருக்கும்னு தெரியுமா?”

சில நொடிகள் யோசித்து பார்த்த ஆஷு, “ம்ம்..ரெண்டு உங்க டேஸ்ட்க்கு ஒத்து வரும். நல்ல டீசண்டாவும் இருக்கும்..ம்ம்…”, என்று இழுத்தவன்..”இப்ப  எங்க இருக்கீங்க சார்?”, கேட்டான்.

“இங்க வீட்ல தான்.. மஹி ரூம்ல இருக்கேன்”

“தோ வர்றேன் ஸார்”,என்று சொன்ன ஆஷுதோஷ் அடுத்த இரண்டாவது நிமிடத்தின் ஆரம்பத்தில் இவர்களைப் பார்த்து ஹாய் என்பது போல கையசைத்து வேக நடையோடு ரங்கராஜனின் அருகே வந்தான். 

பத்தடி தொலைவில் வந்துகொண்டே, “அனந்தபூர்..? ஆர்டர் ஓகேவாயிடுச்சா ஸார்?”, மிகுந்த எதிர்ப்பார்ப்போடு ஆர்வம் கண்களில் மின்ன ரங்காவை கேட்ட ஆஷு இரவு உடையிலிருந்தான். அப்போதுதான் அணிந்திருப்பான் போலும், மேல் சட்டையின் பொத்தான்கள் மூன்று போடாமல் இருக்க, அவனது கை அனிச்சையாக அதை பொருத்திக் கொண்டிருந்தது.

அவனது வேகம் கண்டு புன்னகைத்த ரங்கா, “யா,ஆர்டர் கிடைச்சிடுச்சு. பைனல் பண்றதுக்கு கூப்ட்டிருக்காங்க. அங்க ரெண்டு மூணு நாள் தங்க வேண்டியிருக்கும் அதான் நல்ல லாட்ஜ் கேட்டேன்”,என்றான். ஆண்கள் இருவருமே மஹதியின் அறை வாயிலில் நின்றனர்.

“என் பிரென்ட் ஒருத்தன் நம்பர் தர்றேன். அவன் உங்களுக்கு நல்ல ஹொட்டேலா காமிப்பான்”, எனக் கூறி நண்பனின் தொடர்பு எண்ணை ரங்கராஜனுக்கு அனுப்பிவைத்தான் ஆஷு.

“ஓகே”, என்று ரங்கா கிளம்ப, அவனோடு பேசியவாறே மற்றவனும் தனது அறைக்குச் சென்றான்.

ஆஷு, ரங்கா இருவரும் சென்றபின் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்த மஹதிக்கு நாளை ரங்கண்ணன் துணை இல்லாமல் தனியே அலுவலகம் சென்று தனி ஆளாக அனைத்து வேலைகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற நினைவே ஆயாசத்தைத் தந்தது. ஆனாலும் அண்ணனின் இந்த இமாலய மாற்றம் அவளுக்கு மகிழ்வையும் நிம்மதியையும் தந்தது. கூட சேர்ந்து உணவு உண்ண ஆளில்லாததால், டைனிங் ஹால் செல்லாமல் இரவு உணவை மேலே அவளது அறைக்கே தருவித்து முடித்துக்கொண்டாள்.    

மறுநாள் காலை மஹதி அலுவலகத்துக்கு புறப்படவென வீட்டிலிருந்து வெளியே வந்து தனது காருக்காக போர்டிகோவில் காத்திருக்க, அங்கே சற்று தொலைவில் காரேஜ் அருகே ஆஷுதோஷ் தனது இரு சக்கர வாகனத்தில் ஆரோகணித்தபடி யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். அவனது கவனம் முழுவதும் பேச்சில் இருந்ததால், மஹதியை கவனிக்கவில்லை. 

ஆனால் இவளோ ஆஷுவையும் அவனது மோட்டார் சைக்கிளையுமே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். அப்போது வழமையாக இவளை அலுவலகத்துக்கு கூட்டிச் செல்லும் கார், மஹதி ஏறிக் கொள்வதற்காக அவளருகே வந்து நின்றது.

சில நொடி தயங்கிய மஹதி, ஏதோ முடிவு செய்தவளாக டிரைவரிடம் “இது வேண்டாம் நா வேற வண்டில போறேன்”, என்று சொல்லி விட்டு ஆஷுதோஷை நோக்கி நடந்தாள். 

ஆஷு தனது பேச்சை முடித்துக்கொண்டு பேசியை கால்சராய்க்குள் வைக்கும்போது மஹதி இவனை நோக்கி வருவது தெரிந்தது.

ஹாஃப் வொயிட்டில் பேபி பிங்க் ((அரை வெள்ளை & குழந்தை ரோஜா நிறம்ன்னு சொன்னா எப்படி இருக்கும்? ஹஹ) எம்ப்ராய்டரி வேலைப்பாடமைந்த கோரா காட்டன் ஷார்ட் குர்தாவும், அதே வெள்ளையில் கால்சராயும் அணிந்திருந்த மஹதி இவனைப் பார்த்து முறுவலிப்பதைப் பார்க்க, ஆஷுதோஷுக்கு அப்போது பூத்த ரோஜா ஒன்று (கொஞ்சம் பெரிய சைஸ் பூ) அசைந்து வருவதைப் போலிருந்தது.  

வார்த்தை மறந்து அவளையே பார்த்து நின்றவனை மஹதியின் “குட் மார்னிங்”, கலைத்தது.

‘நிஜமாகவே இது ஒரு இனிய காலைதான்’ என்று ஆஷுவிற்கு தோன்றியது. அவளது  காலை வணக்கத்தில் அத்தனை புத்துணர்ச்சி. அவளது  புத்துணர்வு இவனுள்ளும் எதிரொலிக்க பளிச் சிரிப்புடன், “வெரி குட் மார்னிங் மேம்”, சொன்னான்.

“ஆபீஸ்க்கு தான?”

“யா..”, என்று ஒரு நொடி கேள்வியாக பின் யோசனையாக பங்களாவின் வாயிலைப் பார்த்தான். வாசலில் இருந்த போர்டிகோவில் மஹதியின் கார் நின்றது. அதை தவிர்த்து விட்டு இவனருகே வந்திருக்கிறாள் என்பதை புரிந்துகொண்டவன், ‘ஒருவேளை  என்னோட டூ வீலர்ல வர்றேன்னு சொல்லப்போறாங்களோ?’,  நினைக்கும்போது மனம் ஜிவ்-வென்று இருந்தது. 

இவன் எண்ணத்தை பிரதிபலிப்பது போல, “நானும் ஆபீஸ்தான் வர்றேன், வெயிட் பண்ணுங்க”, என்றாள் பெண்.

‘இவ்ளோ அழகான பொண்ணு, ரேவா-வோட எம்.டி. என் டூ வீலர்ல, என் பின்னால.. ஓ.எம்.ஜி.’, அக்னி நட்சத்திர காலத்தில் ஆசானி புயலடித்த சென்னையாக,ஆஷுவின் மனது ஜில்லென குளிர்ந்தது.

அவள் அமர்ந்தால் கால் வைக்க ஏதுவாக தனது வாகனத்தில் இருக்கும் ஃபுட் ரெஸ்ட்-டை வெளியே எடுத்து விட வண்டியின் பின் பக்கம் குனிந்தவனுக்கு, நடந்து வந்த மஹதி தன் பக்கம் வராமல் பக்கவாட்டில் இருந்த வாகனங்களை நிறுத்தி வைக்கும் காரேஜுக்குள் செல்வதை கவனித்து விட்டு, தான் செய்ய ஆரம்பித்ததை செய்யாமல் குழப்பத்தோடு மெல்ல நிமிர்ந்தான்.

ஐந்தே நிமிடங்களில் உள்ளே வாகன நிறுத்துமிடத்தில் இருந்து ‘டுபுட்டுபுடுபுட்டுபுடுபுட்டுபு’,என்ற வண்டியின் உறுமல் சத்தம்  கேட்டது. அடுத்து ‘ட்ர்ரூ…ம் ட்ர்ரூ…ம்’, சத்தத்தோடு அந்தக்கால இரும்புக்குதிரை ராஜ்தூத்தை ஓட்டிக் கொண்டு காரேஜில் இருந்து வெளியே வந்தாள் மஹதி. 

சுருட்டையான கூந்தல் பறக்க, குளிர் கண்ணாடி அணிந்துகொண்டு தென்றலாக வருபவளைப் பார்த்த ஆஷுதோஷ், தனைமறந்து வாய்விட்டு வாவ் என்றான்.

ஆஷுவின் அருகே வண்டியை நிறுத்திய மஹதி, “ரொம்ப நேரமாயிடுச்சோ?” 

“ப்ச்.ப்ச்.”, இல்லையென்பதுபோல தலையசைத்து மறுத்தான்.

“ஸ்டார்ட் ஆகுமோ ஆகாதோன்னு நினைச்சேன். ஆனா அப்பா இந்த வண்டிய எப்பவுமே கண்டிஷனா வைச்சிருக்கணும்னு நம்ம மெக்கானிக் கிட்ட சொல்லியிருந்தாரா?, அதனால ஒரு நம்பிக்கை. பாருங்க. பெட்ரோல் கூட ஹாஃப் டேங்க் இருக்கு. போலாமா?”, கேட்டாள்.

ஆஷுவிற்கு உள்ளே சின்னதாக ஏமாற்றம் எழுந்தாலும் சுதாரித்து, “எஸ்.. போலாம். வழி தெரியும்தான?”.

அவனது கேள்விக்கு மஹதி புன்னைகையை பதிலாக தர, தெரியும் என்பதை சொல்லாமலே புரிந்து கொண்டான்.  இருவரும் தத்தமது தலைக்கவசங்களை அணிந்துகொண்டு அலுவலகம் புறப்பட்டனர். 

நீண்ட நாட்கள் (வருடங்கள்?) பொறுத்து வாகனம் ஓட்டுவதால் இன்றைய கோவையின் நெரிசல் மிகுந்த சாலைகளில் வண்டி ஓட்டத் திணறுவாளோ என்று நினைத்த ஆஷு, அவளது லாவகமான டிரைவிங்கைப் பார்த்து, ‘ம்ம், நல்லாவே ஓட்றாங்க’, நினைத்தான்.

அலுவலகம் சென்றதும் தனது அன்றாட நிலைப்பாடாக ஒவ்வொரு துறையாக பார்வையிட மஹதி புறப்பட, உற்பத்திப் பிரிவில் இருந்த ஆஷுதோஷும் அவளுடன்  சேர்ந்து கொண்டான். ஆஷுதோஷுடன் பேசப்பேச மஹதிக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது.

அது ரங்கண்ணா உடன் வருவதற்கும் ஆஷுவுடன் வருவதற்குமான வித்தியாசம். குறிப்பாக தொழிலாளர்களிடமிருந்து வந்த எந்த கேள்வியையும் சந்தேகத்தையும் அனாயாசமாக தீர்த்து வைத்தான். ஆஷுவிடம் நிறுவனம் குறித்த  எல்லாவற்றுக்கும் பதில் இருந்தது.

இடையே அப்பாவின் நண்பரான ஆடிட்டர் ஒருமுறை ஆஷுவை அழைத்து, ரேவாவின் சென்ற வருட விற்பனை எத்தனை கோடி என்று கேட்டார். அடுத்த நொடியே எந்தவொரு சந்தேகமும் இன்றி பதிலளித்தான் ஆஷுதோஷ். குறிப்பாக கிளைகள் வாரியாக நிறுவனத்தின் விற்றுமுதல் எவ்வளவு என்று தெரிந்து வைத்திருந்தான். இந்த துறைதான் எனக்குப் பரிச்சயம் இது தெரியாது என பாகுபாடின்றி அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருந்தான். அப்பா ஏன் இவனை பக்கத்திலேயே வைத்திருந்தார் என்பது மஹதிக்கு இப்போது நன்றாகக் புரிந்தது.

கூடவே, ‘இப்போ ரங்கண்ணாவ எல்லா விஷயத்துலயும் நம்பலாம். தவிர, ரேவா-வோட சகல விஷயமும் அத்துப்படியா தெரிஞ்ச ஏட்டி இங்க இருக்கும்போது, கத்துக்குட்டியான நா ஒரு ரெண்டு மாசம் இல்லன்னா, பெரிசா என்னாயிடப்போகுது? சுந்தரண்ணா வேற அப்பப்போ வந்து பாத்துக்கறேன்னு சொல்லியிருக்கார். மேனேஜ் பண்ணிட மாட்டாங்க? லண்டன் போயி ஸ்டடிஸ் முடிச்சுட்டு வந்துடலாமா?’, என்ற யோசனை மஹதிக்கு ஸ்திரமாக எழுந்தது.

Advertisement