நிழல் தரும் இவள் பார்வை…

33

தன் தந்தையின் செய்கைகள்.. அம்முவின் காதில் விழுந்தது.. வீரா அண்ணன் மூலமாக தன் தந்தை செய்ததை தெரிந்துக் கொண்டாள் பெண். அப்படி ஒரு சந்தோஷம். ஆனாலும், கொஞ்சம் வருத்தம்.. எல்லோருக்கும் தெரிவது போல, அவர்களை தாங்கள்தான் அடித்தோம் என தெரியாமல் செய்துவிட்டாரே.. என எண்ணம் அம்முவிற்கு.

ஆனாலும், இதுபற்றி பேச.. தன் கருத்தை சொல்ல பயம் பெண்ணுக்கு. முகத்தில் ஏதும் காட்டவில்லை.. ‘அப்பாக்கு தான் இதில் ஈடுபாடு காட்டுவது பிடிக்காது..’ என தெரிந்து அமைதியாக இருந்தாள். இருந்தும் அவர்கள் குறித்த செய்தியை வீரா சொல்லும் போதெல்லாம்.. தன் தந்தையை அணைத்து முத்தம் கொடுக்க தவறுவதில்லை பெண். நந்தனுக்கும் இது நாள்பட நாள்பட புரிந்தது.. தானும் ஏதும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக பெண்ணின் செய்கைகளை ஏற்றார்.

நாட்கள் வேகமாக சென்றது… நந்தன் அம்முவை படிக்க.. இல்லை, சமஸ்ட்டார் மட்டும் எழுதும் படிச் சொல்லிக் கொண்டிருந்தார். அம்முவிற்கு ஏனோ நாட்டம் செல்லவில்லை.. அதில். தன் தோழிகள் எல்லோரும் இறுதியாண்டு.. தான் மட்டும் எப்படி இரண்டாம் வருடம் தொடங்கி எல்லாம் எழுத வேண்டுமே என கவலையில் இருந்தாள் பெண்.

இப்படி அப்படி என… அம்முவிடம் நந்தன் தொடங்கி..  அவினாஷ் வரை எல்லோரும் பேசி.. இரண்டாம் வருட.. தேர்வை.. முடிக்க செய்தனர். 

அம்மு எப்போதும் போல தன்வேலைகளை பார்த்தாள்..

ஆதி ஒருமுறை விடுமுறைக்கு வந்தான்.

அம்முவின் பிறந்தநாள் நாளை என்ற நிலையில்.. அம்மு என்னமோ அவினாஷ் நினைவாகவே இருந்தாள். நீண்டநாள் ஆகிற்று அவினாஷை பார்த்து, வாரம் ஒருமுறை.. ஏதேனும் காரணம் வைத்து இருவரும் அழைத்துக் கொள்வார்கள்தான்.. ஆனால், முகம் பார்த்து.. அருகில் நின்று, பேசி.. சண்டை போட்டு.. என எந்த நிகழ்வும் இல்லை இருவருக்குள்ளும். மீண்டும் தன்னவன் தன்னை விட்டு தூரமாக சென்ற நிலை.. அம்முவிற்கு. 

அதனாலோ என்னோமோ அம்மு, மிகவும் அவனை தேடினாள்.. இப்போது. ‘அன்று வேறு.. பிறந்தநாள் எப்போன்னு கேட்டாங்க’ என எண்ணிக் கொண்டே.. அவனிடமிருந்து என்ன வரும்.. நியாபகம் இருக்குமா.. என கனவு கண்டுக் கொண்டிருந்தாள் பெண்.

இரவு.. பனிரெண்டு மணி.. அம்முவின் நட்புகள் எல்லாம் பேசத் தொடங்கினர். அம்மு, கொஞ்சம் இதமாக உணர்ந்தாள்.. நேரம் சென்றதே தெரியவில்லை அரைமணி நேரம் எல்லோரும் குரூப் காலில் பேசி வைத்தனர்.

அம்மு, அதே நினைவிலே சற்று நேரம் இருந்தாள்.. மீண்டும் அவின் வந்து நின்றான் ‘இன்னும் கூப்பிடல.. மறந்துட்டாங்களா’ என ஒரு எண்ணம் ஓட.. தன் போனெடுத்து.. ‘இன்னிக்கிதான் என் பர்த்டே..’ என மெஸ்சேஜ் செய்தாள், வெட்கம் விட்டு. என்ன செய்தவது.. தன் காதலன் பற்றிதான் தெரியுமே அவளுக்கு.. என்னமோ, சொல்லியாவது.. ‘அவன் அழைத்தால் போதும்..’ என எண்ணிக் கொண்டு.. அவனுக்கு செய்தி அனுப்பி, காத்திருந்தாள்.

வந்து, விழுந்தது அவினாஷின் அலைபேசியில்.. அவளின் தகவல். 

அவினாஷ் போன்.. அனாதையாக அவனின் சேரில் இருந்தது. அவன் அரை கிலோமீட்டர் தூரம் தள்ளி நின்றுக் கொண்டிருந்தான்.. சுற்றிலும் பட குழு.. முக்கியமானக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது.. ஹிந்தி நாயகி.. காக்கி உடையில் தாடையில் ரத்தத்துடன் ஓடி வந்துக் கொண்டிருந்தாள்.. ஆட்கள் துரத்திக் கொண்டிருந்தனர்.. ‘ஒரு ரைட்.. இரண்டு லெஃப்ட்..’ என அவளுக்கான பாதையை சொல்லி, ஓட சொல்லிக் கொண்டிருந்தார் உதவி இயக்குனர். 

அவின், கேமராவின் தூரம், கோணம் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான்.. அடுத்த காட்சிக்கு.. அவனின் தமிழ் நாயகி தயாராக இருந்தாள். அந்த இடமே.. அர்த்த ராத்திரியில் பரபரப்பாக இருந்தது. இவனுக்கு, அம்முவின்  செய்தி வந்தது, தெரியவில்லை.

இரண்டு மணி வரை.. இடைவெளி இல்லாமல் படபிடிப்பு நடந்தது.. அதன்பிறகுதான் எல்லோரும் கிளம்பினர், எனவே தங்கியிருக்கும் இடம் வர.. மணி மூன்று.

இயக்குனர், அதன் பின் தன்னை தளர்த்திக் கொண்டு.. போனை எடுக்க.. விடியலை தொட்டது நேரம். 

அவினாஷ்க்கு, அவளின் செய்தி பார்த்ததும்.. உருகித்தான் போயிற்று.. ‘ச்ச… மறந்துட்டனா’ என தன்னைத்தானே திட்டிக் கொண்டான், சங்கடமாக போனது.. மனதே ஆறவில்லை.. ‘ஆயிரம் போன் செய்ய தெரியுது.. இது வேணும்.. அப்படி செய்.. அத்தனை வேலை வாங்குகிறேன்.. போனிலேயே.. பர்த்டேவ மறந்துட்டனா..’ என எண்ணிக் கொண்டு உருண்டுக் கொண்டிருந்தான்.. பெட்டில். 

உறக்கம் எல்லாம் கலைந்து போனது.. எப்போது மணி ஆறு ஆகும் என காத்திருந்தான். முன்போல.. அவளை எழுப்பி.. தன்னை நிருப்பிக்க நினைக்கவில்லை காதலன்.. அவள் விழிக்கும் வரை காத்திருந்தான் போல.. கண்ணில் அவள் முகம் மட்டும்தான்.. அன்று அவள் லெஹங்காவில் வந்த அழகை.. நினைத்துக் கொண்டிருந்தான், கனாக்காரன். 

மணி ஆறு என்றாக.. தன்னவளை அழைத்தான் போனில்..  இரண்டாம் முறைதான் எடுத்தாள் அம்மு. 

அவினாஷ்க்கு, காத்திருப்பு ஞானம் தந்ததோ.. மறதி காதல் தந்ததோ.. இல்லை, நீண்ட நாளைய பிரிவு ஏக்கம் தந்ததோ.. எது.. என தெரியவில்லை, அவள் ‘ஹலோ’ சொல்லவும்.. என்ன பேசுகிறோம்.. ஏது பேசுகிறோம்.. என  தெரியாமல் “எனக்காகதானே பிறந்த…” என்றான் ரகசிய குரலில். ரசனைகாரனாகிற்றே தெளிவாக திருத்தமாக காலையில் அவளை குழப்பினான். 

அம்முக்கு, எப்படி அவன் நிலை தெரியும்.. ஒன்றும், தூக்க கலக்கத்தில் புரியவில்லை.. அவளுக்கு, “ம்… என்ன” என்றாள்.

அவினாஷ்க்கு அதை பற்றி கவலையில்லை போல  “ஒரு கவிதை படிச்சிருக்கேன்.. சொல்றேன் கேளேன்…

‘பாலை வனத்திற்கென 

படைக்கப்பட்ட ஒட்டகம் போல.. 

நீ  எனக்கென படைக்கப்பட்டவள்..’ ன்னு ஒரு கவிதை.. 

அந்த மாதிரி.. நீ எனக்குன்னு தானே பிறந்த..” என்றான் மீண்டும் காந்தமானக் குரலில்.

அம்முக்கு, மனம் அதிர்ந்தது… விடியும் போதே.. பூமழை பொழியுமென கனவா கண்டால் அவள்.. அவனின் திடீர் தாக்குதல்கள் அப்படிதான் இருந்தது. ஹா.. தாக்குதல்கள்தான். 

‘என்ன ஆச்சு இவருக்கு’ என எண்ணம் ஓட.. அம்மு தன்னையறியாமல் “ம்…” என்றாள் அவ்வளவுதான். 

அவின் “என்ன பதிலே காணோம்.. இன்னும் தூக்கம் போகலையா..” என்றான். 

அம்மு பேசவில்லை “ம்… நீ.. நீங்க என்னமோ சொன்னீங்களா.. அதான் என்னான்னு யோசிச்சிட்டு இருந்தேன்…” என்றாள்.

அவினாஷ் “ம்.. யோசி.. யோசி…” என்றான் லேசாக சிரித்துக் கொண்டே..

அம்மு “என்ன சொன்னீங்க… ஒட்டகமா நானு…” என்றாள் கோவமாக. அவளிற்கு அது புரியவில்லை உண்மையாக.. குரலில் இவன் என்ன சொல்கிறான் என்ற ஏக்கம் இருந்தது. எனவே, வேகமாக ஒட்டகமா என கேட்டுவிட்டாள்.

அவினாஷ், சிரித்தான் சத்தமில்லாமல் “அது புரியாது… உனக்கு, ச்சு… இன்னொரு தடவை எல்லாம் சொல்ல முடியாது… அவ்வளோதான்.  அதோட முடிஞ்சது…”  என்றான் தன் ரகசியத்தை அவளிடமிருந்து காத்துக் கொண்டு திடமாக பேசினான். 

அவள்,  ‘என்ன’ என எழுந்து அமரும் போதே.. கனாக்காரன் “ஹம்… ஹாப்பி பர்த்டே… ஹாப்பி ஹாப்பி பர்த்டே… உன்னை சுற்றி இதே போல.. நல்லவர்கள் நிறைந்திருக்க.. வாழ்த்துக்கள்” என்றான்.

அவனுக்கும் தெரியும்.. இது இவளுக்கு புரியாது என.. ஆனால், அவனையறியாமல் வந்துவிட்டது அப்போது.. அந்த கவிதை. எனவே.. அமைதியாகிவிட்டான்.

அம்மு “ஹ… அவ்வளோதானா… “ என்றாள்.

அவினாஷ் “க்கும்… “ என்றான் எப்போதும் போல.. கெத்தாக.

அம்மு “தேங்க்ஸ்… அவின்” என்றாள்.

அவினாஷ் “என்ன கிபிட் வேணும்…“ என்றான், அவளை சமாதானப்படுத்தும் விதமாக.

அம்மு “ம்ஹூம்… ஒன்னும் வேண்டாம்.. நீங்க எப்படி இருக்கீங்க” என்றாள், இயல்பானக் குரலில்.

அவினாஷ் “ச்சு… அம்மு, சொல்லு..  என்ன வேணும். உன்கிட்ட எல்லாம்.. எதுவும்.. இருக்கும்தான்… ஆனா, ஏதாவது கேளேன்.. என்கிட்ட” என்றான், என்னமோ அவனின் குரல் கரைந்து வழிந்தது…

அம்முவிற்கு என்ன கேட்பது என தெரியவில்லை.. இதுவரை.. அவன் சட்டென இப்படி பேசுவான் எனவும் யோசிக்கவில்லை.. எனவே இரண்டு நிமிடம் அமைதியாக இருந்தாள் பெண்..

அவினாஷ்க்கு அவளின் யோசனை.. என்னமோ செய்ய.. “ம்.. சொல்லு” என்றான்.

அம்மு “எனக்கு ஷாப்பிங்.. ரொம்ப பிடிக்கும்.. உ.. உங்க கூட ஒருநாள் ஷாப்பிங்.. போலாமா.. வருவீங்களா…” என்றாள், எதிர்பார்ப்பும்.. ஆர்வமுமானக் குரலில்.

அவினாஷ் “ஹா… அவ்வளவுதானா.. ம்… கண்டிப்பா போலாம்.. வேற என்ன பிடிக்கும்..” என்றான்.

அம்மு “அதெல்லாம் சொல்ல முடியாது.. ஷாப்பிங் டேட் கன்ஃபோர்ம் பண்ணுங்க.. அப்புறம், மத்தத பேசலாம்..” என்றாள்.. தானும் அவன் போல சுதாரித்துக் கொண்டாள்.

அவினாஷ் “ம்… இருக்கட்டும் இருக்கட்டும்… இன்னும் ஃபோர்ட்டி டேஸ் ஷூட் இருக்கு… சோ, ரெடியா இரு.. எப்போ வேணா கூப்பிடுவேன்..” என்றான்.

அம்மு “ஹலோ… நீங்க வாங்க… நானெல்லாம் வர முடியாது.. நான்தான் கிஃப்ட் கேட்டேன்.. என்னையே வர சொல்றீங்க..” என்றாள்.

அவினாஷ் “ம்… வரமாட்ட… ம்… பார்க்கலாம்… ஹாப்பி பர்த்டே பேபி.. வைக்கட்டுமா.. கொஞ்சம் தூங்கணும்… பதினோரு மணிக்கு ஷூட் இருக்கு… பை..” என்றான்.

அம்முவிற்கு கண்ணெல்லாம் நீர்… என்னோ இப்போதான் எதோ பேசினான்.. அதுக்குள்ள பை’யா என தோன்றியது.. ஏதும் சொல்லவில்லை.. அவனுக்கு பதிலாக, அமைதியாக இருந்தாள்.

அவினாஷ் “அம்மு… அம்மு..” என்றான் இருமுறை. ம்கூம்.. பதிலில்லை.. அவனுக்கும் என்னமோ போல ஆனது.. விளக்கம் சொல்லுவது அவனுக்கு பிடிக்காது.. ஆனால், அவளின் மௌனம் என்னமோ செய்ய “அம்மு…” என்றான் குழைவாக.

பதிலில்லை.. அவளிடம்.

அவினாஷ் “சீனீ… கூப்பிட்டா காது கேட்க்குமா” என்றான் ரகசியமாக.

அம்மு அமைதியாக இருந்தாள், அவினாஷ் “சீனீம்மா…” என்றான் மிகவும் ரகசியமாக.

அம்முவிற்கு.. காதில் தேன்தான் பாய்ந்தது “ம்…” என்றாள் தன்னையறியாமல்.

அவினாஷ் “கிட்ட தட்ட.. ஷூட்டோட லாஸ்ட் இருக்கோம்… சீரியஸ் சீன்ஸ் போயிட்டு இருக்கு ப்பா… செட்டோட மூட் மாறதுக்கு இடம் இல்லாமல் ஷூட் எடுத்திட்டு இருக்கோம்… ப்ளீஸ்… புரியுதா.. ப்ளீஸ்.

நிறைய பேசலாம்.. இன்னிக்கு வேண்டாம்.. நான் கண்டிப்பா கூப்பிடுவேன்… ப்ளீஸ் டா… சாரி… ஹாப்பியா இரு… டூ டேஸ்ல கூப்பிடுறேன்… ப்ளீஸ்..” என்றான்.

என்ன சொல்ல முடியும் அம்முவினாள்… கண்ணில் நீர் வழிந்தது.. அவளுக்கு. இருந்தும், அவனின் சூழல் தெரியுமே.. புரியுமே அவளுக்குமே.. எனவே, வாய் பேசாமல் “ம்.. ம்…” என்றாள்..

அவினாஷ்க்கு, தாங்கவே இல்லை.. ‘ம்…’ என்ற ஓசை. அவளின் அமைதியை உணர்ந்து..  கனாக்காரனின் நெஞ்சம் கொஞ்சம் கரித்தது.. என்ன சொல்ல முடியும்.. இப்போதுதான், எதோ உணர்த்த ஆரம்பித்தான் தன்னையறியாமல்.. அவளுக்கு.  இப்போது இந்த அதிகாலை அவனை திட்டியது ‘ஏன் டா… இப்படி படுத்தற.. அவளை’ என. 

அவினாஷ் “ம்… பை டா…” என சொல்லி, அவளின் பதிலை எதிர்பாராமல் சட்டென வைத்துவிட்டான்.. விடாது கருப்பு மாதிரி இது, திரும்பி பார்த்து, அவளின் பதிலுக்காக காத்திருந்தால்.. மீண்டும் அவளின் ‘ம்…’ வார்த்தை தன்னை தாக்கும்.. விடாது. அதான், அவள் பதிலை எதிபார்க்கவில்லை, வைத்துவிட்டான்.

ம்… அவனுக்கும் மனது சரியாக இல்லைதான்.. ஆனாலும் வேலை இருக்கையில் கண் மூடிக் கொண்டான், அந்த யோசனையில் தன்னை நுழைத்துக் கொண்டான் கனாக்காரன்.

காதல் என்பது பூதம்தான்.. நம்மை யாரும் செல்லாத.. பார்க்காத லோகத்திற்கு கூட்டி செல்லும்.. கண்மூடிக் கொண்டிருந்தாலே போதும்..  பசி தாகம் தீர்க்கும்… காதலன் காதலி நினைவில். நேரம் வாய்க்கும் போது, தான் எஜமானன் ஆகி காதலர்களை அடிமையாக்கும்.. இப்போதும் அப்படிதான் அம்முவை அடிமையாக்கத் தொடங்கியது.. கானக்காரனின் காதலுக்கு.

அம்முவும் பாவம்.. எல்லாம் தெரிந்தாலும்.. காதல் கொண்ட மனம் அவனை தவிர எதையும் எதிர்பார்க்காதே.. எனவே அப்படியே படுத்திருந்தாள், பூதத்தின் அடிமையாக.

“பக்கம் வந்து தொட்டு பேசி..

முத்தம் வைத்து.. கட்டிக் கொண்டால்..

காதல் தோன்றும் என்றிருன்தேனே..

தூரம் நின்று.. மௌனம் கொண்டு..

பார்வையாலே என்னுள் சென்று…

காதல் ஒன்றை தோன்ற செய்தானே..

பொய்யின் நடுவிலே உண்மை என அவன்..

தூசின் நடுவிலே.. தூய்மை என அவன்..

கூச்சல் நடுவிலே.. மெல்லிசையும் அவன்…

நெஞ்சை துளைத்து.. என்னுள் சென்றான் அவன்..”

எவ்வளவு நேரம் கடந்ததோ ஸ்ரத்தா அழைத்தார்.. ஆசையாக அம்முவிற்கு வாழ்த்து சொன்னார்.. “உனக்கு பட்டு புடவை ஒன்னு அனுப்பி இருக்கேன்.. டா, நந்தன் கொடுப்பார்.. வாங்கிக்கோ.. எனக்கு நீ கட்டி.. வீடியோ கால் கூப்பிடு.. பிடிச்சிருக்கா சொல்லுடா” என்றார் ஆனந்தமாக படபடப்பாக.

அம்முவிற்கு அவரின் ஆனந்தம் ஒட்டிக் கொண்டது போல.. ஆசையாக தானும் பேசினாள். ‘சொல்லவே இல்லை.. அப்பா கூட சொல்லை’ என செல்லமாக சண்டை போட்டாள் பெண்.

ஸ்ரத்தாவிற்கு இந்த சிணுங்கல்.. பட்டாம்பூச்சியின் ரீங்காரமாக இருந்தது… ‘ப்பா.. பெண்ணின் சினுங்களை கேட்க்க.. என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ என தோன்றியது, அந்த நங்கைக்கு. பின் ஏதேதோ பேசினர் இருவரும்.

அம்மு, பின் குளித்து… ஸ்ரத்தா அனுப்பிய புடவையை கட்டிக் கொண்டாள். தந்தையும் மகளும் கோவிலுக்கு சென்றனர். அந்த பார்த்தசாரதியை பார்த்து வந்தனர்.

ஸ்ரத்தாவிடம் வீடியோ காலில் பேசினாள் அம்மு. 

வேலை செய்யும் எல்லோருக்கும் இனிப்பு வழங்கினாள்.. கோடிஸ்வரி அக்கா.. குண்டுமல்லி சரம் கொண்டு வந்தார் அவளுக்காக.. வெகுளியாக “எங்க அம்மு, இன்னிக்கு புடவை கட்டணும்ன்னு வேண்டிக்கிட்டே வந்தேன்..” என்றார்.

அம்மு “ஏன் க்கா…” என்றாள் சிரித்துக் கொண்டே.

கோடிஸ்வரி அக்கா “என்னால பூ மட்டும்தான் வாங்க முடிஞ்சது.. நீ புடவை கட்டினா தானே.. பூ வைக்க சொல்லலாம் உன்னை. அதான் பாப்பா.. இந்தா, நானே தொடுத்தேன்.. திரும்பு” என சொல்லி… மனது மணக்க.. மல்லியை அவள் சின்ன பின்னலில் வைத்து .அழகு பார்த்து.. நெட்டி எடுத்தார்.

அம்மு, அவரின் காலில் விழுந்தாள், கோடி அக்கா “புள்ள… தாயி.. எங்க அம்மா…” என பதறி விளகினார் .

அம்மு “நீங்க எல்லாம் இல்லைன்னா.. நான் எப்படி இருந்திருப்பேன்னு தெரியாது.. லவ் யூ க்கா… நீங்கதான் ஆசீர்வாதம் பண்ணனும் என்னை” என்றாள் நிமிர்ந்து நின்று.. அவரை கட்டிக் கொண்டு.

அவரும் “அதுக்கு.. என்காலில் விழுவியா புள்ள… எங்க தங்க புள்ளைக்கு என்ன… எங்க அய்யோவோட புள்ளையாக்கம்.. இனி எல்லாம் நல்லதா நடக்கும்.. என் சாமி… தங்க தங்கமா இருடா…” என்றார், அவளின் தலையில் கைவைத்து. 

அம்மு “வாங்க சப்பிடலாம்…” என எல்லோரையும் கூட்டி சென்றாள் உள்ளே. எல்லோருக்கும் உணவு பரிமாறினாள். தானும் உண்டாள்.

அம்மு அலுவலகம் கிளம்பினாள். அங்கு.. ஸ்டாப் எல்லோரும் திரண்டு வந்து வாழ்த்து சொல்லி.. அந்த அலுவலகத்தின் நடுவில் கேக்.. வைத்து.. இவளை கட் செய்ய சொல்லி.. ஒரே கலாட்டா.. கொண்டாடினர் அவளை. நீண்ட நாட்கள் ஆகிற்று.. அவள் இப்படி வாய் மூடாமல் சிரித்து.. கன்னம் எல்லாம் வலித்து.. அப்படி ஒரு ஆனந்தம்.. எல்லோரும் அப்படி பேசி.. அவளை வாழ்த்திக் கொண்டாடினர்.

மாதவன்.. கங்கா… இருவரும் போனில் அழைத்து வாழ்த்து சொல்லினர்.

வீரா, அவளுக்கு கொலுசு வாங்கி தந்தான்… “அம்மு, இது மட்டும்தான் உங்ககிட்ட இல்லை.. நீ போட்டு நான் பார்க்கலை.. கொலுசு, இந்த அண்ணன் வாங்கி கொடுத்ததா இருக்கணும்” என்றான், தன் சட்டை காலரை இழுத்துவிட்டுக் கொண்டு.. 

அம்மு “ ம்… பாருடா…” என்றாள்.. ஆசையாக வாங்கிக் கொண்டு.. உடனே போட்டுக் கொண்டாள்.

அம்மு “நல்லா இருக்கு ண்ணா…” என்றாள், இந்தப் பக்கமும் அந்த பக்கமும் நடந்து பார்த்து. 

அலுவலகமே வேடிக்கை பார்த்தது அவளை.. எந்த பந்தாவும் இல்லை.. எந்த மிடுக்கும் இல்லை.. அலுவலகத்திற்கு முதல்நாள் வந்த போது எப்படி எல்லோருடனும் இருந்தாளோ.. அப்படியே இப்போதும் இருந்தாள்..

“தேவை வம்சம் நீயோ.. 

தேனிலா அம்சம் நீயோ..

பூமிக்கு ஊர்வலம் வந்த…

வானவில் நீயோ…”