Advertisement

வேதாவிற்கும் வாசுகிக்கும் என்ன கேட்பது என தெரியவில்லை. செந்திலும் அப்படியே நின்றார். 

செந்தில் இப்போது தனியாக காரெடுத்து வழக்கறிஞ்சர் அலுவலகம் சென்றார்.

வழக்கறிஞ்சர் அலுவலகத்தில் அடுத்த மூன்று மணி நேரமும் கலந்துரையாடல்  நடந்தது. எல்லோரும் இருந்தனர்.. கேஸ் பற்றி எல்லோருக்கும் விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார் வழக்கறிஞ்சர்.. பவானியிடம் தனியாக பேசினார் வழக்கறிஞ்சர். நேரம் சென்றது.

மதியத்திற்கு மேல் ஆனது அந்த சந்திப்பு முடிவதற்கு. பத்மநாபனுக்கு முகம் சரியாகவே இல்லை.. ‘தன் பெண்ணுக்கு கோர்ட்டு கேஸ்.. இதெல்லாம் தேவையா! சத்தமில்லாமல் வேறு ஏதேனும் கேஸ் போட்டிருக்கலாம்’ என அவரின் எண்ணம். 

ஆனால், விசு விடவில்லை ‘இதென்ன! உண்மையைக்காக போராடலாம்.. நாம் ஏன் பொய் சொல்ல வேண்டும்’ என தன் மனைவியையும் கேசில் சேர்த்தான். அதனால் மாமனார் மருமகனுக்கும் நடுவில் சற்று பேச்சு.. வார்த்தை குறைந்தது.

செந்தில் அட்வகேட் என எல்லோரும் சொல்லினர் ‘வேறு ஏதேனும் காரணம் சொல்லலாம்..’ என. ஆனால், விசு பிடிவாதமாக கடத்தல் என கேஸ் கொடுத்தான். 

அட்வகேட் ‘நீங்கதான விட்டுடலாம்ன்னு சொன்னீங்க..’ என கிண்டலாக கேட்டார் அப்போதும். 

விசு, அலட்டாமல் ‘அதான் முடியாதுன்னு சொல்லிட்டீங்க.. அப்போது முழுசும் இறங்கிட வேண்டியதுதானே..’ என்றான். அதுவும், அன்று ஸ்டேஷனிலிருந்து மருத்துவமனை வந்தவனுக்கு.. மனையாளின் நிலை கவலையை தந்தது.. நினைவு, அவளுக்கு  வந்து வந்து போகியதை பார்த்தவனுக்கு.. அன்று ‘தான்’ கொண்ட இரக்கம் முட்டாள்தனமாக தெரிந்தது, நேற்று. தனக்கு என இருந்த கோடுகளையும், எல்லைகளையும் அழிக்கவும்.. கடக்கவும்.. நினைக்கிறான் போல.. ம், எப்போதும் நாம் யார் என்பதை நம் எதிரில் இருப்பவர்கள்தானே தீர்மானிக்கின்றனர். இப்போது விசுவின் நிலை.. அப்படிதான் ஆனது. அமைதியாக இருந்தவனை மீண்டும் வம்புக்கு இழுத்திருக்கிறார்கள்.. அதனாலோ என்னமோ… தன்னை சார்ந்தவர்களையே வைத்து, தைரியமாக.. நேர்மையாக.. முழுவதுமாக.. தங்களை தாங்களே நிருப்பிக்க நினைக்கிறான் விசு. இந்த மாற்றமும் வேகமும் அவனின் இயல்பு இல்லாததால் சற்று கலக்கத்தை தந்தது எல்லோருக்கும்.. குறிப்பாக பத்மநாபன் கொஞ்சம் சண்டையிட்டார்.

பத்மநாபன் ‘ஏன் விசு.. பவானி பேர் இதில்! வேண்டாம்  சேர்க்காதீர்கள்.. வேறு காரணம் சொல்லலாம்’ என சண்டையிட்டார். ஆனால், விசு சம்மதிக்கவில்லை ‘நான் பார்த்துக்கிறேன் மாமா..’ என்றுவிட்டான் ஒரு மாதிரி கோவமானக் குரலில். 

அதனால், பத்மநாபன் கொஞ்சம் பயத்துடனே இருக்கிறார்.. இப்போதும். கோர்ட்.. கேஸ்.. எப்படி தாங்குவாள் என் மகள்’ என பயம் வந்து அமர்ந்துக் கொண்டது அவரிடம்.. இது தேவையில்லாத வேலை எனவும் எண்ணம் வந்தது தந்தைக்கு.

செந்தில் பத்மநாபன் இருவரும் வக்கீல் அலுவலக வராண்டாவில் நின்றனர். பவானியோடு அட்வகேட் தனியறையில் பேசிக் கொண்டிருந்தார். அந்த அறை வாசலில் விசு அமர்ந்துக் கொண்டிருந்தான்.

நொடிகள் நிடங்களானது.. 

பவானி வெளியே வந்தாள். விசுவிற்கே மனையாளின் கண்களை பார்க்க பாவமாக இருந்தது. பின் விசுவிடமும் சில கேள்விகள் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டனர்.. அவர்கள். இப்படியாக மீண்டும் ஒருமணி நேரம் சென்றுதான் அந்த இடத்தை விட்டு வெளியே வந்தனர் இருவரும்.

பத்மநாபன் தன் மகளிடம் வந்தார் “பவானி” என மகளின் கையை பற்றிக் கொண்டார். மகளும் அமைதியாக நின்றுக் கொண்டாள்.

செந்தில் “விசு, முடிந்ததா.. நாளைக்கு ஏதேனும் வரணுமா” என்றார்.

விசு “இல்ல, இனி ஹியரிங் போது கோர்ட் வந்தால் போதும்.. இனி, நம்ம பக்கம் பெரிதாக இவள் கோர்ட்டுக்கு வரவேண்டாம்.. இது ஒரு தெளிவுக்கான பேச்சு வார்த்தை அவ்வளவுதான். மத்தபடி அட்வகேட் பார்த்துப்பார்.. ஒன்னும் பயமில்லை” என செந்திலை பார்த்து பதில் சொன்னாலும், அவனின் பார்வை.. தன் மனையாளின்  கையை பற்றியபடியே நின்றிருந்த தன் மாமனாரின் கைகளின் மீதே இருந்தது. பதில் அவருக்கானது போல.

மதியம் தாண்டி இருந்தது.. யாருக்கும் பசியே இல்லை. செந்தில் இன்னும் ஏதேதோ கேட்டார்.. விசு பொறுமையாக பதில் சொன்னான்.. சற்று நேரத்தில் செந்தில் உண்டு மில் செல்வதாக கூறி கிளம்பினார்.

பத்மநாபன் மனதே இல்லாமல் கிளம்பினார். விசு பவானி இருவரும் கிளம்பினர். இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.. தயிர் சாதம் உண்டு பவானி மேலே சென்றுவிட்டாள். விசு, மோர் மட்டும் குடித்துவிட்டு மில் சென்றான்.

வீடு இன்னமும் அமைதியைத்தான் கொண்டிருந்தது. 

வாசுகி, தன் மகளிடமும், வேதாவிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினார் வீட்டிற்கு.

மாலை எட்டு மணிக்கு மேல்தான் விசு வீடு வந்தான். இவன் வந்ததும் அவனின் நண்பர்கள் வீட்டிற்கு வருவதாக கூறி இருந்தனர். எனவே, பவானியும் விசுவும் கீழே வந்துவிட்டனர். 

நான்கு நண்பர்கள் குடும்பமாக வந்தனர், விசுவை பார்க்க. ஒரு சின்ன வட்டத்திற்கு மட்டும் விஷயம் தெரிந்திருந்தது. அதில் இவர்களும் அடக்கம். எனவே வந்து பார்த்தனர் தன் நண்பனை. 

எல்லோரும் தொழில்துறையில் இருப்பவர்கள்.. ஒரு சங்கடம் எனும் போது, தாங்களாகவே வந்து நின்றனர். குழந்தைகள், அவர்களின் மனைவிகள் என மொத்தம் பதிமூன்று நபர்கள் வந்தார்கள். 

வேதா, வந்தவர்களை வரவேற்றார்.. குடிப்பதற்கு கொண்டு வர பணித்து.. உள்ளே சென்றார்.

அந்த முன்னிரவு வேளை கொஞ்சம் இதமாக மாறியது. நலம் விசாரிக்க தொடங்கியது நட்பு.. விசுவை கொஞ்சமாக மாற்றி சிரிக்க வைத்துக் கொண்டிருந்தது.

ஒருவர் “விசு, நீ பொண்டாட்டிக்கு பயந்துட்ட… பாரு நாங்க உன்னை வந்து பார்க்க வேண்டி இருக்கு.. சட்டர்டே பார்ட்டிக்கு வரதில்ல  நீ… அதான் இப்படி நடக்குது. நீ வந்து ஒரு என்ட்ரியை போடு.. எல்லாம் சரியாகிடும்” என்றார். அதற்கு எல்லோரும் லேசாக சிரித்து ஆமோதித்தனர்.

விசு அட்டகாசமாக சிரித்தான் “ஏன் பிரபா.. இப்படி சொல்ற, நான் எங்கே ஊரில் இருந்தேன், அதான் வரலை.. அவளுக்கு பயப்படுறனாம்.. அவளே பாவம் ஓய்ந்து போயிட்டாள்..“ என சொல்லியவனின் கண்கள் மனையாளை தேடியது.

நண்பர்களும் இதற்கு எப்படி சமாதனம் சொல்லுவது என தெரியாமல் “விடு விசு, சரியாகிடும்.. பாரு அவங்களே அதை கொஞ்சமா மறந்திருக்காங்க.. நீ பீல் பண்ணினால், அவங்களும் பீல் பண்ண போறாங்க.. மச்சி.. கவனமாக இரு…” என்றான் ஒருவன்.

நண்பர்கள் பலம்தான் எந்த நேரத்திலும்.. அதுவும் இது போன்ற நிலைகளில் வந்து பார்த்து ஆறுதலை சொல்லுவது என்பதே அரிதானது. எனவே நேரம் சென்றதே தெரியவில்லை. உண்டு முடித்து சற்று நேரம் மீண்டும் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினர் நண்பர்கள்.

விசுவும் பவானியும் உண்டு முடித்து மேலே வந்தனர். பவானியிடம் பெண்கள் இயல்பாக பேசிக் கொண்டிருந்ததால்.. பெண்ணுக்கு மதியம் இருந்த நிலை மாறி கொஞ்சம் நன்றாக இருந்தது. 

இருவரும் மேலேறி வந்தனர்.. விசு பால்கனியில் நின்றான், பவானி உடை மாற்ற என அறைக்கு செல்ல எத்தனித்தாள். விசு “பவானி..” என்றான் அழைப்பான குரலில்.

இன்று பௌர்ணமிக்கு அடுத்தநாள்… நிலவு பெரிதாக இருந்தது.. முழுமதிதான்.. ஆனால், தேய்பிறையின் முதல்நாள்.. அதனால் ஒரு இழை மறைந்திருந்தது.. 

பவானி “ட்ரெஸ் மாத்திட்டு வரேன், கால் வலிக்குது” என்றாள் கெஞ்சலாக.

கணவன், அவளை ஷனத்தில் நெருங்கி.. தன்னிரு கைகளில் அள்ளிக் கொண்டான் “என்ன ஆச்சு..” என்றபடி அந்த வெட்டவெளி பால்கனிக்கு அவளை தூக்கி வந்தான்.

பெண்ணவளும் திமிரவெல்லாம் இல்லை.. அமைதியாக கணவனின் முகத்தை பார்த்துக் கொண்டே அவனின் கைகளில் சுகமாக சாய்ந்துக் கொண்டு வந்தாள்.

நேற்று எதோ தீவிரத்தில் இருந்தவனின் முகம்.. இன்று, பூரிப்பில் இருந்தது போல.. மென்மையாக அவளை கீழே விட்டான் “என்ன வலி.. எங்கே” என்றான்.

பவானி “இல்ல, நின்னுட்டே இருந்தேன்னில்ல அதான்…” என்றவள் கணவனின் கைகளில் தன் கை விரல்களை கோர்த்துக் கொண்டாள்.

விசு “நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்..” என்றான் புன்னகை முகமாக.

பவானி “ம்.. பொண்டாட்டிய யாரோ கடத்திட்டு போய் இப்போதான் வந்திருக்கா…  அதோட கோர்ட்டு.. கேஸ்.. கூடவே, மில்லு வேலை… இதுக்கு நடுவில் ஹாப்பியா இருக்கீங்களா நீங்க?” என மிரட்டலான ராகத்தில்.. ‘உங்களை நம்பவில்லை’ என்ற த்வனியில் மனையாள் கேட்டாள்

விசு “ம்.. நீ பக்கத்தில் இருக்கியே.. அது போதுமே என் ஹாப்பிக்கு..” என்றான் ரசனையாக.

பவானி, கண்விரித்து கணவனின் பேச்சை ஆச்சரியமாக பார்த்தாள் “கவித.. கவித..” என்றாள், அவளும் சிரிக்காமல்.

விசு “ம்.. லவ் பண்ணா கவிதை வருமாம்… ஜஸ்ட், நேத்திலிருந்துதான் பீல் பண்ணேன்” என்றான், சிரிக்காமல் கணவனும்.

பவானி, கணவனின் முகத்தை குனிந்து பார்த்தாள்.. அவனோ முகத்தை அவளுக்கு காட்டாமல் திரும்பிக் கொண்டான், வெட்கத்தில். கணவன் வெட்கப்படுவதை உணர்ந்துக் கொண்ட மனையாள்.. ஏதும் சொல்லாமல்.. கணவனை ஓர கண்ணால் ரசித்தபடி, நிலவை பார்க்க தொடங்கினாள்.

விசுவிற்கு வார்த்தைகள் தானாக வந்தது “என் ப்ரெண்ட்சை பார்த்ததும் ரிலாக்ஸ் மூட் வந்திடுச்சி.. அவ்வளவுதான். ஆனால், நேற்றிலிருந்து என்னோட தைரியத்துக்கு.. குட் வைப்க்கு.. எல்லாத்துக்கும் காரணம் நீதான்..” என்றான் அவள் பார்த்துக் கொண்டிருந்த அதே நிலாவை பார்த்து.

மனையாள் சட்டென ஒருபார்வை கணவனை பார்த்து, திரும்பிக் கொண்டாள்.

இருவரும் கண் பார்த்து கதைக்கவில்லை.. விரல் நீட்டி தொட்டுக் கொள்ளவில்லை.. ஆனால், உயிர் மட்டும் உருகிக் கொண்டிருந்தது தன்னவர்களை நோக்கி. விசு இன்னமும் விழி எடுக்காமல் நிலவையே பார்த்துக் கொண்டிருந்தான். பவானிக்கு கண்கள் துளிர்த்துக் கொண்டது..

“உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே..

சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே..

உன் கைகள் கோர்க்கும் ஒரு நொடி..

என் கண்கள் ஓரம் நீர்த்துளி..

உன் மார்பிள் சாய்ந்து சாகதோனுதே…

ஓ..ஓஹோ….ஓ..ஓஹோ…”

இரண்டொரு நிமிடம் அமைதி.. சட்டென அவர்களால் பேச முடியவில்லை.. கணவனே, மனையாளின் விரல்களை பற்றி இழுத்துக் கொண்டு, தன் தோள் சாய்த்துக் கொண்டான்.

அவனே பொறுமையாக தன் நண்பர்கள் பற்றி சொல்ல தொடங்கினான்.. தங்களின் கல்லூரி.. தான் படித்தது.. இவர்கள் எப்படி பழக்கம்.. எங்கே மீட் செய்வார்கள்.. என சொல்லிக் கொண்டிருந்தான்.

பவானி கணவனின் தோள் சாய்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.. நிலவும் உச்சியை தொட்டது.. இவர்களின் நேரமும் தீராமல் நீண்டது.

Advertisement