Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

23

மறுநாள் காலையில் வாசுகியும் பத்மநாபனும் வந்துவிட்டனர் தங்கள் சம்பந்தி வீட்டிற்கு. இன்று முக்கிய மீட்டிங், அதாவது கேஸ் குறித்த ஆலோசனை இன்று இருக்கிறது வக்கீல் அலுவலகத்தில். எனவே, தன் பெண் மாப்பிளையோடு இங்கிருந்து அங்கே செல்லாம் என பத்மநாபன் வந்தார்.

ஆனால், இன்னமும் பெண் மாப்பிள்ளை இருவரும் கீழே வரவில்லை போல.. மணி எட்டரை.

வேதா, வாசுகி, பத்மநாபன் மூவரும் காலை உணவை உண்டனர். அப்போதும் பிள்ளைகள் இருவரும் இறங்கி வரவில்லை.

ஜோசியரை வர சொல்லியிருந்தார் வேதா.. ம், ‘பவானிக்கு எப்போது தாலி வாங்கலாம்’ என நாள் பார்க்க வர சொல்லியிருக்கிறார். எனவே, காத்திருந்தனர் மூவரும். 

பத்மநாபன் “சரி வாசுகி, மாப்பிள்ளை எழுந்ததும் வர சொல்லு.. நான் அட்வகேட் அபீஸ் போறேன்.. லேட் ஆகுது..” என்றவர்.. பெண்கள் இருவரிடமும் விடை பெற்றுக் கிளம்பினார்.

பவானியின் கடத்தல், அதை தொடந்த சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது. எனவே இன்று பவானிக்கு சில விளக்கங்கள் சொல்ல வேண்டும் என வழக்கறிஞ்சர் வர சொல்லியிருந்தார்.. பவானியை தன் அலுவலகத்திற்கு. 

அதற்காக, பத்மநாபன் காத்திருந்தார் பெண்ணையும்  மாப்பிள்ளையையும் அழைத்துக் கொண்டு வழக்கறிஞ்சர்  அலுவலகம் செல்லுவதற்காக வந்தார்.. இன்னும் இருவரும் வரவில்லை, எனவே, தான் கிளம்பி முதலில் சென்றார், அங்கே.

ஜோசியர் வந்து சேர்ந்தார்.. வேதா, இருவரின் ஜாதகத்தையும் கொடுத்து பார்க்க தொடங்கினார்.

இங்கே இப்படி அவர்களுக்காக எல்லோரும் ஓடிக் கொண்டிருக்க.. அங்கே நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர் இருவரும்..

விசு, இதமான ஏசியில், தன்னவளை தன்மேல் சாய்த்துக் கொண்டு.. உறங்கிக் கொண்டிருந்தவனுக்கு.. அவளின் லேசான அசைவில்தான் விழிப்பே வந்தது. அனிச்சையாய் அவளை இன்னமும் தனக்குள் இழுத்து  அணைத்துக் கொண்டு.. அசதியில் கண்கள் மூடிக் கொண்டான் விசு.

பவானி மெதுவாக கணவனிடமிருந்து விலகி எழுந்தாள். அப்போதுதான் விசுவிற்கு நல்ல விழிப்பு வந்தது. நேற்று வரை இருந்த, அத்தனை குழப்பங்களும்.. கவலைகளும்.. தேடல்களும்.. தன்னருகில் இருக்கும், மனையாளின் அருகாமையில் கரைந்துதான் போகிற்று விசுவிற்கு.

விசு “பார்பி குட் மோர்னிங்…” என்றபடி அவளின் கையை பிடித்து இழுத்து.. தன்னவளின் நெற்றியில் மென்மையாக ஒரு முத்தம் வைத்தான் கணவன்.

பவானிக்கும் அவனின் பார்பி என்ற அழைப்பு பிடிக்கத்தானே செய்கிறது.. மேலும் இதமான, அவனின் இந்த நேரத்து முத்தம்.. சொல்லிவிட முடியாத ஆறுதலை தந்தது அவளுக்கு. பெரிய பெரிய இடர்கள்.. சின்ன சின்ன பிரிவுகள்.. என எல்லாம் கடந்து, ஒருமுகமாக அவனுள் நிறைந்து நின்றவளுக்கு இந்த இதமான முத்தம்.. அசதியான காலை நேரத்தை, ஆனந்த்மாக்கியது.  கணவனின் முத்தத்தை வாங்கிக்கிக் கொண்டவள்  “டைம் ஆச்சு..” என்றபடி கணவனின் பார்வையையும், முத்தத்தையும் நின்று ரசிக்க நேரமில்லாதவளாக குளிக்கச் சென்றாள்.

விசுவிற்கு, அவளின் அவசரமும்.. சிவந்த கன்னங்களும்.. அவனுள்.. சின்ன புன்னகையை தந்தது.. அது அவனின் அழகை மெருகேற்றி காட்டியது.

மெல்லிய சூரிய ஒலி.. அறையில் பரவிகிடக்க.. அதனை ரசித்தபடி.. மீண்டும் தலையணையில் தலை சாய்த்துக் கொண்டான் விசு.. இதோ இப்போதும் அவனின் நினைவில் இருக்கிறது அத்தனை வேலைகளும்.. ஆனாலும், அதெல்லாம் இப்போது பெரிய விஷயமாக தெரியவில்லை அவனுக்கு. 

சில விடியல்கள்… வாழ்நாளில் மறக்கவே முடியாது பலருக்கு. அப்படிதான்,  இந்த வாரத்தில் விசுவிற்கு இரண்டாவது, மறக்க முடியாத  விடியல்.. இது. 

ம்.. இந்த வாரத்தில், அவளை தேடி திரிந்த முதல் விடியலுக்கும்… இன்று தேடலின் முடிவு தெரிந்துக் கொண்ட இந்த இரண்டாவது விடியலுக்கும்.. அத்தனை தூரம். முதல் விடியல், இன்னமும் விடியலை ஏன்? என இருந்தது.. இரண்டாவது விடியல், ஏன் விடிந்தது? என இருந்தது, விசுவிற்கு. 

சில நேரங்களில் நடந்ததை நம்பவே முடியாது.. அப்படிதான் அவனுக்கும்.. இப்போது. அமைதியாக அமர்ந்திருந்தான். நிர்மலமான மனது.. தெளிவான சிந்தனை.. நேற்றுவரை தன்னவளை எங்கேனும் தொலைத்து விடுவேனோ என எண்ணி இருந்தவனுக்கு.. நேற்றைய இரவு நல்ல பதிலை தந்திருந்தது அதனால்.. மனது இதமாக இருந்தது விசுவிற்கு.

விசு ‘ஆகிற்று காலையில் வழக்கறிஞ்சர் அலுவலகம் செல்ல வேண்டும்.. பவானிக்கு சில அறிவுரைகள் செல்ல படும்.. இனி கோர்ட் கேஸ் என பவானி வரவேண்டும்.. பேச வேண்டும்..’ என எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது அவனுள்.

பவானி, தன் வேலைகளை முடித்துக் கொண்டு.. உடைமாற்றி வெளியே வந்தாள். விசு யோசனையோடு எழுந்து குளிக்க சென்றான்.

சற்று நேரத்தில் இருவரும் கீழே வந்தனர்.

ஜோதிடரும் கிளம்பி இருந்தார்.

வேதா “ஏன் பவானி, உடம்பு முடியலையா.. என்னாச்சு டா” என்றார்.

பவானியின் முகம் சோர்ந்து இருந்தாலும் தெளிந்து இருந்தது.. அதை வாசுகி அன்னை கண்டுக் கொண்டார். இப்போது தன் அத்தையின் கேள்விக்கு பவானி “இல்ல, அத்த நல்லா இருக்கேன்.. தூங்கிட்டேன்.. அதான்” என்றபடி அமைதியாக அமர்ந்தாள் சோபாவில்.

விசு, ஏதும் கண்டுக் கொள்ளாமல் பூஜை அறை சென்று, விபூதி எடுத்து, தான் இட்டுக் கொண்டு.. தனது விரலில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு வந்து, மனையாளுக்கும் வைத்தான். பின், டைன்னிங் டேபிள் சென்றுவிட்டான்.

வாசுகி அவசரமாக பரிமாற சென்றார்.

இங்கே வேதாவும் “வா, பவானி.. சாப்பிட்டுட்டே பேசலாம்” என சொல்லி தன் மகன் இருக்கும் இடத்திற்கு கூட்டிக் கொண்டு சென்றார்.

வேதா, ஜோதிடர் வந்தது பற்றி மகன் மருமகளிடம் சொல்லத் தொடங்கினார். விசு தலையசைத்துக் கூட ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை. பவானிதான் “எப்போ கோவில் போகணும் அத்தை.. “ என எதோ பொறுப்பாக கேட்டுக் கொண்டாள்.

வேதா சொல்லி முடித்து தன் மகனை பார்த்து “திங்கள் கிழமை நாள் பார்த்திருக்கோம்.. மறுதாலி கட்ட… நீ அதுவரைக்கும் உன்னோட பெரிய செயினை போட்டுவிடு அவளுக்கு.. “ என்றார்.

விசு எதையும் காதில் வாங்காதவனாக கை கழுவிக் கொண்டு ஹாலுக்கு.. சென்றுவிட்டான்.

பவானிக்கு ‘என்ன ஆகிற்று’ என தோன்றியது. அமைதியாக உண்டு முடித்தாள்.

விசு, போன் பேசிக் கொண்டிருந்தான். பவானியும் உண்டு முடித்து வந்தாள். வேதாவும் வாசுகியும் மதிய உணவுக்கு சொல்லிக் கொண்டிருந்தனர்.. சமையல் செய்பவர்களிடம்.

செந்தில் வந்தார் இப்போது விசுவை அழைத்து செல்லுவதற்கு.

பவானி “வாங்க அண்ணா..” என்றாள்.

செந்தில் “இப்படி இருக்க ம்மா” என்றார்.

பவானியும் “நல்லா இருக்கேன் அண்ணா… சாப்பிட்டீங்களா” என பொதுவாக பேசத் தொடங்கினர்.

விசு போன் பேசி முடித்திருந்தான் இப்போது, முகத்தில் எந்த பாவமும் இல்லை.. “என்ன செந்தில்.. மில் போகலையா” என்றான்.

செந்தில் “இல்லங்க விசு, உங்களை அட்வகேட் ஆபீஸ் கூட்டி போகணும்.. அதான் வந்தேன்.. GM இருக்கார்.. நீங்க வாங்க” என்றார் எழுந்துக் கொண்டே.

விசு “இல்ல.. நீங்க மில் போங்க.. நான் பவானியோட அங்க போறேன்..” என்றவன், யாரையும் பார்க்காமல் “பவானி..” என்றான்.

வேதா “என்ன விசு பா, ஏன் செந்திலை வேண்டாம்ன்னு நினைக்கிற.. எப்போதும் அவர்தானே வருவார்..” என கேள்வியாக நிறுத்திக் கொண்டார்.

விசு, பதில் சொல்லாமல் இன்னொரு கார் சாவி எடுத்துக் கொண்டான்.

வேதா “என்ன டா பதிலே சொல்லாமல் இருக்க” என்றார்.

விசு அலட்டாமல் “வா பவானி..” என்றவன் யாரையும் பார்க்காமல் கார் நோக்கி சென்றுவிட்டான். விளக்கங்களும்.. பேச்சு வார்த்தையும் நடத்த அவனுக்கு தோன்றவில்லை. அவன் தனக்குள் சில முடிவுகள் எடுத்துக் கொண்டுவிட்டான்.. நடந்து சென்ற நிகழ்வுகளில். எனவே, எதையும் புரிய வைக்கவோ.. சொல்லவோ அவனுக்கு நேரமும் இடமும் இந்த சூழ்நிலையில் இல்லை, அதனால் அப்படியே சென்றான்.

Advertisement