Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

21

பவானி, கண் விழித்ததும் மருத்துவர்கள் வந்து பார்த்தனர். விசு, அவர்களின் அருகிலேயே நின்றான். ‘பவானியை சோதிக்க வேண்டும்.. வெளியே செல்லுங்கள்’ என செவிலியர்கள் சொல்லிய பின்தான் அவளின் கணவன் வெளியவே வந்தான்.

எப்போதும் போலான பரிசோதனைதான்.. அவளிடம் சிலபல கேள்விகள்.. தேவையான பேச்சுகள் என இரண்டு மருத்துவர்களும் பரிசோதித்து முடித்து வெளியே வரவும்.. பவானி மீண்டும் மயக்கம் கலந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்.

பவானியின் பெற்றோர் உள்ளே சென்றனர், பெண்ணை பார்க்க.. ஆனால், அவள் மீண்டும் மயக்கமாக்கிவிட.. பதறி போய் வெளியே வந்து விசுவுடன் பேசிக் கொண்டிருந்த மருத்துவர்களிடம் கேட்டனர்.

மருத்துவர்களும் ஒன்று பயமில்லை.. மருந்தின் தாக்கம்தான்.. இரண்டு நாட்கள் இப்படிதான் இருக்கும் என பொறுமையாக சொல்லி.. நாளை மாலைக்கு பின் வீடு செல்லலாம் என விளக்கம் கொடுத்தனர்.

விசுவிற்கே கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.. இப்படி அவள் உடனே மயக்கத்திற்கு சென்றது. எனவே, இன்னும் சில விளக்கங்கள் கேட்டான்.. மருத்துவர்களிடம். ‘அந்த ட்ரக்ஸ் எதேனும் விளைவுகளை தருமா.. உடல்நிலையில் ஏதேனும் மாற்றம் வருமா.. இதற்கு முன்பும் இப்படி நடந்தும் இருக்கிறது’ என சொல்லி.. அவர்களிடம் விளக்கங்கள் கேட்டான். மருத்துவர்கள்.. பொறுமையாக பதில் சொல்லினர்.. ‘மனதளவில் பாதிப்பு இருக்கும்.. அவர்களுக்கு சரியாக தனக்கு என்ன நடந்தது என புரியாது.. பயம் குழப்பம் என இருக்கும்.. அதற்கு தேவைப்பட்டால் கவுன்சிலிங் எடுத்துக்கலாம். பரிசோதித்தவரை உடலளவில் எந்த பாதிப்பும் இல்லை பயம் வேண்டாம்’ என்றனர்.

விசுவிற்கு, மனது இப்போதும் சமன்படவில்லை.. பவானி, கண்விழித்து பேசும் வரை அவன் அப்படிதான் இருப்பான் போல. மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டுக் கொண்டவன்.. மீண்டும் தன் மனையாளின் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டான்.

விசுவிற்கு, நேற்றிலிருந்து டீ என்ற பானத்தை தவிர ஏதும் அவனின் தொண்டையை தாண்டி உள்ளே செல்லவில்லை.. இன்னமும் குளிக்க கூட இல்லை.. கேசம் கலைந்து.. அவனின் ப்ரவுன் நிற விழிகள் அயர்ச்சியை காட்டினாலும், அதை மறைத்துக் கொண்டு.. சிவந்த முகத்துடன்.. தன் தலையை தன்னிரு கைகளில் தாங்கிக் கொண்டு.. தன்னவளின் விழிப்பிற்காக காத்திருந்தான் கணவன்.

இல்லை! அவள் விழிக்கவே இல்லை!.. விசுவும், அவளின் அருகிலேயே.. அவளின் முழங்கையின் அருகில் தலைசாய்த்துக் கொண்டான் ‘ஏன் இந்த மருத்துவமனையின் நிகழ்வுகள் என்னை தொடர்கிறது.. உன்னை தந்ததும் இந்த இடம்தான். இப்படி! என்னை வதைப்பதும் இந்த இடம்தான்.. வரும் போது என்னவெல்லாம் நினைத்து வந்தேன்.. உனக்கு ஏதேனும் ஆகியிருந்தால்..’ என எண்ணம் வர.. தன் தலையை குலுக்கி தன்னை சமன் செய்துக் கொண்டான் விசு. பின் மீண்டும் அவளை தொந்திரவு செய்யாமல் அமைதியாக அவளின் கையை தன் கைகளில் பற்றிக் கொண்டு கண்ணசந்தான், அவளின் கண்ணாளன்.

வேறு எந்த நினைவுகளும் இல்லாமல் அசந்து உறங்கினான்.

வெளியில் பத்மநாபனும் வாசுகியும் அமர்ந்திருந்தனர்.

சற்று நேரத்தில் வேதா வந்தார்.. பத்மநாபனிடம் மகன் பற்றி கேட்டார். பத்மநாபனும்.. உள்ளே இருப்பதாக சொல்லி அமர்ந்துக் கொண்டார்.

வேதா, இவர்களோடு அமர்ந்துக் கொண்டார்.. மூவரும் பொதுவாக பேச தொடங்கினர்.. எப்போது வீட்டிற்கு செல்வது.. விசு, நடந்ததது பற்றி ஏதேனும் சொன்னானா” என பெண்கள் கேட்டுக் கொண்டிருந்தனர் பத்மநாபனிடம்.

பத்மநாபன், பொறுமையாக நடந்ததை விளக்கினார். 

இரு பெண்களுக்கும், கேட்க கேட்க அதிர்ச்சி.. ‘எத்தனை நடக்கிறது தங்களை சுற்றி’ என எண்ணம் வேதாவிற்கு. ஏதும் பதிலே சொல்ல முடியவில்லை வேதாவிற்கு.. பத்மநாபனை பார்க்க குற்றயுணர்ச்சியாக இருந்தது. ‘எங்கேனும் உங்களால்தான் இப்படி நடந்துவிட்டது என் பெண்ணிற்கு’ என கேட்டுவிடுவாரோ.. இல்லை, செய்கையில் சொல்லி விடுவாரோ என பயம். அமைதியாகவே இருந்தார் வேதா.

விசு, இன்னமும் வெளியே வரவில்லை.

மீண்டும் மூவருக்குள்ளும் பழங்கதைகள் பேச்சு வந்ததது.. பத்மநாபன் வீராவின் விஷயத்தில்.. நடந்ததை விளக்கினார் இப்போது. அதை தொடர்ந்து, அவர்கள்தான்.. இப்படி பழிவாங்க என செய்கிறார்கள் என நிறைய விஷயங்களை சொல்லினார் பத்மநாபன். 

இப்போதுதான் வேதாவிற்கு முழுமையாக வேணு வேலுவின் குணம் தெரிந்தது. மேலும், பத்மநாபன் மேல் படிந்திருந்த கறைபடிந்த மேகங்கள்.. பற்றி இப்போது சிந்திக்க தொடங்கினார் வேதா. பத்மநாபன் இவ்வளவு விளக்கமாக நடந்ததை சொல்லவும்.. ‘பத்து அண்ணன் மேல் அன்றும் தவறு இருந்திருக்காதோ..’ என எண்ணம் வந்தது வேதாவிற்கு.

அப்போது, வேதா நடந்ததை பார்த்துக் கொண்டிருந்தார் அவ்வளவே. மற்றபடி எங்கே எப்படி.. பழக்க வழக்கம் தன் கணவருக்கும், அந்த இருவருக்கும் இடையில் மாறியது.. என இப்போதுதான் விளங்கியது அவருக்கு. அப்போது காட்சிகள் எல்லாம் பத்மநாபன் மேல் தவறாக குவிந்தது.. இப்போது, சூழ்நிலைகளும், தன் கணவரின் கள்ளமில்லா மனமும் கண்முன்னே விரிந்து.. கடந்த காலத்தில் பத்மநாபன் மேல் ஏற்படுத்தி இருந்த கரைகளை துடைத்துக் கொண்டிருந்தது.. வேதாவின் மனதில். 

வேதா, அமைதியாக அமர்ந்திருந்தார் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு. இப்படி தெளிவு வரும் போது அமைதி மட்டுமே வருகிறது எல்லோருக்கும்.. தெளிவில்லாத இடத்தில்தான் குழப்பங்களும் கோவங்களும் ஆட்கொள்ளும். தெளிவான மனது அமைதியைதானே ஆட்கொள்ளும் அப்படிதான் வேதாவின் நிலை இப்போது.

சற்று நேரத்தில் தன் மகனை காண, பவானி இருக்கும் அறைக்கு வந்தார் வேதா. மகனும் மருமகளும் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையை பார்த்ததும் மனதோரம் வலிக்கத்தான் செய்தது, வேதாவிற்கு.

இந்த இரண்டு நாளில் அந்த பெண்மணியும் ஓய்ந்து போயிருந்தார். பழைய திடமேல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை.. மகனை பார்த்தவர்.. மகனின் சிகையை ஆதரவாக வருடினார். அதில் தூக்கம் கலைந்தான் விசு.

விசு தன் அன்னையை நிமிர்ந்து பார்த்தான்.. அவனுக்கும் தன் அன்னையின் நிலை பற்றி யோசனை வந்தது.. ‘எப்படி ஆகிட்டாங்க, ரொம்ப பயந்துட்டாங்க..’ என எண்ணிக் கொண்டே பார்த்திருந்தான். இருவருக்கும் ஏதும் பேச்சு வரவில்லை.

விசு “எப்படி ம்மா… இருக்க..” என்றான்.

வேதா ‘நன்றாக இருக்கேன்’ என்பதாக தலையசைத்தார்.

விசு “அம்மா, வீட்டுக்கு போலாமா” என்றான்.

வேதா “பவானியை கூட்டிட்டு போய்டலாம் டா..” என்றார்.

விசு “இல்ல ம்மா, நாளைக்கு வந்திடுவா.. இன்னிக்கு நாம போகலாம்.. மோர்னிங் வரலாம்.. நீ ரொம்ப டயர்டா இருக்க… வாம்மா” என்றான்.

வேதாவிற்கு மறுக்க முடியவில்லை.. மருமகளை வாஞ்சையாக வருடி விட்டு “ரொம்ப சின்ன பொண்ணுடா.. என்ன சொல்லி புரியவைப்பியோ தெரியாது.. பொறுமையாக நம்ம நிலை சொல்லி கவனமாக இருக்க சொல்லணும் டா..” என்றார் மகனிடம்.

விசுவும், உறங்கும் பவானியையே பார்த்திருந்தான்.. பதில் சொல்லவில்லை.

சற்று நேரம் சென்று  விசு “போலாம் ம்மா…” என்றான், மனையாளை இமைக்காமல் பார்த்துக் கொண்டே.

அந்த நேரத்தில் பொறுப்பான கணவனின் முகபாவம் வந்திருந்தது விசுவிற்கு. ‘ஒன்றுமே அவளிடம் பேசவில்லை.. அவளின் அருகில் கூட நின்றதில்லை.. எதையுமே சொன்னதில்லை அவளிடம்.. என்ன புரிந்துக் கொண்டாளோ என்னை பற்றி, அதனால் தானோ என்னமோ என்னிடம் எதையும் சொல்லவில்லை போல..’ என எண்ணம் வந்தது அவனுக்கு. அது வருத்தத்தை தந்தது கணவனுக்கு.

‘எதையும் யோசிக்க கூடாது’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டான், விசு. பின் “வாம்மா.. வீட்டுக்கு கிளம்பலாம்.. இங்க அங்கிள் மட்டும் இருக்கட்டும், வாசுகி ஆன்ட்டியும் நீயும் கிளம்புங்க.. நான் கூட்டி போறேன்” என்றவன் வெளியே வந்து, வாசுகியிடமும் அதையே சொன்னான்.

பத்மநாபன் இங்கிருக்க, அன்னைகள் இருவரையும் கூட்டிக் கொண்டு தன் வீடு நோக்கி சென்றான் விசு. வழி நெடுகிலும் அமைதிதான்.

இரண்டு மணி நேரத்தில் ஈரோடு வந்து சேர்ந்தனர். வேதா, தான் வருவது பற்றி வேலை ஆட்களிடம் சொல்லி இருந்தார். எனவே உணவு தயாராக இருந்தது.

பெரியவர்கள் இருவரையும் விசு, உண்ண சொல்லிக் கொண்டிருந்தான். இருவரும் ப்ரெஷ்ஷப் செய்து வர சென்றனர்.

விசு, தனதறைக்கு சென்றுவிட்டான். அந்த கதவை திறந்ததும்.. அவனை தாக்கியது அவளின் வாசம்.. மென்மையான இங்கிலீஷ் ரோஸ் யார்ட்லியின் வாசம்.. அது. நித்தமும் அவள் தன்னருகில், தன்னோடு காரில் அமர்ந்துக் கொள்ளும் போது அவன் உணரும் மணம் இது.. இப்போது அந்த வாசம்.. அவனை இழுத்துக் கொண்டது. உள்ளே சென்றவன் அந்த வாசம் வெளியே செல்லாம் கதவை அழுத்தி சாற்றித் தாழிட்டுக் கொண்டான். சற்று நேரம் அப்படியே நின்றான்.

சற்று நேரம் சென்று குளித்து வந்தான்.. அமைதியாக தன்னுடைகளை எடுத்து அணிந்துக் கொண்டு, கீழே வந்தான்.

அன்னைகள் இருவரும் உண்டு முடித்திருந்தனர். விசு, உண்பதற்காக அமர்ந்தான். வாசுகி பரிமாறினார் “இருங்க அண்ணி, நான் பரிமாறுகிறேன்” என தானாக செய்தார், அவனின் மாமியார்.

விசு உண்டு முடித்து, மீண்டும் காரெடுத்துக் கொண்டு கோவை கிளம்பிவிட்டான். வீட்டில் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்துவிட்டு.. விசு கிளம்பிவிட்டான்.

நடு இரவில் அங்கே சென்று சேர்ந்தான். பத்மநாபனையும் செந்திலையும் அப்போதே அனுப்பி வைத்தான்.. ‘நான் பார்த்துக்கிறேன்.. நீங்க இரண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க’ என சொல்லி அனுப்பி வைத்தான். செந்தில் மறுத்து எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.. விசு. ‘நான் பார்த்துக்கிறேன்.. நீங்க நாளைக்கு, அங்க ஸ்டேஷன் போகணும்.. கிளம்புங்க..’ என சொல்லி, காரேற்றி அனுப்பிவிட்டான் விஸ்வநாதன்.

மீண்டும் தன்னவளின் அருகில் அந்து அமர்ந்துக் கொண்டான்.. சற்று நேரத்தில் அருகில் இருந்த கட்டிலில் சென்று படுத்து உறங்கிவிட்டான்.

 

 

Advertisement